துபாய் போவதற்காக சான்றிதழ்களை 'அட்டஸ்டேஷன்' செய்வதற்காக டெல்லிக்கு போகனும் நம்ம ஊரிலேயே அதற்கான ஏற்பாடுகளை செய்துதர ஆள் இருந்தது டெல்லி செல்வதற்கு ரெயிலில் டிக்கெட் ஏற்பாடு செஞ்சது முதல் அங்கே இரண்டு நாள் தங்குவது வரை எல்லாத்துக்கும் சேர்த்து ஆறாயிரம் கொடுக்கப்படவேண்டியிருந்தது. ஊரிலிருந்து சென்னைக்கு அப்புறம் அங்கிருந்து டெல்லிக்கு என அச்சிடப்பட்ட டிக்கெட் கொடுத்தார்கள்.பக்கத்து ஊரைச் சேர்ந்தவருக்கும் 'அட்டஸ்டேஷன்' செய்ய வேண்டியிருப்பதாக சொல்லி அவருக்கு என்னோடு சேர்த்து டிக்கெட் போட்டிருந்தார்கள் ஆக சக நண்பன் ஆகிவிட்டார். என்னுடைய வயதையொத்தவர் என்பது தெரிஞ்சு திருவாரூர் தாண்டியதுமே அவர்' அவனாக மாறியது... பேச்சுவாக்கில் தான் படித்தது எம்.பி.ஏ என்றான் இவனுக்கெல்லாம் பட்டம் கொடுத்தாய்ங்களா இல்ல 'எங்காவது? வாங்கினானா'ன்னு போற வழியில் பல இடங்களில் இவன் படிச்ச எம்.பி.ஏ பல்லிளித்தது..
விழுப்புரம் வந்தது டீ,டீ, காபி, காபி என ரயில்வே ஸ்டேஷனையே 'ஆத்திக் கொண்டிருந்தார்கள். நான் பூரி வாங்கி சாப்பிட சகவனும் அதே.. திடுமென்று ஒரு கும்பல் முண்டியடித்துக்கொண்டு ஏறியது.. அன்ரிசர்வ்டு கும்பல் எப்படி ரிசர்வ்டு பெட்டியில் ஏறினார்கள் என்று எனக்கு தோன்றும் முன்பே சகவன் கேட்டேவிட்டான்..
'ஏங்க இது ரிசர்வ்டு பெட்டி'
'தெரியும் அதுக்கென்னாங்கிற மூடிட்டு ஒக்காரு'
வந்த பதிலில் சர்வமும் அடங்கியது நம்மவனுக்கு..
'இன்னும் கொஞ்ச நேரத்துல சென்னை வந்துரும் நீ ஏண்டா வாய கொடுக்கிறே' என்றேன்.
'இல்லப்பா நமக்கு வசதியா இருக்குமேன்னுதான்' முன்னாடி இருந்த வேகம் பதிலில் இல்லை..
தாம்பரம் வந்ததும் சரவணா ஸ்டோர் விளம்பரம் முதல் போர்ட்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தவர் வரை காண நேர்ந்தது.. விழுப்புரத்தில் தடாலடியாக ஏறிய கும்பல் ரொம்ப பொறுமையாக இறங்கியது.. நம்மவன் தூக்கத்திலிருந்தான் நான் காலைக்கடனில் முதலாதுவதை முடித்துவிட்டு ஜன்னல் வழி உட்கார்ந்திருந்தேன்..எங்க பெட்டியில் இருந்தவர்களில் பாதிப்பேர் இறங்கிவிட்டிருந்தார்கள். லேசான உசுப்பலோடு வண்டி கிளம்பியது மாம்பலம்,எக்மோர் வந்தடைய முக்கால் மணி நேரம் பிடித்தது..எங்களுக்கு அன்னைக்கு ஈவ்னிங் 4 மணிக்குத்தான் டெல்லிக்கு வண்டி இப்போ மணி காலை எட்டரை.. எக்மோரிலிருந்து மின்சார ரயிலில் சென்ட்ரலை அடைந்தோம்..
வெளிமாநிலம் என்று பார்த்தால் பெங்களூர்'க்கு சென்றிருக்கிறேன் அதுவும் பேருந்து வழியாக அதற்கு அடுத்து இந்தப் பயணம் சென்ட்ரலை வெளியே பார்த்ததும் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை உள்ளே சென்றதும்தான் உணர்வுகள் வித்தியாசப்பட்டது.. எல்லா மாநில மக்களும் இல்லாவிட்டாலும் ஒன்றிரன்டு பேர் உடையில்,மொழியில் வித்தியாசமுள்ளவர்களை பார்க்க நேர்ந்தது... அதை நான் வெளிக்காட்டவில்லை..பயணிகள் வெயிட் பன்னும் இடத்தில் நானும் சகவனும் உட்கார்ந்திருந்தோம்.. நான் சுஜாதா புக்'ஸ் ரெண்டும் அந்த வார குமுதம்,ஜீ.வி,ஆ.வி. கல்கி என எல்லாத்தையும் வாங்கிக்கொண்டேன்... வயித்துபசியை விட வாசிப்பு பசி கொஞ்சமல்ல ரொம்பவே அதிகம் எனக்கு..மூணு நாள் பயணமாச்சே புக்'ஸ் இல்லாமலா ...நெவர்...
மூன்றரை மணிக்கு ஜி.டி(க்ராண்ட் டிரங்க்) எக்ஸ்ப்ரஸ் சென்னை டூ டெல்லி போர்டு மாட்டிக் கொண்ட மிக நீளமான ரயிலில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறினோம்.. குட்டையான T.T. நான் அவரை கொஞ்சம் டிசைனா பார்த்து தொலைச்சேனோ என்னவோ 'வாரங்கலில்(A.P) வந்தது வினை.. எங்களது டிக்கெட்டை பரிசோதித்த அவர் நம்ம எம்.பி.ஏக்கு பக்கத்து பெட்டியில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் எனக்கு இங்கேயே ஒதுக்கப்பட்டதாகவும் சொல்லி பன்னெடுங்காலத்துக்கு தொடரபோகும் எங்கள் நட்பை பிரிக்கமுயல, இது என்ன புது கரடி'ன்னு நினைக்கையில் எம்.பி.ஏ கெஞ்ச ஆரம்பித்துவிட்டான், நாமளும் கெத்த? மெயின்டெயின் பண்ண முடியுமா.. நானும் அவரிடம் சொன்னேன் ம்ஹீஹீம் கெஞ்சினேன்.. கடைசி ஒப்பந்தப்படி என் ஜீன்ஸில் இருந்த ஒரு நூறும்,ஒரு ஐம்பதும் T.T யின் கருப்புக் கோட்டுக்குள் போனதும்தான் ஒரே பெட்டியில் இருக்கச்சொல்லி டிக்கெட்டில் என்னமோ கிறுக்கினார்..
அதே வாரங்கல் ஸ்டேஷனில் இட்லியோடு சட்னியையும் வாங்கி சாப்பிட்டோம் இட்லி பஞ்சுபோலில்லாமல் சுமாராய் இருந்தாலும் சட்னியில் இருந்த காரம் நாக்கில் துளையை போடாத குறை கண்ணு,மூக்கு எல்லாத்திலேயும் தண்ணி? வந்தது, ங்கொய்யால இந்த காரமும் பத்தாதுன்னு பக்கத்திலிருந்த பெருசு பொடியையும் தொட்டு சாப்பிட்டது எங்களுக்கு கிர்ர்ர்ர்ர்டித்தது..
இரண்டாவது நாள் எந்த கலகமும் இல்லாமல் மென்மையாகவே போனதுதான் என்னவோ மூன்றாவது நாளின் தொடகத்தில் நாக்பூரைத் தாண்டியதும் அப்பர் பெர்த்தில் படுத்திருந்த என் காலில் யாரோ தட்டுவது போல் இருந்தது யார்ரா அது'ன்னு எழுந்து பார்த்தா அந்த ஊர் திருநங்கைகள், கட்டாயமாக? பத்து ரூபாய் கொடுத்திடனுமாம் கத்தி'யெல்லாம் வைத்திருக்கிறார்கள் எதுக்கு வம்பு'ன்னு பத்து ரூபாயை கொடுத்தேன் நம்ம ஊர்'ல ரேஷன் கார்டு வரை வந்தாச்சு அங்கே இன்னமும் பிச்சை அதுவும் கத்தியோடு?...என்னங்கடா இது..
எப்பாடு பட்டாலும் ஒரு பாடு பட்டு ஒரு/பல வழியாக டெல்லியை மிகுந்த பெருமூச்சோடு ஜி.டி.எக்ஸ்ப்ரஸ் அடைந்தது.எங்களை வரவேற்க வந்தவரை நாங்க தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று, டெல்லி குளிருக்கு போட்ட மஃப்ளரை குளிர் இல்லாத சமயங்களிலும் போடுவார் போல ஏதோ ஒரு கலரில் சட்டையும் போட்டிருந்தார் கையெல்லாம் குலுக்கிவிட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போதே எல்லாம் கரெக்டா எடுத்துட்டு வந்துட்டீங்களான்னு ரொம்ப மொட்டையா கேக்கவும்,
'எல்லாம்'னா' யாரு முந்துவா எம்.பி.ஏவேதான்..
'பாஸ்போர்ட்,சர்டிபிகேட் அதெல்லாம்ப்பா'
'அதெல்லாம் கரெக்டா எடுத்துட்டு வந்தாச்சு ஆமா ரெண்டு நாள்'ல வேல முடிஞ்சிரும்'ல' நான் கேட்கவும்,
'உங்க அதிர்ஷ்டம் ஒரு நாளையிலும் முடியலாம்,துரதிர்ஷ்டமான மூணு நாள் கூட ஆகலாம்'
அதிர்ஷ்டத்துக்கும் நமக்கும் தமிழ்நாடு டூ டெல்லியை விட தூரமாச்சே'ன்னு வயித்துல கிலி'யை உண்டுபண்ணவும்,
'கொஞ்சம் சீக்கிரம் வேலையை முடிச்சு கொடுத்திருங்களேன்'
அதுக்கு தலைமுறை தலைமுறையாய் தமிழர்கள் சொல்லும்
'என் கைல என்னப்பா இருக்கு'
அதோடு பேச்சுகளுக்கு ஷட் டவுன் பன்னிட்டு டெல்லியை வேடிக்கை பார்த்து கொண்டு வந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவர் தங்கும் இடம் வந்தது..
இறங்கியதும் சுற்றி நோட்டமிட்டேன் வட நாட்டு சாயல் அனைத்தையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த ஏரியா.. தூர்தஷனில் எப்பவோ ஏதோச்சயாய் பார்த்த மனிதர்கள் இப்ப நேரில்..
மாடி போர்ஷனில் வழிகாட்டி குடியிருந்தார்.பேச்சுலராய் இவர் இருக்க,கீழ் போர்ஷனில் ஒரு பேமிலி குடியிருந்தது..இங்கே அப்படி நடக்குமா பேச்சுலர்'ஸை அந்த ஏரியாவிலேயே இருக்கவிடமாட்டார்கள்.
மூன்று பேருக்கு ஏத்த ரூம்தான் அது மூன்று பேரும் ஒல்லியாக இருந்ததால் தெரியவில்லை கொஞ்சம் 'FAT' ஆன ஆள் இருந்தால் சிரமம்தான். பாத்ரூம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை அதனால் குளியல் என்ற சமாச்சாரத்தை 'பாஸ் செய்துவிட்டு தூங்க போய்ட்டேன் எங்கே போறது தூங்கிட்டேன்..
அந்த நாள் ரெஸ்ட் என்பதால் பயணகளைப்பில் தூங்கியிருந்தோம் வழிகாட்டி மட்டும் எழுந்து பக்கத்தில் மார்க்கெட்டுக்கு போய் காய்கறி இன்னம்பிற ஐயிட்டங்களை வாங்கிட்டு வந்தார் எனக்கு கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது.
நல்லா தூங்குனிங்களான்னார்'
'ம்' என்றேன்..
'நீங்க தூக்கத்திலேயே பேசுறீங்க,உங்க கூட வந்தவரும் பகல் ரயில்ல சாப்பிட்டது முதற்கொண்டு தூக்கத்திலேயே ஒரு பயணம் போயிட்டாரு'என்றார்..
எனக்கு புது இடங்களில் தூக்கத்தில் புலம்பல் வரும் என்று அவர் சொல்லித்தான் அன்றைக்கு தெரிந்தது..சகவனை எழுப்பிவிட்டு சாப்பிட்டோம் கீழிருந்து ஒரு சிறுவன் வந்து 'ஹிந்திலே ஏதோ சொல்லிட்டு போனான் வழிகாட்டியிடம்.. ஊரு,பேரு,குடும்பம் எல்லாத்தையும் பரஸ்பரம் கேட்டுக்கொண்டோம்..கேரம்போர்டு இருந்தது மிக வசதியாப்போனது அன்றைய பொழுது..
அடுத்த நாள் காலையிலேயே ரெடியாகி சான்றிதழ்,பாஸ்போர்ட் சகிதமாக கிளம்பினோம் அடுத்த நாற்பது நிமிடங்களில் போய் சேர்ந்த இடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டிடத்தில் இடதுபுறத்தில் இருந்த 'அட்டஸ்டேஷன்' பணி நடைபெறும் வளாகம் அங்கே சென்றதும் அதிர்ச்சி... அது என்ன்.ன்ன்ன்னா
க்யூ நின்றது அது க்யூ'வா இல்ல மினி ஜி.டி. எக்ஸ்ப்ரஸ்ஸா எவ்வளவு பெருசு... யய்யாடி..
'இவங்களெல்லாம் நேத்து நைட்டே வந்திருக்கனும்'என்றார் வழிகாட்டி.
'ஙே..'
பாரத மாதாவே ஆச்சரியப்படும் அளவுக்கு வகைதொகையாக இந்தியாவின் அனைத்து மொழியினரும் உலாவிய இடம் அனேகமாக எனக்கு தெரிந்தது இதுவாகத்தானிருக்கும்..லைனில் நின்றுக்கொண்டிருந்தோம்.வழிகாட்டி அலுவலகத்திற்க்குள் சென்றுவிட்டார்.அங்கேயே ஒருவர் டீ விற்பனை செய்துக்கொண்டிருந்தார்..
நேரம் ஆக ஆக க்யூ'வில் முன்னேற்றம் இருந்தது..
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
1) சான்றிதழ் போலி' என்று தெரிந்தால் அப்படியே தோளில் கையைப் போட்டு கூட்டிப்போய் விடுவார்கள்..டெல்லி 'களி' எப்படின்னு? தெரியவில்லை..
2) 12:30 மணிக்கு அட்டஸ்டேஷ' அலுவலக கவுண்ட்டர்கள் மூடிவிடுவார்கள்..திரும்பவும் 2:30 மணிக்கு திறப்பார்கள் 12:25'க்கு கவுண்ட்டர் கிட்ட நிற்பவருக்கு மோட்சம்தான்..
3) முதலில் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் சான்றிதழ் 'அட்டஸ்ட்'(ஒரிஜினல்தானா) செய்யப்பட்டு,அதுக்கப்புறம் 'வெளியுறவு அமைச்சகத்தில் சான்றிதழை சமர்பிக்க அங்கு மூணு மணி நேரமோ,அல்லது ஐந்து மணி நேரமோ வெயிட் பண்ண அவர்கள் பங்குக்கு சான்றிதழின் முதுகில் ஒரு முத்திரையை குத்துவார்கள். கடைசியாக துபாய் தூதரகத்தில் இந்திய ரூபாய் 500 ஐ செலுத்திவிட அவர்கள் நாட்டின் தபால்தலையை சான்றிதழின் முதுகில் ஒன்னுக்கு இரண்டாக ஒட்டிவிடுவார்கள்..அத்தோடு முடிந்தது வேலை..அடுத்து ரயில் ஏற வேண்டியதுதான் பாக்கி..
யார் செஞ்ச நன்மையோ எங்களுக்கு சான்றிதழ் அட்டஸ்ட் செய்யும் வேலை எந்தவொரு தொல்லையும் இல்லாமல் இனிதே முடிந்தது..வழிகாட்டிக்கு டாட்டா காட்டிவிட்டு திரும்பவும் ஜி.டி எக்ஸ்பரஸ்ஸிலேயே சென்னை வந்து சேர்ந்தோம்.நம்ம எம்.பி.ஏவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம் அப்போது,ஆனால் அவன் நம்பரோ முகவரியோ எதுவுமே அச்சமயத்தில் வாங்கவில்லை..
அதிமுக்கியமான டிஸ்கி: 'டெல்லி எருமை டெல்லி எருமை'ன்னு சொல்றாய்ங்களே எப்படியாவது பார்த்திரலாம் என்றால் 'எருமை படம் போட்ட போஸ்டர் கூட பார்க்கலை' என்பதுதான் கடும் சோகம்... இனிமே யாராவது எருமையை டெல்லி எருமைன்னு சொல்லி வித்தீங்க...
- அதிரை இர்ஷாத்
13 Responses So Far:
ஏதோ வெகுஜன இதழில் பயணக்கட்டுரை படிக்கும் உணர்வு. நம் ஊர் ஆட்கள் இப்படியெல்லாம் எழுதுகிறார்களே என்ற பிரமிப்புடன் தன் இந்த பின்னூட்டமிடுகிறேன். வெகு நேர்த்தியான professional தரத்தோடு எழுதப்பட்ட பயணக்கட்டுரை. Keep it up இர்ஷாத் பாய்.
அஸ்ஸலாமுஅலைக்கும். நல்லா வெயில் போட்டு தாக்கும் போது நல்லா ஏர்கன்டிஸன் போட்ட ரூமில் சுத்தமான? கண்ணாடி கிளாசில் சரியான அளவில் ஐஸ்கட்டிகளை மிதக்க நன்றாக உறிஞ்சி குடித்த நன்னாரி சர்பத் போல மணத்துடன் கூடிய சுவையான ஆக்கம்.ஆங்காங்கே நையில் வருத்த முந்தரி தூவிய கருவேப்பிலை நன்கு பொறித்த மிச்சர் போல நகைச்சுவை பறிமாறல்.இப்படி படிக்கும் போதே நம்மையும் ஊர்சுத்திகாட்டிய லாவகம் நாமும் உடன் பயணப்பட்டதாய் நினைக்க தோன்றும் எழுத்தாற்றல் அருமை. தரமான எழுத்தாளருக்குறிய எல்லா தகுதியும் இந்த தம்பிக்கு உள்ளது.வாழ்துக்கள்.
நேர்மையா [ ஹலாலான முறையில் ] சம்பாதிக்க எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கு...நம் ஊர் பெண்கள் பட்டுக்கோட்டையிலும் , தஞ்சாவூரிலும் ஜவுளிக்கடையில் பண்ணும் அலம்பல் ஸ்ஸப்பா..முடியலெ...
இர்ஷாத் இதை உங்கள் வலைத்தளத்தில் முன்பு படித்திருந்தாலும்..எழுத்து மறுபடியும் படிக்க வைத்தது. இந்த ஆக்கத்தில் ஒரு டெஸ்ட் வைத்தாலும் நான் நிச்சயம் பாஸ் செய்து விடுவேன்.
இவரும் அந்த ஏஜண்ட் மாதிரிதான் - நீங்க் இங்கேயே இருந்து வாசிச்சுகிட்டு இருங்க என்று சொல்லாமல் சொல்லிட்டு நாம போயிட்டு வந்த பிரம்மை ஏற்படுத்துவதில் இவர் கில்லாடிதான் !
ஹூமருக்கும் இவருக்கும் நிறைய கொடுக்கல் வாங்கல் இருக்கு !
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ;இர்ஷாத் தங்களுடைய மூன்று நாள் தொடர் அலுப்பு பயணத்தில் கூட அழகான எழுத்து நடை .சும்மாவா சொன்னாங்க நம்ம அப்துல் ரஹ்மான் பட்டினத்தை .ஆட்டை கழுவி ஆக்குன ஊருன்னு .அசந்து விடாமல் தொடருங்கள்.வீரநடை போட. வாழ்த்துக்கள்.
// ஜாகிர் காக்கா சொன்னது
நேர்மையா [ ஹலாலான முறையில் ] சம்பாதிக்க எவ்வளவு கஸ்டப்பட வேண்டியிருக்கு...நம் ஊர் பெண்கள் பட்டுக்கோட்டையிலும் , தஞ்சாவூரிலும் ஜவுளிக்கடையில் பண்ணும் அலம்பல் ஸ்ஸப்பா..முடியலெ...//
பட்டுக்கோட்டை,தஞ்சாவூரையும் தாண்டி திருச்சி போன்றபெரும் நகரங்களில் நம்மவூர் வீம்பிகள் பண்ணக்கூடிய அட்டுழியம் சொல்லி மாளாது .இதற்க்கு யார் காரணம் ?
இவ்வளவு கஷ்டப்பட்டு போய் நொந்து வெந்து அட்டஸ்டேஷன் வாங்குவதுக்கு பதில் அவங்க கேட்ட பணத்தை கொடுத்துடலாம்னு தோணிருக்குமே, அமீரகத்துலே 14 நாளில் 525 திர்ஹாம் செலவில் அட்டெஸ்டேஷன் வந்துடும்.
இர்ஷாத்தின் எழுத்து எப்பவுமே வித்தியாசமாகவும் சுவராஸ்யமாவும் இருக்கும்..
வசிப்பின்போதான பயணத்தைவிட வாசிப்பின்போதான பயணம் ரெட்டிப்பு சுகம்.
ஜாகிர் கேட்டு வாய் மூடல டெஸ்ட்டுக்கான கேள்வியும் பதியப்பட்டுவிட்டது.
பதில் ஒரு மார்க்குக்கல்ல பத்து மார்க்குக்கு என்று சொல்லிவிட்டால் ஜாகிர் பாய் நிறைய எழுதவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுவிடுவார்.
நமக்கு வேட்டை.
இர்ஷாத், நிறைய பயணம் செய்யுங்கள் நிறைய எழுதுங்கள்.
இவ்வளவு கஷ்டப்பட்டு போய் நொந்து வெந்து அட்டஸ்டேஷன் வாங்குவதுக்கு பதில் அவங்க கேட்ட பணத்தை கொடுத்துடலாம்னு தோணிருக்குமே, அமீரகத்துலே 14 நாளில் 525 திர்ஹாம் செலவில் அட்டெஸ்டேஷன் வந்துடும்.//
சகோ. மாலிக் இது நடந்தது 2002 ல்,, அப்ப இப்பவுள்ள வசதியெல்லாம் நஹி...
"அமீரகத்துலே 14 நாளில் 525 திர்ஹாம் செலவில் அட்டெஸ்டேஷன் வந்துடும்"
ஆனால் நமக்கு டில்லிக்கு இப்படி தான் போக வேண்டும் என்று சொல்லித்தருவதர்க்கு ஏஜெண்டுக்கு கமிஷன் தரவேண்டுமே அது மிச்சம்மில்லையா வாழ்த்துக்கள் அன்பரே!
To Bro. லெ.மு.செ.அபுபக்கர்
//பட்டுக்கோட்டை,தஞ்சாவூரையும் தாண்டி திருச்சி போன்றபெரும் நகரங்களில் நம்மவூர் வீம்பிகள் பண்ணக்கூடிய அட்டுழியம் சொல்லி மாளாது .இதற்க்கு யார் காரணம் ? //
ஆண்கள் மாதிரி தோற்றமளித்து பெண்கள் மாதிரி நடந்து கொள்ளும் ஆண்கள்தான்.
மெயின் ரோட்டிலும், வெளியூரிலும் இப்படி தாளிக்கும் இவர்கள் வீட்டுக்குள் வந்தால் ஏன் திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகல் மாதிரி முழிக்கிறார்கள் என தெரியவில்லை.
அஸ்ஸலாமு அலைக்கும்.
// ஜாகிர் காக்கா சொன்னது
மெயின் ரோட்டிலும், வெளியூரிலும் இப்படி தாளிக்கும் இவர்கள் வீட்டுக்குள் வந்தால் ஏன் திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகல் மாதிரி முழிக்கிறார்கள் என தெரியவில்லை. //
அரைகுறையா தாளிச்சிட்டு வந்துட்டோமே யாராவது பார்த்திருந்தால் புகழ் தூற்றுவார்களே! என்கிற பயமில்லை தைரியம்தான்.அவர்கள் முழிப்பதற்கு காரணம்.
நல்ல எழுத்து நடை
Post a Comment