Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 9 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 04, 2011 | , , ,



சர்க்கரை நிர்வாகம் பகுதி – 9



உமர் தம்பி துபையில் அல் குசைஸ் பகுதியில் வாழ்ந்தார். நானும் நாடு திரும்பும் வரை உமரோடு வாழ்ந்திருந்தேன். பிள்ளைகளுக்கு கல்வியில் உதவி செய்தல் என் போழுதுபோக்கானது. உமரின் பொழுதுபோக்கு என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வந்து போவர்கள். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அமீரகத்தில் வாழ்ந்திருந்த நாட்களில் மறக்கமுடியாதவை அல் குசைஸ் வாழ்க்கை.


உமர்தம்பி 1983 –ல் துபாய் வந்தார். ஈராண்டுகளுக்குப் பின் விடுப்பில் நாடு திரும்பினார். அல்ஹம்துலில்லாஹ்! அப்போது நல்ல உடல் நலத்தோடு இருந்தார். இரண்டு மாத விடுமுறையை மகிழ்ச்சியோடு கழித்துவிட்டு துபாய் திரும்பினார். இப்போது அவர் உடலில் மாற்றத்தைப் பார்தேன். உடல் மெலிந்திருந்தார். விளக்கம் கேட்டபோது தனக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகச் சொன்னார். இப்போது உடலைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. உணவில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தார். அடுத்தமுறை நாடு திரும்பியபோது சென்னையிலுள்ள நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார். அப்போதெல்லாம் நோய் மாத்திரைகளுக்கு ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார்.


இவ்வளவுக்குப் பின்னும் இனிப்பு அவர் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்தது. இணையம் அவரோடு ஒத்துழைத்தது; ஆனால், கணயம்?! இணையம் இன்சுவையைத் தந்த அளவுக்கு கணயம்இன்சுலினைத் தரவில்லியே! உமர், அலுவலக நிர்வாகம், கணினி நிர்வாகம், குடும்ப நிர்வாகம், சர்க்கரை நிர்வாகம் இவற்றைக் கவனித்து வந்தார். இவற்றுள் முதல் மூன்று நிர்வாகங்கள் அவர் கட்டுப்பாட்டில் இருந்தன. சர்க்கரை நிர்வாகம் அவர் கட்டுபாட்டுக்குள் வர மறுத்தது. இன்னும் சொல்லப்போனால் அதுதான் அவரை நிர்வகித்தது. ஒரு சர்க்காரை நிர்வகித்துவிடலாம் போலிருக்கிறது, சர்க்கரையை நிர்வகிப்பது மிகவும் கடினம். உமர் சர்க்கரை நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தப் பரிசோதனை செய்துகொள்வார். உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பார். நடைப் பயிற்சிக்குப் பதிலாக வீட்டிலேயே உடற்பயிற்சி சாதனங்களை வைத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வார்.


சர்க்கரை நோய் பற்றி உமர் அறிந்து வைத்திருந்த அளவுக்கு வேறு சராசரி மனிதர்கள் யாரும் அறிந்து வைத்திருக்க வாய்பு குறைவு. அவர் எழுதிய கட்டுரைகளே அதற்குச் சான்று ( இனிப்பும் கசப்பும் (2003) http://thendral.blogspot.com ) அது ஒரு நோய் இல்லை என்றும் அது ஒரு குறைபாடு என்றும் சொல்வார். சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய ஆறுதல் வார்த்தைகளையும் அறிவுரைகளையும் கூறியிருக்கிறார். நான் உமரிடமிருந்துதான் அந்த நோயைப் பற்றி நிறையக் கேட்டுத் தெரிந்திருக்கிறேன். இனிப்பு ஒரு பாரம்பரிய நோய். கட்டுப்பாட்டுடன் அதற்கு குடியுரிமை கொடுக்கலாம்; அதிரடியாக நாடு கடத்திவிட முடியாது. இனிப்பு நோய், நோய்களின் தாய். இனிப்பு கூடிவிட்டால் கிளை நோய்களை ஏற்படுத்தும். குறைந்துவிட்டால் உடனே சாய்த்துவிடும். பல முறை இனிப்பு கூடி அவதிப் பட்டிருக்கிறார் உமர்.


இனிப்பு குறைந்துவிட்டு அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், சுய நினைவை இழக்கும் நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிடும். எங்கள் சகோதரி இரண்டு மூன்று முறை இப்படிப்பட்ட நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார். அந்த நேரத்தில் உமர் சுறுசுறுப்பாக இயங்கி, நீரில் சர்க்கரையைக் கரைத்துக் கொடுப்பார். சுய உணர்வு திரும்பிவிடும். குடியைக்கெடுக்கும் சர்க்கரைதான் குடிக்கக் கொடுத்தவுடன் உயிரைக் கொடுக்கிறது! அப்படிப்பட்ட நிலைமைக்கு உமரும் சிலமுறை ஆளாகியிருக்கிறார். ஒரு முறை துபாயில் விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்தபோது; மற்றொரு முறை உறவினருக்காக சென்னை மருத்துவ மனையில் இரவு தங்கியிருந்தபோது; பிறிதொரு முறை ஊரில், மாலையில் நடைப்பயிற்சி செய்யும்போது.

சம்பள உயர்வு கேட்டு ஒற்றைக் காலில் நிற்பான் தொழிலாளி. கவனிக்காமல் காலத்தைத் தள்ளிப்போடும் முதலாளியோ, ஒரு சர்க்கரை நோயாளி. ஒரு நெருக்கடியான கட்டத்தில் அவருக்கு சர்க்கரை குறைந்துவிட்டால் “ஒரு மிட்டாய் இருந்தால் கொடேன்” என்று அந்தத் தொழிலாளியையே பார்த்துக் கேட்கும் பரிதாப நிலை ஏற்பட்டுவிடும். அவர் கேட்டது இன்க்ரீமென்ட்; இவர் கேட்டது பெப்பெர்மென்ட். அப்படிப்பட்ட வினோத நிகழ்வுகள் உண்மையில் நடந்திருக்கின்றன. அந்த அளவுக்கு நிலைமையைத் தலை கீழாக மாற்றிவிடும் இந்த நோய்! தள்ளிப்போட முடியுமா மிட்டாய் காலத்தை? சென்னையிலுள்ள நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி, விடுமுறையில் போகும்போதும் சரி, இந்தியாவில் நிரந்தரமாக தங்கிய பிறகும் சரி வைத்தியம் பெற்றிருக்கிறார்.


இன்சுலின் போடும் அளவுக்கு அவருக்கு சர்க்கரை கூடியிருந்தது. அங்கே அவர் வைத்தியம் பெற்றதைவிட, சர்க்கரை நோயைப்பற்றி அறிந்து கொண்டதுதான் அதிகம். மருத்துவர்களோடு அந்த நோய்க்கே உரிய கலைச் சொற்களைப் பயன் படுத்தித்தான் பேசுவார். தான் அறிந்த தகவல்களை மருத்துவர்களுக்குச் சொல்வார். இந்த நேரத்தில் உமரின் இனிப்பு நோய் உச்ச கட்டத்தில் இருந்தது. பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளானார். அமீரகம் வந்து ஆண்டுகள் பதினெட்டு உருண்டோடிவிட்டன. I.M.D. இலிருந்து ஓமான் நேஷனல் திரும்பி வந்த பிறகு அங்கே நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் உமர் குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட முடிவு செய்தார். பிள்ளைகள் முன்பே ஊருக்குக்கு சென்று இந்தியாவில் தங்கிவிட்டார்கள். பிள்ளைகளும் படிப்பைத் தாயகத்தில் தொடர ஆரம்பித்து விட்டர்கள் மூத்த பையன் புதுக் கல்லூரியில் முதுகலை வகுப்பில் படித்துவந்தான். இரண்டாவது பையன் கொடைக்கானலில் படித்துக்கொண்டிருந்தான்.உமர்தம்பி தன் மனைவியுடன் ஊர் புறப்பட்டுச் சென்றார். இந்த முறை அவரிடம் வீட்டுத் தளவாடங்களும் மற்ற பொருள்களும் அதிகம் இருந்தன. சென்னை வழியாகச்சென்றார். மகன்களை சென்னை வரும்படிச் சொல்லியிருந்தார். அடுத்த நாள் காலை சென்னையிலிருந்து போன் வந்தது. பெற்றோர் நலமாக வந்து சேர்ந்ததாக மூத்த மகன் சொன்னான். நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.

இதே போல்தான் ஒருமுறை உமரை ஏர்லங்கா விமானத்தில் கொளும்பு வழியாக திருச்சி அனுப்பியிருந்தோம். மறுநாள் காலை தொலை பேசிக்காகக் காத்திருந்தோம். தகவல் இல்லை. சிறிது நேரத்தில், திருச்சியிலிருந்து S.K.M.H. போன் செய்திருந்தார். விமானம் வந்துவிட்டது. ஆள் வரவில்லை என்று! நாங்கள் குழம்பிப்போனோம். துபாய் ஏர்லங்கா அலுவலகத்துக்கு போன் செய்து கேட்டோம். அவர்கள் “இதுவரை எல்லாரும் ஊர் போய்ச் சேர்ந்திருப்பார்களே, எங்களுக்கு எல்லாம் இயல்பாகத்தானே இருக்கிறது. எந்தத் தகவலும் வரவில்லையே” என்றார்கள்.


இதற்கிடையில் ஊரிலிருந்து திருச்சி வந்தவர்கள் திரும்பி ஊர் போய்விட்டார்கள்.பிறகு ஊரிலிருந்து எங்களுக்கு போன் வந்தது. “துபாய் - கொளும்பு விமானம் தாமதமானதால் திருச்சி விமானத் தொடர்பு கிடைக்கவில்லை. கொளும்பில் தங்க இடம் கொடுத்திருக்கிறார்கள். மறுநாள் காலை வருவார்” என்று. இந்தத் தகவலை உமர் கொளும்பிலிருந்து போன் மூலம் தெரிவித்திருக்கிறார். இப்படிப்பட்ட எந்த அசம்பாவிதமும் சென்னையில் நடக்காமல் இருந்ததே என்று நான் நிம்மதியுடன் இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


தொடரும்...
- உமர்தம்பி அண்ணன்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிலேடை பொங்கும் மொழியாடல் ! அழகுற பயணிக்கும் தெளிந்த நீரோடை போன்ற எழுத்து நடை !

எல்லாமே புதுமை இங்கே !

அபு ஆதில் said...

ஒரு சர்க்காரை நிர்வகித்துவிடலாம் போலிருக்கிறது, சர்க்கரையை நிர்வகிப்பது மிகவும் கடினம்.
ஒவ்வொரு வரிகளும் சித்திரமாய் மனதில் பதிகிறது.

ZAKIR HUSSAIN said...

சார் நீங்கள் சொல்லியிருக்கும் விதம் இதற்க்குமுன் பல ஆக்கங்கள் எழுதிய அனுபவ எழுத்தை பிரதிபளிக்கிறது.

அப்துல்மாலிக் said...

//ஒரு சர்க்காரை நிர்வகித்துவிடலாம் போலிருக்கிறது, சர்க்கரையை நிர்வகிப்பது மிகவும் கடினம்.//

:) :))))))

sabeer.abushahruk said...

உமர் காக்காவின் மறைவு தரும் மன அழுத்தம், வாவன்னா சாரின் சுவாரஸ்யமான வர்ணனையில் சற்றே மட்டுப்படுகிறது!

Shameed said...

அழகிய வர்ணனை எழுத்தில் அனுபவம் மிளிர்கின்றது

Shameed said...

அழகிய வர்ணனை எழுத்தில் அனுபவம் மிளிர்கின்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

தேனினும் இனிய தமிழ்
அதனினும் இனிய சகோதரம்
இதயத்தில் நீடித்திருக்கும் நினைவாற்றல்
இப்படித்தானிருக்க வேண்டும் இனிய சகோதரங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு