
... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.

உமர் அல்ஃபத்தைமில் பணியில் சேர்ந்து, குடும்ப விசா கிடைத்தும் அந்த நேரத்தில் இந்தியாவில் நிலவிய கெடுபிடி காரணமாக குடும்பம் வர ஓர் ஆண்டு தள்ளிப் போனதையும், திடீரென்று உமர் அபுதாபிக்கு மாற்றப் பட்டதையும், உமர் வாரம் ஒருமுறை என்னைப் பார்ப்பதற்காக துபாய் வந்து சென்றதையும், குடும்பம் வந்த பிறகு ஒவ்வொரு வியாழனும் நான் அபுதாபி சென்று விடுவதையும், எனக்குக் கதவு திறந்து விடுவதற்காக சிறுவர் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடி வருவதையும், சனிக்கிழமை காலை அபுதாபியிலிருந்து நான் என் துபாய் அலுவலகத்திற்குச் செல்லும்போது, உமரின் இரண்டாவது மகன் என்னை அண்ணாந்து பார்த்து, தன் இனிய மெல்லிய குரலில் ”பெரியப்பா! வரும் வியாழக்கிழமை வருவீர்களா?” என்று கேட்டு என்னை வழி அனுப்பி வைப்பதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
உமர் துபாய்க்கு மாற்றப்பட்டதும் பையன்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியையும், துள்ளளையும், தனிமை நோயால் வாடிக் கொண்டிருந்த உமரின் மனைவிக்கு மனத் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதையும், எங்கள் சகோதரிகளின் மக்கள் வருகையால் உமர் குடும்பம் மேலும் குதூகலத்தை அடைந்ததையும், அமீரகத்திலிருந்து நானும் உமரும் குடும்பத்தோடு ஹஜ் கடமையை நிறைவேற்றியதையும் அசைபோட்டுபார்க்கிறேன்!

நல்ல வேலை, டிக்கட் தேதி உறுதி செய்யப்பட்டது. குறிப்பிட்டபடி செப்டம்பர் 15-ல் புறப்பட்டோம். இந்த முறை எங்களிடம் பொருள்கள் அதிகம் இல்லை. விசாவை ரத்து செய்துவிட்டு வருவதால் விமான நிலையத்தில் குடியுரிமைப் பிரிவில் முத்திரை பெற்று எங்கள் நிறுன ஊழியரிடம் தர வேண்டும். நானும் உமரும் ஒரே ஜன்னல் வழியாகப் பாஸ்போர்டைக் கொடுத்தோம். தந்தை பெயர், ஊர் பெயர் எங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதிகாரி எங்களை ஏற, இறங்கப் பார்த்தார்! புத்திசாலி! புன்முறுவல் பூத்தார்! நாங்கள் முத்திரை பெற்ற தாள்களை எங்கள் நிறுவனங்களின் நபர்களிடம் கொடுத்து அவர்களிடமிருந்து விடை பெற்றோம்.
அனுமதிச் சீட்டு பெற்று விமானத்தில் ஏறினோம். எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். உமர்தம்பிக்கு சென்ற முறை ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சி எப்படி நடந்து என்பதை எனக்கு மீண்டும் விளக்கினார். ஊரிலிருந்து அதே ஜம்போஜெட் ஏர்இந்தியா விமானத்தில் உமர் துபாய் வந்தபோது விமானப் பணிப் பெண்கள் அவரிடம் நலம் விசாரித்ததையும் சொன்னார். எதையும் விடாமல் ஒப்புவிக்கும் பழக்கம் உமரிடம் இருந்தது. சிறு வயதிலிருந்தே ஒரு செய்தியை என்னிடம் விளக்கி முடித்தால்தான் அவர் ஆறுதல் அடைவார். “நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களோ இல்லையோ, ‘ஊம்! அப்படியா!’ என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள்” என்பார்.


ஒரு முறை உமர் சிங்கப்பூர் வழியாக ஊர் சென்றார். பயணம் செய்த விமானம் Dc 10 வகை! இந்த எண்ணம் அவர் உள்ளத்தில் பதிவாகிவிட்டது! தொழுகை நேரம் வந்ததும் விமானத்தின் பின் பகுதிக்குச் சென்று அங்கே தொழுதார். அப்போது விமானம் ஆடியது. உமர் ஏதோ ஒன்று ஆகிவிட்டது என்று பயந்துவிட்டார்! சற்று நேரத்தில் ஆட்டம் நின்றுவிட்டது. வேறு ஒரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் இருவரும் தொழுகை நேரம் வந்ததும் முன் பகுதிக்குச் சென்று தொழுது இருக்கிறோம். இறைவனை நினைக்கும் சரியான நேரமும் இடமும் அதுதானே! இறைவனிடமே தன்னை ஒப்படைத்துவிட்ட ஒருவருக்கு திடீர் விபத்து, உடனடி வெகுமதி! புவனம் கை விட்டுப்போனால், சுவனம் கை நீட்டி அழைக்கும்! இன்ஷா அல்லாஹ்!
இறைவனருளால் வானூர்தியில் சென்னை வந்து, புகைவண்டியில் ஊர்ந்து ஊர் வந்து சேர்ந்தோம் அல்ஹம்துலில்லாஹ்!
... தொடரும்
-- உமர்தம்பி அண்ணன்
6 Responses So Far:
உமர் காக்காவுடன் ஏறத்தாழ எல்லா சமயத்திலும் இருந்ததால் வாவன்னா சார் அவர்களின் விவரிப்பில் உயிர் இருக்கிறது.
உமர் காக்காவைப்பற்றி அறிய அறிய தொடரை வாசிக்க ஆவல் மேலிடுகிறது.
சரித்திரம் ஊர்ந்து பறந்து அசைபோட்டுகொண்டிருப்பது நல்லாயிருக்கு,வளரட்டும்!
சொத்து,பத்துக்காக நீயா? நானா? பாத்துருவோம் வா...ஏட்டிக்கு போட்டி போடும் உடன்பிறந்தவர்கள் உள்ள இக்காலத்தில் ஆஹா...உங்களின் சகோதர பாசமும், நேசமும் எம்மை அசரவைத்து இறைவன் நாட்டத்தில் சகோதரனின்றி பிறந்த எனக்கு சிறு சங்கடத்துடன் கூடிய ஏக்கத்தையும் வரவழைக்கிறது உங்களின் சரித்திரத்தொடர்.....
தொய்வின்றித்தொடரும் இந்த தொடர் போல் உங்கள் ஆரோக்கியத்துடன் கூடிய ஆயுளும் தொடர வேனும் என இறைவனைப்பிரார்த்தித்தவனாக....
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
அஸ்ஸலாமு அலைக்கும்.
படத்தில் பார்ப்பதோ விமானம் என்றாலும்.ஆனால் வா வன்னா பெரியப்பாவினால் ரிமோட்டின் மூலம் .
( அ.நி) தளத்தில் இயக்கிக் கொண்டிருப்பதோ தன் சகோதரின் சரித்திர (மானம்) என்றுதான் சொல்ல வேண்டும். தொய்வின்றி தொடர வேண்டுகிறோம்.
உமர் காக்காவைப்பற்றி அறிய அறிய தொடரை வாசிக்க ஆவல் மேலிடுகிறது
வாவன்னா சாரின் வா.. வரையும் சரித்திரச் சித்திரம் படிக்கும் போது ஒன்று புரிகின்றது மர்ஹும் உமர்தம்பி அவர்கள் கணினியில் மட்டும் வித்தகர் அல்ல அணைத்து உலக விசயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் என்பது புரிகின்றது
Post a Comment