Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும்....! – தொடர் - 1 30

அதிரைநிருபர் பதிப்பகம் | September 03, 2013 | , , , , ,

இறைவா!

எங்கள் கண்களில் பக்குவமான பார்வையே தோன்ற வேண்டும்!
எங்கள் கண்களில் மதுரமான பார்வையே மலர வேண்டும்!
எங்கள் கண்களில் சிந்தனைகளின் ஒளி  அதில் வீச வேண்டும்!

இறைவா!

எங்கள் பார்வையின் அசைவுகளை சீராக்கி, எங்கள் எண்ணங்களின் அசைவுகளை உன் பக்கம் ஒருமைப்படுத்தி எங்களை நேரான பாதையில் நடத்துவாயாக ! என்ற துஆவுடன் என்னுடைய கன்னிப் பதிவை அதிரைநிருபர் வாசகர்களாகிய என் அன்பு நெஞ்சங்களின் வாசிப்புக்கும் கருத்தாடல்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்.

இனிய நண்பர்களான இக்பால் சாலிஹ், சபீர் அஹ்மது, மூத்த ஆய்வாளர் இப்ராஹீம் அன்சாரி காக்கா இவர்கள் தந்த ஆர்வத்தினாலும், நண்பர் ஜாஹிரின் இலகுவாக எழுதலாம் என்ற பதிவாலும் நாமும் எழுதலாமே என்று ஈர்க்கப்பட்டு எனக்கும் கொஞ்சம் எழுத்தின் ஆர்வம் ததும்பியது.  நமது நண்பர் ‘அண்ணன்’ ஹமீது அவர்களின்,  கேமரா ஒரு குறுந்தொடரை நான் படிக்கும்போது, எதை பற்றி எழுதலாம் என்ற என் சிந்தனை துளிகளில் உருவான தலைப்புதான் “கண்கள் இரண்டும்...!!!”.  நண்பர் ஹமீது அவர்கள் பானியிலே ஒரு  பதிவு அமைக்கலாம் என்ற எண்ணத்தில் நம் உடலில் இருக்கும் கேமரா பற்றி ஒரு தொடர் எழுத முடிவு செய்து மேற்குறிப்பிட்ட சகோதரர்களின் ஊக்கத்தோடு உருவாக்கிய ஆக்கம் தான் இது.

தொடராக எழுத நினைத்த என்னுடைய எழுத்தைப் படிக்கும்போது படிப்பவர்களுக்கு போர் அடிப்பது மாதிரி இருக்குமா? அல்லது நல்ல கருத்தோட்டமிக்கதாக இருக்குமா? என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். இது முதல் அனுபவம் என்பதால் இதைப் படிக்கும் உங்கள் அனைவரின் பின்னூட்டத்தின் வாயிலாகத்தான் இதன் தரத்தை என்னால் அறிந்து கொள்ள முடியும். நண்பன் சபீர், முஹம்மது பாரூக் காக்கா போன்றோர்களின் எழுத்தில்  நகைச்சுவை அங்கும் இங்கும் விளையாடும். படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். நகைச்சுவையாக எழுதுவது என்பது மிகச் சிறந்த கலை, இந்த கலை எல்லோருக்கும் அமைந்திடாது என்பது உண்மை. குறிப்பாக எனக்கு வராது. ஆதலால் தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் அதோடு கொஞ்சம் பொருந்திக் கொள்ளுங்கள்.

மூத்த ஆய்வாளர் இப்ராஹிம் அன்சாரி காக்கா, கணினி அறிஞர் ஜமீல் காக்கா, அதிரை அறிஞர் அஹ்மது காக்கா, நபிமணியும் நகைச்சுவையும் தந்த நண்பன் இக்பால் சாலிஹ் இவர்களின் எழுத்துக்களில் நமக்கு தேவையான கருத்துக் காவியமும், உளவியல் படைப்புகளை திறம்பட எழுதும் நண்பர் ஜாஹிர், வாழ்வியலை அப்படியே சொல்லும் மு.செ.மு. நெய்னா முஹம்மது மற்றும் கவியன்பன் கலாம் இவர்களிடம் சுவாரஸ்யமான வார்த்தை ஜாலங்களுடனும், நண்பர் ஹமீது அவர்களின் பதிவுகளில் கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் கலை வண்ணமும் ததும்பும். அனைவருடைய பதிவுகளும் படிக்க படிக்க மேற்கொண்டு படிக்கத் தூண்டும். அவர்களைப் போல்  முடியாவிட்டாலும் என்னால் முடிந்ததை இந்த தலைப்பின் கீழ் எழுதுகிறேன் இன்ஷா அல்லாஹ். 

இது கருத்துக்கள் நிறைந்த தொடராகவும், படிப்போருக்கு மிக பயனுள்ளதாகவும் இருக்கும் என இறைவனை பிரார்த்தித்தவனாக அதிரைநிருபர் வாசகர்களையும் முன் வைத்து நான் உள்வாங்கிய கருத்துக்களையும், நான் வாசித்தவைகளிலிருந்தும் உங்களுடன் பகிர்வதில் நான் ஆனந்தம் அடைகிறேன் 

கருத்தாடல்களில் உரையாடும் சகோதரர்கள் நம் யாவருக்கும் அறிந்த மொழியான தமிழிலே பகிர்ந்தால் என்னுடைய புரிதலுக்கும் வலுசேர்க்கும் என்பதே என்னுடைய வேண்டுகோள்..

இந்த பதிவில் இடையிடையே ஆங்கில வார்த்தைகள் அப்படியே இடம் பெறும், அவை மருத்துவ சம்பந்தமானதாக இருப்பதனால் அவற்றை அப்படியே தமிழில் தந்தால் அதில் தவறுகள் ஏற்பட்டு விடும் என்பதால் அவைகள் மட்டும் ஆங்கிலத்தில் இருக்கும். என்னுடைய வார்த்தை பிரயோகத்தில் உரைநடை, மற்றும் எழுத்துப் பிழைகள் கண்டிருப்பின் எனக்கு அறியத் தாருங்கள்.

இவ்வளவு  பீடிகையுடன் ஒரு பதிவு தேவையா என்று வெறுத்துவிடாதீர்கள்.  

பதிவின் ஆரம்பம் நண்பர் ஹமீது அவர்களை நினைவுரும் முகமாக அவர்கள் பானியிலே தொடங்குகின்றேன்.

லைட்ஸ் ஆன்

நம் கண்களைப் பார்த்து உருவாகியது கேமரா என்றால் அது மிகையாகாது.  நம் கண்கள்  மிக அதிகமான டெகா பிக்சல் ரெஸ்லுஷன் உள்ள மல்ட்டி யூஸ் வீடியோ & ஸ்டில் கேமரா (multi use video & camera) என்பதை நினைவில் கொள்ளவும். இந்த கேமராவினால் ஏற்படும் பயன்களால் நன்மைகளையும் தீமைகளையும் கணக்கிட முடியாது. இந்த கேமராவின் பார்வைக்கு  எண்ணிலடங்கா வியாக்கியானம் செய்யலாம். நமக்கு அளித்த இந்த கேமராவினால் எவைகளை படம் (பார்க்கலாம்) பிடிக்கலாம் எவைகளை படம் (பார்கக்கூடாது) பிடிக்கக்கூடாது   என்ற வரை முறைகளை நமக்கு இறைவன் அளித்துள்ளான் அவைகளை நாம் தெளிவடைந்து பயனடைவோமாக.

கண்களின் இமைகள் திறந்து-மூட காட்சிகள் யாவும் படமாக்கப்பட்டாலும் நமக்கு தேவையானது மட்டும் கோடிக்கணக்கான டெரோ பைட் கொள்ளளவு உள்ள ஹார்டிஸ்கான நமது மூளைக்கு அனுப்பப்பட்டு அங்கே பாதுகாக்க வேண்டியவற்றை பாதுகாத்து வைப்பதுடன் நமக்கு தேவையற்ற விஷயங்களை பதிவு செய்வதில்லை அப்படியே பதிவானாலும் சில விஷயங்கள் ஓரிரு நிமிடங்கள், மணித்துளிகள், ஒரிரு நாட்கள் அல்லது சில மாதங்கள் நிலைத்திருந்து நினைவை விட்டு மறைந்து விடுவதினால்தான் மனிதனுக்கு   மறதி ஏற்படுகின்றது. 

நாட்கள் கடக்கும்போது தேவையில்லாதவற்றை நமது மூளையிலிருந்து பெர்மனென்ட்டாக அழித்து விடுவதினால்தான் இறுதி வரையும் நமக்கு நம் கண் முன்னே நடந்த சம்பவங்கள் ஞாபகத்திற்கு வருவதில்லை.   அதனால்தான் நாம் ஒரு சில நடந்த சம்பவங்களை  நடக்கவில்லை என்றும், பார்க்கவில்லையென்றும் செய்யவில்லை என்றும் வாக்குவாதம் புரிகின்றோம். காரணம் ஹார்டிஸ்க்கை (மூளையை) விட்டு அழிக்கப்பட்டுவிட்டால் அந்த நிகழ்வுகள் நமது ஞாபகத்திற்கு எப்படி வரும் ?

பதியப்பட்ட மற்ற நிகழ்வுகள்  உடனடியாக தேடிக் கொண்டுவர ராம் (ram) என்ற மெமோரி-பவர் (memory power) தானாக வேலை  செய்ய ஆரம்பித்து நமக்கு தேவையான காட்சிகளை நம் கண் முன்னே உடனடியாக கொண்டு வந்து நிறுத்துகின்றது. எல்லா விஷயங்களும் கண்களை அடித்தளமாக வைத்து நம் மூளையில்  இறைவனால் நடத்தப்படும் செயல்களே. 

அடுத்த அத்தியாயத்தில் கண்களைப் பற்றிய அற்புதங்களைக் காண்போம் இன்ஷா அல்லாஹ் ! 
தொடரும்...
அதிரை மன்சூர்

30 Responses So Far:

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்குரிய மன்சூருக்கு அதிரை நிருபரின் வாசக வட்டம் சார்பாக மனம் கனிந்த வரவேற்பும் வாழ்த்துகளும்.

பீடிகை கடுமையாகத்தான் இருக்கிறது. பேஸ்மெண்ட்டை ஸ்ட்றாங்காக அமைத்திருக்கிறீர்கள். பில்டிங்கும் ஸ்ட்றாங்காகவே இருக்கும் என்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

எழுத்தைப் பொருத்தவரை, பின்னூட்டங்களில் தெறிக்கும் கோபம் கலக்காததால் செம கெத்தாகவே ட்டேக் ஆஃப் ஆகியிருக்கிறது.

வாருங்கள், கலக்குங்கள்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும் மன்சூராக்கா,
முதலில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க அழைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

துணிச்சலாக கருத்திடல் வாயிலாக சாட வேண்டியதை பல தளங்களில் சாடி விழிப்பூட்டிய உங்களிக்கு குறிப்பேதும் சொல்ல தேவையில்லை.

உயிராக நேசிப்பரை அழைப்பதற்கு பயன்படுத்தும் உறுப்பாகிய கண் வாயிலாக!
கண்ணே மணியே தொடருங்கள்!

M.B.A.அஹமது said...

மன்சூர் காக்கா எங்களை மதுரைக்கு போக சொல்லிட்டு கண்கள் இரண்டும் என்று கட்டுரை யா எழுதுறிய

Iqbal M. Salih said...

அஹ்லன் வசஹ்லன் யா ஹபீபி நூருல் அய்னீ!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

மாஷா அல்லாஹ் மன்சூர் காக்கா முதல் பதிவிலேயே அசத்திட்டிய போங்க......//ராம் (ram) என்ற மெமோரி-பவர் (memory power)// ராம்முக்கு பதில் ரேம் என்றே அழைத்தால் நல்லது. காரணம் சரிவர தான் பிறந்த இடத்தை இன்னும் அருதியிட்டு கூற முடியாத ராம் பிறகு ஒவ்வொரு மூளையிலும் கரசேவையின்றி குடியிருப்பதாக அவர்கள் ஈஸியாக சொல்லி விடுவார்கள் பாத்து சூதகமா நடந்துக்கிடனும்....

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பாசத்தின் வெளிப்பாடாய், அன்பின் உச்சமாய் நம் ஊர் பெரியவர்கள் பெண் பிள்ளைகளை "கண்ணான உம்மாவே" என்றும் ஆண் பிள்ளைகளை "கண்ணான வாப்பாவே" என்றும் அழைப்பார்கள். எனவே இரண்டு கண்களும் நம் பெற்றோரை பார்வையால் தினம், தினம் நினைவுப்படுத்திக்கொண்டிருக்கு அவர்களை பாராமல் கவனிப்பார் யாருமின்றி விட்டுவிடுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

பல ஆண்டுகளுக்கு முன் நம் வாழ்வில் எங்கோ ஓரிடத்தில் நடந்தேறிய சில நல்ல பல நிகழ்வுகளை உருண்டோடும் இக்காலச்சக்கரத்தில் அறைத்து தொலைத்து விடாமல் அதை அவ்வப்பொழுது நன்றியுடன் நினைவு கூறும் மனித இயல்பே மகத்தானது.

சிறுவயது முதல் இந்நரை (முடி) வயது வரை நடந்தவைகளை எப்படித்தான் தன் கொள்ளளவைத்தாண்டி இந்த மூளை வாழ்வில் பல வசந்த, கசந்த சூறாவளிக்காற்றுகள் அடித்து போயிருந்த போதிலும் இன்றும் பதிவு செய்து வைத்துள்ளது மனிதனுக்கு அல்லாஹ் வழங்கிய அற்புதமான விலைமதிக்க முடியா "ஹார்ட் ட்ரைவ்" ஆகும். சுப‌ஹான‌ல்லாஹ்...நேற்று முக‌ப்புநூலில் (ஃபேஸ் புக்) மைத்துனன் ஜ‌ஹ‌ப‌ர் சாதிக் அவ‌ர் இருந்து வ‌ரும் இங்கிலாந்தின் க்ரொய்ட‌ன் ப‌குதியில் மிடில் ஸ்டீரீட் (ந‌டுத்தெரு) என‌ குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ பெய‌ர்ப்ப‌ல‌கையை ந‌ம்மூர் ந‌டுத்தெருவுட‌ன் ஒப்பிட்டு வெளியிட்டிருந்தார் எதேச்சையாக‌.

அதை பார்த்த‌ ச‌ம‌ய‌ம், அவ‌ர் சுமார் இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் ஊரில் அவ‌ர் வீடு இருக்கும் ச‌ந்தில் உள்ள‌ ச‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் எல்லோரும் ஒன்றிணைந்து ச‌ந்திந்தில் மூலையில் ந‌டுத்தெரு "முக்கிய‌ ச‌ந்து" என்று எழுதி ஒட்டி வைத்திருந்த‌ன‌ர். கார‌ண‌ம், கால‌ப்போக்கில் நாம் கூடுத‌லாக‌ ந‌ம் ச‌ந்திற்கு நாம் வைத்த அந்த பெய‌ர் "முக்கிய‌ சந்து" இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் க‌டித‌ப்போக்குவ‌ர‌த்திற்கும், விலாச‌ முக‌வ‌ரிக்கும் எல்லோராலும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ற‌ ந‌ல்ணோக்கில் தான். என்றோ ஒரு நாள் ந‌ண்ப‌ர்க‌ள் செய்த‌ ஒரு சிறு காரிய‌ம் இது. இருப்பினும் இந்த‌ நிக‌ழ்வு விலை ம‌திக்க‌ முடியா இறைவ‌னின் அற்புத‌ ப‌டைப்பு மூளை என்ற "ஹார்ட் ட்ரைவில்" இன்னும் வைரஸ் ஏதும் ஏறாமல் அழிக்கப்படாமல் அப்படியே இருப்பது படைத்தவனின் அற்புதமல்லவா??? சுப‌ஹான‌ல்லாஹ்..

ச‌மீப‌த்தில் நாகையின் ஒரு த‌னியார் க‌ல்லூரியில் (1989 1991) மூன்றாண்டுக‌ள் ப‌யின்ற‌ மாண‌வ‌ர்க‌ள் சுமார் இருப‌த்தைந்து வ‌ருட‌ங்க‌ளுக்குப்பின் ப‌ல‌ முய‌ற்சிக‌ள் செய்து ப‌ல‌ அலுவ‌ல்க‌ளால் ப‌ல‌ ஊர்க‌ளில் பிரிந்து கிட‌ந்த‌ அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒரு குறிப்பிட்ட‌ நாளில் ஒன்றிணைந்திருக்கிறார்க‌ள். த‌ங்க‌ள் அன்பான‌ விசாரிப்புக‌ளையும், ச‌ந்தோச‌ங்க‌ளையும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ப‌கிர்ந்து கொண்டிருக்கிறார்க‌ள். முக‌ம் தெரியாத‌ யாரோ, எவ‌ராக‌வோ இவ‌ர்க‌ள் ந‌ம‌க்கு இருந்தாலும் இதை தொலைக்காட்சி சிற‌ப்பு செய்தியில் பார்த்த‌ எனக்கு ஒரு இன‌ம் புரியாத‌ உள்ள‌ வெளிப்பாட்டில் க‌ண்க‌ள் அதை ஏற்று சில‌ துளி க‌ண்ணீராய் அதை வ‌ழிமொழிந்த‌து. பொருளாதார‌, வ‌ச‌தி வாய்ப்புக‌ள் த‌ராத‌ அந்த‌ ப‌ர‌வ‌ச‌த்தை எங்கோ ந‌ட‌ந்த‌ ஒரு நிக‌ழ்வு என‌க்கு த‌ந்த‌து எத‌னால் என‌ என்னாலேயே கார‌ண‌ம் கூற‌ முடிய‌வில்லை ஆயிர‌ம் தொல்லைக‌ளையும், ச‌ல்லைக‌ளையும் தாண்டி ந‌ம் ம‌ண்ணில் மத துவேசங்கள் பரவி அதன் தாக்கம் நம்மை சூழ்ந்து அதையும் தாண்டி நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுதும்......

"எல்லாப்புக‌ழும் இறைவ‌னுக்கே" என்று கூறுவ‌து கூட‌ அந்த‌ குறிகிய‌ ம‌ன‌ப்பாண்மையுடையோருக்கு ஒரு தீவிர‌வாத‌ சொல்லாக‌ ஆக்க‌ப்ப‌ட்டுள்ள‌து அவ‌ர்க‌ளை ஆட்டிப்ப‌டைப்போர் மூல‌ம். அவ‌ர்க‌ள் எப்ப‌டியோ இருந்து விட்டு போக‌ட்டும். அவ‌ர்க‌ள் க‌ண் மூடி ம‌ண் மூடுமுன் அல்ல‌து பின் நிச்ச‌ய‌ம் த‌ங்க‌ள் செய‌ல்க‌ளுக்கு வ‌ருத்த‌ப்ப‌ட‌த்தான் போகிறார்க‌ள்.

யா அல்லாஹ்!!! ந‌ம‌க்குள் ந‌ல்ல‌ ச‌கோத‌ர‌த்துவ‌த்தையும், அவ‌ர்க‌ளுக்கு இஸ்லாம் பற்றிய ந‌ல்ல‌ புரிந்துண‌ர்வையும் தந்தருள நீயே போதுமானவன்.....

ந‌ல்ல‌ நினைவுக‌ள் எளிதில் அழிந்து விடுவ‌தில்லை.......

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Ebrahim Ansari said...

முதலாவதாக முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள். அடுத்து இப்படி எழுதத் தூண்டியவர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

நல்ல விஷயத்தை கருப் பொருளாக எடுத்து இருப்பதற்கு இன்னொரு பாராட்டு.

கண்ணான விஷயம் பற்றி பொன்னான எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம்.

Shameed said...

முதல் கட்டுரைக்கு வாழ்த்துக்கள்

அப்புடியோ நான் எழுதுவதுபோல புளிஞ்சி வச்சிடியலே (அப்புடியோ உறிச்சி வச்சி இருக்கு என்று சொல்வதெல்லாம் இப்போ அவுட் ஆப் பேசனா போச்சு )

Shameed said...

மன்சூர் பாய் பதிவு கண்ணுலே ஒத்திகிராப்புலே இருக்கு

Unknown said...

நண்பர் மன்சூரின் கண்கள் இரண்டும் தொடர்
ஆரம்பமே ஒரே தூக்காக தூக்கி இருக்கின்றது.

தொடர் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்பது ஆரம்பமே சொல்வதுபோல் போல் இருக்கின்றது.

மன்சூர் சொன்ன சில விஷயங்கள் ஞாபக சக்தியைப்பற்றி எதார்த்த நிலையை எடுத்து இயம்புகின்றது. எனக்கு ஞாபக சக்தி உண்மையில் குறைவு. ஒரு மணி நேரத்திற்கு முன்பு உள்ள விஷயம் மறக்கும் எனக்கு 40 வருடங்களுக்கு முன்னால் நடந்த சில நிகழ்வுகள் இன்னும் மனதிலேயே இருக்கின்றது.

இது எப்படி சாத்தியம்?

மூளையின் உள்வாங்கும் சக்தி நம் கட்டுப்பாட்டிலா அல்லது அதன் கட்டுப்பாட்டில் நாமா ? படைப்பாளர் கொஞ்சம் வரும் தொடர்களில் விளக்கினால் நன்றாக இருக்கும்.

உண்மையில் ஒரு அருமையான தொடருக்கு அடித்தளமிட்ட அதிரை மன்சூர் பாராட்டப்படவேண்டியவர்.

வளர்க உங்கள் எழுத்து.

அபு ஆசிப்.

Yasir said...

வருக வருக அதிரை மன்சூர் காக்கா....அவசியமான உறுப்பைப் பற்றி அசத்தலான பதிவு.....தொடருங்கள் இணையத்தின் மீது விழி(கண்) வைத்து தொடருவோம்.....வாழ்த்துக்களும் துவாக்களும்

Adirai pasanga😎 said...

மன்சூர் காக்கா தங்களின் முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் - இனிதே தொடர துஆக்கள்.
அல்லாஹுத ஆலா நமக்கு அளித்த மிகச்சிறந்த அருட்கொடைகளில் ஒன்றான கண்ணைப்பற்றிய பதிவு குறித்துத் தாங்கள் எழுத முனைந்திருப்பது வரவேற்கத் தக்கது.

Anonymous said...

அன்புத் தம்பி அதிரை மன்சூர்!

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]

வாழ்த்துகள்! இன்று பகல் கணிணியில் அ.நி. திறந்தபோது ''கண்கள் இரண்டும்' - அதிரை மன்சூர்' என்பதைக் கண்டேன். பின்னூட்டங்களில்
நீங்கள் ஒரு கேள்வியின் நாயகர்!'' மூனு வீடு கட்டி' சிலம்பம் விளையாடியவர்! !எதையும் அஞ்சா நெஞ்சத்துடன் 'நக்கீரன்' பாணியில் 'புட்டு-புட்டு போட்டு பட்டு-பட்டு'ண்டு அடிக்கிற ஆசாமியாச்சே! யாரையோ'' அஞ்சு வீடு கட்டி'' சிலம்பம் சுழட்றப் போறார்!'' என்று நினைத்தேன். என்கணிப்பு தவறாகிப் போனது! நீங்கள் தொடங்கிய முதல் தொடக்கமே கண்ணான பொருள்!.! "கண்கள் இரண்டும்'' ஒரு பாடலின் தொடக்கம்!. உயிர் இனங்களின் முக்கிய உறுப்புக்களில் ஒன்று!.

ஒரு தாய் தன் பனிரெண்டாவது பிள்ளையே பெற்ற போதும் கூட'' என் கண்ணே! என் கண்மணியே!'' என்று கொஞ்சினாள்.'' ஏன் பாட்டி? ஒரு டெசன் கணக்கை நிறைவு செய்த' இதையுமா 'நீ!' கண்ணே! மணியே!''ன்னு கொஞ்சனும்?'' என்று கேட்டேன்.

''அடே போட பேராண்டி! இதையும் பத்துமாசம் தானேடா சுமந்தேன். பன்னெண்டு மாசமா சுமந்தேன்?. ஒரு கண்ணுக்கு' மை'யும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் உடமாட்டேன்டா!' எல்லாமே' என் கண்'தாண்டா'' என்றாள்.

இது பலே பாட்டியா? பலே பார்ட்டியா?'' கண் மிகசிறப்பான ஒரு உறுப்பு! ஆரம்பம் சிறப்பாக தொடங்குகிறது. வாழ்த்துகள்!.

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

விழி பற்றி மொழி பேசத் துவங்கியிருக்கிறது !

ZAKIR HUSSAIN said...

Dear Adirai Mansoor,

Do not under estimate your ability.

முதல் பதிவே மிகவும் அனுபவம் வாய்ந்தவரைப்போல் வார்த்தைகள் கோர்வையாக வந்திருக்கிறது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

உங்களுக்கு சரியான வாய்ப்பு [ சின்ன வயதில் ] கிடைத்திருந்தால் ஒரு கண் மருத்துவராக ஆகியிருக்களாமோ என நினைக்க தோன்றுகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

என் கண்ணான நண்பா, அஸ்ஸலாமு அலைக்கும்,

எண்ணிப் பார்க்கிறேன்; கன்னிப் பதிவா! கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வண்ணத் தமிழ் நடையும், வாஞ்சை மிக்க வாழ்த்துகளுடன் பீடிகையும் போட்டு இப்படி ஒரு பதிவை எவரும் பதிந்ததில்லை! உன்னை ஓர் ஓவியனாகக் கண்டேன்; நுட்பத் திறனுடன் வேலைகள் செய்வதையும் கண்டேன்; ஆயினும், இப்படி ஓர் எழுத்தாளானாக இப்பொழுது தான் கண்டேன்; ஊக்கம் இருந்தால் ஆக்கம் வரும் என்பதற்குச் சான்றும் நீதான்!

கண்ணைப் பாதுகாக்கும் முயற்சிகளிலும், சிகிச்சைகளிலும் அக்கறையுடன் இருக்க என்னை உட்படுத்த வைக்கும் ஆக்கமாகவே இதனைக் கருதுகிறேன்.

உன்னிடமுள்ள எல்லாத் திறமைகளையும் உன்னிப்பாகக் கவனித்த உற்ற நண்பனாக இருந்த எனக்கு, இந்தத் திறமை மட்டும் என் கண்ணில் இப்பொழுதுதான் பட வேண்டும் என்று கண்ணுக்காக ஒரு கன்னிப் பதிவை அமைத்து விட்டாய்!

வாழ்த்துகள்!

Unknown said...

Assalamu alaikkum. Good introduction please give us more about eyes thanks A.Malik

adiraimansoor said...

அதிரை நிருபரில் வலம் வரும் பல நல்லுல்லங்களின்
நம்பிக்கையூட்டும் பின்னூட்டங்களால் உந்தப்பட்டு
இதுவரை என் எண்ணங்களை வண்ணங்களாக வடித்த நான்
அதாவது கருத்தை ஓவியத்தில் சொன்ன நான்
எழுத்தில் கருத்தை சொல்ல வந்திருக்கும் என்னை

மாலை தொடுத்து மலர்கள் சூடி வரவேற்கும்
என் அன்பு நெஞ்சங்களான கவி & நகைச்சுவை தென்றல் சபீர் & பாரூக் காக்கா, மூத்த ஆய்வாளர் இப்ராஹிம் அன்சாரி காக்கா, அதிரை அறிஞர் அஹ்மது காக்கா, நகைச்சுவையும் தந்த நண்பன் இக்பால் சாலிஹ், கவிதையிலே காவியம் தரும் கவியன்பன் கலாம்,

உளவியல் படைப்புகளை திறம்பட எழுதும் நண்பர் ஜாஹிர், வாழ்வியலை அப்படியே சொல்லும் மு.செ.மு. நெய்னா முஹம்மது ,கண்கள் இரண்டையும் குளிரவைக்கும் அண்ணன் ஹமீத்,

முதலில் சூரியனை லண்டனில் உதிக்கவைக்கும் எனது இனிய நண்பர் எம்.ஹெஜ்.ஜாபர் சாதிக் எனது பால்ய நண்பர்கள் அபு ஆசிப் & அஹமது தாஹா, அபூ இப்ராஹீம், தம்பி யாசிர் மற்றும் அப்துல் மாலிக் ஆகிய நல் உள்ளங்களின் வாழ்த்துக்களுடன்கூடிய நீங்கள் எனக்கு தந்த ஊட்டச்சத்து நிறைந்த இந்த பூஸ்ட்டை அருந்தியவனாக எனது நன்றியை உங்கள் அனணவருடனும் பகிர்ந்து கொள்வைதில் பெருமை அடைகின்றேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!! அணைவருக்கும் நன்றி!!!!

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

//அஹ்லன் வசஹ்லன் யா ஹபீபி நூருல் அய்னீ!//

ஒளி மிக்க கண்களை கொண்டுவந்துவிட்டேன் இக்பால் இன்ஷா அல்லாஹ்
அது எல்லோருடைய கண்களையும் பிரகாசமாக வைக்கும்

adiraimansoor said...

//மன்சூர் காக்கா எங்களை மதுரைக்கு போக சொல்லிட்டு கண்கள் இரண்டும் என்று கட்டுரை யா எழுதுறிய//

அஹ்மது காக்கா நான் உங்களை மதுரைக்கு கவியன்பன் கலாமுக்கு துணைக்குதான் போகச் சொன்னேன். பிரகாசம் அளிக்கும் உங்கள் கண்களுக்காக
போக சொல்வேனா? உங்கள் பிரகாசமே உங்கள் கண்கள் இரண்டில்தானே

adiraimansoor said...

//நல்ல விஷயத்தை கருப் பொருளாக எடுத்து இருப்பதற்கு இன்னொரு பாராட்டு.

கண்ணான விஷயம் பற்றி பொன்னான எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம்.//

இபுராஹிம் அன்சாரி காக்கா
உங்கள் கூற்றுப்படி
கண்ணான விஷயம் பற்றி பொன்னான எழுத்துக்கள்
தொடர்ந்து வரும் எல்லாமே கண்ணுக்கு வலுவூட்டும் கருத்துக்கள்
உங்களை போன்ற நல் உள்ளங்களின் வாழ்த்துக்களுடன் கருத்தான முத்துக்கள் தொடர்ந்து உதிரும்

adiraimansoor said...

//வாழ்த்துகள்! இன்று பகல் கணிணியில் அ.நி. திறந்தபோது ''கண்கள் இரண்டும்' - அதிரை மன்சூர்' என்பதைக் கண்டேன். பின்னூட்டங்களில்
நீங்கள் ஒரு கேள்வியின் நாயகர்!'' மூனு வீடு கட்டி' சிலம்பம் விளையாடியவர்! !எதையும் அஞ்சா நெஞ்சத்துடன் 'நக்கீரன்' பாணியில் 'புட்டு-புட்டு போட்டு பட்டு-பட்டு'ண்டு அடிக்கிற ஆசாமியாச்சே! யாரையோ'' அஞ்சு வீடு கட்டி'' சிலம்பம் சுழட்றப் போறார்!'' என்று நினைத்தேன். என்கணிப்பு தவறாகிப் போனது! நீங்கள் தொடங்கிய முதல் தொடக்கமே கண்ணான பொருள்!.! "கண்கள் இரண்டும்'' ஒரு பாடலின் தொடக்கம்!. உயிர் இனங்களின் முக்கிய உறுப்புக்களில் ஒன்று!.//

பரூக் காக்கா உன்கள் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்புகளுக்கு மிக்க நன்றி. ஆனாலும் காக்கா நீங்கள் உடைக்கும்
பொன் குடங்களுக்கு இந்த மன்குடம் ஈடாகுமா?

adiraimansoor said...

//எண்ணிப் பார்க்கிறேன்; கன்னிப் பதிவா! கண்ணில் ஒற்றிக் கொள்ளும் வண்ணத் தமிழ் நடையும், வாஞ்சை மிக்க வாழ்த்துகளுடன் பீடிகையும் போட்டு இப்படி ஒரு பதிவை எவரும் பதிந்ததில்லை! உன்னை ஓர் ஓவியனாகக் கண்டேன்; நுட்பத் திறனுடன் வேலைகள் செய்வதையும் கண்டேன்; ஆயினும், இப்படி ஓர் எழுத்தாளானாக இப்பொழுது தான் கண்டேன்; ஊக்கம் இருந்தால் ஆக்கம் வரும் என்பதற்குச் சான்றும் நீதான்!//

கவியன்பன் கலாமே! என் ஆருயிர் நண்பனே உன் வாஞ்சைமிகு வார்த்தைகளின் வர்ணனை கண்டு அகமகிழ்ந்தேன் நன்றி மிக்க நன்றி

M.B.A.அஹமது said...

மன்சூர் காக்கா தங்கள் துவாவிர்க்கு நன்றி (இரு பிரகசமான கண்கள்) மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்குமுல்லாஹ் கைரன் வ ஆபியா யா ஹபீபி நூருல் அய்னி!

sabeer.abushahruk said...

மச்சான் மன்சூர் அவர்களின் கன்னிப்பார்வை ( நான் இங்கே குத்து(கரிங்)கல்லாட்டம் உக்காந்து இருக்கேன் கிரவுன்மச்சான் கண்டுகொள்ளவே இல்லையே?)பார்த்து பரவசம்!எழுத்து ஈர்கிறது அவர்வசம்!தனித்தமிழ் எழுத்தோ'கனிரசம்"(போதுமா மச்சான்!).

-கிரவுன்மச்சான்

Anonymous said...

//நீங்கள் உடைக்கும் பொன் குடதுக்கு// தம்பி மன்ஸூர்! சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மன்னப்பன் குளத்து தண்ணீர் ஒரு மண்குடம் [தோண்டி] கால் ரூபாய் பலா கிணத்து தண்ணீர் அறை ரூபா[ இது கடல் கரைத்தெரு [Door to Door] கூலி மட்டுமே அந்த மண் குடத்தின் விலையே ஒன்னேகால் ரூபாய்தான். அந்த தண்ணீரில் தேத்தாங்கொட்டை போட்டு குடித்தால் தாகம் அடங்கும். அப்பொழுதெல்லாம் வசதியானவர்கள் வீட்டில் மட்டுமே செம்பு குடம் இருக்கும்.

எவர்சில்வர் குடம் யார் கனவிலும் வரவில்லை! இப்போது எவர் சில்வர் குடத்து தண்ணீர் குடம் குடமாய் குடித்தாலும் குடித்தது போல் இல்லை;. ''இப்பொழுது நான் பொன் உடைக்கிறேன்'' என்று சொன்னீர்கள் அல்லவா அதற்க்கு வருவோம்!

அந்த நாள் நினைவுகள் வந்தது. என் தாயார் எனது தேவைக்கு காஸு கொடுக்கவில்லை என்றால் எங்கள் வீட்டு மண்குடம் தண்ணீரோடு உடைந்து ஓடும்.அன்று நிறைய குடங்களை உடைத்த பெருமை என்னையே சாரும்.

நான் மட்டும் தோண்டியே உடைக்க வில்லை. அகம் பாவம் கொண்ட மனிதனும் தோண்டியே உடைத்து இருக்கிறான்.

''நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாசமா குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதை கூத்தாடி-கூத்தாடி போட்டுடைத்தாண்டி''

என்பதுதான் அந்தபாடல் ஒரு சித்தார் பாடிய பாடல் இது. இப்படி
தோண்டியை உடைத்த மனிதனை நான் பார்த்தேன். எத்தனையே தோண்டியே உடைத்த என்னிடம் ஒருவன் ''என் தோண்டி உடையவே உடையாது! உன் தோண்டியே உடைக்கிறேனா இல்லையாபார்'' என்றான்'
பாவம்அவன்தோண்டி அவன் கண்முன்னே உடைந்தது!

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு