Tuesday, January 14, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

குழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி 11

அதிரைநிருபர் | July 10, 2011 | , ,

”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.............
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே............”

என்று பின்வரும் காலங்களில் வயதிற்கேற்ப பொறுப்புகளினால் தூக்கம் என்பது ஏக்கத்திற்குரிய விஷயமாகிப் போகுமெனப் பட்டியலிட்டு, குறைந்தபட்சம் குழந்தைப் பருவத்திலாவது தூங்கிக் கொள் என்கிறது கவிஞரின் அற்புதமான வரிகள்.

ஆனால் இன்று நம் வீடுகளில் “கண்ணா 11 மணி ஆகிறது, தூங்கப்போ” என்று பெற்றோர்களும், ‘இல்லம்மா........ இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ...” என்று கெஞ்சும் சிறார்களையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. தொலைக்காட்சி (நிகழ்ச்சிகள்) என்று மட்டும் இல்லாமல் இன்று கணினியும், வீடியோ விளையாட்டுகளும் படுக்கை அறைகளில் நுழைந்து கொண்டன. விளைவு, கதாபாத்திரங்களாகவே தன்னை சித்தரித்துக்கொண்டு கண்ணாடித் திரையில் தன்னை ஒட்டிக் கொண்டவர்கள்தான் ஏராளம்.

இங்கு நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் எப்பொழுது தூங்கப் போகிறார்கள் என்பதல்ல, மாறாக எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்பதுதான். ‘குழந்தைகளின் தூக்கத்தைப் பற்றிக் கவலையடைய என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி ம்னதில் எழலாம்.

ஆம், நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக, ஆரோக்கியமான உடல்நிலை பெற்ற குழந்தைகளாக, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கொண்ட குழந்தைகளாக, கல்வியில் சிறந்த குழந்தைகளாக உருவாவதற்கு அவர்களுடைய தூக்கமும் தூங்கும் நேரமும்தான் பேருதவி புரிகின்றன.

குழந்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கான் தூக்க நேரம் குறித்து அட்டவணையே தயாரித்திருக்கிறார்கள். ஒரு வயது குழந்தை நாளொன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும். இதே போல் மூன்று வயது முதல் ஆறு வயதிற்குட்பட்டோர் 11 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும். ஆறிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகள் 10 முதல் 11 மணி நேரம் தூங்குவது அவசியமாகிறது. இந்த தூக்க நேர மாறுதல்களினால் குழந்தைகளின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அயர்ந்து தூங்கும் இந்த அற்புதமான நேரத்தில்தான் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியும், ஹார்மோன்களின் வெளிப்பாடும் நடக்கிறதென்பது அதிசயமான அறிவியல் உண்மை. மேலும் சீரான உடல் வளர்ச்சியும் இப்போதுதான் நடைபெறுகிறது.

தூக்கம் ஒரு மாமருந்து என்றால் அது மிகையன்று. ஏனெனில் தூக்கம், நோயினால் நலிவுற்றிருக்கும் உடலைத் தேற்றுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சியடையவும், சுருங்கச் சொல்லின் ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கும் தூக்கம் பெரும் பங்காற்றுகிறது.

சரியான தூக்கமின்மை அல்லது குறைவான தூக்க நேரம், குழந்தைகளுக்கு உடல் கோளாறுகளைத் தோற்றுவிப்பதுடன் மட்டுமல்லாது பல மனநோய்களைத் தோற்றுவிப்பதிலும் முதன்மையாய் இருக்கிறது. முக்கியமாய் மனப்பதற்றம், மனச்சிதைவு, கற்றலில் குறைபாடு, சாதாரண செயல்களில் கூட தடுமாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் செயல்திறன்களிலும், விளையாட்டுத் திறன்களிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் ச்மூக உறவுகளில் விரிசல் விழவும் இந்தத் தூக்கப் பற்றாக்குறைதான் முன்னிலை வகிக்கிறதென்னும் ஆய்வு நம்மைத் தலைசுற்ற வைக்கிறது.

சரி, இனிமேல் என் குழந்தைகளின் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தினைக் கண்காணிக்கிறேன். அவர்கள் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரங்களை கட்டுக்குள் வைத்திருப்பேன். அவர்களுக்கு தூக்கத்தின் அவசியத்தை உணர்த்துவேன் என்று நீங்கள் உணர்வது நிச்சயமாக வரவேற்கத் தகுந்த மனமாற்றமே.. சந்தேகமில்லை. ஆனாலும் தூக்கத்திற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுக்கவேண்டியது பெற்றோர்களது கடமையென்பதினை மறக்கக்கூடாது.

அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவர்களின் மனதை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும். குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மனதில் வன்முறை, கூச்சல், அடிதடி போன்றவை (சமயத்தில் செய்திகளில் கூட விரும்பத்தகாத படங்கள் வெளி வ்ந்து விடுகிறது. )பதியப்படும் போது தொலைவது தூக்கம் மட்டுமல்ல, அவர்களது கற்பனை வளமும் தான். தொலைக்காட்சி என்ற வில்லனை படுக்கையறையிலிருந்து தொலைத்துவிட்டால் - தேவையற்ற ஒலி / ஓசை, ஒளி, வெப்பநிலை நீங்கி நல்லதொரு (தூக்கத்திற்கேற்ற) சூழல் உருவாகும், பிறகென்ன -

தூக்கம் அவர்கள் கண்களில்............................!
அமைதி அவர்கள் நெஞ்சினில்..........................!
வளமான இந்தியா விடியலில்...........!!!!!!!!!!!!!!!!!!
--

Rafeeq.

11 Responses So Far:

அதிரைநிருபர் said...

இந்த பயனுல்ல பதிவு சில தமிழ் வலைத்தளங்களில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. கட்டுரையாளருடைய அனுமதியுடன் நம் அதிரைநிருபரில் வெளியிடுகிறோம்.

இந்த விழிப்புணர்வு பதிவை எழுதிய சகோதரர் RAFEEQ அவர்கள், ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக கடந்த 2003 ஆண்டு முதல் பணியாற்றிவருகிறார். மேலும் தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் - மழலைக்கல்வி என்ற இணைய புத்தகத்திலும் தன் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இக்காலச் சூழலுக்கு ஏற்ற நல்ல அறிவுரை ! பகிர்வுக்கு நன்றி சகோதரரே !

சகோ.ரஃபீக அவர்களின் பங்களிப்பில் இணையக் கல்விக்கழகம் - மழலைக் கல்வியினை வலைத்தளத்தில் கண்டேன் ! குழந்தைகளுக்கு அற்புதமான கணினியூடெ கல்வி !

கண்ட கண்ட கார்ட்டூன்களை கணினியிலே போட்டுக் காட்டுவதைத் தவிர்த்து இதுபோன்ற கல்வி தரும் வலைத்தளங்களை குழந்தைகளை பார்க்க கேட்க பயிற்சியெடுக்க வைக்கலாம் !

"கற்க கணினியூடே கல்வியை (கசடர) கற்றபின்
நிற்க அதற்குத் தக !"

என்ன மாத்திட்டேனோ !?

அப்துல்மாலிக் said...

சில குழந்தைகள் எவ்வளவுதான் சூழ்நிலை உருவாக்கி கொடுத்தாலும் லேட்டா தூங்கி முன்னரே எழுந்துக்கொள்கிறது, தூக்கம் என்பது என்னவென்று கேக்குது....

அப்துல்மாலிக் said...

//கற்க கணினியூடே கல்வியை (கசடர) கற்றபின்
நிற்க அதற்குத் தக !"//

கனிணிகால வள்ளுவரா... அவ்வ்வ்வ்

sabeer.abushahruk said...

பயனுள்ள தகவல்!

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்

சகோ.ரஃபீக் அவர்களின் முக்கியமான தகவல்.

//”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.............காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே............”//

நேரமில்லை நேரமில்லை வேலையை பாருங்கள் அம்மாவே !

நேரத்தை தவறவிட்டால் வேலைகள் முடியாது அம்மாவே !

என்று குழந்தைகள் சொன்னால் கூட ஆச்சிரியப்படுவதர்க்கில்லை

இன்று பெற்றோர்கள் தானே பல நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

லெ.மு.செ.அபுபக்கர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆக எதிர்கால வளமான இந்தியா நம் குழந்தையின் விடியலில் நிர்ணயமாகிறது.
சகோதரர் ரபீக் அவர்களின் நல் ஆக்கம் மழலையை நிச்சயம் மாமனிதராக்கும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர் ரஃபீக் அவர்களின் அருமையான விழிப்புணர்வு பதிவு. வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போன்று குழந்தைகள் தொடர்பான பதிவுகள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறோம்.

//5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மனதில் வன்முறை, கூச்சல், அடிதடி போன்றவை (சமயத்தில் செய்திகளில் கூட விரும்பத்தகாத படங்கள் வெளி வ்ந்து விடுகிறது. )பதியப்படும் போது தொலைவது தூக்கம் மட்டுமல்ல, அவர்களது கற்பனை வளமும் தான். //

நிறைய வீடுகளில் நடக்கும் நிகழ்வு.

சிறுகுழந்தை தொந்தரவு செய்கிறான் என்று தொலைக்காட்சியை சிறுவயதிலிருந்தே திணித்துவிட்டு அவன் பள்ளிக்கூடம் செல்லும் வயது வந்ததும், படிக்க மாட்டேங்கிறான் ஒரே டீவி பார்க்கிறான் என்று பெற்றோர் வருந்துகிறார்கள். இதுவே அன்றாடம் நாம் ஒவ்வொரு வீட்டிலும் காணும் காட்சி.

நிறைய தொலைக்காட்சி நிகழ்வுகள் குழந்தைகளின் கற்பனை திறனுக்கு தடை என்பது உண்மை.

புதுசுரபி said...

கருத்துரை/பதிலுரை அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், பின்னர் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் தரமான நேரத்தினாலும் அதனுள் நாம் ஏற்படுத்தும் தரமான உரையாடல்கள், கதைகள், நேர்மையான விளையாட்டுகள் மற்றும் நல்ல புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதன் மூலம், தொலைக்காட்சி என்ற அரக்கனிடமிருந்து நம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். என்னுடைய இரு மகள்களுக்கும் (9 மற்றும் 5 வயது) தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாமல் வளர்க்கிறேன். (செய்திவாசிப்பாளராக இருந்தும், டி.வி வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை, குழந்தைகளுக்கு விபரம் தெரியும் வரையிலும், கட்டுப்பாடு) நான் மேற்சொன்ன பழக்கங்களைப் பழக்கியதன் மூலம் இதுநாள் வரையிலும் டி.வி அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

தான் ஒருசெயலைச் செய்யாதவரை அடுத்தவருக்கு உபதேசிக்கக்கூடாது என்பது நபிமொழி

வாழ்த்துக்களுடன்
-ரஃபீக்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// (செய்திவாசிப்பாளராக இருந்தும், டி.வி வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை, குழந்தைகளுக்கு விபரம் தெரியும் வரையிலும், கட்டுப்பாடு) நான் மேற்சொன்ன பழக்கங்களைப் பழக்கியதன் மூலம் இதுநாள் வரையிலும் டி.வி அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. //

மாஷா அல்லாஹ் ! பாராட்டப் படவேண்டியதும் அதோடு எங்களுக்கும் படிப்பினையும் இருக்கு உங்களின் செயலில் !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------

"குழந்தைகளும், தூக்கமும் ‍ புதுசுரபி" என்று தலைப்பிட்டு சகோ. ரஃபீக் எழுதிய ஆக்கம் தூக்கம் பற்றிய ஒரு அருமையான விழிப்புணர்வு மட்டுமல்ல நம் அனைவராலும் அன்றாடம் பின்பற்றப்படவேண்டிய ஒரு நல்ல அறிவுரை...

அன்றாடம் நாம் எவ்வித தடையற்ற 8 மணி நேர தொடர் தூக்கத்தை அணுதினமும் பெற்றோமேயானால் அன்றாடம் இயற்கையான புத்துணர்ச்சியை எவ்வித மருந்து மாத்திரைகளும் இன்றி அனுபவிக்கலாம்.

தூக்கக்குறைவால் முதலில் பாதிக்கப்படுவது (இதயம்) மனமும், மூளையும் தான். இனம் புரியாத தேவையற்ற படபடப்பு, பதற்றம், கை கால் நடுக்கம், கோபம், சாந்தமான குணம் இல்லாமை, முரட்டுத்தனம், வாழ்வை ருசிக்கத்தெரியாமல் போதல், அலட்சியம், சுறுசுறுப்பின்மை போன்று இன்னும் பல சிக்கலுக்கும், சமூக சீரழிவிற்கும் சரியான தூக்கமின்மை திறவுகோலாக அமைந்து விடும்.

அதனால் தான் மனநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனநல மருத்துவர்கள் முதலில் கொடுப்பது தூக்க மாத்திரைகள் தான். இறைவனால் இயற்கையாக மனிதனுக்கு அருளப்பட்ட தூக்கம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்து போவதால் செயற்கையான மருந்து மாத்திரைகள் மூலம் இயற்கை தூக்கம் அவர்களுக்கு வரவழைக்கப்படுகிறது. மருந்து மாத்திரையின்றி நன்கு உற‌ங்கி எழும் நாம் எவ்வகையில் இறைவனால் அருளப்பட்டவர்கள் என்று சிந்திப்போமாக.

என் அனுபவத்தில் நடக்கும் ஒன்றை இங்கு உங்களுக்காக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

ஒவ்வொரு நாளும் மாலையில் குறைந்தது அரைமணி நேரம் வயதிற்கு தகுந்த படி இரு கைகளையும் வீசி நடப்பதாலோ அல்லது மூச்சிறைக்க மெல்ல ஓடுவதாலோ அல்லது கால்பந்து போன்ற விளையாட்டில் ஈடுபடுபவதாலோ அல்லது உடற்பயிற்சிகள் செய்வதனாலோ இரவில் விரைவிலேயே உடலில் ஒரு அசதி (கொட்டாவியுடன்) வந்து அருமையான நீண்ட தூக்கம் நம்மை இஷா தொழுகை முடிந்த உடனேயே மெல்ல, மெல்ல தாலாட்டி தொட்டிலின்றி உறங்க வைத்து விடும். முயற்சி செய்து பாருங்கள்.... உள்ளப்பூர்வமாக உணர்வீர்கள்...

உறங்கும் முன் சிறிது நேரம் இறைபிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். "இறைவா! இன்றைய பொழுதை நல்ல விதமாக கழிக்க உதவினாய். இதுபோல் நாளையும் எனக்கும், என் குடும்பத்திற்கும், என் சுற்றத்தாருக்கும், என் ஊருக்கும், என் நாட்டிற்கும் எவ்வித பேரிடர்களும், துக்கமான, துயரமான சம்பவங்களும், பேராபத்துக்களும், விபத்துக்களும், விபரீதங்களும், இயற்கைப்பேரழிவுகளும், கண்ணுக்குப்புழப்படாத தீய சக்திகளிலிருந்து வரும் எல்லாத்தீங்குகளிலிருந்தும், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு சம்பவங்களிலிருந்தும், உலகில் உலகால் ஏற்படக்கூடிய எல்லாத்தீங்குகளிலிருந்தும் எம்மை பாதுகாத்து அமைதியான காலையாக நாளை பொழுதை விடியச்செய்திடுவாயாக....ஆமீன்...என்று பிரார்த்தித்து உறங்க வேண்டும். மற்றவை எல்லாம் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள், நேரடி கண்காணிப்பிற்குள் வந்து விடும் இன்ஷா அல்லாஹ்.

உறக்கமின்றி தவிக்கும் உலகுக்கு இதுவே இலவச சிகிச்சை என்று கூறி என் கருத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.