Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ரிட்டர்ன் டிக்கெட் 28

அதிரைநிருபர் பதிப்பகம் | September 08, 2011 | , , ,

இருக்கை ஒட்டிய ஜன்னல் வழியோ
இறக்கை வெட்டும் வின்னின் வெளியோ
விமான எயிலிரான்களின் விசையோ
வான எழில்முகில்களின் அசைவோ

விடுப்பு முடிந்து
வேலைக்குத் திரும்பும்
எனக்கு
எதிலும் லயிக்கவில்லை
என்
இதயம் களிக்கவில்லை

முப்பத்தி யொரு நாட்கள்
முத்தமழை பொழிந்த
மகளின் முகம் வந்து
மனத்தை கொல்லுதையா
மழலை வெல்லுதையா

ப்பிங்க் நிற பார்பியும்
அதே நிறத்தில்
பள்ளிக்கூடப் பையும்

பென்சில் பொவுச்சும்
அழி ரப்பரும்
ட்டாமின் வாயில் விட்டு
பென்சில் சீவும் ஷார்ப்பனரும்

தோரா அணிந்த ஷூவும்
தேரா பஜாரில்
ஏறி இறங்கி வாங்கிய
வெளிர் நீல ப்பஃப் கவுனும்

மதீனா மார்க்கெட்டில்
மணிக்கணக்கில் தேர்ந்தெடுத்த
ச்சாக்லேட்டும் பிஸ்கட்டும்

தமிழ் பஜார்
தலை ஸ்கார்ஃபும்
மினுக்கும் கல் வளையும்

எல்லாம் கொடுத்து
இன்முகம் ரசித்து
விடுப்பு முடிந்து
விடைபெறும் நாளினில்

தன்னுடன் இருக்க வேண்டி
என்னிடம் கெஞ்சிய
மகளுக்குச் சொன்னேன்
மறுபடியும் அவளுக்கு
பொருள் வாங்கச் செல்வதாக.

மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”


- சபீர்
Sabeer abuShahruk

28 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பெண் மகவு என்றும் பொன்(தானே) !

மகளின் ஏக்கம் கிழித்துப் போட்டது மனசை !

மகளொன்று(ம்) வேண்டுமென்று ஏங்கும் மனசுகளும் ஏராளம் !

//தன்னுடன் இருக்க வேண்டி
என்னிடம் கெஞ்சிய
மகளுக்குச் சொன்னேன்
மறுபடியும் அவளுக்கு
பொருள் வாங்கச் செல்வதாக.//

பிஞ்சோடு கொஞ்சியது மனமோ...
அவள் பஞ்சாக மாறியதும் நெருப்பை நெருங்க விடாமல் மலராக அலங்கரிக்க காத்திருக்கும் வரை தொடரும் (வீடு கட்டி கொடுக்கும் வரையிலும்) இந்தப் பயணம் - இது(வும்) அசலே !

ஒரு சின்ன டவுட் : ரிட்டர்ன் டிக்கெட் எங்கே எடுத்தது, ஊரிலா ? வெளிநாட்டிலா ? :)

வரிகளுக்கு அலங்காரம் செய்ய, கிரவ்ன்னுரை வந்திடும் மின்னல் வேகத்திலே !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சூப்பர் கவியரசே!

//நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”//
அருமை. ஏக்கம் தரும் பயணத்தின் கடைசி நேர கண்ணீர் வரிகள்.

கடந்த பெருநாளில் நண்பர் ஒருவர் ஒருவருசம் கழித்து இன்டெர்னெட்டில் பேசும்போது மூண்றரை வயது மகன் கேட்ட வார்த்தை.
"போனில் பேசும் வாப்பா நீந்தானா?"

அதிரைபூங்கா said...

/மகளின் முகம் வந்து
மனத்தை கொல்லுதையா/
-பணம் சம்பாதிப்பதற்காக தன் குடும்பத்தை பிரிந்து வளைகுடா சென்று, தனிமையில் வாடும் ஒவ்வொரு ஆணின் உள்ளக்குமுறலை தெளிவாக உணர்த்தியது,இக்கவிதை வரிகள்.

sabeer.abushahruk said...

//"போனில் பேசும் வாப்பா நீந்தானா?" //

இவை வார்த்தைகளா குத்தீட்டிகளா?

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சபீர்!

இந்த கவிதையை படித்ததும்
என் மகள்கள் மணக்கண்முன்
வந்து மனதை கலங்க வைப்பது
ஞாபகத்திற்கு வருகிறது!

ஊர் வர தாமதமானால்
உங்கள் முதலாளிக்கு
பிள்ளைகள் இல்லையா?
என் பிள்ளைகள் வரச்சொல்கிறார்கள்
லீவு கொடு என்று கேட்கச் சொல்வார்கள்!

ஏன்; உங்களுக்கு
ஒரு மாதம் மட்டும் லீவு தருகிறார்!
மூன்று நான்கு மாதம் என்று ஏன்
லீவில் தாங்கள் வருவதில்லை!
உங்கள் முதலாளி மட்டும்
அவர் பிள்ளைகளோடு சந்தோஷமாக
இருக்கிறாரே!

எங்களுக்கும் உங்கள் கூட இருக்க
ஆசை இருக்காதா?
என்று கேட்பார்கள்
என் மகள்கள் கேட்கும் கேள்விகள்
மனதிற்கு கலக்கமாக இருக்கும்
அல்லாஹ்விடம் துஆச் செய்மா
உங்களோடு வந்து நிரந்தரமாக
வந்து இருப்பதற்கு
என்று கனத்த இதயத்துடன் சொல்வேன்!


வல்ல அல்லாஹ்
நம் அனைவருக்கும்
மனைவி பிள்ளைகளோடு
வாழும் பாக்கியத்தை
வழங்கி நல்லருள் புரியட்டும்!

crown said...

இருக்கை ஒட்டிய ஜன்னல் வழியோ
இறக்கை வெட்டும் வின்னின் வெளியோ
விமான எயிலிரான்களின் விசையோ
வான எழில்முகில்களின் அசைவோ
விடுப்பு முடிந்து
வேலைக்குத் திரும்பும்
எனக்கு
எதிலும் லயிக்கவில்லை
என்
இதயம் களிக்கவில்லை

--------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
இருக்கையில் இருக்கும் உடலும்
இருத்தி, நம் மனதை நிறுத்தி
வைக்க வண்ண அழகும் சூழ்திருந்தாலும்
நம்மை இருத்தாமல் தூக்கி பறக்கும்
எண்ணச்சிறகு விமானத்தின் வேகத்தைவிட
அதிகம் , ஆயிரம் காட்சி பின்னோக்கிச்செல்லும்.

crown said...

முப்பத்தி யொரு நாட்கள்
முத்தமழை பொழிந்த
மகளின் முகம் வந்து
மனத்தை கொல்லுதையா
மழலை வெல்லுதையா.
---------------------------------
முப்பத்தி யொரு நாளும் பொழிந்த
அன்பு மழலையின் முத்தமழையில்
என்றும் மலர்ந்து இருந்ததே நம் முகமலர்
இன்று- "அந்த மழையின் சாரல்கூட இல்லாமல்
சவரம் செய்த முகமும் கலவரம் வந்த இடமாய்
மாறி அந்த மாரி(மழை) பொழிந்த
முகமலர் வாடி வதங்கியதே"!

crown said...
This comment has been removed by the author.
crown said...

மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”
--------------------------------------------------
நித்தம் அணையாமல் எறிந்து கொண்டிருக்கும் தீக்குச்சி அது யாருமல்ல நாம் தான். நாம் அவர்களுக்கு சந்தோசம் தரும் வெளிச்சம் பத்தவைப்பதாக என்னிக்கொண்டு அவர்களுக்கும் தீயைபற்றவைப்பதும் அனையாத நெருப்பாய் எறிந்துகொண்டிருப்பதும். இப்படி நம் தலைக்குமேல் நெருப்பும்,பொருப்பும் வாட்டி வதைக்க ஒத்தகாலில் பிடிவாதமாய் இருக்கிறது நம் மொத்த உடம்பும்.தவமா? இல்லை இது தவறா? வென்றார் சொல்வாரோ? வென்றவரெல்லாம் சுயனலமியாக இருப்பதால் இந்த நிலை தீர்த்திட வல்ல அல்லாஹ்வை வேண்டி நிற்போமாக. கவிஞரின் மனற்கேனியிலிருந்து இன்னும் பல நல்லூற்றூ வந்து கொண்டிருக்கிறது. எடுத்து குடித்து களைப்பாறும் அ/ நி வாசகர்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துக்கள்.

crown said...

crown சொன்னது…

எல்லாம் கொடுத்து
இன்முகம் ரசித்து
விடுப்பு முடிந்து
விடைபெறும் நாளினில்

தன்னுடன் இருக்க வேண்டி
என்னிடம் கெஞ்சிய
மகளுக்குச் சொன்னேன்
மறுபடியும் அவளுக்கு
பொருள் வாங்கச் செல்வதாக.

---------------------------------------------------------
வாரிசுக்கு சேர்கிறேன் ,அதன் எதிர்காலத்தின் சந்தோசத்துக்கு சேர்கிறேன்
என சொல்லி சொல்லியே பொரு சேர்க்க அந்த பொருள் பொதிந்த உறவை விட்டும். அன்பை மட்டுமே எதிர்பார்கும் வாரிசுன் நிகழ் கால சந்தோசம் புதைத்துவிட்டு இன்னும் நீளும் நம் பயணம் என்று நிலைகொள்ளும்? பொருள் வேண்டி போகும் நாம் நம் உயிரிலும் மேலோனோர் வேண்டும் கோரிக்கையை முழுதாய் ஏற்கும் காலம் எப்போது? அப்போதே கஞ்சை குடிச்சாலும் சுபிட்சமாய் வாழமுடியும்.ஆனால் என்று முடியும் இந்த துயரம்? இதற்கு பயணப்படும் நாம் மட்டுமா துணிந்து முடிவெடிக்கவேண்டியதா நமக்கு துணையாய் வந்தவளும் ஏற்கனும்.

Unknown said...

மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா
----------------------------------------------------------
கண்களில் கண்ணீர் மழை............!

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

என் மகள் ஒரு 5 நாளைக்கு வெளிநாடு போக விடாமல் என்னை அநியாயத்துக்கு என் கம்பெனியில் பொய் சொல்ல வைத்தவள்.

உலகம் முழுக்க பெண் குழந்தைகள் தனது தந்தையை இப்படித்தான் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நாமும் எல்லோருக்கும் 'டிமிக்கி" கொடுத்துவிட்டு பெற்றமகளிடம் சந்தோசமாக தோற்றுவிடுகிறோம்.

Yasir said...

கவிகாக்கா....வந்து இறங்கி ஊர் நினைப்புகளும் அன்பு மழை பொழிந்தவர்களின்,ஆத்திரத்தை வரவழைத்தவர்களின் நினைவுகளும்...கேஸ் (cache)மெமரியில் இருந்து கொண்டு இருக்கும்போது
,பலபேர் அனுபவித்து கொண்டும் இருக்கும் இந்த வேதனையை தங்களின் கம்பீர வார்த்தைகளில் வடித்து உள்ளதையும்,கண்களையும் கலங்க வைத்து விட்டீர்கள்.....எப்ப சந்திப்பது காக்கா ???

Yasir said...

//நாமும் எல்லோருக்கும் 'டிமிக்கி" கொடுத்துவிட்டு பெற்றமகளிடம் சந்தோசமாக தோற்றுவிடுகிறோம்// 1000% கரெக்ட் காக்கா...

Shameed said...

//''எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”//


இதே பதிலைத்தான்
என் மகளும் சொன்னால்
அவள் சொன்னபடியோ
இப்போது என் கூடவே இருந்து
கொண்டு எதுவும்
வேண்டாம் என்று
சொன்னவள் இப்போது
என்னை தினமும்
ஜெய்த்து விடுகின்றாள்!

அபு ஆதில் said...

மழலை மருண்டது
நொடிகளில் தெளிந்தது
கீழ்ஸ்தாயில் கேட்டதொரு
கேள்வி
கிழித்துப் போட்டதென் மனத்தை:
“எனக்கு
நீ தரும்
எதுவும் வேண்டாம்
என்னோடு
இருந்துவிடேன் வாப்பா!”

சகோதரர் crown சொல்வது போல்

கவிஞரின் மனற்கேனியிலிருந்து இன்னும் பல நல்லூற்றூ வந்து கொண்டிருக்கிறது. எடுத்து குடித்து களைப்பாறும் அ/ நி வாசகர்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

யாசிர்,
வெல்கம் பேக். வி ஆல் மிஸ்ஸிட் யு ஹியர் இன் ஏ.என்.

இன்றா வந்தீர்கள்? குழந்தைகள் சிரமமில்லாமல் பயணித்தனரா? நீங்கள் பயணக்கலைப்பு நீங்கியதும் அழைத்தால் வருவேன்; வருதாக இருந்தாலும் அழைக்கிறேன்.

ரஃபியைப் பார்த்து நாட்பட்டுவிட்டதால் உங்களைச் சந்திக்கும்போது ரஃபி உடன் இருக்கும் சாத்தியம் உண்டா? (இன்று வெள்ளி. உங்களைப் பார்க்க அவர் வரும்போது நானும் வருகிறேனே?

sabeer.abushahruk said...

//மகளொன்று(ம்) வேண்டுமென்று ஏங்கும் மனசுகளும் ஏராளம் !//

அதிரை நிருபரை எதற்கெல்லாம் பயன் படுத்திக்கொள்கிறார்கள் பாருங்களேன்.

ம்...ம்... 
தூது வென்று... "(ம்)" கிடைக்க என் வாழ்த்துகளும் துஆ வும்

sabeer.abushahruk said...

// ஏக்கம் தரும் பயணத்தின் கடைசி நேர கண்ணீர் வரிகள்.//

எல்லாம் தரும் நம் நம் பிள்ளைக்கு தரவியலாத ஒரே விஷயம் அது கேட்டதுதான் இல்லையா?
                    *****
        
//தனிமையில் வாடும் ஒவ்வொரு ஆணின் உள்ளக்குமுறலை தெளிவாக உணர்த்தியது,.//

நன்றி. 
அதிரை பூங்கா எனும் பெயர் ஏனோத் தெரியவில்லை ரொம்பவும் மனசுக்குப் பிடிக்கிறது. அதிரை... பூங்காவானால்? 
                     *****

//நம் அனைவருக்கும்
மனைவி பிள்ளைகளோடு
வாழும் பாக்கியத்தை 
வழங்கி நல்லருள் புரியட்டும்!//

...ஆமீன்!
                  *******

Muhammadh said...

மாஷா அல்லாஹ், அல்லாஹ் த ஆலா ஷபீர் காக்காவின் கவி திறனை மென்மேலும் அதிகப்படுத்தி தருவானாக ஆமீன் !!!
என்ன அருமையான ஆசையான அழகான வரிகள் ஆழமான அர்த்தம்,ஏக்கம் இதைப் போல் தான் அனைத்து வெளிநாடுகளில் வாழும் தந்தைகளுக்கும் இருக்கிறது என்பதை சொல்லாமல் கவிதையாக்கி விட்டார்கள். மாஷா அல்லாஹ்..

sabeer.abushahruk said...

//எண்ணச்சிறகு விமானத்தின் வேகத்தைவிட
அதிகம் //
அதைத்தான் விரித்துப் பறந்தேன்,  வேகம் கொணர்ந்ததோ சோகம்
               *******

//சவரம் செய்த முகமும் 
கலவரம் வந்த இடமாய்
மாறி 
அந்த மாரி பொழிந்த முகமலர் 
வாடி வதங்கியதே"!//

தனக்கு மிகப் பிடித்தவற்றைவிட தந்தையின் அருகாமையே வேண்டுமெனும் பிஞ்சு நெஞ்சம். லவ்லி.
                 *******

//நாம் அவர்களுக்கு சந்தோசம் தரும் வெளிச்சம் பத்தவைப்பதாக என்னிக்கொண்டு அவர்களுக்கும் தீயைபற்றவைப்பதும்//

சிந்தித்துப் பார்ப்போமா?
                 *******

//பொருள் வேண்டி போகும் நாம் நம் உயிரிலும் மேலோனோர் வேண்டும் கோரிக்கையை முழுதாய் ஏற்கும் காலம் எப்போது//? 

அப்போது விடியும் அழகான நாட்கள்
                    *******

chinnakaka said...

திருச்சியில் விமானம் ஏறி கொழும்பில் தரையிரங்கி அடுத்து ஏறும் விமானத்துக்கு காத்திருக்கும் சில நொடிகள் கவிக்காகாவின் கவிதையை வசித்தவுடன் ஏறும் விமானம் மீண்டும் திருச்சியில் இறங்காதோ என்ற ஏக்கம் கண்மூடினால் வந்து நிற்பதோ குழந்தைகளின் எதிர்காலம், வழ்க்கையை தொலைத்து வாழ்வதாராத்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் குழந்தைகளின் கணவுகள் மெய்பட! பயண்திற்கு ரிட்டன் டிக்கட் உண்டு வாழ்க்கைக்கு கிடைக்கும?

sabeer.abushahruk said...

//கண்களில் கண்ணீர் மழை............!//
கனவுகள் தங்கவேண்டிய கண்க்களில் கண்ணீர் தேங்கும் நிலைதான் மாறுமோ?
                   *******

// பெற்றமகளிடம் சந்தோசமாக தோற்றுவிடுகிறோம்.//

மற்றொரு கோணத்தில்... ஜெயித்து விடுகிறோம்?
                  ********

//பலபேர் அனுபவித்து கொண்டும் இருக்கும் இந்த வேதனை//

நிச்சயம் ஓர்நாள் நீங்கியே தேறனும்
                *******


//இப்போது 
என்னை தினமும் 
ஜெய்த்து விடுகின்றாள்!//
மாஷா அல்லாஹ்!
             ******

sabeer.abushahruk said...

// அ/ நி வாசகர்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள்.வாழ்த்துக்கள்.//

நானும்தான் கொடுத்து வைத்தவன் அபு ஆதில் இப்படியொரு ரசனைமிக்க வாசக வட்டம் வாய்த்ததற்கு.  நன்றி
                  *******

//இதைப் போல் தான் அனைத்து வெளிநாடுகளில் வாழும் தந்தைகளுக்கும் இருக்கிறது //

ஆமாம் முஹம்மத், விடியலுக்கு துஆச் செய்வோம்
                   *******

//கண்மூடினால் வந்து நிற்பதோ குழந்தைகளின் எதிர்காலம், வழ்க்கையை தொலைத்து வாழ்வதாராத்தை தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் குழந்தைகளின் கணவுகள் மெய்பட! பயண்திற்கு ரிட்டன் டிக்கட் உண்டு வாழ்க்கைக்கு கிடைக்கும?//

யதார்த்தமான உணர்வுகள். கேள்விக்குறிக்கு விடைதேடும் பொறுப்பு நமக்கெல்லாம் இருக்கிறது.

அப்படியே முன்பு திண்ணையில் வெளியாகிய இதையும் வாசித்து விடுங்கள்:

பிரியாவிடை:

பிரியா விடைகளும்
பிள்ளைகளுக்கு
முத்தங்களும்
என
வாழ்ந்து கொண்டிருந்தது
விமான நிலையம்

எட்டிய உயரத்தில்
கிட்டிய நெஞ்சில்
மகனை முகர்ந்தது
மூதாட்டி உம்மா

கடவுச் சீட்டு
அடங்கிய கைப்பை
முழங்கையில் தொங்க
கடைக்குட்டியை
கைகளில் ஏந்தி
வாப்பா
பயணம் சொல்ல
குழந்தை 
தானும் வருவதாகச்
சொன்னது.

எல்லாச் 
சொந்தங்களிடமும்
ஸ்பரிஷமோ 
பாஷையோ
விடைதர...

புன்னகை போர்த்திய
முகச் சோகமும்
புர்கா மூடிய
அகச் சோகமும்
கலாச்சார நாகரிக
கட்டுக்குள் நிற்க
மனைவியின்
கண்கள் மட்டுமே
முழுப்
பெண்ணாகிப் போக...

எல்லா வினாக்களுக்கும்
ஒரே விடையாய்
மெல்லத் தோன்றி
துடைப்பதற்குள்
சிந்தியது
உள்நாட்டுக்
கண்ணீர்த் துளியொன்று.

பிரியமானவளைப்
பிரிய மனமின்றி
பொதிவண்டி தள்ளி
விதி எண்ணிப் போக
தானியங்கிப் படிகளில்
தடுமாறி 
சுதாரிக்கும்போது
சிதறி விழுந்தது
வெளிநாட்டில் பிழைக்கும்
சபுராளி வாழ்க்கை!

Thanks to everyone who travelled with me in 'return ticket'
Thanks to adirainirubar. 

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

செவ்வானத்தில் மிதக்கும் விமானத்தைப் போல்.
வெளிநாட்டில் வாழும் வாப்பாமார்களை நினைவாகாயத்தில்
மிதக்க விட்டிருக்கும் உங்களுடைய கன்பார்ம் ரிட்டன் டிக்கெட்.
சூப்பர் காக்கா.

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு கேள்வியும் மனசை துளைக்கும் ஆனால் கருங்கல்லின்மேல் விழுந்த மழைத்துளிப்போல் மறுத்தும் மறக்கவும் செய்யும் பணம், இதெல்லாம் சகஜமென நினைக்கவும் செய்யும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கவிக்காக்கா,

நேற்று என் உறவினரும், தங்களின் பால்ய நண்பர்கள் மற்றும் சகோதரர்களான முனாஸ் மற்றும் மஹ்ரூஃப் ஆகியோரை தம்மாமில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. அச்சமயம் பல விசாரிப்புகளுடன் தாங்களை நினைவு கூர்ந்து விசாரித்து சலாம் சொன்னார்கள்.

என்னுடன் பணிபுரியும் சக ஊழியன் விடுமுறையில் சென்றுள்ளதால் கொஞ்சம் பணிப்பளு கூடி விட்டது. அதனால் இங்கு பின்னூட்டம் உடனுக்குடன் இட இயலவில்லை. தமிழில் "கண்டதையும் படித்தவன் பண்டிதனாவான்" என்பார்கள். அதுபோல் தான் "கவிக்காக்கா கண்டதை எழுதினாலும் அது கவிபாடும்" என்று புதுமொழியாக்கிக்கொண்டேன்.

"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்" என்பது போல் உங்கள் வீட்டு கேம்ரி கார் கூட கவிபாடுமோ? (அது தான் கவிக்காக்காவின் ரமழான் பாட்டு படிக்க‌ இட‌ம் கொடுத்த‌தோ?)

இது போன்ற‌ அனுப‌வ‌க்க‌விதைக‌ள் க‌ல்நெஞ்ச‌ம் கொண்ட எவ‌ரையும் கொஞ்ச‌ம் ஆட்டி அசைத்து விடும். அருமை காக்கா.

என் குடும்ப‌ம் சென்னை ம‌யிலாப்பூரில் இருந்த‌ ச‌ம‌ய‌ம் வீட்டின் மேலே (லைட் ஹவுஸிற்கு மிக அருகாமையில்) மிக‌வும் தாழ்வாக‌த்தான் அனைத்து உள்நாட்டு ம‌ற்றும் ப‌ன்னாட்டு விமான‌ங்க‌ள் ப‌ற‌ந்து செல்லும். மாடியில் நின்ற‌ வ‌ண்ண‌ம் ப‌ற‌க்கும் விமான‌த்தின் வால் ப‌குதி ந‌ன்றாக‌ தெரிவ‌தால் அது எந்த‌ நாட்டு/நிறுவ‌ன‌த்திற்கு சொந்த‌மான‌ விமான‌ம் என்று எளிதில் யாரும் சொல்லி விட‌ முடியும்.

நானும் ப‌ல‌முறை ச‌வுதியிலிருந்து சென்னை வந்திறங்கும் சமயம் தாழ்வாக பறக்கும் வேளையில் லைட் ஹ‌வுஸ், காந்தி சிலை, ஆல் இந்திய‌ ரேடியோ, போலீஸ் க‌மிஷ‌ன‌ர் ஆபீஸ் போன்ற‌ இட‌ங்க‌ளை தெளிவாக‌ பார்த்திருக்கிறேன். நான் விடுமுறை க‌ழிந்து ச‌வுதி திரும்பும் பொழுது ஒரு நாளுக்கு முன்பாக‌வே என் ம‌க‌ன் சொல்லி விடுவான். "வாப்பா நீ ச‌வுதியா ஃபிளைட்டில் தானே நாளை சவுதி போகிறாய்? நான் காலை ப‌த்து ம‌ணிய‌ள‌வில் வீட்டு மாடியில் கைக்காட்டி நிற்பேன். ஜன்னலில் எட்டிப்பார் என்னை பார்க்காமல் சென்று விடாதே" என்று சொல்வான். அதைக்கேட்கும் என் உள்ள‌ம் ப‌ல‌ஹீன‌மாகி ச‌ரி என‌ த‌லையாட்டி க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ர‌வ‌ழைத்து அவ‌னுக்கு மொள‌ன‌மாய் ப‌தில் சொல்லும்.

"திரும்பி வ‌ரும் ஒரு நாளுக்கு முன்ன‌ரே புல‌ம்ப‌ ஆர‌ம்பித்து விடுவான். வாப்பா நீ, போன‌ பிற‌கு என‌க்கு ரொம்ப‌ போர் அடிக்கும். உன்னைத்தேடுவேன் வாப்பா" என்பான். அந்த‌ ச‌ம‌ய‌ம் ஹிரோஷிமா, நாக‌சாகியில் ஒரு முறை தான் அணுகுண்டு வீச‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இவ‌ன் ஒவ்வொரு வார்த்தையிலும் இப்ப‌டி வீசி அன்பால் கொல்கிறானே என்று எண்ணிக்கொள்வேன்.

ஒரு த‌ட‌வை இங்கு திரும்பி வ‌ரும் ஒரு வார‌த்திற்கு முன்ன‌ர் நடந்த ஒரு ச‌ண்டையில் அவ‌னை கை நீட்டி லேசாக‌ அடித்து விட்டேன். அத‌ற்கு அவ‌ன் கோப‌ம் கொண்டு "போ, இனிமேல் உன்னைத்தேட‌ மாட்டேன் என்றான்".

பிள்ளைக‌ள் அன்பால் உருகுவ‌தும், கோப‌த்தில் அழுவ‌தும் எல்லாமே ந‌ம‌க்கு ஒரு வ‌ச‌ந்த‌கால‌ நினைவுக‌ள் தான் என்றெண்ணி ம‌ன‌சு ச‌ப்த‌மில்லாம‌ல் ச‌மாதான‌மாகிவிடும்.

அவ‌ன் ப‌ள்ளி சென்று அனுப்பி விட்டு வ‌ரும் பொழுதும் ப‌ள்ளியிலிருந்து பிற பெற்றோர்கள் போல் காத்திருந்து அவ‌னை திரும்பி வீடு அழைத்து வ‌ரும் பொழுதும் அவன் ஒவ்வொரு அசைவுக‌ளும் ர‌சிக்க‌க்கூடிய‌தாக‌த்தான் இருக்கும்.

க‌டைசியில் தான் என் வாப்பா என்னிட‌ம் சொல்லித்தெரிந்து கொண்டேன். "த‌ம்பீ, நீ சிறுவ‌னாக‌ இருக்கும் ச‌ம‌ய‌ம் ப‌ள்ளிக்கூட‌ம் சென்று வ‌ருவ‌தை பார்த்து ர‌சிப்பேன்". பிற‌கு உண‌ர்ந்து கொண்டேன் இது ந‌ம‌க்கு ம‌ட்டும் கிடைத்த‌ பொக்கிஷ‌ம‌ல்ல வாழைய‌டி வாழையாய் இறைவன் கிருபையில் எல்லாப்பெற்றோர்க‌ளும் க‌ண்ணால் ர‌சித்து உள்ள‌த்தால் ருசிக்கும் நிக‌வுழ்வுக‌ள் என்று வாழ்க்கைப்பாட‌த்தின் மிக முக்கிய‌ அத்தியாய‌மாக‌ இதை புரிந்து கொண்டேன்.

"சிறுசுக‌ள் வ‌ய‌தில் மூத்த‌ ந‌ம்மை வா, போ, நீ, நா என்று ம‌ரியாதை தேய்ந்து கூப்பிட்டாலும் அது ந‌ம‌க்கு வெண்சாம‌ர‌ம் வீசி, வெள்ளிக்குஞ்ச‌ம் க‌ட்டி, சிக‌ப்புக்க‌ம்ப‌ள‌ம் விரித்து சிறப்பான‌ வ‌ர‌வேற்பு அளிப்பதைப்போன்று தான் இருக்கும் அன்றும், இன்றும், என்றும்".

க‌டைசியாக‌, க‌ருத்துக்க‌ளையே க‌ட்டுரைக‌ளாக்கும் கைங்க‌ரிய‌ம் உங்க‌ள் க‌விதைக்குண்டு இறைவ‌ன‌ருளால் என்று சொல்லி என் சிறு உரையை நிறைவு செய்கிறேன்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

sabeer.abushahruk said...

அன்பிற்கினிய எம் எஸ் எம்:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பின்னூட்டம் என்கிற பெயரில் உங்களின் / கிரவுனின் உணர்வுகள் ஆக்கத்தையே பின்னிட்டு முன்னே மின்னுவதை என்னவென்று சொல்வது?

எனக்கு வாழ்வியல் உணர்வுகள் மற்றும் பால்ய நனவுகளைச் சொல்லவும் கேட்கவும் மிகவும் பிடிக்கும். அதனால்தான், ஒருமுறை உங்களைப்பற்றிச் சொல்லும்போது 'உங்கள் எழுத்துக்களை துட்டு கொடுத்து வாங்கவும் தயார் என்று" சொல்லியிருக்கிறேன்.

வேலைப்பளு இககுவாக என் துஆ.

முனாஸுக்கும் மஹ்ரூஃபுக்கும் வ அலைக்க அலைக்குமுஸ்ஸலாம்.
முனாஸுடன் பள்ளியில் படித்திருக்கிறேன் eன்றாலும் அதிகம் பழகியது மஹ்ரூஃபுடnதான்.

யாரோ மனிதநேயம் பற்றி கவிதை எzuதச் சொன்னார்கள் என்னிடம்... இதோ...

மனிதநேயம்:
மஹ்ரூஃப்

கவிதை அவ்வளவுதான். என்னைவிட இளையவnதான் என்றாலும் மஃரூபிடம் கற்க வேண்டியது ஏராளம் இருக்கு. இது அவனுக்கேத் தெரியாது. அவன் மனைவியும் என் மனைவியும்கூட நண்பிகள். 

மிக்க நன்றி.

எல் எம் எஸ் மற்றும் அப்துல் மாலிக்: ஜSaக்கல்லாh க்ஹைரா!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு