Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 10 9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 11, 2011 | , , ,



உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார். எனவே உடன் வரும் பொருள்கள் அதிகம் இருந்தன. அவற்றை அங்குமிங்கும் நகர்த்துவது கடினமாக இருந்தது. ஒருவாறாக அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம்.

அவர்கள் பயணித்தது ஏர் இந்தியா ஜம்போ ஜெட் (Boeing 747) விமானம். அவர்கள் சென்னை வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி ஊர் வர வேண்டும். உமர் ஏர்ப்போர்டிலிருந்து போன் செய்தார். பயணத்திற்கான எல்லா நடை முறைகளும் நல்லபடியாக முடிந்ததாகச் சொன்னார். அவர்கள் மூவரும் புறப்பட்ட செய்தியை வீட்டுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துவிட்டோம். அடுத்து நாங்கள் சென்னையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் நலமாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்ற நல்ல செய்தியை. எதிர்பர்த்திருந்தபடியே ஊர் வந்து சேர்ந்த செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. அடுத்து நாங்கள் எங்கள் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தோம். நாட்கள் உருண்டோடின! ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துபாய் விமான நிலையத்தில் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு வழக்கமான எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு, அனுமதிச் சீட்டும் பெற்று அவரவர் இடத்தில் அமர்ந்துவிட்டார்கள். விமானத்தில் முதலில் எல்லாருக்கும் ஜூஸ் வழங்கினார்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் உணவு பரிமாறப்பட்டது. உமர் தேர்ந்தெடுத்தது வழக்கத்துக்கு மாறாக அசைவ உணவை! பொதுவாக அவர் சைவ உணவைத்தான் தேர்ந்தெடுப்பார். என்ன காரணமோ இந்த முறை அசைவத்துக்கு இசைந்து விட்டார். இதற்குப் பின் நிறைய நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும் என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறானே!

அசைவ உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர் தொண்டையை ஏதோ அடைத்தது. எலும்புடன் கூடிய ஒரு கறித்துண்டு அவர் உணவுக் குழாயில் சிக்கிக் கொண்டது. அதை வெளியில் எடுக்க முடியவில்லை. தண்ணீர் குடித்துப் பார்த்தார்; நடந்து பார்த்தார்; வேறு சில முயற்சிகளும் செய்துபார்த்தார். எதற்கும் அந்த இறைச்சித் துண்டு அசையவில்லை. அசைவமல்லவா? தொண்டையிலிருந்து இரத்தம் கசிய ஆரம்பித்தது. எங்கள் சகோதரி மகன் பயந்துவிட்டான். கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலியும் வந்துவிட்டது’ விமானத்திலிருந்த மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் மாரடைப்பாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டார். அப்படியெல்லாம் தனக்கு இல்லை என்று உமரே சொன்னார், விமானப் பணியாளர்கள் பதறிப்போய் விட்டார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தோன்றவில்லை.

பயணிகள் யாரும் தங்கள் இடத்தில் அமரவே இல்லை. எல்லாரும் உமரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பறந்து கொண்டிருந்த பறவைக் கப்பலே பரபரப்பாகக் காணப்பட்டது.

இந்த விமானத்தில் எங்கள் ஊரைச்சார்ந்த M.S.நிஜாமுதீன் என்பார் உமர்தம்பிக்கும் அவரது குடும்பத்துக்கும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். M.S.நிஜாமுதீன், இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளர், ஜனாப் M.S.தாஜுதீன் அவர்களின் தம்பி ஆவார். இவரும் துபாயில் முக்கிய பதவியை வகிக்கிறார். M.S.தாஜுதீன் அவர்கள் உமரை முன்பே தெரிந்து வைத்திருந்தார். ஆனால் பேசிப் பழக்கமில்லை. நிஜாமுதீனும் அவ்வாறே! நிஜாமுதீனிடம் இருந்த அனுபவமும் சுறுசுறுப்பும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் கை கொடுத்தன.

அவர் விமான அதிகாரிகளிடம் சென்று விமானத்தை துபைக்கே திருப்பிவிட முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் “குறிப்பிட்ட எல்லைக்குள் பறந்துகொண்டிருந்தால் விமானத்தை துபைக்குத் திருப்பிவிடலாம். நீண்ட தூரம் கடந்து வந்துவிட்டோம்! இப்போது நாங்கள் அந்த எல்லையைத் தாண்டிவிட்டோம். எங்களால் எதுவும் செய்ய முடியாது. சென்னையை அடைகிற வரை நீங்கள் அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொளுங்கள். நாங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறோம். சென்னை விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்துவிடுகிறோம்” என்றார்கள்.

உமருடன் இருந்தவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி படுக்க வைத்து, ஓரளவு சென்னையை நெருங்கி விட்டனர். சென்னை விமான நிலையத்திற்குத் தகவல் முன்பே தரப்பட்டுவிட்டது. விமானம் சென்னையை வந்து அடைந்தது. அப்போது நேரம் இரவு மணி ஒன்று! விமானப் பணியாளர்கள் சுங்க வேலைகளை ஒழுங்காக முடித்துக் கொடுத்தனர். உமரை சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளி வந்து உறவினரிடம் ஒப்படைத்தனர். பெற்றோரை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மகன்கள், தந்தை இந்த நிலையில் வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். முகத்தில் இருந்த மகிழ்ச்சி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது. மூத்த பையன் இந்த சோகத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டுதான் தன் பெற்றோர் நலமாக வந்து சேர்ந்தார்கள் என்று என்னிடம் போனில் சொல்லியிருந்திருக்கிறான்.

பொருள்கள் அதிகம் இருந்தன. சுங்க அதிகாரிகள் அவர்களை உடனே வெளியே அனுப்பிவிட்டதால் பணியின் பளு சற்றுக் குறைந்தது. உமர்தம்பியை அருகிலுள்ள வடபழனி மருத்துவ மனைக்கு ஏர் இந்தியா நிறுவனமே தன் வாகனத்தில் அனுப்பிவைத்தது. ஏர்போர்ட்டுக்கு வெளியே பொருள்களுடன் எங்கள் சகோதரி மகன் சாதலியும் உமரின் மனைவியும் காத்துக் கொண்டிருந்தனர்.

இரவு மணி 1:30 இருக்கும். உமர்தம்பியைக் கூட்டிக்கொண்டு வடபழனி சென்றார்கள். அங்கே ஒரு தனியார் மருத்துவமனையில் இரவில் நுழைய அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். மற்றொரு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார்கள். அங்கும் அதே பதில்! மருத்துவர் சொன்னார், ”சோதித்துப் பார்க்கக்கூடிய கருவி வசதிகள் எதுவும் எங்களிடம் இல்லை. அவர் நெஞ்சு வலிப்பதாகச் சொல்வதால், ஒரு ஊசியைப் போட்டு உறங்க வைத்துவிடலாம். மற்றவைகளைக் காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார். கூடச் சென்றவர்களும் சம்மதித்தனர்.

உமர் சற்று படுத்தார். அப்போதும் வலி இருந்தது. சிறிது நேரத்தில் உறக்கம் அவரை ஆட்கொண்டது! உறங்கிக்கொண்டிருந்த அவருக்கு திடீரென்று இருமல் வந்தது. வராமல் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அந்த கறித் துண்டு வாய் வழியாக வெளியில் வந்து விழுந்தது! இறைவனுக்கே எல்லாப்புகழும்! விடிந்ததும் மருத்துவ மனையிலிருந்து விடுபட்டு ஓட்டல் அறைக்குச் சென்றனர்.

அன்று மாலையே உமர்தம்பி அவர் மனைவி, மகன்கள் மற்றும் மருமகன் சாதலியும் சென்னையிலிருந்து புறப்பட்டு மறு நாள் காலையில் அதிரை வந்து சேர்ந்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே!

தொடரும்...
- உமர்தம்பி அண்ணன்

9 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மறக்க முடியுமா !?

விமானம் கிளம்பி 45 நிமிடங்களில் வழங்கப்பட்ட சாப்பாடு நாங்கள் சாப்பிட்டு முடிந்து காலி தட்டையும் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும்போது, விமாணப் பணிப்பெண் சின்ன மாமா அவர்களின் தட்டு மட்டும் திரும்ப பெறாததால் அருகில் வந்தவருக்கு மாமா அவர்கள் எதோ சிரமப்படும் சூழல் தெரிந்ததும் அருகில் இருந்த அவர்களின் துணைவிடம் கேட்க பக்க வாட்டில் இருந்த இருந்த நானும் எனது சகோதரனும் (சாதுலி) என்ன வென்று பார்க்கும் நேரத்தில் அதிகமாகவே திணறிவிட்டார்கள் கண்கள் சொருக ஆரம்பித்து விட்டன.

விமானம் முழுவதும் பதற்றம் தொற்றிக் கொண்டது விமாணப் பனிப்பெண் ஓடிச்சென்று மருத்துவர்கள் யாராவது இருந்தால் அவசரமாக தொடர்பு கொள்ளும்படி அறிவிப்பும் செய்தார் அப்போது மகப்பேறு மருத்துவர் ஒருவர் மட்டுமே இருந்தார் அவரும் வந்து பார்த்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொண்டு வயிற்றில் அதிகம் அழுத்தம் கொடுத்து வாந்தி எடுக்க முயற்சிக்க வைத்தார், முடியவில்லை ! அடுத்து முதுகில் அழுத்தமாக தட்டி கொடுத்த்தார் ஒன்றும் மாற்றமில்லை உடணடியாக விமாணத்தை தரையிரக்க முடியுமா என்றும் கேட்டதும்தான் கலங்கி விட்டோம் என்ன நடக்கிறது என்று புரியாமலே....

எனது சகோதரனிடம் (சாதுலி), மாமி அவர்கள் பக்கத்தில் இருக்க வைத்து விட்டு சின்ன மாமாவை விமாணப் பணிப் பெண்களிருக்கும் இருக்கை அருகில் கொண்டு சென்று படுக்க வைத்தனர் அசைவுகளோடு வேதனையில் தவித்தார்கள். அதன் பின்னர் தலைமை விமானி "ரன்பீர் சிங்க்" அங்கு வந்தார் மீண்டும் விமானம் திரும்ப துபாய் செல்ல இயலாது என்றும் சொல்லிவிட்டு அவரே கேட்டார் கராச்சியில் தரையிறக்கலாமா என்று அப்போது மாமா அவர்களே சைகையால் வேண்டாம் என்று சொன்னதும் அருகில் இருந்த டாக்டரும் பயப்படும் படி ஒன்றுமில்லை சென்னைக்கு சென்றுவிடலாம் என்று சொன்னதும் சற்று ஆறுதலாக இருந்தது.

அதற்கிடையில் விமான ஊழியர்களின் துரித நடவடிகையாலும் அங்கிருந்த பணிப்பெண்களின் ஒத்துழைப்பாலும் அவதிகளுக்குள்ளும் அங்கே மனிதநேயத்தை கண்டேன், விமாணியின் ஏற்பாட்டால் விமானம் தரையிறங்கியதும் எங்கள் நால்வரின் பாஸ்போர்டையும் தியாகராஜன் என்ற விமண நிலைய ஊழியரிடம் விமானி கொடுத்து விமானத்திலிருந்து வீல் சேரில் சின்ன மாமாவை எற்றிக் கொண்டு நானும் மற்ற ஊழியர்களும் தயாராக இருந்த ஆம்புலன்சில் ஏற்ற எத்தனிக்கும்போது, மாமா அவர்களே வேண்டாம் நாமக்கு வந்த வேனிலெயே போகலாம் என்றே சொன்னதால் எனது தம்பி தாஜுதீன் மற்றும் மச்சான் மொய்னுதீன் மற்ற உறவினர்களும் காத்திருந்த வாகனத்திலேயே முதலில் தேனாம்பேட்டை மருத்துவணை ஒன்றுக்குச் சென்றோம் அங்கே மருத்துவரில்லை, அவசர உதவிக்கும் ஆளில்லை.

அதற்கிடையில் விஷயம் வீட்டாருக்கும் சென்னை உறவுகளுக்கும் தகவல் பறந்தது... யாருக்கு ஃபோன் செய்வது என்று திகைத்திருந்த வேலையில் எனது தம்பி நினைவில் வந்த உறவுகளுக்கெல்லாம் தகவல் கொடுத்தான்.

அங்கிருந்து தேவகி மருத்துவமனைக்குச் சென்றோம் அங்கேயும் அவசர உதவி கிடைக்க வில்லை, அடுத்து விஜயா மருத்துக்குச் சென்றோம் அவசர உதவிக்குப் பிறகு எங்களை வெளியில் காத்திருக்கச் சொன்னார்கள் மற்றவர்களை இருப்பிடத்திற்கு போகச் சொல்லிவிட்டு நான், எனது தம்பி தாஜுதீன், மதனி காக்கா மகன் அப்துல் பாசித் வெளியில் மரத்தடியில் காத்திருந்தோம் திடிரென்று ஒலி பெருக்கியில் அறிவித்தார்கள் உமர் அவர்களோடு வந்தவர்கள் உடணடியாக தொடர்பு கொள்ளவும் என்று துடித்தே விட்டோம் என்ன ஆனதோ என்று அருகில் சென்று பார்த்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம் அல்ஹம்துலில்லாஹ்... இறைச்சித் துண்டு உள்ளிழுக்கப்பட்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார்கள். !

அதுவரை நமதூர் காரர்கள் யார் யார் அந்த விமானத்தில் பயணம் செய்தார்கள் என்பதே எனக்குத் தெரியாது, வேறு யாரெல்லாம் விமண நிலையத்தின் வெளியில் இருந்தார்கள் என்றும் கவனிக்க நினைவுகள் ஒருமிக்க வில்லை.

நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன் !

உடணடி உதவி செய்த அந்த விமானப் பணிப் பெண் "அஞ்சு பாபி"
சென்னை விமான நிலைய ஊழியர் "தியாராஜன்"
விமானி - கேப்டன் "ரன்பீர் சிங்"
விஜயா ஹாஸ்பிடல் பப்ளிக் பூத் வைத்திருந்த சகோதரர்
மற்றும் எனது உடன்பிறந்த உறவுகளும் சுற்றமும்.

இதெல்லாம் நடந்து முடிந்தது அதிகாலை 5:45க்கு முன்னால், இருப்பிடம் திரும்பினோம் காலை 7:00 மணிக்கு !

Moinudeen said...

எங்கள் வாப்பா விமானத்தில் அடைந்த துன்பங்கள், அவர்கள் ஊர்வந்து சேர்ந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எங்கள் மச்சான் துபாய் வந்து அடைந்த பிறகு அவர்கள் சொல்லித்தான் எங்கள் பெரியப்பாவுக்கே தெரியும்! இன்னும் சொல்லப் போனால் எங்கள் வப்பாவுடன் பெரிய மச்சான் ஊர் புறப்பட்டதே பெரியப்பாவுக்கு நினைவில் இல்லை!

முன்பே எங்கள் வாப்பா சொன்ன தகவல்களுடன், சாதலி மச்சானிடமும் கேட்டுத்தான் பெரியப்பா இந்தக் கட்டுரையை எழுதினார்கள். மச்சான் தந்திருக்கும் தகவல்களுடன் இக்கட்டுரை முழுமை பெற்றுவிடும் என்று நினைக்கிறேன்.

-மொய்னுதீன்

Yasir said...

சித்திரத்தின் சில பகுதிகளை சிதற விட்டாச்சு....இன்று இரவு எல்லாத்தையும் படித்து முடித்துவிட வேண்டும்...ஒரு சிறந்த மனிதனை தெரிந்த கொள்ள உதவும் தொடர்....அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தர வேண்டும்..

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உண்மையில் இந்த நிகழ்வை என்னாலும் மறக்க முடியாது.

Mobile போன்கள் இல்லாத காலம், pager மட்டுமே என்னிடம் இருந்தது.

விமானநிலையத்தில் Arrival பகுதியில் அமீரகத்திலிருந்து வரும் என் உறவுகளை காண ஆவலாக இருந்த அந்த சமையத்தில் WHEEL CHARIல் உமர்தம்பி மாமா அவர்கள் வருவதை திடீர் என்று பார்த்தவுடம் ஒன்றுமே புரியவில்லை.

அந்த நேரத்தில் 108 அம்புலனஸ் எதுமில்லை, அவசரத்துக்கு உதவியவர் ஒரு நல்ல உள்ளம் கொண்ட ஆட்டோக்காரர், அவர் உருவம் மறந்தாலும் அவரின் செயல் மறக்க முடியாது.

உதவிக்காக அழைக்கப்பட்ட சொந்தமும் நண்பனுமான முஹம்மது ஃபாஸியின் உதவியையும் மறக்க முடியாது.

ஏர்போட்டிலிருந்து ஆட்டோவில் உமர் மாமா அவர்களை ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைகளுக்கு அழைந்தது இன்னும் என் நினைவில் பதற்றதுடன் உள்ளது. இன்றும் சென்னையில் உள்ள கிண்டி மருத்துவமனை, வடபழனி விஜயா மருத்துவமனை என்று கேள்விபட்டாலே உமர்தம்பி மாமாவின் நினைவே வரும்.


ஒரு மனிதர் தன் வாழ்வில் நிறைய மனரீதியான, உடல்ரீதியான கஷ்டங்கள் அனுபவித்துதான் சாதனையாளராக வரமுடியும் என்பது வரலாறு, அது போன்ற சரித்திரத்தில் தமிழ் இணைய அறிஞர் அதிரை உமர் தம்பி அவர்களும் ஒருவர் என்பதை இந்த வா வரையும் சரித்திர சித்திரம் உலகுக்கு எடுத்துக்காட்டி வருகிறது.

கசப்பாக இருந்தா இணையத்தமிழை, இனிப்பாக மாற்றி இணையத்தமிழை நம் எல்லோரையும் சுவைக்க வைத்த இந்த உத்தமரை பற்றி அறிந்தவர்கள் யாராலும் நிச்சயம் மறக்க முடியாது.

இந்த நிகழ்வில் நிறைய பாடம் கற்றுக்கொள்ள முடிந்தது, எந்த ஒரு ஆபத்து வந்தாலும் மனிதர்களையும், மருத்துவமனைகளையும், டாக்டர்களையும் நம்புவதற்கு முன்பும் பின்பும் இறைவனை நம்பி செயலில் இறங்க வேண்டும் என்பதே. ஒன்றுமே புரியாத அந்த இரவு நேரத்தில் ஒவ்வொறு வினாடியும் அல்லாஹ்விடமே துஆ செய்துக்கொண்டிருந்தோம்.இறைவனுக்கே எல்லா புகழும்.

நிறைய சொல்லலாம் நேரமில்லை.

அன்னவர்களின் மரணம் இன்றும் நம் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.

இந்த தருணத்தில் அன்னவர்களுக்கு நிம்மதியான கப்ரு வாழ்க்கையை தந்து, அனைத்து பாவங்களையும் மன்னித்து சொர்க்கத்தை தந்தருள அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த தருணத்தில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் விஜயா மருத்துவமனையில் அன்றிருந்த இரவு டூட்டியில் இருந்த டாக்டர்,மருத்துவமனை ஊழியர்கள் அனைவரையும் மறக்க முடியாது. உமர்தம்பி மாமா அவர்கள் மருத்துவமனை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டும் மருத்துவமனை எந்த கட்டணமும் வாங்கவில்லை என்பது அச்சரியமான செய்தி.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
-------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த நிகழ்வை பார்த யாரால்தான் மறக்கமுடியும்.

அப்பொழுது தான் சென்னை விமானநிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கிவரும் பயணிகளை டி.வி மூலம் பார்க்கும் வசதி புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

நான் என் சகோதரரிடம் (மொய்னுதீன்) அங்கிருந்த ஒரு டி.வி-யை பார்த்து யாரோ ஒருவரை வீல் சேரில் வைத்து தள்ளிக்கொண்டு வருகிறார்கள் சற்று அதனை பார் என்றேன், அக்காட்சியை பார்த்து எங்களால் அடையாளம் காணமுடியவில்லை. பிறகு அந்த விமானநிலையத்தில் தங்கள் பெற்றோர்கள் வருகைக்காக காத்துகொண்டிருப்பவர்களாக நாங்கள் இருந்தோம். வீல் சேரில் அமர்ந்திருந்தது எங்கள் வாப்பா என்று பார்த்தவுடன் மனம் உடைந்து போனது, காரணம் என்ன என்று புரியாதவர்களாய் பதற்றம் அடைந்தோம்.

இந்த சம்பவத்தில் உதவிய அனைவரையும் என்றும் என்னால் மறக்க முடியாது.

அல்லாஹ்வுக்கே அனைத்து புகழும்.

மொஹ்சின் U.

sabeer.abushahruk said...

டச்சிங்... ஸோ டச்சிங்!
கட்டுரையும் பின்னூட்டங்களும் படித்து மனசு நெகிழ்கிறது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனம் நெகிழும் வரலாறுகள்.வாரிசுகளின் நல் வாழ்க்கைக்கு துஆசெய்வோம்.

அதிரைநிருபர் பதிப்பகம் said...

மின்னஞ்சல் வழி கருத்து
--------------------------------------------

இரத்தம் உறையும் நிகழ்ச்சிகள்! சந்தடி சத்தம் இல்லாமல் என் இரத்தத்தின் இரத்தங்கள் செய்திகளை எனக்கு மறைத்துவிட்டார்கள்!

நான் மூன்றாவது நபராக பின்னூட்டத்தில் நிற்கிறேன், குளமாகிவிட்ட கண்களைத் துடைத்தவனாக!

-வாவன்னா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு