ஒரு செய்தியாளர் திறமை மிக்க செய்தியாளராக விளங்க வேண்டும் என்றால் அவரிடம் சில தகுதிகளும் பண்புகளும் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை இங்கு விளக்கலாம்:
• செய்தி மோப்பத் திறன் (Nose for News)
செய்தியாளர் செய்திகள் கிடைக்கும் இடத்தை மோப்பம் பிடிக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். செய்தியைக் கண்டவுடன் அவர்களது மூக்கு வியர்க்க வேண்டும்.அவர்களிடம் செய்தி உள்ளுணர்வு எப்பொழுதும் விழித்திருக்க வேண்டும். நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்து இருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்து இருப்பவராகவும் விளங்க வேண்டும்.
• நல்ல கல்வி அறிவு
செய்தியாளர் போதுமான அளவு கல்வியறிவு பெற்றிருக்கவேண்டும். எல்லாவற்றையும் பற்றி அறிவும் ஆர்வமும்பெற்று இருக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாத்துறைகளைப் பற்றியும் ஆழமான தெளிவு இருந்தால்தான் அவற்றைப் பற்றிய செய்திகளை நுட்பமாகவும் ஆழ்ந்தும் முழுமையாகவும் அளிக்க முடியும்.
• சரியாகத் தருதல்
செய்திகளைச் சரியாகவும் துல்லியமாகவும் (Accuracy) தருகின்ற பண்பு செய்தியாளருக்கு இருக்க வேண்டும்.எதனையும் சரிபார்க்காமல் யூகம் செய்து எழுதக்கூடாது. அப்படி எழுதினால் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். 'எதனையும் முதலில் பெற வேண்டும், அதனையும் சரியாகப்பெற வேண்டும்' என்பது தான் செய்தியாளரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
• விரைந்து செயல்படல்
• நடுநிலை நோக்கு
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்கு ஆட்படாமல்செய்தியாளர் நடுநிலை நின்று செய்திகளைச் சேகரித்து அனுப்பவேண்டும். சொந்தக் கருத்துகளைச் செய்திகளோடு சேர்த்து எந்தச் சமயத்திலும் கூறக்கூடாது. செய்தியின் முக்கியத்துவத்தை மாற்றவோ, கோணத்தை வேறுபடுத்தவோ, வண்ணம் பூசவோ முயலக்கூடாது.
• செய்தி திரட்டும் திறன்
செய்தி கிடைக்கும் இடத்தை அடைந்து செய்தியை இனங்கண்டு உண்மையான விவரங்களைத் திரட்ட வேண்டும்.சேகரித்த செய்தியை முறைப் படுத்தி, செய்தியாக வடிவம் அமைத்துத் தரும் ஆற்றல் செய்தியாளருக்கு இருக்கவேண்டும். இத்திறனைப் பயிற்சியின் மூலமாகவும் பட்டறிவின் வாயிலாகவும் பெற இயலும்.
• பொறுமையும் முயற்சியும்
செய்தியாளருக்கு மிகுந்த பொறுமைக் குணம் வேண்டும். அவசரப் படவோ பதற்றப் படவோ கூடாது. பதறிய காரியம் சிதறும் என்பது பழமொழி. செய்தியை அறிந்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம், உண்மையை வரவழைத்து, அதனைச் செய்தியாக எழுதி அலுவலகத்திற்கு அனுப்புகின்றவரை பல இடையூறுகள் ஏற்படலாம். அவற்றை எல்லாம் மனத்தளர்ச்சி இன்றி முயற்சி திருவினை யாக்கும் என்ற தெளிவோடு செயல்படுகிற செய்தியாளர்களால் தான்அரிய செயல்கள் செய்ய முடியும்.
• சொந்தமுறை அல்லது தனித்தன்மை
செய்தியாளர் செய்திகளைத் திரட்டுவதிலும் தனக்கென்று ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றவர்களைப் பின்பற்றக் கூடாது. சிறந்த செய்தியாளர்கள் செய்திகளைத் திரட்டித் தருவதில் தனி முத்திரை இருக்கும்.
• நல்ல தொடர்புகள்
செய்தியாளர் பல தரப்பட்ட மக்களோடு நெருங்கியதொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்புள்ளவர் சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும். மக்கள் தாம் செய்தியின் மூலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
• நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
செய்தி தருகின்றவர்கள் தங்கள் மீது பத்திரிகையும் பொதுமக்களும் வைத்திருக்கும் நம்பகத் தன்மையைக் கட்டிக் காக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் செய்தி கொடுக்கிறவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது. செய்திதருகின்றவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை எப்படியும் நிறைவேற்ற வேண்டும்.
• நேர்மை (Honesty)
செய்தியாளர் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். செய்திகள் இல்லாத இடத்தில் பொய்யாகச் செய்தியை உருவாக்குவதோ, கிடைத்த செய்தியை வேண்டுமென்றே வெளியிடாமல் புதைத்து விடுவதோ இதழியல் அறமாகாது.
• கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை
செய்தியாளர்கள் கையூட்டுக் கருதியோ,வேறு நன்மைகளையும் சலுகைகளையும் எதிர்பார்த்தோ செய்திகளை மாற்றவோ, திருத்தவோ, பொய்யைப் பரப்பவோ கூடாது. சிலர்புகழ் பெறுவதற்காகவும், விளம்பரம் ஆவதற்காகவும் செய்தியாளர்களைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வார்கள். அன்பளிப்புகள், விருந்துகள் வழங்கி, செய்தியாளர்களைச் சிலர் விலை கொடுத்து வாங்க முயற்சி செய்வார்கள். செய்தியாளர்கள் இது போன்ற சோதனைகளுக்கு ஆட்படாமல் சாதனைகளைச் செய்வதிலேயே கவனமாக இருக்க வேண்டும்.
• செயல் திறன்
செய்தியாளர் நுட்பமாகவும் திறமையாகவும் தந்திரமாகவும் செயல் படவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்பச் செயல்படும் தந்திரத்துடன் பணிகளைச் செய்ய வேண்டும்.
• ஏற்கும் ஆற்றல்
புதிய இடங்களுக்குச் செல்லும் பொழுதும், புதிய மனிதர்களைப் பார்த்துப் பழகும் பொழுதும் அதற்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக் கொண்டு செயல்படவேண்டும். புதியனவற்றை ஏற்கும் மனப் பக்குவம் இருக்கவேண்டும்.
• தன்னம்பிக்கை
செய்தியாளர் தளராத தன்னம்பிக்கையோடு பணிசெய்ய வேண்டும். என்னால் முடியும், செயற்கரியன செய்வேன் என்ற தன்னம்பிக்கை இருந்தால் பலவற்றை எளிதாகச் செய்யமுடியும்.
• இனிய ஆளுமை (Personality)
செய்தியாளர் இனிய ஆளுமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். காண்பவர்களைக் கவரும் வகையில் பொலிவான தோற்றமும், இனிமையாய்ப் பழகும் பண்பும் கொண்டவர்களாகச் செய்தியாளர்கள் இருக்க வேண்டும். அத்தகையவர்களால் பணிகளை எளிதாகச் செய்ய முடியும்.
• தெளிவாகக் கூறும் ஆற்றல்
செய்தியாளர் எதனையும் தெளிவாக எடுத்துக் கூறும்ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். பேசுவதிலும், எழுதுவதிலும் தெளிவு இருக்க வேண்டும். நேரில் பார்த்துச் செய்திகளைச் சேகரிக்கின்ற பொழுது தெளிவாக விவரங்களைக் கேட்டறியவேண்டும். செய்திகளை, குழப்ப மில்லாமல் தெளிவாக எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
• மரபுகளைப் பற்றிய அறிவு
சமுதாயம், சமயம் தொடர்பான செய்திகளைத் திரட்டித்தரும் பொழுது மரபுகளை அறிந்திருக்க வேண்டும். மரபுகளுக்கு முரண்படும் வகையில் செய்திகளைக் கொடுக்க நேரிட்டால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
• சட்டத் தெளிவு
எப்படிப்பட்ட செய்திகளை வெளியிட்டால் சட்டப்படி குற்றம் ஆகிவிடும் என்பதைச் செய்தியாளர் அறிந்திருக்க வேண்டும். சட்டத் தெளிவு இல்லாமல் எதையும் செய்தி ஆக்கினால் அவருக்கும், செய்தித்தாளுக்கும் தொல்லைகள் ஏற்படும். குறிப்பாக, சட்ட மன்ற, நாடாளுமன்றச் செய்திகளை வெளியிடும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்தியாளர் பல தகுதிகளையும் பண்புகளையும் சிறப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.
Source : tamil virtual-academy
இறைவன் நாடினால் தொடரும்...
-சேக்கனா M. நிஜாம்
-சேக்கனா M. நிஜாம்
18 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும்,
குறிப்பிட்டுள்ள எல்லா பண்புகளுடன் சேர்ந்து இறையச்சம் என்ற பண்பும் இருந்தால் மட்டுமே முழுமையான செய்தியாளர் என்று ஒத்துக்கொள்ள முடியும்.
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்.
செய்தியாளர் தரும் நல்ல செய்தி.சகோ தாஜுதீன் சொல்வது போல் இறையச்சம் இருந்தாலே அவரிடம் எல்லா பன்புகளும் பறந்து கிடக்கும்.
சகோ. நிஜாமின் இக்கட்டுரை எம்மை பண்படுத்த பயன்படும் நிச்சயம்.
லெ.மு.செ. அபுபக்கருக்கு 'இறையச்சம் இருந்தாலே அவரிடம் எல்லா பண்புகளும் பரந்து கிடக்கும்' என திருத்திக்கொள்ளவும்.
ப'ற'ந்து என குறிப்பிட்டால் எல்லா பண்புகளும் காற்றில் பறந்து போய் கிடக்கும் என்பது போல் ஆகிவிடும். (ஒரு வகையில் சரி தான், இன்றைய ஊடகங்களுக்கு சொல்லவேண்டியதை மறைமுகமாக சொல்லி விட்டாய்.
பத்திரிக்கையாளரின் பக்குவங்களையும் பங்களிப்பையும் பற்றிய பகிர்வு தந்த தம்பி நிஜாம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
//நல்ல செய்தியாளர் எப்பொழுதும் செய்திக்குப் பசித்திருப்பவராகவும், செய்தியைக் கண்டுகொள்ள விழித்து இருப்பவராகவும், சொல்லும் முறையில் தனித்து இருப்பவராகவும் விளங்க வேண்டும்.//
பசித்திரு, தனித்திரு, விழித்திரு இவை மூன்றும் சேர்ந்ததுதான் பதவி.
அஸ்ஸலாமு அலைக்கும்.
எழுத்து பிழையை திருத்தி தந்தமைக்கு நன்றி.
// (ஒரு வகையில் சரி தான், இன்றைய ஊடகங்களுக்கு சொல்லவேண்டியதை மறைமுகமாக சொல்லி விட்டாய்.//
நேரிடையாக சொன்னாலே திருந்தாத ஊடகங்களுக்கு மறைமுகமாக சொன்னாலா திருந்த போவுது.
வாய் புளிச்சிசோ மாங்காய் புளிச்சிசோன்னு செய்தியை அள்ளிவிடும் இந்த காலத்தில் சகோ நிஜாம்மின் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவை
சேக்கனா நிஜாமின் கருத்துள்ள பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தொடருங்கள் உங்கள் சேவையை.
நன்றி.
///
• செய்தி மோப்பத் திறன் (Nose for News)
• நல்ல கல்வி அறிவு
• சரியாகத் தருதல்
• விரைந்து செயல்படல்
• நடுநிலை நோக்கு
• செய்தி திரட்டும் திறன்
• பொறுமையும் முயற்சியும்
• சொந்தமுறை அல்லது தனித்தன்மை
• நல்ல தொடர்புகள்
• நம்பிக்கையைக் கட்டிக் காத்தல்
• நேர்மை (Honesty)
• கையூட்டுப் (லஞ்சம்) பெறாமை
• செயல் திறன்
• ஏற்கும் ஆற்றல்
• தன்னம்பிக்கை
• இனிய ஆளுமை (Personality)
• தெளிவாகக் கூறும் ஆற்றல்
• மரபுகளைப் பற்றிய அறிவு
• சட்டத் தெளிவு
///
அருமையான பகிர்வு, நன்னெறி காட்டு !
சரிங்க, இதை யாராவது சொன்னா நல்லா இருக்கும் !
இந்த குணநலன்கள் உடையோர் செய்தியாளர் என்று எங்கனம் அறியப்படுவர் ?
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலுமா ?
பொதுஜன ஆதரவு பெற்ற நல்ல எழுத்தாளர்களும் செய்தியாளர்களாவார்களா ?
சட்டென்றும் பட்டதையும், சூடாக சுட்டதையும் தருபவர்களும் செய்தியாளர்களாவார்களா ?
தெரியாமத்தான் கேட்டு வைக்கிறேன்... !
'நிருபர்'க்குப் பொருத்தமான பதிவு.
செய்தி சேர்க்கும் சேக்கனா நிஜாமே
எய்தி விட்டாய் ஏறி விட்டாய்த்
தேனீ போன்றுத் தேடிச் சென்றுத்
தேனினு மினிதெனத் தெவிட்டாக் கட்டுரை
அதிரை வாசக ரதிகம் போற்றிடும்
அதிரைப் பூக்களி னறிவுசால் நிருபரே
நலம்பெற இறைவனை நயந்தே வேண்டினன்
பலம்பெற வெழுதுக பலன்பெற வேண்டியே
நெறியாளர் காக்கா நெஞ்சில் வைத்துச் செயற்படும் பத்தொன்பது முத்தான முத்திரைச் செய்திகளை அதிரை நிருபரில் வடிவமைத்துக் காட்டிய "அதிரை நிருபர்"
சமுதாயச் சேவகர் சேக்கனா நிஜாம் தன்னகத்தில் உள்ளதை எழுத்தில் வடித்துவிட்டார் என்று தனக்குள்ளே எண்ணியிருப்பீகள் என்று எண்ணுகின்றேன்..
அப்படித்தானே அ.நி. நெறியாளர் அவர்களே !
சிறந்த செய்தியாளர்க்குரிய தகுதி பண்புகளை அறியத் தந்த சகோ.சேக்கனா மற்றும் இணைந்து செயல்படும் அமேஜான் அபூபக்கரும் அனைத்து நற்பண்புகளையும் ஒருங்கே பெற்று அதிரையின் முதன்மைச் செய்தியாளர்களாக வலம் வர வாழ்த்துக்கள்.
ஒரு செய்தியாளர் நல்ல செய்திகளை எழுதும் போது அதை கண்டிப்பாக போடணும் எந்த விதத்திலும் புறக்கணிக்க கூடாது. அப்படி புறக்கணிக்கும் போது அவர்கள் எழுதவருகிற செய்திகளை மறந்தும் விடுவார், மறைத்தும் விடுவார். செய்தியாளர்களின் பண்புகள் ஆற்றல் மிக்க பண்புகளாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் பல நல்ல நல்ல செய்திகளை எழுத முடியும்.
செய்திகளை பேருக்காகவும்,புகழுக்காகவும் எழுதுவது தவறானது எல்லாம் வல்ல இறைவனுக்கு பயந்து எழுதுங்கள். அடுத்தவரை தாக்கியோ,அல்லது அடுத்தவருடைய மனம் புண்படியோ ஒரு செய்தியாளர் எழுதக்கூடாது. அடுத்தவரிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும் குறையை மட்டும் குத்திக்காட்டக்கூடாது நிறையையும் கூற வேண்டும். நம்மவர்களில் பல பேருக்கு குறையை மட்டும் தான் சொல்லி பழக்கம் நிறையை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள். ஒரு செய்தியாளர் மக்களிடம் நல்ல பண்புகளையும்,அன்புகளையும் காட்ட வேண்டும் அப்படி காட்டும் போதுதான் பல செய்திகள் வெளியாகும்.
//தனக்குள்ளே எண்ணியிருப்பீகள் என்று எண்ணுகின்றேன்..
அப்படித்தானே அ.நி. நெறியாளர் அவர்களே ! //
புன்னகையை காட்டிட இப்படியும் வரி கோர்க்கலாமோ ! :)
சகோ சேக்கனா M.நிஜாம் அவர்களின் ஆக்கத்தை படித்துவிட்டு ..நேரிடையாகவே நிருபர் வேலைக்கு அப்ளிகேஷன் போட்டுவிடலாம் போல.. தெள்ளத்தெளிவாக உளிகொண்டு செதுக்கி எடுத்து இருக்கின்றீகள்...
சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களின் இந்த தெளிவான விளக்கம் எல்லா வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கும், பத்திரிகை துறை சார்ந்தவர்களுக்கும் பயன்படும்.
இது உண்மை, உண்மையை தவிர வேறெதுவும் இல்லை. [ இப்படி எழுதாங்காட்டியும் 'முகஸ்துதி' என சில ஆட்கள் சொல்ராப்லெயாம். ]
தம்பி ஷேக்கனா நிஜாம் அவர்களுக்கு,
சிறப்பாக தந்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
இளைஞர்கள் இப்படி எல்லாம் எழுதுவதை பார்க்க மிக்க மகிழ்வாக இருக்கிறது.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
வஸ்ஸலாம்.
Ibrahim Ansari
இப்போதைய செய்தியாளர்கள் அந்தந்த நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு(?) வெறும் பொம்மைப்போல வாசிக்கிறாங்க என்பது அப்பட்டமான உண்மை.
Post a Comment