Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கேள்விக்கென்ன பதில் !? 32

அதிரைநிருபர் பதிப்பகம் | January 19, 2012 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிரைநிருபர் வாசக வட்டத்திற்கு,

"மாப்ளே வரதட்சனை கொடுமைடா" பதிவின் கருத்துப் பெட்டியில் பதியப்பட்ட கருத்துக்களூடே சில கேள்விகள் வைக்கப்பட்டது அதற்கென எழுதிய பதிலுரையை தனிப் பதிவாக இங்கே உங்களின் கவணத்திற்கு.

உலகில் பெரிய டவர் கிரேன் வசதிகளெல்லாம் இல்லாத, நவீன தொலைத்தொடர்புகளெல்லாம் அந்தளவுக்கு வளர்ந்திராத, சந்திர மண்டலத்திற்கு மனிதன் சென்று கால் பதிப்பதற்கு முன்பாகவே கிட்டதட்ட சுமார் ஒரு நூறு வருடங்களுக்கு முன்பாக (1885ம் ஆண்டு என்று நினைக்கிறேன்) நாட்டின் போர்க்கைதிகளை வைத்து பிரான்ஸில் இன்னொரு நாட்டு மன்னனால் அன்பளிப்பாக வெறும் இரும்புத்தூண்களால் போல்ட், நெட்களை வைத்து முறுக்கிக்கட்டி அர்பணிக்கப்பட்டு இன்றும் உலக அதிசயமாய் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கும் ஈஃபில் டவரை பார்த்து இன்று ஆச்சர்யப்பட்டு பிரம்மித்து நிற்கும் நாம் 1400 வருடங்களுக்கு முன் இது போன்ற பெண் வீட்டினரிடம் வரதட்சிணை கேட்டு வாங்கி உலக மக்கள் சீரழிந்து சின்னாபின்னமாகி விடக்கூடாது என்று அன்றே நன்குணர்ந்து அதற்கு நேர்மாறாக பெண்ணிடமிருந்து சகல இன்பங்களையும் அனுபவிக்கும் ஆண் வர்க்கம் தான் பெண்ணுக்குரிய 'மஹர்' என்று சொல்லப்படும் தன்னால் இயன்ற நிர்ணயத்தொகையை செலுத்தி அவளை மணப்பெண்ணாக, வாழ்க்கைத்துணையாக அடைய வேண்டும் என்று அன்றே போர்ப்பிரகடணம் போல் பிரகடணப்படுத்தி எல்லா மக்களும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி தாமும் செம்மையுடன் பின்பற்றி செல்ல காரணமாக இருந்த புனித இஸ்லாமும் அதன் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இஸ்லாமால் 1400 வருடங்களுக்கு முன்பே நேராக, சீராக போடப்பட்ட தலைக்கவசம் நமது ஊர்களில் மட்டும் தலைகீழாக ஆக்கப்பட்டு நம்மக்களை தத்தளிக்க வைத்தது யாரோ? எதனாலோ? உண்மைக்காரணம் உணர முடியவில்லை.

வரதட்சிணை என்றால் என்ன?

விலை மாதரிடம் அவள் கேட்கும் பணம் அல்லது அதை விட கூடுதலாக கொடுத்து இன்பத்தை பெறும் மனிதன் அனுமதிக்கப்பட்ட முறையான உறவின் மூலம் இன்பமடைய பணம், பொன், பொருள், வீடுகளை பெண் வீட்டினரிடம் கேட்டு நிற்பது வரதட்சிணையாகும்.

வரதட்சிணையால் வரும் துன்பங்கள் யாவை?

இப்படி கண் மூடி லட்சங்களை பெண் வீட்டினரிடம் கேட்டு துன்புறுத்தி நிற்பதால் பெண்ணை பெற்ற தந்தையும், அவளின் உடன் பிறந்த சகோதரனும் தன் ஆசாபாசங்களை எல்லாம் துறந்து உள்ளத்தை கல்லாக்கி அதனால் பல நோய்நொடிகளையும் பெற்று அயல் தேசங்களில் தன் பொன்னான வாழ்நாட்களை இப்படி வரதட்சிணை கேட்கும் பொறுக்கிகளுக்காக மெழுகுவர்த்தி போல் தன் மேனியை உருக்கி நிற்பதே துன்பங்களில் எல்லாம் தலையாய துன்பமாகும்.

அதை திருத்த வழி என்ன?

பெண்களுக்கு தீன், துனியாவின் முறையான கல்வியை புகட்டி மனதில் ஒரு பக்குவத்தையும், பொறுமையையும் பழகச்செய்து இயன்றால் வீட்டிலிருந்தே ஏதேனும் கைத்தொழில்/பணி மூலம் அவர்கள் பணம் காசுகள் சம்பாதிக்க வேண்டிய எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருடங்கள் சில உருண்டோடினாலும் சரி நயாப்பைசா தரமாட்டேன், வீடும் கிடையாது என்று மனதில் ஒரு புரட்சிகரமான வைராக்கிய உணர்வை ஏற்படுத்தி, எதற்கும் துவண்டு விடாமல் தொடர்ந்து இவர்களை இந்த நிலையில் தொய்வின்றி நிற்கச்செய்து விட்டால் பிறகு வரதட்சிணைக்காக அலைபாயும் ஆண் வர்க்கம் அல்லோலப்பட்டு ஒரு நல்ல வழிக்கு வரும் அன்றே மார்க்கம் விளங்கி செழிக்கும்.

ஊரில் ஒரு இணைய தளம் யார் நிர்வகிக்கிறார்கள் என்று எவருக்கும் தெரியா வண்ணம் கடைசி வரை கட்டுப்பாட்டில் இருக்கும் படி உருவாக்கப்பட வேண்டும். அது உள்ளூரில், வெளியூரில், வெளிநாட்டில் இருக்கும் அனைவர்களுக்கும் பிரபல்யப்படுத்தப்பட வேண்டும். அதில் வரதட்சிணை வாங்குபவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என இருபிரிவாக பிரித்து அவர்களை இயன்றால் தேவையான தகவல்களை ரகசியமாக திரட்டி வீட்டு விலாசம், தெரு, குடும்பப்பெயர்களையும் அதற்கு ஒரு படி மேலாக புகைப்படத்துடன் வெளியிட்டு இக்கொடுமையை செய்பவர்களை கதிகலங்கச்செய்ய வைக்க வேண்டும். அதில் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நானாக இருந்தாலும் என் வீட்டினர்களாக இருந்தாலும் இதைக்கண்டு, பிறர் கூற கேள்விப்பட்டு வெட்கி தலைகுனிந்து ரோட்டில் நடமாட வெட்கப்பட வேண்டும். இவை எல்லாம் அவசியம் புனித மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு வரம்பிற்குட்பட்டதாக இருக்க வேண்டும். எல்லாம் என் உள்ளத்தில் தோன்றிய புரட்சிகர கருத்துக்கள் இது மார்க்க அறிவுடன் நம்மூருக்கு சாத்தியப்படுமா? என்பதே பதில் தெரியாத கேள்வி.

நம்ம ஊரைப்பொருத்தமட்டில் வரதட்சிணையேதும் வாங்காமால் தன் சொந்த வீட்டில் அல்லது கட்டிய வீட்டில் மணம் முடித்தவளுடன் இல்லறம் நடத்தும் ஆண்மகனைத்தவிர வேறு யாரும் இதன் கொடுமைகளைப்பற்றி எழுத தகுதியற்றவராகி விடுகிறார். இந்த பிரச்சினை என்று வந்தாலே மார்க்க ஆலிம்கள் முதல் சாதாரன ஆடவன் வரை வாயடைத்து நிற்க வேண்டியுள்ளது பெண் வீட்டை விட்டு வெளியேற இயலாதவர்களாய்.

ஒரு ஆண்மகன் நன்கு படித்து பட்டங்கள் பல பெற்று வாழ்வில் சிறந்து விளங்க முயல்வது அவன் எதிர்காலத்தில் இன்புற்றிருக்கவேயன்றி வேண்டாத வரதட்சிணை தொகையை பெண் வீட்டினரிடம் உயர்த்திக்கேட்பதற்கல்ல என்று நம் ஊர் உணர வேண்டும். எவ்வளவு தான் இது பற்றி சிறப்புடன் எத்தனையோ பேர் அன்றாடம் எழுதி வந்தாலும் எல்லாம் இறுதியில் செவிடன் காதில் ஊதிய சங்காக அல்லவா ஆகிவிடுகிறது?

போதிய மார்க்க அறிவின்றி இதை வாங்கி இருந்தாலும், கொடுத்திருந்தாலும் அதன் வேதனைகளை அன்றாடம் அனுபவித்து மென்று விழுங்கிக்கொண்டிருக்கும் எத்தனையோ பேரால், குடும்பத்தால் இதை விட சிறப்பாக இந்த வரதட்சிணையால் வரும் துன்பங்களையும், துயரங்களையும் தெள்ளத்தெளிவாக இன்னும் சிறப்பாக விளக்க முடியும். முயல்வார்களா? இல்லை அப்படியே மெல்லமெல்ல கண்மூடி மண்மூடி மறைந்து போவார்களா?

மாற்ற வழி என்ன?

"வாப்பா/காக்கா, நான் கடைசி வரை முதிர்கன்னியாக இருந்து மவுத்தாப்போனாலும் பரவாயில்லை தயவு செய்து வரதட்சிணை கொடுத்து எனக்காக வீடுவாசல் சிரமப்பட்டு கட்டி எனக்கு மணம் முடித்துக்கொடுக்க வேண்டாம். அல்லாஹ் நாட்டத்தில் எனக்கு ஒரு நல்ல துணை கொஞ்சம் காலங்கள் கழிந்தாலும் பரவாயில்லை நம்மைத்தேடி வரும் என்ற தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும், வைராக்கியத்தையும் நம் வீட்டு பெண்களுக்கு முறையே ஊட்டி விட்டால் பெரும் மாற்றங்கள் உருவாகி நம் ஊரில் பாழாய்ப்போன பழக்க,வழக்கங்கள் ஒழிந்து வாழ்க்கை ஒளிர்ந்து மறுமலர்ச்சி வீடு தோறும் மலர ஆரம்பித்து விடும் இன்ஷா அல்லாஹ்".

வரதட்சிணை நம்மூரில் வீடு தோறும் புரையோடிப்போன புற்று நோய் போல் பரவிக்கிடப்பதால் இது சமாச்சாரமாக வெட்கப்பட்டு, தலைகுனிந்து தான் எழுத வேண்டியுள்ளது.

இந்த நல்ல மாற்றங்கள் நம் கண் முன்னே வருமா? இல்லை நாம் மறைந்த பின்னே வருமா? அல்லாஹ் நன்கறியக்கூடியவன்.

- மு.செ.மு. நெய்னா முஹம்மது.

32 Responses So Far:

Anonymous said...

//விலை மாதரிடம் அவள் கேட்கும் பணம் அல்லது அதை விட கூடுதலாக கொடுத்து இன்பத்தை பெறும் மனிதன் அனுமதிக்கப்பட்ட முறையான உறவின் மூலம் இன்பமடைய பணம், பொன், பொருள், வீடுகளை பெண் வீட்டினரிடம் கேட்டு நிற்பது
வரதட்சிணையாகும்.//

கை கொடுங்கள் எம் எஸ் எம் . இதைவிட பெரிய சவுக்கடியை கொடுக்க முடியாது.

புரையூடிப்போன இந்த புற்று நோயை எதிர்த்தும் அதை வெட்டிகளையவும் ஒரு இயக்கம் தொடங்கப்படவே வேண்டும்.

வஸ்ஸலாம்.

இபுராஹீம் அன்சாரி.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இதுலெ கொடுமையான விசயம் என்னாண்டாக்கா ஒரே ஆம்புளப்புள்ள வச்சிக்கிறவங்க, வெறும் ஆம்புளப்புள்ளையா வச்சிருக்கவங்க, சொத்து சுகம் நெறப்பம்மா உள்ளவங்க, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுலெ குடும்பத்தோட சிட்டிசனா இருந்து குதூகலமா ஈக்கிறவங்க கூட தன் மகனுக்கு கலியாணம் என்று வரும் பொழுது எதாவது ஒரு வகையில், வழியில் பெண் வீட்டினரை பொருளாதார ரீதியில் துன்புறுத்தி விடுகின்றனர். இந்த விசயத்தில் கொஞ்சமும் ஈவு, இரக்கம் காட்டுவதில்லை. ஆலிம்சா மாருவொலே தப்பு செய்றாங்க என்று தேவையில்லாத, மோசமான‌ உதாரணத்தை காரணம் சொல்லி தப்பிக்க நினைக்கின்றனர்.

இப்படி கொடூர மனம் கொண்டவர்கள் தங்களின் அலுவலக அல்லது வீட்டு கம்ப்யூட்டரின் மவுஸை டாக்டரின் ஸ்டெதாஸ்கோப்பாக நினைத்து தன் நெஞ்சில் வைத்து மனசாட்சியிடம் கேட்டுப்பார்க்கட்டும் நாளை மறுமையில் இறைவன் நமக்கு எதிலேனும் ஈவு, இரக்கம் காட்டுவானா? என்று. அவர்களின் க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் நிறைந்த‌ ம‌ன‌சாட்சியின் தாக்க‌ம் க‌ணிப்பொறியின் திரையின் முன்பே தெளிவாக‌ தெரிந்தாலும் தெரியும்.

சில‌ர் எம்புள்ளெக்கி ஒரு ந‌யா பைசா கூட‌ வாங்க‌ வில்லை என்று வெறும் பெருமை அடித்துக்கொண்டு ம‌றைமுக‌மாக பெண் வீட்டின‌ரை வ‌ற்புறுத்தி ப‌ல‌ ல‌ட்ச‌ங்க‌ள் பெருமான‌ வீட்டை எழுதி வாங்கிக்கொள்கின்ற‌ன‌ர். கார‌ண‌ம் புள்ளெக்கி நாளெக்கி பொம்புள்ள‌ப்புள்ளெ பொற‌ந்து அவ‌ன் க‌ஸ்ட்ட‌ப்ப‌ட‌க்கூடாது பாருங்க‌? என்னா தொலைநொக்கு பார்வை? என்னா சூட்ச்சும‌ம்?

என்றோ வ‌ர‌க்கூடிய‌ ம‌க‌னின் க‌ஸ்ட்ட‌த்திற்கு முன்னாடியே க‌ச்சித‌மாக‌ ப‌த்திர‌ம் எழுதி வாங்கிக்கொள்ளும் அர‌க்க‌ர்க‌ள், அயோக்கிய‌ர்கள் இவர்கள். இது போன்ற‌ அயோக்கிய‌ர்க‌ளுக்காக‌ மைய‌வாடி த‌னியாக‌ ஊரின் எல்லையைத்தாண்டி அமைக்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

Anonymous said...

நம் ஊரில் வரதட்சிணை கொடுமை தலை விரித்தாடிக் கொண்டியிருக்கிறது எவ்வளவோ பயான்களும், ஹதீகளும் கேட்க்கத்தான் செய்கிறார்கள் அப்படி கேட்டும் திருந்திய பாடில்லை. என்னாதான் சவுக்கடி அடித்தாலும் நம் ஊரில் உள்ள மக்கள் திருந்த மாட்டார்கள் ஆனால் ஒரு விஷயம் என்றைக்கு வீட்டில் உள்ள பெண்கள் கேட்பதை எல்லாம் வாங்கியோ அல்லது வெளிநாட்டிலிருந்து அனுப்பினாலும் சீர்
கெட்டு தான் போகும். முதலில் பெண்களிடம் பணம் பொறுப்புக்களை விடக்கூடாது அவர்களுக்கு தேவையானதை மட்டும் அனுப்பி விட்டு ஆண்கள் மற்ற பணத்தை வைத்துக்கொள்ளவும். பெண்கள் கேட்கிற பணம், பொருள்கள் எல்லாம் ஆண்கள் அனுப்பிவிடுகிறார்கள் அதற்கு எந்த வித கேல்வியும் கேட்பதில்லை. இப்படி இருப்பதினால தான் வரதட்சிணை கொடுமை மிக அதிகமாகிறது. பெண்கள் உங்கள் செலவுகளுக்கு அதிகமாக கேட்கும் போது அதற்குரிய ஆண்கள் கணக்குகளை கேட்டு வாங்குங்கள் அப்பொழுது தான் உங்களுக்கும் செலவுகள் எவ்வளவு வருகிறது என்று தெரிய வரும். நம் ஊரில் பெண்கள் ராஜியம் இருக்கிற வரைக்கும் வரதட்சிணை ஓயாது. ஒரு வீட்டிற்கு ஆண் தலைவனாக இருக்க வேண்டும் அப்படி பெண்ணை தலைவியாக விடும்போது தான் இந்த பிரச்சினைகள் வந்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் இடை தரகர்கள் (brokers) இருக்கிறார்கள் மீன் மார்க்கட்டில் ஏழாம் விடுவது போல் வரதட்சிணைக்கும் ஒரு தொகை நிர்ணயம் செய்கிறார்கள். அவர்கள் தான் வரதட்சிணை இவ்வளவு வாங்கு, என்றல்லாம் மாப்ளே வீட்டிற்கு சொல்லி வாங்க சொல்கிறார்கள் மாளே வீட்டில் பணம், நகை , வீடு, சீர், சீராட்டுக்கள் எல்லாம் வாய் கூசாமல் கேட்கிறார்கள். இது கேவளம் என்று மாப்ளே வீட்டில் நினைப்பதில்லை நாம் எவ்வளவு சொன்னாலும், எழுதினாலும் காதிலையை வாங்கமாட்டார்கள் செவுடன் காதில் சங்கு ஊதுவது போல்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மேலுமொரு நல்ல தீர்வு.
தொடரட்டும் உன் எழுத்துப் போர்.
வரட்டும் நல்ல மாற்றங்கள் நம் கண் முன்னே!

சேக்கனா M. நிஜாம் said...

முன்பெல்லாம் பொண்ணுகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது, வரதட்சனைகள் மூலம் பெரும் போட்டியாகவே காணப்பட்டது.
தற்பொழுது மாப்பிள்ளைமார்களுக்கு பொண்ணு கிடைப்பது அபூர்வமாக உள்ளது..................

நிறைய முதிர்க் கண்ணன்கள் நம்ம ஊரில் ஜாஸ்திப்பா !

பயனுள்ள பதிவை தந்த சகோ. நெய்னா முகமதுக்கு வாழ்த்துக்கள் !

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

எம்.எஸ்.எம். நெய்னாவால் பதிக்கப் பட்ட தாக்கம்தான்.இன்று ஆக்கமாக அவதிப் படுகிறது.நம் ஊரில் உள்ள வரதட்சனை கட்டிடம் உன் எழுத்து பீரங்கியால் சிதறுண்டு உரு தெரியாமல் மறையட்டும்.

ZAEISA said...

வரதட்சணை கூடாது என்று நாமும் விவரம் தெரிந்தநாளாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்,முடிவுக்குவந்தபாடில்லை.ஆனால் தற்போது கொஞ்சம் நம் மக்களிடையே விழிப்புணர்வு வந்துள்ளதை ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.எனக்கு வந்த மருமகன் எங்களுக்கு ஒரு செலவு வைக்கவில்லை.அல்லாஹ் உதவியால்சந்தோச
மாக இருக்கிறோம்.அல்ஹம்துலில்லாஹ். சும்மா... வாப்பா உம்மாவை குற்றம் சொல்லாமல்..மணமகன் என்பவன் தீர்க்கமானமுடிவுடன் வரதட்சணை எதிரியாய் இருத்தல்தான் அவசியம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ. நெய்னா முஹம்மது,

கொடுப்பவன் இருக்கும் வரை வாங்குபவன் இருந்துக்கொண்டே இருப்பான்.

இங்கு நான் கொஞ்சம் வித்யாசப்படுகிறேன், எவ்வளவு நாளைக்கு தான் வாங்குபவனேயே குறை சொல்லிக்கொண்டிருப்பது.

வரதட்சனை கொடுக்கமாட்டேன், அல்லாஹ் என் பிள்ளைகளை கரையேற்றுவான் என்ற நம்பிக்கை வலுவிழந்ததே வரதட்சனை ஒழியாமல் இருப்பதற்கு காரணம்.

மணமகன் முடிவெடுப்பதைவிட மணமகள் முடிவெடுக்க வேண்டும் வரதட்சனை கேட்பவர் கணவனாக வரவேண்டாம் என்று.

நாம் செய்ய வேண்டியது.. தவறு செய்பவனை திருத்துவதைவிட தவறை செய்ய தூண்டுபவனை திருத்துவதே விடிவுகாலத்திற்கு வழிவகுக்கும்.

இந்த விழிப்புணர்வை இனி செய்யலாமே...

மார்க்க அடிப்படையிலான பெண் கல்வி அவசியம்..

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"டேய் என்னடா இது? யாருடா பழக்கித்தந்தது? படுவா இதெல்லாம் ஆஹாதுடா...மார்க்கத்தை தாண்டி இந்த வரதட்சிணை நீ வாங்கினால் அல்லாஹ் உலகிலும், மறுமையிலும் உன்னை படாத பாடு படுத்திவிடுவான் என்றும் அப்படி மீறி நீ வாங்கினால் அது எங்களுக்கு தெரிய வந்தால் உனக்கு சொத்து,சுகத்தில் எவ்வித பங்கும் கிடையாது என்று எந்த வாப்பா, உம்மாவது ஆணித்தரமாகவும், உறுதியாகவும் தன் பிள்ளைகளிடம் சொல்லிப்பார்க்கட்டும்.....பிறகு இவன் எல்லாவற்றையும் மீறி வாங்கி விடுவானா?"

முதலில் பெத்தவங்க இந்த விசயத்தில் தட்டுகெட்டு போகாமல் இருத்தல் மிக அவசியம்.

விழிப்புணர்வுடன் இருக்கும் ஆண்/பெண்களுக்கு கூட அவனுக்கு/அவளுக்கு தெரியாமல் கொல்லைப்புறம் வேண்டியதை வாங்கியும், கொடுத்துக்கொள்ளும் எத்தனை வாப்பாமார், உம்மாமார் நம் ஊரில் இல்லாமல் இல்லை.

இப்படி கொடூர மனம் கொண்டவர்கள் தங்களின் அலுவலக அல்லது வீட்டு கம்ப்யூட்டரின் மவுஸை டாக்டரின் ஸ்டெதாஸ்கோப்பாக நினைத்து தனியே தன் நெஞ்சில் வைத்து மனசாட்சியை தொட்டு பார்க்கட்டும். அவர்களின் க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ம் நிறைந்த‌ ம‌ன‌சாட்சியின் தாக்க‌ம் க‌ணிப்பொறி திரையின் முன் தெள்ளத்தெளிவாக‌ தெரிந்தாலும் தெரியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், திருமணம் முடித்து பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள் தொலுக்கு மேல் வளர்ந்த பிறகும், மாமியார் வீட்டில் முழு வீடு வேண்டும், வேறு வீடு வேண்டும் என்று இன்றும் வீடு என்ற சீதனத்தை அதாவது டிமாண்டட் வரதட்சனைக்காக வழக்காடும் ஆண்(?)மகன்களின் வீட்டார் இருக்கிறார்கள்.. உண்மையில் இது வெந்த புண்ணில் அம்பை எறிவதுதானே.

அல்லாஹ் தான் நம் சமுதாயத்தை காப்பாற்ற வேண்டும்.

Yasir said...

மாப்பிள்ளையென்று சொன்னால் “இத்துபோன நூல் கூட முறுக்கி கொண்டு நிற்குமாம் “ அந்த முறுக்குக்கெல்லாம் நொறுக்கடி கொடுத்து இருக்கிறீர்கள்...கட்டுரையை முழுவதும் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்

ZAEISA said...

மணமகன் உறுதியாக இருத்தல்தான் முக்கியம்.அதுதான் நமதூரைப் பொறுத்தவரைப் பொருந்தும். தாஜுதீன் சொல்வதுபோல மணமகள் உறுதியென்பது-அழுக்கு வேட்டிக்கு நேவிப்ளூ போட்டாப்ல இருக்கும்.

அப்துல்மாலிக் said...

//வரதட்சிணை என்றால் என்ன?

விலை மாதரிடம் அவள் கேட்கும் பணம் அல்லது அதை விட கூடுதலாக கொடுத்து இன்பத்தை பெறும் மனிதன் அனுமதிக்கப்பட்ட முறையான உறவின் மூலம் இன்பமடைய பணம், பொன், பொருள், வீடுகளை பெண் வீட்டினரிடம் கேட்டு நிற்பது வரதட்சிணையாகும்.//

நெய்னா இதைவிட சிறப்பாக வேறு யாராலும் ஆணித்தரமான விளக்கம் கொடுக்க இயலாது... ஒவ்வொரு வரிகளும் வாங்கினவனும், வாங்க இருப்பவனுக்கும் செருப்படியா இருக்கு, இவர்களை ஒருவகையில் திருடனுடன் ஒப்பிடலாம். அவன் கேட்பதை பெற்றோர் வருத்தத்துடன் கொடுப்பதும் ஒருவகை திருட்டுதான்.

அப்துல்மாலிக் said...

தான் இளமைகள் அனைத்தையும் தொறந்து வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரும் தங்கைகளை கரையேற்றனும், தனக்கென ஒரு மனை வாங்கி அதுலே வீடுகட்டவேண்டும் என்ற கனவுதான், இதுக்கே பாதி வயசாகிடுது, இதுலே தனக்கு 4 தங்கைகள் இருந்தால் அவனின் வாழ்க்கையை நினைத்துப்பாருங்க மக்கா...,பிறந்தது அவன் தப்பில்லை இதுக்கு முழு பொறுப்பும் நம் சமூதாயம்தான் அதில் உள்ளவர்கள்(நானும்) அனைவரும் இதுக்கு பொறுப்பாவார்கள்.. அல்லாஹ் காப்பாத்தனும்.

இதுமாதிரி விடயங்கள் நிச்சயம் நோட்டீஸாக அச்சடித்து வினியோகிக்க வேண்டும்..

அப்துல்மாலிக் said...

//வரதட்சிணை வாங்குபவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என இருபிரிவாக பிரித்து அவர்களை இயன்றால் தேவையான தகவல்களை ரகசியமாக திரட்டி வீட்டு விலாசம், தெரு, குடும்பப்பெயர்களையும் அதற்கு ஒரு படி மேலாக புகைப்படத்துடன் வெளியிட்டு இக்கொடுமையை செய்பவர்களை கதிகலங்கச்செய்ய வைக்க வேண்டும்.//

இதுவும் நல்ல முயற்சி, மேலும் ஒரு படி மேலே போய் சுவர் விளம்பரம் கூட செய்யலாம், அந்தளவுக்கு நம் சமூகம் பாதிக்கப்பட்டிருக்கு...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இன்றைய சூழ்நிலையில் வாப்பா,உம்மாவிடமும் பெற்ற பிள்ளைகளிடமும் பெரும் சொத்து,பத்தை நாம் கேட்கவில்லை எதிர்பார்க்கவும் இல்லை. அவர்கள் இது விசயத்தில் ஆரம்பத்திலிருந்தே ஆணித்தரமாக கடுகளவும் தான் கொண்ட நிலையில் பிசகாமல் இருந்திருந்தால் எவ்வளவு பெரிய இழப்புகளை தடுத்து பெரும் சொத்து,பத்துக்களை வாங்கிப்போட்டிருக்கலாம் அல்லவா?

இது விசயத்தில் ஹிரோஷிமாவில் அமெரிக்காவால் வீசப்பட்டு பல சொல்லாத்துயரங்களையும், பேரிழப்புகளையும் அடைந்த அந்த நேரத்திலான‌ மக்கள் மற்றும் அவர்களுக்குப்பின் அங்கு வந்த சமீபத்திய கால மக்களைப்போல் நாம் இந்த வரதட்சிணையையின் கோர பிடியில் ஏதாவது ஒரு வகையில் சிக்குண்டு அல்லல் பட்டு துயரடைந்து வருகிறோம்.

நாளடைவில் அதே ஹிரோஷிமா வளர்ச்சியில் இமாலய வெற்றி அடைந்து இன்று தலைநிமிர்ந்து உலக அரங்கில் நின்று வருவது போல் நம் வருங்கால சந்திகளாவது இந்த துயரிலிருந்து முற்றிலும் மீண்டு இம்மை, மறுமை வாழ்வில் இறைவன் நாட்டத்தில் ஜொலிக்க வேண்டும் என்பதே எம் அவாவும், து'ஆவும்....

இன்ஷா அல்லாஹ்.

Noor Mohamed said...

//பெண்களுக்கு தீன், துனியாவின் முறையான கல்வியை புகட்டி மனதில் ஒரு பக்குவத்தையும், பொறுமையையும் பழகச்செய்து இயன்றால் வீட்டிலிருந்தே ஏதேனும் கைத்தொழில்/பணி மூலம் அவர்கள் பணம் காசுகள் சம்பாதிக்க வேண்டிய எல்லா வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து வருடங்கள் சில உருண்டோடினாலும் சரி நயாப்பைசா தரமாட்டேன்,//

ஒரு கட்டத்தில் 1965 - 75 காலங்களில் நமது பெண்கள் மால் (மீன் பிடி வலை) முடிந்தார்கள் , நூல் (பருத்தி ஆடைக்காக) நூற்ரார்கள், குட்டான் (ஓலைப் பெட்டி) கோர்த்தார்கள் , கூடை பின்னினார்கள், பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்றார்கள், கோழிகளை வளர்த்து முட்டை விற்பனை செய்தார்கள், இன்னும் etc.

ஆனால் இன்றோ, வரதட்சணைக்கு அச்சாணியாக அமைந்த Real Estate Broker - மனைக்கட்டு வியாபாரத்தில் நமதூரில் 20% பெண்களே என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. நாடு முழுதும் Real Estate வீழ்ச்சி அடைந்தாலும் நம் அதிரையில் மட்டும் அர்த்த மற்ற முறையில் மனைக்கட்டு விலை ஏற்றத்திற்கு காரணம் நமது பெண்களே.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

'முன்னப்பின்ன் மவுத்தா போயிர்ந்தா தானே கபுர் வேதனைகளும், வயிறு உப்பி வெடித்துச்சிதறி, ரத்தமும் சீழும் வடிந்து அதை புழு,பூச்சிகள் நாக்கு ருசிக்க நக்கித்திண்பதெல்லாம் வெளங்கப்போவது?'

ஒரு செத்துப்போன எலியை சும்மா வெளியில் போட்டு வைத்தாலே அதன் உடலில் ஏற்படும் மாற்றங்களும், துர்நாற்றங்களும் நம்மை திட்டுமுட்டு செரவடியாக்கி தெகரடித்து விடுகிறதென்றால் மனிதனின் உடலிலிருந்து கபுருக்குழிக்குள் என்ன,என்ன மாற்றங்கள் நடந்தேறப்போகின்றனவோ? உலக அட்டூழியங்களுக்கு தகுந்தார் போல் அங்கு அதாப்களும் அதிகப்படுத்தப்படுமே? என்று நாம் கண் மூடும் முன் மண் மூடிய பின் நடக்கும் நிகழ்வுகளை சற்றேனும் சிந்தித்து பார்க்க வேனும்.

Anonymous said...

அன்புக்குறியவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

எம்.எஸ் எம் அவர்கள் ஒரு கொழுத்த பூனையின் கழுத்தில் பருத்த மணியை கட்டி இருககிரார்கள்.

நமது ஊர் ஆலிம்கள் பெருத்த ஊர். உள்ளூர் வெளியூர் அரபி மதரசாக்களில் சென்று ஓதி பட்டம் பெற்று வருகிறவர்கள் வந்தவர்கள் வாழும் ஊர் என்று மார் தட்டுகிறோம்.

தப்லீகின் மார்கஸ் இருக்கும் ஊர் என்று பெருமை பேசுகிறோம்.

பக்கத்து ஊர்களுக்கும் கூட மார்க்கதீர்ப்பு வழங்கும் அருகதை உடைய மார்க்க அறிஞர்கள் நிறைந்த ஊர் என்று ஆர்ப்பரிக்கிறோம்.

பெருமைதான்.

ஆனால் வரதட்சணை போன்ற ஹராமான செயல்களை இந்த ஆலிம்களும் அறிஞர்களும் தங்கள் சொந்த வீடுகளில், குடும்பங்களில் கூட ஒழிக்கமுடியவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. காரணம் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதைப்போல் பெண்ணாட்சி.

ஓதி உணர்ந்த இந்த ஆலிம்கள் இப்படி பிரச்னை வரும்போது பேச ஆரம்பித்தால் “ சும்மா இருங்க உங்களுக்கு ஒன்னும் தெரியாது “ என்று வாயை அடைத்து விடுகிறார்கள். யார் வாயை அடைக்கப்படுகிறார்களோ அவர்கள்தான் அந்த வாரத்தில் வரதட்சணை கொடுமை பற்றி அடுத்த ஊர் ஜூம்மாவில் பயான பண்ணுவார்கள்.

அதுமட்டுமல்ல. இப்படி ஹராமான பணத்தை வைத்து ஒரு வட்டாவில் குடும்பத்தலைவர் கொடுப்பார். அதற்கு ஒரு நிகழ்ச்சியை நார்சாவுடன் அல்லது புரோட்டா கறியுடன் அமைப்பார்கள். தெரு ஊர் முக்கியஸ்தர்கள் அதில் கலந்து கொள்வார்கள். அதில் பணம் கொடுத்து முடிந்த பிறகு ஆலிம்சா பாத்திஹாவும் ஓதி ( கொடுமை) அதற்கு பணமும் வாங்கி சைடு ஜோல்நாபையில் வைத்துக்கொண்டு போய்விடுவார்.

அதுமட்டுமல்ல. திருமண மஜ்லீசில் பதிவு புத்தகத்தில் ஊரே கேட்கும்படி ஒலிபெருக்கி வைத்து மாப்பிள்ளைக்கு பெண்வீட்டார் கொடுத்தது , பெண்ணுக்கு பெண்வீட்டார் கொடுத்தது என்று ஒரு பட்டியலை வாசிப்பார்கள். அதில் ஊர் பெரியவர்கள் சாட்சி கை எழுத்து இடுவார்கள். பிறகு அதற்கும் ஒரு பாத்திஹா ஓதுவார்கள். இவைகள் நடக்கிறதா இல்லையா?

பெண்கள் பேரில் உள்ள சீதனம் கொடுக்கப்பட்ட வீட்டு பத்திரங்களையும், வீடுகளில் வைத்திருக்கிற கைக்கூலி வட்டாவையும் ஒரு நாள் குறிப்பிட்டு தக்வா பள்ளி சந்திப்பில் போட்டு கொளுத்துங்கள்- உடையுங்கள்.

வஸ்ஸலாம்.

இபுராகிம் அன்சாரி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// zaeisa சொன்னது…
மணமகன் உறுதியாக இருத்தல்தான் முக்கியம்.அதுதான் நமதூரைப் பொறுத்தவரைப் பொருந்தும். தாஜுதீன் சொல்வதுபோல மணமகள் உறுதியென்பது-அழுக்கு வேட்டிக்கு நேவிப்ளூ போட்டாப்ல இருக்கும். //

என்னுடைய கருத்து மணமகன் ஒட்டியே வரதட்சனை பிரச்சாரங்கள் பல வருடங்களாக செய்யப்படுகிறது. வரதட்சனை கொடுப்பவர்களிடம், கொடுக்க வேண்டாம், ஒருவன் தீங்கு செய்வதற்கு கட்டாயத்தின் பெயரில் அத்தீங்கிற்கு துணை போகிறீர்கள் என்பதை உணர்த்தலாமே.. முயற்சி செய்யமலேயே சாத்தியமில்லை என்று விடுவதே நம்முடைய பல தோல்விகள் உதாரணமாக கண் முன்னே தெரிகிறது.

வட்டி வாங்குபவனும், வட்டி கொடுப்பவனும் குற்றமானவர்களே அது போலவே இது என்பது என் கருத்து, இருப்பினும் நிச்சயம் பெண்ணை பெற்ற பலருக்கு இதில் மாற்று கருத்து இருக்கும் என்பதும் நான் அறிந்ததே..

என் பெண் பிள்ளைக்கு வரதட்சனை கொடுக்க மாட்டேன் என்று சவால் விடும் பெற்றோர்கள் இன்று இருக்கிறார்கள் என்பது என்னவோ வெளியில் தெரியாத உண்மை.

ZAKIR HUSSAIN said...

To Brother MSM Naina Mohamed,

உங்கள் கருத்துக்கள் அனைத்திலும் ஞாயமான கோபம் தெரிகிறது.

பெண் வேண்டும் என்று கேட்கும் மாப்பிள்ளைகள் ஏனோ பெரும்பாலும் 'உம்மா சொன்னாக / வாப்பா சொன்னாக என பம்மும்போது நமக்கு 'ஜக்கி' ஆகிறது.

வரதட்சனை வாங்குவதை குலப்பெருமையாக பேசும் வீட்டில் சில 'பெர்சுங்க" இந்த விசயத்திலெ நல்லா கல்லா கட்டுதுங்க.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நாட்டின் சுதந்திரதின விழா அணிவகுப்பில் நம் பிரதமர் (அ) ஜனாதிபதி 'குண்டு துளைக்காத கூண்டில் நின்று கொண்டு சுதந்திரத்தை பற்றி சொற்பொழிவாற்றுவது போல்' தான் இருக்கிறது வரதட்சிணை கொடுமைக்கு எதாவது ஒரு வகையில் துணை போனவர்களை வைத்து சன்மார்க்கத்தை மலரச்செய்ய நாம் எடுக்கும் முயற்சிகள்.

சகோதர, சகோதரிகளே இங்கு கட்டுரை எழுதிய நானும், அழகிய கருத்திட்ட அன்பர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் யாரேனும் நம்மூரில் பிறந்த பாவத்திற்காக இந்தக்கொடுமைக்கு ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே வேதனையான மற்றும் நிதர்சனமான உண்மையாகும்.

ஏதேனும் ஒரு சிலர் மார்க்கத்தின் வரம்பிற்குட்பட்டு இதிலிருந்து விதிவிலக்கு பெற்றிருக்கலாம். நிச்சயம் அவர்கள் வாழ்வின் இன்பத்தை அனுபவித்துக்கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் போல் நம் சமுதாயம் முற்றிலும் விலக்கு பெற்று ஈருலகிலும் இன்பமுற்றிருக்க‌ அந்த அல்லாஹ்வே நல்லருள் புரிய போதுமானவன்.

sabeer.abushahruk said...

வரதட்சிணைக்கு எதிராக சகோதரர் நெய்னா சொடுக்கியிருக்கும் சாட்டை வீரியமானது.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமென்பர். மென்மேலும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வதன்மூலம் நிச்சயம் மாற்றம் கொணரலாம்.

தொடருங்கள் நெய்னா உங்களின் ஊடக சேவையை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
முன்பெல்லாம் மாப்பிள்ளைக்கு போட்டி நடக்கும். இப்பொழுது மாப்பிள்ளையை தராசில் வைத்து எடைபோட ஆரம்பித்து விட்டார்கள்.
தீமைக்கு எதிராக பலவழிகளிலும் போராடுவோம்.

இன்ஷா அல்லாஹ்! மஹர் கொடுத்து மணமுடிக்கும் காலமும், வரதட்சணைக்கு எதிராக பெண்களே களம் இறங்கும் காலமும் வரும்.

தங்களின் பங்களிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கட்டும்.

Unknown said...

//"வாப்பா/காக்கா, நான் கடைசி வரை முதிர்கன்னியாக இருந்து மவுத்தாப்போனாலும் பரவாயில்லை தயவு செய்து வரதட்சிணை கொடுத்து எனக்காக வீடுவாசல் சிரமப்பட்டு கட்டி எனக்கு மணம் முடித்துக்கொடுக்க வேண்டாம். அல்லாஹ் நாட்டத்தில் எனக்கு ஒரு நல்ல துணை கொஞ்சம் காலங்கள் கழிந்தாலும் பரவாயில்லை நம்மைத்தேடி வரும் என்ற தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஊக்கத்தையும், வைராக்கியத்தையும் நம் வீட்டு பெண்களுக்கு முறையே ஊட்டி விட்டால் பெரும் மாற்றங்கள் உருவாகி நம் ஊரில் பாழாய்ப்போன பழக்க,வழக்கங்கள் ஒழிந்து வாழ்க்கை ஒளிர்ந்து மறுமலர்ச்சி வீடு தோறும் மலர ஆரம்பித்து விடும் இன்ஷா அல்லாஹ்".//

10 ஆம் வகுப்பு படிக்கும் பெண் பிள்ளையை பாதியிலேயே நிருத்திவிட்டு போதும் நீ படித்தது சோறு கறி ஆக்க கத்துக்கனும் அடுப்படிக்கு போ.. என மிரட்டும் தாய்,(அதுவரை கல்யாணம் என்றால் என்னவென்றுகூட நினைத்துப் பார்க்காதவளின் மனதில் கல்யாண ஆசைக்கு விதையிடுவது.

அந்த மாப்பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம் இநத மாப்பிள்ளையை கேட்டுப் பார்க்கலாம்.. என வீட்டு பெரியவர்களெல்லாம் அந்த சிறு பெண்ணை வைத்துக் கொண்டு பேசும்போது மனதில் கல்யாண ஆசையை வளர்ப்பது.

இவங்களுக்கு வேற வேலையே இல்லை ஒரே கல்யாண பேச்சுதான் என வெளிப்படையாக அந்த பெண் சொன்னாலும் ஆனால் அவளின் மனதுக்குள் மறைமுகமாக ஆசையை வளர்ப்பது இந்த பெற்றோர்களே.

இருப்பினும் நடைமுறைக்கு ஒத்துவருமா? என்ற கேள்வியுடன் கூடிய ஒரு விவாதத்திற்க்கு தேவையான பதிவு/

ஒரு புள்ளி விவரம் சொல்கிறது சுமார் 10 வருடங்களில் மாப்பிள்ளை கிடைக்குமாம் பெண் கிடைக்காதாம் (இப்போது கூட இதற்க்கன அறிகுறிகள் தெரிகிறது) ஒருவேலை அந்த சமயத்தில் இந்த பதிவுக்கு அவசியமில்லாமல் போகலாம் அல்லாஹ் நாடினால்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேற்றைய தினம் ஒரு சகோதரர் வெகுநேரம் அலைபேசியினூடே அவரின் ஆத்திரைத்தையும் ஆதங்கத்தையும் சொல்லிக் காட்டினார்....

அதிலிருந்து சில...

* வாங்குறானுங்க வாங்குறானுங்க என்று ஏன் சாடுகிறீர்கள் வாங்குவது அவனல்ல அவனது பெற்றோர் கொடுப்பது அவளல்ல அவளது பெற்றோர்..

* ஆண் வாங்க மாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலும் வீட்டார் அந்த வேலையை கச்சிதமாக செய்துவிடுகிறார்கள்.

* திருமணத்திற்கு வரதட்சனை வாங்க வில்லை என்று நிமிர்ந்த நடைபோடா வெளியில் வருபருக்கு எங்கிருந்தோ அல்லது இல்லாள் சொல்லியோ உங்கள் வீட்டில் வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவரும்போது, வேதனைப்பட்டு பெற்றோரிடம் கேட்கிறான் அவர்கள் எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்கிறார்கள்... அதெப்படி !?

ஆம் அப்படித்தான் சுற்றியிருப்பவர்களும் ஏன் உடன் பிறந்த சகோதரிகளே மறைமுக பேரம் நடத்தி (கெளரவம் காப்பாற்ற) முடித்து வைக்கின்றனர்.

சரி வாங்கிட்டீங்க உடணே திருப்பிக் கொடுத்திடுங்க !... அதெப்படி !?

அத வச்சுதானே கடனடைத்தோம், அங்கே கொடுத்தோம், இங்கே கொடுத்தோம், அதனை வாங்கியதற்கு கொடுத்தோம் !

அவர்களின் கெளரவ பிச்சையை இந்த ஆண் திருப்பி 6 1/2 மாதங்களில் கொடுத்தார் என்பதாகவும் சொன்னார், இது வேறு எங்குமல்ல நமது அதிரை மண்ணில்தான்.

* பெரும்பாலும் எந்த ஆணும் பெண்கள் வீட்டில் கல்யாணத்திற்கு பணம் வாங்கலாம் என்று சொல்லிக் கேள்விபட்டதில்லை, தெட்டுத் தெரித்தார்போல் ஒருசிலர் உம்மாவின் அல்லது சகோதரிகளின் துப்பட்டியை போர்த்திக் கொண்டு கேட்டிருக்கலாம்...

* எங்கேயாவது ஒரு மனை காலியாக இருக்கிறது என்றால் அதனை விற்க பெண் புரோக்கர்கள் எப்படி அனுகுகிறார்கள் என்பதுதான் இன்னும் வேதனையான உண்மை...

"அந்த தெருவுல வெள்ளக்கட்டிமாதிரி மனையிருக்கமா"

"எங்கவுல"

"ஆதாமா அங்கே '....' இப்போ வாங்கி போட்டுடுவுல, ஒ மவ அஞ்சாவது பக்கிறா அந்த மனைக்கு பக்கத்துல இருக்கிற வூட்டுல இரண்டு பயலுவோ கொழு கொழுன்னு இருக்காங்கமா அங்க வாங்கி போட்டுட்டா தானா மாப்பிளை தேடி வருவுள உனக்கு"

"அடியா... நல்ல யோசனடி..."

"யாவுல யோசிக்கிறே..."

"இருடி அதுவுக்கு அவ்வள்ள்ட சொல்லி வெளங்க வைக்கனும் அதான் யோசிக்கிறேன்..."

"என்னடி இவ வெவரமில்லாம இருக்கே.... அதுக்கு முன்னாடி அடவான்ஸ் கொடுக்க கொஞ்சந்தானே... உன்கிட்ட காசா இல்லே..."

"ஒருவார்த்தை சொல்லிட்டு நாளைக்கு சொல்றேன்வுல..."

"இல்லமா... இந்தா அவ்வூட்டுல காசோடா இருக்காங்க நந்தான் ஒன்னுக்குள்ள இருக்கோமேன்னு ஒன்னைய தேடி வந்தேன்..."

"சரிடி இரு..."

"உன் நகைய அடமான...."

அப்புறமென்ன தொடர்கிறது அடுத்தடுத்த காரியங்கள்.... சம்பாதிக்கும் ஆண்மகனுக்குத் தெரியாமல்...

அவரும் கேட்கும் தொகைகளை அனுப்பிக் கொண்டிருப்பார் ஏன் எதற்கு என்று கேட்காமல் அப்படியே கேட்டாலும் பொம்புளைப் புள்ளைய பெத்து வச்சிருக்கோமே...

பத்திர வேலைகள் முடிந்ததும், இவர் ஊருக்கு வந்ததும் மெதுவாக காதில் விழும் அல்லது சொல்லப்படும் இந்த மதிரி மனை வாங்கியிருப்பது முதலில் கோபம் அப்புறம் ஆமா நமக்குத்தானே வாங்கியிருக்கா என்று இவரே ஆறுதல் அடைவார்... காரணம் அது எப்படி விலையாகி இவர் வீட்டில் விதைக்கப்பட்டது என்பதை தெரியாமலே...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) இந்த ஆக்கம் கொடுத்த தாக்கம் தனி மின்னஞ்சலில் எனக்கு வந்த வைகளில் சில:

இன்னொரு விஷயம்....

உழைப்பின்றி, பெண் வீட்டாரிடம் அடித்து புடித்து வாங்கி சாப்பிடும் கலாச்சாரம் நமது ஏரியாக்களில் இல்லை என்று யாரும் மார்தட்டத்தான் முடியுமா?...

"இருப்பது பொண்டாட்டி வீட்டில் ஆனால், இவருக்கு செலவுக்கு அல்லது கேட்கும் அளவிற்கு அந்த மனைவி (பெற்றோரிடமோ அல்லது சகோதரனிடமோ) வாங்கொடுக்கவில்லை என்றால்... சீரியலில் வரும் கதாபாத்திரமாக மாறி வாழும் கயவர்களும் இருக்கிறார்கள்"

தனக்கு கிடைக்க வில்லை என்றால், வீட்டில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஃபேனை ஓடவிடாமல் அதன் ஒயரை அறுத்து விடுவது (செலவு வைக்கிறாரம் அறிவு ஜீவீ), மாமானார் மாமியார் இருக்கும் தனியறை அல்லது அவர்கள் இருப்பிடத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவது, அல்லது அவர்கள் பயன்படுத்தும் பாத்ரூமை பூட்டி வைப்பது...

இப்படியாக சில சைக்கோக்கள் இருப்பதாக கேள்வி பட்டதும்.. வேதனைப் படாமல் என்ன செய்வது ?

Meerashah Rafia said...

//இந்த நல்ல மாற்றங்கள் நம் கண் முன்னே வருமா? இல்லை நாம் மறைந்த பின்னே வருமா? அல்லாஹ் நன்கறியக்கூடியவன்.//

இன்ஷா அல்லாஹ் இது உங்கள் வாழ்கை முடிவதற்குள் காண்பீர்கள்..அது நம் MSM குடும்பத்திலேயே நடந்தாலும் ஆட்சர்யபடுவதர்கில்லை.. பொறுத்திருந்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்..

MSM . மீரஷாஹ் ரஃபியா

அப்துல்மாலிக் said...

//தனக்கு கிடைக்க வில்லை என்றால், வீட்டில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் ஃபேனை ஓடவிடாமல் அதன் ஒயரை அறுத்து விடுவது (செலவு வைக்கிறாரம் அறிவு ஜீவீ), மாமானார் மாமியார் இருக்கும் தனியறை அல்லது அவர்கள் இருப்பிடத்திற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்துவது, அல்லது அவர்கள் பயன்படுத்தும் பாத்ரூமை பூட்டி வைப்பது...//

மாமியார் வீட்டில் இருப்பதே தவறு, இப்படி வேறு நடக்குதா...? மெய்யாலுமே நம் சமுதாயம் எங்கே சென்றுக்கொண்டிருக்கு என்பது கேள்விக்குறியாகவே இருக்கு, அல்லாஹ் நம் அனைவருக்கும் பக்குவமாக விளங்கிக்கொள்ளும் அறிவை கொடுப்பானாகவும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆம் நடக்கிறது மெய்யாலுமே நடக்கிறது.....இவர்களெல்லாம் மெல்ல,மெல்ல கொல்லப்பட வேண்டிய மனிதமிருகங்கள். இது போன்ற கொடூர குணம் கொண்டவர்கள் இறைவன் நாட்டத்தில் ஏதேனும் ஒரு வழியில் கொல்லப்பட்டால் இவர்களால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொது மக்கள் வட்லப்பம், கடல்பாசி காய்ச்சி பெருநாள் கொண்டாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. (இதில் இஸ்லாமிய வரம்பிற்கு மீறி என் எழுத்து இருக்குமேயானால் அந்த இறைவனிடமே மன்னிப்பு கோருகின்றேன்.)

இது போன்ற ஈனப்பிறவிகள் இன்றும் நம்மூரில் வெள்ளையும், சொல்லையுமாக அலைந்து கொண்டும் பள்ளியில் முன் சஃபிலும் தொழுது கொண்டும் தான் இருக்கின்றன.

காலத்திற்கு முன் படைத்தவனே இவர்களுக்கு தக்க பதில் சொல்வான் வெகு விரைவில்........இன்ஷா அல்லாஹ்.

rasheed3m said...

உங்கள் கேள்விக்கு என் பதில்...

அஸ்ஸலாமு அழைக்கும்,

அன்பார்ந்த பதிவாளர் மற்றும் பின்னுuட்டமிட்டுள்ள சகோதரர்களே!
முதலில் என்னை நான் என் முதல் மகளை பெற்றெடுத்த தினமே தயார் படுத்திவிட்டேன் அல் ஹம்து லில்லாஹ்! இன்று வரை அதே எண்ணத்தில் தான் நானும் என் துணைவியும் ஒருபடி மேல் ஏறி சொன்னால் எனது மகளும் உறுதியாக இருக்கிறோம் அல்லாஹ் எங்கள் ஹலாலான ஹாஜ்ஜத்தை நிறைவேற்றி தர போதுமானவன் ஆமின்!

இது பற்றி பலமுறை நண்பர்களோடு எடுத்து சொன்னதை மு.சே.மு, தஸ்தகீர் போன்றோர் நன்கறிவார்.

எனக்கு இப்பதிவு படித்ததில் இருந்து வருத்தம் என்னவென்றால் பதிவாளரும் சரி பின்னுட்டமிட்டவரிலும் ஒருவர்குட (உள்ளத்தில் பொதிந்துள்ளதை அல்லாஹ் அறிந்தவன்) நான் என் மகளுக்கு மகர் தரும் மனமகனையே ஷரியாத்திர்க்குதப்பட்ட முறையில் மணமுடித்து கொடுப்பேன் என்று எழுதவில்லையே என்பதுதான். ஏனெனில்,
உங்களை போன்று கால அவகாசம் எடுத்து எழுத்து வடிவில் ஊர் நடப்புகளை மனதிற்கொண்டு வெளிவரும் எழுத்துபணியே இஸ்லாத்தை பரப்பும் விசயத்தில் எங்களுக்கு மென்மேலும் ஒரு உட்டச்சத்தை தரும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

வலைக்கும் முஸ்ஸலாம்.

என்னா ஆலிம்சா இப்புடி சொல்லிட்டியெ...

இங்கே கட்டுரை எழுதுவதும், கருத்துப்பரிமாறுவதும் எதோ டயம் பாஸிற்காக மட்டும் என்று நினைத்துக்கொண்டீர்களா?
இந்த (வரதட்சிணை) சனியனை ஒழித்துக்கட்டுவதற்காகத்தான் நம் அனுபவங்களிலிருந்து உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலைக்குழம்பான அந்த 'லாவா'வே நம் கட்டுரை, பின்னூட்டம் மூலம் மெல்லமெல்ல வெளியேறி வருவதை அந்த‌ அல்லாஹ் நன்கறிவான்.

உலகக்கல்வி பயின்றவர்களும் சரி, மார்க்க கல்வி முறையே பயின்று வந்தவர்களும் சரி நம்மூரில் பிறந்த பாவத்திற்காக இந்த சனியனின் நச்சுக்காற்றை எதாவது ஒரு வழியில் நமக்கேயறியா வண்ணம் சுவாசித்து பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம்.

இன்ஷா அல்லாஹ் நம் க‌ண் மூடி ம‌ண் மூடுமுன் ஒரு ந‌ல்ல‌ ம‌றும‌ல‌ர்ச்சி ந‌ம் ஊரில் உருவாக‌ வேண்டும்....நிச்சயம் உருவாக‌னும். நாமெல்லாம் சுவ‌ர்க்க‌த்தின் தென்ற‌லை சுவாசிக்க‌ த‌யாராக‌னும்.

உங்க‌ள் ம‌ற்றும் துணைவியாரின் வெளிப்ப‌டையான இப்பிர‌க‌ட‌ண‌ம் போல் அல்லாஹ் ந‌ம் எல்லாக்காரிய‌ங்க‌ளிலும் ஒளிவு, ம‌றைவு இன்றி தூய‌ இஸ்லாத்திற்காக‌ துணிச்ச‌லான‌ முடிவில் வாழ்ந்து தொய்வ‌ற்ற‌ ஈமானுட‌ன் அவ‌னிட‌ம் வ‌ந்து சேர நமக்கெல்லாம் ந‌ல்ல‌ருள் புரிவானாக என‌ து'ஆச்செய்வோம். உள்ள‌த்தில் உறுதி கொள்வோம்.

அல்லாஹ்வின் நாட்ட‌த்தில் வ‌ரும் கால‌ம் இத‌ற்கு ஒரு ந‌ல்ல‌ ப‌திலை சொல்லும்.

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு