Tuesday, January 14, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அடைகாக்கும் ஆசைகள்! 39

அதிரைநிருபர் பதிப்பகம் | July 24, 2011 | , , ,

அடுத்தமுறை நான்
அதிரைக்குச் செல்லுகயில்
அனுபவிக்கச் சில
அவசியம் வாய்க்க வேண்டும்

புத்தம்புது மழையால்
பூமி நனைந்திருக்க வேண்டும்
பின்னிரவில் விட்ட மழை
மண்ணில் மிச்சம் வேண்டும்

உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்

பொய்த்துப்போன கம்பன் கனா
மெய்ப்பட்டு வர வேண்டும்
மெய்ப்படும் நாள்வரை
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்

புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்

கைப்பந்து கால்பந்தென
மைதானங்கள் செழிக்க வேண்டும்
மட்டைப் பந்துக்கும்
மையத்தில் இடம் வேண்டும்

விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்

பள்ளிகளில் ஐம்பொழுதும்
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்

ஜும்-ஆ தொழுதபின்பு
சொந்தபந்தம் தழுவ வேண்டும்
பலகாலம் பரிச்சயம் மறந்த
பலரையும் பார்க்க வேண்டும்

இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்

மரண அறிவிப் பென்று
காதுகளில் விழ நேர்ந்தால்
ஜனாஸா தொழுகையொன்று
அதிரையில் தொழ வேண்டும்

சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்

கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்

பெண்களின் விருந்தை
முன்னிருந்து நடத்த வேண்டும்
பேசி வைத்தப் பெண் விழியை
தேடியலைந்த நெனப்பு வேண்டும்

ஓதிக் கொடுக்கும் சப்தம்
காது வழி கேட்க வேண்டும்
உஸ்தாது கைபிடித்து
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்

நவீன வசதிகளில்
நாளுக்கு நாள் மாறினாலும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்!

- சபீர்
Sabeer Abu-Sharuhk

39 Responses So Far:

Yasir said...

காக்கா அருமை அருமை...வெகஷன் போக வேண்டாமென்று இருந்த என்னை “வேண்டும்” போக வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி விட்டீர்கள்.....
உங்க கிரெடிட் கார்டு நம்பரையும் பின் ன்னையும் குறுச்செய்தி மூலம் அனுப்புங்கள்...சீக்கிரம் புக்கிங்போட்டு கிளம்பணும்...அதான் உங்களுக்கு ப(பாராட்டு)னிஸ்மெண்ட்

ரசித்த வரிகள்

//விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்//

//கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்// சரிதான் காக்கா..ஆளுக்கு ஒரு பெர்முடாஸை போட்டுவிடவேண்டியதுதான்

Unknown said...

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்

---------------------------------------------------------------------
சாயங்கால நேரத்தின் அசல் பதம் .............class

அதிரை என்.ஷஃபாத் said...

சின்ன சின்ன நினைவுகள் அழகானவை.. சபீர் காக்காவின் வரிகளில் கூடுதல் அழகு பெறுகின்றன..

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

'கல்ப்'பில் உள்ளதை கவிமூலம் அள்ளித் தெளித்துவிட்டீர்கள்,சூப்பர்.
அதிரையில் அத்தனையும் வாய்க்க வேண்டும் உங்களுக்குக்கும்....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்காவின் அடைகாக்கும் ஆசைகள் எல்லாமே
அடக்கமான ஆசைகள்... ஏங்க வைக்கும் வரிகள் !

//உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்//

சிலருக்கோ பிள்ளைகளின் உம்மா (மட்டும்)விழித்திருக்க வெண்டும்போல் தோனும் ! :) ஆனால் உங்களுக்கோ (என்)உம்மா மட்டும் அதெப்படி காக்கா !

//சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்//

ஆமாம் காக்கா ! மீளுமா அந்த நாட்கள் !?

மீண்டும் (சொல்கிறேன்) சொல்லியா தரனும் சொல்லெடுத்து வில்லுக்கு வைத்து அம்பெய்தி வென்றெடுக்கிறீர் எங்களின் இதயங்களை !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞல் வழி கருத்து
--------------------------------------------

========================================
* புத்தம்புது மழையால்
* பூமி நனைந்திருக்க வேண்டும்
* பின்னிரவில் விட்ட மழை
* மண்ணில் மிச்சம் வேண்டும்
========================================

Wowwww ! realy superb.

தரமான கவிதைகளும் ரசனைகளை கையாளும் உத்தியும் உங்களுக்கு கைவந்த கலை நண்பரே !

நீங்கள் கவிதைக்கு என்று தனி பிளாக் வைத்திருக்கவில்லை என்றும் அறிந்தேன், இந்த தளம் நல்ல களம் திறமையானவர்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ஆஷா

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
---------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்.

காக்கா நீங்க சொன்ன விசயங்கள் மறைக்கடிக்கப் பட்டதுனாலேதான். நாம் இம்மன்னில்தானோ பிறந்தோம்? என்ற தலைப்பில் ஒரு ஆதங்கம் எழுதினேன்.

// புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும் //

ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டிய வரிகள்.

புதுப்புது மினுக்கமில்ல
புர்காவில் அகலம் வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
பெண்கள் பயானுக்கு செல்ல வேண்டும்


// பள்ளிகளில் ஐம்பொழுதும்
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும் //

முதலில் நிற்கின்ற முதியவர்கள்
சீராக வரிசையை அமைக்க வேண்டும்
பின்னால் நிற்கக்கூடிய வாலிபர்களை
நேராகவும் நெருக்கமாகவும்
நிற்க்கச் சொல்ல வேண்டும்.


இது போன்ற பலசுகளை நினைவுப் படுத்திக்கொண்டே இருக்க இறைவனிடம் துஆ செய்தவனாக.

லெ.மு.செ.அபுபக்கர்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/////அவசியம் வாய்க்க வேண்டும்
மண்ணில் மிச்சம் வேண்டும்
உம்மா மடி வாய்க்க வேண்டும்
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்
கடற்காற்றில் கலைய வேண்டும்
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்
பலரையும் பார்க்க வேண்டும்
தவ்ஹீது ரசிக்க வேண்டும்
அதிரையில் தொழ வேண்டும்
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்! /////
****************************************************************************************************
நல்லதொரு ஆசைக்கனவு!
நிறைவேறாத நல்ல ஆசைக்கனவுகள்
அவசியம் வாய்க்க வேண்டும்!
அனைவருக்கும் வாய்க்க வேண்டும்
அடைகாக்கும் ஆசைகள்!

அதிரை கவி சபீருக்கு வாழ்த்துக்கள்!

Meerashah Rafia said...

சபீர் காக்கா.. எப்போ ஊருக்கு வர்றீக?

sabeer.abushahruk said...

யாசிர்:
//ஆளுக்கு ஒரு பெர்முடாஸை போட்டுவிடவேண்டியதுதான்//
இது ஜோக்காகவல்ல, ஒரு நல்ல தீர்வாகவே படுது.  அல்லது பட்டாபட்டி போட்டு விட்டுட வேண்டியதுதான்.
 
Harmys, adirai N shafaath, MHJ:
ஆஸ்திரேலிய, அமெரிக்க, இங்கிலாந்து இளங் கவிகளே.  வாழ்த்துகளுக்கு நன்றி.
நல்லா, ரசனையா, மாறுபட்ட கோணங்களில் எழுதுறீங்க. ஆனால் என்ன குறை எனில், நிறைய எழுதுவதில்லையே தம்பிகளா. ஏன்?
 
மேலும், இன்று திண்ணையில் வெளியான கீழ்கண்ட என் கவிதை ஹார்மீஸ் தனமாக துவங்கி ஷஃபாத் தனமாக முடிவதை கவனியுங்கள்:
 
 
அரசாணை – ஐந்தாண்டுகளுக்கு!
 
நூலிழை கொண்டு
நெய்து வைத்தது போல்
பெய்து கொண்டிருந்தது
மழை
 
இடியாமலும் மின்னாமலும்
சற்றேனும் சினமின்றி
சாந்தமாயிருந்தது
வானம்
 
சீயக்காய் பார்க்காத
சிகையைப்போல
சிக்குண்டு கிடந்தன
மேகங்கள்
 
உதயகாலம் உணராமல்
உறங்கிக்கொண்டிருந்தது
உலகம்
 
பஞ்சுப்பொதி மேகம் போர்த்திப்
படுத்துறங்கிக் கொண்டிருந்தது
பகலவன்
 
தற்காலிக ஓடைகளிலும்
தான்தோன்றிக் குட்டைகளிலும்
துள்ளின
தவளைகள்
 
நைந்தும்
சிதைந்தும்போய்விட்ட
மழைநீர் சேகரிப்புக் கொள்கலன்களில்
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு
மீண்டும்
அனிச்சையாகவே
சேகரமாயது
மழைநீர்.

ஸபீர்
 
 

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்:
//சிலருக்கோ பிள்ளைகளின் உம்மா (மட்டும்)விழித்திருக்க வெண்டும்போல் தோனும்//
 
சிலருக்கல்ல, பலருக்கு... ஏன் எல்லோருக்கும்தான்.  எனினும்,
 
அடைகாத்த ஆசை நிறைவேறியதும், தாய் மடியும் தலை வருடலும் வாங்கிக்கொண்டு
நம் பிள்ளைகளின் உம்மாவை கண்டால் நிம்மதி நிலைக்கும்,  உலகம் உமது வசப்படும் ஐயா!
 
அ.நி.: போட்டிக் கவிஞரிடம் கேட்டாயிற்றா “அடைகாக்கும் ஆசைகள் – 2 “ ரெடியாகுதாவென்று?
 
ஆஷா:
 //தரமான கவிதைகளும் ரசனைகளை கையாளும் உத்தியும்//
ரசனை, எழுதியவருக்கும் வாசித்தவருக்கும் பொதுவானதே? பிரத்தியேக ரசனை கொண்டோரால் மட்டுமே கவிதைகளை ரசிக்க முடியும். ரசித்ததை பாராட்டும் குணமும் எல்லோருக்கும் இருப்பதில்லை. ரசிகன் இல்லாத கவிதைகள் பூதம் காக்கும் புதையல்போல. 
மிக்க நன்றி.
 
//இந்த தளம் நல்ல களம் திறமையானவர்களுக்கு// சரியாகச் சொன்னீர்கள். அதிரை நிருபர் தளம் தந்தது நான் தடம் பதிக்கிறேன். ஆயினும் இங்கு கத்திரிக்கோலும் கடிவாளமும் ஜாஸ்தி.  மாறுபட்ட கோணங்களிலான என் எண்ணங்களை நீங்கள் விரும்பினால் www.satyamarkam.com; www.thinnai.com;  லும் கூட வாசிக்கலாம்.
 
எனக்கென்று தனித்தளம்? இந்த உயரம் பிடித்திருக்கிறது, இன்னும் சற்று பறக்கிறேனே...  கூட்டில் முடங்கும் காலம்வரை.
 
தொடர்ந்து வாசியுங்கள், முடிந்தால் தங்களின் எண்ணங்களையும் ஆக்கங்களாக்கி பங்களியுங்கள்.
 
 

sabeer.abushahruk said...

லெ.மு.செ.அபுபக்கர்:
/நீங்க சொன்ன விசயங்கள் மறைக்கடிக்கப் பட்டதுனாலேதான். நாம் இம்மன்னில்தானோ பிறந்தோம்? என்ற தலைப்பில் ஒரு ஆதங்கம் எழுதினேன்//
 
எழுதி எழுதியும் சொல்லி சொல்லியும்தான் மாற்றம் கொணர வேண்டும் தம்பி.  உங்கள் ஆதங்கங்கள் தவறு எனில் அ.நி. பதிந்தே இருக்க மாட்டார்கள். ரொம்ப சீரியஸாக போய்விடக்கூடாதே, நம்மூரை வேறு யாரும் ரொம்ப தப்பா நினைத்துவிடக்கூடாதே என்றுதான் உங்கள் பதிவின் போக்கை சற்று மாற்றினேன். 
ஜெயித்ததென்னவோ நீங்கள்தான். எங்க கேப்டனையே (நெய்னா) உங்க கைக்குள்ள போட்டுட்டியலே.

ஆலாவுதீன்:
 //அனைவருக்கும் வாய்க்க வேண்டும்
அடைகாக்கும் ஆசைகள்//
 
வழக்கம்போலவே தாடியை நீவிக்கொண்டே ‘சாதுர்யமாக’ ‘சைவத்தை’ மட்டும் தொகுத்து வாழ்த்திவிட்டாய்.
உங்கிட்ட பிடிபடக்கூடாதுன்னே ஒன்னுக்கு நாலு முறை படிச்சுதான் அனுப்புறேன் தெரியுமா? ஆயினும், எங்கேயாவது நம் மார்கத்துக்கு மாறாக எழுதினால் சாட்டையையும் சுழற்று.
ஷுக்ரன்பா.

மீராஷா:
//எப்போ ஊருக்கு வர்றீக?//
 
வர்றீக? அப்ப போயாச்சா, சொல்ல கொள்ளாம ? வாப்பாவுமா? (என் சலாம் சொல்லுங்கள்)
இப்பதான் நான் போயிட்டு வந்தேன். வந்ததும் நீங்க போயிட்டு, என்னை வாங்க என்றால், சரியென்று வர முயன்றால் நான் வரும்போது நீங்க சவுதிக்குப் போயிடுவீங்க.
இப்ப சொல்லுங்க, நான் வரவா போகவா இங்கேயே இருக்கவா? 

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சபீர் காக்கா,

ஒவ்வொரு வரிகளையும் வெளிநாட்டு வாழ் நம் மக்கள் அனைவரும் ஊருக்கு விமானம் ஏறுவதற்கு முன்பு வாசித்தே ஆகவேண்டும்.

அனைத்தும் மிக அருமை..

ஜாஹிர் காக்கா... இந்த பதிவை நகல் எடுத்து எதுவெல்லாம் தங்களுக்கு கிடைத்தது என்று ஊருக்கு போய்திரும்பி வந்ததும் சொல்லுங்களேன்..

Meerashah Rafia said...

இன்னும் வந்து சேரல காக்கா. இன்ஷா அல்லாஹ் எப்புடியும் வந்துடுவோம்லே!ங்குற தெனாவேட்டுல நீங்களும் வர்ரீகலானு கேட்டேன்.. விமான டிக்கட்ட இன்னைக்குதான் ஓப்பீஸ்ல கன்பார்ம் பண்ணினாங்க..

சவூதி ஏர்லைன்ஸ்ல பல்லிளிச்சிகிட்டே நிக்கிற அந்த அக்காவ பக்காவா பொருட்ச மீனும், கடல் தாண்டி கடல் உள்ள ஊருக்கு போவதால கடல் உணவுகளும் மறக்காம பரிமாரணைம்னு சொல்லிவச்சிருக்கோம்..
[குறிப்பு : அந்த ஏர்லைன்ஸ்ல எல்லாம் நல்லாத்தான் செய்வாங்க..ஆனா போர்டிங் முடிக்கிறதுக்குள்ள அட போங்கடா'ன்னு ஆகிடும்.. போன வாரம் எங்க சாச்சா மொவல் 'முனவ்வரா' ங்கிற ( மதீனதுள் முனவ்வரா) அரபி பெயர ஆங்கிலத்துல எழுதுனத படிச்சி அவன் தட்டச்சு செஞ்சி கூட இருந்தவங்களுக்கும் போர்டிங் வாங்கிரதுக்குள்ள ....அப்பாடியோ.. இருபது நிமிஷம் மூச்சி வாங்கிடுச்சு..அப்போ எந்த மொழினே தெரியாத என் பெயர படிச்சி எப்போ விமானத்துல ஏத்துவாங்கலோனு தெரியல.. உமர் தம்பி அப்பா இருந்தா இவன்களுக்கு முதல்ல ஒரு ஆங்கில-அரபிக் மென்பொருள் தயாரிச்சி கொடுக்க சொல்லிருப்பேன்.. ]

அப்துல்மாலிக் said...

சின்ன சின்ன ஆசைகள் நடந்தால் தேவலாம்...

crown said...

அடுத்தமுறை நான்
அதிரைக்குச் செல்லுகயில்
அனுபவிக்கச் சில
அவசியம் வாய்க்க வேண்டும்

புத்தம்புது மழையால்
பூமி நனைந்திருக்க வேண்டும்
பின்னிரவில் விட்ட மழை
மண்ணில் மிச்சம் வேண்டும்.
----------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
அதிரை கவியின் அடுத்து ஒரு கம்பீர கவிதை!
கற்பனையும் வரட்சியாகிவிக்கூடாது அது குளிர்சியாகவும், மகிழ்சியாகவும் மொத்தத்தில் நெகிழ்சியாகவும் இருக்கனும் என்னும் எண்ணம். ஆசை கவியாகி மழையாக பொழிந்திருக்கே மனம் எல்லாம் குளிர்ந்திருக்கு. மழை வேண்டும் அதுவும் பின்னிரவில் விட்ட மழை மண்ணில் மிச்சம் வேண்டும். ஆஹா அனுபவிக்க கூடியவங்களுக்குதான் இது போல் ஆசைவரும். பிறந்த மண்ணில் கால் வைக்கும் போதே அந்த மண்ணில் ஈரம் இருக வேண்டும் அப்பப்பா உ(கு)டலே சில்லிடுகிறது.அதன் மழையின் மிச்சம் நமது மச்சத்தை பொருத்து அமையும்.

crown said...

உம்மா மட்டும் விழித்திருக்க
ஊரே உறக்கத்தில் வேண்டும்
உற்றார் உறவினர் வருமுன்
உம்மா மடி வாய்க்க வேண்டும்.
---------------------------------------------------
கவிஞரே! இந்த வரியை உடனே எழுத முடிந்ததா?அல்லது ஆசுவாசப்படுத்தி கொண்டு எழுதினீர்களா? படிக்கும் போதே இதயத்தில் காற்று அடைக்கிறது.இயல்பாய் காது விடைக்கிறது,இளம் சூட்டில் கைகள் புடைக்கிறது.மயிர் சிலிர்கிறது.ஈன்றதாயின் காலடியில் சுவர்கம் உள்ளது என சொன்ன நபிகளார்(ஸல்)அவர்களின் வாக்கின் படி மடியும் காலடிக்கு அருகில் என்பதால் தான் இத்தனை அன்பை தரும் படி உள்ளதோ அந்த மடி!

crown said...

பொய்த்துப்போன கம்பன் கனா
மெய்ப்பட்டு வர வேண்டும்
மெய்ப்படும் நாள்வரை
பொய்யாகவாவ தொரு ரயில் வேண்டும்.
-----------------------------------------------------
ஓடாமல் போன கம்பன் ரெயில் நம் காலம் இருக்கும் வரை நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். வாழ்வின் பயணங்களுடன் சேர்ந்தே வரும் இந்த கம்பனின் கணவுகளும்.. எல்லா அதிரை வாசிகளுக்கும். ஆதி வாசிகளை இருந்தவர்கள் ரெயில் பார்த்த தில்லை . விஞ்ஞான வளர்ந்த நிலையிலும் ஆதிவாசிகளாய் அதிரை வாசிகள் மாறி போனது காலத்தின் கோலமா? அரசியல் சூழ்சியா? வரும் கால அதிரை வாசிகளுக்கு முன்னொருகாலம் கம்பன்னெனும் புகைவண்டி நம்மூரில் ஓடியதுன்னு சொன்ன? டைனசர் ஜந்துவை நாம் இப்ப படிப்பது போல் படிக்க வேண்டீய கொடுமை நேருமோ?

crown said...

கடற்கரைக் கருங்கற்சாலையில்
காலார நடக்க வேண்டும்
கம்சு சட்டையும் கைலியும்
கடற்காற்றில் கலைய வேண்டும்.
------------------------------------------
வாலிபத்தின் வசந்தத்தில் தலை வாரி முடிக்கவே சிலர் முன்னூருமணி நேரம் மூழ்கி விடுவதுண்டு.தலை கலைவதுதான் அங்கே தலையாய பிரட்சனை! தோள் கொடுக்கும் நண்பனும் விளையாட்டாய் தலையை களைத்து விட்டால். அவனை வசைபாடும் இளைஞர்கூட்டம்.... அந்தந்த வயதினருக்கு இடையே நடக்கும் ருசீகர சம்பவம். ஆனாலும் நாம் சுவாசிக்கும் ஊர் காற்று தலையை களைத்து போடனும் எனும் ஆசை உள்ளூரி போனதனால்.
வெளியூரில் காற்று தலைகளைத்தால் அக்காற்றையும் தூற்றுவோமே? எல்லாம் மண்னின் மீது உள்ள ஆசை வணங்கா முடி மன்னன் ஆனாலும் மடங்கித்தான் போகனும் அவனும் மன்னின் மைந்தன் அல்லவா?

crown said...

புதுப்புது மினுக்கமில்லா
புர்காவின் கருப்பு வேண்டும்
வாரத்தில் ஒரு நாளாவது
வெண்ணிறத் துப்பட்டி வேண்டும்.
------------------------------------------------
கற்பிற்காய் போடும் காப்பு! தற்காப்பு புர்காவில் தர்கம் வரும் படி ,பிறர்கண்ணை கவரும் படி எதற்கு மினு மினுப்பு என்ற முனுமுனுப்பு தவிர்கவேண்டும் எனும் நாணயமான ஆசைதான் .பட்டி தொட்டி எங்கும் ஆதியிலே பார்த துப்பட்டி இல்லாத காலம் இது என்பதால் இந்த ஆசை கணவும் நியாயம்தான்.

crown said...

கைப்பந்து கால்பந்தென
மைதானங்கள் செழிக்க வேண்டும்
மட்டைப் பந்துக்கும்
மையத்தில் இடம் வேண்டும்.
-----------------------------------------------
எல்லா விளையாட்டு பிரியர்களும் கூடி அவர் அவர் விரும்பும் விளையாட்டை விளையாடி களிப்புறனும். ஆதே வேளை விளையாட்டாய் கூட விரோதம் பாரட்டாமல் பார்து கொள்ள வேணும். பலர் கூடும் இடங்களிலும் கூடி வாழ வேண்டும் .அவர், அவர் விருப்பத்தில் தலையிடா சிறந்த பண்பு வேண்டும். கவிஞரின் ஆசை என்றும் நிலைத்திருக்க அல்லாஹ் அருள் புரியட்டும்.

crown said...

விளையாடும் இடங்களிலும்
நோன்புக் கஞ்சி வரிசையிலும்
முகச்சாயலையோ சேட்டையையோ வைத்து
இன்னார் பிள்ளையென்று அடையாளம் காண வேண்டும்
------------------------------------------------------------
அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கிறான் ,அச்சு அப்படியே அவன் அப்பனேயே உரிச்சி வச்சிருக்கு எனும் சொல் கேட்கும் பிள்ளை யாருக்கும் உச்சி குளிரத்தான் செய்யும். அது போல போகும் இடம் தோறும் கேட்க நேர்ந்தால் நெஞ்செல்லாம் ஒருவித மித இன்ப மின்சாரம் பாய்வது போல் இருக்கும். இந்த ஆசை எல்லாருக்கும் இருக்கும்.இருக்கனும்.

crown said...

பள்ளிகளில் ஐம்பொழுதும்
பல வரிசைகள் அமைய வேண்டும்
நேராகவும் நெருக்கமாகவும்
நின்று ஆமீன் சொல்ல வேண்டும்

ஜும்-ஆ தொழுதபின்பு
சொந்தபந்தம் தழுவ வேண்டும்
பலகாலம் பரிச்சயம் மறந்த
பலரையும் பார்க்க வேண்டும்

இயக்க குணம் புறக்கனித்து
இஸ்லாமியர் இணைய வேண்டும்
இறையில்லங்களை நிர்வகிக்கும்
இதயங்கள் இணைய வேண்டும்

தவ்ஹீதின் விரலசைவை
ஜமாத் பள்ளி சகிக்க வேண்டும்
ஜமாத்தாரின் தொப்பிகளை
தவ்ஹீது ரசிக்க வேண்டும்
--------------------------------------------------------
ஆமீன்,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,ஆமீன்,ஆமீன்
ஆமீன்,ஆமீன்.இப்படியெல்லாம் இருக்க எண்ணுபவனே நல்ல மூமீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கிரீடத்தின் தங்கமான வரிகள்.
// விஞ்ஞான வளர்ந்த நிலையிலும் ஆதிவாசிகளாய் அதிரை வாசிகள் மாறி போனது காலத்தின் கோலமா? அரசியல் சூழ்சியா? //

crown said...

மரண அறிவிப் பென்று
காதுகளில் விழ நேர்ந்தால்
ஜனாஸா தொழுகையொன்று
அதிரையில் தொழ வேண்டும்.
------------------------------------------
இந்த ஆசை பெரும் பாலும் எல்லாரிடமும் சாகா வரம் பெற்ற ஆசையோ? இப்படி நுணுக்க மாக கவனித்து எழுதுவது என்பதை விட எண்ணங்களின் உன்மை வெளிப்பாடே காரணம். சக மனிதனின் இறப்பில் ,கணக்கும் அன்பு இதயத்துடன் தொழுவது , ஒருவித சமூக அக்கறைதான்.

crown said...

சாயங்கால வெயிலில் சற்று
செந்நிறம் கூட வேண்டும்
சமகால நண்பர்களோடு
சிரித்துக்கொண்டு நடக்க வேண்டும்

கல்யாண விழாவொன்று
கட்டாயம் கிடைக்க வேண்டும்
கச்சல் கட்டாத இளசுகள்
கலரி பரத்த வேண்டும்

பெண்களின் விருந்தை
முன்னிருந்து நடத்த வேண்டும்
பேசி வைத்தப் பெண் விழியை
தேடியலைந்த நெனப்பு வேண்டும்
--------------------------------------------------
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நியாயமான ஆசையாதான் தெரியுது, இதுக்கு மேல நான் ஜீட்.கடைசிவரிக்கு சரியா கருத்து எழுதலேன்னா,கடைசிவரைக்கும் திண்டாட்டம் தான்.

crown said...

ஓதிக் கொடுக்கும் சப்தம்
காது வழி கேட்க வேண்டும்
உஸ்தாது கைபிடித்து
சலாம் ஒன்று சொல்ல வேண்டும்

நவீன வசதிகளில்
நாளுக்கு நாள் மாறினாலும்
நிச்சயம் நிலைக்க வேண்டும்
நம்மூரின் நற் பாரம்பரியம்!
---------------------------------------------------

ஓதிதந்த உஸ்தாதை உதாசினப்படுத்தாமல் கைபிடித்து சலாம் சொல்லனும் எனும் நேர்மையான ஆசையும் கரிசனமும் எல்லாருக்கும் வரனும். நல்ல தொரு ஆசைதான். நாகரிக்க ஆடி காற்றில் கிரைன்டரே பறக்கும் போது, ஆதி காலம் முதல் தொடரும் நம் பாரம்பரியம், ஊர் உறவின் மேல் உள்ள பிரியம்.இவையாயும் மூட பழக்கம் இல்லா வகையில் தொடரனும். இது போல பலர் கணவும் பலிக்கனும். இன்சா அல்லாஹ்.
குறிப்பு:கவிதை மழை வந்ததும் ,முருக்கு ,சீடை போன்று நொருக்குத்தினீயாய் சுடச்சுட கருத்து இருந்திருக்கனும் இப்ப ஆறி போன கஞ்சியா, நமத்து போன சீடையாய் மாறி போச்சோ என் கருத்துக்கள் தாமதத்துக்கு மன்னிக்கவும்.

crown said...

M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
'கல்ப்'பில் உள்ளதை கவிமூலம் அள்ளித் தெளித்துவிட்டீர்கள்,சூப்பர்.
அதிரையில் அத்தனையும் வாய்க்க வேண்டும் உங்களுக்குக்கும்....
-----------------------------
நான் சமீபத்தில் மிகவும் ரசித்த சிலேடை! பாரட்டுகள். ஏ கிளாஸ்.

crown said...

Wowwww ! realy superb.

தரமான கவிதைகளும் ரசனைகளை கையாளும் உத்தியும் உங்களுக்கு கைவந்த கலை நண்பரே !

நீங்கள் கவிதைக்கு என்று தனி பிளாக் வைத்திருக்கவில்லை என்றும் அறிந்தேன், இந்த தளம் நல்ல களம் திறமையானவர்களுக்கு.

வாழ்த்துக்கள்.

ஆஷா.
---மோதிரக்கை குட்டு வாங்கிருப்பீங்க இப்ப அன்பாய் வளைகர கை ஸோட்டும் வாங்கிட்டீங்க. வாழ்க வளமுடன். தாய்குலத்தின் ஆதரவு கிடைச்சுடுச்சி இனி நீங்கதான் அதிரை கவி அரசர் என்பது முழுமை ஆகிடுச்சு. வாழ்துக்கள்.'இப்படிக்கு உங்களை போல் எழுத நினைத்து தோற்று போன சாமானியன்.
கிரவுன் தஸ்தகீர்.------------------------------------------------

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இப்படிக்கு உங்களை போல் எழுத நினைத்து தோற்று போன சாமானியன்.
கிரவுன் தஸ்தகீர்.//

அட(க்) கிரவ்ன்(னு): உனக்கா ? தோல்வியா ?என்ன(டா)ப்பா எல்லாமே புதுசு புதுசா இருக்கே !!??

தோல்(மீது)சாயும் துணையோடு துணிவே தூண்டில் என்று கவிக்கு வரிகள் கட்டும் உன்னிடமா தோல்வி எட்டிப் பார்க்கிறது இருக்கவே இருக்காது(டா)ப்பா ! என்னால் நம்பமுடியாது இதனை. தோல்விக்கே கேள்வி மேல் கேள்வி வைத்து தோல்வியடையச் செய்யும் சாதுர்யம் உன்னிடம் இருக்கும்போது இப்படிச் சொல்லலாமா ?

இனிமேல் அப்படிச் சொல்லாதே !

sabeer.abushahruk said...

//இனிமேல் அப்படிச் சொல்லாதே// 'சொல்லாதே'வை பண்மையில் சொல்லியிருந்தால் எனக்காக பேசியது போலாகும்.

கிரவுனார் தமிழுரை கிடைக்காதாவென்று ஏங்குவோர் பலரிருக்க எனக்குக் கிடைத்து வருவதில் ரொம்ப மகிழ்சி (கொஞ்சம் மெதப்பு வேற) தாமதங்களும் சுவாரஸ்யப்பட்டுப்போகும் அது உமது உரைக்காகவெனில்... மிஸ்டர் கிரவுன்.

நன்றியும் வாழ்த்துகளும்.

அப்துல் மாலிக் மற்றும் தாஜுதீனுக்கும் நன்றி. ஜாகிர், அபு ஆதில், நெய்னா, முஜீப், இர்ஷாத், ஹமீது ஆகியோரும் வாசித்திருப்பர் என்ற நம்பிக்கையில் அவர்களுக்கும் நன்றி.

தொலைபேசியில் எப்போதும் பாராட்டும் யாசிரின் காக்கா ரஃபிக்கும் நன்றி.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

//இனிமேல் அப்படிச் சொல்லாதே// 'சொல்லாதே'வை பண்மையில் சொல்லியிருந்தால் எனக்காக பேசியது போலாகும்.

கிரவுனார் தமிழுரை கிடைக்காதாவென்று ஏங்குவோர் பலரிருக்க எனக்குக் கிடைத்து வருவதில் ரொம்ப மகிழ்சி (கொஞ்சம் மெதப்பு வேற) தாமதங்களும் சுவாரஸ்யப்பட்டுப்போகும் அது உமது உரைக்காகவெனில்... மிஸ்டர் கிரவுன்.

நன்றியும் வாழ்த்துகளும்.
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என்மேலும், என் எழுத்தின் மேலும் ,மேலும்,மேலும் அன்பையும் மரியாதையும் செலுத்தும் உங்களின் மேல் அன்பு மேலும் அதிகமாகிறது. ஆனாலும் பண்மையாக அழைக்க தேவை இல்லை. மேலும், ஒருமையில் அழைத்தாலும் எனக்கு நன்மை நினைபவர் நீங்கள் எனவே "மேலும்" ஏதும் சொல்லாமல் இத்துடன் முடிக்கிறேன் எல்லாம் மேலாகி போகட்டும் நம் அன்பும், நட்பும், சுற்றமும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . சபீர் காக்கா அடுத்து என்ன? ஆவலாய் இருக்கு மனம். எப்ப வரும் கவிதை வரும் தினம். எதிர்பார்கிறது உங்களின் கவிதையை நம்ம சனம். தயவு செய்து தாமதிக்காமல் ஒரு கவிதை வேண்டும்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் . இல்லையென்றால் எனக்கு ஒரு தலைப்பு தாருங்கள் நானும் எழுதி பார்கிறேனே? இந்த நேரம் நீங்க இதை பார்க்க நேர்ந்தால்.

Yasir said...

கிரவுனுரையை படிப்பதே ஒரு சுகம்தான்.....லேட்டா வந்தாலும் லட்டு போல இருக்கு உங்க உரை.....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இல்லையென்றால் எனக்கு ஒரு தலைப்பு தாருங்கள் நானும் எழுதி பார்கிறேனே? இந்த நேரம் நீங்க இதை பார்க்க நேர்ந்தால்.//

கிரவ்ன்(னு): "இனிக்கிறது இஸ்லாம்" இதுதான் உனக்குறிய தலைப்பு இதுதான் இந்தக் காக்காவின் தீர்ப்பு !! :)

crown said...

அபுஇபுறாஹீம் சொன்னது…

//இல்லையென்றால் எனக்கு ஒரு தலைப்பு தாருங்கள் நானும் எழுதி பார்கிறேனே? இந்த நேரம் நீங்க இதை பார்க்க நேர்ந்தால்.//

கிரவ்ன்(னு): "இனிக்கிறது இஸ்லாம்" இதுதான் உனக்குறிய தலைப்பு இதுதான் இந்தக் காக்காவின் தீர்ப்பு !! :)
--------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா உங்களுக்கு கவிதை அனுப்பி விட்டேன் பார்த்துக்கொள்ளவும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கவிதை அனுப்பி விட்டேன் பார்த்துக்கொள்ளவும்///

SO CUTE CROWN !!! கிடைத்தது ஆச்சர்யம் உமது திறன் கண்டுமல்ல, அதனோடு உடனிருந்தவன் என்பதிலும் பெருமையே ! அல்ஹம்துலில்லாஹ் !

விரைவில் பதிவுக்குள் ! இன்ஷா அல்லாஹ்....

Muhammad abubacker ( LMS ) said...

அடைகாக்கும் ஆசை திடீர் சூடுபிடித்து கலக்கு கலக்கிவிட்டீர்கள்.சகோதரர்களே!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.