Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வெற்றியின் விலாசம் ! 4

அதிரைநிருபர் | November 30, 2011 | , ,

துபையின் புகழ் பெற்ற நிறுவனம் ETA Ascon Star குழுமம். பாலைவனமாக இருந்த துபையில் 1973 ல் ஒரு கட்டுமான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலங்களில் சரியான, முறையான நிர்வாகத் திறமையாலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இடையறாத உழைப்பின் காரணமாகவும் இன்று அந்நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லுமளவுக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறது.

கட்டுமானத்துறையை மையப்புள்ளியாகக் கொண்டு இடப்பட்ட முதல் விதை அப்படியே வளர்ந்து ஆல விருட்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. மின்னணுவியல், இயந்திரவியல், இயந்திரம் தூக்கிகள், கட்டுமானப் பொருட்கள், ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம், சுற்றுச் சூழல் மேலாண்மை, கல்வி இப்படி அவர்கள் தடம் பதித்துள்ள துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ETA Ascon Star
குழும நிறுவனங்கள் வெறுமனே ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் மட்டும் செயல்படவில்லை. உலகின் 22 நாடுகளில் அவை கிளைகளைப் பரப்பியுள்ளன. தாங்கள் காலடி வைத்த அனைத்து நாடுகளுக்கும் மாதமொன்றுக்கு பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக் கொடுத்து வருகின்றன. இன்று அந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 67,000.

இவ்வளவு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்ட போதும் தாங்கள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது என்கிறார், ETA Ascon Star குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்  மரியாதைக்குறிய செய்யது முஹம்மது ஸலாஹுத்தீன். அண்மையில் சிங்கப்பூர் வந்த போது அவர்களோடு உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. இறைவனின் மகத்தான கருணையும், தம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் அயராத உழைப்பும் தான் தங்களுக்குரிய பெருமைகளின் மூலதனம் என்கிறார்கள் வெகு எளிமையாக. செய்யது முஹம்மத் ஸலாஹுத்தீன் அவர்களோடு உரையாடியதிலிருந்து சில துளிகள்....


பெரும்பாலான இந்தியர்கள் இன்று தொழில் துறையில் இருந்தாலும், அவர்களில் சாதனை வெளிச்சத்துக்குள் வந்தவர்கள் வெகு சொற்பம். வியாபாரம் என்பது ஒரு வகை விளையாட்டு. அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இசைந்து நம்முடைய ஆட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விளையாட வேண்டியதை ஒருவரே ஆடித் தீர்க்கலாம் என்று முனைந்து பார்ப்பது சவாலுக்குப் பொருத்தமாக இருக்கலாம். வாழ்க்கையில் வெற்றியைத் தருமா? என்பது கேள்விக்குறி.

இந்தியர்கள் எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் அதை முதலில் ஒழுங்கமைவுக்கு (Systemize) உட்படுத்த வேண்டும். இன்னார் இருந்தால் மட்டுமே வியாபாரம் நடக்கும் என்ற நிலையை மாற்றி, யார் வந்து அமர்ந்தாலும் இறையருளால் கல்லா நிறைய வேண்டும். ஒருவரை மட்டுமே நம்பி ஒரு வியாபாரம் இருக்கக் கூடாது. இவ்வாறான ஒழுங்கமைவுத் திட்டமிடல் (Systematic Plan) வெற்றிக்கான முதல் படி.

வியாபாரம் - அலையாடும் கடல். படகை எப்படிச் செலுத்துகிறோமோ அதைப் பொறுத்தே பயணமும் இனிதாகும். இடையில் இயற்கை இடையூறுகள் வரலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் வல்லமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு முறை தோல்வி வந்தவுடன் ஒட்டுமொத்தத் தொழிலையும் இழுத்து மூடு! என்று மனமுடைந்து போய் விடக் கூடாது. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, தவறுகளைக் களைய வேண்டும்.

வெற்றியின் போதும், தோல்வியின் போதும் மனதைச் சமமமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். வெற்றிக் கோட்டைத் தொட்டவுடன் மிதப்பில் இருந்து விடாமல், இன்னும் பலர் அதைத் தொட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான், பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

பொதுவாக ஒரு மனிதன் நான்கு வயதிலேயே போதுமான கல்வியைப் பெற்று விடுகிறான். அதன் பிறகு அவன் பள்ளிக்குச் சென்று பெருக்கிக் கொள்வதெல்லாம் அவனுடைய புத்திக் கூர்மையைத் தான். அதாவது, கல்வி ஒருவருக்குப் பள்ளியில் ஆரம்பிக்கவில்லை. அது தொடங்குவது அவரவர் வீடுகளில். பெற்றோர்கள் தான் அங்கு ஆசிரியர்கள். எனவே பெற்றோரைப் புறக்கணிப்பவர்கள் வெற்றி பெறுவது கடினம். அவர்களிடமிருந்து எவ்வளவு கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பேரம் பேசுவது, யாரை ஒருமையில், இருமையில், பன்மையில் அழைப்பது இவையெல்லாம் நான்கு வயதுக்குள் மனிதன் தெரிந்து கொள்கிறான். அதற்குப் பெற்றோர்களின் துணை அவசியம். உடன் பணியாற்றுபவர்களை உறவினர் போல மதிக்கும் பண்பும் பெற்றோரிடமிருந்து தான் நமக்கு வரும்.

எங்கே சென்றாலும் புத்தாக்கச் சிந்தனைகளோடு (Innovative Ideas) தொழிலில் இறங்க வேண்டும். பிறர் செய்வது போன்று இல்லாமல், அவர்களிலிருந்து எந்த வகையில் தனித்து வெளிப்படுவது என்ற சிந்தனையோடு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.

தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.

-- ஸதக்கத்துல்லாஹ்

அன்பான வாசக நேசங்களே... !

கடந்த 2008 செப்டம்பர் மாதம் சகோ. ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் தமிழ் வாசம் என்ற வலைப்பூவில் வெளியான பதிவு. சாதிக்க துடிப்பவர்களுக்கு ஊக்கம் தருவிதமாக உள்ள இந்த பதிவை மீள் பதிவு செய்கிறோம்.

-- அதிரைநிருபர் குழு.

4 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெற்றிக்கு படிகள் ஒரு காட்டுதான், இறையச்சம், தன்னம்பிக்கை, அடுத்தவர்களின் நிலையிலிருந்து பரந்த மனதுடன் சிந்திப்பதும் காரணிகளே !

//தனித்துச் சாதிப்பது சற்று எளிமையான காரியம். ஆனால் மற்றவரோடு சேர்ந்து உழைக்கும் போது அதில் இருக்கும் சவால்கள் அதிகம். அவற்றைத் தெரிந்து கொண்டு, சமாளிக்கும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் வெற்றியைத் தேடி நாம் போக வேண்டியதில்லை. அதுவே நம்மைத் தேடி வரும்.//

அனுபவம் பேசுகிறது !

Shameed said...

E T A ,இந்த நிறுவனம் கோயம்புத்தூரில் அந்த காலத்தில் கட்டி இருந்த பாலத்தை பார்த்து பிரமித்து போனேன்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ETA போன்ற ஒரு நிறுவனம் உலகக தரம் வாய்ந்த நிறுவனங்கள் அதிரைவாசிகளால் எப்போது உருவாகும்?

UNICONCHENNAI said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நானும் ETA பல்கலைக் கழகத்தின் பழைய மாணவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். அங்கு கற்றதை எனது தொழிலின் வெற்றிக்குப் பயன்படுத்துகின்றேன். நான் ETAல் படித்த காலங்கள் 30+ ஆண்டுகள். ETA மேலும் பல புதிய தொழில்களில் வெற்றி அடைய எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். வஸ்ஸலாம்.

அப்துல் ஹமீது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு