என்னுடைய நண்பன் பெயர் சையது கபீர். சொந்த ஊர் வேலூர். படித்தது என்னவோ பன்னிரண்டாம் வகுப்பு வரை தான். பிறகு ஐ.டி.ஐ. யில் படித்து டிப்ளமோ வாங்கியும் பிறகு பகுதி நேர படிப்பாக என்.டி.டீ. என்று சொல்லப்படும் (எக்ஸ்ரே) வெல்டிங் சம்மந்தப்பட்ட குறுகிய கால டிப்ளமோ படித்தும் நான் முன்பு சவுதி யான்புவில் பணிபுரிந்த ஸ்டீல் கம்பெனியில் தரக்கட்டுப்பாட்டு (க்யூ.சி) துறையில் புதியவனாக பணிக்கு வந்து சேர்ந்தான். நிறுவனத்திற்குள்ளேயே இரண்டு வருட குறைந்த பட்ச அனுபவம் அவனுக்கு வெல்டிங் பணியில் மெல்லமெல்ல கிடைத்தது. ஆங்கில அறிவு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவனிடம் இல்லை (நமக்கு மட்டும் என்னா கிழிக்கிதாம்? என்று நமக்கு நாமே கேட்டுக்கொள்வது வேறு விசயம்) பிறகு அராம்க்கோ போன்ற பெரிய எண்ணெய் நிறுவனங்களின் ப்ராஜக்ட்டில் பணி புரிய இது போன்ற துறைக்கு அமெரிக்க அல்லது இங்கிலாந்தின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் பிரத்யேகமாக நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற வேண்டும்.
சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு இந்த தேர்வு எழுத தேவையான அனைத்து வசதிகளை செய்து தந்தும் செலவுகளையும் தானே (தானே புயலல்ல) ஏற்றுக்கொள்ளும்.
அது போல் என் நண்பனுக்கு சென்னையில் உள்ள (அமெரிக்கன் வெல்டிங் சொசைட்டியின்) பிரத்யேக கிளையில் சென்று தேர்வு எழுத தேவையான அனைத்து வசதிகளை நான் பணிபுரியும் நிறுவனம் செய்து கொடுத்தும் அந்த தேர்வுக்கு மொத்தம் ஆகும் செலவு 1 லட்சம் ரூபாயும் முன்பே செலுத்தி ஊருக்கு அனுப்பி தேர்வு எழுத வைத்தது. என் நண்பனுக்கு ஆங்கிலம் அரைகுறையாக இருந்தாலும் எதையும் பொட்ட மனப்பாடம் செய்து மனதில் நிறுத்திக்கொள்ளும் திறமையுள்ளவன். அதுபோல் அவனும் தேர்வுக்கு தன்னை தயார் செய்து சென்னை சென்று முறையே எழுதியும் 2 மாதங்களுக்குப்பின் வந்த தேர்வு முடிவில் பாஸாகி விட்டான். மாஷா அல்லாஹ்.
அதனால் நான் பணிபுரியும் நிறுவனம் செய்த செலவு வீண் போகவில்லை. கம்பெனிக்கு பெரிய நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தேர்ச்சி பெற்ற ஒரு ஆள் கிடைத்த சந்தோசம். அவன் தேர்வில் தேர்ச்சி பெற்றதால் 2500 ரியால் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த அவனுக்கு 500 ரியால் சம்பள உயர்வும் கிடைத்து சம்பளம் 3000 ரியால் ஆனது. கம்பெனியும் தன் செலவில் தேர்வு எழுத வைத்ததால் இரண்டு வருடம் நிறுவனத்தை விட்டு வெளியேறக்கூடாது என பாண்டு பேப்பரில் எழுதி வாங்கிக்கொண்டது. அவனும் அப்படியே அடக்கத்துடன் இரண்டு வருடங்கள் வேலை செய்து நாட்களை ஓட்டினான்.
பொதுவாக அமெரிக்கர்கள் அதிகம் வேலை செய்யும் எண்ணெய் & வாயு நிறுவனங்களில் அமெரிக்க நிறுவனங்கள் அங்கீகரிக்கும் தேர்வு முறைப்படி தேர்ச்சி பெற்றவர்களைப் பெறவே விரும்புவர். என் நண்பனுக்கு இந்த விசயத்தில் பிரச்சினை இல்லாமல் போனது. ஆனால் இங்கிலாந்து நாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் எண்ணெய் & வாயு நிறுவனங்களில் அவர்கள் நாட்டு நிறுவனங்கள் அங்கீகரிக்கும் தேர்வு முறைப்படி தேர்ச்சி பெற்றவர்களைப் பெறவே விரும்புவர். இதிலும் சிக்கல் வந்து விடக்கூடாது என்றெண்ணிய என் நண்பன் இங்கிலாந்து நாட்டின் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் நடத்தும் இதற்கான பிரத்யேக தேர்வையும் தன் சொந்த செலவில் எழுதி பாஸாகி விட்டான். மாஷா அல்லாஹ்.
பிறகென்ன இரண்டு வருடமும் கழிந்து நிறுவனம் வைத்திருந்த ஒரிஜினல் சர்ட்பிகேட்டையும் முறையே பெற்று வேறொரு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக்கு கத்தார் நாட்டிற்கு பறந்து விட்டான். பிறகு அங்கு குடும்பத்தை நாட்டிலிருந்து வரவழைத்து சில வருடங்கள் சந்தோசமாக இருந்தும் பிறகு அங்கிருந்து வேறொரு நல்ல வேலை கிடைத்ததென்று சொல்லி அபுதாபிக்கு மாற்றலாகி இன்று நல்ல நிலையில் கை நிறைய சம்பளத்துடன் இருந்து வருகிறான். அல்ஹம்துலில்லாஹ்.
செய்யும் தொழில்/பணியில் சிறப்படைய அதில் மென்மேலும் வளர்ச்சியடைய என்னன்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை முறையே செய்தும் நிறுவனங்கள் தனக்கு தர வேண்டிய சம்பளத்தை தானே தீர்மானிக்க வேண்டிய ஒரு நல்ல நிலையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறான் உரிய தேர்வுகள் எழுதி தன்வசம் சான்றிதழ்கள் வைத்திருப்பதனால் (நாட்டில் வாகனங்களின் நம்பர் பிளேட் கலரை அடிக்கடி அரசு மாற்றுவதால் வேண்டிய எல்லாக்கலரிலும் முன்பே தயார் செய்து நம்பர் பிளேட்களை வைத்துக்கொண்டு போக்குவரத்து போலீசார் கேட்கும் பொழுது டக்குண்டு எடுத்து கொடுப்பது போல்). அவன் வேலை சம்மந்தமாக எந்த சர்ட்பிகேட் கேட்டாலும் அதை உடனே காண்பித்து நேர்முக தேர்வு நடத்துபவர்களை கதிகலங்கச்செய்ய வைத்து தான் கேட்பதை தர வைக்க முடிகிறது.
முல்லைப்பெரியாறு பார்ட்டிகள் ஆங்கிலத்தை அரைகுறையாக பேச/எழுத கற்றுக்கொண்டு என்னா அலப்பறை செய்கிறார்கள் அரபுநாடுகளில்?....நம்ம புள்ளையலுவோ என்னாண்டாக்கா மாஸ்ட்டர் டிகிரி படிச்சிட்டு வந்து வாயடைத்து நிற்பது வேதனையளிக்கிறது. ஒன்னுமே படிக்காமல் வெறும் பேச்சை வைத்தே எத்தனையோ பேர் காலத்தை கச்சிதமாக ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? படித்த படிப்புகளெல்லாம் உள்ளத்தில் உள்ளதை முறையே வெளிக்கொண்டு வர தடையாக இருந்தால் என்னத்துக்கு இந்த படிப்பு?
இங்கு சவுதி அரேபியாவில் சரிவர படிப்பறிவே இல்லாமல் வெறுமனே வந்து கஃபில் என்னும் தன்னைப்போன்று சரிவர படிப்பறிவு இல்லாமல் இருக்கும் சவுதி முதலாளியை பிடித்து (ஒரு சிறு தொகையை மாதாமாதம் அவர்களுக்கு கப்பம் கொடுத்து விட்டு) ஒரு நிறுவனத்தை பெரும் முதலின்றி தொடங்கி ஆங்காங்கே வேலை தேடிக்கொண்டிருக்கும் திறமையான மனிதவளங்களை ஒன்று திரட்டி தேவையான நிறுவனங்களுக்கு (மணிக்கு இவ்வளவு என) நல்ல விலைக்கு(விற்று)அளித்து பல கோடிகளைக்கண்டு அதில் புரளும் முல்லைப்பெரியாறு பார்ட்டிகள் வரவர இங்கு அதிகரித்து வருகிறார்கள். லேண்ட் ரோவர், மெர்சிடஸ், பி.எம்.டபுள்யூ, லக்ஸஸ் போன்ற விலையுயர்ந்த கார்களில் அவர்கள் பவனி வருவதை நாம் ஆங்காங்கே காண முடிகிறது.
இதைக்கண்டு மனித இயல்பான பொறாமை ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் விடா முயற்சியும், அசராத நம்பிக்கையும், இடர்களைக்கண்டு பயமற்ற மனோபாவமும் அவர்களை இந்த நல்ல நிலைக்கு கொண்டு வந்து நிப்பாட்டி விடுகிறது. முறையே படித்து பல்கலைக்கழக தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் வென்று வந்தவனைக்கூட இவர்கள் முன் கை கட்டி நிற்க வைத்து விடுகிறது.
எல்லாம் முறையான கல்வி (பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகள்) செய்யும் வேலைகள். நல்ல பாடங்கள் நம்முடன் இருப்பவர்கள் மற்றும் சுற்று வட்டாரங்கள் மூலமே இறைவன் நடாத்திக்கொண்டிருக்கிறான். அதன் மூலம் படிப்பினை பெற நாம் தான் தயாராக வேண்டும்.
இவைகளெல்லாம் நான் இங்கு சுட்டிக்காட்டுவது படிக்கும் உங்களுக்காக மட்டுமல்ல எனக்காகவும் எழுதிக்கொண்டிருக்கிறேன். காரணம் நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டால் பிறகு ஒரு நாள் அதே வாய்ப்புகள் அல்லது அதை விட சிறந்த வாய்ப்புகள் நம்மைத்தேடி வந்தாலும் நம் வயதும், ஆரோக்கியக்குறைவும் ஓரணியில் ஒன்று சேர்ந்து நமக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நம்மை வாழ்வின் உச்சத்திற்கு செல்வதிலிருந்து தடுத்து ஓரங்கட்டி விடும்.
"இளமையில் கல்" என்ற பழமொழி இருப்பது போல் "உரிய வயதிற்குள் வேண்டியதை அடைந்து கொள்" என்பது வாழ்வில் சொல்லப்படாத ஒரு புதுமொழியாக இருக்கிறது.
மேற்கண்டவைகளெல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் மாயாஜாலங்கள் மூலம் நடந்தேறுபவையல்ல. அவரவரின் அயராத முயற்சியும், தீராத தேட்டமும் அவர்களுக்கு இறைவன் விரும்பியவற்றை விரைவிலேயே தந்து விடுகிறான்.
அனுபவப்பயணம் இன்னும் தொடரும்....
- மு.செ.மு. நெய்னா முஹம்மது
16 Responses So Far:
//மேற்கண்டவைகளெல்லாம் ஒவ்வொருவர் வாழ்விலும் மாயாஜாலங்கள் மூலம் நடந்தேறுபவையல்ல. அவரவரின் அயராத முயற்சியும், தீராத தேட்டமும் அவர்களுக்கு இறைவன் விரும்பியவற்றை விரைவிலேயே தந்து விடுகிறான்.//
MSM(n) மடை திறந்த 'அணை'யாக நினைவலைகளானலும், அனுபவக் கோர்வைகளானாலும் சீறாக வற்றாத நதி போன்று ஓடிவரும் !
மிகச் சரியே MSM(n)...
தொடருங்கள்... அதிரைக்கு அகல இரயில் பாதை வருகிறதோ இல்லையோ அகலமான மனசு(ங்க) உள்ளவங்க அடிக்கடி வந்து வந்து செல்கிறார்கள் அங்கேயே ஒரு ஸ்டாண்டும் போடனும் !
"இவ்ளோ நாளுச்சென்டு நமக்கு தெரியவந்த ஒரு விசயம் என்னான்டாக்கா அந்தந்த வயசுலெ முறையா அடையவேண்டியதெ அடெஞ்சிக்கிடனும். இல்லாட்டி நம்ம ஒடம்போட ஒட்டிக்கிட்டு ஈக்கிற வயசும், இயலாமையும் நமக்கு எதிராக ஒரு "லோக்பால்" மசோதாவை கள்ளத்தனமாக தாக்கல் செய்து வாழ்க்கை என்னும் சிம்மாசனத்தில் நாம் கம்பீரமாக அமர்வதிலிருந்து தடுத்து இறக்கி விட்டு ஓரம்கட்டி கொண்டுபோய் சேர வேண்டிய இடம் சேர்த்து விடும்" என்பதே.
இப்படி எல்லாம் நாம் அடிக்கடி எழுதியும், படித்தும் வருவதால் நாம் உச்சியில் இருப்பதாக எண்ணி விட வேண்டாம். தற்சமயம் உச்சியில் நிற்கிறோமோ? இல்லையோ? வெறுமனே தெரு முச்சந்தியில் நிறுத்தி விடாமல் இருக்கச்செய்வதே அல்லாஹ் நமக்கு செய்த மாபெரும் கிருபையாகும்.
//இப்படி எல்லாம் நாம் அடிக்கடி எழுதியும், படித்தும் வருவதால் நாம் உச்சியில் இருப்பதாக எண்ணி விட வேண்டாம். தற்சமயம் உச்சியில் நிற்கிறோமோ? இல்லையோ? வெறுமனே தெரு முச்சந்தியில் நிறுத்தி விடாமல் இருக்கச்செய்வதே அல்லாஹ் நமக்கு செய்த மாபெரும் கிருபையாகும்.//
சபாஷ்... !
உழைக்கும் வயதில் அதிக ஒய்வு எடுத்தவர்கள்...
ஓய்வு எடுக்கும் வயதில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்
நல்ல அனுபவத் தொடர்...! வாழ்த்துக்கள் M.S.M . ( N )
MSM(n): ஒரே ஒரு கேள்வி (முதல்ல)!
"உங்களுக்கு ஒருவரின் செயல்கள், பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் ?"
ஒரே ஒரு கேள்வி (இரண்டாவது)
"நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் மனசு புண்படுத்திறதுக்காக சொல்லவில்லை ஏன் சொல்ல வேண்டும் அப்படின்னா புண்பட்டிருக்கனும்னு எதிர்பார்ப்பா ?"
பதில் 1 : ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால் அவருடன் தொடர்ந்து இருந்து கொண்டு அவருக்கு பிடித்தமானவர் போல் நடித்து பாவனை செய்யாமல் உரிய நேரத்திற்காக காத்திருந்து எத்திவைத்து விடுவேன் அதனால் அவர் கோபப்பட்டாலும் அல்லது அதை ஏற்றுக்கொண்டாலும் பரவாயில்லை என்று (பெரும்பாலும் இதில் வயது வித்தியாசமோ அல்லது பெரும் பொறுப்பில் இருக்கும் பதவியோ விதிவிலக்கல்ல).
பதில் 2 : சொல்ல வேண்டிய விசயத்தை உரிய நேரத்தில் இடம், பொருளறிந்து சொல்ல வேண்டிய அவசியம் நமக்குள்ளது. இதில் புண்படுவாரோ என்று யோசித்தால் வாழ்வில் கண்மூடும் வரை அதை சொல்லாமலேயே மனதிற்குள் இறுக்கி பூட்டி வைத்தே மரணிக்க நேரிடும். தக்க தருணத்தில் சொல்லி விட்டால் "ஆஹா இப்படியா சங்கதி? என்று அவரும் பிறரை புண்படுத்தும் செயல்களை பண்படுத்த வாய்ப்பு கிடைக்கும்". காரணம் நம்முடைய தவறுகள் நமக்கு தெளிவுர/சரிவர விளங்குவதில்லை பிறர் சொல்லித்தான் சிலவற்றை தெரிந்து சரி செய்ய வேண்டியுள்ளது.
பள்ளிக்கூடத்தில் மட்டும் இதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. "சார் நீங்க ரொம்ப அடிக்கிறீங்க" என்று சாரிடமே சொன்னால் அப்படியா? என்று சொல்லி இன்னும் வெளுக்கத்தான் செய்வார்கள் என்பதனால்....
வாழ்க்கைப்பாடத்தில் நீ வெளுத்தாலும் பரவாயில்லை சொல்லவேண்டியதை சொல்லியே தீருவேன் என்ற கட்டாயத்திற்கு சூழ்நிலைகள் நம்மை கொண்டு சென்று விடுகின்றன.
என்னான்டாக்கா விலிருந்து அதிரையின் பாரம்பரிய சொற்றொடரை அதிரைமண் தந்த அரிய பொக்கிசம் மச்சான் நெய்னா தருவது மிக்க மகிழ்ச்சி.
நீ சொல்வது போல //உச்சியில் நிற்கிறோமோ? இல்லையோ? வெறுமனே தெரு முச்சந்தியில் நிறுத்தி விடாமல் இருக்கச்செய்வதே அல்லாஹ் நமக்கு செய்த மாபெரும் கிருபையாகும். //அருமை.
எப்படி இருந்தாலும் உனது கட்டுரை வாசிப்பவர்களுக்கு நல்ல பக்குவத்தோடு மாற்றத்தை கொண்டுவரும்.
அனுபவப் பயணத்தால் நாளை, அன்றைய அதிரையை மாற்றிதந்த, என்ற பெருமை சேரட்டும் உன்னை.
2(n) களும் கேள்வி பதில் சொல்வது நல்லாத்தானிருக்கு!
//காரணம் நம்முடைய தவறுகள் நமக்கு தெளிவுர/சரிவர விளங்குவதில்லை பிறர் சொல்லித்தான் சிலவற்றை தெரிந்து சரி செய்ய வேண்டியுள்ளது.//
YES ! சொல்லித் திருந்துவது ஒரு வகை, சொல்லாமல் திருந்துவது மற்றொருவகை அதோடு பட்டுத் திருந்துவது ஒரு வகை எது எப்படி இருந்தாலும் 'சொல்'லெடுத்து அதனை வில்லாக்கி அம்பாக எய்திடாமல் அன்பால் எடுத்துரைக்கலாம் ! :)
அதற்கு எத்தனை அர்த்தங்கள் கொடுத்தாலும் உண்மை அவமானப் படப்போவதில்லை !
அஸ்ஸலாமு அலைக்கும்.
நெய்னாவின் நல்லதோர் பயணம்.மீண்டும் தொடரட்டும் இனிய பயணங்கள்.
//உச்சியில் நிற்கிறோமோ? இல்லையோ? வெறுமனே தெரு முச்சந்தியில் நிறுத்தி விடாமல் இருக்கச்செய்வதே அல்லாஹ் நமக்கு செய்த மாபெரும் கிருபையாகும். //
எத்தனையோ சகோதரர்கள் பயணத்திற்கு பறந்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இறைவனின் நாட்டமில்லாமல் நீ சொல்வதுபோல் நிற்கத்தான் செய்கிறார்கள் .
"வ்ளோவ் எழுதுனாலும் நம்மல்ட்டெ ஊர்ப்பட்ட கொறை ஈக்கலாம். அவ்ளோத்தையும் தவறாது கண்காணிக்கும் அருகிலிருக்கும் அன்பர்களும், நண்பர்களும் அவற்றை பக்குவமாகவோ அல்லது பக்குவத்துக்கு பக்கத்து ஊட்டுக்காரவொ மூலமாகவோ எனக்கு அவைகள் எத்தி வைக்கப்பட வேண்டும். இல்லையேல், ராலு மண்டையிலேயே தன் மலத்தை சுமந்து கொண்டு நாம தான் கடல்லேயெ சுத்தமான பிராணிண்டு நெனெச்சிக்கிட்டு திரியுமாம் என்று சொல்வது போல் மனது ஒரு மிதப்பில் மிதக்க ஆரம்பித்து விடும்".
அருமையான அனுபவத்தொடர் நெய்னா. அழகான நடையில் எழுதுவதற்குப் பதில் கூப்பிட்டு உட்கார வைத்து சொல்லிக்காட்டுவதுபோல நேர்த்தியான மொழி நடை.
வாழ்த்துகள்.
பழமொழி ஒன்று சொல்வார்கள் போற்றுவாள் போற்றட்டும் தூற்றுவாள் தூற்றட்டும் என்று யார் என்ன சொன்னால் என்ன நாம் தெருவில் நின்றுக்கொண்டு பேசிக்கொண்டு இருப்போம். சொல்லுரவங்க சொல்லிக்கொண்டு போகட்டும் நாம் நம்ம செயல்களை செய்துக்கொண்டே இருப்போம். உழைக்கிற வயதில் நேரத்தையும், காலத்தையும் வீனாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சொல்ல போனால் நம் ஊரிலேயை ஒரு சில பெரியவர்கள் சும்மா இல்லாமல் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன்னென்றால் சும்மா இருந்தால் உடல் சோம்பல் ஏற்பட்டுவிடும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தராது, உடற் பயிச்சியாகவும் இருக்காது என்றல்லாம் கருதி நமதூர் பெரியவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
// உழைக்கும் வயதில் அதிக ஒய்வு எடுத்தவர்கள்...
ஓய்வு எடுக்கும் வயதில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். //
உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கிற காலத்தில் உழைக்காமல் வேறு எப்போ உழைப்பது. நாம் உழைக்கிற வயதில் உழைக்க வேண்டும் அப்படி உழைக்கா விட்டால் பிற்காலத்தில் சிரமம் ஏற்படும். காற்று உள்ள போதே தூற்றிக் கொள் அதாவது சம்பாதிக்கம் போதை சம்பாதிக்கணும் இல்லை என்றால் பிறகு கஷ்ட்டம் தான்.
காரணம் நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டு விட்டால் பிறகு ஒரு நாள் அதே வாய்ப்புகள் அல்லது அதை விட சிறந்த வாய்ப்புகள் நம்மைத்தேடி வந்தாலும் நம் வயதும், ஆரோக்கியக்குறைவும் ஓரணியில் ஒன்று சேர்ந்து நமக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்து நம்மை வாழ்வின் உச்சத்திற்கு செல்வதிலிருந்து தடுத்து ஓரங்கட்டி விடும்.
------------------------------------------------------------------------
"இளமையில் கல்" என்ற பழமொழி இருப்பது போல் "உரிய வயதிற்குள் வேண்டியதை அடைந்து கொள்" என்பது வாழ்வில் சொல்லப்படாத ஒரு புதுமொழியாக இருக்கிறது.
---------------------------------------------------------------------
நிறைய அனுபவங்கள் அள்ளித்தரும் நெயனாவின் இந்த கட்டுரை ,
வாழ்வில் முன்னேறி குடும்பத்தை முன்னேற்றி ,தன் தோளில்
சுமக்க வேண்டும் ,எனும் நல்ல எண்ணத்தோடு தியாகங்கள் செய்து
உழைக்கும் நல்ல ஆண்மகனுக்கு மேற்சொன்ன யாவும் பொன்மொழிகள் .
நம் அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும், ஆமீன்
அனுபவப்பாடத்தால் நிறைய மாறியவர்கள் உண்டு, உன் கட்டுரையால் ஒருவரேனும் பின்பற்றினால் வெற்றிதான்..
வாழ்வியல் பாடங்களை தனக்கே உரிய அழகிய நடையில் ,வாசிப்பவர்களின் மனதில் தன் சொல்லவந்த கருத்தை நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவது சகோ.நெய்னாவின் சிறப்பு
Post a Comment