கடிதங்கள் கூட இலக்கியமாகுமா? எழுதுபவரையும், எழுதப்படுபவரையும், எழுதும் விஷயத்தை பொறுத்தும் ஆகலாம். ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திராவுக்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பு “ GLIMPSES OF WORLD HISTORY” என்று நூலாகி இருக்கிறது. அதேபோல் நெப்போலியன் தனது மனைவி ஜோசபினுக்கு , ஹிட்லர் தனது காதலிக்கு, ஆபிரஹாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு, ரொனால்டு ரீகன் தனது மனைவி ரேனிக்கு, லிபியாவின் கடாபி ஜனாதிபதி ஒபாமா ஆகியோருக்கு இடையில் நடந்த கடிதபோக்குவரத்துக்கள் உலகில் போற்றப்படுகின்றன. அண்ணாதுரை அவர்கள் “அன்புள்ள தம்பிக்கு” என்று எழுதிய கடிதங்கள் இலக்கிய தரம் வாய்ந்தவை.
இதோ இங்கே ஒரு கடிதம் பிரசுரிக்கப்படுகிறது. இது இரு நண்பர்களுக்கிடையே ஒரு நாற்பத்தி ஐந்து ஆண்டு கால நட்பின் பரிணாமங்களை கூறும் கடிதம். ஒரு நண்பரால் இன்னொரு நண்பருக்கு எழுதப்பட்டது. எழுதியவரின் அனுமதி பெற்று இதை அனுப்பி இருக்கிறேன். எழுதப்பட்டவருக்கும் இது வெளியிடப்படுவதில் மகிழ்வே. இதை எழுதியது யார் ? யாருக்கு எழுதப்பட்டது என்பதை நம்மில் சிலர் கண்டு பிடித்துவிடலாம். கண்டு பிடிக்க முடியாவிட்டால் பின்னூட்டத்தில் போட்டு உடைத்துவிடலாம். உடைத்து. பெரிய இலக்கியத்தரம் என்ற வரிசையில் வராவிட்டாலும் கூட நம்மில் எல்லோருக்குமே பொதுவாக அடுத்தவர் கடிதத்தை படிப்பதில் ஒரு சின்ன சபலமும் சந்தோஷமும் இருக்கலாம். அந்த சந்தோஷத்தை தரும் பெறும் நோக்கத்தில் மட்டுமே இது அனுப்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒரே சீரியஸ் ஆன விஷயங்களையே சிந்திக்கும்/படிக்கும் மனதுக்கு ஒரு சின்ன ரிலாக்ஸ்.
இதோ அந்தக்கடிதம் இப்படி தொடங்குகிறது....
யாவினும் இனிய நண்ப!
அஸ்ஸலாமு அலைக்கும்.
தாங்கள் குறிப்பிட்டு இருப்பதுபோல் உலகம் முழுதுமிருந்து எத்தனையோ நண்பர்கள் எனது கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு எனது நலம் கேட்டிருந்தாலும் அவர்களில் பலர் இதுவரை நம்மை போல் ஒன்றாக உண்டு, உறங்கியவர்கள் அல்ல. இணைய தளத்தில் எனது எழுத்துக்களை ரசித்து நட்பு பாராட்டியவர்கள் அவர்களில் பலர்.
“ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன?
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”
என்று பாரதி பாடிய வரிகளுக்கு ஒப்ப, எனக்கு வேராகவும், நீராகவும் இருந்ததும் இருப்பதும் உங்கள் நட்பே! இதை நான் ஐ.நா சபையில் கூட அறிவிக்க தயார்.
மீண்டும் கூற வேண்டுமானால் எனது வாழ்வில்
“நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்” இருந்தது உங்கள் நட்பே!
மாணவப்பருவத்தில் நாமும் களித்திருக்கிறோம். ஒரே நாளில் மூன்று படங்கள் பார்த்திருக்கிறோம்.
டில்லிக்கு ராஜாவாக இருந்தாலும் பள்ளிக்கு பிள்ளைதானே. பின்னாளில் பெரிய பேராசிரியராக வந்து புகழ் பெற இறைவன் நாடி இருந்தாலும் சிறு வயதில் எல்லோரும் சேட்டைகள் செய்தவரே. பூக்கின்ற நேரத்தில் பூத்தலும் காய்க்கின்ற காலத்தில் காய்த்தாலும், பழுக்கின்ற நேரத்தில் பழுத்தலும் பழுதல்லவே.
தஞ்சைமணிக்கூண்டு மங்களம்பிகாவில் நெய் மசால் தோசையும், இந்தோ இலங்கையில் கோலா உருண்டை குழம்புக்கறியும், சென்னை புகாரியில் பீச் மெல்பாவும் ருசித்து இருக்கிறோம்.
தொப்பிக்கடை மாடியில், இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு உறக்கம் வரும்வரை வெறும் தரையில் படுத்துக்கொண்டே விடிய விடிய விடிய குட்டி காதருடனும், அய்யம்பேட்டை சபீருடனும், அரசனகரி நிஸாருடனும், தோப்புத்துறை ரெஜாக்குடனும், சக்கராப்பள்ளி சாலிகுடனும் அரட்டை அடித்து இருக்கிறோம். அந்த காலத்தில் சிரித்த சிரிப்புகளைக் கொண்டு எத்தனையோ கிலோவாட் மின்சாரம் தயாரிக்கலாம்.
நானும் நீஙகள் ஆடியும் பாடியும் களித்திருக்கிறோம். ஆனாலும் வகுப்பில் முதலாவதாக வந்தும் காட்டியிருக்கிறோம்.
நீங்கள் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1965-66) நீங்களும் , நான் பதினோராம் வகுப்பு படிக்கும்போது (1967-68) நானும் வாக்களிக்கப்ப்பட்டு பள்ளியின் மாணவர் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். (நமக்கு கேள்ஸ் ஓட்டு அதிகம் விழுந்தது- எனக்கு இன்னும் அதிகம் விழுந்தது - காரணம் நான் நாடகத்தில் பெண்வேடமிட்டது முதல் எனக்கு வசந்தி என்று பெயர் சூட்டி கிண்டலடிப்பார்கள், வேறொரு நாடகத்தில் நான் திப்பு சுல்தானாக நடித்ததை வசதியாக மறந்துவிடுவார்கள்.)
அந்த நேர பள்ளி பாராளுமன்றத்தில் நாம் இருவருமே அடுத்தடுத்த பிரதமர்கள்! அம்மடியோவ். நம்மீது ஊழல் புகார் எதுவும் வரவில்லை. பள்ளி பாராளுமன்றத்தில் மீலாது விழா கணக்கை நீங்கள் சமர்ப்பிக்கும்போது விருந்தினருக்கு “வெண்சுருட்டு” (சிகரெட்தான்) வாங்கியது என்று நீங்கள் கணக்கு படித்தது ஒரு எதிர்கால தமிழ் பேராசிரியராக வருவதற்கு அச்சாரமிட்டது. அன்று உங்களுக்கு எதிராக எதிர்கட்சி தலைவர் நண்பர் அதிரை அன்வர் அவர்கள்.( இன்றைய த.த.ஜ.).
எனக்கு இரண்டு வருடம் மூத்தவராக நீங்கள் படித்து உங்கள் புத்தகங்களை அப்படியே நான் பெற்றுக்கொள்ள வசதியாக இருந்தது. ஆனாலும் அதற்காக என வீட்டில் பணம் வாங்கி நூர் லாட்ஜிலும், ஆரிய பவனிலும் தின்று செலவு செய்ததும், கொழும்பு ஸ்டோரில் சட்டை துணி எடுத்ததும் வேறு விஷயம். நீங்கள் சப்தம் போட்டு அழகு தமிழில் படிப்பதை கேட்டு கேட்டு பதினொன்ராம் வகுப்பு பாடங்கள் எனக்கு ஒன்பதாம் வகுப்பிலேயே மனப்பாடம் ஆனதே அது பெரிய விஷயம். குப்தர் காலம் பொற்காலம், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை, ஒருவிதையிலை இருவிதையிலை தாவரம், வட்டத்தின் பரப்பளவு, பித்தகொராஸ் தேற்றம், பறவை பறக்கும் விதத்தை விவரி, தவளையின் இனப்பெருக்கம், போர்மூண்டகாலை மனோன்மணிய நடராசன் வீரர்களை நோக்கிப்பேசியது, அவன் புல்லையும், நாங்கூழ் புழுவையும் பார்த்து பேசியது, கண்ணகி கால் சிலம்பை ஒடித்தபோது 'தேரா மன்னா' என்று பேசியது உட்பட அனைத்தும் இன்றும் என் நினைவில் பதிந்த காரணம் நீங்கள் சப்தமிட்டு சப்தமிட்டு படித்து அவை எனக்கும் மனப்படமாகி இருந்தது. இன்று கேட்டாலும் சொல்வேன்.
கட்டுரைப்போட்டியிலும், பேச்சுபோட்டியிலும் பரிசுகளை அள்ளிக்குவித்து இருக்கிறோம். காந்தி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டியில் மாவட்டத்தில் முதல் பரிசு பெற்று வந்தோம். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தஞ்சை மாவட்டத்தின் பிரதிநிதியாக நீங்களும் வட ஆற்காடு மாவட்ட பிரதிநிதியாக வாணியம்பாடியிலிருந்து நானும் கலந்து கொண்டு அன்றைய சட்ட கல்லூரி சார்பில் வந்த சுகி சிவத்திடம் தோற்றுப்போனோம். கோவை பி. எஸ். ஜி. கலைகல்லூரியில் பரிசு பெற்று வந்தோம். வேலூர் ஊர்சு கல்லூரியில் கவிக்கோ அப்துல் ரகுமான் கையால் பரிசுக்கோப்பை வாங்கினோம். பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சிற்றின்பம் / பேரின்பம் பேச்சுப்போட்டியில் வாகை சூடினோம். நம்மிடம் தோற்ற பலர் பின்னாளில் அரசியலில் புகுந்து அமைச்சர்களாகவும் , சபாநாயகரராகவும் வந்தது தனிக்கதை. உள்ளூர் மாணவர்களானாலும் கல்லூரிக்கு நாம் உதாரண மாணவர்களாய் இருந்து இருக்கிறோம். ஆசிரியர்கள் அனைவரின் அன்பையும் பெற்றோம்.
ஒரு முறை கல்லூரியில் காந்தி நூற்றாண்டுவிழா பட்டி மன்றத்தில் நாம் எதிர் எதிர் அணியில் பேசும்போது வட்ட மேசை மாநாட்டுக்கு காந்தியை ஏன் அனுப்பினார்கள்? கோகலேயை , திலகரை ஏன் அனுப்பவில்லை என்று நீங்கள் கேட்க அடுத்து பேச வந்த நான் வட்டமேசை மாநாடு நடக்கும்போது கோகலேயும் திலகரும் உயிரோடு இல்லையே செத்தவர்களை எப்படி அனுப்ப முடியும் என்று கேட்க-
மற்றொரு பட்டி மன்றத்தில் சொந்த விஷயத்தை எடுத்து உதாரணத்துக்கு நான் பேச, பந்து விளையாட்டில் பாலைத்தான் ( BALL) உதைக்க வேண்டும் காலை அல்ல என்று நீங்கள் பேச-
இப்படியெல்லாம் பல உரசல்கள் இருந்தாலும் நாம் அன்று முதல் இன்று வரை நம்மை நாம் அறிந்து கொண்டவர்களாகவும் புரிந்து கொண்டவர்களாகவும் நமது நட்பு நாள்காட்டியில் நாற்பத்தெட்டு ஆண்டுகளை கடந்துவிட்டோம். நீங்கள் ஓயுவூதியம் பெறுகிறீர்கள். நான் இன்னும் ஊதியம் பெறுகிறேன்.
சிற்பிகள் இல்லாமலேயே நம்மை நாமே செதுக்கிக்கொண்ட சிற்பங்களாக வழிகாட்ட ஆள் இல்லாமல் நாமே நமக்கு தேர்ந்தெடுத்த வாழ்வுப்பயணங்கள். அப்பப்பா.....! உங்கள் வாப்பா ஜவுளிக்கடையும், புகையிலை வியாபாரத்தையும் கவனிக்கவே நேரம் இல்லா நிலையில், என் வாப்பாவோ பினாங்கிலிருந்து இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து ஓர் இரு மாதம் தங்கி அரைகுறையாய் கேள்விகேட்டு, விளங்கி ஆயிரம் அறிவுரைகள் மட்டும் சொல்லி செல்வார்கள். நாம் சொல்வதுதான் அவர்களுக்கு உண்மை. நாமே கூடிப்பேசி நமது உயர்கல்வியை தேர்ந்தெடுத்தோம் வழிகாட்ட ஆள் இல்லை. கணக்கு சொல்லித்தர ஆள் இல்லை. ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் சொல்லித்தர ஆள் இல்லை. ஆனாலும் நமக்கு நல்ல ஆசிரியர்கள் அமைந்தார்கள். அபிராமம் ரெஜாக் சாரும், இளையான்குடி பசல் முகமது சாரும் ( 42 வருடங்களுக்கு பிறகு இன்றும் உறவு வைத்து சென்ற முறை ஊர் சென்றபோது மதுரை போய் பார்த்து வந்தேன்), நம்மை இரும்பாக காய்ச்சி சம்மட்டி கொண்டு அடித்து அடித்து உருவாக்கிய பட்டரைக்காரர்கள்.
நட்புக்கு இலக்கணம் கூடிக்கதைபேசி, கூத்தடித்து, கும்மாளமிட்டு, ஊர்சுற்றுவது மட்டுமே என்று இருந்த, இருக்கும் நிலைகளை மாற்றி,
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும், முகம் புதைக்கும் மடியாகவும், முதுகில் தட்டும் கையாகவும், சாய்ந்து கொள்ளும் தோளாகவும், சாய்த்து கேட்கும் செவியாகவும், வழிந்தோடும் கண்ணீரை வழித்துவிடும் சுட்டு விரலாகவும், உடுக்கை இழந்தவனுக்கு கையாகவும் இருந்தன நமது நட்பு .
வாழ்க்கை புயலில் தடுமாறி கலங்கரை விளக்கு தெரியாமல் தடுமாறி நின்ற எனக்கு நண்பர் தாவூது அவர்கள் மூலம் ஒளிகாட்டி வழிகாட்டிநீர்கள். இரயில பயணம் போல் படித்து முடித்ததும் அவரவர் பாதைகளில் சென்று மறந்து வாழும் எண்ணற்ற நண்பர்கள் நடுவில் ஏறறத்திலும் இறக்கத்திலும் என்றென்றும் துணையாய் இருப்பது உங்கள் நட்பு.
நான் வீடற்று இருந்த நிலைகண்டு உஙகளில் ஒரு இடத்தை எனக்கு தந்து அதில் ஒரு உப்பரிகையும் கட்டி தந்து கனவில் கண்ட இல்லத்தை நனவில் ஆக்கித்தந்த நட்பு உங்களின் நட்பு. பணத்தால் மட்டுமே இவைகளை சாதிக்க இயலாது. அன்பு இழையோடும் நட்பால் மட்டுமே இவைகளை ஆக்கித்தர இயலும்.
ஒரு நண்பனின் ஒரு திருமணத்துக்குத்தான் சாட்சி கையெழுத்துப்போடும் நண்பர்களை காணமுடியும் . எனது இரண்டு திருமணத்துக்கும் நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டது மட்டுமல்ல- என் கையெழுத்து இல்லாத என் மகள் திருமணத்தின் பதிவு புத்தகத்தில் கூட கையெழுத்து போட்டுள்ளவர்கள் நீங்கள். அதையும்விட மேலாக எனது பேத்தியின் திருமண பதிவு புத்தகத்தில் கூட உங்கள் கை எழுத்து இருக்கிறது என்றால் நமது 48 ஆண்டுகால நட்பு வரலாற்றுக்கு நான் வேறென்ன சான்று கூற முடியும்?
ஊருக்கெல்லாம் கல்விக்கண் திறக்கின்ற தாங்கள் எனக்கு வாணியம்பாடி கல்லூரியில் வணிகவியலில் இடம் வாங்கி தந்தது ஒரு வழக்கமான செயலாக இருக்கலாம். ஆனால் என் பேரனுக்கும் அப்படி ஒரு வழி பிறக்கவும் இன்று அவன் ஒரு பொறியாளராக உருவெடுக்கவும் வித்திட்டீர்களே அதை எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் மறக்க முடியுமா?
“கண்ணை இமை இரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுறக்காக்கின்ற” தங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நலமும் இன்னும் வளமும் தந்து வாழ வேண்டும் என்பதை சொல்லி – இனியும் ஒரு முறை பிறக்க ஆசைப்படுகிறேன். அப்படி பிறந்தால் உங்களின் நண்பராகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பதை என் விருப்பமாக எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் சொல்லி விடைபெறுகிறேன்.
வஸ்ஸலாம்.
என்றும் உங்கள்,
// ----------- //
-இபுராஹீம் அன்சாரி