Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் - 10 16

அதிரைநிருபர் பதிப்பகம் | September 13, 2013 | , , , , , , ,

அரசியலில் எம்ஜியாரை நாடோடியாக்கி விடலாம் என்று கருணாநிதி திட்டம் தீட்டி அவரை திமுகவில் இருந்து வெளியேற்றினார். ஆனால் எம்ஜியாரை மன்னனாக்க தமிழக மக்கள் தீர்மானம் பண்ணிவிட்டனர்.  அவசரமாகப் பிறந்த அதிமுக , திண்டுக்கல்லில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் 1977 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சிக் கட்டிலில் ஏறியது. எம்ஜியார் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப் பட்டார். தேர்தலுக்கு முன் ஒப்புக் கொள்ளப்பட்ட திரைப்படங்களை அவசரமாக முடித்துக் கொடுத்து விட்டு மக்கள் படை புடை சூழ திறந்த வெளியில் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.  மக்கள் கூட்டம் ‘பார் சிறுத்ததால் படை பெருத்தததோ படை பெருத்தலால் பார் சிறுத்தததோ’ என்று கலிங்கத்துப் பரணி பாடி சென்னையைக்  குலுங்க வைத்தது. 


தன்னுடைய பதவி ஏற்பு  உரையில், சுதந்திரம் பெற்று முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் கிராமங்களில் தண்ணீர்ப் பஞ்சம் தீர்க்கப் படவில்லை என்று குறைப்  பட்டுக் கொண்டார் இன்று அறுபத்தி ஐந்து ஆண்டுகளாகியும் கிராமங்களில் ஒன்றும் குற்றால அருவி கொட்டவில்லை என்பது வேறு விஷயம். “அடிக்கிற தண்ணிக்கு அங்கங்கே கடை இருக்கு குடிக்கிற தண்ணிருக்கோ குடமெல்லாம் தவமிருக்கு “ என்று ஒரு புதுக் கவிதைக் கவிஞன் புலம்புவது இன்னும் நிற்கவில்லைதான்.

ஆனாலும் எம்ஜியார் தன் ஆட்சியில் ஏழைகளுக்கு அத்தியாவசியமான அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொண்டார். காமராஜரின் மதிய  உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி, சத்துணவுத் திட்டத்தை தனது கரங்களால் தொடங்கி வைத்தார்.  லஞ்சம் , ஊழல் ஆகியவற்றின் ஊற்றுக் கண் ஆகிவிடும் என்று கோப்புகளில் கை எழுத்து இடுவதை தாமதித்தார். இதனால் நிர்வாகம் நகராமல் அசைவு கொடுத்தது ஆட்டம் கண்டது. எம்ஜியாரை ஆட்சியை விட்டு நீக்க வேண்டுமென்று கருணாநிதியின் முயற்சிகள் அவ்வளவு சீக்கிரம் தமிழ்நாட்டில் பலிக்கவில்லை.

ஆனால் பாண்டிச்சேரியில் அதிமுக ஆட்சியை மிகச் சுலபமாக தூக்கி வீசினார் பாரூக் மரைக்காயர்.    தமிழகத் தேர்தலைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் தேர்தல். எம்ஜியாரின் வலது கரமாக அன்று திகழ்ந்த எஸ் டி எஸ் என்கிற திரு சோமசுந்தரம் பெருப்பேற்று அதிமுகவை வெற்றி பெற வைத்து ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தினார். காரைக்காலைச் சேர்ந்த ராமசாமி என்பவர் அங்கு முதலமைச்சராக்கப் பட்டார். பாண்டிச் சேரியில் பாரூக் மரைக்காயர் குடும்பம் ஒரு பழம் பூனை. பலதொழில்கள் அவர்களின் கைகளில் இருந்தன. காங்கிரஸ் ஆட்சியிலும் முதல்வராக இருந்து பிறகு திமுகவுக்கு கட்சி மாறி முதல்வராக இருந்து அதிமுகவிடம் தோற்று எதிர்க் கட்சித்தலைவர் ஆனார். ஆனால் அவரது அரசியல் மற்றும் அரசு செல்வாக்கு அங்கு நிருபணம் ஆனது. 

எப்படியென்றால் பாண்டிச்சேரியில், பட்ஜெட் கூட்டம் நடைபெறும் நாளில் முதலமைச்சர் ராமசாமி பட்ஜெட்டைப் படிக்க ஆரம்பித்தார். யாரும் எதிர்பாராமல் எழுந்த பாரூக்     மரைக்காயரின் கரங்களில் பட்ஜெட்டின் இன்னொரு பிரதி இருந்தது. முதலமைச்சரைப் பார்த்து பட்ஜெட்டை நீங்கள் படிக்க வேண்டாம் நானே படிக்கிறேன் என்று படிக்க ஆரம்பித்தார். அரசின் பட்ஜெட் வரிக்கு வரி அப்படியே இருந்தது. சட்டமன்றத்தில் அதிர்ச்சி! ஆச்சரியம்! திகைப்பு! முதலமைச்சர் ராமசாமி செய்வது அறியாது நின்றார். பட்ஜெட் இரகசியம் வெளியானதால் ஆட்சி கலைக்கப் பட்டு கவர்னர் ஆட்சி அமுலுக்கு வந்தது. திகைத்து நின்றார் எம்ஜியார். அரசியலில் தான் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உறுதியாக ஏற்பட்டது. பாண்டிச்சேரி அவருக்கு பாடம் படித்துத் தந்தது. 

இதற்கிடையில் ஆட்சியில் இருந்தவரை அதிகாரத்தை சுவைத்தவாறு கருணாநிதியுடன் இருந்த பலர் செத்த மாட்டில் இருந்து உன்னி இறங்குவது போல் கருணாநிதியிடம் இருந்து விலகி , அதிமுகவில் இணைய ஆரம்பித்தனர். இவர்களை தனக்கே உரிய பாணியில் “ அற்ற  குள்ளத்தின் அருநீர் பறவைகள் “ என்று கருணாநிதி வர்ணித்தார். திமுகவில் சுரண்டி வாழ்ந்த கூட்டம் அதிமுகவில் நுழைந்து தங்களின் கைகளின் அரிப்பை கட்டுப் படுத்த முடியாமல் ,  ஊழல பெருச்சாளிகள் அதிமுகவிலும் வளர ஆரம்பித்தன. 

மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் இருந்த ஜனதாக் கட்சியின் ஆட்சியுடன் திமுக கூட்டணி வைத்து இருந்தது. எம்ஜியார் , இந்திரா காங்கிரசுடன் கூட்டணி வைத்து இருந்தார். இந்த நேரத்தில்  1979-ல்  தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. காரணம் அதன் தேர்ந்தெடுக்கப் பட்ட உறுப்பினர் எஸ்.டி.சோமசுந்தரம் எம்ஜியார் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டதே.  பதவிகளை இழந்து பரிதாப நிலைக்குத்தள்ளப் பட்ட இந்திரா காந்தி எப்படியும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்துவிட வேண்டுமென்று தஞ்சாவூரில் நின்றால் எம்ஜியார் ஆதரவுடன் சுலபமாக வென்றுவிடலாம் என்கிற அரிய ஆலோசனையை தமிழக காங்கிரசார் இந்திராவிடம் கூறினர்.   இதற்கு இந்திராவுக்கும் சம்மதம்தான் ஆனால் இதை எம்ஜியார் அறிவிக்க வேண்டுமென்றார். இந்த நிலையில் மத்தியில் ஆட்சியில் இருந்த மொரார்ஜியிடம் இருந்து வந்த ஒரு தூதுவர் எம்ஜியாரை சந்தித்தார். என்ன சொன்னாரோ எந்த பைலைக் காட்டினாரோ தெரியாது எம்ஜியார் அலிபாபாவில் அடிப்பது போல் ஒரு அருமையான பல்டி அடித்தார். “ இந்திரா போட்டியிட்டால் அதிமுக ஆதரிக்கும் நிலை இருக்காது” என்று ஒரு அறிவிக்கை விடுத்தார். அதிர்ச்சியடைந்தார் இந்திரா. அரசியலில் உறவு என்றாலும் பகை  என்றாலும் அதில் உறுதியாக இருப்பவர் கருணாநிதிதான்  என்கிற எண்ணத்தின் விதை அவருக்குள் ஊன்றப் பட்டது.  

எமெர்ஜென்சி காலத்துக்குப் பிறகு இந்திராவும் கருணாநிதியும் பரம விரோதிகளாக ஒருவரை ஒருவர் பாவித்து வந்தனர். இந்திராவை திமுகவினர் திட்டுவதற்கெல்லாம் நாகரீகம் என்ற நூலில்  அர்த்தமே இல்லாமல் இருந்தது. புடவை கட்டிய ஹிட்லர் என்பதில் இருந்து இந்திராகாந்தி போன்ற விதவைகளுக்கு ஜீவனாம்சம் வரை தருவதாகக் இழிவான வார்த்தைகளை திமுகவினர் பேசினர். ஆனாலும் தஞ்சாவூர் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளராக தன்னை அறிவிக்க எம்ஜியார் காட்டிய தயக்கம் அல்லது பயம் இந்திராவை சிந்திக்கத் தூண்டியது. ஒரு அரசியல் கோழையை விட ஒரு அரசியல் எதிரியே மேல்  என்று அவரது எண்ண ஓட்டம்  அவருக்கு ஏற்பட்டது. இந்திரா – கருணாநிதி இருவருமே பதவி இழந்தவர்கள். ‘உன் கதைதான் என் கதையும் என் கதைதான் உன் கதையும்’ என்கிற அரசியல் பல்லவி இருவரும் ஒரே படகில் இணைந்து பயணிப்பதற்கு  வழி வகுத்தது. 

இந்நிலையில், இந்தியாவை இதுபோல் திறமையாக யாரும் ஆண்டது இல்லை என்கிற பெயர் பெற்ற மொரார்ஜியின் அரசு,  ராஜ் நாராயணன் என்கிற அரசியல் கோமாளியால் கவிழ்க்கப் பட்டது, அதன்பின் ஆறு மாத காலம் ஜாட் இனத்தைச் சேர்ந்த – இன்றைய மத்திய அமைச்சர்  அஜித் சிங் உடைய தகப்பனார் சரன்சிங் தலைமையில் ஒரு பெயரளவு அரசு ஆண்டது. நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற நிலையிலும் திரிசங்கு சொர்க்கம் என்ற அமைப்பிலும் இருந்த அந்த அரசும் கவிழ்ந்தது. பாராளுமன்றத்துக்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப் பட்டது. 

இம்முறை கூட்டணிகள் இடம் மாறின. இந்திராவும் கருணாநிதியும் கூட்டு. இந்திராவைக் கொலை செய்ய முயன்றதாக பல திமுகவினர் மீது வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தக் கூட்டணி அறிவிக்கப் பட்டு தொகுதிகள் பங்கீடும்  செய்யப் பட்டன. இந்திராவோடு சேர்ந்து நடைபெற்ற சென்னைக் கூட்டத்தில் “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!” என்று கருணாநிதி முகாரி ராகத்திலிருந்து ஆனந்த பைரவி இராகத்துக்கு மாறிப் பேசினார்.  

இந்திரா கருணாநிதி கூட்டணி அமோக வெற்றி. எம்ஜியாருக்கு இரண்டே இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.  இந்த இடத்தில் கருணாநிதியின் அரசியல் ஆரூட  கணிப்பின்  சாதுர்யத்தை நாம் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும். மத்தியில் மொரார்ஜி ஆட்சிக்கு வருவார் என்று கணித்து அவருடன் சேர்ந்தார். அதன்பின் இந்திராதான் வருவார் என்று கணித்து அவருடன் சேர்ந்து வெற்றிக் கனியைச் சுவைத்தார். 

இந்த பாராளுமன்றத் தேர்தல் தோல்வி, எம்ஜியாருக்கு ஒரு பின்னடைவையும் கருணாநிதிக்கு ஒரு உத்வேகத்தையும் கொடுத்தது. கருணாநிதி இந்த சூட்டோடு சூடாக எம்ஜியருடைய ஆட்சியை  தமிழ்நாட்டில் கலைக்க வேண்டுமென்று இந்திராவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். இந்திராவுக்கும், எம்ஜியாரை  பழிதீர்க்க ஒரு சந்தர்ப்பம் என்று  எம்ஜியார் ஆட்சி வலுவான காரணங்கள்  இன்றி கலைக்கப்பட்டது. உடனே சூட்டோடு சூடாக மறு தேர்தலும் அறிவிக்கப் பட்டது. பாராளுமன்ற வெற்றி தந்த ருசியில் மீண்டும் இந்திராவும் கருணாநிதியும் சட்ட மன்றத்தேர்தலுக்கும் கூட்டணி அமைத்தனர். பாராளுமன்றத் தேர்தலைப்  போலவே சட்டமன்றத் தேர்தலிலும் மிகப் பெரும் வெற்றி  பெறலாம் என்று கருணாநிதி போட்ட கணக்குத் தப்புக் கணக்காயிற்று . கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் எம்ஜியாரின் புகழுக்கு முன் மண்டியிட்டது. முதலமைச்சராக பதவி ஏற்பதற்காக கருணாநிதி எடுத்து வைத்திருந்த பட்டு வேட்டியும், இருபுறமும் அமர  வள்ளி,  தெய்வானைகளுக்காக அவர் எடுத்து வைத்திருந்த பட்டுப் புடவைகளும் கருணாநிதியை பார்த்து சிரித்தன. கருணாநிதியின் திரைப் பட நிறுவனமான மேகலா பிக்சர்ஸ் தயாரித்த எங்கள் தங்கம் என்கிற திரைப் படத்தில் எம்ஜியார் ஒரு கதா காலட்சேபம் நடத்துவார். அதில் “ விதி வலியது” என்று கூறுவார். அது உண்மையானது.  180 இடங்கள் பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.   எம்ஜியார் இருக்கும்வரை முதல்வர் பதவி என்பது கருணாநிதிக்கு  கானல் நீரானது. 

ஆட்சிக் கட்டிலைப் பிடித்து அசத்திய எம்ஜியார்  திடீரென உடல் நலக்குறைவுக்கு ஆளானார். எம்ஜியாரின் உடல் நிலை பற்றி பல்வேறு கருத்துக்கள் வெளியிடப் பட்டன. எம்ஜியாரின் உடல் நிலை என்பதால் சாதாரண மக்கள் கூட அக்கறை காட்டினர். இதனால் கிட்னி என்றால் என்ன, அப்பல்லோ ஆஸ்பத்திரி என்றால் என்ன டயாலிஸ்  என்றால் என்ன என்பதெல்லாம் பட்டி தொட்டிகளில் கூட பரவ ஆரம்பித்தது. மக்கள் கூட்டம் அப்பலோ ஆஸ்பத்திரியில் அலை மோத ஆரம்பித்தது. ஒருவேளை அந்த ஆஸ்பத்திரியிலேயே  ஏதாவது நடக்கக் கூடாதது நடந்து இருந்தால் அப்பலோ ஆஸ்பத்திரியே அப்பலோ ராக்கெட்டில் விண்ணை நோக்கிப் பறந்து இருக்கும். இதனை உணர்ந்த அந்த நிர்வாகம், எம்ஜியாரை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்க பரிந்துரைத்தது. எம்ஜியாருடைய ஒரு சிறு நீரகத்துக்கு மாற்று சிறுநீரகம் தருவதற்கு எம்ஜியாருடைய அண்ணன் சக்கரபாணியின் மகள் லீலாவதி முன் வந்தார்.  எம்ஜியார் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகப்  பறந்தார்.

அதே நேரம் இந்திராகாந்தியும் தனது தனிப் பாதுகாப்புக்  காவலர் ஒருவரால் சுடப் பட்டு இறந்தார். ராஜீவ் காந்தி பிரதமரானார்.  இந்திரா இறந்த செய்தியைக் கூட எம்ஜியார் அறியா வண்ணம் பார்த்துக் கொண்டனர். 

இந்த நிலையில் முதமைச்சர் நோய்ப்படுக்கையில் கிடக்கும் போது இனி எம்ஜியாரால் இயங்க முடியாது எனவே தன்னை முதலமைச்சராக ஆக்க வேண்டுமென்று ராஜீவ் காந்திக்கு தனிப்பட, எம்ஜியாரின் பிரியத்துக் குரியவர்களில் ஒருவராக இருந்த ஜெயலலிதா  கடிதம் எழுதினார் என்று அதிகாரபூர்வமற்ற  ஒரு தகவல் கசிந்தது. முதலமைச்சரின் நிலையைப் பயன்படுத்தி பண்ருட்டி இராமச்சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோர் நிர்வாகத்தில் திருவிளையாடல்கள் செய்ததாகவும் செய்திகள் வந்தன. அத்துடன் இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள்  போராட்டம் தீவிரமாக நடைபெற்று பல இடங்களில் காடுவெட்டிகள் மரம் வெட்டிகளாக மாறி, தீவிரமான போராட்டத்தால் பனிரெண்டு நாட்கள்  தமிழகம் சாலைப் போக்குவரத்து இல்லாமல் ஸ்தம்பித்தது.

இந்நிலையில் எம்ஜியாருக்கு     அமெரிக்காவில் வெற்றிகரமாக  அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற்று மீண்டும்  வருகிறார் என்கிற செய்தி மக்களிடம் பரவியது.  சொல்லபோனால் சாதாரண மக்களுக்கு தேனாக இனித்தது ஆனால் தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்த பலருக்கு தேள் கொட்டியது போல் இருந்தது. 

சென்னை விமான நிலையத்தில் அலை எனத் திரண்ட மக்கள் வெள்ளத்துக் கிடையில் அமெரிக்காவிலிருந்து மனைவி  ஜானகியுடன் அதே தொப்பி, துண்டு , கண்ணாடி அணிந்து  எம்ஜியார் வந்து இறங்கினார். தர்மம் தலைகாக்கும் என்ற கோஷம் விண்ணை அதிரச் செய்தது. காலத்தை வென்றவன் நீ ! காவியமானவன் நீ ! என்ற கானம் காதுகளைக் கிழித்தது. 

அதே நேரம்   போயஸ் தோட்டத்தில் அடிமைப் பெண் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். 

இனி என்ன நடந்தது? பார்க்கலாமே!
தொடரும். 
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

16 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கோர்வையான எழுத்து ஓடை அரசியல் சாக்கடையை தனித்து காட்டுகிறது !

தலைவரு எப்போதாங்க ஆட்சிக்கு வருவாரு !?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்று அவர் மாண்டு, மீண்டு வந்து அவர்களுக்கு கிடைத்த மகிழ்வு போல், உங்கள் தமிழெழுத்து இன்று எங்களுக்கு தேனாய் சுவைக்கிறது.

அரிய வரலாறு,
ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா!

sabeer.abushahruk said...

காக்கா அவர்கள் விவரிக்கும் மெற்கண்ட நிகழ்வுகள் நடந்தேறியக் காலகட்டங்கள் எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. எனக்கு மேலுதட்டுக்கு மேல் லேசாக மீசை அரும்பிய காலம் அது.

கவர்ச்சிகரமானவர்களால் அரசியல் அல்லோலகல்லோலப் படத் துவங்கியது அப்போதுதான்.

அருமையாக விவர்த்துச் சொல்லும் இத்தொடர் எங்களுக்கு வாய்த்த ஓர் அரிய பரிசு.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…
//உரு: சபீர் ஃ பிரன்ட் வீல் டிரைவ்
கரு: கிரவுன் ரியர் வீல் டிரைவ்

சபீர் + கிரவுன் = 4 வீல் டிரைவ்//

//ஹமீது, மிகவும் ரசித்த சமயோஜித கருத்து. மேலும், மிகவும் பொருத்தமானதும்கூட.//நேற்று ! இன்று ! நாளை ! இந்த கட்டுரைக்கும் இந்த பின்னுடம் பொருந்தும்

ஆக்கம்: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc; ஃ பிரன்ட் வீல் டிரைவ்
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி ரியர் வீல் டிரைவ்

: P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc; + இப்ராஹீம் அன்சாரி = 4 வீல் டிரைவ்

அதிரை நிருபரில் நிறைய 4 வீல் டிரைவ் ஓடுது

KALAM SHAICK ABDUL KADER said...

//கருணாநிதி எடுத்து வைத்திருந்த பட்டு வேட்டியும், இருபுறமும் அமர வள்ளி, தெய்வானைகளுக்காக அவர் எடுத்து வைத்திருந்த பட்டுப் புடவைகளும் கருணாநிதியை பார்த்து சிரித்தன.\\

\\அதே நேரம் போயஸ் தோட்டத்தில் அடிமைப் பெண் அமைதியின்றி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். \\வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த வருத்தப்படாத வாலிபக் குறும்புகள்!

முத்துப்பேட்டை என்னும் முத்துநகரில் இப்படிப்பட்ட நகைச்சுவை நிரம்பிய எழுத்து முத்து ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்த (முத்துக் குளித்து- அதற்காகவே முத்துநகர்க்கு முந்திச் சென்று விட்ட) மரியாதைக்குரிய காக்கா இ.அ. அவர்கட்கு என் உளம்நிறைவான வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக!

Ebrahim Ansari said...

என்றென்றும் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய தம்பி கவியன்பன் கலாம் அவர்களுக்கு மிக்க நன்றி.

சற்று முன்புதான் என் தம்பி இக்பால் உங்களைப் பற்றி விசாரித்தார். தறபோது அவரும் நமது இணைய தள பதிவுகளைப் படித்து வருகிறார். உங்கள் கவிதைகளை மிகவும் அன்புடன் ரசிப்பதாகக் கூறினார். நீங்கள் அங்கு சில நாட்கள் தங்கி இருந்த போது இப்படி எல்லாம் எழுதுவீர்கள் என்று தெரியாதாம். அவ்வளவு அமைதியாக இருப்பீர்கலாம்.

Unknown said...

சபீர்,

நம் அரும்பு மீசை அரும்பிய காலங்களில் நடந்த தமிழக அரசியல் நினைவுகளில்
நாம் அறியாத அரசியல் விஷயங்களைஎல்லாம் அவ்வப்பொழுது சகோ. பகுருதீன் அவர்கள் அள்ளித்தருவது. அன்றைய கால கட்டங்களுக்கே இழுத்துச்செல்கின்றது.

இந்த அரசியல் ஞானியின் ( பகுருதீன் காக்காவைச் சொன்னேன்) பதிவில் நான் தமிழக அரசியலில் தவறாக புரிந்துகொண்ட நிறைய விஷயங்களை திருத்திக்கொண்டு வருகின்றேன்.

காக்காவின் இப்பதிவு ஒரு தவறு களையும் பதிவு.

அபு ஆசிப்.

Unknown said...

//தலைவரு எப்போதாங்க ஆட்சிக்கு வருவாரு !?//

வருவாரு.. ஆனா ஒரு பொம்பளைக்கிட்ட தோப்பாரே?
அதனாலே இந்த கேள்விய கேட்காமலேயே இருக்கலாம்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\சற்று முன்புதான் என் தம்பி இக்பால் உங்களைப் பற்றி விசாரித்தார். தறபோது அவரும் நமது இணைய தள பதிவுகளைப் படித்து வருகிறார்.\\

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே அன்புமிக்க இக்பால் காக்கா (என் உடன்பிறப்பான் அஹ்மத் ஹூஸைன் காக்கா அவர்களின் வகுப்புத் தோழர்)அவர்கள் தான் உங்களின் உடன்பிறப்பு என்று அறிவதில் மிக்க மகிழ்ச்சி;; இப்பொழுது அவர்கள் என் கவிதைகளின் இரசிகராக அமைவதும் மட்டிலா மகிழ்ச்சி. இந்த விடயத்தை இன்ஷா அல்லாஹ் என் உடன்பிறப்பிடம் பகிரிந்து கொள்கிறேன்; தாங்களும் ஊரில் என் உடன்பிறப்பைக் கண்டால் இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தங்கட்கு மேலும் ஒரு தகவல்:

உங்களில் மூன்று உடன்பிறப்புகளும் ஒவ்வொரு துறையிலும் உச்சத்தை எட்டியவர்கள்!

1) தாங்கள் பொருளாதாரப் பாடத்திலும்
2) சகோ. இக்பால் அவர்கள் கணக்குப் பாடத்திலும்
3) சகோ. மஹ்பூப் அலி அவர்கள் வேதியல் பாடத்திலும்

மிகச் சிறந்தவர்களாய் இருப்பதும், இப்படி மூன்று உடன்பிறப்புகளும் கல்வியாளர்களாய் அமைவதும் கண்டு பெருமிதம் அடைகிறேன்; மாஷா அல்லாஹ்!

Anonymous said...

அந்த தஞ்சை இடைதேர்தலில் தி.மு.க சார்பாக அன்பில்தர்மலிங்கம் நிற்க ஏற்பாடாகியிருந்தது. இந்த நிலையில் இந்திராவை நிறுத்தும் எண்ணம் M.G.R.க்கும் இருந்தது. ''தஞ்சையில் இந்திரா நின்றால் நான் நிற்பேன்!'' என்று கருணாநிதி விட்ட குண்டு M.G.Rரை பல கோணங்களில் யோசிக்க வைத்தது. பின் வாங்கினார். கருணாநிதி நின்றால்' பெரும் கலவரமும் உயிர் சேதமும் உண்டாகலாம்' என்று அறிக்கை விட்டு இந்திராவின் காலை வாரினார்! ஆனால் அதே தேர்தலில் தி.மு.க.சார்பில் போட்டியிட்ட அன்பில் தர்மலிங்கம் காங்ரஸ் வேட்பாளரிடம் பரிதாபாமாக தோற்றார்.

.M.G.Rறோ ''நான் உங்கள் வீட்டு பிள்ளை'' மந்திரம் சொல்லியே மரத்தில் மாங்காய் காய்க்க வைத்தார். கருணாநிதியோ ''உடன்பிறப்பு மந்திரத்தை உச்சசரித்ததோடு நில்லாமல் சாணக்கியத்தையும் கையாண்டார். தஞ்சை தேர்தலில் M.G.R 'வாழ்வா சாவா' என்ற துணிச்சலான முடிவு எடுத்து போட்டி இட்டு, தோற்றால் ''இந்திராவின் தோல்வி'' என்று சொல்லி விடலாம். வென்றால் ''என்னால்தான் இந்திரா ஜெயித்தார்'' என்று ''சொல்லி தம்பட்டம் அடிக்கலாம். அதோடு கருணாநிதியே தோற்கடித்த பெருமையும் M.G.R க்கு கிடைத்திருக்கும். எப்போதுமே//' பேய்க்கும் பாக்கணும்; நோய்க்கும் பாக்கணும்//.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

Anonymous said...

///தலைவரு எப்போ தாங்க ஆட்சிக்கு வருவாரு!?

நீங்க கேக்குறது கோபாலபுர ஆட்சிக்கா? இல்லே C.I.D.காலனி ஆட்சிக்கா?

S.முஹம்மதுபாரூக்அதிராம்பட்டினம்

ZAKIR HUSSAIN said...
This comment has been removed by the author.
ZAKIR HUSSAIN said...

சகோதரர் முத்துப்பேட்டை பகுருதீன் தி.மு.க காரர்களின் சொத்துப்பேட்டையை விவரிக்கும்போதே தெரிந்தது இவ்வளவு விசயதாரி என்று. இந்த ஆக்கத்திலும் சார்ப்பான [Sharp ] உண்மைகள்.

அப்துல்மாலிக் said...

எம்.ஜி.ஆர் எப்படி? எதற்காக சுடப்பட்டார் என்பதையும் சொன்னால் என்னைபோல் கேள்விப்பட்டவங்களுக்கு வரலாறு தெரிய வாய்ப்பு

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அரசியலில் மிகவும் சூடுபிடித்த நேரம் அது மொரார்ஜி தேசாய் அரசை கவிழ்த்தது இந்திராகாந்தியின் ராஜதந்திரமே.சரண்சிங்குக்கு ஆதரவு தருகிரேன் நீங்கள் பிரதமராகுங்கள் என்று சொல்லி ஜனதா கட்சியை உடைத்தார்.சரண்சிங் இந்திரா காந்தி ஆதரவுடன் பார்லிமென்றில் மெஜாரிட்டியை நிரூபித்து பிரதமரானார் ஆனால் அடுத்த நாளே ஆதரவை வாபஸ் பெற்றார் இந்திரா காந்தி. மீண்டும் ஆட்சி கவிழ்ந்தது.6 மாத காலம் காபந்து மந்திரிசபை அமைக்க சரண்சிங்க்கிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.6 மாதம் சென்று நடந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடித்தார் இந்திரா காந்தி
To all readers please visit my website www.adiraiannaviyar.blogspot.com

Yasir said...

சுவை மாறாத எழுத்துநடை...சம்பவங்களை விவரிக்கும் முறை அதற்க்காக பயன்படுத்தபட்டு இருக்கும் தமிழ் வார்த்தைகள்...அப்பப்பா....ச்ச்சும்மா சொல்லக்கூடாது....சாக்கடை என்று சொல்லப்படும் அரசியலையும் சந்தனம் மணம் கமழ எழுதுவது எழுத்தாளரின் திறமையைக்காட்டுகின்றது..

//பலர் செத்த மாட்டில் இருந்து உன்னி இறங்குவது போல்// முத்துப்பேட்டைக்கே உரிய குறும்பு...

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு