வேலை தேடுவோர்க்கு
சில அனுபவ குறிப்புகள்
கண்களில்
கனவுகளோடும், கைகளில் கோப்புகளோடும் கழுத்தில் டையோடும் வேலை தேடி நிறைய பேர் வருகிறார்கள். வலைதளங்களிலும்,
செய்தித்தாள்களிலும் தெரிந்தவர்கள்
மூலமாகவும் தான் அறிந்த வேலை முதல் அறியாத வேலை வரை எப்படியாவது ஒரு வேலையில்
அமர்ந்துவிட வேண்டுமென்று முயற்சி
செய்கிறார்கள். சிலருக்கு கூடி வருகிறது பலருக்கு கூடுவது இல்லை.
வேலை கிடைக்காதவர்கள், தங்களுக்கு போதுமான
தகுதிகள் இருந்தும் ஏன் அந்த வேலை
கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை. வேலைக்கு அமர்த்தப்படுவது என்பது
இரு முக்கிய காரணிகளின் கலவைகளின் வெற்றியாக
இருக்கும்.
ஒன்று நமது கல்வி
தகுதிகள், அனுபவங்கள், எதிர்பார்க்கும் சம்பளம், நமது பின்பலம் ஆகியவைகள். அடுத்தது - அந்த
தகுதிகளை நாம் உண்மையிலேயே பெற்று இருக்கிறோம் என்பதை நம்மை பேட்டி காண்பவர் உணருமளவு நம்முடைய நடை, உடை, பாவனைகளால் எப்படி
எடுத்துக்காட்டுகிறோம் என்பது. இது மிக, மிக முக்கியமானது.
பொதுவாக ஒரு
தனிப்பட்ட நிறுவனத்துக்கு ஒரு தனிப்பட்ட ஆள் அவர் பெற்றிருக்கும் தனிப்பட்ட
தகுதிகளின் அடிப்படையில் மட்டும் எப்படி பொருத்தமானவர் ஆவார் என்பதை அளவிட்டு சொல்ல
முடியாது. ஆனால் வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் கல்வி தகுதியுடன் கூடவே ஏன்
அதைக் காட்டிலும் வேலை தேடுபவர்களின் மனப்பக்குவத்தையும், நிறுவனத்தில் உள்ள
மற்றவர்களுடன் எப்படி ஒத்துப்போய் வேலை செய்வார் என்பதையும், நிறுவனத்தின்
இயல்புக்கு எந்த வகையில் ஏற்றவராக இருப்பார் என்பதையும், எவ்வளவு விரைவில் தன்னை
முழுதாக ஈடுபடுத்தி காரியங்களை கற்றுக்கொள்வார் என்பதையும் அளவிடுவார்கள்.நேர்காணலின்போது நீங்கள் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் பாங்கும் பக்குவமும்
உங்களின் கல்வியின் பின்பலத்தையும், தொழில்நுட்ப அறிவின் பட்டியலிடப்பட்ட்ட
அனுபவங்களின் தொகுப்பையும் விடவும் கை
கொடுக்கும் . இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வெற்றிபெற்றவர்களில் ஒருவராக
உங்களை ஆக்கக்கூடிய சிலவற்றை குறிப்பாகவும் ஆலோசனையாகவும் அனுபவத்தில் இருந்து தர
விரும்புகிறேன்.
1. நீங்கள் நிறுவனத்துக்கு தரும் தொடர்பு முகவரியும், தொலைபேசியும் உடனே
தொடர்புகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். விசிட் விசாவில் வேலை தேடி வருபவர்கள்
யாராவது தெரிந்த மாமா, மச்சான், நண்பர் உடைய தொலைபேசி எண்ணை தந்து விடுவார்கள். அவர் எங்கேயாவது ஒரு
கடையிலோ அல்லது இரைச்சல் மிகுந்த பகுதிகளில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பார் அவர் இடம் பேசி அவர்
உங்களுக்கு தகவல் தந்து நீங்கள் நேர்காணலுக்கு போய் சேர்வதற்குள் அந்த தமயந்தியை
வேறு எந்த நளனாவது தூக்கிகொண்டு போய் இருப்பான். உங்களை இலகுவாக தொடர்புகொள்ள
முடிந்த அல்லது உங்கள் கையில் உள்ள எண்களை குறிப்பிடுங்கள். அதுமட்டுமல்லாமல் ஈமெயில் மூலமாக உங்களுக்கும்
ஏதாவது விளக்கங்கள் உங்களை நேர்முகத்துக்கு அழைக்கும் முன்பாகவே எழுதி
கேட்கப்பட்டால் அவைகளுக்கு கண்ணியத்துடனும்
பொறுப்புடனும், (COURTEOUS AND PROFESSIONAL) பதில்
அளியுங்கள். தொலைபேசியில் உங்களுடன் பேசுகிறவர்கள் இயல்பாக பேசினால் நீங்களும்
இயல்பாகவே பேசுங்கள். நீங்கள் எந்த ஊர், எவ்வளவு நாளாக வேலை செய்கிறீர்கள்.
சம்பளம் சரியாக தருமா என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் நேர்முகத்துக்கு அழைக்கப்படும் முன்பே
உங்களைப்பற்றிய ஒரு நல்ல மனப்படத்தை
உருவாக்கி வையுங்கள்.(COMMUNICATION).
2. நிறுவனம் அழைக்கும்
நேரத்துக்கு சற்று முன்பே சென்று அடைந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். கழிப்பறை போன்றவற்றிற்கு
போக வேண்டிய தேவை இருந்தால் அவைகளை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். சிலர் வியர்க்க
விறுவிறுக்க ஓடி வருவார்கள். பதட்டமில்லாமல் பக்குவமாக இருக்கிறீர்களா என்பது
கவனிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பதறும் காரியம் சிதறும் என்பதை உணர்ந்து
கொள்ளுங்கள். (TIME KEEPING).
3. நேர்காணலுக்கு செல்லும்போது நேர்காண்பவர் இடம் அவரது தனிப்பட்ட
வாழ்க்கை பற்றி அனாவசியமாக தெரிந்து கொள்ள கேட்காதீர்கள். அவரிடம் நகைச்சுவை
துணுக்குகளை வீசிவிடாதீர்கள். (சேடை
விடாதீர்கள்.) இப்படித்தான் தாடிவைத்திருந்த நேர்கண்ட ஒருவரைப்பற்றி அவரது தாடி
சாம்பலில் விழுந்த இடியப்பம் மாதிரி இருக்கிறது என்று வெளியில் வந்து கமென்ட்
அடித்து ஒருவர் (நம்மாளுதான்) நல்ல வாய்ப்பை இழந்தார். ஒரு சிறிய புன்முறுவல்
பூத்த முகம் வெற்றிகளை கொண்டுவந்து சேர்க்கும்.
உரத்த குரலில் பேசாதீர்கள். அது உங்கள் தன்மையாக
இருந்தாலும் மாற்றிகொள்ளுங்கள். மென்மையாக மெல்லிய குரலில் அதே நேரம் தெளிவாக
பேசுங்கள். அதற்காக முனுமுனுக்காதீர்கள். கால்களை ஆட்டிக்கொண்டே பேசாதீர்கள். பேசும்போது
கைகளில் சொடக்கு விடாதீர்கள். தோள்களை சும்மா சும்மா தூக்கி தூக்கி இறக்காதீர்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் வாய்களை சுத்தமாக
கழுவிக்கொள்வதுடன் உங்கள் உடையிலும் அந்த புகை நாற்றம் வராமல்
பார்த்துக்கொள்ளுங்கள்.சூயிங்க் கம்களை வாயில் போட்டு சொதப்பிக்கொண்டே பேசாதீர்கள். உங்கள் வாழ்வும் சொதப்பிவிடும். (POLITENESS).
4. ஆடை
அணிந்து செல்வதில் தனி கவனம் செலுத்துங்கள். சிலர் நேர்முகத்தேர்வுக்கு போகும்போது
டை கட்டிப்போகவேண்டும் என்று ஒரு சடங்காக
வைத்து இருப்பார்கள். சில நிறுவன மேலாளர்கள் அதை விரும்பமாட்டார்கள். உஷ்ண
பிரதேசத்தில் - கொளுத்தும் வெயிலில் நடந்து வருபவன் இப்படி டை கட்டக்கூடாது என்று
கூட அறியாமல் இருக்கிறானே என்று கணக்குபோட்டு கழித்து விடுபவர்கள் இருக்கக்கூடும்.
எதற்கும் டை எடுத்து பேண்ட் பக்கெட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால
கட்டிக்கொள்ளுங்கள். (நான் அப்படித்தான் மஸ்கட்டில் சுற்றினேன்).
அந்த நிறுவனத்தில் ஏற்கனவே வேலை செய்பவர்கள்
அணிந்துள்ள உடை முறைகளை கவனித்து முடிவு
எடுக்கலாம். நிறைய டிசைன் போட்ட சட்டைகளை பொதுவாக அணிய வேண்டாம். ஒரு லைட் கலர்
அல்லது லைட் டிசைன் பொதுவாக நல்லது. டி சட்டை போடவேண்டியதாக இருந்தால் அதில்
எதுவும் அச்சிடப்பட்ட கோஷங்கள்
இல்லாமலும், இரட்டை அர்த்தம் தொனிக்கும் வாசகங்கள் இல்லாமலும்
பார்த்துக்கொள்ளுங்கள். ஒற்றை காதில்
கடுக்கன், வளையம், கையில் காப்பு, தலை முடியை கோதிக்கட்டி அதில் ஒரு ரப்பர்
பேன்ட் (ஆண்களுக்கு) இவைகளை அறவே தவிர்த்து விடவும். மிகவும் அதிகமாக வாசனை
ஸ்ப்ரேக்களை தெளித்துக்கொண்டு போகாதீர்கள். நேர்காண்பவருக்கு பிடிக்காத வாசனையாக
இருந்தால் அது உங்களையும் அவருக்கு பிடிக்காதவராக்கிவிடும். (AVOID
UNUSUAL APPEARANCE).
5. முக்கியமாக எந்த நிறுவனத்துக்கு அழைக்கப்பட்டு இருக்கிறீர்களோ அந்த
நிறுவனம் பற்றிய தகவல்களை முதல்நாளோ அல்லது முன்கூட்டியோ வெப்சைட்டில் போய் தேடி
படித்து வைத்துக்கொள்ளவும். நேர்காணலின்போது அந்த நிறுவனம் ஈடு பட்டுள்ள தொழில்
காரியங்கள் பற்றி (BUSINESS
ACTIVITIES) பேச்சுவாக்கில் வரும் மாதிரியாக தெரிந்துவைத்து இருப்பதாக குறிப்பிட்டுக்காட்டினால்
அந்த தொழிலைபற்றியும் நிறுவனத்தைப்பற்றியும்
ஏற்கனவே நீங்கள் ஆர்வமுடன் அறிந்து இருக்கிறீர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு
உங்களுடைய வெற்றிக்கு அது அடிகோலும். அதாவது ஒரு நிறுவனத்துக்கு வேலை தேடி
செல்லும் முன்பே அதைப்பற்றி வீட்டுப்பாடம் படியுங்கள். நீங்கள் எந்த வேலைக்கு
செல்ல தகுதி படைத்து இருக்கிறீர்களோ – அந்த வேலை பற்றிய தன்மைகள், அது பற்றி அந்த
நிறுவனம் எந்த மாதியான கேள்விகள் கேட்பார்கள் என்பதை நீங்கள் முன் கூட்டி
கணித்துக்கொள்ள இது உதவும் . முடிந்தால்
அந்த நிறுவனத்தில் வேலை செய்துவரும் யாரையாவது தொடர்புகொள்ள வாய்ப்பு இருந்தால்
தொடர்பு கொண்டு ஒரு முன்னோட்டம் பெற்றுக்கொள்ள முயலலாம். (HOME
WORK).
6. பேட்டியின்போது நிறுவன மேலாளர் வேலையின் தன்மை பற்றிய சில குறிப்புகளை
மேலோட்டமாக தரக்கூடும். அவைகளை நன்கு கவனித்து கேட்கவும் வேண்டும். அப்போதே நீங்கள
சில முடிவுகளை குறிப்பட வேண்டியிருக்கும் . அதாவது மேலாளர் அவருடைய
எதிர்பார்ப்புகளை குறிப்பிடலாம் நீங்களும் உங்களுடைய எதிர்பார்ப்புகளை எடுத்து
சொல்ல வேண்டி இருக்கும். கவனம் சிதறாமல் இருந்தால்தான் இது சாத்தியம். பேட்டியாளர்
உங்களிடம் வைக்கும் வேலை பற்றிய குறிப்புகளுக்கோ அல்லது நிறுவனம் உங்களுக்கு
தரத்தயாராக இருக்கும் ஈட்டுத்தொகை மற்றும் சலுகைகளுக்கோ (PACKAGE) நீங்கள் உடனடியாக பதில் தராமல் வானத்தைப் பார்த்துக் கொண்டோ
தாவக்கொட்டையை தடவிக் கொண்டோ இருந்தால் அது உங்களுடைய முடிவு எடுக்கும் தன்மை மீது ஒரு கரும்புள்ளி விழ வைக்கும். பேசுகிறபோது இல்லை
என்பதற்கோ ஆமாம் என்பதற்கோ தலையை ஆட்டாதீர்கள்.
வாய்
திறந்து பேசுங்கள். (LISTEN & ANSWER).
7. கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களை ஒரு நல்ல சுத்தமான் கோப்பில்
ஒவ்வொரு சான்றிதழையும் வெளியில் பளிச்சென்று தெரியும்படியான ட்ரான்ஸ்பரென்ட்
சீட்களில் வைத்து கோர்த்து சமர்ப்பியுங்கள். அத்துடன் கலவிச்சான்றிதழ்களை
தனியாகவும் அனுபவ சான்றிதழ்களை தனியாகவும் பங்கீடு செய்து பிரித்து கோர்த்து
வைப்பது சிறப்புடையதாகும்.சிலர் கல்விச்சான்றிதழ்களுக்கு இடையில் அனுபவ
சான்றிதழ்களை வைத்து குழப்பி இருப்பார்கள். அத்துடன் நீங்களே வாங்கி இருந்தாலும்
தேவைப்படாத சான்றிதழ்களை வைத்து கோப்பை பருமனாக்கி விடாதீர்கள். உதாரணமாக
பள்ளியில் படிக்கும் காலத்தில் திப்பு சுல்தான் நாடகத்தில் நடித்ததற்கு கிடைத்த
சான்றிதழ்,, நாட்டு நற்பணியில் போய் சேண்டாக்கோட்டையில் புதர் வெட்டியதற்கான
சான்றிதழ் போன்றவற்றை இணைக்காதீர்கள். அவைகளை உங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி
வைத்துக்கொள்ளுங்கள். சிலர் சான்றிதழ்களை கைகளில் பேப்பர் தோசையைபோல்
சுருட்டிகொண்டு வருவார்கள். வேறு சிலரோ ஒவ்வொரு சான்றிதழகளையும் கேட்க கேட்க
எடுத்துக்கொடுப்பர்கள். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
(PROFESSIONAL PRESENTATION)
8.
வேலை கிடைத்துவிட்டது . ஆனாலும் இந்த பயணம்
முடிவுறாது. பொதுவாக நமக்கு தெரியாமலேயே சில குறிப்பிட்ட காலம்வரை நம்மை
கண்காணிக்க சில நிறுவனங்களில் ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆகவே நாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட வேலைகளில் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உங்களின் கண்காணிப்பாளர்
காணும் வகையில் வெளிப்படுத்துங்கள். அந்த நிறுவனத்துக்கே உரித்தான சில
பழக்கவழக்கங்களுக்கு மார்க்கத்துக்கு மாற்றமில்லாதவகையில் மாறிக்கொள்ளுங்கள். அப்போதுதான் நீண்ட காலத்துக்கு ஒரு
நிறுவனத்தில் தாக்குப்பிடிக்க இயலும். முன்னேற இயலும். (FLEXIBLE
TO NEW ENVIRONMENTS).
ஆனால் மேலே
குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் தலையாயதாக எந்த வேலையையும் தேடி வெளியே
கிளம்பும் முன்பு இறைவனிடம் தொழுது து ஆச்செய்து செல்லுங்கள். அன்றைய சுபுஹு
தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்கள். கிட்ட அரிதானது என்று நினைப்பதும்
கிட்டும். தன்னம்பிக்கை உண்டாகும். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடி நடந்தேறும்.
முடிவாக, படித்துவிட்டு
பட்டங்களையும் பட்டயங்களையும் மட்டும் பை நிறைய கொண்டு வந்தால் மட்டும் வேலை
கிடைத்துவிடாது. பழக்க வழக்கங்கள், தகவல தொடர்பு, நேரம் காப்பது, தோற்றம்,
அணிந்திருக்கும் ஆடை, பார்க்கப்போகும் வேலைகளைப்பற்றிய ஒரு அறிமுக முன்னோட்டத்தை
அறிந்து வைத்திருப்பது, சூழ்நிலைக்கு தகுந்தபடி மாற்றிக்கொள்வது ஆகியவைகளும் ஒன்று
கூடினால் வெற்றி உங்களுக்கே!
-இபுராஹிம்
அன்சாரி
46 Responses So Far:
வேலை தேடும் நமது சகோதரர்களுக்கு பயனுள்ள தகவல்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்.. மாஷா அல்லாஹ்...
இப்ராஹிம் அன்சாரி காக்கா,
உண்மையில் இரண்டுமாதம் பயிற்சி வகுப்பில் அமர்ந்த உணர்வு இந்த வேலை வழிகாட்டி தொகுப்பை படித்தவுடன். ஜஸக்கல்லாஹ்...
அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக,
விரிவாக இன்ஷா அல்லாஹ் இன்றிரவு கருத்திடுகிறேன்..
கல்லூரி படிப்பை விட இந்த கட்டுரைப்படிப்பில் நிறைய விசயங்கள் பொதிந்துள்ளன. இதை கவனமாக படித்து செயல் படுத்தினாலே வேலை தேடிச்செல்பவருக்கு கிட்டதட்ட வேலை கிடைத்தது போல் தான் இன்ஷா அல்லாஹ்....
நல்ல வேலை தேடி வாழ்வில் முன்னேற துடிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துடுப்பு. காக்கா தயவு செய்து உங்கள் அனுபவங்கள் இங்கு பேசிக்கொண்டே இருக்கட்டும்.
சகோ இபுராஹிம் அன்சாரி அவர்கள் தகுதிக்கேற்ற பதவி பெறுவது எப்படி என்பதை தன் அனுபவத்தைக் கொண்டு அற்புதமாய் தந்துள்ளார். இது வளைகுடா தேசங்களில் வேலை தேடுவோர்களுக்கு அவசியமான அறிவுரைகள்.
நம் அதிரை மக்கள் அன்று தொட்டு இன்று வரை வெளிநாடுகளில் வேலை தேடுவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று நம் நாட்டில் தரமான கல்வி பயின்றோர்க்கு தகுதியான வேலைகள் பல உள்ளன. அது பற்றி இது போன்ற அனுபவமிக்க ஆய்வுக் கட்டுரைகளை எழுதினால் இளைஞர்களுக்கு இன்றியமையாததாக இருக்கும்.
உங்களுடைய அனைத்து டிப்ஸ்களும் ஒரு சின்ன பேம்ப்லெட் ஆக பிரின்ட் செய்து வேலைக்கு [இன்டர் வீயூ] போகுமுன் படித்துவிட்டு போவது நல்லது.
சிலர் முழுக்கை சட்டையைக்கு ஏரொ கட்டிங் வைத்து தைத்து அவுட் சர்ட் செய்துஇருப்பார்கள்.[ராம ராஜன் மாதிரி ] அதெல்லாம் கந்தூரிக்கடையோட விட்டுங்கப்பா என யாராவது உங்களைப்போன்றவர்கள் சொன்னால் நல்லது.
அருமையான வழிகாட்டல்.
தங்களைப்போன்றவர்களின் அனுபவங்களே மிகச்சிறந்த பாடம்
நன்றியும் வாழ்த்துகளும்.
அதிரை வலைபூவிற்கு நீங்கள்தான் உண்மையான நிருபர்.டாக்டர் அப்துல் கலாமைபோல் உங்களுடைய கருது இளைங்கர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. எனது வாழ்த்துக்கள்.
எனக்குக் கிட்டிய அதே நூல் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கட்கும் கிடைத்து இருக்கின்றது. அருமையாக அதில் சொல்லப்பட்ட விடயங்களை அழகான தெளிவான நடையில் சொல்லியிருப்பது எல்லார்க்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பதில் கட்டுரையாளரின் அனுபவங்களும் இடையில் அமைத்து இருப்பதும் மிகச் சிறந்த அனுபவசாலி என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நான் அடிக்கடி சொல்லும் விடயம்; நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட ஓர் அனுபவம்: குறிப்பாக தமிழர்கள் திறமை மற்றும் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும் "மொழிப் புலமை" மிக மிகக் குறைவு. சுமார் 1500 மனுக்கள் எனதுத் தொடர்பு மூலம்
எங்கள் நிறுவனத்திற்கு எனது சிபாரிசில் அனுப்பப் பட்டன. நேர்முகத் தேர்வில் வென்றது ஒருவர்தான். அதுவும் ஒரு பெண்மணி. மேலாளர் என்னிடம் :" கலாம் உன்னிடம் இவ்வளவு ஆட்களின் தொடர்பு உண்டா" என்று கேட்டார். நான் சொன்னேன் கவிதைகளின் மூலம் எல்லாத் தமிழ்ச் சங்கத்திலும் அங்கத்தினராக உள்ளேன்;அதனால் அச்சங்கங்கள் மூலம் விடுக்கப்பட்ட அறிவிப்பினால் இவ்வளவு பேர்களை என்னால் சிபாரிசு செய்ய முடிந்தது" என்றேன். மேலும் , அவர் சொன்னர்" "நீ இவ்வளவுக் கஷ்டப்பட்டு ஆட்களை நேர்முகத் தேர்வுக்கு அனுப்பியும் அனைவரும் டிப்ளமா, டிகிரி, அனுபவம் எல்லாம் இருந்தும் WAY OF EXPRESSION வெளிப்படுத்திச் சொல்லும் திறமை- மொழிப் புலமை மிக மிகக் குறைவு அல்லது இலக்கணப் பிழைகள் காரணமாக நிராகரிக்கப்பட்டனார் " என்றார். .ACTIVE VOICE PASSIVE VOICE போன்ற அடிப்படை இலக்கணம் கூடத் தெரியாமல் உள்ளவர்களை நான் கண்டு வேதனைப் படுகின்றேன். இதனால் எவ்வளவுப் பெரிய விபரீதம் என்று கூட உணராமல் உள்ளனரே! I TOLD என்பதற்கு பதிலாக I WAS TOLD என்றுச் சொல்லும் அளவுக்குத்தான் அவர்களின் மொழிப்புலமை உள்ளது என்பதை நித்தம் காண்கின்றேன்.அதனாற்றான் BASIC ENGLISH GRAMMAR இலவசமாக ட்யூசன் சொல்லிகொடுக்கின்றேன் 1981 முதல் இந்த நொடி வரை ; அல்ஹம்துலில்லாஹ்
மெய்யாலுமே சொல்லப்போனால் வேலை தேடி ஏறியிறங்கிய அனுபவங்கள் எனக்கு இல்லை, ஆனால் ஏறியிறங்குபவர்களை அதிகமதிகம் சந்தித்து இருக்கிறேன் அது தொடரத்தான் செய்கிறது...
சில..
15 வருடங்களுக்கு முன்னால் ஹிந்தி அதிமுக்கியம் என்று சூழலிருந்தது அதோடு ம^^லை^^யா^^ளமும் சப்போர்ட்டுக்கு என்றானது....
அவ்வாறான கால கட்டங்களில் ஹிந்தில் நம்மவர்கள் தினறுவார்கள், மற்றவர்கள் திமிருவார்கள்...
ஆனால், எடுத்த எடுப்பிலேயே 'மலையாளியானு' என்று கேட்கும் போக்கு அப்போது நிறைந்திருந்தது இதனை மறுக்க முடியாது.
அத்ன் பின்னர் சில வருடங்கள் கழித்து ஹிந்தி(யா) என்ற போக்கும் குறைந்து ஆனால் "யானும்" என்று கேட்கும் தொணி கொஞ்சமிருந்தது.
அதன் பின்னர் பழைய டிரண்டு மாறியது, ஐ கோ, யூ கம் எல்லாம் யூ பிரிங், ஐ செக் எல்லா இடங்களிலும் சகஜமானது.
வேலைக்கான இண்டர்வியுக்கு தகுதியானவரை அவரின் அலைபேசி அல்லது கொடுத்திருக்கும் தொலைபேசிக்கு அழைத்தால் அறிமுகத்திற்கு பின்னர் முதல் இரண்டு வார்த்தைகள்தான் ஆங்கிலத்தில் ஓடும் அதன் பின்னர், அடுத்த முனையிலிருப்பவர், பாக்கிஸ்தானியராக இருந்தால் நேரடியாக உருதுவில் பேச ஆரம்பித்து விடுவார், வட இந்தியர் ஹிந்தி, தென்னிந்தியர்களில் ஒரே ஒரு மொழியரைத் தவிர மற்றவர்கள் முடிந்த வரை ஆங்கிலமே தொடரும்.
ஏற்கனவே இங்கே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் அதில் குறிப்பிட்ட அதிமேதாவிகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லித் தாருங்களேன்.
வேலை தேடி வருபவர்களை நளினமாக நடத்துவதையே விரும்பிச் செய்வேன் ஆனால் அதில் சிலரின் மேதாவித்தனத்தை எப்படி சமாளிப்பது என்றும் எடுத்துக் கொள்கிறேன்...
அருமையான வழிகாட்டல்.
தங்களைப்போன்றவர்களின் அனுபவங்களே மிகச்சிறந்த பாடம்
நன்றியும் வாழ்த்துகளும்.
அருமையான அறிவுரை.வெளிநாடுகளில் வசிப்போர்கள் இதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வதுநலம் புதிதாக வந்தவர்க்கு முதலில் இதை வழங்கிடவேண்டும்.எல்லாவற்றிலும் மேலாக அல்லாஈஹ்வின் நாட்டத்தை உறுதியிட்டுக்கூறியது அருமை.தென்னிந்தியர்களில் கொஞ்சமாவது ஆங்கிலப்
புலமைநம்மவர்களுக்குத்தான் உண்டு.எண்ணன்டா சிலநேரத்திலே உருளக்கிழங்குமுதல்லே கத்திரிக்காபச்சடிய வச்சிடுவாங்க அதான்.
பட்டப்படிப்பு முடிந்து கல்லூரியை விட்டு விடை பெரும்போது அந்த சான்றிழ்களோடு இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் அனுபவம் பேசுகிறது
ஆக்கத்தை அட்டாச் செய்து கொடுத்தால் படிப்போடு படிப்பினைகளும் தரமாக இருக்கும்.
// I TOLD என்பதற்கு பதிலாக I WAS TOLD என்றுச் சொல்லும் அளவுக்குத்தான் அவர்களின் மொழிப்புலமை உள்ளது என்பதை நித்தம் காண்கின்றேன்.அதனாற்றான் BASIC ENGLISH GRAMMAR இலவசமாக ட்யூசன் சொல்லிகொடுக்கின்றேன் 1981 முதல் இந்த நொடி வரை ; அல்ஹம்துலில்லாஹ் //
வாழ்த்துக்கள் “கவிக்குறள் “ சகோ. அபுல் கலாம் அவர்களே !
தங்களின் இப்பணிகள் தொடர வேண்டும் ( இன்ஷாஅல்லாஹ் ! )
To Brother Abulkalam,
உங்கள் நேரத்தை செலவு செய்து பணம் வாங்காமல் படித்து தரும் உங்கள் நல்ல உள்ளத்துக்கு இறைவன் கருணை புரிவான்.
ஆங்கில இலக்கண அறிவை கிடைக்கும் நேரத்தில் வளர்த்துக்கொள்ள விரும்புவோருக்கான ஓர் அருமையான வலைப்பூவின் விலாசம் கீழே தரப்பட்டுள்ளது. அதன் மூலம் நெளிவு,சுளிவுடன் இருக்கும் நம் ஆங்கில இலக்கணத்தை நேர்த்தியாக்கிக்கொள்ளலாம்.
(ஒரு சமயம் ஹாஜி முஹம்மது/ஃபிரான்ஸிஸ் சார்மார்கள் பள்ளியில் ஆங்கில இலக்கணம் நடத்தும் பொழுது இது பரிச்சைக்கு மட்டும் தானே என்று பொடுபோக்காக இருந்தது எவ்வளவு தப்பாப்போச்சு பாத்தியளா?)
www.aangilam.blogspot.com
நல்ல விடயம், இதையெல்லாம் அனுபவம் வாயிலாகவே உணரமுடியும், ஃபிரஷ்ராக வரும் பட்டதாரிகளுக்கு இது ஒரு அனுபவப்பாடமே, பகிர்வுக்கு நன்றி சகோ
அனுபவம் தொடர்ந்து பேசட்டும்..அதன் பயன் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்
அன்பிற்குரியவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
தலைப்பிட்ட ஆக்கத்தை படித்துவிட்டு அனைவரும் தந்துள்ள ஊக்கத்தை பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது.
ஜசக்கல்லாஹ்.
நூர் முகமது அவர்கள் உள்நாட்டிலும் உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப வழிகாட்டும் ஆக்கம் வந்தால் பயனாக இருக்கும் என்ற பொருளில் கருத்திட்டு இருந்தார்கள்.
உண்மைதான். அதை உள்நாட்டில் இருக்கும் யாராவது செய்தால்தான் பொருத்தமாக இருக்கும். இப்படியே வெளிநாடுகளில் காலம் கடத்திவிட்டோம். அங்கிருக்கும் கலவியாளர்கள் இதை கவனித்தால் நல்லது. ஊர் அணுகுமுறைகள் நமக்கு புரியவில்லை. (ஊருக்குபோனால் சைக்கிள் கடையில் கூட நம்மை பார்த்துவிட்டு ஜாமீனுக்கு ஆள் கேட்கிறார்கள்).
தம்பி ஜாகீர் அவர்கள் கூறுவதுபோல் ஒரு அட்டவணை இட்டு வெளியிடலாம்தான். யாராவது உள்ளூரில் டிராவல் ஏஜென்சி நடத்துபவர்கள் இப்படி வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்கு ஒரு காம்ப்ளிமென்ட் ஆக அச்சடித்து கொடுக்கலாமே- அவர்கள் பெயரிலேயே கொடுக்கலாம்.
அன்புடன் பின்னூட்டம் இட்ட சகோதரர்கள். சேக்கனா நிஜாம், தாஜுதீன், எம். எஸ்.எம். நெய்னா முகமது கவி சபீர், ஜகாபர் சாதிக் , Zeisu, L.M.S. அபுபக்கர், மருமகன் யாசிர், தமீம், மற்றும் அப்துல் மாலிக், தம்பி அபூ இபுராகிம் ஆகிய எல்லோருக்காகவும் துஆசெய்கிறேன். நம்மை இணைத்துவைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
மரியாதைக்குரிய கவி அபுல் கலாம அவர்கள் ஏதோ ஒரு நூலைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி எந்த நூலையும் படித்து மொழிமாற்றம் செய்து நான் எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 18 வருடங்களாக மனிதவள மேம்பாட்டுதுறையில் பல நல்ல அறிஞர்களுடன் பழகி –அவர்களின் கீழ் பணியாற்றிவருவதன் அனுபவ அடிப்படையிலும், எடுத்துக்கொண்ட பயிற்சிகள் , அன்றாடம் நான் கண்ட- கண்டுவரும் காட்சிகளின் தாக்கத்தின் விளைவாகவுமே இதை எழுத நேரிட்டது. இதில் கண்டுள்ள சேண்டாக்கொட்டை- திப்பு சுல்தான் நாடக சான்றிதழ் - தாடிக்கு சேடை விட்டது- டை கட்டுவது - புகைப்பிடிப்பதன் நாற்றம்- காதில் வளையம் மாட்டுவது- தொலைபேசி எண் கையில் இல்லாதது இவை எல்லாமே எனது வாழ்வில் நான் கண்ட காட்சிகள். அதன் விளைவுகள். பல நாள் அடைகாத்து அதிரை நிருபரில் பதிவு செய்தேன். ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு சிறு கதை உண்டு.
மேலும் நான் மொழிபெயர்ப்பில் அவ்வளவு பெரிய வித்தகன் அல்ல. படித்தது தமிழ் மீடியம். அதனால்தான் கல்லூரி நாட்களில் படித்த பாடங்கள் மனதில் பதிந்து இருக்கின்றன. அதன் அடிப்படையில் பொருளாதார கட்டுரைகளை நிறைய எழுதிவருகிறேன். இன்னும் இஸ்லாமிய பொருளாதாரம் என்று ஒரு ஆக்கம் தொடராக எழுத வேண்டுமென்று நிய்யத் செய்து இருக்கிறேன். ( தம்பி அபூ இபுராகிம் கவனிக்க) அதற்காக சில மொழிபெயர்ப்பு வேலைகளில் ஈடுபட நேரிடலாம். எல்லாம் வல்ல அல்லா அதற்கும் வல்லமை தருவானாக. அந்த நேரம் கவி அபுல் கலாம் தங்களின் உதவியும் எனக்கு தேவைப்பட்டால் அணுகுவேன். இன்ஷா அல்லாஹ்.
வஸ்ஸலாம்.
இபுராகிம் அன்சாரி.
இப்ராஹிம் அன்சாரி பாய் உங்களின் அனுபவம் பேசுகிறது... இது போன்ற கட்டுரைகள் தொடர வேண்டும்.... யார் எப்படி போன எனக்கு என்ன? என இல்லாமல் சமுதாய உணர்வுடன் உங்களின் அனுபவமும் அறியுரைகளும் பாராட்டுக்குரியது... மாஸா அல்லாஹ்
//இன்னும் இஸ்லாமிய பொருளாதாரம் என்று ஒரு ஆக்கம் தொடராக எழுத வேண்டுமென்று நிய்யத் செய்து இருக்கிறேன்.///
அதெப்படி காக்கா கவனிக்காம இருந்திடுவோமா ?
உங்களின் முன்னறிவிப்பே துவக்கத்திற்கான முதல் அத்தியாயம் ! :)
காத்திருக்கோம் !
MSM(n) : காட்டிய சுட்டி... மெய்யாலுமே கெட்டியான சுட்டி !
அழகு தமிழில் ஆங்கிலப்பாடம் அற்புதமாக நடத்தப்படுகிறது...
ஜஸாக்கல்லாஹ் ஹைர் MSM(n) !
வ அலைக்கும் சலாம், அன்புத் தம்பி இப்ராகிம் அன்சாரி, ஆச்சர்யம் ; ஆனால் உண்மை! எனக்குக் கிட்டிய இரு நூற்களான
'HOW TO WIN THE PEOPLE; HOW TO ATTEND AN INTERVIEW ஆகிய இரு நூற்களில் கண்ட அதே விடயங்கள் உங்களின் சொந்த அனுபவங்களுடன் ஒத்துப் போகின்றன என்றறியும் பொழுது, உண்மையில் அல்லாஹ் உங்கட்கு வழங்கியுள்ள ஆற்றலை எண்ணி வியக்கின்றேன்! அவ்விரு நூற்களின் ஆசிரியர் உளவியலார் "கோப் மேயர்". புத்தகக் கண்காட்சியில் முன்பு வாங்கினேன். எந்தப் புத்தகம் வாங்கினாலும் அதன் சாரத்தை முழுவதுமாக மூளைக்குள் சேமித்து வைத்துவிட்டு உடன் நண்பர்கள்/ உறவினர்கள் எவரேனும் அப்புத்தகத்தின் விடயங்கள் தேவைக்குரியவராக என்னறிவுக்குப் பட்டால் கொடுத்து விடுவதும் என் கொள்கை. யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்ற நன்னோக்கில் என் மூளையில் சேமித்து வைத்துள்ளவற்றில் என் மாணவர்கட்குப் பாடம் போதிக்கும் பொழுது இடையில் சொல்லிக்கொள்வேன்; இப்பொழுது என் கவிதைகளில் உளவியல் கருத்துக்கள் உலா வருவதன் உண்மையும் அஃதே!
எனது விருப்பப் பாடமான "பொருளாதாரம்" தான் உங்களின் பட்டப் படிப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இன்ஷா அல்லாஹ், தாங்களால் தயாரிக்கப் பட
உள்ள "இஸ்லாமியப் பொருளாதாரம் " ஆக்கம்/கட்டுரை/நூல்/மொழியாக்கம்/ சிறப்புடன் அமைய நீங்கள் வேண்டும் உதவியினைச் செய்யக் காத்திருக்கின்றேன்.
சவுதி மார்க்க அறிஞர் எழுதிய DR.IBRAHIM NAJI எழுதிய "HAVE YOU DISCOVERED IT'S REAL BEAUTY? என்ற ஆங்கில நூலினைத் தமிழாக்கம் செய்ய துபாய் இஸ்லாமிய தகவல் மையம் மூலம் அங்குப் பணிபுரியும் எனது நண்பர் நமதூர் மேலத் தெரு தமீம் அன்சாரி அவர்களின் வேண்டுகோளின்படி தமிழாக்கம் செய்து கொடுத்தேன் : :"அதன் உள்ளழகைக் கண்டு கொண்டீர்களா?" என்றுத் தலைப்பிட்டேன்.மொழிபெயர்ப்பு எவ்வளவு சிரமமானதும் நேரம் தியாகம் செய்ய வேண்டிய ஒன்று என்பதை அனுபவபூர்வமாய் உணர்ந்துள்ளேன். தாங்களும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டால், அப்பொழுது ஏற்படும் சிரமங்களில் அடியேனும் தங்களுடன் இணைந்து உதவிடுவேன், இன்ஷா அல்லாஹ்.
என்னைத் தொடர்பு கொள்ள:
அலைபேசி: 00971-50-8351499 / அலுவலகம்: 00971-2-6770080/ ext: 343
மின்னஞ்சல்: kalamkader2@gmail.com
kalaamkathir7@gmail.com
shaickkalam@yahoo.com
வலைப்பூத் தோட்டம்: http://www.kalaamkathir.blogsot.com/
என்றும் அன்புடன்,
அபுல்கலாம்(தா.பெ. ஷைக் அப்துல் காதிர் )
எவளவோ நீங்கள் ஆங்கில இலக்கணத்தை படித்து அறிந்தாலும் நடை முறையில் பேசும்போது வறாது.படித்து கற்பதைவிட பிறர் பேசுவதை கவனித்து நாமும் பழகிக்கொள்ள வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தம்பி அபூ இப்ராஹீம்! இன்ஷா அல்லாஹ் து ஆச்செய்யுங்கள். செய்திடலாம். உங்கள் மனம்போல.
அதற்கான் ஆயத்தங்களில் ஈடுபடதொடங்கியுள்ளேன்.
கவி அபுல் கலாம் அவர்களே! நீங்கள் பொழிந்துள்ள நிறைவான அன்புக்கு அருகதையுடையவனாக ஆக்கிவைப்பானாக.
எனக்கும் பொருளாதாரம் துணைப்பாடமே. வணிகவியலில் முதுகலை படித்தவன்.
தங்களின் அன்பான ஆலோசனைகளை அவ்வப்போது தொடர்பு கொண்டு கேட்டுக்கொள்கிறேன்.
அபுதாபி வரும்போது தங்களை காண இறைவன் நாடுவானாக.
நண்பர் MSM நெய்னா முகமது அவர்கள் விரித்தவலையில் பிடிபட்டது ஒரு நல்ல கொடுவா மீன்தான். அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
என்றுமே எனக்கு பக்கபலமாக இருந்துவரும் நண்பர் சாதிக் ( நாகர்கோயில்) அவர்கள ஜசக்கல்ல்லாஹ்.
வஸ்ஸலாம்.
இபுராகிம் அன்சாரி.
அன்புத் தம்பி தமீம், அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கருத்தை மறுப்பதற்கில்லை. அதனாற்றான், எனது ட்யூசன் வகுப்புகளில் கீழ்க்கண்டவாறு வகுத்துக் கொண்டு நடத்துவேன்:
1) Basic English Grammar
2) Spoken English with "body language"
3) Tips to win the people.
Native Language Course களிலும் சொல்லப்படும் விடயமும் நீங்கள் குறிப்பிடும் கருத்தாகவே : “ஒரு குழந்தைத் தானாகவே தன் பெற்றோர்கள், சுற்றியிருப்போர் பேசும் பொழுது செவியில் ஏற்று அதனையே உச்சரித்துப் பழகுதல் போலவே, மொழியினைக் கற்போர் முதலில் பேச்சு மொழியினைக் கற்றுக் கொண்ட பின்னர், எழுத்து நடை- இலக்கணத் தூய்மையின் மீது கவனம் செலுத்தினால் சரளமாகப் பேசும் திறனை வளர்த்துக் கொள்வர்” என்று சொல்லிக் கொடுப்பார்கள். நான் சொன்னது “நேர்முகத்தேர்வில்” எழுத்துத் தேர்வில் ஒரு பட்டதாரி செய்த தவறு என்னவென்பதைக் குறிப்பிட்டிருந்தேன். அதே நபர் ஒரு safety engineer அவரிடம் ஒரு report தயாரிக்கச் சொன்ன பொழுது கீழ்க்கண்டவாறு எழுதி விட்டார். ’’ஒருவன் கூரையின் மேல் இருப்பதை நான் கண்டேன்” என்று எழுதும் இடத்தில் I WAS FOUND என்று எழுதியது அவருக்கு அடிப்படை இலக்கணம் தெரியவில்லை என்பதும் ஒருவனைக் கண்டேன் என்பது நான் காணப்பட்டேன் என்று தலைகீழானப் பொருள் உண்டானது செய்வினை/செயப்பாட்டு வினை இலக்கணம் அறியாமற் போனது; அவரது நேர்முகத்தேர்வும் வீணாகிப் போனது.
அன்புச் சகோதரர் இபுராஹிம் அன்சாரி, அஸ்ஸலாமு அலைக்கும்.
என்னை மன்னித்து விடுங்கள். தங்களைத் “தம்பி” என்று மரியாதைக் குறைவாக விளித்து விட்டேன். தாங்கள் எனது தமிழ்ப்பேராசிரியர் அவர்களின் வயதை ஒத்தவர்கள் என்பதைப் பின்னர் அறிந்ந்து கொண்டேன்.
//ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லாவற்றுக்கும் தலையாயதாக எந்த வேலையையும் தேடி வெளியே கிளம்பும் முன்பு இறைவனிடம் தொழுது து ஆச்செய்து செல்லுங்கள். அன்றைய சுபுஹு தொழுகையை கண்டிப்பாக நிறைவேற்றிவிடுங்கள். கிட்ட அரிதானது என்று நினைப்பதும் கிட்டும். தன்னம்பிக்கை உண்டாகும். இறைவன் அருளால் எல்லாம் நல்லபடி நடந்தேறும். //
முன்னேறும் படிகளை காட்டி,மேலேறும் வித்தையையும் சொல்லி - முத்தாய்ப்பாக மேற்கண்ட வரிகளுடன் சொன்ன விதம் ,மாஷா அல்லாஹ் அருமை இப்ராஹீம் அன்சாரி காக்கா.
தேராத தேசப்பொடி போல் இருக்கும் எம்மை எல்லாம் நல்ல கொடுவா மீன் போல் இங்கு சித்தரிக்கச்செய்த அந்த வல்லோனுக்கே எல்லாப்புகழும், ஆற்றலும்.
கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கப்படுவது போல் ஆங்கில இலக்கணம் மற்றும் காலத்திற்கேற்ற உரையாடல் பயிற்சி சொல்லிக்கொடுக்கப்படும் ஆங்கிலம்.ப்ளாக்ஸ்பாட்.காம் வலைப்பூ நிச்சயம் ஒரு அற்பணிப்புடன் கூடிய அற்புதமான பணி தான்.
முறையான ஆங்கில அறிவு இல்லாமல் பெரும் பட்டப்படிப்பு படித்து வருவது அச்சாணி பிடுங்கப்பட்ட நல்ல இளமையான மாடுகள் பூட்டப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் மாட்டு வண்டிக்குச்சமம்.
அன்புள்ள கவி ஜனாப். அபுல் கலாம் அவர்களுக்கு.
தம்பி என்று என்னை தாங்கள் விளித்ததில் ஒரு வருத்தமும் இல்லை.
அவசரமான உலகில் அண்ணன் என்ன தம்பி என்ன என எண்ணுவோம்.
நம்மை முகம் பாராமல் கூட இணைத்துவைத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
வஸ்ஸலாம்.
இபுராகிம் அன்சாரி.
வேலை பளுவால் மாமாவின் கட்டுரைக்கு பின்னுட்டம் இட தாமதமாகி விட்டது . கட்டுரையில் சமுதாய சிந்தனை மிளிர்கின்றது
இக்கட்டுரையை தந்த இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களை பற்றி இப்போதுதான் என்னால் யூகிக்க முடிகிறது. அதனால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தை கூற விரும்புகின்றேன்.
நான் 1974 - 75 ல் கா.மு. உயர்நிலைப் பள்ளியில் SSLC (XI Std.) படிக்கும்போது பள்ளி மாணவர்கள் தலைவானாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது 05/09/1974 ல் ஆசிரியர்கள் தினம் கொண்டாடுவதற்கு பள்ளியின் பழைய மாணவர்களின் ஒரு நாவலரை சிறப்பு பேச்சாளராக அழைத்து விழாவை நடத்தும்படி தலைமை ஆசிரியர் ஜனாப் V.M. அஹமது இபுராஹீம் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அந்த தருணத்தில் இந்த இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களை சேது ரோட்டிலுள்ள அவர்கள் வீட்டிற்கு சென்று அழைத்தோம். எங்கள் அழைப்பை ஏற்று ஆசிரியர் தின விழாவில் அருமையான அவர்கள் தந்த சொற்பொழிவு இன்னும் என் நினைவில் உள்ளன.
வானத்தில் விமானம் பறக்க விடுவோம். கடலின் அடியில் கப்பலிடுவோம். மூக்கால் சாப்பிடுவோம். எல்லாம் இரண்டு இஞ்சி அளவுக்கு கீழ் என்று மூன்று நாட்டை சார்ந்தவர்கள் பேசிக் கொண்டார்கள் என மிகவும் சுவாரசியமாக விளக்கமாக மேடையில் முழக்கினார்கள்.
மேலும் ஆசிரியர்கள் பணி பற்றி குறிப்பிடும் போது ஏணி, தோணி, எலுமிச்சை என விவரித்தார்கள்.
இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் அன்றே ஆழமான கருத்துக்களை அழகாக தரும் ஆற்றல் மிக்க நாவண்மை கொண்டவர்கள். அதுபோல் இன்று அவர்கள் அனுபவத்தை நமக்கு அழகாக தந்துள்ளார்கள். மேலும் அவர்களின் அனுபவங்களை நமக்கு தொடர்ந்து தந்துகொண்டே இருக்கவேண்டும்.
நூர் முஹம்மது
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள தம்பி நூர் முகமது,
தங்களின் நினைவாற்றலை எண்ணி வியக்கிறேன். மாஷா அல்லாஹ்.
என்னை நீங்கள் அறிந்துகொண்டது இயல்பானதும் நடக்ககூடியதும் .
ஆனால்
1974 செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று நான் நமது பள்ளியில் பேசிய விஷயங்களை 38 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றுவரை நினைவுவைத்திருப்பதை எண்ணி மிகவும் வியக்கிறேன். பேசிய எனக்கே மறந்துபோன விஷயங்கள். எனது கண்களை பனிக்க வைத்துவிட்டீர்கள்.
இன்று நினைத்துப்பார்க்கிறேன். நீங்களும் தம்பி இப்ராஹிம்ஷாவும் வந்து என்னை அழைத்து வந்தீர்கள். சமீபத்தில் ஹாஜா முகைதீன் சார் அவர்களை சந்தித்தபோது நாங்களும் இந்த நினைவுகளை பகிர்ந்து கொண்டோம்.
டாக்டர் ஹனீப் அவர்கள்தான் தலைமை தாங்கினார்கள். அவர்கள் கூட தனது தலைமை உரையில் சந்திரனையும், முத்தையும், ரத்தினத்தையும் தேடி வந்து இருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் குறிப்பிட்டது திரு. ராமச்சந்திரன், நாடிமுத்து, நாகரத்தினம் ஆகிய நமது பள்ளியின் பழம்பெரும் ஆசிரியர்களை.
இவ்வளவும் நினைவில் உள்ள நீங்கள் நான் கூறிய செவிட்டு மருமகன் கதையையும் மறந்து இருக்கமாட்டீர்கள்.
பழைய நினைவுகளை அசை போடவைத்த உங்களுக்காக து ஆ செய்கிறேன் மிக்க மகிழ்ச்சி.
நமது பள்ளியில் பழைய மாணவர்கள் ஒன்று கூடும் ஒரு அமைப்பு இல்லாதது ஒரு பெரும் குறையாகவே நான் கருதுகிறேன்.
இருந்தாலும் அந்த குறை தெரியாதபடி அதிரை நிருபர் நமக்கு எல்லாம் ஒரு பாலத்தை கட்டி தந்து இருக்கிறது. ஜசகல்லாஹ்.
வஸ்ஸலாம்.
இபுராகிம் அன்சாரி.
1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு சம்பவம் இன்றும் எனக்கு தெளிவாக ஞாபகம் இருக்கிறது. காரணம் அப்பொழுது தான் நான் இந்த மண்ணில் பிறந்தேன். அல்ஹம்துலில்லாஹ்...
அஸ்ஸலாமு அலைக்கும்.
எம்.எஸ்.எம்.நெய்னா சொன்னது:
// 1975ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஒரு சம்பவம் இன்றும் எனக்கு தெளிவாக ஞாபகம் இருக்கிறது. காரணம் அப்பொழுது தான் நான் இந்த மண்ணில் பிறந்தேன். அல்ஹம்துலில்லாஹ்...//
கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டிய செய்தி.
இதற்க்கு பிறகு நீ மறந்தாலும் பிரச்சினை இல்லை.அதான் அதிரை நிருபரில் பதிந்து விட்டியே!
நானும் பதிந்து விடுகிறேன் 25 / 06 / 1973 சனிக்கிழமை காலை 7 :30 மணியளவில்.
இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
பின்னூட்டமாக இருந்ததால் உங்களின் ஆசிரியர் தின சொற்பொழிவை சுருக்கமாக எழுதினேன். தலைமையேற்ற டாக்டர் ஹனீப் அவர்களின் சந்திரன், முத்து, இரத்தினம் மற்றும் தங்களின் செவிட்டு மருமகன் கதையையும் அறிவேன்.
இம்முறை விடுப்பில் Oct 2011 ல் ஊரில் இருந்த நான், பேரா அப்துல் காதர் அவர்களிடமும் ஹாஜா முஹைதீன் சார் அவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று நினைவு ஏற்பட்டு உங்களைப் பற்றி விசாரித்த பொழுது, தாங்கள் குவைத்தில் பணி புரிவதாக காதர் சார் அவர்கள் கூறினார்கள்.
சரி, இப்போது முக்கிய பொருளுக்கு வருவோம். நம் கா.மு. மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்களே adirainirubar நிகழ்ச்சிகளில் நிதம் தோறும் பங்கு கொள்கின்றனர். அதில் பழைய மாணவர்களில் பழமை வாய்ந்த மூத்த மாணவர் தாங்களே. அதற்கும் மேல் பழைய மாணவர்களில் ஹாஜா முஹைதீன் சார், வாவன்னா சார், அலியார் சார், காதர் சார் இவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டு நம் பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கத்தை இந்த adirainirubar ல் பல நிகழ்வுகளை நாம் புறட்டிப் பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் 1969 - 75 காலக் கட்டங்களை என்னால் கூற முடியும்.என் நண்பரும் உறவினருமாகிய கவியன்பன் கலாம் அவர்களின் காலம் 1968 - 74 நிகழ்வுகளை மேற்கணக்கில் கவிபாடுவார். அதையடுத்த காலங்களில் பயின்றவர்கள் இப்போது adirainirubar ல் சாரை சாரையாய் ஊர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
இன்ஷா அல்லாஹ் அனைத்தையும் நீங்கள் ஒருங்கிணைத்து Old Boys Web Association ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
ஜஸாக்கல்லாஹ்
நூர் முஹம்மது
ஆஹா கலை கட்டுது அதிரை நிருபர்.
அறிவுப்பசியும் இலக்கியத் தாகமும் கொண்ட அதிரை நிருபர் வாசகர்களுக்கு இனி விழாக்காலம்தான்.
காக்காஸ்,
இப்ப உள்ள சூப் பாய்ஸுக்கும் அப்ப உள்ள "எம் ஏ படிச்ச மாப்பிளேகளான" தங்களுக்கும் இடையே ஒரு பாலமாக 1975 - 1981 ஐச் சேர்ந்த "பொன் மாலைபொழுது" பசங்களான நாங்கள் இருக்கலாமா?
//இடையே ஒரு பாலமாக 1975 - 1981 ஐச் சேர்ந்த "பொன் மாலைபொழுது" பசங்களான நாங்கள் இருக்கலாமா? //
தம்பி சபீர் அவர்களுக்கு
தாங்கள் VI Std to XII Std பள்ளியில் பயின்ற காலம் 1973 - 1980 என்பது என் தோராய மதிப்பு கணக்கு. சரியா?
பெர்ஃபெக்ட் காக்கா,
இத்தனை துள்ளியமான கணிப்பு எப்படி சாத்தியமாகிறது.
குடுகுடுப்பை மேட்டர் ஒன்னுமில்லையல்லவா? (ஜாகிர்தான் சொல்வான்: தலச்சம்பிள்ளையோட மண்டையோட்டை எடுத்து மைபோட்டு பார்க்கும் வித்தையென்று)
//இத்தனை துள்ளியமான கணிப்பு எப்படி சாத்தியமாகிறது//
தம்பி சபீர் அவர்களுக்கு,
பொதுவாக கணிதப் பாடத்தை பட்டப் படிப்பில் படிக்கும் மாணவர்கள் பல நூற்றுக் கணக்கான சூத்திரங்கள் - formulae களை நினைவில் நிறுத்தினால்தான் தேர்வில் குதிரை பூட்டிய தேரில் சவாரி செய்யலாம். இன்றேல் மாட்டு கட்டிய வண்டியைத்தான் ஓட்ட முடியும் என்பதை தாங்களும் அறிவீரே?
அதுவன்று, தங்களுடன் பயின்ற பாடகர்கள் அன்வர், நூருல்லா, அப்துல் காதர் இவர்களெல்லாம் நான் X Std படிக்கும் போது VI Std ல் பள்ளியில் வந்து சேர்ந்தார்கள் என்பது எனக்கு நினைவுண்டு.
அப்படின்னா நாங்க 1980க்கு பின்னாடிதான் காலடி எடுத்து வைத்தோம் காக்கா'ஸ்' ...
இருந்தாலும் தடங்களை அழுத்தமாக பதிந்து விட்டுத்தான் சென்றிருக்கிறீர்கள் முன்னர் சென்ற (முன்னாள் மாணவர்கள்) நீங்களெல்லாம்...
ஆக ! எங்களோடு இளமை ஊஞ்சலாட வந்த உங்களையெல்லாம் வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சியே எனக்கும் !
என்றும் இளமை
எழுத்தில் புதுமை
கவியில் உவமை
கருத்தில் உண்மை
நட்பில் உரிமை
பேச்சில் தன்மை
பழக்கத்தில் மென்மை
ஆதலால் !
வேண்டாம் பெருமை !
கலைவோம் சுமை !
வாழ்விலும் பசுமை !
இன்ஷா அல்லாஹ் !
//என்றும் இளமை
எழுத்தில் புதுமை
கவியில் உவமை
கருத்தில் உண்மை
நட்பில் உரிமை
பேச்சில் தன்மை
பழக்கத்தில் மென்மை
ஆதலால் !
வேண்டாம் பெருமை !
கலைவோம் சுமை !
வாழ்விலும் பசுமை //
ஹை...கிரவுனிஸம்
//ஹை...கிரவுனிஸம் //
அதெப்படி காக்கா தலைக்கு வைக்க அவன்(தான்) லாயக்கு !
அறிவெனும் அமுதினை அணுவணு துகள்களாய்
நெறிமுறை படுத்தியே நினைவினில் பதித்திட
அறிமுகம் செய்திடும் அமைப்பு.
நல்ல தகவல்கள்.நான் இதுவரை பல நேர்காணல் பற்றிய தகவல்களை படித்துள்ளேன்.அவைகள் பெரும்பாலும் மேலோட்டமாக இருந்தது.ஆனால் இதில் பல பயனுள்ள தகவல்கள் விரிவாக தரப்பட்டுள்ளது.
அதிரைநிருபர் தளத்திற்கு என் நன்றிகள்...
Post a Comment