இவருக்குத்தான் என் ஒட்டு
அறுபது லட்சம் செலவு செய்து சேர்மன் ஆவேன் , !!!
ஆளும்கட்சியில் காசை கொடுத்து சீட்டு வாங்கி சேர்மன் ஆவேன் !!!
குடும்பத்தின் பெயரை வைத்தே சேர்மன் ஆவேன் !!!
அதிரைப்பட்டினம் எங்கள் கட்சியின் கோட்டை அதை வைத்தே சேர்மன் ஆவேன் !!!
இப்படி பிரதான வேட்பாளர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் தருணத்தில் எங்கள் ஒட்டு யாருக்கு இருக்கனும் ???
அதிரையில் பல சமூக பிரச்சனைகளில் கண்டு கொள்ளப்படாத நிலையில் அதி முக்கிய பிரச்சனையாக இருப்பது பிளாஸ்டிக் குப்பைகள் பெருகிவருவதே, இன்று உலகமே பிளாஸ்டிக் குப்பைகளாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர், வானம் பார்த்த பூமியான அதிரையில் அதைப் பற்றிய விழிப்புணர்வுகள் சற்றும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சன உண்மை. மனிதர்கள், வனவிலங்குகள், காடு, நீர் ஆதாரம், விவசாயம் இப்படி பிலாஸ்டிக்கால் அழிந்து வருவதை அடுக்கிக் கொண்டே போகலாம் உதாரணமாக மனிதர்களுக்கு எப்படி கேடு விளைவிக்கிறது என்று பார்ப்போம்
மனிதர்களுக்கு ஆபத்து :
சமீபகாலமாக, ‘கேரிபேக்’கில் (“தூக்கு பை”) சுடச்சுட உணவுகளை பார்சல் செய்து கொடுக்கின்றனர். சால்னா போன்றவைகளையும் சிறிய பாலித்தீன் பைகளில் கட்டிக் கொடுக்கின்றனர். சூடாக இருந்தால், பாலித்தீன் பை இளகி, அதில் உள்ள ரசாயனம் உணவுப் பொருட்களுடன் கலக்கிறது. அதை உண்பவர்களுக்கு குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. தாய்ப்பால் கொடுக்கும் போது, குழந்தைகளையும் பாதிக்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் கேடு விளைவிக்கிறது பொதுவாக 18 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடியாது. காரணம் நீர் நிலைகள், நிலத்தடி நீர், மண் படிவ நீரை தடுத்து, நீர் ஆதார வழிகளின் ‘நெட்வொர்க்கையும்’ பாதிக்கிறது. இந்த வகையில் ‘கேரிபேக்’ எனும் பாலித்தீன் பைகள், ‘யூஸ் அண்ட் த்ரோ’ பிளாஸ்டிக் கப்புகள், இயற்கையை அழிப்பதில் முன்னணியில் உள்ளன. ஒரு ‘கேரி பேக்’ மண்ணோடு மண்ணாகி அழிய 400 ஆண்டுகள் ஆகுமாம். மேலும் மண்ணில் புதைவதால் மரங்களுக்கு நீர் எடுத்துச் செல்லும் வேர்களை பாதிக்கிறது. தண்ணீரில் மிதக்கும் பாலிதீன் பைகளால் குப்பைகள் பெருகுவதோடு, விலங்குகளுக்கும் தொற்றுநோய் ஏற்படுகிறது.
இப்படி பிளாஸ்டிக்கினால் ஏற்படும் அழிவுகளை உலகம் கவனித்து அதை தடை செய்யும் இந்த தருணத்தில், அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டு வரமுடியுமா, அது யாரால் முடியும் ? சட்டம் இதை பற்றி என்ன சொல்கிறது ?
தில்லி அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு கொண்டு வந்த தடையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், பிளாஸ்டிக் நிறுவனங்களின் சங்கங்கள் மேல்முறையீடு செய்து தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தன. அந்த வாதங்களை எல்லாம் கேட்ட பின்னரே, அவர்களது வழக்கைத் தள்ளுபடி செய்து, பிளாஸ்டிக் தடையை தில்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக பிளாஸ்டிக் தடை அதிரையில் அமல்படுத்தினால் அதை எதிர்த்து எவரும் எந்த நீதி மன்றத்துக்கும் போக முடியாது...
தில்லி சரி, சென்னை உயர்நிதிமன்றம் இந்த தடையைப் பற்றி என்ன சொல்லுகிறது ?
சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கீழ்க்கண்ட பரிந்துரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. பிளாஸ்டிக் நிறுவனங்கள் சார்பாக வைக்கப்பட்ட பல ஆவணங்களையும், வாதங்களையும், தெளிவாகக் கேட்டு உள்வாங்கிய பின்னர் வெளியிடப்பட்ட நீதிமன்றப் பரிந்துரையின் சாராம்சம் இதுதான்.
சென்னை உயர் நீதிமன்ற ஆணையின் சுருக்கம் :- உதகமண்டலம் போன்ற ஒரு சில இடங்கள் தவிர, தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருள்கள் தடை செய்யப்படவில்லை. மத்திய அரசின் சட்டத்தைக்கூட இன்றுவரை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் அமல்படுத்தவில்லை. தமிழகத்தின் எல்லாத் தெருக்களிலும் பிளாஸ்டிக் பைகள், டெட்ரோ பேக்குகள், கப்புகள் போன்றவை விசிறியடிக்கப்படுவதை எவரும் காணமுடியும். ஹோட்டல்களில், பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்படும் உணவுப் பதார்த்தங்களில், பிளாஸ்டிக்கில் உள்ள விஷக் கெமிக்கல்கள் கலந்து புற்றுநோய் வரும் அபாயம் உள்ளது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி மண்ணும், நீரும் மாசுபடுவதுடன், செடிகளும், மரங்களும் வளர்வதைத் தடுக்கின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சுற்றுச்சூழலுக்குப் பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீங்குகளைக் கருதும்போது, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன. தமிழ்நாடு அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த சட்டமசோதா ஆறு ஆண்டுகள் ஆகியும் சட்டமாக்கப்படவில்லை. அப்பொழுதே செயல்பட்டிருந்தால் இந்த ஆறு ஆண்டுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓரளவுக்கு முறைப்படுத்தியிருக்க முடியும். முன்னாள் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஏற்படுத்தப்பட்ட கமிட்டியின் சில பரிந்துரைகளை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். உலகின் பல நாடுகள், தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்கத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் தண்ணீர் விற்பனை செய்யப்படும் பெட் பாட்டில்களுக்குக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் மிகப்பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முடுக்கிவிட வேண்டும்.
மற்ற மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கவனத்தில் கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக 60 மைக்ரான் தடிமனுக்குக் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்க பரிசீலனை செய்ய வேண்டும். சுத்தமான காற்று, நீர் போன்ற தனிமனிதர்களின் உரிமைகளையும், மரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வேண்டிய சுத்தமான நிலம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தமிழக அரசு 2003-ம் ஆண்டு கொண்டு வந்த பிளாஸ்டிக் தடைக்கான சட்டமசோதாகூட போதுமானதாக இருக்காது. ஆதலால், அதைவிடக் கடுமையான சட்டதிட்டங்களை விரைவில் சட்டசபையில் தாக்கல் செய்து, அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். - சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2009.
ஆக! எந்த ஒரு சட்டமும் அதிரையில் பிளாஸ்டிக் தடை கொண்டு வருவதற்கு எதிராக இல்லை என்பதை தக்க சான்றுடன் விளக்கியுள்ளேன்
இப்பொழுது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள மசோதாவின்படிகூட, 40 மைக்ரான் வரையிலான பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்யும் சட்டமசோதா கொண்டு வர உள்ளது. ஆக, சென்னை மாநகராட்சியாகட்டும், தமிழக அரசாகட்டும், 1999-ம் ஆண்டு யோசித்த, இன்றைக்கு ஒன்றுக்கும் உதவாத 20 மைக்ரான் அளவுகோலைத் தாண்டி யோசிக்க வேண்டிய அவசர அவசியம் எழுந்துள்ளது. இனி, எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு, தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்தச் சுற்றுக்சூழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில், அரசியல் வேறுபாடுகளைப் புகுத்தாமல் இருப்பது அனைவரின் விருப்பம்
புதிதாக தேர்ந்து எடுக்கப்படும் பேருராட்சி மன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிரையில் பிளாஸ்டிக் தடையை அமுல்படுத்த வேண்டும். அதை தேர்தல் வாக்குறுதியாக எவர் தருகிறாரோ அவருக்குதான் என் ஒட்டு என்று அதிரை மக்கள் மனதில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்,.
இந்த வாக்குறுதியை யார் தருகிறாரோ அவருக்குத்தான் எங்கள் குடும்பத்தின் உள்ள பெண்களிடம் சொல்லி ஓட்டுகளை எனது சார்பாக வாங்கி தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.
- முஹம்மது ரஃபீக்
15 Responses So Far:
இந்த கேரிபேக்கில் இவ்வளவு உள்குத்து இருக்கா, தகவல் அனைத்தும் சிந்திக்கவைக்கிறது, ஜாவியா (நார்சா)சோறு முதற்கொண்டு இந்த மோகம் விடவில்லை. இதனால் ஏற்படும் தீங்கைப்பார்த்தால் நிச்சயம் தடைசெய்யப்பட வேண்டிய ஒன்று. இது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் சம்பந்தப்பட்டவர்களால் மெட்டுமே சாத்தியம். எதிர்வரும் தேர்தலில் இதற்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பது நல்லது, இதை நாமும் ஆதரிப்போம்
//அறுபது லட்சம் செலவு செய்து சேர்மன் ஆவேன் , !!!
ஆளும்கட்சியில் காசை கொடுத்து சீட்டு வாங்கி சேர்மன் ஆவேன் !!!
குடும்பத்தின் பெயரை வைத்தே சேர்மன் ஆவேன் !!!
அதிரைப்பட்டினம் எங்கள் கட்சியின் கோட்டை அதை வைத்தே சேர்மன் ஆவேன் !!!//
அந்தாளு யாரு.சொல்வது அவரின் ஆணவத்தை அழகாய் காடுகிறதே!. வாக்களிப்பது நாமல்லவா!
இப்படி சொல்லுங்களேன்! வருங்கால நற் சேர்மன்களே!!
அறுபது கோடி சொந்தமாக அதிரைக்கு செலவிடுவேன்!!!
ஆளும் கட்சியுடன் ஒத்துழைத்து அரசிடம் அத்தியாவசிய அனைத்தையும் பெற்று தருவேன்!!!
குடும்பம் முக்கியமல்ல ஊருக்கு சேர்மனே என் லட்சியம்!!!
அதிரைப்பட்டினம் எங்களின் பிறந்த பூமி அதை தமிழகத்தின் முன் மாதிரி பேரூராட்சியாக இஸ்லாமிய சேர்மனாக ஆண்டு காட்டுவேன்!!!
----------------------------------------------------------------
நல்ல ஆக்கம் ஆனால்
பிளாஸ்டிக் பை அதிரைக்குமட்டுமல்ல அகில உயிருக்கே கேடுவிளைவிக்கக்கூடியவை.இதை ஒட்டுமொத்தமாக மாநில மத்திய அரசுகள் ஒட்டுமொத்தமாக தடைவிதிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
பிளாஸ்டிக் அதிரையின் பிரச்சனை மட்டுமல்ல அகில உலகின் பிரச்னை....இதனை சட்டசபை தேர்தல் போட்டி இடும் கட்சிகளின் வேட்பாளர்களிடமும் ,அரசுகளிடமும் டிமாண்ட் பண்ணுவது அவசியம்....இதற்க்கான ஒரு தீர்வை ( அதாவது மாற்றுப்பை யை ) கண்டுபிடித்து விட்டு பிரச்ச்னையை அணுகுவது பயன் தரும்....உலகிலேயே இரண்டு நிறுவனங்கள் தான் இதற்க்காக கவலைப்பட்டு காகிதக்கூளினால் ஆனா பேக்கை உலகம் முழுவதும் பயன் படுத்துகின்றன ஒன்று Mc Donald's and IKEA.....அன்னா ஹாசரே போன்ற பயனற்ற தியாகிகள்,தேவையற்ற & ஒழிக்க முடியாத விசயங்களுக்காக போராடுவைதை விட்டுவிட்டு வருங்கால சமுதாயத்தை காப்பதற்க்காக இந்த மாதிரி விசயங்களில் போராடி இறந்தால் அவர்களுக்கு அது பெருமைதரும்... ....
உலகளாவிய பிரச்சினைதான் அதிரைப்பட்டினத்தையும் அவதிக்குள்ளாக்கியிருக்கும் பிரச்சினை இந்த பாலித்தீன் பைகள் !
அவசியம் தடுக்கப்பட வேண்டிய ஒன்று அதுவும் பயண்பாடுகளை வரையறுத்தே !
நல்ல விழிப்புணர்வை முன்னித்தி எடுத்து வைத்திருக்கும் பதிவு !
மாஷா அல்லாஹ் அருமையான பதிப்பு . இந்த மாதிரியான சுற்று சூழ கேடுகளை மக்களிடம் எடுத்து சொல்லத்தான் வேண்டும். இது மாதிரியான விஷயங்களை மக்கள் எடுத்து நடந்தால் எந்த வகையான நோயும் நம்மை தீண்டாது. என்பது உறுதி. இது போன்ற விஷயங்களை நம் வாழ்வில் எடுத்து நடக்க அல்லாஹ் த ஆலா தவ்பிக் செய்வானாக.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இது போன்ற பிளாஸ்டிகளால் ஏற்படும் விபரீதங்களால் அதிரையில் அதிகரித்து வரும் புற்றுநோய்களுக்கு காரணமாகக்கூட இருக்கலாம்.
இருந்தாலும் சகோதரர் ரஃபீக் அவர்களின் ஆதங்கத்தில் எமக்கும் பங்குண்டு.
சரியான நேரத்தில் எழுப்பப்பட்டுள்ள விழிப்புணர்வு.
அன்பர்களே இது எதோ அதிரை நகராட்சிக்கு உட்படாத விஷயம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம், இன்று பல உராட்சி , பேரூர் ஆட்சி ,நகராட்சி , மாநகரட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி குறைந்த பட்சம் இருபது மைக்ரன் பிளச்டிகிற்கு தடை விதித்துள்ளனர், பிளச்டிகிற்கு முழுவதுமாக தடை விதிக்க முடியாது என்ற வாதத்தை ஒருவகையில் எடுத்து கொண்டாலும் குறைந்த பட்ச நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்,
இருபது மைக்ரன் மேல் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த அனுமதித்தாலும் பல கட்டுபாடுகளையும் கொண்டு வர வேண்டும், அதாவதுபாக்கெட்டுகளில், தயாரிக்கபயன்படுத்தப்பட்ட உணவு மூலக்கூறுகள், பதப்படுத்த பயன்படுத்தப்படும் இரசாயன கலவைகள், நிற கலவைகள், தயாரிப்பாளர் முகவரி, தயாரிக்கப்பட்ட நாள், உபயோகிக்ககடைசி நாள் ஆகிய விவரங்கள் பாக்கெட்டுகள் மீது கண்டிப்பாக அச்சிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக தமிழில் பெரிய எழுத்துக்களில் பொது மக்கள் எளிதாக படிக்கும் வண்ணம்குறிப்பிடப்பட வேண்டும்.,கொடிய விஷம் கொண்ட கருப்பு வண்ண பாலிதீன் பைகள் உடனடியாக தடை செய்யவேண்டும்.
சென்னை மாநகராட்சியில் இதைபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரபட்டுள்ளது , மாநகர ஆட்சியிலே இது சாத்தியப்படும் பொழுது அதிரை நகராட்சியில் என் சாத்தியபாடாது என்ற கேள்விகளை மக்கள் வேட்பாளர்கள் மத்தியில் வைக்க வேண்டும்
இது எதோ அரசுக்கு மட்டும் உள்ள கடமை என்று மக்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் நிறுவனமும் இருந்துவிடாமல் அவர்களும் முன் வர வேண்டும் ..,
உதாரணமாக தக்வா பள்ளிக்கு உட்பட்ட மார்க்கெட் கடைகளில் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும், மீன் மற்றும் காய்கறிகளை வாங்கும் நுகர்வோர் பைகளை எடுத்துவரவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றலாம்
ஒவ்வொரு பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும்,இறை பள்ளியின் வளாகத்தில் அந்த அந்த நிறுவகம் தடை விதிக்கலாம்
இறைவன் தந்த பூமியை மலடியாக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுக்களுக்கு எதிராக அணி திரள்வீர்
இடம், பொருள், ஏவல் கருதி இன்னொரு விழிப்புணர்வு தகவலை இங்கு பதிவது நல்லதென நினைக்கிறேன்.
"மொபைல் ஃபோன் ரீச்சார்ஜ் செய்வதற்காக வாங்கும் ரீச்சார்ஜ் கார்டுகளில் மறைக்கப்பட்ட எண்ணை அறிய அதன் மேல் பூசப்பட்ட அலுமினியக்கலவையை நாம் விரல் நகங்களால் சுரண்டி எடுத்து சரிவர கையை சுத்தம் செய்யாமல் அதனுடன் ஆகாரம் உட்கொள்வதால் நம் உணவில் சில்வர் நைட்ரோ ஆக்ஸைடு என்ற நச்சுப்பொருள் சேர்ந்து அது புற்றுநோய் வருவதற்கு மிக முக்கிய காரணியாக சமீபத்திய ஆய்வின் முடிவாக வெளியிடப்பட்டுள்ளது" எனவே இது விசயத்தில் கவனத்துடன் இருந்து கைகளில் சுரண்டி எடுக்காமல் ஏதேனும் சிறு துரும்பு மூலம் அதை சுரண்டி எடுக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பார்த்தீர்களா? நவீன விஞ்ஞான உலகின் அதிவேக முன்னேற்றத்தில் எப்படி எல்லாம் நோய்கள் வருகிறது.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நல்ல ஒரு எதிர் கால சிந்தனை கலந்த ஆக்கம்.
நமதூரில் இப்போது புதிதாக சேர்மேன் கனவில் மிதக்கும் பல புது அரசியல் வா(வியா)திகளுக்கு இது விளங்குமா? என்பது சந்தேகமே இப்போதைக்கு அவர்கள் எண்ணம் எல்லாம் எத்தனை லட்சம் கொடுத்து சீட்டு வாங்குவது என்பதில்தான் முலு கவனமும் பிறகு ஜெய்த்து வந்த பின் போட்ட பணத்தை வட்டியும் முதலுமாக எடுப்பதில் கவனமாக இருப்பார்களே தவிர ஊர் நலனில் ஒருக்காலும் கவனமாக இருக்க மாட்டார்கள்
ஓட்டு போடுபவர்கள் மிக கவனமாக ஓட்டு போட வேண்டிய பஞ்சயாத்து தேர்தல் இது
இடம், பொருள், ஏவல் கருதி இன்னொரு விழிப்புணர்வு தகவலை இங்கு பதிவது நல்லதென நினைக்கிறேன்.
அமெரிக்காவில் ஒரு ஏரியில் பிடித்த மீன்கள் அனைத்தும் பெண் மீன்களாக இருந்தனவாம் அப்படி ஏன் இருந்தது என்று ஆய்வு செய்ததில் ஏறி அருகே பிளாஸ்டிக் தொழிர்சாலை கழிவுகள் இந்த ஏரியில் கலந்ததால் ஆண் மீன்கள் அழிந்து அனைத்தும் பெண் மீன்களாக போய்விட்டதாக ஆய்வு கூறுகின்றது மேலும் பிளாஸ்டிக் பையில் சூடான உணவுகளை இடும் போது அதன் கெமிகல் உணவில் கலப்பதால் ஆண் தன்மை குறைந்து பெண்தன்மை கூடுவதாக ஆய்வு கூறுகின்றது
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ:முஹம்மத் ரபீக் அவர்கள் அதிரைப்பட்டினம் சுத்தமாவதற்கு பெரியவர்கள், சிறியவர்கள்,என்று வேற்றுமைகள் இல்லாமல்.அதிரை மக்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு வீட்டு வாசலுக்கு முன்பாகவும்.சாலை ஓரங்களிலும் ஒன்றோடு ஓன்று கலந்து சங்கமிக்கும்.பிளாஸ்டிக் பைகளை யார் தடை செய்வோம் என்று வாக்குறுதி தருகிறார்களோ. அவருக்குத்தான் எங்கள் குடும்பத்தின் உள்ள பெண்களிடம் சொல்லி ஓட்டுகளை எனது சார்பாக வாங்கி தருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.என்று உத்திர வாதத்தோடு எழுதிய விதம் ஆஹா என்னா அருமை.
சகோதரரே இவர்களிடம் வெறும் வாயளவில் வாக்குறுதி வாங்கிவிட்டு உங்கள் குடும்ப ஓட்டை ஒட்டையாக்கிவிடதிர்கள்
அவர்களிடம் 10 .ருபாய் பத்திரத்தில் வாக்குறுதியை எழுதி வாங்கிவிட்டு ஓட்டை போடுங்கள் .
கூட்டம் கூட்டி மேடையில் பேசியதுபோல் மிகத் தெளிவான கட்டுரை. வாழ்த்துகள்.
அஸ்ஸலாமு அலைக்கும். மிகத்தெளிவான சுளீர் ஆக்கம். அருமையான தருனத்தில் தந்த சகோ.பாராட்டு.மேலும் இதன் விழிப்புனர்வு மிக குறைவு நம் மானிலத்தில்.அமெரிக்கா அதனால்தான் ஆப்பிரிகா,ஆசியா நாடுகளை தன் பிளாஸ்டி குப்பையாக போடும் தொழில் முறையாக நம்மை ரீசைக்ளிங் சிஸ்டத்தில் நஸ்டத்தையும், கஸ்டத்தையும் கொடுத்து தப்பித்துக்கொள்கிறது. ஆரசியல் கயவர்களும் காசுக்கு அந்த மாசின் கடுமை தெரிந்தும்(தெரியாமலும்- முட்டாள் பயலுவ)ஒத்துகொண்டதால் இன்று பருவம் தப்பிய மழையும், வெப்பமயமானதும்,விவசாயம் படுத்ததும் இன்னும் பல காரணம் அடுக்கிகொண்டு போகலாம். நல்லதொரு ஆக்கம் வாழ்துக்கள் .இந்த பிரட்சனை பிரதானமாகட்டும் வரும் தேர்தலில்.
மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------
குப்பைக்கு GOOD BYE சொல்லும் நாள் எந்நாளோ?
பைகளுக்கு BYE BYE சொல்லும் நாள் எந்நாளோ?
அதிரை குப்பைக் காடானதற்கு நம்மூர் மக்களே காரணம்!
பிளாஸ்டிக் குப்பைகளையும் பிறப்புரிமை ஓட்டுகளையும்,
போடக்கூடாத இடத்தில் போட்டுவிட்டுப் போகிறார்கள்!
-வாவன்னா
அஸ்ஸலாமு அலைக்கும்.
// மின்னஞ்சல் வழி கருத்து
-----------------------------------------------
குப்பைக்கு GOOD BYE சொல்லும் நாள் எந்நாளோ?
பைகளுக்கு BYE BYE சொல்லும் நாள் எந்நாளோ?
அதிரை குப்பைக் காடானதற்கு நம்மூர் மக்களே காரணம்!
பிளாஸ்டிக் குப்பைகளையும் பிறப்புரிமை ஓட்டுகளையும்,
போடக்கூடாத இடத்தில் போட்டுவிட்டுப் போகிறார்கள்!
-வாவன்னா //
அது நாளத்தான் வரக்கூடாத நோய்களும்.
அது நாளத்தான் வரக்கூடாத சேர் மண்ணுகளும்.
வருகின்றதோ?
சுத்தமான சேர்மன்கள் வரும் நாள் எந்நாளோ?
Post a Comment