Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாசமிகு வாப்பாவும், பண்புள்ள மகனும் ‍ (தொலைபேசி உரையாடல்) ! 19

அதிரைநிருபர் பதிப்பகம் | September 10, 2011 | , , ,

வாப்பா : அஸ்ஸலாமு அலைக்கும். வாப்பா நல்லா இருக்கியா? (அயல்நாடுகளில் பணிபுரியும் வாப்பாமார்களுக்கு தாயகத்தில் இருக்கும் மகன்கள் எல்லோரும் பாசத்தின் வெளிப்பாடாய் வாப்பாவாகிப்போவது (தகவல் தொடர்பில்)நம்மூரில் இயற்கை)

மகன் : வ'அலைக்குமுஸ்ஸலாம். நான் நல்லா ஈக்கிறேன் வாப்பா. நீங்க நல்லா ஈக்கிறியளா? உடம்பு நல்லா இருக்குதா? மருந்து மாத்திரையெல்லாம் சரியா வேளாவெலைக்கு சாப்புட்றியளா?

வாப்பா : உம்மா, ராத்தா, தம்பி, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்கிறார்கள்? நீ ஸ்கூலுக்கு தவறாமல் போகிறாயா? பாடங்கள் நன்கு படிக்கிறாயா?

மகன் : நம் வீட்டில் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் அல்ஹம்துலில்லாஹ். நானும் தவறாமல் பள்ளிக்கூடம் போய் வருகிறேன். நடந்து முடிந்த காலாண்டுத்தேர்வில் என் வகுப்பில் மூன்றாவது ரேங்க் எடுத்துள்ளேன்.

வாப்பா : மாஷா அல்லாஹ். கேட்பதற்கு ரொம்ப சந்தோசமா இருக்குது தம்பீ. (பாசத்தில் மகன் சில நேரம் வாப்பாவாகவும், சில நேரம் தம்பியாகவும் ஆகிப்போவான்)

மகன் : ஆமாம் வாப்பா. உங்களை நினைத்தால் மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. உங்களைப்போல் ஆயுளை அப்படியே அயல்நாடுகளில் அடகு வைத்து தன் குடும்பத்துக்காக தியாகம் செய்ய நான் விரும்பவில்லை. ஏதாவது உயர்கல்வி படிக்க வேண்டும். நான் படித்து முடிக்கும் சமயம் எது உயர்க்கல்வி என்று உலகால் பேசப்படுகிறதோ அதை படித்து முடிக்கவேண்டும். பிறகு நம் தாய்நாட்டிலேயே இருந்து கொண்டு நம் வீட்டிற்கும் இயன்றளவு நாட்டிற்கும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பதே என் தீராத விருப்பமாக உள்ளது வாப்பா.

வாப்பா : அல்ஹம்துலில்லாஹ்... உன் விருப்பம் அப்படியே நிறைவேற து'ஆச்செய்கிறேன் தம்பீ. தொடர்ந்து கவனத்துடன் படி. நான் என் உயிர் இருக்கும் வரை அதற்கு இறைவன் வாய்ப்பு கொடுக்கும் வரை உனக்கு என்னால் ஆன உதவியை செய்கிறேன்.

மகன் : ராத்தா மாப்பிள்ளை சரிவர படிக்காத காரணத்தால் அவருக்கு தொழில் நடத்தவும் இயலவில்லை. எங்கையாவது வேலை செய்யவும் முடியவில்லை. ஆனால் நம்மிடம் தனி வீடு கட்டி கேட்பதில் மட்டும் ரொம்ப தெளிவாகவும், கராராகவும் இருக்கிறார். ராத்தாவும் பாவம் எதிர்த்து பேச இயலவில்லை. இதனால் வீட்டில் தேவையற்ற சில சண்டைகளும், தொந்தரவுகளும் அவ்வப்பொழுது வருகிறது வாப்பா. இதை யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. பெண்ணைப்பெற்றால் இது தான் சாபக்கேடா? மார்க்கம் சந்தோசமாக அல்லவா இருக்கச்சொல்கிறது? நம்மூருக்கு மட்டும் ஏன் இந்த சாபக்கேடு? ஒன்றும் புரியவில்லை வாப்பா. இது போன்ற மக்களை சபிப்பதை விட அவர்களுக்காக து'ஆச்செய்ய மனசு இடம் தர மறுக்கிறது.

வாப்பா : என்னட வாப்பா ஆரம்பத்துலெ சந்தோசமான சில செய்திகளை சொல்லி விட்டு இப்படி  வேதனையான செய்தியையும் சொல்லிட்டியெ....

மகன் : ஆமாம் வாப்பா இங்கு வீட்டில் நடக்கிற வேதனைகளை எவ்வளவு நாளைக்குத்தான் உங்களுக்கு தெரியாமல் மறைப்பது?

வாப்பா : பிரச்சினை இல்லை தம்பீ, நீ மறைக்காமல் சொன்னது நல்லது தான். கலியாணத்துக்கு முன்னாடி உன் ராத்தா மாப்ளெ ஊட்லெ எங்களுக்கு ஒன்னும் வேணாம் நகை, நட்டு, பணங்காசு வேணாம் நாங்க மார்க்கப்படி வரதட்சிணை வாங்காமல் கலியாணம் முடிக்கிறோம் என்று சொன்னதெல்லாம் ஊருக்கு போலி வேசம் போடவா? என்னக்கொடுமைடா இது? அல்லாஹ் தான் இவன்களை திருத்தனும் இல்லை திருத்துவதற்காக உலகிலேயே தண்டிக்கனும்.

மகன் : இப்படித்தான் வாப்பா ஊர்லெ நெறைய பேர் செஞ்சிக்கிட்டு இருக்கிறாங்க. எல்லா விசயத்திலும் கோட்டை விட்டு விட்டு பெண் வீட்டினரிடம் வீடு வாங்குவதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள். ஊரில் சிலர் வட்டி வாங்குவது, கொடுக்கும் விசயத்தில் மட்டும் மிகவும் கவனமாக இருந்து மற்ற விசயங்களில் பொடுபோக்காக இருக்கிறார்கள். சிலர் விபச்சாரம் செய்வதிலிருந்து மட்டும் முற்றிலும் தன்னை பாதுகாத்துக்கொண்டு மற்ற விசயங்களில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். சிலர் மது குடிப்பதிலிருந்து மட்டும் பாதுகாப்பாக இருந்து விட்டு மற்ற விசயங்களில் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறார்கள். சிலர் வரதட்சிணை வாங்குவதில், கொடுப்பதில் மட்டும் கவனமாக இருந்து விட்டு மற்ற விசயங்களை கண்டு கொள்வதேயில்லை. சிலர் ஐங்காலத்தொழுகையை மட்டும் முறையே நிறைவேற்றுகிறார்கள் ஆனால் நம் சமூகத்தில் உள்ள பல கேடுகளை களைவதில் கொஞ்சமும் அக்கறை காட்டுவதில்லை. எனவே மார்க்கம் தடுத்த எல்லா விசயங்களிலும் மிகவும் கவனமாக இருந்து அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களை காண்பது ஊரில் மிகவும் அரிதாக உள்ளது வாப்பா.

வாப்பா : அல்லாஹ் உனக்கு இந்த சின்ன வயசுலேயே மார்க்கத்தில் ஒரு தெளிவை கொடுத்திருப்பதற்கு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறேன். நீ எதற்கும் கவலைப்படாமல் உலகக்கல்வியுடன் மார்க்கக்கல்வியையும் தெளிவாக தொடர்ந்து படித்து வா. ஒரு ரகசியத்தை உன்னிடம் மட்டும் சொல்கிறேன் கவனமாக கேட்டுக்கொள் யாரிடமும் சொல்லி விடாதே, உம்மாவிடம் கூட சொல்லி விடாதே. நான் இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் இந்த இனிப்பு நீருடன் போராடி உயிர் வாழ்வேன் என்று தெரியவில்லை. அல்லாஹ்வுடைய நாட்டத்தில் எனக்கு இங்கேயே மரணம் நிகழ்ந்து விட்டால் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் என் இருபத்தைந்து வருட சர்வீஸுக்காக குறைந்தது ரூபாய் இருபத்தைந்து லட்சம் கிடைக்கும். அதை உன் அக்கவுண்ட்க்கு அவர்களே அனுப்பி விடுவார்கள். அதை வைத்து உன் மேல்படிப்பு கனவை நனவாக்கிக்கொள். நம் குடும்பத்தையும் கைவிட்டு விடாதே.

மகன் : என்ன வாப்பா கடைசியில் இப்படி ஒரு குண்டைதூக்கி போட்டு என் கண்களை கலங்க வைத்து விட்டீர்கள்? வாப்பா உங்களுடைய ஹயாத்து தான் எனக்கும் நம் வீட்டிற்கும் முக்கியம். பணங்காசுகளெல்லாம் பெரிதல்ல. வாப்பா, தங்கச்சிக்காவது குடும்பம் தாண்டினாலும் பரவாயில்லை மார்க்கம் பேணக்கூடிய குறிப்பாக பெண் வீட்டினரை வாட்டி, வதக்காத, படித்த பக்குவமான ஒரு நல்ல மாப்பிள்ளையை நீங்களே முடிவு செய்து இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஊர் வரும் சமயம் பேசி கலியாணம் முடித்து விட வேண்டும். அது தான் என்னுடைய நம் வீட்டினர் யாவரின் ஆசையும். போதும் வாப்பா, குடும்பம் குடும்பமென்று சொல்லி இப்படி கடைசியில் அவர்களே நம் கழுத்தில் கத்தி வைப்பது போன்ற நிகழ்வுகள் ஒழிந்து போகட்டும். மணமக்களுடன் நாமும் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமாக இருந்து விட்டு போவோம் இன்ஷா அல்லாஹ்.

வாப்பா : நீ சொல்றது படியே செஞ்சிக்கிடுவோம் இன்ஷா அல்லாஹ். எதற்கும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனமாக இருந்து கொள். கல்சரை பசங்களுடன் சாகவாசம் வைத்துக்கொள்ளாதே. நல்லவர்களுடன் மட்டும் பழகிக்கொள். இன்ஷா அல்லாஹ் நாளை உன் எதிர்காலம் பிரகாசிக்கும். சரிடா வாப்பா, இன்சுலின் போட மறந்துட்டேன். பிறகு உன்னை தொடர்பு கொள்கிறேன். வச்சிர்ட்டா.....அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மகன் : வலைக்குமுஸ்ஸலாம்.. சரிங்க வாப்பா...உடம்பை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது

19 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உறவுகளோடு ஊஞ்சலாடும் MSM(n)ன் கட்டுரை நடையோ தட்டச்சில் தட்டினால் கிட்டியது அல்ல, மண்ணின் மைந்தர்களின் மனசில் கிடப்பதை வழித்தெடுத்து இங்கே பசைபோட்டு ஒட்டியிருந்தாலும் எங்கள் மனசுலையும் பிசு பிசுக்கிறதே !

மண்வாசனைக்கு MSM(n)தான் என்றுமே ! ஒவ்வொரு ஆக்கத்திலும் மெய்பிக்கும் ஜாலமே அலாதிதான்.

உணர்வுகளின் இழையை உசுப்பிவிடவும் திறன் வேண்டும் அது MSM(n)டம் நிறைந்திருக்கிறது !

sabeer.abushahruk said...

சபீர்:
எம் எஸ் எம், பார்த்தீர்களா சொல்லி முடிக்கல, அதற்குள் வாழ்வியலின் உயிர்ப்பான உணர்வுகளை அப்படியே எதார்த்தம் சொட்டச்சொட்டக் கொடுத்திருக்கிறீர்கள்?!

எம் எஸ் எம்:
சில உணர்வுகளை ரொம்ப நேரம் அடைகாக்க முடியாது காக்கா. எழுதி முடித்தால்தான் ஏதோ அழுத்தம் குறைந்ததுபோல் தோன்றும்.

சபீர்:
இதைத்தான் ஒரு எழுத்தாளனின் அடையாளமாகக் காண்கிறது இலக்கிய உலகம்.

எம் எஸ் எம்:
சரிதான் காக்கா.

சபீர்:
உங்களின் இந்த உரையாடலை நான் சாதாரணமாகத்தான் வாசிக்கத் தலைப்பட்டேன். ஆயினும், அபு இபுறாகீமிடம் சொன்னதுபோல், அந்த 25 வருட உழைப்பின் பணமும் வாப்பாவின் மரணமும் பற்றிய உங்களின் சொற்கள் கொல்கின்றன நெய்னா. மெய் சிலிர்த்துப்போனேன்.

எம் எஸ் எம்:
இதுதான் நடப்பு காக்கா.

சபீர்: சரிதான் தம்பி ஆயினும் இது மாறாதா என்ற ஏக்கம் மட்டும் மனத்தின் ஆழத்தில் இருக்கு. அஸ்ஸலாமு அலைக்கும்.

எம் எஸ் எம்: அலைக்குமுஸ்ஸலாம் காக்கா.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஆஹா !

கவிக் காக்கா, MSM(n) உரையாடலாக தங்களின் கருத்தாய்வும் அமர்க்களம் !

உணர்வோடு உரச பினக்கு மட்டும்தான் என்றில்லை, இறுக்கமான இனக்கமும் உராய்ந்திடும் !

அதைத்தான் உங்களிருவரின் உரையாடலில் காண்கிறேன்

Muhammadh said...

உண்மையான உரைநடை, உறுதியான, அழுத்தமான உண்மைகளை அருமையாக வெளியிட்டு இருக்கும் எம்.எஸ்,எம் காக்காவுக்கு நன்றி. இதை போல் நமதூரில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எங்களை போல் வெளியூர்களில் படிக்கும் மாணவர்களுக்காகவும் மற்ற மாணவர்களுக்காகவும் தெரிவிக்க வேண்டி கொள்கிறேன். அப்பொழுதுதான் எங்களை போன்ற மாணவர்களுக்கு நமதூரின் நிலவரம் தெரிய வரும்..

Shameed said...

நெய்னாவின் ஆக்கம் மண் வாசனையுடன் மனைக்கட்டு வாசனையும் சேர்ந்து தூக்கலாக உள்ளது

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

வீட்டுக்கு வீடு வாசப்படி என்பார்கள்!
வீட்டுக்கு வீடு வேதனையும் சோதனையும்!
ஆண் பிள்ளையை பெற்றவர்கள்
வீட்டில் பண மழை!
பெண் பிள்ளையை பெற்றவர்கள்
வீட்டில் கண்ணீர் மழை!

தொழுகிறார்கள்! ஓதுகிறார்கள்!
மார்க்கப் பயான் கேட்கிறார்கள்!
வரதட்சனை கூடாது என்கிறார்கள்!
ஆனாலும் பெண் வீட்டில்
வீட்டையும்> மனையையும்
வாங்குவதில் மட்டும் கவனமாக இருக்கிறார்கள்!

என்று ஒழியும் இந்த சாபக்கேடு!
சகோதரரே தங்களின் உரையாடலில்
பல செய்திகள் இருந்தாலும்
வரதட்சனைதான் முன்னனியில் இருந்து
எப்பொழுது மாறும் இந்த நிலை
என்று வருத்தமடைய வைக்கிறது!

குடும்பத்திற்காக பாடுபட்ட
சில பேரின் வாழ்வும் இந்த
வளைகுடா மண்ணில் விபத்தாகவோ
இயற்கையாகவோ மரணத்தை தழுவுகிறது!
அவரின் சர்வீஸ் பணம் அல்லது
நஷ்ட ஈடு பணம் ஊர் செல்கிறது!
வாழ்க்கையில் நிரந்தரம் எது????????

crown said...

Muhammadh சொன்னது…
உண்மையான உரைநடை, உறுதியான, அழுத்தமான உண்மைகளை அருமையாக வெளியிட்டு இருக்கும் எம்.எஸ்,எம் காக்காவுக்கு நன்றி. இதை போல் நமதூரில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எங்களை போல் வெளியூர்களில் படிக்கும் மாணவர்களுக்காகவும் மற்ற மாணவர்களுக்காகவும் தெரிவிக்க வேண்டி கொள்கிறேன். அப்பொழுதுதான் எங்களை போன்ற மாணவர்களுக்கு நமதூரின் நிலவரம் தெரிய வரும்..
--------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். தம்பி உங்கள் நோக்கம் புரிகிறது. உங்களைப்போல் மாணவ சகோதரரிகள் தங்களின் மின்முகவரியை அதிரை நிருபர் நிர்வாகத்தினருக்கு தெரிவித்தால் அவர்கள் ஒவ்வொரு ஆக்கத்தின் இணைப்பை உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்பிவைப்பார்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

வாப்பாக்கு இனிப்பு
வாய்ச்சது கசப்பு
வாழ்வது அரைகுறை
வாய் மட்டும் நீளம்

மண் வாசனை பல
என்றாலும்
உன் வாசனை பலமே!

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.'
ஒவ்வொரு அதிரை தகப்பனாரின் உள்ளகிடங்கை,அதன் மெளன அழுகையை,அதன் வலிதரும் ஈனஸ்வர குரலை பதிவு செய்த அருமையான உயிர் ஓட்டம்மிக்க ஆக்கம். ஒவ்வொரு மனசாட்சிமிக்கவரிகளையும் உலுக்கிபார்க்கும் நியாமான உரையாடல்.வாழ்துக்கள். இந்த சாபகேடு கெட்டொழிய வல்ல அல்லாஹ்வின் துணைவேண்டி நிற்போம்.இனிவரும் காலங்களை நாம் திருத்துவோம்,புனித இஸ்லாத்தை நிலை நிறுத்துவோம்.

ZAKIR HUSSAIN said...

எனக்குத்தெரிந்து நமது ஊரை சரியாக observe செய்வதில் எப்போதும்
Bro மு.செ.மு. நெய்னா முஹம்மதுமுதலில் இருக்கிறார் என சொல்வேன்.

சமுதாய சீர்கேடுகள் கலைய அதிரையில் இவரின் எழுத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

திரும்ப திரும்ப வரதட்சினை பிரச்சினைகள் தலைதூக்கும்போது...என்ன எழுதினாலும் , என்ன ஹதீஸ் சொன்னாலும் இப்படி எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி' ஏன் இப்படி இருக்கிரானுங்க ? என நினைக்க தோன்றும் [ இவனுகளுக்கு மரியாதை எல்லாம் தேவை இல்லை ]

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இங்கு கருத்திட்ட எனதருமை காக்காமார்கள் அபுஇபுறாஹீம், சபீர், சாகுல், அலாவுதீன், நண்பன் தஸ்தகீர், மைத்துனன் ஜஹபர் சாதிக், புதிய வரவான தம்பி முஹம்மத் மற்றும் படித்த இன்னும் கருத்திட இருக்கும் அனைவர்களுக்கும் என் இனிய சலாமும் ஈருலக பாக்கியம் பெற து'ஆவும் சென்றடையட்டுமாக...ஆமீன்...

வாப்பாவுடைய உரையாடலில் ஒன்றை குறிப்பிட்ட மறந்து விட்டேன் இயன்றால் இதையும் மேலே சேர்த்துக்கொள்ளவும்.

வாப்பா : தம்பீ, இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றெடுத்ததால் உனக்கென்று என் இருபத்தைந்து வருட உழைப்பில் ஒன்றும் சேர்த்து வைக்க முடியாமல் போய் விட்டது. எனவே நான் ஹயாத்துடன் இருந்து பணி ஓய்வு பெறும் பொழுதோ அல்லது இறைவன் நாட்டத்தில் மரணம் நிகழும் பொழுதோ கம்பெனியிலிருந்து கிடைக்கும் என் சர்வீஸ் பணம் தான் உனக்கு நான் சேர்த்து வைத்த சொத்து. த‌ய‌வு செய்து இதை யாரிட‌மும் சொல்லி விடாதே. கார‌ண‌ம் இதிலும் ப‌ங்கு கேட்டு வ‌ந்து நிற்பார்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ இருந்து கொள்.

இது போல் ந‌ம்மூரில் உரையாட‌ல் மூல‌ம் தெரிவிக்க‌ வேண்டிய‌ விச‌ய‌ங்க‌ள் நிறைய‌ இருக்கின்ற‌ன‌. அதை ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ம‌ற்றும் அவ‌ர்க‌ளின் மேலான‌ க‌ருத்துக்க‌ளை வைத்தே இனி இது போல் அவ்வ‌ப்பொழுது எழுத‌ முய‌ல்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பான ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளே,

ந‌ம‌தூரின் பிர‌தான‌ வ‌லைப்பூவாக‌ அதிரை நிருப‌ர் த‌ள‌ம் இருந்து வ‌ருவ‌தால் இந்த‌ ச‌ந்தோச‌மான‌ செய்தியை இங்கு ப‌திவ‌தில் அக‌ம் ம‌கிழ்கிறேன்.

இன்று காலை க‌லைஞ‌ர் செய்திக‌ள் தொலைக்காட்சியில் என் சிறுவயது பள்ளித்தோழன் அதிரை பிரைட் மீராவின் (மீரா மொய்தீன்) அதி ந‌வீன மாதிரி போர்க்க‌ப்ப‌லையும் அதை உருவாக்கிய‌ ந‌ண்ப‌ன் மீராவின் பேட்டியையும் காணொளியாக‌ த‌ந்தார்க‌ள். அதை க‌ண்டு ம‌கிழ்ச்சியில் ந‌ம‌தூருக்கு கிடைத்த‌ பெருமையாக‌வும், பிர‌தான‌ செய்தி ஊட‌க‌ங்க‌ளில் இது போல் ந‌ம‌தூருக்கு பெருமை சேர்க்கும் த‌னிந‌ப‌ர் க‌ண்டுபிடிப்பு ப‌ற்றி வெளியிடுவ‌து இதுவே முத‌ல் முறை என்று எண்ணி க‌ண்க‌ள் க‌ல‌ங்கினேன் (யாரிட‌மோ என் உள்ள‌ம் எங்க‌ள் தூய‌ தேச‌ப‌ற்றையும் புரிந்து கொள்ளுங்க‌ள். நாங்க‌ளும் இந்த‌ நாட்டின் உண்மைப்பிர‌ஜைக‌ள் தான‌ப்பா என்று உளுக்கிக்கேட்ப‌து போல் இருந்த‌து).

இய‌ன்றால் அ.நி. அதை த‌ர‌விற‌க்க‌ம் செய்து இங்கு ந‌ம் அனைவ‌ரின் பார்வைக்காக‌ காணொளியாக‌ வெளியிட‌ முய‌ற்சிக்க‌லாம்.‌


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் நெய்னா,

அதிரை சகோதரர் மீரான் மெய்தீன் தொடர்பான மகிழ்ச்சியான் செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

இந்த செய்தியை இணையத்தில் தேடிபிடித்து விரைவில் அ நி இணைக்க முயற்சிக்கிறோம்.

ZAKIR HUSSAIN said...

//யாரிட‌மோ என் உள்ள‌ம் எங்க‌ள் தூய‌ தேச‌ப‌ற்றையும் புரிந்து கொள்ளுங்க‌ள். நாங்க‌ளும் இந்த‌ நாட்டின் உண்மைப்பிர‌ஜைக‌ள் தான‌ப்பா என்று உளுக்கிக்கேட்ப‌து போல் இருந்த‌து//

எனக்கு இதுபோன்ற கருத்துகளில் உடன்பாடில்லை.

யார்?, யாரிடம்? போய் நாம் இந்த நாட்டின் பிரஜை என்று உறுதிப்படுத்தவேண்டும்.?

கண்ட நாய்களும் குரைத்துக்கொண்டிருக்கும் , அதற்கு நாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசத்தல் காக்கா: உங்களின் கருத்தோடு அப்படியே உடண்படுகிறேன் !

எவனிடம் கேட்டுப் பெற வேண்டும் நமது உரிமையை !?

டைம்ஸ் நவ் செய்திச் சேனலில் பொறம்போக்கு news hourல் அடி வயிற்றிலிருந்து கத்துவானே ! அனைப் போன்றோர்களால் தான் இப்படிச் சொல்ல வேண்டியிருக்கிறது !!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோ:நெய்னா புகை படம் தெளிவாக இல்லை என்றாலும் சிறுவனின் பேச்சு மிக தெளிவாக இருக்கிறது இன்ஷா அல்லாஹ் இனி வரும் சமுதாயம் தெளிவுள்ள சமுதாயமாக வரும் நாமும் அதிகமாக முயச்சி செய்வோமாக.

பனிரெண்டாவது பாராவில் உன்னுடைய மர்மக்கலையால் குத்துற குத்து.சிந்தனையை சிதறடிக்கின்றன.

ஆமா ?வாப்பாவும் மகனும் அலைப் பேசியில் பேசிய பேச்சா அல்லது நீச்சல் குளத்தில் தண்ணீர்கடியில் இருந்து பேசிய பேச்சா?

சகோ மீராமொய்தீன் படைப்பான போர் கப்பலை பார்த்து வியந்தேன்.

Yasir said...

ஊரின் இயல்பான பேச்சு நடையுடன் சமுதாய சீர்கேட்டையும் குத்தி காட்டியது அருமை....வாழ்த்துக்கள் சகோ.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பினிய சகோதரர் நெய்னா..

நலமா?

வேலை பளு அதிகம், உடன் கருத்திட முடியவில்லை.

உணர்ச்சிப் பூர்வமான உரையாடல், தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.

ஜஸக்கால்லாஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு