Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

புன்னகை ! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 06, 2012 | , ,


புன்னகை
முகத்துக்கு ஒளிவிளக்கு!

புன்னகை
சமாதானப் புறா!

புன்னகை
மெளனத்தின் தவம்!

புன்னகை
சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!

புன்னகை
பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!

புன்னகை
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!

புன்னகை
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.

புன்னகை
அமைதியின் நிழல்!

புன்னகை
மணம் வீசும் பூந்தோட்டம்!

புன்னகை
மனதை பறிக்கும் மலர்!

புன்னகை
கருணையின் கண்ணாடி!

உதட்டு ஒப்பனை பூச்சைவிட
புன்னகைசிந்தும் மந்தகாசம்
அட்டகாசமான மந்திரம்!
அது செய்யும் தந்திரம்

திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்!

- CROWN

26 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு... !

முகத்தின் அணிகலனாக்கிய - ஒரு
புன்னகை !

வலியினை வெளிகாட்ட தத்தளிக்க - ஒரு
புன்னகை !

புரியவைவைக்க முற்படும்போது - ஒரு
புன்னகை !

மொறைக்கும் உறவுவோடு - ஒரேயொரு
புன்னகை !

இல்லாததை கேட்டும்போது - ஒரு
புன்னகை !

கோபம் காட்டிட முடியாத சூழலில் - ஒரு
புன்னகை !

ஆக !
புன்னகை (யிலும்) போலிகள் இல்லாதவரை !

அது என்றுமே பொன்நகை !

sabeer.abushahruk said...

கிரவுன்,
இம்முறை பிரித்து மேய்வது நானாயிருக்கட்டும்.

///புன்னகை///

தலைப்பால் துளங்கி நிற்கிறது இத்தளம். இந்தத் தலைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா அல்லது உங்களுக்கருகில் கண்டெடுத்துப் பதிந்தீர்களா?

sabeer.abushahruk said...

//புன்னகை
முகத்துக்கு ஒளிவிளக்கு//

இதை ஏற்றி வைத்தாலே வாழ்க்கையில் ஏறுமுகம்தான். புன்னகை ஏற்றிவைத்த முகம் ஒரு தொற்றுஜோதி, இது தானும் துளங்கி தன்னை நோக்குவரையும் துளங்க வைக்கும்.

இந்தத் தொற்று மட்டும் உலகமெல்லாம் பரவிவிட்டால்... போருக்கே போரடித்துவிடும்.

sabeer.abushahruk said...

//புன்னகை
சமாதானப் புறா!//

ஆம், அதனால்தான் புன்னகைக்குச் சிரிக்கையில் வெண்பற்கள் வெண்புறாக்களாய் தூது செல்கின்றன; சமாதானப் புறாக்களாகின்றன. தொலைபேசியில் பேசும்போதுகூட முகம் தெரியாவிட்டாலும் புன்னகை புரிவது தெரியும்

sabeer.abushahruk said...

//புன்னகை
மெளனத்தின் தவம்//

சலனமுற்ற அகத்தையும் அடக்கிடும் அகம்.

செம்பு கலந்தால் பொன்னகை
அன்பு கலந்து
வம்பு களைந்தால் புன்னகை

உமது இந்நகை மட்டுமே
என்றும்
இளநகை

sabeer.abushahruk said...

//புன்னகை
சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!//

கர்வமற்ற மனத்திற்கு அடையாளம்
எந்தக் கேள்விக்கும் பொறுந்தும்
ஒரே
பதில் புன்னகை!

sabeer.abushahruk said...

//புன்னகை
பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!//

இந்தப் பிரகாசம்
இல்லையேல்
வனவாசமாகிப் போகும்
வாழ்க்கை!

அளவானப் பரிகாசத்தில்
விளைவானப் புன்னகை
எல்லை தாண்டாவிடில்
இயல்பாய் வெல்லும்

sabeer.abushahruk said...

//புன்னகை
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!//

உதிரியாய் புரியும் புன்னகை
எதிரியை வீழ்த்தும்
உறுதியாய் வீசும் புன்னகை
வீழ்ந்த எதிரியையும் காக்கும்

புன்னகைப்பூ மட்டும்
பலமுறை பூக்கும்

sabeer.abushahruk said...

//புன்னகை
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.//

மனத்தை முறைப்படுத்தும்
எழுத்தை சிறைபிடித்த காகிதம்

உன்நகையும் என்நகையும்
ஒன்றினால்
புன்னகை

sabeer.abushahruk said...

//புன்னகை
அமைதியின் நிழல்!//

அதுவும் ஆலமரமென அகன்ற நிழல். ஆற அமர ஆள் அமர மடிதரும் ஆலமர நிழல்! ஒற்றைப் புன்னகை உலகயே வெல்லும் எனினும் இது கிரவ்ன் சொல்வது போல் அமைதியின் நிழல்தான்.

sabeer.abushahruk said...

//புன்னகை
மணம் வீசும் பூந்தோட்டம்//

இம்மணம் நம்மனத்தின் ரணம் நீக்கும் குணம். தினம் தினம் மனம் நாடும் மணம். கனமான மனத்தையும் சினமான குணத்தையும் நலம் காண வைக்கும் மணம்.

sabeer.abushahruk said...

//புன்னகை
மனதை பறிக்கும் மலர்!//

எனதையும் உனதையும் நமதாக்கும் இழை. சிலரையும் சிலரையும் ஒன்றாக்கிப் பலராக்கும் மலர் புன்னகை.

sabeer.abushahruk said...

//புன்னகை
கருணையின் கண்ணாடி//

எனவே, இதைக்காட்டிக்கோண்டே இருக்க வேண்டும். புன்னகையைப் பார்த்தால் புன்னகையே விளையும் என்பதை இரண்டே வார்த்டைகளில் சொல்லும் திறன் கிரவுனுக்கே கைவந்த கலை.

sabeer.abushahruk said...

//உதட்டு ஒப்பனை பூச்சைவிட
புன்னகைசிந்தும் மந்தகாசம்
அட்டகாசமான மந்திரம்!
அது செய்யும் தந்திரம்//

மந்திரம் செய்யும் புன்னகைகளே சிறந்தவை
தந்திரம் செய்யவும் புன்னகையை பிரயோகிப்பது துரோகம்.

எனவே, உதடுகளில் புன்னகையைப்பூசி, உடைமைகளாகப் புன்னகைகளை அணியுங்கள் (கிரவுன், அப்ப உங்க பிஸினஸ்? யாரும் நகை வாங்க வராட்டி?:))

sabeer.abushahruk said...

//திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்!//

...எனபதை நன்றியோடு பெற்றுக்கொண்டோம். பரிசாகக் கீழே:

:):);););):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):);):):)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

புன்னகைக்குள் ஒரே ஒரு கண்ணாடிதான் !

முகமூடியைக் கலைத்து கண்ணாடி போட்டதும் நிஜமான கருணை முகம் தெரியும் தானே !

என்ன நான் சொல்றது ! சரிதானே ?

Shameed said...

புன்னகை உயிர் இனங்களில் மனிதனுக்கு மட்டும் இறைவன் அளித்த அருட்கொடை நாம் வாழ்க்கையில் அதிகமதிகம் பயன்படுத்திகொள்ளவேண்டும்

CROWNனின் புன்னகை சிந்தனை அருமை

ZAKIR HUSSAIN said...

To Bro.CROWN....

//திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்!//


உணர்ந்தவர்கள் மட்டும் எழுதும் "நிஜம்".

Unknown said...

கருணையின் கண்ணாடி!

மனதை பறிக்கும் மலர்!

மணம் வீசும் பூந்தோட்டம்!
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!

--------------------------------------------------
:)--really touching

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

/// புன்னகை
முகத்துக்கு ஒளிவிளக்கு!
சமாதானப் புறா!
மெளனத்தின் தவம்!
சலன மனதிற்கு ஒரு கடிவாளம்!
பறிகாசத்தை மங்கச் செய்யும் பிரகாசம்!
எதிரியையும் நம் பக்கம் திருப்பும் காந்தம்!
சினத்தைச் சிறைப்படுத்தும் ஆயுதம்.
அமைதியின் நிழல்!
மணம் வீசும் பூந்தோட்டம்!
மனதை பறிக்கும் மலர்!
கருணையின் கண்ணாடி!
திறம்!
வரம்!
வாழ்க்கைக்கு உரம்! ///

************************************************************************************
மாஷாஅல்லாஹ்! புன்னகையின் விளக்கம் அருமை சகோ. தஸ்தகீர் அவர்களே!

மாஷாஅல்லாஹ்! சபீரின் போட்டோவும் அழகாக உள்ளது.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புன்னகையின் விலை இவ்வளவா!பிரமாதம்.

கவிக்கு அமீர் கருவுக்கு அமீர் என மனித புன்னகைக்கு புனிதம் பல படைத்துவிட்டீர்.

புன்னகைப்போம்! புத்துணர்வு பெறுவோம்!! நம்பிக்கை அடைவோம்!!!

KALAM SHAICK ABDUL KADER said...

இதயக் கண்களைக்
கூச வைக்கும்
மின்னல்

உள்ளத்தின் வார்த்தைகள்
உள்ளடக்கிய உதட்டின்
மொழி

உணர்வின் சூரியக் கதிர்கள்
உதடுச் சந்திரனில் பிம்பம்
இதழ்களின் ஓரம்
இளம்பிறையின்
வடிவம்


சீறும் பாம்பு மனிதர்களை
ஆறும்படி ஆட்டுவிக்கும்
மகுடி

காந்தமாய் ஈர்க்கும்
சாந்த சக்தி

அரசனையும் அடக்கும்
அறிஞர்களின்
ஆயுதம்

விலைமதிப்பில்லா
வைரம்

வையகத்தை
வசப்படுத்தும்
வசீகரம்

செலவில்லா
தர்மம்

அசையும் ஈரிதழ்கள்
இசையாய் ஊடுருவி
அசைக்க வைக்கும்
விசையில்லாக்
கருவி

வன்பகை விரட்டும் சக்தி
புன்னகை என்னும்
யுக்தி

கல்லான இதயத்தையும்
மெல்லத் திறக்கும்
கதவு

-

அபுல் கலாம் (த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

புன்னகை
உள்ளத்தில் உதயமாகும் பூரிப்பால்
முகத்தில் தெரியும் நிலா.

இலவசமாய் இருந்தாலும் சிலருக்கு புன்னகைப்பது என்னவோ
"புண்" மேல் அணிந்த‌ "நகை" போல் வேதனையாய் இருக்கும்.

KALAM SHAICK ABDUL KADER said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்களே,
இச்சபையோர்கள் சார்பாக அன்புத் தம்பியும் “என்னைப்போல் ஒருவனுமான” என்றன் எண்ணங்களையும் எழுத்துக்களையும் பிரதிபலிக்கும் தஸ்தகீர் (க்ரவுன்) அவர்களை கவிதை யாப்பதில் எனது வாரிசாக அறிவிக்கின்றேன்! தம்பி தஸ்தகீரிடம் இப்படிப்பட்ட அறிவிப்பை ஒரு நாள் அறிவிபேன் என்று வாக்குறுதிக் கொடுத்திருந்தேன். அதற்குரிய காலம் “புன்னகை” வழியே மலர்ந்து விட்டது. ஆம். இதே தலைப்பில் இதே வரிகளை உள்ளடக்கிய என் கவிதையினை இதே அ.நி.நெறியாளர் அவர்கட்கு சென்ற மாதம் முகப்புக் கவிதையாக வருமாறு அமைக்க வேண்டி அனுப்பியிருந்தேன்;அவர்களும் “பணிபளு” காரணமாக எனது “புன்னகை”ப் பூவினை இவ்வலைப்பூத் தோட்டத்தில் பதியம் இடாமல் இருந்து விட்டார்கள்; காலம் தாமதம் ஆனதால் எனது “புன்னகை”ப்பூவினை அதிரை எக்ஸ்ப்ரஸ் தோட்டத்தில் பதியமிடப்பட்டது;அதன் மணம் பலரின் மனம் கவர்ந்தது (அக்கவிதை தான் நீங்கள் இங்குப் பின்னூட்டத்தில் காண்கின்றீர்கள்) “காக்கா உங்கள் கவிதை பின்னூட்டத்திற்கு உரியனவல்ல; முகப்புக்குத் தோரணமாய் அமைய வேண்டும்” என்று அடிக்கடி விருப்பம் தெரிவித்த “என்னைப் போலொருவனான” க்ரொவுன் உடைய அதே தலைப்பின் கவிதை கால தாமதம் காரணமாக இங்கு முகப்புக் கவிதையாய் அமைந்தது என் நீண்ட நாளைய அவாவான “வாரிசு அறிவிப்புக்கு”த் தருணம் அமைத்துக் கொடுத்து விட்ட மகிழ்ச்சி; நெஞ்சுக்குள் நெகிழ்ச்சி. என் உள்ளத்தில் உள்ளதுபடியே என் எண்ணமும் எழுத்தும் ஒன்றிய க்ரௌன் அவர்களை “என் கவிதை யாத்தலின் வாரிசு” என்ற “மகுடம்” சூட்டி மகிழ்கின்றேன்.

ஹைக்கூ,புதுக்கவிதை,டெக்னிகல் கவிதை என்றெல்லாம் கலக்கும் க்ரவுன் அவர்கள் யாப்பிலும் யாத்திட மூப்பில் உள்ள அடியேனிடம் மேலோட்டமாகப் பாடம் கற்றுக் கொண்டாலும் சரி; அல்லது யாப்பென்னும் ஆழ்கடலில் கரைகண்ட அதிரை அஹ்மத் காக்கா அவர்களிடம் ஆழமாய்க் கற்றுக் கொண்டாலும் சரி. ஆனால், எனக்கு மட்டும் ‘அமெரிக்கா” விசாவுக்கு உடன் ஏற்பாடு செய்து தந்தால் க்ரவுன் அவர்களை “புலவராக” மாற்றிக் காட்டுவேன் உடன் அருகிலிருந்துக் கற்றுக் கொடுப்பேன்.

நிற்க. கவிதைக்குத் தலைப்பு எப்படிக் கிடைக்கின்றது என்கின்ற கவிவேந்தர் சபீர் அவர்கட்கும் தெரியும். கவிதை என்பது சிந்தையில் பட்டுத் தெறிக்கும் ஒரு “பொறி” அதனை யாப்புத்தறிக்குள் அடக்கியோ, புதிதின் பேழைக்குள் புகுத்தியோ உடனே கையகப்படுத்தும் கை வந்த கலைஞன் தான் கவிஞன்! ஆம். எனது எல்லாக் கவிதைகளும் ஒரு நொடியில் தட்டியப் பொறிகள்; கவிதை என்னும் கைத்தறிகள்! இந்தப் பின்னூட்டத்தில் இடப்பட்டு (முகப்பில் வரவியலாமற் போன) எனது “புன்னகை” எனும் பூக்கவிதைக் கூட ஒரே ஒரு நொடியில் ஒரு புன்னகையினை வீசிச் சென்ற சாலை ஓரம்; உணவு இடைவெளி நேரம் என்னுள்ளத்தினை ஆட்கொண்ட அன்பின் பாரம். அந்த ஒரு நொடியில் விழுந்த வார்த்தைகளைக் கோர்த்தேன்;புதுக் கவிதையாய்ச் சேர்த்தேன் (கவி வேந்தர் சபீர் தான் எனக்கு புதுக்கவிதைக்கு ஆசான்; ஆம். அவர்கள் சொன்னார்கள் ”உங்கட்கு வந்து விழும் வார்த்தைகள் எதற்குள் அடக்க முடியுமோ அதற்குள் அப்படியே அடைத்து விட்டால், கிடைத்து விடும் அற்புத கவிதை”. அவர்களின் அடியொற்றியே அடியேனும் அடைத்தேன் இவ்வரிகளை என் அலுவலகக் கணினியில்; அன்றே அனுப்பினேன் அ.நி. நெறியாளர் அவர்களின் மேலானப் பார்வைக்கு. காலதாமதம் ஆனாலும் கவிதை வாரிசு அறிவிப்புக்கு அஃதே காரணமாகவும் அமைந்து எனது வாக்குறுதியினை நிறைவு செய்த நிம்மதி எட்டியது. அல்ஹம்துலில்லாஹ்.

“கவிதை எழுதுவதிலேயே காலம் கழிக்க வேண்டா.” என்ற காக்காமார்கட்கு மேலே சொன்ன ‘ஒரு நொடியில் கவிதைகள்” உருவாகும் விளக்கம் என்றன் விடையாகவும் எடுத்துக் கொள்க.
வாதப் பிரதிவாதம்/ மேடைப் பேச்சுகட்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தோடு எங்களின் “ஒரு நொடியில் ஒரு கவிதை” என்பதும் அல்லாஹ் எங்கட்கு வழங்கிய ஓர் அற்புதம்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

“ஒசை நயத்தில்” உள்ளத்தை ஓர்மையாக்கி
கவிதை லயத்தில் கருத்தைக் கூர்மையாக்கி
கவியன்பனாய் வாழும்,

அபுல்கலாம்(த/பெ. ஷைக் அப்துல் காதிர்)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். கருத்திட்டவர்கள் அனைவருக்கும் நன்றி! இது ஏற்புரை அல்ல! ஆனாலும் அவசரமாய் எழுத தூண்டிய உரை நடை! இந்த சிறு தலையில் பெரு பனங்காய்(பழம்) வைப்பது அன்பைத்தவிர வேறு ஏதும் இல்லை.எனக்கு கணமில்லா தலைதான் வேண்டும். பனங்காய் எனக்கு பாங்காய் அமையாது. அதற்குரிய தகுதியும் எனக்கில்லை!.தொழில் சார்ந்து கிரிடம் என் தலையில் இருந்தாலும் அந்த கிரிடம் சுமக்கும் அளவிற்கு நான் தகுதியானவன் அல்லன்.எல்லா புகழும் அல்லாஹுக்கே!

Yasir said...

இவ்வளவு புன்னகைகளை அள்ளி எறிந்து...எங்கள் உள்ளங்களை களவாடி அல்லவா செய்து இருக்கிறீர்கள்....வைரம் ஜொலிப்பதுபோல் உள்ளது உங்கள் புன்னகை கவிதை

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு