Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலக உலா 2011 - 1 8

அதிரைநிருபர் | January 01, 2012 | , , ,

பயங்கரத் துயரம், வடியாத சோகம், மக்களாட்சிக்கான புரட்சி, அரசியல் மாற்றம் என்று கலவையான சுவடுகளை விட்டுச் செல்கிறது 2011. ஜப்பானின் நிலநடுக்கமும், ஆழிப் பேரலையும் மனித வாழ்வை பெரும் கேள்விக்குள்ளாக்கின. ஆழிப் பேரலையால் தாக்கப்பட்ட FUKUSHIMA அணுஉலையிலிருந்து வெளியான கதிரியக்கம் உலக நாடுகளின் அணுக் கொள்கைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்தச் செய்தது. துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம் எண்ணற்ற உயிர்களைக் காவு வாங்கியது. பாகிஸ்தானிலும் தென் கிழக்காசியாவிலும் ஏற்பட்ட வெள்ளம் வர்த்தகத்தை முடக்கிப் போட்டது.

வடகிழக்கு ஜப்பானில் நிலம் கொஞ்சம் நெட்டி முறித்தது. அதிர்வின் அளவு 8.9 ரிக்டர். கூடவே சேர்ந்து வந்தது மிரட்டலைத் தந்த ஆழிப் பேரலை. ஜப்பானின் பசிபிக் கரையோரம் பத்து மீட்டர் உயரத்துக்குச் சீறிப் பாய்ந்தன பேரலைகள். வலைக்குள் சிக்கிய மீன்களை கரையிழுக்கும் மீனவர்கள் போல, நிலத்தில் இருந்த வீடுகள், பயிர்கள், வாகனங்கள் என வழியில் கண்ட அத்தனையையும் வாரிச் சுருட்டி அள்ளிச் சென்றது கோரப் பேரலை. பலியான உயிர்களின் எண்ணிக்கை 15000 க்கும் அதிகம். பலரின் சடலங்கள் கூட கிட்டவில்லை.


நிலநடுக்கத்தால் பல இடங்களில் தீ மூண்டது. வடக்கு சென்டாய் நகரில் ஒரு பெரிய நீர்முகப்புப் பகுதியும் தீக்கு இலக்கானது. தலைநகர் தோக்கியோவையும் விட்டு வைக்கவில்லை நிலநடுக்கம். வீடுகள், அலுவலகங்கள், உயர்மாடிக் கட்டடங்கள், நாடாளுமன்றம் என்று எல்லா இடங்களும் அதிர்ந்தன. அங்கிருந்து சுமார் 240 கிலோமீட்டர் வடக்கே இருக்கும் Fukushima அணுஉலையையும் கபளீகரம் செய்தது ஊழித் தாண்டவம் ஆடிய ஆழிப் பேரலை.


அணுஉலைக்குக் கடுமையான சேதம். அவ்வட்டாரத்தில் இருந்த பொது மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். கதிரியக்கக் கசிவின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஜப்பான் அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டது.

பாதிக்கப்பட்ட அணுஉலைகளை கோரத் தாண்டவம் ஆடிய கடல் நீரைக் கொண்டே சாந்தப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போவது போல் தோன்றியது. Ukraine னின் chrenobyl அணுஉலையை மூடியது போல fukushima அணுஉலையையும் மூடி விடலாமா என்று கூட யோசித்தது ஜப்பான். ஆனால் அயராத முயற்சி அணுக்கசிவையும் அடக்கும் என்பதை நிரூபித்தது ஜப்பான். நாளடைவில் அணுகசிவின் அளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.



தண்ணீரில் வீசிய கல் உண்டாக்கும் வட்டம் போல, Fukushima அணுஉலைகளின் தாக்கம் உலக அளவில் அச்ச அலையைத் தோற்றுவித்தது. உலக நாடுகள் அணுஉலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பல நாடுகளில் போராட்டம் நடந்தன. இந்தியாவின் கூடங்குளத்தில் அது இன்னும் தொடர்கிறது. இது கதிரியக்கத்தால் வந்த பயமல்ல. மக்களின் கண்ணீரில் விளைந்த அச்சம்.

 துருக்கியின் கிழக்குப் பகுதியில் உள்ள வான் நகரில் பூமி கொஞ்சம் புரண்டு படுத்தது. சோம்பல் முறித்த வேளையின் வீரியம் 7.2 ரிக்டர். விளைவு, கடுமையான நிலநடுக்கம். குர்து இன மக்கள் அதிகம் வாழும் அப்பகுதியில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல கட்டடங்கள் சேதமடைந்தன. ஏராளமானோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மூன்று மணி நேரத்துக்குள் 8 முறை துள்ளி விளையாடியது நிலம்.


இவ்வாண்டு பாகிஸ்தானுக்கு சோதனை காலம். வெள்ளி தோறும் அங்கே தீபாவளி தான். தலையில் துண்டு போண்டுத் தொழுகைக்குச் செல்வோரையும் தீவிரவாதிகளின் குண்டுகள் விட்டு வைப்பதில்லை. வாரந்தோறும் ஆரவாரமாய் ஒலித்து ஒலித்து ஓய்கிறது அப்பாவிகளின் அடங்கா ஓலம். எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது பாகிஸ்தான் அரசாங்கம்.





இந்நிலையில், தெற்கு பாகிஸ்தானில் பெய்த கனத்த மழை, வெள்ளைப் பெருக்கை அழைத்து வந்தது. 4 மில்லியன் பேர் வீடுகளை இழந்தனர். பல உயிர்கள் தண்ணீரில் சடலமாகின. சிந்து மாநிலத்தில் வழக்கத்தைவிட 142 விழுக்காடு அதிகம் பொழிந்தது வானம். வெள்ளப்பெருக்கு காரணமாக 21 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உலக நாடுகளும், தன்னார்வ அமைப்புகளும் உதவ முன் வந்தன. எனினும் வர்த்தகத்தில் ஏற்பட்ட பின்னடைவு சரியாக இன்னும் அவகாசம் தேவை என்பதே இப்போதைய நிலை. 


பாகிஸ்தானைத் தொடர்ந்து, தாய்லந்திலும் நூற்றாண்டு காணா வெள்ளம். பாய்ந்து வந்த நீர் குடித்து ஏப்பம் விட்ட உயிர்களின் எண்ணிக்கை 300 க்கும் அதிகம். பல்லாயிரம் பேர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்தனர். தாய்லாந்தின் வட, மத்தியப் பகுதிகளைச் சுற்றிச் சூழ்ந்தது வெள்ளம். தண்ணீர் படிப்படியாக அதிகரித்துத் தலைநகர் பேங்காக்கைத் தொட்டது. அங்குள்ள ஒரு விமான நிலையத்திலும் புகுந்தது வெள்ளம். தடுப்பு முயற்சிகள் பெரிய பலனைத் தரவில்லை. தலைநகர் பேங்காக் தண்ணீரில் மிதந்தது. தென் கிழக்கு ஆசியாவில் வேகமாக நவீனமடைந்து வரும் பேங்காக் அந்த இக்கட்டான நிலையைக் கையாளத் திணறியது.


மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியது தாய்லந்து அரசாங்கம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. தாய்லந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற Yingluck Shinawatra விரைந்து செயல்பட்டார். இயற்கையும் கை கொடுத்ததால் தப்பிப் பிழைத்தது தாய்லந்து.

நோபெல் அமைதிப் பரிசு வழங்கும் நாடு நார்வே. இவ்வாண்டு அதன் அமைதிக்கு வேட்டு. காரணம், ஜூலை 22 ல் நாள் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு, அதைத் தொடர்ந்து Utoyo தீவில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம். இவையிரண்டும் ஐரோப்பாவை மட்டுமல்ல உலகையே ஓர் உலுக்கு உலுக்கியது. தலைநகர் ஆஸ்லோவில் அரசாங்க அலுவலகங்களைக் குறிவைத்துக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் எட்டுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.


அதற்கடுத்த சில மணி நேரத்தில் ஆஸ்லோ அருகில் உள்ள Utoyo தீவில் காத்திருந்தது மற்றுமோர் அதிர்ச்சி. அங்கே ஆளும் தொழிற் கட்சியின் இளையர் அணியினரின் கூட்டம் நடந்தது. அங்கே வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 78 பேர் கொல்லப்பட்டனர்.


Utoya தீவைச் சுற்றி உள்ள நீர்ப் பகுதியில் காவல் துறையினர் மாண்டவர்களைத் தேடினர். துப்பாக்கிச் சூடு நடந்த போது நீரில் குதித்த 300 க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினரும், அருகில் வசித்தவர்களும் காப்பாற்றினர்.


துப்பாக்கிச் சூட்டை நடத்திய நார்வேயைச் சேர்ந்த Anders Breivik பின்னர் சரணடைந்தார். 'இந்தத் தாக்குதல் கொடூரமானதாக இருக்கலாம், ஆனால் அவசியமானது!' என்று பிரெவிக் கூறியிருந்தார். அசம்பாவிதச் சம்பவத்துக்கு முன்னதாகவே 1500 பக்கங்களுக்கு அதிமான நீண்ட, விரிவான சுய விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதில் கொலைச் சதித்திட்டம் பற்றி விரிவாக விளக்கியிருந்தார். பின்னர் நார்வே காவல்துறை அவரைக் கைது செய்தது.


தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகையே மாற்றி அமைத்தன ஆப்பிள் மின்னணுச் சாதனங்கள். அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்டீவ் ஜாப்ஸ் இவ்வாண்டு இயற்கை எய்தினார். அப்போது அவருக்கு வயது 56. நீண்ட காலம் கணையப் புற்றுநோயால் அவதிப்பட்ட அவருக்கு நான்கு முறை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


ஆப்பிள் நிறுவனத்தின் மிக முக்கியத் தயாரிப்புகளான I Pod, I Phone, I Pad ஆகிய சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸின் சிந்தனையில் முகிழ்த்தவை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சிகள் அனைத்திற்கும் அவருடைய தலைமைத்துவம் அவசியமாக இருந்தது. ஸ்டீவ் ஜாப்ஸ் பொறுப்பேற்ற பிறகுதான் ஆப்பிள் நிறுவனம் இசை சார்ந்த மின்னணுப் பொருள் தயாரிப்புகளின் பக்கம் தன் பார்வையைக் குவித்தது. சிக்கலான தொழில்நுட்பத்தை பாமரனும் பயன்படுத்த வழி செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அதன் விளைவாக நிறுவனத்தின் புகழை உலகறியச் செய்த பெருமை அவரைச் சாரும். மிகக் குறுகிய காலத்தில் பலரது கவனத்தை ஈர்த்த ஸ்டீவ் ஜாப்ஸின் அகால மரணம் மின்னணு, தொழில்நுட்பத் துறையைச் சார்ந்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலா தொடரும்...:)

-- ஸதக்கத்துல்லாஹ்

8 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

சுகங்களைக் காணாது
சோகங்களைச் சுமந்து
சுற்றிய உலகினைச்
சுற்றிக் காட்டினீர்


கலகம் நிறைந்த
உலகம் ஒருபக்கம்
சோகம் சூழ்ந்த
பாகம் ஒரு பக்கம்

கரையிலும்
தரையிலும்
அச்சமூட்டி
எச்சரிக்கை

இறைவன் கட்டளை
இன்னும் உணரவில்லை மக்களே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்று வலை மேய்ச்சலில் சிக்கிய வரிகள் இது...

ஒரு பிரபலமான கவிஞன் எழுதும் மூ.உ.போ. என்ற தொடரில் கண்ட கவிதை... சும்மா உங்களின் பார்வைக்கும்...

திரும்பிப் பார்க்க வைக்கும் 2011 உலக உலா (தொடர்) போல் இந்த கவிஞனின் எழுத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது... (நல்ல கவி வரிகளை நேசிப்பதனால்)...

சில வினாடிகள் செய்தொழில் நிறுத்தி மொத்தக் கூட்டமும் காது கொடுத்தது பரதேசிப் பாட்டுக்கு.

பைசா இல்லாத பரதேசி - நான்
பன்னண்டு மாசமும் சுகவாசி.
எல்லார்க்கும் ஆசையெல்லாம்
தென்னாட்டு மலையளவு
எனக்குள்ள ஆசையெல்லாம்
உள்ளங்கை குழியளவு
தூக்கத்தை வித்துவித்து
சொத்து பத்து வாங்குறியே
சொத்து பத்து செலவழிச்சுத்
தூக்கத்த வாங்குவியா?

sabeer.abushahruk said...

ரிவைன்ட் செய்து காண்பித்த சகோ. ஸ்தக்கத்துல்லாஹ்வுக்கு நன்றி

KALAM SHAICK ABDUL KADER said...

நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய்?
விடையறியா வினாவுடன்
விடைபெற்றார் கனாவுடன்
புவியினை விட்டே
கவியரசர் என்பாரும்

கவிப்பேரரசுவின் "வைர"வரிகளைப்போல் கவியரசரின் "கண்ணான" வரிகளும் கவரும் எவரையும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வருடா வருடம் இயற்கை சீற்றங்களே அதிகரித்து வருகிறது.

இவைகள் இறைவனின் எச்சரிக்கை என்பதை ஞாபாகப்படுகிறது என்பது மட்டும் உண்மை...

பொது அறிவு தகவல் பகிர்வுக்கு சகோ ஸதக்கத்துல்லாஹ் அவர்களுக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ்...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அதிரை உலா சில 2011
-----------------------
சங்கங்களின் சங்கமம் (AAMF )துவங்கியது.

பாரம்பரிய சம்சுல் இஸ்லாம் சங்கக் கட்டிடம் புதுப்பொலிவு பெற்றது.

பாரம்பரியமாய் தொடர்ந்த நகர் மன்ற பதவி கைமாறியது.

அதிரை இணையங்கள் அதிக செய்தி,காணொளிகள் என ஊடகத் துறையில் கலக்கியது.

கல்வி மாநாடு தொடர்ச்சியாக நடத்தும் நோக்கில் முதல் கல்விமாநாடு என அறிவித்து சிறப்பாய் நடந்தது.

கடற்கரைதெரு,கீழத்தெரு,செக்கடி மேடு பகுதியில் தீ விபத்து.

பிலால் நகர் போன்ற பள்ளத்தாக்கு பகுதியில் வெள்ளத்தால் அதிக பாதிப்பு.

பெருநாள் இரவுகளிலும் வழக்கம்போல திட்டமிட்டு மின்வெட்டு.

2012 ல் ரயிலுக்கு அகலப்பாதை,அல்-அமீன் பள்ளி கட்டுமானம் என குறைந்த பட்சம் துவங்கிய ஆண்டாகவாவது இருக்க துஆவுடன் முயற்ச்சியும் செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி M.H.J: அட ! இப்படிக் கூட செய்திருக்காலாமே...

தொகுப்புகள் அருமை... (மெய்யாலுமே !)

வழக்கமா வர்ர கொழப்ப்ப்பம்ம்ம்தான் இது...

நானும் இப்புடி எழுதாலம்னு யோசிச்சேன் இதுக்கெல்லம் அதிரை ஜியாகரஃபி படிக்கனுமா ஹிஸ்டரி படிக்கனுமா ? அல்லது டெய்லி பூக்களை சுடச் சுடச் படிக்கனுமாமே அதான் நாம அந்த மேட்டருல கொஞ்சம் லேட்டு... எங்கே சென்றாலும் அதையே படிக்கனுமாமே அதான் சும்மா இருந்துட்டேன்...

Shameed said...

அழகு தொகுப்பு அதற்கேற்றாற்போல் படங்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு