Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஓட்டிடலாம் வாங்க! ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் 32

அதிரைநிருபர் | February 28, 2011 | , ,

அன்பு சகோதர்களே!

வெகுசன ஊடகங்கள் நம்மை புறக்கணிப்பு செய்யும் நிலையில் இணையத்தை நாம் எப்படி பயன்படுத்தாலாம் என்ற சிறு கருத்து பகிர்வு! தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனையும் கவனத்தில் கொள்வோம்.

தமிழ் திரட்டியும் புக்மார்க் தளங்களும்!

திரட்டி என்பது பதிவு செய்தவர்களின் வலைத்ததளங்களின் இடுகைகளை (post) திரட்டும் ஒரு தளமாகும். வலைத்தளங்களை படிக்க விரும்புவர்கள் இந்த தளங்களுக்கு வந்து எளிதாக தமக்கு பிடித்த தலைப்புகளை படித்துக்கொள்ளலாம்.வாசகர்களும் பல வித கண்ணோட்டத்தில் உள்ள இடுகைகளை படிக்க முடியும்.

தமிழ் திரட்டிகளில் முன்னணியில் இருப்பது http://www.tamilmanam.net/ தளமாகும் இதன் பிறகு http://www.tamilveli.com/  http://www.thiratti.com/  போன்ற திரட்டிகளும் பலரால் விரும்பிப் படிக்கப் படுகின்றன.

அதுபோல், தங்களுக்கு பிடித்த அல்லது தங்களுடைய தளங்களை எவர் வேண்டும் என்றாலும் இதில் இணைத்துக்கொள்ள முடியும் பதிவராக (Blogger) இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. திரட்டிகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. இதில் Blog என்றில்லை எந்த தளத்தின் சுட்டியையும் (Link) இதில் கொடுத்து இணைக்க முடியும். இதில் முன்னணியில் இருப்பது http://www.ta.indli.com/  என்ற பெயரில் இயங்குகிறது. இதோடு http://www.tamil10.com/  போன்று பல Bookmark தளங்களும் பிரபலமாக உள்ளன.

இது போன்றுதான் தமிழ்நிருபர் http://tamilnirubar.org/  இணைய‌ தளமும் வரவுள்ளது. இந்த தமிழ் திரட்டிகளில் இணைக்க சில கட்டணங்கள் பதிவர்கள் கட்டவேண்டும். ஆனால், தமிழ் நிருபர் தளம் பதிவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் பரிசும் மதிப்புமிக்க பரிசுகளையும் அறிவித்துள்ளது.இது தமிழ் இணைய‌ தள வரலாற்றில் இதுவே முதன் முறை!

முஸ்லிம் வலைஞர்களும் பொது வாசகர்களும்!

சரி விசயத்திற்கு வருகிறேன்.இன்று அண்ணளவாக 450 முஸ்லிம் பதிவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஒரு மூத்த தமிழ் வலைஞர்.இந்த 450 முஸ்லிம் பதிவர்களில் பெரும்பாலானவர்கள் சமூக அக்கறையுடன் இடுகை போடக்கூடியவர்கள்.ஒரு சிலர் மட்டுமே மக்கள் ஒருவேலை உண‌வுக்கூட இல்லாமல் ஒட்டிய வயிறுடன் மக்கள் இருக்கும் போது,'நிலா நிலா ஓடிவா...'எழுதக்கூடியவர்கள். மற்றும் சிலர் அவர்களின் துறை சார்ந்தும்,சமையல் குறிப்புகள் என்றும் பதிவுலகில் இயங்க கூடியவர்கள்.

இன்று அச்சு,தொலைக்காட்சி,வானோலி ஊடகங்களில் பூஜியத்தில் இருக்கிறோம்.ஆனால், தமிழ் இணையதள ஊடகத்தில் ஓரளவு உயர்ந்து நிற்கின்றோம்.ஆனால் சமூக அக்கறையுடன் எழுதும் வலைப்பூக்கள் அவர்களின் சொந்த வாசகர்களால் மட்டும் வாசிக்கப்படுகிறது. அதையும் தாண்டி வெளியே செல்லவில்லை. வெளி வாசகர்களையும் அடைய வேண்டும் என்பதற்காகதான் திரட்டிகளிலும் சேர்த்தார்கள்...அவர்களின் ஒவ்வொரு இடுக்கையும் அதில் இணைக்கதான் செய்கிறார்கள் என்றபோதும் பொது வாசகர் வட்டத்தை அடையமுடியவில்லை! ஏன்??? அதற்கு காரணமே நாம்தான்.

ஆம்! இந்த திரட்டிகளில் ஒரு இடுக்கை பிரபலமாகி அனைவரின் பார்வைக்கும் வர வேண்டுமென்றால் அதிக ஓட்டுகள் பெற்றிருக்கவேண்டும். ஓட்டு போடுவதற்கு அந்த திரட்டி இணையத்தளத்தில் பதிவு செய்திருந்தால் போதும்.நீங்கள் விரும்பும் பதிவை (நன்பர்களாக சேர்ந்து)சொல்லி வைத்துக்கூட வாக்களித்து வெற்றி பெற வைக்கலாம்.திரட்டிகளில் பதிவு செய்துக்கொள்ள‌ மூன்று நிமிடம் போதும். இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் அல்ல‌, என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதான்.

இப்படி நல்ல விசயங்களையும் சமுதாய அக்கறையுள்ள சங்கதிகளையும் நாம் ஓட்டிட்டு திரட்டிகளின் வழியாக மக்களின் பார்வைக்கு வைப்பதன் மூலம் அந்த பதிவர்கள் பொது வாசகர் வட்டதை அடைகிறார்கள். இதானால் வெகு சன‌ ஊடங்கள் மறைக்கும் நமது செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப முடியும்! மக்கள் மனங்களை நமது பக்கம் வென்றெடுக்க முடியும்! இன்ஷாஅல்லாஹ்.

வித்தும் கண்முன் சாட்சியங்களும்!

'எங்க மக்களின் அவலத்தை வெகுசன ஊடகங்கள் மறைத்த போது இந்த வலைப்பூக்களும் திரட்டிகளும்தான் வெளியுலகிற்கு கொண்டு சென்றது. அதன் பின்புதான் வெகுசன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன'என்று நம்மிடம் ஒரு ஈழ பத்திரிக்கையாளர் சொன்னார்.

இன்று... துனீஷியா, எகிப்து, லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், அல்ஜீரியா, யெமன், மொராக்கோ என நடந்து வரும் மக்கள் புரட்சியில் ஆண்கள், பெண்கள், முதலாளி, தொழிலாளி, டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் அடங்குவர்.

கட்சிகளோ, இயக்கங்களோ, மத அமைப்புகளோ, தலைவர்களோ இவர்களை வழி நடத்திச் செல்லவில்லை. அணிதிரட்டவும் இல்லை வழி நடத்தவும் இல்லை

இவர்கள் அனைவரையும் அணிதிரட்ட இணைய ஊடகம் மட்டுமே பயன்பட்டது.ஆம்! டிவிட்டார்,ஃபேஸ்புக், யூ டியுப்,வலைப்பூக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் அளித்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தியே மக்களை அணிதிரட்டினார்கள்.

'இன்டெர்நெட்' தளத்திற்கூடான தஃவாவை கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி காலத்தின் ஜிஹாத்' என வர்ணிக்கின்றார்.

இனியும் என்ன தயக்கம்?அல்லாஹ்வின் மேல் பாரத்தை போட்டு சொடுக்குங்கள்...

விரைவில் இணைய உலகில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் - பார்க்கலாம். இன்ஷாஅல்லாஹ்...

-- ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ்

இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு 11

அதிரைநிருபர் | February 28, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னொரு கல்வி விழிப்புணர்வு மாநாடு என்ற தலைப்பைப் பார்த்ததும் எல்லோரும் ஆவலுடன் படிக்க ஆரம்பித்துவிட்டீர்களா. ஆம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் அபிராமம் நத்தம் என்ற ஊரில் 19.02.2011 அன்று மாபெரும் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே நடைபெற்றது. சிறப்புப் பேச்சாளராக பேராசிரியர் டாக்டர் அபீதீன் அவர்கள் கலந்துக்கொண்டு அறிமுகமில்லாத அற்புத கல்விகள் என்ற தலைப்பில் வந்திருந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கு எளிதில் புரியும்படி மிக அருமையான ஒரு சொற்பொழிவை நிகழ்த்தி எல்லோருக்கும் பயன்படும்படியாக இருந்தது என்ற செய்தி நம் அதிரைநிருபர் வலைப்பூவுக்கு வந்தும் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமிராமம் நத்தம் கல்வி அரகட்டளையில் (ANET) உள்ள அனைத்து சகோதரர்கள் அனைவரும் நிச்சயம் பராட்டப்படவேண்டியவர்கள். குறிப்பாக சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் மற்றும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு அளித்த அனைத்து சகோதரர்களின் கடின முயற்சியால் இந்த முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு இனிதே வெற்றியுடன் முடிவுற்றது. இறைவனுக்கே எல்லா புகழும்.



சரி ஏன் இந்த செய்தியை  அதிரைநிருபரில் பதியவேண்டும்? எல்லா ஊர்களிலும் தான் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைப்பெறுகிறதே என்று எல்லோரும் கேட்கலாம்,  ஆனால் காரணம் உள்ளது.

சென்ற மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில்  நம்மூர் அதிரைப்பட்டினத்தில் சமூக அக்கறையுள்ளவர்களின் முயற்சி மற்றும் உதவிகளுடன் கல்வி விழிப்புணர்வு மாநாடு மிகச்சிறப்பாக இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது, இந்த மாநாட்டு நேரலையை உலகெங்கும் உள்ள சகோதரர்கள் காணும்படியும் செய்யப்பட்டது. மாநாடு முடிந்தவுடம் சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்கள் அதிரைநிருபர் வலைப்பூவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள், அதிரையில் நடைப்பெற்ற மாநாடை பாராட்டிதோடு அல்லாமல், எப்படி இது போன்ற மாநாடு நடத்துவது, நேரலை எப்படி இவ்வளவு பிரமாதமாக செய்தோம் என்றொல்லாம் கேட்டு எழுதியிருந்தார்கள். நாம் அவர்களுக்கும் முடிந்தவரை நாம் செய்தவைகளைப் பற்றி மின்னஞ்சல் மூலம் பதில் அளித்தோம், நேரலை செய்வது தொடர்பாக சகோதரர் மொய்னுதீன் அவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறு கூறியிருந்தோம்.

அபிராமம் நத்தம் முதல் கல்வி விழிப்புணர்வு மாநாடு நிறைவுற்றவுடன், சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களிடமிருந்து நமக்கு மீண்டும் ஒரு மடல் வந்தது, இரண்டு வருடங்களாக மாநாடு நடத்த திட்டமிட்டு செயல்படுத்த முடியாமல் போய்விட்டது, அதிரைநிருபர் வலைப்பூவில் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுச் செய்திகளையை பார்த்தபிறகு தான் தமக்கு ஊக்கமும் உற்சாகமும் வந்து இந்த மாநாடு நடத்தியே தீர்வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டோம் என்றும், இந்த மாநாடு நடைப்பெறுவதற்கு அதிரைநிருபர் வலைப்பூவும் ஒரு காரணம் என்று எழுதியுள்ளார்கள். இந்த மடல் நம் அதிரைநிருபர் குழுவுக்கு மிக்க மகிழ்ச்சியை தந்துள்ளது என்று சொன்னால் மிகையில்லை. இந்த செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

இச்செய்தியை நாம் இங்கு பதிவு செய்வதற்கு மற்றுமொரு காரணம் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஆர்வத்துடன் நாமும், இவர்களும் மற்றும் இதை படிக்கும் பார்க்கும் கேட்கும் அத்துனை முஸ்லீம் ஊர்வாசிகளாலும் நடத்தப்படவேண்டும் என்பதற்காவும் தான்.

இது போன்ற கல்வி விழிப்புணர்வு மாநாடுகள் தமிழக முஸ்லீம்கள் அதிகம் உள்ள எல்லா ஊர்களிலும் நடத்தப்பட வேண்டும். யார் நடத்தினாலும் மாணவ செல்வங்களுக்கு பயனுல்லதாக இருக்கும் பட்சத்தில் அனைவரும் கல்வி நிகழ்ச்சிகளுக்கு அரசியல் சாயலின்றி ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக கல்வி சேவையாற்றி வரும் அபிராமம் நத்தம் கல்வி அரக்கட்டளையின் சேவை மென்மேலும் தொடர அதிரைநிருபர் குழு மற்றும் வாசகர்கள் சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கின்றோம்.

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களையும் அனைத்து ANET சகோதரர்களையும்  நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும். சகோதரரே உங்களுக்கும், இந்த கல்வி சேவையில் ஈடுபடுத்திவரும் அனைத்து ANET சகோதரர்களுக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து மேலும் இச்சேவையை தொடர அல்லாஹ் நல்லருபுரிவானாக.

-- அதிரைநிருபர் குழு

சகோதரர் V.A. செய்யது அப்துல் ஹமீது அவர்களின் முகவரி

V.A. Syed Abdul Hameed
No 5/1, 3rd Street, Eswar Nagar
Kodambakkam - Chennai 600 024
Tel 044-24814466 / 23780252
Mob 9445110544
Mob 9094833511
Email: hameed.unicon@gmail.com

Please visit http://www.anet2010.webs.com/   &   http://www.uniconchennai.webs.com/

கடன் வாங்கலாம் வாங்க - 13 25

அதிரைநிருபர் | February 27, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடன் தொடர் தொடர்கிறது. தொடர் 12வரை அனைத்து வகையான கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பார்த்தோம். இனி நம்முடைய வருமானத்திட்டத்தை பற்றி பார்ப்போம்.
கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்

எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுவிட்டு அந்தக்காரியம் நல்லபடியாக நடைபெற அல்லாஹ்விடம் உதவி தேடியபிறகு செயல்படும்பொழுது நம் காரியங்கள் அனைத்தும் இலகுவாகும். நம்மிடம் திட்டமிடும் பழக்கம் மிக குறைவாகவே உள்ளது.ஆனால் அசத்திய கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு வருடம், ஐந்து வருடம் இன்னும் பல வருடங்கள் என்று பல காரியங்களை  திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

ஆனால் நம்மால் ஒரு மாத வீட்டு செலவையே திட்டமிட்டு செயல்படுத்தத் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் செலவாகும் மளிகை கணக்கு, மருந்து, மாத்திரை செலவுகள், இன்னும் பிற செலவுகளை நோட்டு போட்டு எழுதி வருபவர்கள் நம் சமுதாயத்தில் குறைவே. எழுதி வைத்து யாரிடம் காட்டப்போகிறோம், பணம் வருகிறது செலவு செய்கிறோம். இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவீர்கள். காலம் ஒரே மாதிரி இருக்காது.

இன்றைய செல்வந்தன் நாளைக்கு ஏழையாகி விடுவதையும், ஏழை பணக்காரனாகி விடுவதையும் பார்த்து வருகிறோம். வல்ல அல்லாஹ் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வைப்பதில்லை. வாழ்க்கையில் சோதனைகள் மாறி மாறி வரக்கூடியது. அதனால் உங்களின் செலவுகளை சிக்கனமாக திட்டமிட்டு செலவு செய்து சேமிக்கும் பழக்கத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேமிப்பு பல வகைகளில் உங்களை கடன் வாங்காமல் கை கொடுக்கும். நமக்கு கிடைக்கும் வருமானத்தை திட்டமிட்டு செயல்படுத்த சில சட்டங்களை நமக்குள் வகுத்துக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

எனக்கு காரைக்குடி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு உண்டியல் தனித்தனியாக இருக்கும் அதில் காசு சேர்த்து வருவார்கள். சேமித்தால் உனக்கு தேவைப்பட்டதை வாங்கிக்கொள்ளலாம் என்பது அவர்களின் தாயாரின் அறிவுரை. மேலும் தீனிகள் (முறுக்கு, சீடை, இதுபோன்ற பொருள்கள்) வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். வெளியில் கடையில் அதிகம் வாங்கி சாப்பிடமாட்டார்கள். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த உண்டியலில் அதிகமாக பணம் சேரப்போவது கிடையாது, இருந்தாலும் அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி விடுகிறார்கள். சிறு வயது முதலே எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது மனதில் பதிந்து விடுகிறது.

நம் சமுதாய இளைஞர்களின் சேமிப்பு நிலையை மனதில் ஓட விடுங்கள். ஆளுக்கு ஒரு வண்டி. அதில் தேவையற்ற இடங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு வீணாக அலைவார்கள். சில பேர் வீட்டுக்கு கூட வேலை பார்த்து கொடுப்பது கிடையாது. தாய்மார்களே பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து வீணான வழியில் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். எந்த கேள்வியும் பிள்ளைகளை கேட்பதில்லை. அவன் வயது பிள்ளைகளிடம் பைக் இருக்கிறது. அவன் வயது பிள்ளைகளிடம் செல்போன் இருக்கிறது. என்று மிக அத்தியாவசியம்போல் மிக வருந்தி கையில் பணம் இல்லாவிட்டாலும் அவனின் தாயோ, சகோதரிகளோ நகைகளை வங்கியில் அடகு வைத்து அவனுக்கு பைக், செல்போன் போன்ற பொருட்களை வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டில் தந்தை அல்லது அண்ணன் வெளிநாட்டில் சம்பாரிப்பார்கள். பணம் எவ்வளவு சிரமத்துடன் வீட்டுக்கு வந்து சேர்கிறது என்ற எந்த கவலையும் இல்லாமல் பிள்ளைகள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு தாய்மார்கள் எந்தவித குடும்ப கஷ்டங்களையும் தெரியப்படுத்துவதில்லை, உணர வைப்பதுமில்லை.

மாதச் சம்பளக்காரர்களாக இருந்தாலும், மாதா மாதம் வெளிநாட்டில் உள்ள கணவர், தந்தை, அண்ணன் இப்படி வீட்டுக்கு பொறுப்பாளியாக இருந்து யார் பணம் அனுப்பினாலும் தங்களுக்கு கையில் பணம் கிடைத்தவுடன் தாங்கள் செய்யவேண்டிய முதல் காரியம் (சில சகோதர, சகோதரிகள் பணம் கையில் கிடைத்தவுடன் நகை கடைக்கும் இன்னும் ஆடம்பர பொருள்கள் வாங்கவும் சென்று விடுவதாக கேள்விப்பட்டேன்) இப்படி ஆடம்பரங்களில் மூழ்கி விடாமல் பட்ஜெட் போடத் துவங்குங்கள். எப்படி பட்ஜெட் போடுவது உதாரணத்திற்கு  வருகிற மார்ச் மாதத்திற்கு என்னென்ன செலவுகள் உள்ளது என்பதை குறிப்பெடுங்கள்.

தங்கள் குடும்பத்தின் மளிகை செலவு, அரிசி, தண்ணீர் பில், கரண்ட பில், டெலிபோன் இணையதள பில், வீட்டு வரி, டாக்டர் செலவுகள், பிள்ளைகள் ஸ்கூல் பீஸ், எதிர்பாராத செலவுகள், சேமிப்பிற்கு ஒரு தொகை, கடன் எதுவும் இருந்தால் அதற்கும் ஒரு தொகை என்று குறிப்பெடுத்து விட்டு (மார்ச் மாதத்திற்கு என்ன செலவுகள் வரும் என்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது) பணத்தை சில்லரையாக மாற்றி (காசாக இல்லை - சில்லரை பணமாக) தனித் தனி கவரில் பணத்தை போட்டு மளிகை செலவுக்கு, கடனுக்கு, கரண்ட் பில்லுக்கு, டெலிபோன் பில்லுக்கு, டாக்டர் செலவுக்கு, தினச்செலவுக்கு, சேமிப்பிற்கு என்று கவரின் மேல் தனித் தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். செலவுகளையும் நோட்டில் எழுதி வாருங்கள். (எந்த பொருட்கள் எந்த தேதியில் வாங்கினீர்கள் எத்தனை நாட்கள் பயன்பட்டிருக்கிறது என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்) எந்த செலவுக்கு என்று பணத்தை தனியாக பிரித்து வைத்து இருக்கிறீர்களோ அதன்படிதான் செலவு செய்யவேண்டும்.

சேமிப்பிற்காக உள்ள பணத்தை பேங்கில் போட்டு வாருங்கள். பேங்கில் பணம் போடும்பொழுதும், எடுக்கும் பொழுதும் தங்கள் கணக்கு புக்கில் வரவு வைத்திருக்கிறார்களா? என்று கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த திட்டத்தை அலட்சியம், சோம்பல் இல்லாமல் செயல்படுத்தி வாருங்கள். இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் அனைவரிடமும் மனக்கட்டுப்பாடும் இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற பொருள்களை வாங்கி சேர்த்து விடாதீர்கள்.

தற்சமயம் நான் கேள்விட்டது நம் ஊரில் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்களாம். மார்க்கம் காட்டித்தராத பால்குட விழா, பிறந்த நாள் விழா, பெண்கள் வயதுக்கு வந்தவிழா, காதணிவிழா, சுன்னத் விழா, இன்னும் என்னென்ன விழாக்கள் இருக்கிறதோ இவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இந்த விழாக்களுக்கு செல்வதற்காக நாகரீக பெண்கள் (நம் சமுதாயத்து பெண்கள்)பியூட்டி பார்லர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அங்கு சென்று முக அழகு படுத்திக்கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆக இதனால் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த விழாக்கள் அனைத்தும் நம்மை கடனாளியாக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று முகத்தில் எதை எதையோ பூசி முக அழகு ஏற்படுவதற்கு பதிலாக அலர்ஜி ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பும், பண பாதுகாப்பும் ஏற்படும். பெண்களுக்கு நாம்தாம் அழகு என்ற தற்பெருமையும் விலகும். (பெண்கள் அழகே படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. கணவர் ஊரில் இருக்கும்பொழுது அலங்காரமாக இருப்பதில் தவறில்லை.  கணவர் வெளிநாடுகளில் இருக்கும்பொழுது அதிகபட்ச அலங்காரங்களை தவிர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்).

தாய்மார்கள்: தந்தை, அண்ணன்  வெளிநாடுகளில் படும் சிரமங்களை அடிக்கடி பிள்ளைகளிடம் கூறி, சிக்கனமாக வீண் விரயம் செய்யாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே மனதில் பதிய வைத்து கல்வியின் அவசியத்தையும் உணர்த்தி விட வேண்டும்.

வளைகுடா சகோதரர்களும் தங்களுக்கு சம்பளம் கையில் கிடைத்தவுடன், தாங்களும் இதுபோல் ஊருக்கு அனுப்புவது, இங்குள்ள செலவுகள், கடன், சேமிப்பு என்று தனித் தனி கவர்களில் பணத்தை பிரித்து வைத்து செலவு பண்ணி பாருங்கள். தங்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். சோதனை முயற்சியாக செய்து பார்த்து விட்டு பிறகு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறிப்பு : கடன் தொடர் 11ல் சில கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளித்த : சபீர், தாஜுதீன், யாசிர் சகோதரர்களுக்கு பரிசாக அர்ரஹீக் அல்மக்தூம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.

கடன் வாங்கலாம் வாங்க 12                                     கடன் வாங்கலாம் வாங்க 14

                                                    கடன் வாங்கலாம் வாங்க முகப்பு

இனி என்ன செய்யப் போகிறாய்? 19

அதிரைநிருபர் | February 26, 2011 | , ,

என் அருமை சகோதரர்களே!. நம் இணையத்தில், முஸ்லிம்களின் நமக்கு நாமே எதிரி திட்டம் (தமிழக தேர்தல்களும் கழகங்களும், ஜமாத்களும் ஓர் பார்வை) என்ற தலைப்பிலும், இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள் (முஸ்லிம்களுக்கு எத்தனை இடம்) என்ற இரு கட்டுரைகள், தமிழக முஸ்லிம் சகோதரர்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அறிவீர்கள். இந்த கட்டுரைகள் 25 க்கும் மேற்பட்ட நம் சகோதர இணையதளங்களில் வெளிவந்தும், சுமார் 8 க்கும் மேற்பட்ட குழுமங்களில் (Group) இது பதியப்பட்டு சகோதரர்களால் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலானவர்களுக்கு மின் அஞ்சல்கள் மூலமும் இச்செய்தி அனுப்பப்பட்டும் வருகின்றது. ஏன், எனக்கே இது மின்னஞ்சலில் வந்தது!. அல்ஹம்து லில்லாஹ்!. 

இதன் மூலம் நான் பெற்ற செய்தி, நீ எழுது, மற்றதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம், என்று என் சகோதரர்கள் உற்சாகம் தரும் அதேவேளை, நான் அறிந்த மற்றொரு செய்தி, இந்த சமுதாய இயக்கங்கள் இன்னும் நம்மை கூறுபோட முயலுவதால், விரக்தியின் விழிம்பில் நம் சமுதாயம் இருப்பதையும் எண்ணி வேதனைதான் மிஞ்சியது. ஏனெனில் பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!.



தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பங்கீடுகள் நடந்தேறி வருகின்றது. அதில் முதற்கட்டமாக வீரியமிக்க(!) ம.ம.க விற்கு அ.தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகள் (அடேங்கப்பா! எம்மாம் பெரிய மனசு ஜெயலலிதாவிற்கு!.) வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மூன்று தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விட்டு, இனி என் இஸ்லாமிய சகோதரர்கள், மீதமுள்ள 231 தொகுதியில் உள்ள மற்ற முஸ்லிம்களின் ஓட்டைபெற்று, இந்த கூட்டணிக்கு தாரைவார்த்து கொடுக்கவேண்டும்!. மற்றவர்களுக்காக நாயாய், பேயாய் இரவு பகல் பாராமல் அலைய வேண்டும்!. பிரச்சாரத்தின் போது அடி உதைகள் வாங்கவேண்டும். வழக்குகளை சந்திக்க வேண்டும். ஏன் சில சமயங்களில் தங்களின் இன்னுயிரையே மாய்க்கவேண்டும்!. இவைகள் அத்தனையும் எதற்கு தெரியுமா?. மூன்றே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் எப்படிபட்டாவது அதிகரிக்க வேண்டி!.

ஆனால் அதையும் கூட, தனது பார்ப்பன புத்தியின் வெளிப்பாடாக, பி.ஜே.பி யை இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி அவர்களுக்கு மறைமுக ஆதரவை அதிமுக தெரிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!. (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா...!) ஏனெனில் ஜெயலலிதாவின் பார்ப்பன புத்தி அப்படித்தான் செயல்படும். அதைவிட மிக கொடுமை ம.ம.க.வை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் பலனை கிடைக்கவிடாமல் செய்ய நினைப்பது, த.த.ஜ தமிழக முஸ்லிம்களுக்கு செய்யும் பெரிய துரோக முடிவாகும். ம.ம.க வை எதிர்த்து இவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல!. இதை இவர்கள் உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும். 

ம.ம.க மட்டுமல்ல, இவர்கள் எந்த அரசியல் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுக்கின்றார்களோ, அக்கூட்டணிக்கு எதிர்தரப்பில் நிறுத்தப்படும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது!. இவர்களுக்குப்பின் ஒரு கூட்டம் இருப்பது உண்மை என்றாலும், இவர்கள் எடுத்த இந்த தவறான முடிவை இம்மக்கள் நிராகரிக்கவேண்டும். வேறு முடிவுகளை நீங்கள் ஆதரித்தாலும் இதுபோன்ற தவறான முடிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதே நலம்.

மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப்பாட்டு கோட்பாட்டின் தாரகமந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம். 

இதில் ஜெயித்து வருவது எத்தனைபேர்?. இதில் 50% வெற்றி வாய்ப்பென்றால், முஸ்லிம் இயக்கங்களின் சார்பில், இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் என்ற அவல நிலை ஏற்படும்!. இது இந்த சமுதாயத்திற்கு போதுமா? என்பதே தற்போதைய கேள்வி?

அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் தற்போது அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எனவே இவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்த தலா பத்து முஸ்லிம்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ப.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா ஐந்து தொகுதிகளை அவர்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளை அவர்களின் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
 

ஏனெனில் இந்த கட்சிகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த விதமான அதிகாரமிக்க பதவிகளை பெறுவதே கிடையாது!. குறிப்பாக ப.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் சார்பில் இதுவரை ஓரு முஸ்லிம்கூட சட்டமன்ற உறுப்பினரானது கிடையாது!. ஆனால் நம் ஓட்டுக்கள் மட்டும்தான் தேவை!.

திமுக 10
அதிமுக 10
காங்கிரஸ் 7
ப.ம.க 5
தே.மு.தி.க 5
ம.தி.மு.க 2
இரு கம்யூனிஸ்ட்கள் 4
விடுதலை சிறுத்தைகள் 2

இவ்வாறு இவர்கள் ஒதுக்கீடு செய்தால், ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் சார்பில் 45 முஸ்லிம் வேட்பாளர்களும், இஸ்லாமிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் 6 வேட்பாளர்களையும் சேர்த்து, இத்தேர்தலில் 51 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இறக்கப்பட்ட வேண்டும்!. இந்த 51 வேட்பாளர்களில் மிகவும் கீழ்த்தரமாக வெறும் 50 % முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்களே யானால் வரும் சட்டமன்றத்தில் நீங்கள் 25 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை காணமுடியும். 

அதாவது இது நியாயமான மற்றும் அடிமட்ட கோரிக்கையின் கணக்கீடேயாகும். இதை தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை சட்டமன்றத்தில் நாம் அதிகரிக்கச் செய்யவே முடியாது. ஊராட்சி, பஞ்சாயத்து போர்டு, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய அத்தனை தேர்தலிலும் இதே போன்று கிடைக்க செய்யவேண்டும்.

இந்த சமுதாயத்திற்கு இதுபோன்ற இடங்களில் சீட் கிடைக்கின்றதோ இல்லையோ!, தவறாமல் கடவுசீட்டை (பாஸ்போர்ட்) மட்டும் எளிமையாக கிடைக்க வழிவகை செய்து வைத்து விடுகின்றார்கள். ஏனெனில் இதை உங்களுக்கு எளிமை படுத்தி வைத்ததற்கு காரணமே, இதை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்பதற்காகவே!. நீங்கள் இதுபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு இந்த அரசியல் கட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காவே!. அட சனியன் பிடித்த அயோக்கியர்களே!. முதலில் கடவுச்சீட்டை எங்களுக்கு கிடைப்பதை கஷ்டமாக்குங்கள்!. அப்போதுதான் என் சமுதாயம் ஊரிலே இருந்து, இது போன்று தேர்தலை சந்திக்க சிந்திக்கும். ஆட்சி அதிகாரத்தினை அடைய முற்படும்!. அதிகார படிப்பினை படிக்கும்!.

எனவே இனி நாம் என்ன செய்யவேண்டும்?.

அரசியல் கட்சிகளின் சார்பில் அவர்கள் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக்கப்பட வேண்டும்!. இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் உள்ள ஜமாத்திலும், தேர்தலில் ஆதரவு என்ற நிலைபாட்டை மட்டுமே எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை கோரிக்கையாக, இந்த செவிட்டு அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புரியும் வண்ணம் போஸ்டர்களாகவும், நோட்டீசாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நம் கோரிக்கையை பிரபலப்படுத்தி வலுசேர்க்க வேண்டும். இந்த தேர்தலிலேயே கிடைக்க பெரும்முயற்சி செய்யவேண்டும். 

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் ஊரில் உள்ளவர்கள் மூலம் போஸ்டர்கள் அடித்து ஓட்ட ஆவன செய்யுங்கள். இந்த தேர்தலில்  அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்ற நீங்களும் காரணமாக இருங்கள். இது தொடக்கமாக இருக்கட்டும்!. அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்!. தந்தே தீருவார்கள்!. “இத்தனை முஸ்லிம்களை நிறுத்தினால் மட்டுமே ஓட்டு” என்ற கோரிக்கையை, இக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை பரிசீலிக்கும் முன்பே, வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதையும் நினைவில் வையுங்கள்.

எப்படி என் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் மக்கள் மத்தியில் நீங்கள் எடுத்து செண்றீர்களோ, அதை விட பல மடங்கு இதை மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்பட வேண்டும். இந்த கட்டுரையில் உங்களின் பெயர்களையோ அல்லது உங்களின் இணைய தளங்களின் முகவரியையோ போட்டுக்கொள்ளுங்கள். நன்றி என்று என் பெயரையோ அல்லது என் இனையத்தின் பெயரையோ போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது என் கோரிக்கை அல்ல!. இந்த சமுதாயத்தின் கோரிக்கை!!.
 
-- அதிரை முஜீப்
 

இவர்களும் அதிரை நிருபர்களே 110

அதிரைநிருபர் | February 23, 2011 | , ,

அதிரை அஹ்மது காக்கா:
தமிழுக்கு தாதா...
இங்கிலீஸுக்கு துரை!
தமிழில்...
தன்னிகரற்ற
தனிக்காட்டு ராஜா!
இலக்கணம் உடுத்திய
இதயத்தில் இளைஞர்!
மரபுடைத்தோ
மரபை உடைத்தோ
இவர்கள்மேல் என்றும்
எமக்குப் பிரியம்!

ஆசான் ஜமீல் காக்கா:
புதையல் தேடி
ஜமீனைத் தோண்டு - அறிவு
பொக்கிஷம் வேண்டி
ஜமீல் காக்காவைத் தூண்டு!
கற்பித்தலும் கற்றலும்
காக்காவின் கண்கள்!
தமிழ்...
தன்னை
அலங்கரித்துக் கொள்கிறது-
அதி-அழகு ஆசானின்
ஆணைக்குட்படும்போதெல்லாம்!

சகோ. ஷாஃபி:
வலைப்பூவின்
தலைப்புக்கு
முழக்கம் தந்தவர்.
தர்க்கங்களின்போது
தகிக்கும் தமிழ்...
வாழ்வியல் வசனங்களில்
வருடும்...
இவர்கள்
வார்த்தெடுக்கும் மொழி!

என் ஜாகிர்:
இவன்
படைப்பை
படிக்கையில்
புகைப்பட வாயிலும்
புன்னகை பூக்கும்...
கசப்போ கரிப்போ
இவன்
கையெழுத்தில் இனிக்கும்!
தீய சக்திகள்
தீண்டாமல் வாழ
இவன் சிந்தனயை
தினமும்
மூன்று வேளை
உணவுக்குப் பின்
உட்கொள்ளவும்!

சகோ. ஹாலித்:
பதிவர்களை
முன்னேற்றப் பாதையில்
உந்தும் சக்தியில்
என்னைப்போல் ஒருவரான
இவரைப்போல் ஒருவராக
எல்லோரும் மாறனும்!
கச்சித மொழியாடலின்
குத்தகைக்காரர்!

அலாவுதீன்:
அல்லாஹ்வின் மார்க்கத்தை
அழகாய் எத்தி வைப்பான்,
கடனின்றி வாழ
கச்சித புத்தி சொல்வான்!
நல்லொழுக்க வாழ்க்கையை
தமக்குள் சாதித்து
தரனிக்கும் போதிப்பவன்!

ஹமீது!
வழக்கு மொழிமூலம் அதிக
வாக்குகள் பெற்றவர்,
விஞ்ஞான கட்டுரைகூட
விளையாட்டாய் விளக்குவார்!
நாக்கிலே நக்கல் - நல்
வாக்கிலே நையாண்டி
குட்டிப் பின்னூட்டங்களில்
சுட்டி வள்ளுவன்!

அபு இபுறாஹீம்:
கணினிக் காட்டுக்குள்
கம்பீர சிங்கம் நீர்...
கூட்டுக் குழுமத்தின்
கொத்தான ஆணி வேர்...
வலைப்பூ உலகத்தில்
வனப்பான பூங்கா நீர்!
சொல்லாடல் சாம்ராஜ்யத்தின்
சக்கரவர்த்தி!

கிரவுன் தஸ்தகீர்:
தமிழொரு மொழியெனில்
தாமதில் எழில்!
சொல் விளையாட்டில்
சங்ககாலச் சித்தர்!
கவிதைப் பிரியர் - உமை
கவி யாரும் பிரியார்!
இவர்
அழைத்தால் மட்டும்
கைகட்டி வாய் பொத்தி
எப்படி...
வரிசையில் நிற்கின்றன
வார்த்தைகள்?!

எம் எஸ் எம் நெய்னா முஹம்மது:
மழை பெய்தால்
மண்மணக்கும்...
இவர்
எழுத்திலெல்லாம்
மனம் மயங்கும்!
நாம்
அறிந்த அதிரையைவிட
இவர்
அறிவித்த அதிரையே...
அழகோ அழகு!

சகோதரி அன்புடன் மலிக்கா:
தமிழ் மொழி தறித்து
தமிழ்நாட்டில் போரிட்டு
யுனிகோட் வள்ளல்
உமர்தம்பி காக்காவுக்கு
அங்கீகாரம் வென்றெடுத்த
எங்கூரு வேங்கை!
கவிதையை சுவாசித்து
கவிதையை உண்டு
கவிதையாய் வாழ்பவர்!

யாசிர்:
யாசிரின் பின்னூட்டம்
யாசிக்கவும் தயார்!
ஆக்கத்தைக் குறைத்து
ஊக்கத்தை பதிபவர்!
இவரின்
பின்னூட்டங்கள் தொகு...
பி ஹெச் டி பெறு!

அப்துர்ரஹ்மான்
கற்பனை செய்வதில்
விற்பன்னர் இவர்!
பூவோ பொண்ணோ
நதியோ நாற்றோ
இவர் கவிதைக்கு
உட்பட்டால்...
காலமெல்லாம் செழிப்பே!

ஹிதாயத்துல்லாஹ்:
உயிரூட்டப்பெற்ற
அறிவுக்களஞ்சியம் - இவர்
உரமேற்றப்பெற்ற
குறிஞ்சி பூதம்!
இவருக்கு
சின்ன கிரீடம் ஒன்று
செய்தணிவித்து...
குட்டி கிரவுன்
என்றே
கூப்பிட ஆசை!

அதிரை முஜீப்:
இவர் ஒரு டாட் காம்
ஆனால் நாட் காம் (calm)
குறை சொல்லமுடியாத
கோபத்தில் கோமான்!
சமூக அக்கறையில்
சுயநலமற்ற சீமான்!

ஷரபுதீன் நூஹு:
படித்த சமுதாயம்
இவருக்குப்
பிடித்த கனவாகும்...
கல்வி விழிப்புணர்வு
இவர்
வகுத்த வழியாகும்!

அதிரை மீரா:
மீரா வுக்கொரு
தீராக் கனவு
யாரா வது ஒரு
பேரா வது
ஊரா ளும்படி பயிலவேண்டும் என!
படித்தது பொறியியல்
படிப்பு மட்டுமே தம் பொறியில்!

அப்துல் மாலிக்:
சமூக
அக்கறைத் தூரிகையால்
அழகு தமிழ் தொட்டு
இவர்
தீட்டியதெல்லாம்
சீர்திருத்த சிந்தனைகள்!

அபு ஆதில்:
இவர்
ஆக்கமெல்லாம் நல்
நோக்கம் நிரம்பிய நீர்
தேக்கம்போல!

சின்னக் காக்கா:
சின்னக் காக்கா
ஒரு
பெரிய தம்பி,
பருவத்தில் தம்பி...
சமூக
பார்வையில் காக்கா!

மீராஷாஹ் (எம் எஸ் எம்):
ஏறத்தாழ எமக்கு
செல்லப்பிள்ளை எனினும்
எடுத்துரைக்கும் திறமையிலே
யாருக்கும்
சலைக்காப் பிள்ளை!

அபு ஈஸா:
திட்டமிடும் நேர்த்தியை
இவரிடம்
பிச்சையாய்க் கேட்கலாம்!

அதிரை ஷஃபாத்:
செக்கடிக் குளமும்
செல்ல அலைகளும்
முக்குளித் தாராவும்
முல்லை மலரும்
என
மயக்கியவர்
தொடர
தற்போது தயக்கம் ஏனோ?

தாஜுதீன்:
யுத்த முடிவில்
பூத்த
புத்தம்புது பூ இவர்!
பதிவர் மனம் திரட்டி
அதிரைமணம் கண்டவர்!
இவர்
நாடுவது நலம்...
எனவே
இவரோடு
கூடுவரும் நலமே!

அப்புறம்...நான்:
கனவை விதைத்தேன்
கவிதை என்றனர்...
புத்திமதி சொன்னேன்
கவிக்காக்கா என்றனர்...
ஊர் நினைவில் உழன்றேன்
அதிரைக் கவி என்றனர்...
தற்போது...
அஞ்சலில் சேர்க்க மறந்த
என்
அத்தனைக் கடிதங்களுக்கும்
முகவரி தந்து
முத்திரை யிட்டனர்...
அதிரை நிருபரின்
ஆஸ்தான கவி என்று!

ஊக்கத்தை
ஊட்டி வளர்ப்பதில்
போட்டியின்றி வென்ற
ராஃபியா காக்கா (எம் எஸ் எம்):
ஜஹபர் சாதிக்
அபு இஸ்மாயில்
அஹமது மன்சூர்
அப்துல் ரஷீத் ரஹ்மானி
அதிரை அபூ
சகோதரிகள்
ஃபாத்திமா ஜொஹரா
கதீஜா

இன்னும்...
இர்ஷாத் எனும்
இளங்காற்றும்...
கடைசியில் வந்தாலும்
கலக்கும் ரியாஸ்...
அதிரை ஆலிம் எனும்
அறுமைத் தோழர்...
தற்போது
ஜகா வாங்கி நிற்கும்
ஜலீல் மற்றும் ஜலால்

வலைப்பூ வந்து
வாசித்து
கருத்தைக் கருவேற்ற
வாசக வட்டமும்
அதை
பின்னூட்டமெனெ
பின்னியெடுத்த பங்களிப்பாளர்களும்
இழு என இழுத்த
இழுப்புக்கெல்லாம்
அழுதுவடியாமல்
எழுந்து நிற்கும்
அதிரை நிருபர் குழுவும்
என-
அத்தனை பேரும்
அதிரை நிருபரே!


-- சபீர்
Sabeer.abuShahruk

குறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி 13

அதிரைநிருபர் | February 23, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

அன்பான அதிரைநிருபர் வாசகர்களே…

வாழ்க்கையில் முயற்சி, நம்பிக்கை, குறிக்கோள் இந்த மூன்று வார்த்தைகளில் உள்ள முக்கியத்துவத்தை பற்றி கொஞ்சம் அலசிப்பார்போம். நாம் சிறு வயதில் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே இந்த வார்த்தைகளை நம் வாத்தியார் / பெற்றோர் / உற்றார் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் எத்தனை பேர் கடைபிடித்தோம்? எத்தனை பேர் இவர்களுக்கு வேற எந்த வேலையும் கிடையாது என்று ஏளனம் பேசியிருப்போம் என்று நம் மனசாட்சியை கேட்டால் புரியும். ஆனாலும் வாழ்வில் ஏதாவது ஒரு தருணத்தில் இதை நிச்சயம் உணர்ந்து இருப்போம்.

குறிக்கோள்

இது ரொம்ப கஷ்டம், ஆனால் முதல் தடைவை மட்டும்தான். கூகிள் குதிரையில் ஒரு வார்த்தையை தட்டிவிட்டால் அது வேறு எதையும் தேடாது அந்த வார்த்தைகள் உள்ள இடங்களை மட்டும் அள்ளி கொண்டு வந்து தரும் அதுதான் கூகிளின் வெற்றி. அது மாதிரிதான் நம் குறிக்கோளும் இருக்க வேண்டும். நம் அடைய முடிய குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு (புர்ஜ் கலிஃபாவில் ஃபளாட் வாங்குவது என்பது நல்ல குறிகோள்தான். ஆனால் நிறைவேற்றுவது சிரமம்) அதை நோக்கி பயணிப்பது. வெற்றி என்ற பறவைக்கு வலை விரித்து விட்டோம் என்றுதான் பொருள்.

நம்மவர்கள் சில பேர் குறிக்கோள் இல்லாமல் மெயின் ரோட்டில் போய் சாமான் வாங்கலாம் என்று கிளம்பி, கடைத்தெருவுக்கு சென்று பின்னர் பட்டுக்கோட்டைக்கே சென்று பஸ் செலவை தெண்டத்துக்கு செலவு செய்துவிட்டு வருவார்கள் + போனஸாக உடம்பு வலியையும் அலைச்சலையும் சேர்த்து வாங்கி வருவார்கள். அந்த சாமான் நம்மூரில் கிடைக்கும் அதே விலைக்கு என்பது வேறு விசயம், இவர்கள் முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் குறிக்கோள் இல்லா முயற்சி.

நம்பிக்கை

நம்பிக்கை என்பது தும்பிக்கை போல் வலுவாக இருக்க வேண்டும். நான் யாருக்கும் சளைத்தவனல்ல, அடுத்தவர் செய்யக்கூடியதை உருவாக்க கூடியதை நாமும் செய்ய முடியும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை என்றவுடன் எதோ குருட்டுதனமாக வைப்பது அல்ல. நம்மூரில் ”பூனை நபுசு” என்பார்கள் அந்த மாதிரி எண்ணங்களெல்லாம் வெற்றிக்கு உதவாது, அது வாழ்வை வெறுமையாக்கி விடும். சில பேர் கழிவறைக்கு போய்விட்டு வந்து அந்த கையை விரல் ரேகைகலெல்லாம் போகும் அளவிற்கு தேய்த்து தேய்த்து கழுவி கடைசிலேயும் அது இன்னு சுத்தமாகல என்ற அவ நம்பிக்கையுடன் போய்விடுவார்கள். இவர்களை “ஒசுவாசு” என்றும் அழைப்பதுண்டு, இந்த மாதிரி நம்பிகையற்ற ஆள்கள் ஜொலித்தாக எந்த நாட்டுல உள்ள டேட்டா பேஸ்லையும் இல்லை, கூகில் தேடலில் பார்த்தாலும் கிடைப்பது இல்லை.

வீட்டை பூட்டிவிட்டு “பூட்டிடுச்சா பூட்டிடுச்சா “ என்று தன்மேல் இல்லாவிட்டாலும் பூட்டு மேலயாவது நம்பிக்கை வைக்காமல் போன எத்தனையோ பூட்டான்களை (அதாங்க பூட்டை இழுத்து இழுத்து உடைத்த ஆட்கள்) நாம் பார்த்திருக்கிறோம்.

நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கை வைக்க வேண்டும். வாழ்க்கையை நம்பிக்கை என்ற இயக்கியை (processor) கொண்டே ஒடிகொண்டு இருக்கிறது. ஒவ்வொரு செயலையும் செய்யும் போது தூய எண்ணத்துடன், முடிந்த அளவு நேர்த்தியாக செய்து விட்டு “ நம்பிக்கையுடன் அமருங்கள் வெற்றி உங்களை எட்டி பார்க்கும். நமது மார்க்கமே நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததுதான்.

முயற்சி

ஒரு முயற்சி செய்து அதன் மேல் நம்பிக்கை வைத்து (இறை நம்பிக்கையுடன் தான், அவனின்றி அணுவும் அசையாது), அடையக்கூடிய குறிக்கோளுடன் (அனில் அம்பானி போல வர வேண்டும் என்பது டூ மச் ) உழைத்தால் “வெற்றி” படுக்கை விரித்து போட்டு நாம் பக்கத்திலேயே படுத்துக்கொள்ளும்.

ஒரு மார்க்க சிறப்பு மிக்க ஊரில் ஒரு நல்ல முஸ்லிம் இருந்தார். அவர் எப்பொழுதும் இறைவன் தருவான்.. இறைவன் தருவான்… என்று சொல்லி கொண்டே இருப்பார். அவரிடம் சிலர் வந்து முயற்சி செய்யாமல் இப்படியே சொல்லிக்கொண்டு இருக்கீங்களே… இதை நிரூபித்துக் காட்டுங்கள் என்று கேட்டுக் கொண்டனர், ஒத்துக்கொண்ட அவரும் “நாளை நமதூர் பள்ளியில் ஒரு விசேசத்திற்காக சோறு ஆக்கி அனைவருக்கும் குடுப்பாங்க, நான் பள்ளிக்கு எதிரில் சும்மா உட்கார்ந்து இருப்பேன், அவர்கள் என் அருகில் வந்து உணவை தருவார்கள்“ என்றார். அந்த சிலரும் அதை ஏற்றுக்கொண்டு இடத்தை விட்டு அகன்றார்கள்…

மறுநாள் உணவு சமைக்கப்பட்டு அங்கு குவிந்த அனைவருக்கும் பரிமாறப்பட்டது. அனைவரும் வந்து வாங்கி சென்றனர். இவரை கவனித்தார்கள் ஆனால் கொடுக்கவில்லை, உணவெல்லாம் முடிந்து விட்டது.

அப்போது அந்த நல்ல முஸ்லீம், அருகில் சென்ற உணவு பரிமாறிய ஒருவரிடம் கேட்டார். “நான் பள்ளிக்கு எதிரில்தானே அமர்ந்து இருந்தேன் ஏன் எனக்கு உணவு தரவில்லை “ என்று

அதற்கு உணவு பரிமாரியவர் “ஓ !!! அப்படியா நீங்க மற்றவர்கள் போல வந்து உணவை வாங்கவில்லையே, நீங்க நோன்பு வச்சிருக்கீங்கலோ என்று எண்ணி எதுக்கு இந்த உணவை கொடுத்து பாவத்தை விலைக்கு வாங்கணும் என்று இருந்தோம்“ என்று பதில் அளித்தார்.

நம்பிக்கை வைத்திருந்த அந்த மனுசன் முயற்சி செய்யவில்லை. முயற்சி செய்வதற்கு முயலாவிட்டால் என்றும் எதுவும் கிடைக்காது, இறைவனும் உதவ மாட்டான். நமக்கு உறுப்புக்களை இறைவன் கொடுத்ததே முயற்சி எடுத்து முன்னேறத்தானே.

கண்டுப்பிடிப்பாளர்கள் முயற்சி செய்திருக்காவிட்டால் இன்று நாம் பயன்படுத்தும் எந்த பொருளும் நம்மிடம் வந்து இருக்காது. நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த ஒரு முயற்சியிலேயும் நாம் வெற்றி பெற்று இருக்க முடியாது. குறிக்கோளுடன் நம்பிக்கைவைத்து, முயற்சி செய்யாமல் இருந்திருந்தால் அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்தேறி இருக்காது.

ஏன் நம் தாய்மொழி தமிழை எளிதில் தட்டச்சு செய்வதற்கும், இணையத்தில் தமிழ் வெகுவாக வளர்வதற்கும், நம்மைப் போன்றவர்களுக்கு இலவசமாக அறிமுகப்படுத்தி பேருதவி செய்ததில் முதன்மையானவர்களாக இருந்தவர்களில் ஒருவர்தான் நம்மூரில் பிறந்தவர், தேனீ ஒருங்குறி எழுத்துரு தந்தவர் மர்ஹூம் உமர்தம்பி அவர்கள். அவர்களிடம் குறிக்கோள், நம்பிக்கை, முயற்சி இருந்ததால், அன்று தேனீ, வைகை என்ற தானியங்கி எழுத்துருக்களை (dynamic fonts) உருவாக்கி தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் புரட்சி செய்ததால்தான், அன்று அவர்கள் போட்ட விதையால் கடந்த 10 வருடத்திற்கும் மேலாக தாய்மொழி தமிழ் இணையத்தில் அளவிட முடியாத வளர்ச்சியடைந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழை இணையத்தில் பார்த்து, படித்து, ரசித்து, நல்லவற்றின் மூலம் பயனடைந்து வருகிறோம். மர்ஹூம் உமர்தம்பி அவர்கள் மற்ற தமிழார்வளர்களுடன் சேர்ந்து முதன் முதலில் உருவாக்கிய தமிழா ஏகலப்பை (Ekalappai) மென்பொருள்கள் (software) மூலம் இன்று நாம் தாய்மொழி தமிழை தட்டச்சில் தட்டித் தட்டி இணையத்தில் உலகெங்கும் பரவசெய்துக் கொண்டிருக்கிறோம்.

கூகில் தேடலில் “உமர்தம்பி” என்று தமிழில் தேடிப்பாருங்கள் அவர் குறிக்கோள்யுள்ளவர் + நம்பிக்கையுள்ளவர் + கடின முயற்சி செய்தவர் = வெற்றிப்பெற்றவர் என்று எல்லோருக்கும் புரியும். உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் உமர்தம்பி அரங்கம் என்று ஓர் அரங்கம் அமைத்து மற்றும் "தமிழ் இணைய அறிஞர்" என்ற விருதினையும் அளித்து நம் அதிரை உமர்தம்பி அவர்களின் வெற்றிக்கு அங்கீகாரம் தந்தார்கள் இணையத்தமிழ் ஆர்வலர்கள் என்பது உலகறிந்ததே.

ஆகையால் வாழ்க்கையில் முடிந்தவரை குறிக்கோள்,முயற்சி, நம்பிக்கை இந்த மூன்றையும் பேணுவோம். வெற்றிபெருவோம் நம் குழந்தைகளுக்கும் புகட்டுவோம். இன்ஷா அல்லாஹ்.

இக்கட்டுரையில் இன்னும் நிறைய எழுதலாம் நேரம் இல்லாததால் புள்ளி வைத்து நகர்கிறேன். யாரவது கண்டினிவ் பண்ணுங்களேன்… தொடரட்டும்…

-- முகமது யாசிர்

சகோதரர் யாசிர் எழுதிய மற்றுமொரு கட்டுரை நம் அதிரைநிருரில் ஏற்கனவே June 22, 2010 பதிவாகியுள்ளது, சென்றுப்பாருங்கள் "வாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்".

தமிழ் வழக்கில் உள்ள அரபி சொற்கள் 40

அதிரைநிருபர் | February 21, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அழைக்கும்

நாம் அன்றாடம் பயன் படுத்தக்கூடிய தமிழ் சொற்களில் உள்ள அரபி மொழி வார்த்தைகள். இதில் ஒரு சில சொற்கள் தமிழ் சொல்லாகவும் அல்லது வேறு மொழி சொல்லாகவும் இருக்கலாம். பின்னுட்டம் இடும் சகோதரர்கள் மேலும் விபரம் தந்து தாங்கள் அறிந்த சொற்களை அறியத்தந்து கட்டுரையை செம்மை படுத்துங்களேன்.


அரபி சொற்கள்  -  தமிழ் உதாரணங்கள்

சாமான் - அதாங்க நாம ஊருக்கு போகும் போது வாங்கி செல்வது

வக்காலத்து - நீ என்னடா அவனுக்க வக்காலத்து வாங்குறே

வக்கீல் - நம்வூர் வக்கீல் முனாப்

மகசூல் - இந்த வருடம் வயல் நல்ல விளைச்சல்

சமூசா - நோன்பு திறந்தவுடன் 4 அல்லது 5 உள்ளே தள்ளிவோமோ

பிரியாணி - நூர் லாட்ஜ் பிரியாணி

ஹல்வா - நூர் லாட்ஜ் அதுக்கும் நூர் லாட்ஜ்தாதானா?

நபர் - மர்ம நபரை போலீஸ் வலை வீசி தேடுகின்றனர்

அசல் - அசல் அக் மார்க் நெய் (ஒரிஜினல்)

நகல் - காபி (COPY) அட்டு

குத்தகை - செக்கடிகுளம் குத்தகைக்கு விடுறாங்களாம்!

குதிர் -அப்பன் குதுருக்குள்ளே இல்லை என்பது போல் உள்ளது!

சுக்கர் - சக்கரை தூக்கலா ஒரு டி போடுப்பா

பாக்கி - பாக்கிய வச்சிட்டு மறுவேலையை பார்

சவால் - நீயா நானா போட்டு பாத்துருவோமா .

ஜவாப் - நான் கேட்ட கேள்விக்கு இன்னும் ஜவாப் (பதில்வரவில்லை)

தரப்பு - இருதரப்பு பேச்சு சுமுகமகா முடிந்தது.

அமானத் - கொண்டு வந்த சாமான்களை கஸ்டம்ஸ் எடுத்துக்கொண்டான் என்று பொய் சொல்லாமல்.

அமீனா - கோர்ட்டில் இருந்து ஜப்திக்கு வருபவர்.

ரசீது - பணம் கட்டிவிட்டு மறக்காமல் வாங்க வேண்டிய ஒன்று .

கடுதாசி (கிருதாசி) - காக்கை கத்துது கடுதாசி வருமோ.

ஆஜர் - (கோர்டில்) ஒப்படைப்பது

நமுனா - இரண்டும் ஒன்றை போல் இருப்பது.

அத்தர் - அத்தர் வாசம் தூக்குதுப்பா.

சால்னா - அப்பாகடை சால்னாவை அடிச்கிட வேறுகடை கிடையாது .

தபேளா(தப்ளா) - ஜாகிர் ஹுசைன்.

சுக்கான் - கப்பல் போட் விமானம் போன்றவற்றை திருப்பக்கூடிய ஒன்று.

சர்பத் - மெயின் ரோடு MP கடை நினைவுக்கு வரும்.

ச்சாயா - கடக்க ஒரு ச்சாயா போடுப்பா.

ஜமா பந்தி - போட்டும் பட்ட சிட்ட கிடைக்கவில்லை.

சாதா - முட்டை தோசை சாதா தோசை.

காலி(ஹாலி) - ஒரு ஷஹன் சாப்பாட்டை காலி செய்துவிட்டான்.

சைத்தான் (சாத்தான்) - வழி கெடுப்பவன்.

--shameed
    dammam

கேன்சர் கேன்சர் கேன்சர் 18

அதிரைநிருபர் | February 21, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும், அன்றாடம் நாம் கண்டுவரும் மிக கொடிய நோய் கேன்சர், இது தொடர்பாக சமையல் அட்டகாசம் என்ற வலைப்பூவை நடத்தி தமிழகத்தில் உள்ள வலைப்பூ வாசகர்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ள சகோதரி ஜலீலா கமால் அவர்கள் தங்கள் வலைப்பூவில் பதிந்த இந்த பயனுல்ல கட்டுரையை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

மிக அற்புதமான இந்த விழிப்புணர்வு கட்டுரையை எழுதிய சகோதரிக்காவும் அவர்களின் குடும்பத்தில் உள்ள அனைவருக்காகவும் துஆ செய்கிறோம். சகோதரரி அவர்களிடம் அனுமதி பெற்று இந்த ஆக்கத்தை நம் அதிரைநிருபரில் பதிகிறோம்.

--அதிரைநிருபர் குழு.

-----------------------------------
கடந்த ஐந்து வருட காலமாக என் காதில் மாதம் ஒருத்தருக்காவது கேன்சர் இருக்கு என்பது காதில் விழுந்து கொண்டே இருக்கு, அதில் சில பேர் சரியான சிகிச்சை, உணவு கட்டுபாடு, தொடர்ந்து கொடுத்த மாத்திரைகளை சரியாக உட்கொண்டு வருவதால் நன்றாக தேறி இருக்கிறார்கள். ஆனால் சில பேர் ( லிவர் மற்றும் தொண்டையில் கேன்சர் வந்தவர்கள் ஏதும் செய்யமுடியாத நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளனர்.

நான் நேரில் கண்ட கேள்வி பட்ட , எனக்கு தெரிந்த கேன்சர் பற்றிய விஷியங்களை எல்லோருக்கும் தெரியபடுத்தனும் என்ற் நோக்குடன். ஏற்கனவே பிளாக்கில் 4 பதிவுகள் போட்டு வைத்து இருந்தேன் அதை யாரும் படித்த மாதிரி தெரியல,

லேடிஸ் ஸ்பெஷலுக்காக தேனக்கா பதிவு அனுப்ப சொல்லும் போது என்ன செய்வது சமையலை தவிர ஒன்றும் தெரியாதே என்று எண்ணும் போது கேன்சர் என்னும் கொடிய நோயாலா எங்க வீட்டிலேயே அவதி பட்டவர்கள் இருக்கிறார்கள், ஆகையால் அதை பற்றியே எழுதி விட்டேன்.

இன்னும் பல சொந்தஙக்ள், மற்றும் தோழமைகள் வீட்டிலும், இப்படி இந்த ஐந்து வருடத்தில் எனக்கு 25 பேருக்கு மேல் வந்துள்ளது. இன்னும் உலகத்தில் பல பேருக்கு இருக்கும் (இது பெண்களுக்கு தொண்டை, லிவர்,கர்ப்ப பை , மார்பக புற்றுநோயும்)வந்துள்ளது. (ஆண்களுக்கு குடல், பிரெயின், நாக்கு, லிவர் ,பிளட் கேன்சர் போன்றும் வந்துள்ளது.) (ஆண்களுக்கு, தொடர்ந்து சிக்ரேட் பிடிப்பதாலும், என்னோரமும் பான் பீடா போடுவதாலும், வெளிநாடுகளில் வேலை செய்யும் பேச்சுலர்களுக்கு சாப்பாடு பிரச்சனையாலும் ,சாப்பாடு ஒத்துக்காமல் வாய் புண் அல்சர் பிறகு அதே கேன்சராகவும் மாறி இருக்கு) வாய் புண் மற்றும் அல்சர் வராமல் ஓரளவுக்கு பாதுக்காக்கும் டிப்ஸை பிற்கு போடுகிறேன். .

இதற்கான உணவு முறைகள் சிலவற்றை பின்பு போடுகிறேன்.

இப்போதைக்கு லேடிஸ் ஸ்பெஷல் மாத இதழுக்கு நான் அனுப்பிய கட்டுரை சிலர் ஜூம் செய்து படிக்க முடியல என்றாதால் இங்கு அந்த மெசேஜை போட்டுள்ளேன்

லேடிஸ் ஸ்பெஷல் பிப்ரவரி மாத இதழில். 50 , 51 ஆம் பக்கம் என்படைப்பு.


இப்போது பெருகிவரும் நோயில் இப்போது சாதரண ஜுரம் தலைவலி போல் புற்று நோயும் அதிகரித்து கொண்டே இருக்கு முன்பு இதற்கு மருந்தில்லை என்ற காலம் போய் இப்போது அதை கை தேர்ந்த டாக்டர்கள் குணபடுத்தவும் செய்கிறார்கள்.

பெண்கள் இருக்கிற அவசர உலகில் வேலை வேலை என குழந்தைகளையும், கணவரையும் , பெரியவர்களையும் கவனிக்கும் பிஸியில் தங்கள் உடல் நலத்தை சற்றும் கவனிப்பதில்லை நேரத்துக்கும் உணவும் உட்கொள்வதில்லை.இதனால் பிற்காலத்தில் உடல்நலம் இயலாமல் போவதை பற்றி சற்றும் நினைப்பதில்லை.

-- 1. முதலில் எக்பேரி டேட் ஆன பிரெட் அது பார்க்க வெளியில் நல்ல இருந்தாலும் உள்ளே பூஞ்சை பிடித்து இருக்கும்.அதே போல் ஊறுகாயிலும் சில நேரம் பூஞ்சை வந்திருக்கும். அதை எல்லாம் கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது.

2. அடுத்து தினம் பயன் படுத்து ஆயில் சிக்கன், அப்பளம் போன்றவை பொரித்து விட்டு அந்த மீதி எண்ணையை என்ன செய்வது என்று தெரியாமல் நாள் பட வைத்து பயன் படுத்தாதீர்கள். முடிந்தால் குறைந்த அளவில் ஊற்றி பொரித்து எடுங்கள். இல்லை இரண்டு முன்று நாட்களுக்குள் அதை பயன்படுத்தி முடித்து விடுங்கள்.

3. அடுத்து முட்டை, கட்லெட்,அப்பளம், ரொட்டி, மீன் போன்றவை கவனக்குறைவால் கரிந்து போய் விடும் அதை தூர போட மனமில்லாமல் வீட்டில் உள்ள பெண்கள் தான் என்னவோ என்ன என்ன மீதி ஆகுதோ அதுக்கேல்லாம் அவர்கள் வயிறுதான் குப்பை தொட்டி போல் போட்டு உள்ள தள்ளுவது, இது போல் தவறு இனி செய்யாதீர்கள்.

4. அடுத்து புது துணிவாங்கும் போது கண்டிப்பாக கவணம் தேவை. வேவ்வேறு நாட்டில் இருந்து தயாரித்து வருகிறது, அதில் பல பேர்களிம் கை பட்டு தான் வந்து சேரும் அதனால் பல வியாதியை தரும் கிருமிகள் தொற்றி இருக்கும்.. இனி ஒரு முறை வீட்டில் அலசி அயர்ன் செய்து விட்டு போட்டு கொள்ளுங்கள்.

5 . பெண்கள் உள்ளாடை கருப்பு கலர் போடுவதை தவிர்க்கவும்.பெண்கள் உள்ளாடைகளை வெண்ணீரில் அலசுங்கள். இப்படி செய்வதால் கிருமிகள் அழியும்.உள்ளாடைகளை 6 மாதத்துக்கு மேல் பயன் படுத்த வேண்டாம்.நெடு நாட்களாக வெள்ளை படும் பெண்கள் உடனே டாக்டரிடம் போய் காண்பிக்கவும், இல்லை என்றால் கர்ப்பபையில் கேன்சர் வர வாய்ப்பிருக்கு.கர்ப்ப பையில் கேன்சர் வந்தால் அது கிட்னி லிவரையும்
பாதிக்கும்.

6. ஆண்கள் பான் பீடா போடுவதை தவிர்க்கவும். என்னேரும் பான் பீடா
போடுவர்களுக்கு நாக்கில் கேன்சர் வர வாய்ப்பு இருக்கு.இது நேரில் க‌ண்ட‌து
அந்த‌ ந‌ப‌ர் இப்போது உயிரோடு இல்லை.

7. எந்த‌ வியாதியும் த‌லைவ‌லியோ ம‌ற்ற‌வ‌லியோ தொட‌ர்ந்து ஒரு மாதத்திலிருந்து முன்று மாத‌ம் ஆறு மாத‌ம் என்று விடாம‌ல் வ‌ந்தால் உட‌னே முறையாக‌ டிரீட்மெண்ட் எடுக்க‌வும். நீங்களாக வீட்டு வைத்தியம் எடுக்க வேண்டாம்.

8. பிளாஸ்டிக் பாட்டில் அதை திருப்பி பார்த்தால் முக்கோண வடிவத்திற்குள் நம்பர் 1 என்று இருக்கும். அதை அதிக நாட்களுக்கு பயன் படுத்தலாம். நம்பர் 5 உள்ளதை ரொம்ப நாட்களுக்கு பயன் படுத்த கூடாது

9. ஒரு 45 வ‌ய‌து பெண்ணிற்கு வாயில் புண்ணு இர‌ண்டு வ‌ருட‌மா இருந்திருக்கு அது வ‌லிக்க‌வும் இல்லையாம் க‌டைசியில் போய் காண்பிக்க‌ போன‌ அது கேன்ச‌ர் , லாஸ்ட் ஸ்டேஜ் ஒன்றும் ப‌ண்ண‌ முடியாது என்று சொல்லிவிட்டார்க‌ள், இன்னும் அதிக‌மாகி பிற‌கு சாப்பிட‌ முழுங்க‌ முடியாம‌ல் இர‌ண்டு மாதமாக‌ அவ‌தி ப‌ட்டு அவ‌ர் இறைய‌டி சேர்ந்துவிட்டார்.

10. பெண்கள் எல்லோரும் 35., 40 வயதை கடக்கும் போது கண்டிப்பாக எண்டோஸ்கோபி டெஸ்டும், மேமோகிராம் டெஸ்டும் எடுத்து கொள்ளவேண்டும். நோய் இருக்கோ இல்லையோ ஒரு வருடத்துக்கு ஒரு முறை ஒரு ஜென‌ர‌ல் செக்க‌ப் செய்து கொள்வ‌து ந‌ல்ல‌து.

எல்லாத்துக்கும் நம் உணவு முறை தான் காரணம் . சரியான உணவு முறையை எடுத்துக்கொண்டாலே நல்லது, உணவே மருந்து.

-- Jaleela Banu, Dubai
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது.
இதையும் http://samaiyalattakaasam.blogspot.com/2009/07/blog-post_27.html சென்று படிக்கவும்.

இமாம் ஷாஃபி ஆண்டு விழா - தமிழ் நாடகம் காணொளி 9

தாஜுதீன் (THAJUDEEN ) | February 21, 2011 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்மையில் அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியின் ஆண்டுவிழா பற்றிய செய்தி வெளியிட்டோம். ஆண்டுவிழா தொடர்பான காணொளி பதியவேண்டும் என்று நம் அதிரைநிருபர் வாசகர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆண்டுவிழாவில் இடம் பெற்ற தமிழ் நாடகம் ஒன்றின் காணொளி இங்கு உங்கள் அனைவரின் பார்வைக்காக தருகிறோம்.

போலி டாக்டர்களின் அட்டகாசத்தை இந்த மாணவர்கள் மிக அற்புதமாக நகைச்சுவையுடன் மிக குறுகிய நேரத்தில் இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக்காட்டி எல்லோருடையை சிந்தனையும் கவர்ந்ததை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.



நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு அதிரைநிருபர் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். நாடகத்தில் தங்களின் தனித்திறமையை காட்டியது போல் படிப்பிலும் கவனம் செலுத்தி பெற்றவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் மற்றும் சமுதாயத்துக்கும் பெருமை தேடித்தர வாழ்த்துகிறோம்.

அதெல்லாம் சரி இதை பார்க்கும் பெருசுகள் நமக்கு பள்ளி ஞாபகம் நிச்சயம் வரும். பள்ளிப் பருவத்தில் நாடகம் போன்ற நிகழ்ச்சிகளில் நடித்த அனுபவங்கள் இருந்தால் இங்கு பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

-- அதிரைநிருபர் குழு

நன்றி: அப்துல் ரஹ்மான் -- harmys

'பொய்'! ஆனால், பொய்யில்லை! 14

அதிரைநிருபர் | February 20, 2011 | , ,

"வரூ...ம், ஆனா வராது" என்று எங்கோ கேட்ட நினைவு வருகின்றதா? அது போன்றதில்லை இது!

சான்றோர் வாயிலிருந்து பொய்யே வருவதில்லை. இந்த உண்மை, அவர்களின் சாதாரணப் பேச்சுகளிலும் வெளிப்பட்டிருப்பதை நாம் கண்டும் கேட்டும் உள்ளோம்.

"உங்கள் பிள்ளைகளுக்குப் பொய்யுரைத்து வாக்களிக்காதீர்கள்" என்று பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு வழி காட்டியுள்ளார்கள் அல்லவா? அதனால், நம் முன்னோரும் விளையாட்டுக்குக்கூட, தம் பிள்ளைகளிடம் பொய்யுரைத்து, அவர்களை நெறிப்படுத்தியதில்லை.

நாங்களெல்லாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, எங்களை உறங்க வைக்க எம் தந்தையார் அச்சுறுத்தும் தோரணையில், "வெளியிலே தந்தலை சொமந்தான் நிக்கிறானாம்; தூங்குங்கோ!" என்பார்களாம். சில வேளைகளில், "கொல்லையிலே தென்னை நிக்கிதாம்; பெசாமெத் தூங்குங்கோ!" என்றும் சொல்வார்களாம். அச்சத்தில் உறைந்து உறங்கிப் போய்விடுவோமாம்.

மேற்காணும் சொற்களின் பொருள் தெரிகின்றதா? 'தன் தலை சுமந்தான்' – அதாவது, மனிதன். யாரோ ஒரு மனிதன் அல்லது மனுஷன் என்று பயம் காட்டினால் பிள்ளைகள் தூங்குமா? அதற்காகத்தான் இந்தத் தந்திரோபாயம். 'கொல்லையில் தென்னை மரம்' நிற்பது ஒரு புதினமா? பயங்கரமா? இல்லை. ஆனால், இந்த உண்மையை ஓர் ஆச்சுறுத்தல் போல் காட்டித் தூங்க வைக்கும் தந்திரம்தான் அது.

இன்றும்கூட நமதூரில் துடுக்குப் பிள்ளைகளை அடக்கி வைக்க, அவர்களைத் திட்டுவது போன்று வாழ்த்துவதை நம் முதியோர்கள் ஆத்திரத்துடன், "அட நாசமத்துப் போவா!" என்று கூறுவதைக் கேட்க முடியும். 'நாசமாய்ப் போ' என்பதற்கும், 'நாசம் அற்றுப் போ' என்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடு நமக்குத் தெரியும்தானே.

ஆங்கிலத்தில், 'Not without' என்பது எதிர்மறை போன்று தோன்றும்; ஆனால், இது negative அன்று; positiveதான் என்பதை நாமறிவோம். இந்த முறையைத்தான் நம் முன்னோர் கடைப்பிடித்தனர். அந்தப் பாரம்பரியம் போற்றிப் பாராட்டத் தக்கது; பாதுகாக்கத் தக்கது.

தொட்டு வைத்தேன். தொடருங்கள் பின்னூட்டக்காரர்களே!

-- அதிரை அஹ்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு