திகுதிகுவென எரியும் தீ
கதகதவென இருந்தால் பதம்
சலசலவென ஓடும் நதி
ஜிலுஜிலுவென குளிர்ந்தால் இதம்
பளபளவென மின்னினாலே
தகதகவென தங்கமாகும்
கலகலவென சிரித்து வாழ்வோர்
தளதளவென தழைத்தோங்குவர்
திருதிருவென முழிக்காமல்
துருதுருவென பார்த்தல்வேண்டும்
குறுகுறுவென உற்றுநோக்கி
விறுவிறுவென முன்னேறனும்
வழவழவென இழுக்காமல்
மளமளவென செய்தல்வேண்டும்
மதமதவென சோம்பிப்போனால்
பொதபொதவென பெருக்குமுடம்பு
வசவசவென புலம்பினாலோ
சவசவவென பின்தங்குவர்
நசநசவென தேங்கினாலோ
கசகசவென கலங்கிப்போவர்
கடகடவென பேசினாலே
படபடவென கைத்தட்டுவர்
தடதடவென ஓடினாலே
மடமடவென இலக்கை அடைவர்
கரகரவென குரல்கொண்டோரை
தரதரவென வெளியிழுத்து
சரசரவென இயங்கியவரே
பரபரவென சிகரம் தொட்டார்
சிடுசிடுவென முகம்வைத்து
கிடுகிடுவென வீழுமுன்னர்
திமுதிமுவென பொங்கியெழுந்து
மினுமினுக்கும் நாள்தான் என்று?
கதகதவென இருந்தால் பதம்
சலசலவென ஓடும் நதி
ஜிலுஜிலுவென குளிர்ந்தால் இதம்
பளபளவென மின்னினாலே
தகதகவென தங்கமாகும்
கலகலவென சிரித்து வாழ்வோர்
தளதளவென தழைத்தோங்குவர்
திருதிருவென முழிக்காமல்
துருதுருவென பார்த்தல்வேண்டும்
குறுகுறுவென உற்றுநோக்கி
விறுவிறுவென முன்னேறனும்
வழவழவென இழுக்காமல்
மளமளவென செய்தல்வேண்டும்
மதமதவென சோம்பிப்போனால்
பொதபொதவென பெருக்குமுடம்பு
வசவசவென புலம்பினாலோ
சவசவவென பின்தங்குவர்
நசநசவென தேங்கினாலோ
கசகசவென கலங்கிப்போவர்
கடகடவென பேசினாலே
படபடவென கைத்தட்டுவர்
தடதடவென ஓடினாலே
மடமடவென இலக்கை அடைவர்
கரகரவென குரல்கொண்டோரை
தரதரவென வெளியிழுத்து
சரசரவென இயங்கியவரே
பரபரவென சிகரம் தொட்டார்
சிடுசிடுவென முகம்வைத்து
கிடுகிடுவென வீழுமுன்னர்
திமுதிமுவென பொங்கியெழுந்து
மினுமினுக்கும் நாள்தான் என்று?
- சபீர்
Sabeer abuShahruk
45 Responses So Far:
கவிக் காக்கா: ரெட்டைக்கிளவியில் ! இப்படி அசத்தியிருக்கீங்களே !
தமிழ் இலக்கியமும் இங்கே மண்டியிடுகிறது உங்களின் வரிகளை வாசிக்க !
திக்திக் கென்று அடித்தது !
//கரகரவென குரல்கொண்டோரை
தரதரவென வெளியிழுத்து
சரசரவென இயங்கியவரே
பரபரவென சிகரம் தொட்டார்//
மலமல வென்று கொட்டும் வரிகளை
படபட வென்று அள்ள முயல்கிறேன்
கடகட மைகண்டு களம் காண்கிறேன்...
சரிசரி வருவான் கிரவ்னு !
கவிக்காக்கா உங்கள் மணிமகுடத்தில் எத்தனை வைரங்கள்தான் பதிப்பது.....வித்தியாசமான அழகான கவிதை.....பல விசயங்கள் பொதிந்த பொக்கிஷம் இக்கவிதை
ரசித்த வரிகள்
//திருதிருவென முழிக்காமல்
துருதுருவென பார்த்தல்வேண்டும்
குறுகுறுவென உற்றுநோக்கி
விறுவிறுவென முன்னேறனும்
வழவழவென இழுக்காமல்
மளமளவென செய்தல்வேண்டும்
மதமதவென சோம்பிப்போனால்
பொதபொதவென பெருக்குமுடம்பு
வசவசவென புலம்பினாலோ
சவசவவென பின்தங்குவர்
நசநசவென தேங்கினாலோ
கசகசவென கலங்கிப்போவர்//
சுறுசுறுப்பூட்டும் இக் கவிதை
சுள்சுள் என்று பொருள் தந்த அவ்விதை
நான்நான் என்ற தன்னாசை விட்டொழித்து
நாம்நாம் என்று ஒன்று ஆளும் நாளே மினுமினுக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
வோவ் .யார் அந்த ரெட்டைக்கிளவி? மழலை கேட்டிடும் மளமளவென.
சும்மா நச்நச்சின்று பிச்சிபிச்சி வச்சிட்டிங்க.திக்கிதிக்கி படித்து திக்கற்று போனேன்
இப்ப கிடுகிடுவென கிறுக்கிட வந்திடுவார் மேலை நாட்டிலிருந்து . யார் அவர்?
க. ங. ச பாடம் சொல்லி தாங்க காக்கா. மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.
கடகடவென படிச்சாச்சு, அருமை காக்கா
எங்கிருந்து இத்தனை பளபளவென ரெட்டை கிளவிகளை அள்ளினீர்கள்!
இந்தக் (இரட்டைக்)கிளவிகளை சேர்க்கவில்லை என்றால் தமிழ் மூதாட்டி கோபித்துக் கொள்வாங்க !
வட்டார வழக்கிலும் இருக்கே....
படபட ன்னு வருதுமா !
குபுகுபு ன்னு வேர்க்கிறதுமா !
அடிஅடி யே !!
ச்சேச்சே ஓடிப்போ !
குடுகுடு ன்னு ஒட்டிவா / ஓடிப்போ !
இதெல்லாம் சரியான்னு கவிக் காக்கா வரட்டும் மாலை(க்குள்)யே ரெடியாகும் பதிலாகும் - (இதனை புரிந்தவர்களெல்லாம் கைதூக்குங்க பார்க்கலாம் - அப்படின்னா ரெட்டைக் கிளவியில் ஒற்றைக் கேள்விதான்)
ஆக்கத்திலும் பின்னூட்டங்களிலும் ரெட்டைக் கிளவி அல்லாதவை இருந்தால் யாராவது அடையாளம் காட்டுங்களேன் பார்ப்போம்.
//பின்னூட்டங்களிலும் ரெட்டைக் கிளவி அல்லாதவை இருந்தால் யாராவது அடையாளம் காட்டுங்களேன் பார்ப்போம்.//
அப்படின்னா ஏதோ "க்" இருக்குன்னு நினைக்கிறேன்... பொறுமையா வாங்களேன் களைகட்டிடுவோம் !
அஸ்ஸலாமு அலைக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற பாடங்கள் கற்றுக் கொடுத்தால்.கண்டிப்பாக நாலாபுறமும் முள்ளு கம்பி வேலி அடைத்துதான் பாடம் எடுக்கனும் போலும்.
//திருதிருவென முழிக்காமல்
துருதுருவென பார்த்தல்வேண்டும்//
திரு திரு இந்த ரெட்டை கிளவியை பிரித்தால் திரு என்ற வார்த்தை வந்து விடுகின்றது
துருதுருவென இந்த துரு துருவை பிரித்தால் துரு (தூசி துரும்பு ) என்ற வார்த்தை வந்து விடுகின்றது ஆகையால் இது ரெட்டை கிளவி இல்லை
(வேறு என்ன ஒன்றை குமரியா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள் ) சரியா கவிகாகா
M.H. ஜஹபர் சாதிக் சொன்னது…
//சுறுசுறுப்பூட்டும் இக் கவிதை
சுள்சுள் என்று பொருள் தந்த அவ்விதை
நான்நான் என்ற தன்னாசை விட்டொழித்து
நாம்நாம் என்று ஒன்று ஆளும் நாளே மினுமினுக்கும்//
இந்த சுள்சுள்லை பிரித்தால் வார்த்தை வருகின்றது ( ஆனம் சுள்ளுன்னு இருந்தது ) ஆகையால் இதுவும் ரெட்டை கிளவி அல்ல
நான் நான் இதுவும் இரட்டை கிளவி அல்ல
நாம் நாம் இதுவும் ரெட்டை கிளவி அல்ல
//கடகடவென பேசினாலே// இதுவும் இ.கிளவி அல்ல...உ.ம்.ஆற்றை “ கட” “
விஞ்ஞானியாக்கா...கி(ழ)ளவி பாவம் பொல்லாதது...ரொம்ப பிரிக்காதீங்க
Yasir சொன்னது…
//விஞ்ஞானியாக்கா...கி(ழ)ளவி பாவம் பொல்லாதது...ரொம்ப பிரிக்காதீங்க//
யாசிர் தம்பி நாங்க ஜுபைலில் குமாரனாக இருக்கும்போதே கவிகாகா ரெட்டை கிளவி பற்றி பிரிபிரி(பிரிபிரி இதுவும் ரெட்டை கிளவி அல்ல ) என்று பிரித்து பாடம் நடத்தி விட்டார்கள் அதனால் இங்கு இப்போது பிரிக்க ரொம்ப வசதியா போச்சி
அபுஇபுறாஹீம் சொன்னது…
//அப்படின்னா ஏதோ "க்" இருக்குன்னு நினைக்கிறேன்... பொறுமையா வாங்களேன் களைகட்டிடுவோம் ! //
நாங்க ரொம்ப பொறுமையா இருக்குறோம் உங்களைதான் காணோம் ,எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு
எஸ்.ஹமீது காக்கா சொன்னது .
//அப்படின்னா ஏதோ "க்" இருக்குன்னு நினைக்கிறேன்... பொறுமையா வாங்களேன் களைகட்டிடுவோம் !
நாங்க ரொம்ப பொறுமையா இருக்குறோம் உங்களைதான் காணோம் ,எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு//
ஹமீது காக்கா "க்" குக்கு புள்ளியை காணோமா அது நாளே தேடிகிட்டு இருக்கிறாங்க நீங்க அவசப்பட்டு எல்லையை கடந்திராதியோ.அப்புறம் உங்களை தேடுகிரென்று "க்" விட்டுட போறாங்க
ரெட்டைக் கிளவியை பிரிக்கக் கூடாதுன்னுதான் முன்னரே அடுக்கு மொழித் தொடராக போட்டும் வைத்தேன்....
"ரெட்டைக்கிளவி பாவம் பொல்லாதது(ங்க)!"
சபையோர்களே அமைதி அமைதி... பிரித்தாள்வது நம் நியதியல்ல ! ஆதலால் கவிக் காக்கா வந்து கொண்டு இருக்கிறார்கள்... அதுவரை அமைதி காக்கும்படி உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் :) (என்ன பன்றது எலெக்ஷன் நேரமாச்சு மேடையெல்லாம் ஏறனும் ஓட்டுடை போடச் சொல்லி வேற பேசனுமே) :))
டக்குடக்குண்டு படிச்சு
சட்டுபுட்டுண்டு முடிச்சி
அடஅட அருமை என்று சொல்லி
ஹ்ஹ்ஹா என்று வாய்விட்டு சிரித்து
முடியலெ...என்று சொல்லி இறுதியில் முடித்துக்கொள்கிறேன்.
ட்வின்ஸ் கிழவிகளைப்பற்றி நமக்கு தெரியாது.....ராத்தா, தங்கச்சிமாரா?
மு.செ.மு. நெய்னா முஹம்மது
அன்பானவர்களே,
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு மொழியைப் பற்றி பேசுவது மகிழ்வளிக்கிறது!
இரட்டைக் கிளவியைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்லவந்தேன்.
கிளவி என்றால் 'சொல்' எனப் பொருள்.
இரட்டைக் கிளவி என்றால், இரட்டித்து இணந்திருக்கும் ஒரேசொல் எனப் பொருள்.
இரட்டைக் கிளவியைப் பிரித்து எழுதுவதும் பொருள் காண்பதும் வழக்கிலில்லை. அவ்வாறு பிரித்தால் எந்தப் பாதிக்கும் பொருள் சொல்லிவிடலாம்.
காட்டாக,
'தகதக' என்பது இரட்டைக் கிளவி எனக் கொள்வோம். கூடவே, ஒரு குறள் படிப்போம்:
"கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" இந்தக் குறளின் இறுதிச் சொல் 'தக' என முடிகிறது. அதற்கு, "தக்கவாறு" என்பது பொருள். தகதக என்பதைப் பிரித்து, (பிழையாக) 'தக தக' என்று எழுதினால் "தக்கவாறு; தக்கவாறு" எனப் பொருள் வரும்.
எனவே, இணைந்தே நிற்கும் இரு சொற்களான இரட்டைக் கிளவிகள் எல்லாமும் உருவகத்தின் குறியீடுகளே! அவற்றுக்கென எந்தப் பொருளும் எனக்குத் தெரிந்து இல்லை.
"வாங்க வாங்க" என்பது அடுக்குச் சொல். இரு சொற்களும் பிரிந்து நிற்பதைக் கவனிக்கவும். இதற்குப் பொருள் உண்டு; பொருள்களும் உள்ளன (வாங்குறதுக்கு வாங்க!).
//ட்வின்ஸ் கிழவிகளைப்பற்றி நமக்கு தெரியாது.....ராத்தா, தங்கச்சிமாரா? //
ஹாஹ்ஹா !
மெய்யாலுமே.... அதத்தான் கவிக் காக்கா கேட்டிருந்தாங்க... அவங்களுக்கு (ராத்தா தங்கச்சிக்கு) எழுதிக் கொடுத்த ஒரு வூட்டை பிரித்தால் தனித் தனி வூடாக வருமான்னு ? சுவரின்றி !?
ஆஹா... அதி அழகு ஆசானும் வந்து விட்டார்கள் (அலைக்குமுஸ்ஸலாம் காக்கா).. இனி களை கட்டும் இந்தக் களம் ! :)
ஜமீல் காக்காவின் வேலை பளுவுக்கு இடையே நமக்கு வகுப்பெடுப்பது சாத்தியமில்லாதது.
நான் தான் ரொம்ப கெஞ்சிக்கேட்டு வகுப்பெடுக்கச் சொன்னேன்.
இதில் யாசிருக்கும் ஹமீதுக்கும் பதில் இருப்பதாகத் எனக்குத் தோன்றினாலும் மேலும் விளக்கம் தேவைப்பட்டால் தர முயல்வேன்.
கிரிக்கெட் சாம்பியன் லீக் தொடங்கிறாய்ங்களாம் இன்றைக்கு அங்கே அவய்ங்க பாடும் பாட்டெல்லாம் (டிவியில) ரெட்டைக்கிளவி மாதிரியே பிரம்மையா இருக்கு (அங்கே சந்த்தம் மட்டுமே அதிருது)... தனித் தனியா சொல்லச் சொன்னா என்னா சொன்னாய்ங்கனு அவய்ங்களுக்கே தெரியாது போலும்... :)
என் கோரிக்கையை ஏற்ற ஆசானுக்கு மிக்க நன்றி.
க்ரவுன் வந்துட்டா ஏற்புரை எழுதிடலாம். அலாவுதீனும் ஜாகிரும் எங்கே?
// ஏற்புரை எழுதிடலாம் //
என்னா அவசரம்... இருங்க வருவார் கிரவ்ன்(னு) !
சலசல சலசல ரெட்டை கிளவி
தகதக தகதக ரெட்டை கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்துவைத்தல் நியாயம் இல்லை
பிரித்துப்பார்த்தால் பொருளுமில்லை
என்று முன்னாள் அரசவை கவிஞர் வரைமுத்து சொல்லி உள்ளார் .
//இரட்டைக் கிளவியைப் பிரித்து எழுதுவதும் பொருள் காண்பதும் வழக்கிலில்லை. அவ்வாறு பிரித்தால் எந்தப் பாதிக்கும் பொருள் சொல்லிவிடலாம்//
என்று ஜமில் சாச்ச சொல்லி உள்ளார்கள் இதில் உள்ள குழப்பத்தை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன் கவி காகா அவர்களே
//Mr.Shameed சொன்னதில்...
சுள்சுள் ரெட்டை கிளவி அல்ல
நான் நான் இதுவும் இரட்டை கிளவி அல்ல
நாம் நாம் இதுவும் ரெட்டை கிளவி அல்ல//
மன்னிக்கவும்.
நான் ரெட்டைகிளவிக்கு வரவில்லை.
ரெட்டைகிளவி தந்த கவியாசானுக்கு ஒருவரி மட்டும்.
மற்றது சமயம் பார்த்து அரசியலுக்கு வந்தேன்.
மற்றபடி ரெட்டைகிளவியில் எல்லாரும் நல்ல கட்டைகள் தான்.(கட்டைகளின் கணக்கு கவிகாக்காவுக்கு மட்டுந்தான் தெரியும். எங்களுக்கெல்லாம் சொன்னால் புரியாது)
அஸ்ஸலாமு அலைக்கும். எல்லா பிரியமானவர்களும். பெரியவர்களும் ஒன்னும் அறியாத என்னை இப்படி பாராட்ட காரணம் அல்லாஹ்வின் அருளே! எல்லா புகழும் அல்லாஹுக்கே. ஏற்புரை எழுதஎத்தனிக்கும் போதே பொறை யேரி விடுகிறது. தேர்வு எழுதச்செல்லும் சராசரி மாணவனின் காய்ச்சல் என்னை வாட்டுகிறது.இரட்டை கிளவி,அடுக்குத்தொடர் எல்லாம் எழுத எனக்கு இலக்கிய அறிவு அதிகம் இல்லை. காரணம் இலக்கியம் விளக்கியது ஆசான் ராமதாஸ், மும்தாஜ் போன்ற ஆசிரியர்,ஆசிரியைகள் என்றாலும் இலக்கனம் விலக்கியே வந்துள்ளேன்.காரணம் நான் படிக்கும் காலம் இலக்கனம் எல்லாம் ஆரியனின் கையில் அடைப்பட்டு இருந்தது அப்பொழுது உன்மை திரித்து எழுதப்பட்ட இலக்னகமாகவே எனக்கு விளங்கியது. அன்றோ அஹமது சாட்சா, ஜமீல் காக்கா, சபீர் காக்கா போன்ற இலக்கனமும் படித்த தைரியம் மிக்க மேதைகள் நம் சமூகத்தில் இல்லாமல் போனதால் இலக்கணம் அவசியமற்றதாவே போய்விட்டது(அப்பாடா!எப்படி எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி உள்ளது).ஆகாவே முதலில் இவ் கவிதையில் சொல்ல பட்டுள்ள விசயங்களை அலசுவோம் (வழக்கம் போல உலறி வைப்போம்).
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா,
மடமடவென இதை படித்தாலும்
சுடசுடவென கருத்திட நேரமில்லை.
சுடுசுடுவென இருக்கும் மேலாளருக்கு
குளுகுளுவென மனம் இருந்தால்..
துருதுருவென அதிரைநிருபரில் முதலில் கருத்திட்டிருப்பேன்.
உடன் கருத்திடமுடியாமைக்கு வருந்துகிறேன்.
சோம்பேறியாக இருக்கும் ஒவ்வொருவரையும் சுருசுருப்பாக்கும் அனைத்து இரட்டைபுள்ளை வரிகள்.
திகுதிகுவென எரியும் தீ
கதகதவென இருந்தால் பதம்
சலசலவென ஓடும் நதி
ஜிலுஜிலுவென குளிர்ந்தால் இதம்
--------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.
ஆரம்பமே கவிதை சூடுபிடிக்க ஆரம்பித்து குளிர்சியாய் முடிகிறது முதல் பத்தி.இதில் நெருப்பு தனிந்து
கத,கதப்பாய் பாதி அனலுடன் எறிந்தால் குளிர்காயலாம் அதுபோல் கோபம் வந்தாலும் தனிந்து குளிர்ந்து போனால் சிதறிய சொந்தமும் பரவாயில்லை ஏதோ கோபத்தில் செய்துவிட்டான் ,சொல்லி விட்டான் என நம்மை மறுபடியும் வந்து சேரும்.சல,சலவென சத்திமிட்டு ஓடும் நதி ஜிலு,ஜிலுவென குளிர்ந்தால் நலம் . அதுபோலவே வாழ்கை அது ஓடும் வழியில் பல சந்தர்பசூழ்னிலைகளை கடந்தாலும் போகும் வழிதோறும் ஒரு புன்னைகையாவது சிந்தி வைத்தால் நமக்கும் நலம் சேர்க்கும். ஒரு மனிதன் இறந்தபின் குறைந்தது பத்து நபர்களாவது இவர் நல்லவர் என சொல்வது நலம் என்று நபி மொழி இருப்பதாய் படித்த நியாபகம்(சரியா, தவறா? தெரிந்தவர்கள் சொல்லனும்).
பளபளவென மின்னினாலே
தகதகவென தங்கமாகும்
கலகலவென சிரித்து வாழ்வோர்
தளதளவென தழைத்தோங்குவர்.
-------------------------------------------------------
பளப்பளக்காத தங்கம், சிரிக்காத மூச்சி, அழுதுவடியும் அம்மனாட்சி போல ஈப்ப்பு இருக்காது.ஜொலித்தால்தான் ஜலிலா ஜுவலரி.இல்லையெனில் அது நகை இருக்கும் சாதாரனகேலரி.அதுபோல் தான் மனிதன் சிரித்து , சக ஜனத்துடன் மகிழ்ந்து வாழனும்.வசதி படைத்தவன் ஆனாலும் அங்கே அவன் முகத்தில் சிரிப்பூ இல்லை யெனில் சமூகம் சொல்லுமே மூச்சிய பாரு!சிரித்து பேசுவதால் நம் அலுப்பும் அடுத்தவர் அலுப்பும் ஓடி போகும் .எல்லாரும் விரும்பும் மனிதராக மாறி போவோம்.
திருதிருவென முழிக்காமல்
துருதுருவென பார்த்தல்வேண்டும்
குறுகுறுவென உற்றுநோக்கி
விறுவிறுவென முன்னேறனும்
--------------------------------------
ஒரு தெரியாத செயலை செய்ய தொடங்கும் போதே திரு,திருவென திக்கு தெரியாதவன் மாதிரு முழிக்க கூடாது.முதலில் அதை உற்று நோக்கனும் இது நமக்கு சரிவருமா? தொடங்கலாம? விட்டு விடலாமா? உடனே மூளையில் பட்டி மன்றம் போட்டு , சமயோகிதமாய் முடிவெடுக்கனும்.
சிக்கல் உள்ள நூலின் ஆரம்பமுனையை பிடித்து , நிதானமாய் ஒவ்வொரு முடிச்சா அவிக்க ஆரம்பித்து விட்டால் சிக்கல் என்பது இல்லாமல் போய்விடும் அதுபோல் சந்தர்பம் என்கிற நுனியை பிடித்துகொண்டே முன்னேறனும்.
இப்படி பிரித்தால் பொருள்தாராத சொல்லை வைத்தே நம் வாழ்வில் பிரித்து பார்க்கமுடியாத பொருள் பொருந்திய கவிதையை யுக்தியுடன் கூடிய மதியை என்னவென்பேன்(மர்மயோகி எங்கப்பா)அல்ஹம்துலில்லாஹ்.
அ/ நி திறந்து பார்த்தா கட,கடவென கருத்து வந்து குவிந்து இருந்தது.உடனே பட,படவென என் இதயம் அடிக்க ஆரம்பித்தது எப்படி இப்படி மட, மடவென வாசக சகோ,சகோதரிகள் அள்ளி அனுப்பிட்டாங்க, நாம எப்படி தொடங்க போறோம்? தட,தட இவ்வளவு நாளா தடங்கள் இல்லாமல் தட்டச்சு செய்துவந்தோம்.தட்டச்சு தொட,தொட கை பட,பட வென அடிக்க.எப்ப எழுதி முடிக்க?வர,வர நமக்கு போட்டி அதிகமாச்சு. இனி நம் சொல்வாக்கு செல்லாமல் போய்விடுமோ?லொட,லொடன்னு பேசிவோமே இனி நம் பேச்சு அதிரை நிருபரில் அம்பலம் ஏறுமா? என யோசிக்கலானதும் விறு,விறுன்னு எழுத முடியாமல் ,கிறு,கிறுன்னு தலைசுத்துதே.
ஹமீது,
திருதிரு எனும் சொல் 'ஒருவிதமான மருண்ட / பயந்த எனும் அர்த்தத்தில் பார்வையை /பார்வையின் தன்மையைக் குறிக்கிறது. அதே திருதிருவை திரு திரு என்று பிரித்தபின்னும் திரு எனும் ஒற்றைச் சொல் திருதிரு எனும் ரெட்டைக்கிளவி தந்த அதே மருண்ட/ பயந்த எனும் அர்த்தத்தைத் தராமல் செல்வெம் (திருவுக்கு அர்த்தம் அதுதான்) என்று வேறொரு அர்த்தத்தைத் தருவதால் இது ரெட்டைக்கிளவிதான்.
துருதுருவுக்கும் இதே நிபந்தனைதான்.இரண்டு சொற்களும் சேர்ந்து ஒரு பொருளைத்தான் தருகின்றன. துருதுருவென்ற ஆர்வமான பார்வையை. பிரித்தாலோ துரும்பு என்கிற அர்த்தம் வருவதால் இதுவும் இரட்டைக்கிளவிதான்.
மொழிமீதான ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். வாங்க கத்துக்குவோம். இது நீங்க எனக்கு துப்பாக்கிச் சுட கத்துத் தந்தமாதிரியோ மீன் பிடிக்க கத்துத்தந்தமாதிரியோ அட்டுத் தனமாக இருக்காது என்பதற்கு நான் கியாரன்டி.
ரொம்ப ஈஸி. இரட்டை என்பது இரண்டு. இரண்டு என்பது பன்மை. எனில், கிளவி'கள்' என்றல்லவா வர வேண்டும்?
'கிளவி' என்று ஒருமையில் வருவதேன்?
தகதக : பொருளில்லாத ஒற்றைச் சொல்.
யாசிர்,
கடகட் எனும் இரட்டைக்கிளவிகளைக் கொண்ட ஒரு சொல் (கவனிக்க, கடகடவை ஒரு சொல் என்கிறேன்) ஒருவிதமான சப்தத்தைக் குறிக்கிறது. ஆனால், கொஞ்சம்கூட வச்சிப்பார்க்காமல் வில்லன்மாதிரி அதைப் பிரித்தால் அது கட என்று கடந்துபோ என்ற கட்டளையைத் தருவதால், இரட்டைக்கிளவி தந்த அதே அர்த்தத்தைத் தரவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
(இன்னும் அந்த ஹைக்கூக்கு நீங்க பட்ட அவதி மறக்கல என்பதால், கிளவியை குமரி ஆக்கிய ஜொள்ளை நான் பெரிசு படுத்தாமல் விடறேன்)
காக்கா, சர்ப்ரைஸ். முழிச்சிக்கிட்டு இருப்பதோடு நான் எழுதிக்கொண்டிருப்பதையே நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள். அதான், ரெட்டைக்கிளவி என்பது ஒரு சொல் என்பதை. அல்ஹம்துலில்லாஹ்.
அபு இபுறாஹிம் / எம் ஹெச் ஜே:
சரிசரி என்பதும், நான்நான் என்பதும் ரெட்டைக்கிளவியின் கொலுந்தியாவாகிய அடுக்குத் தொடர்கள். இந்த ஒற்றைச் சொல்லை பிரித்தால் பிரிக்குமுன் தந்த அதே அர்த்ததை அட்சரம் பிசகாமல் தரும்.
காக்கா ஏற்கனவே சொல்லித்தந்ததுபோல், வாங்க வாங்க, வாழ்க வாழ்க, போபோ, வாவா, இப்படி அமைபவை அடுக்குத்தொடர்கள்.
(அதிரைக் காலைக்கு அந்தி(ரை) மாலை; வளைகுடா வாப்பாவுக்கு, ஐரோப்பிய வாப்பா என்று போட்டிக் கவிதை எழுதுபவராயிற்றே நீங்கள். ரெட்டைக்கிளவிக்கு போட்டியாக அடுக்குத்தொடரில் கவிதை எதிர்பார்க்கலாமா?)
தாஜுதீன்:
சுடசுட என்பது சுடச்சுட என்று, வல்லின சகரத்தின் ஒற்று நீண்டு ரெட்டைக்கிளவியின் தன்மையிலிருந்து வெளியேறிவிட்டது.
சுடுசுடு - அடுக்குத்தொடர்
(எப்ப அடுத்த பீரியடுக்கு பெல்லடிக்கப்போகுதோ)
என்ன கிரவுன் இப்படிச் சொல்லிட்டீங்க. கண்ணதாசன்தானே பெரிய கவிஞனானான் (சுய ஒழுக்கம் அற்றவன் என்பதால் மரியாதை தரல)கண்ணதாசனின் தமிழ் வாத்தியார் பெரிய கவிஞனாகவில்லையே ஏன்?
காரணம் சிம்ப்பிள்: இலக்கணம் வரையறுக்குமேயன்றி யோசிக்காது, தீர்வு சொல்லாது, புத்தி சொல்லாது, உணர்வுகளைச் சொல்லி விளக்காது.
உமது எண்ண்ங்கள் காட்டாறு ஐயா. வழக்கம்போல் கரைபுரண்டு ஓடட்டும்.
கருத்திட்டு மொழியார்வத்தை வெளிப்படுத்திய அனைத்து சகோதரர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.
(இவனுக ரெண்டு பேரும் எங்கே போனானுக?)
அ.நி.: இந்த என் கவிதை(?)யை ரிஸ்க் எடுத்து வெளியிட்டமைக்கு ஷுக்ரன். ஜஸாக்கல்லாஹ் க்ஹைரா.
வஸ்ஸலாம்.
//(இவனுக ரெண்டு பேரும் எங்கே போனானுக?)//
சார்...நேத்து கந்தூரிலெ கூடு பார்த்தேனா..தூங்கிட்டேன் சார்
இதுபோன்ற இலக்கிய வகுப்புகளுக்கு கட் அடிக்க உதவிய இந்த வார்த்தையை எனக்கு தந்து உதவியவர் [ யாரா இருக்கும் என் முன்னால் கிளாஸ் மேட் தான் ]
எங்களைத் தூங்கச் சொல்லிட்டு இவ்வளவு கூத்து நடந்திருக்கா !?
கூடு பார்க்கப்போனவங்களெல்லாம் வந்த மாதிரி தெரியுது !?
இங்கே (தமிழ்)மொழி பேச விழித்திருந்த கவிக் காக்காவுக்கு ஒன்னு சொல்லிக் கொள்கிறேன்...
இன்னும் சற்று நேரத்தில் மேடையேற இருக்கிறேன் !
சபீர்! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
வியாழன் மதியம் வரை அலுவலக வேலையாக வெளியே சென்றேன். மாலையில் நண்பர் நகை வாங்க அழைத்தார் அவருடன் சென்று திரும்பி வர இரவு 10க்கு மேல் ஆகிவிட்டது. அதனால் உன்னுடைய இரட்டை கிளவியை படிக்க முடியவில்லை.
மாஷாஅல்லாஹ்!
திகுதிகுவென
கதகதவென
சலசலவென
ஜிலுஜிலுவென
பளபளவென
தகதகவென
கலகலவென
தளதளவென
திருதிருவென
துருதுருவென
குறுகுறுவென
விறுவிறுவென
வழவழவென
மளமளவென
மதமதவென
பொதபொதவென
வசவசவென
சவசவவென
நசநசவென
கசகசவென
கடகடவென
படபடவென
தடதடவென
மடமடவென
கரகரவென
தரதரவென
சரசரவென
பரபரவென
சிடுசிடுவென
கிடுகிடுவென
திமுதிமுவென
மினுமினுக்கும்
இவை அனைத்திற்கும் நேர் கோட்டில் வந்த பொருத்தமான வார்த்தைகளை அழகிய வடிவில் (ஆரம்பம் - முடிவு) வடித்த அழகு அருமை! அருமை! அருமை! வாழ்த்துக்கள்!
Post a Comment