Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள்... 23

அதிரைநிருபர் பதிப்பகம் | January 22, 2012 | , ,


அண்மையில் புதுவையையும்,  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட “ தானே” புயலுக்கு பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பட்டபாடுகள் கொஞ்சமல்ல. நான் பழைய செய்திகளை எழுத வரவில்லை. இததகைய கொடும் இயற்கை சீற்றங்களுக்கு பிறகு அப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் சிலர் நடந்து கொண்ட முறைகளைப்ப்றி கேள்விப்படும்போதும், படிக்கும்போதும் மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மாண்புகள்  கரைந்து கொண்டிருப்பதையும், மனிதப்பண்புகள் மருவி மறைந்து கொண்டிருப்பதையும் உணர முடிகிறது என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். 

“தானே” புயல் தானே வந்து அடித்து விட்டுப் போய்விட்டது. 


ஆனால் அதன் பிறகு அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களின் அன்றாட வாழ்வில் அடித்த புயலும் அதன் விளைவுகளும் மனிதப்பண்புகள் மீது மாறா கலங்கங்களை ஏற்படுத்திவிட்டன. இயற்கையின் இத்தகைய சீற்றங்கள் ஏற்படும்போதெல்லாம் பலர் வாழ்வின் ஆதாரங்களை இழந்து தெருவுக்கு வந்து விடுகிறார்கள். சிலரோ சில நாட்களில் பல லட்சங்களை பார்த்துவிடுகிறார்கள்

பச்சிளம்குழந்தைகள் .பாலின்றி தவித்தன.

வீடுகள் விளக்கின்றி மூழ்கின. குடிக்ககூட நீரில்லை. 

அடுப்பெரிக்க விறகில்லை- படுத்துறங்க பாய் இல்லை- நிற்பதற்கு நிழல் இல்லை- வாகனங்களுக்கு எரிபொருள் இல்லை.  சாலைபோக்குவரத்து இல்லை. நோயாளிகளுக்கு மருந்து இல்லை. தொலை தொடர்பு இல்லை. மின்சாரம் இல்லை- செல் போன்களுக்கு பேட்டரி சார்ஜ் இல்லை. ரீ சார்ஜ் செய்ய முடியவில்லை. 

பச்சிளம்குழந்தைகள் பாலின்றி தவித்து இருக்கலாம். ஆனால் லிட்டருக்கு நூறு ரூபாய் கொடுத்தால் பால் தாராளமாக கிடைத்தது. குடிக்க தண்ணீரின்றி மக்கள் தவித்து இருக்கலாம் ஆனால் குடிநீர் என்று கூறி விற்கப்பட்ட ஒரு வாளி தண்ணீருக்கு விலை ஐம்பது ரூபாய். மண்ணெண்ணை பதுக்கிவைக்கப்பட்டு அநியாய விலைக்கு  விற்கப்பட்டது. ரீ சார்ஜ் கார்டுகள் இரட்டை விலை கொடுத்தால் கிடைத்தன. அவசர நோயாளிகளை ஏற்றி செல்ல ஐந்து மடங்கு பணம் கொடுத்தால் ஆட்டோக்கள் வரத்தயாராக இருந்தன. இப்படி புயல் அடித்த பகுதிகளில் பகல் கொள்ளை புயல் அடித்தது. மறைந்து வரும் மக்கள் பண்புகளுக்கு மாறாத சான்று பகர்ந்து கலங்கமாய் நின்றன. 

கடந்த 2011- ல் ஜப்பானில் சுனாமியும், பூகம்பமும் வந்த போது அந்த நாட்டு மக்கள் தங்களுக்குள் காட்டிக்கொண்ட சமூக வாஞ்சையும் ஒத்துழைப்பும் உலகளவில் பாராட்டப்பட்டன. ஐந்து லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டோர் அந்த ஐந்து லிட்டரை மட்டுமே போதும் என்று வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். ஒரு பொட்டலம் உணவு தேவைப்பட்டோர் அதை மட்டுமே வாங்கிச்சென்றனர். கூடுதலாக கொடுத்தாலும் வாங்க மறுத்தனர். இதுதான் சமூக வாழ்வு - சமுதாய நேசம். ஆனால்  இங்கோ , தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும்  அடித்து பிடித்து வாங்கி கூடுதல் விலைக்கு விற்றனர். 

கடும் வெயிலில் நடுக்காட்டில் ஒருவன் வழிமாறிப்போனான். தாகத்தால் நாவறண்டு தவித்தான். வெகுதூரத்தே கையால் தண்ணீர் அடித்து குடிக்கும் ஒரு குழாய் தெரிந்தது அதை நோக்கி ஓடினான். அருகில் சென்று பார்க்கும்போது அந்த கை குழாய் அருகில் ஒரு குவளையும் அதனுள் ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீரும் வைக்கப்படிருந்தது. தாகத்தால் தவித்து ஓடிவந்தவன் அந்த குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தனது தாகத்தை தீர்த்துவிடவில்லை. மாறாக அந்த குவளையில் இருந்த தண்ணீரை கைகுழாய்க்குள் ஊற்றி மெல்ல மெல்ல குழாயிலிருந்து தண்ணீரை அடித்து குவளையில் பிடித்து பின் குடித்து தனது தாகம் தீர்த்துக்கொண்டதுடன் அல்லாமல் அடுத்து வருபவருக்கும் உதவும் என்று அதே குவளையில் மீண்டும் நீர் அடித்து நிரப்பி வைத்துவிட்டு இடம் பெயர்ந்தான். தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள நினைப்பவர்கள் அடுத்தவர் நலனையும் பேணவேண்டும் என்பதற்கு இந்த உருவக சம்பவத்தை சுட்டிக்காட்ட வேண்டியதாகிறது. 

கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம்.  புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது . 

தனக்கு மட்டும் எல்லாம் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்களின் எண்ணிக்கை மேலோங்கி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த சமுதாயமே சுயநல சமுதாயமாக மாறிவருகிறது. எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று பலர் செயல் பட்டு வருகிறார்கள். தான் சார்ந்து இருக்கும் சமுதாய நலன் பேணவேண்டுமே என்கிற மனிதப்பண்பு அருகி, மருகி, மாய்ந்து வருகிறது. 

விபத்து நடந்த இடங்களில் –விமான விபத்தாக இருந்தாலும் சாலை விபத்தாக இருந்தாலும் அதில் சிக்கியவர்களை காப்பாற்ற ஓடி வரும் எண்ணத்தில் வருபவர்களைவிட அவர்கள் கழுத்தில் காதில் இருப்பதை அபகரிக்க ஓடி வருபவர்களே அதிகம். மங்களூரில் இது நடந்தது. காஞ்சீபுரத்திலும் இது நடந்தது. 

சூழ்நிலைகளை பயன்படுத்தி சுருட்டும் கூட்டம் – கொள்ளை இலாபம் அடிக்கும் கூட்டம் புகைவண்டி நிலையங்களில் - பேருந்து நிலையங்களில் –பொது மருத்துவமனைகளில் மட்டுமல்ல – பிணகொட்டகைகளிலும் கூட நிறைந்து மலிந்து காணப்படுகின்றன. இறந்தவர் உடலை ஏற்றிச்செல்லும் அமரர் ஊர்திகள், அழுது ஓலமிடும் சொந்தக்காரர்களின் சோகத்தை அளவிட்டு அதற்கேற்ப விலைவைக்கும் அவலங்கள் கண்கூடாக காணக்கிடைக்கின்றன. கேட்டதொகை கொடுக்காவிட்டால் பிணமும் நகராது; இறப்பு சான்றிதழும் கிடைக்காது.  

அரசு மருத்துவ மனைகளில் அரசு தரும் ஊதியம் பெற்றுக்கொண்டே பணியாற்றும் பலர் கீழிருந்து மேல் மட்டம் வரை  நோயாளிகளின் அவசர அவல நிலைமைகளை பயன்படுத்தி பணம் பிடுங்குகிரார்கள். உடல் உறுப்புகளை திருடுகிறார்கள். பிறந்த குழந்தைகளை கடத்தி விற்கிறார்கள். கடத்தப்பட்ட குழந்தைகளின் உறுப்புகளை ஊனமாக்கி பிச்சை எடுக்க வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள்.  

புதைக்கப்பட்ட பிணங்களை கூட தோண்டி எடுத்து அதில் விட்டு வைக்கப்பட்ட தங்கம்  வெள்ளிகளை திருடுபவர்கள் அணியாக இருப்பதாக செய்திகள் வருகின்றன. இரு சக்கர வாகனங்களில் வந்து நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலி சங்கிலிகளை அறுக்கின்றனர். 

வாடகை கொலையாளிகள் என்ற புதுவித வர்த்தக அமைப்பும், கைக்கு இவ்வளவு காலுக்கு இவ்வளவு உயிருக்கு இவ்வளவு என்று விலை நிர்ணய கலாச்சாரமும் அமுலுக்கு வந்துவிட்டது. இரும்புக்கு டாட்டா, செருப்புக்கு பாட்டா, அதிரையில் தேங்காய், மணப்பாரையில் முறுக்கு, பண்ருட்டியில் பலாப்பழம், நெய்வேலியில் நிலக்கரி என்பதுபோல் இந்த குற்றத்தை செய்வதற்கு இங்கிருந்து ஆள் கிடைக்கும் என்ற புதுவகை கமர்சியல் ஜியாக்ரபி உருவாகிவிட்டது. 

வியாபாரிகள் நவீன முறைகளில் கலப்படம் செய்து சமுதாயத்தை நோயாளிகளாக்குகின்றனர். சமுதாய இயக்கங்கள், சமூக நல இயக்கங்கள் என்ற பசுத்தோல் போர்த்திய புலிகள் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளின் பெயர் சொல்லி நிதி திரட்டி சொந்த பிரச்னைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். பள்ளிவாசல் கட்டுவதாகவும் , அநாதை விடுதிகள் நடத்துவதாகவும் குமர்களுக்காக நிதி வசூல் செய்வதாகவும் கூறி பொய் நெல்லை குத்தி பலர் பொங்க நினைக்கிறார்கள். உயிர் காக்கும் மருந்துகளை போலியாகவும் தயாரித்து விற்பனை செய்து, காலாவதியான மருந்துகளை வாங்கி மொத்த வியாபாரம் செய்ய கிட்டங்கிகளில் குவித்துவைத்தும் அவைகளில் தேதிகளை மாற்றி பணம் பண்ணும பாவிகளையும் பார்த்தோமே.  நினைத்தாலே குலைநடுங்கும் செயலை செய்துவிட்டு ஆடம்பர கார்களில் உலா வருகிறார்களே! 

காவல் நிலையங்களில் கட்டை பஞ்சாயத்துக்களும் , நீதி மன்றங்களில் இல்லாதோர் எளியவர்களுக்கு உரிய நியாயமான தீர்ப்புகள் கிடைக்காத தன்மைகளும், பள்ளிக்கூடம், சாலைகள் அமைக்கும் ஒப்பந்தகாரர்களுடன் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கைகோர்த்து ஒன்றுக்கும் உதவாத மட்டமான பொருள்களை பயன்படுத்தி கட்டப்பட்ட அரசு மற்றும் பள்ளி கட்டிடங்களுக்கும், போடப்பட்ட சாலைகளுக்கும் சான்று தருவதும் அவை குறைந்த வருடங்களில் இடிந்து விழுந்து இளம்பிஞ்சுகளும் உயிர்களும்  பலியாவதும் அதிகரித்து வருகின்றன. ஏழை எளியவர்களின் நிலங்கள் அரசியல்வாதிகளாலும், செல்வாக்குப்படைத்தவ்ர்களாலும் ஏமாற்றி பிடுங்கப்படுகின்றன.  .  

இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகுமே தவிர குறையாது. 

இதற்கு என்ன தீர்வு? சமூக அக்கறையும், சமுதாய வாஞ்சையும் , மனிதாபிமான உயர்நோக்கும் எப்படி உருவாகும்? தழைக்கும்? வளரும்? 

மனித சமுதாயம் தன்னை சீர்படுத்திக்கொள்ளவேண்டுமானால் இறைவனின் கட்டளைகளுக்கு பயந்து நடக்கவேண்டும் என்ற உணர்வு- அப்படி நடக்காவிட்டால் மறுமையில் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம்- ஆகியன தனிமனிதனிடம் மேலோங்க வேண்டும் அவைகள் மேலோங்கினால் மட்டுமே தவறுகள், சுயநலம், சுரண்டல், அநீதி ஆகியவை சமுதாயத்தைவிட்டு ஒழியும். ஆகவே இதற்கு தீர்வு இஸ்லாம்தான். மறைந்து கொண்டிருக்கும் மனித தன்மைகளை மீண்டும் வளர்த்துக்கொண்டுவர மாற்று மருந்து இஸ்லாம்தான். இஸ்லாம் தழைத்துள்ள பகுதிகளில் இத்தகைய சமூக அவலகுற்றங்கள் ஒப்பிடுகையில் குறைவு என்பது உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. . 

இஸ்லாமிய கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் அரசியல், பொருளாதார, சமூக அமைப்புகளில் சுரண்டலும், கொள்ளை இலாபமும் எப்படி ஒழிக்கப்படும் என்பதையும் தனிமனித ஒழுக்கங்கள் எப்படி மேம்படும் என்பதையும் அதற்கான நிருபிக்கப்பட்ட சான்றுகளையும் , இறைவனின் கட்டளைகளுக்கு மாறுபாடு செய்தோர் தண்டிக்கப்பட்ட வரலாற்று சான்றுகளையும் ஒரு தனி ஆக்கத்தில்தான் இன்ஷா அல்லாஹ் காணவேண்டும் . 

திருமறை கூறுவதன்படி ,
“காலத்தின்மீது சாத்தியமாக! மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறை நம்பிக்கை கொண்டும், நற்செயல்கள் புரிந்துகொண்டும், ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்துக்கொண்டும் பொறுமையை கடைப்பிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத்தவிர’” ( 103: 1-3)

வஸ்ஸலாம். 

- இபுராகிம் அன்சாரி.

23 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

To brother இபுராகிம் அன்சாரி

நம்மவர்களின் பொறுமை இலக்கியங்களோடு சரி. நிஜ வாழ்க்கையில் ஜப்பானியர்கள் வென்று வெகுகாலம் ஆகிவிட்டது.

சுனாமியில் அநாதையாக்கப்பட்ட சின்ன பிள்ளைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதிலும், இலங்கை அகதிகளின் முகாம்களில் இளம் பெண்கள் நடத்தப்படும் விதமும் "பெண்களை தெய்வமாக மதிப்பது இந்தியாதான்' எனும் வெட்டித்தத்துவங்கள் பட்டிமன்றத்தோடு நின்று விட்டது என்பது தெரிகிறது.

இஸ்லாமிய மார்க்கம் தந்துள்ள தீர்வை " பாய்ங்க அப்படிதான்யா பேசுவாங்க- அது அவங்க சாதி சமாச்சாரம்ல' என மற்ற மத சகோதரர்கள் நினைக்காமல் என்னதான் இஸ்லாம் சொல்கிரது என திறந்த மனதுடன் வந்தால் அவர்களும் இது வாழ்வியல் தீர்வுதான் மதம் அல்ல எனும் உண்மைக்கு வரலாம்.

அதை கொண்டு சேர்க்க வேண்டியது நம் கடமை. எல்லோரையும் கொண்டு வர முடியமா என்பது சந்தேகம்.

முடிந்தவரை செய்துதான் ஆக வேண்டும்.

நம்பிகைதானே வாழ்க்கை

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்றாஹீம் அன்சாரி காக்கா அழகாக.மனித மிருகங்களை பற்றி படிப்படியாக சொன்ன விதம் விரிவான அலசல்.இஸ்லாமிய சட்டத்திட்டங்கள் இந்நாட்டில் கடைப் பிடிக்கப் படுமேயானால்.மிருக தன்மைக்கு மாறிக் கொண்டிருக்கின்ற மனிதனை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும்.

இஸ்லாம் மார்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளும்.நம்மவர்களிடேயே! மனிதாபியமானம், நேர்மை,நல்லெண்ணம் போன்றவைகள் மேக மூட்டத்துக்குள் பிறை மறைந்தும் மறையாததுமாக.இருக்கும் போது.எல்லாமே உலகத்தோடு முடிந்து விடும் என்று சொல்லிக்கொண்டிருக்கும்.மற்றவர்களிடம் மனித தன்மை கானல் நீராகத்தான் காணப்படுகிறது.

ஜப்பானியர்கள் கலிமாவை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்திற்கு வந்தார்களையானால் தரம் வாய்ந்த முஸ்லிம்களாக அவர்கள்தான் இருப்பார்கள்.சிறு குழந்தைகளிடம் நடந்துக்கொள்ளும் விதமும் தன பணியாட்களிடம் நடந்துக்கொள்ளும் விதமும்.நம்மை மன நெகிழ வைத்துவிடும். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுராகிம் அன்சாரி காக்கா மனித நேயம் மலர்ந்திடச்செய்ய மாட்சிமை பொருந்திய ஏக்கம் தான் உங்களின் இந்த ஆக்கமாக வெளிவந்துள்ளது.

"காசு பணத்தை நெறப்பமா வச்சிக்கிட்டு பெத்த வாப்பா, உம்மாவின் மருத்துவத்திற்கு செலவு பண்ண கருமித்தனம் பண்ணும் பிள்ளைகளிடமிருந்து ஊருக்கு பொதுநலம் செய்ய சேவை மனப்பான்மை எங்கிருந்து வரும்?"

க‌டைசியில் இவ‌ன் சேர்த்து வைத்த‌ காசிலிருந்து ஒரு ஊசி போட்டால் ச‌ரியாகிவிடும் காய்ச்ச‌லுக்கு கூட‌ ம‌ருத்துவ‌ம் செய்ய‌ இவ‌ன் பிள்ளைகுட்டிக‌ள் யோசிக்க‌ ஆர‌ம்பித்து விடும்.

நீங்க‌ள் ப‌ட்டிய‌லிட்ட‌து போல் அன்றாட‌ம் ந‌ட‌க்கும் உல‌க‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எல்லாம் எம்மை "ம‌னித‌ நேய‌மெல்லாம் செத்துப்போய் ரொம்ப‌ நாளாச்சி" காக்கா என்று சொல்ல‌ வைத்து விடுகிற‌து.

ச‌மீப‌த்தில் அர‌ப் நியூஸில் க‌ண்ட‌ ஒரு செய்தி "புனித‌ ம‌தீனாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான ஹோட்ட‌ல் ஒன்றில் விலைக்குறைவாக‌ கிடைக்கின்ற‌ன‌வே என்பதற்காக‌ செத்துப்போன‌ ஆட்டை அறுத்து ச‌மைக்க‌ப்ப‌ட்ட‌ க‌றிவ‌கைகள் அங்கு வருவோருக்கு நீண்ட நாட்களாக‌ ப‌ரிமாற‌ப்ப‌ட்ட‌தாக புகார் செய்யப்பட்டு புகைப்ப‌ட‌த்துட‌ன் அந்த‌ ஹோட்ட‌ல் சீல் வைக்க‌ப்ப‌ட்ட‌து அங்குள்ள‌ ப‌லதிய்யா என்னும் சுகாதார‌த்துறை மூல‌ம்".

என் அனுப‌வ‌தில் நான் க‌ண்ட‌து ம‌தீனாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ பேரீச்ச‌ம் ப‌ழ‌ தொழிற்சாலையில் கெட்டுப்போன‌, நாள்ப‌ட்ட‌ பேரீத்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை எந்த‌க்கார‌ண‌ம் கொண்டு கீழே கொட்ட‌ மாட்டார்க‌ள். க‌டைசியாக‌ அதை ந‌ன்கு அரைத்து பேஸ்ட்டாக்கி பிஸ்க‌ட் க‌ம்பெனிக்கு அனுப்பி விடுவார்க‌ள். அங்கு அதை பேரீச்ச‌ம் ப‌ழ‌ கிரீம் பிஸ்க‌ட்டில் த‌ட‌வி சூப்ப‌ர் மார்க்கெட்டில் ஹைஜீனிக்கான‌ ஒரு தோற்ற‌ம் கொடுத்து ந‌ல்ல‌ விலைக்கு விற்று விடுவார்க‌ள். ப‌லதிய்யா ரைடு வ‌ருவ‌து அறிந்தால் ப‌ழைய‌ பேரீச்ச‌ம் ப‌ழ‌ங்கலெல்லாம் எங்கு தான் செல்வ‌து என்று தெரியாது. இப்ப‌டி புனித‌ ந‌க‌ர‌ங்க‌ளிலேயே அத‌ன் புனித‌த்தை இது போன்ற‌ க‌ய‌வ‌ர்க‌ள் நாலு காசு சம்பாதிப்பதற்காக மாசுப‌டுத்தி விடுகின்ற‌ன‌ர்.

Anonymous said...

இப்பொழுதெல்லாம் எப்போ விபத்து நடக்கும் பணத்தையும், காதில், கழுத்தில் உள்ளவைகளை பிடிங்கிக்கொண்டு ஓடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். எவர்கள் அசரமாட்டார்கள் என்று அடுத்தவருடைய பொருள்களை அபகரிப்பதற்கு நம் மார்க்கத்தில் எப்படி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது என்று யாரும் அதை பற்றி சிந்திப்பதில்லை.

இஸ்லாத்தில் சொல்லப்பட்டதை மறைந்து கொண்டும், மறைத்துக்கொண்டும் இருக்கிறோம். சொல்லப்பட்டவையில் யாரும் நியாயமாகவும், நீதியாகவும் நடப்பதில்லை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இ.அ.காக்காவின் விரிவான அலசல் !

மனிதத்தின் புனிதம் போதித்தது இஸ்லாம் ! இதனை உணர்ந்தவர்களும் போர்வை போர்த்திக் கொண்டுதான் உறங்குகிறார்கள் வேதனையே !

//தனிமனித ஒழுக்கங்கள் எப்படி மேம்படும் என்பதையும் அதற்கான நிருபிக்கப்பட்ட சான்றுகளையும்//

இதுதான் ஆணிவேறு !

இங்கே அசத்தல் காக்காவின் கருத்தில் //இஸ்லாமிய மார்க்கம் தந்துள்ள தீர்வை " பாய்ங்க அப்படிதான்யா பேசுவாங்க- அது அவங்க சாதி சமாச்சாரம்ல' என மற்ற மத சகோதரர்கள் நினைக்காமல் என்னதான் இஸ்லாம் சொல்கிரது//

நான் அதனையே வழி மொழிகிறேன்... டாக்டர் KVS அவர்களின் அழைப்புப் பணியிலும் இதனை அடிக்கடி ஞாபகப் படுத்திக் கொண்டே இருப்பார்கள்...

Noor Mohamed said...

//கால்பந்து காற்றை தன்னுள் வாங்கி வைத்துக்கொள்கிறது- அது சுயநலம். புல்லாங்குழல் தான் வாங்கும் காற்றை இசையாக வெளியிடுகிறது. அது பொதுநலம். சுயநலம் காலால் உதைக்கப்படுகிறது. பொதுநலம் இதழ்களால் முத்தமிடப்படுகிறது//

இதை கருவாக வைத்து இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் கருத்தாழ மிக்க கட்டுரையை நமக்கு தந்துள்ளார்கள்.

"சிந்திக்க தூண்டுபவன் கவிஞன், உன் சிந்தனைக்காக சிலவற்றை கூறினேன், தனிமையில் நன்றாக சிந்தித்துப் பார்" என்று கிரேக்க கவிஞன் ஒருவன் கூறினான்.

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்கள் இன்றைய நிகழ்வுகளை தந்து நம்மை சிந்திக்க வைத்து விட்டார்கள்.

நூர் முஹம்மது.

Shameed said...

//கை குழாய் அருகில் ஒரு குவளையும் அதனுள் ஒரு லிட்டர் அளவுள்ள தண்ணீரும் வைக்கப்படிருந்தது. தாகத்தால் தவித்து ஓடிவந்தவன் அந்த குவளையில் உள்ள தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்து தனது தாகத்தை தீர்த்துவிடவில்லை. மாறாக அந்த குவளையில் இருந்த தண்ணீரை கைகுழாய்க்குள் ஊற்றி மெல்ல மெல்ல குழாயிலிருந்து தண்ணீரை அடித்து குவளையில் பிடித்து பின் குடித்து தனது தாகம் தீர்த்துக்கொண்டதுடன் அல்லாமல் அடுத்து வருபவருக்கும் உதவும் என்று அதே குவளையில் மீண்டும் நீர் அடித்து நிரப்பி வைத்துவிட்டு இடம் பெயர்ந்தான்//

அருமையான அறிவார்ந்த எடுத்துக்காட்டு கதை ( மாமா சின்ன வயசில் கூட இருந்து இது போன்ற அறிவார்ந்த கதைகளை கேட்க முடியாமல் போனதை அதிரை நிருபரில் நீங்கள் அள்ளித்தருவதில் மகிழ்ச்சியோ)

Yasir said...

மனித சுயநலங்களை தோலுரித்து தந்திருக்கும் ஒரு பொதுநலவாதியின் ஆக்கம்....அல்லாஹ் உங்களுக்கு பூரண் உடல்நலத்தை கொடுப்பானாக...உங்களின் ஆக்கங்கள் எங்களை பண்படுத்தும் மாமா

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

மனிதத் தன்மைகள் மரணித்து வருவதை பற்றிய சரியான அலசல்!

//ஜப்பானியர்கள் கலிமாவை ஏற்றுக் கொண்டு இஸ்லாத்திற்கு மட்டும் வந்தார்களேயானால் தரம் வாய்ந்த முஸ்லிம்களாக அவர்கள்தான் இருப்பார்கள்.சிறு குழந்தைகளிடம் நடந்துக்கொள்ளும் விதமும் தன் பணியாட்களிடம் நடந்து கொள்ளும் விதமும் நம்மை மனம் நெகிழ வைத்துவிடும். அல்லாஹ் அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுப்பானாக ஆமீன்.//

நான் எழுத நினைத்த கருத்தை லெமுசெ முந்திக்கொண்டு விட்டதால் அதையே வழி மொழிகிறேன்.ஆமாம் இஸ்லாமிய குணாதிசயங்களைக் கொண்ட ஜப்பானியர்களிடம் ஈமான் மட்டும் தான் பாக்கி.அது மட்டும் அடைந்து விட்டால் இன்சா அல்லாஹ் அவர்கள் தான் அனைத்திலும் நம்பர் 1. மனிதர்களாக இருக்க முடியும்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இபுறாஹிம் அன்சாரி காக்கா,

ஜஸகல்லாஹ்.. சிந்தனை தூண்டும் மிக அருமையான பதிவு..

இயற்கை சீற்றத்திற்கு பிறகு நீங்கள் பட்டியலிட்டுள்ள செயற்கை சீற்றங்களால் மக்கள் படும் அவதியே அதிகம்.

சுய நலத்தை துறந்து பொது நலம் பேணும் மக்களின் எண்ணிக்கை கூடவேண்டுமானால், தூய இஸ்லாம் ஒன்றே வழி..

வெறும் முஸ்லீம் பெயர் மட்டும் இருந்தால் பொது நலம் வந்துவிடாது... உண்மை முஸ்லீமாக வாழ்ந்துகாட்டினால் மட்டுமே சாத்தியம் என்பதை நபிகளார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு காட்டித்தந்துவிட்டார்கள்.

அல்லாஹ் போதுமானவன்..

sabeer.abushahruk said...

காக்கா,
தங்களின் கட்டுரையில் தொணிக்கும் கோபமும் இதனூடே இழையோடும் கவலையும், பின்னூட்டமிடுபவர்களின் ஆதங்கமும் ஒன்றைத் தெளிவுபடுத்துகின்றன. அது, மறைந்துகொண்டிருந்தாலும் மனிதத்தன்மை இன்னும் முடிந்துபோய்விடவில்லை.

மனிதனின் படைப்பே இப்படித்தான், நினைவுபடுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.

நன்றியும் வாழ்த்துகளும்.

sabeer.abushahruk said...

மடிந்துபோன மனித நேயம்:

மனித நேயம் மடிஞ்சி போச்சு
பகல் வேஷம் மலிஞ்சி போச்சு
சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே
சுருங்கிப் போச்சு மனித நேயம்!

காயம்பட்ட காகம் கண்டு
கரையும் காக்கைக் கூட்டம்
காயம் கண்டு கரையும் அந்த
நேயம் எங்கே மனிதா?

ஒட்டுமொத்த கூட்டமும்
கட்டுக்கோப்பா வழ்ந்தோம்
காயம் பட்டு மனதிலே -மனித
நேயம் விட்டுப் போச்சு!

நாகரிகப் போர்வைக்குள்ளே
தனிமைப்பட்டான் மனிதன்
நாயைவிட கேவலமாய்
நன்றி கொன்றான் மனிதன்!

காசுபணம் கணக்குப் போட்டு
பாசம் நேசம் விற்றான்
அக்கம்பக்க வீட்டாரோடு
பரிச்சயத்தை வெறுத்தான்!

மனித நேய மகாசக்தி
மடிந்து போன காரனம்
எல்லைச் சண்டை நாட்டிலே
கொல்லைச் சண்டை வீட்டிலே!

ரெண்டடி நிலத்திற்காக
தடியடி வரைப் போகிறாய்
ஆறடியில் அடங்கும்போது
காலடி கூடக் கிடைக்காது!

நாடி அடங்கிப் போகயிலே
நாலு பேரு வேனும் -அந்த
நாலு பேரு வேனுமெனில் - மனித
நேயம் வளர்க்க வேனும்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மடிந்துபோன மனித நேயம்:

மனித நேயம் மடிஞ்சி போச்சு
பகல் வேஷம் மலிஞ்சி போச்சு
சுயநலம் எனும் கூட்டுக்குள்ளே
சுருங்கிப் போச்சு மனித நேயம்!//

கிரவ்னு எங்கேயா போனே ?

கிரவ்னுரை உடனே வேண்டும்... எங்களுக்கு எங்கிருந்தாலும் வந்திடு(டா)ப்பா !

என்னா ஆச்சு ?

ஜமாலுத்தீன் புஹாரி said...

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அதிரை நிருபர் வாசகர்கள் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

மாய்ந்து வருகிற மனித நேயம் குறித்த அன்பிற்கினிய அன்சாரி சார் அவர்களின் பதிவு, அவர்களுடன் நம்மையும் இணைந்து கவலையில் ஆழ்த்தியுள்ளது. கவிக்காக்கா பதிந்துள்ளதுபோல் நினைவூட்டல்கள் தொடந்து தொடர வேண்டும் என்பதை தவிர வேறு வழியேது. பிரார்த்திப்போம் மனித நேயம் மீளெழுச்சி பெற. வஸ்ஸலாம்

அன்புடன்,
B. ஜமாலுத்தீன்
0502855124

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

மாஷா அல்லாஹ்!
உண்மையான கவலையுடன் கூடியநல்லதொரு பதிவு!

/// சுய நலத்தை துறந்து பொது நலம் பேணும் மக்களின் எண்ணிக்கை கூடவேண்டுமானால், தூய இஸ்லாம் ஒன்றே வழி..

வெறும் முஸ்லீம் பெயர் மட்டும் இருந்தால் பொது நலம் வந்துவிடாது... உண்மை முஸ்லீமாக வாழ்ந்துகாட்டினால் மட்டுமே சாத்தியம் என்பதை நபிகளார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு காட்டித்தந்துவிட்டார்கள். /// உண்மை!

KALAM SHAICK ABDUL KADER said...

”ஆடி அடங்கும் வாழ்க்கை
ஆறடி நிலமே சொந்தம்”
பாடிய பாடல் உண்மை
பாரினில் ஏன்தான் சண்டை?
வாடிய மக்கட்கு உணவில்லை
வறியோர் பற்றிய உணர்வில்லை
கோடி கணக்கில் அழித்திடுவர்;
கொடுமையாய் மக்களை ஒழித்திடுவர்

கூடி பேசுவதோ (உலகமைதி) மாநாடு
கொன்று குவிப்பதால்
(உள்நாடோ) “மயானக்காடு”

KALAM SHAICK ABDUL KADER said...

ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்

எப்பாடு பட்டாலும் சோதனைகள் வென்றுதானே எழுந்து நிற்பான்
தப்பான வழிகளிலேச் செல்லாது உழைப்பினிலே தயங்கா(த) ஜப்பான்
கூப்பாடு போட்டவர்கள் புலம்பியவர் அழுகையின் கூவல் இல்லை
சாப்பாடு கேட்டவர்கள் வரிசையில் நிற்பதுவே சாந்த எல்லை



எல்லார்க்கும் கிடைத்திடவே தேவைக்கும் அதிகமாக எடுக்கா(த) அன்பு
பொல்லாதத் திருட்டுகள் சாலையில் இடைஞ்சல்கள் புரியா(த) பண்பு
நில்லாமல் உதவிடவே எந்நேரம் விழிப்புடனே நிற்கும் காவல்
சொல்லாலே வடித்திடவே முடியாத மீட்புப் பயிற்சி ஆவல்



சோதனைகள் வந்தாலும் மீட்சியுடன் உழைத்திடவேச் சோரா(த) திண்மை
சாதனைகள் செய்தாலும் களித்திடாத நடுநிலைமைச் சார்ந்த தன்மை
வேதனைகள் தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றி வெல்லும் வேட்கை
போதனைகள் நமக்கெலாம் ஜப்பானின் விடாமுயற்சி போற்றும் வாழ்க்கை

அப்துல்மாலிக் said...

மலுங்கிக்கிடக்கும் மனிதநேயம் பற்றி எல்லாவகையிலும் அலசியவிதம் அருமை, படிக்கும்போது கோபம்தான் வருகிறதே தவிர அதை தட்டிக்கேட்கும் அவசியம் ஏனோ வர மறுக்கிறது. இதற்கெல்லாம் இஸ்லாம் கூறும் நல்வழிமுறைகளை பின்பற்றினால் மனிதநேயம் தழைத்து நிற்கும் என்ற கூற்று உண்மையே, வாழ்த்துக்கள் சகோ...

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் .

மறைந்து கொண்டிருக்கும் மனிதத்தன்மைகள் என்ற பதிவுக்கு பின்னூட்டம் இட்டு பின்பலமாக நின்று ஊக்கம் தரும் அனைத்து நண்பர்களுக்கும் தொலைபேசி வழியாக அழைத்து பாராட்டிய அன்பர்களுக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக.

நண்பர் எம் எஸ் எம் நெய்னா முகமது அவர்களுடைய பின்னூட்டம் கண்டு அதிர்ந்து போனேன். மதினாவில் நடந்ததாக அவர்கள் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் கட்டுரையின் கருப்பொருளையே அசைத்து ஆட்டம் காணவைத்துவிட்டது. இஸ்லாம்தான் இதற்கு தீர்வு என்று நாம் எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இஸ்லாத்தின் விளை நிலத்திலே கூட- மனித குலத்தின் புனித நகரங்களில் கூட இப்படிப்பட்ட பாவச்செயல்கள் பாவிகளால் அரங்கேற்றப்படும் பாதகத்தை அறியும்போது நெஞ்சு நடுங்குகிறது. இதை எழுதி பயன் இல்லையோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

இருந்தாலும், தம்பி ஜாகீர் ஹுசேன் கூறுவதன்படி நம்பிக்கைதான் வாழ்க்கை. முடிந்தவரை செய்துதானே ஆகவேண்டும்? அதன்படியும், நண்பர் ஜமாலுதீன் அவர்கள் கூறுவதன்படியும் நினைவூட்டல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். வேறு வழி? என்பதை ஏற்று நமது நினைவூட்டல் தொடரும். இன்ஷா அல்லாஹ்.

எல்.எம்.எஸ். அபூபக்கர் அவர்கள், நான் கட்டுரையில் பட்டியல் இடாத, பெற்றவர்களை பேணாதவர்களைப்பற்றி சுட்டிக்காட்டி இருககிரார்கள். நம்மிலும் அதிகரித்துவிட்ட இந்த பாவத்திலிருந்து அல்லாஹ் எல்லோரையும் காப்பாற்றுவானாகவும். இந்த பெரும்பாவத்தின் விளைவுகளையும் அதற்குரிய மறுமையின் தண்டனைகளையும் யாராவது விரிவாக எழுதி அச்சமூட்டி எச்சரிக்கை செய்தால் பயனாக இருக்கும்.

தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள், அவர்களுக்குரிய பொறுப்புடன் ஆணிவேர் இதுதான் என்று கோடிட்டும் குறிப்பிட்டும் காட்டி இருககிறார்கள். (தூண்டில்காரருக்கு மிதப்புக்கட்டை மேல் கண்) இன்ஷா அல்லாஹ் இந்த சிந்தனையை தொடர்ந்தும் எழுத வல்லமை தர வல்லோனை வேண்டுகிறேன்.

மருமகன் சா. ஹமீது சின்ன வயதில் இந்த மாதிரி கதைகள் கூறவில்லையே என்று கேட்டிருக்கிறார். சின்ன வயதில் அவருக்கு கோலிக்குண்டு விளையாடவே நேரம் போதவில்லையே கதை கேட்க ஏது நேரம்? அப்போதெல்லாம் கதை என்றால் பயந்து நீ ஓடிவிடுவாய் ‘ கொழந்தே”.

அதிரையின் இரு கவிதைக்கண்கள் சபீர் அவர்களும், கலாம் அவர்களும் நாமெல்லாம் நாலு பக்கத்தில் எழுதுவதை நாலுவரிகளில் “நச்சென்று” எழுதி எல்லா ஆக்கங்களுக்கும் அழகு சேர்க்கின்றார்கள். அவர்களின் பின்னூட்டம் இல்லாத பதிவுகள் “ பிர்ணி” இல்லாத விருந்துகள்.

தம்பி நூர் முகமது, ஜனாப்கள். தாஜுதீன், அப்துல் மாலிக், அலாவுதீன், எம். எச். ஜகபர் சாதிக் ஆகிய அனைவருக்கும் ஜசக்கல்லாஹ்.

மருமகன் யாசிர் அவர்களே! அங்கும் இங்குமாக எண்ணங்களுக்கு வடிகால் கொடுத்துக்கொண்டிருந்த என்னை அதிரை நிருபருக்கு “ இட்டாந்து” இவ்வளவு அன்பு உள்ளங்களின் அறிமுகமும் கிடைக்கச் செய்த காரியத்துக்கு மற்றொரு “ கட்டுச்சோறு/ காடை” விருந்து வைத்துவிடலாம். (அதுசரி மையத்து புரண்டு படுக்கும் ஜோக் இன்னுமா ஓடுகிறது).

வஸ்ஸலாம்.

Ebrahim Ansari

இனியவன் தஞ்சை said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மாஷா அல்லாஹ்!
இன்றைய அவலங்களை அழகாக அடுக்கி வைத்திருக்கிறீர்கள். எல்லாப்புகழும் நம்மை படைத்த அல்லாஹ் ஒருவனுக்கே.
தாங்களின் ஆக்கத்தைவிட கண்ட, கேட்ட, அனுபவித்த அனுபவங்களை பலருக்கு புரியவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறீர்கள். ஜசகல்லாஹ் ஹைர்.

நான் பல தடவை முகநூளில் சில புகைப்படத்தை பிரசுரித்து அதில் இதுபோன்ற கருத்துக்களை தனித்தனியாக கூறியிருந்தேன் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

மனிதர்கள் அல்லாஹ்வின் உதவியால் சொர்க்கத்தைதான் சுவைக்க வேண்டும் என்று கருதியிருந்தால் இன்று பலர் பலருக்கு பயன்பெறும் வகையில் வாழ்ந்திருப்பார்கள். அதற்கு மாறாகவே வாழ்ந்து கொண்டுவருகிறார்கள்!

வறியவருக்கு வாரி வழங்கவில்லை என்றாலும்கூட அவர்கள் அதைப்பெருவதற்கு உதவி புரிந்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் தடுத்துக்கொண்டு வாழ்கிறார்கள் இன்றைய சமூகத்தினர்!

வாரியம் வழங்கவில்லை! அதன் வழியாக வந்ததையும் வழிமறித்து கொள்ளைலாபம் அடிக்கும் சமுதாயமாக தற்போதைய உலகத்தில் மாறிக்கொண்டு இருக்கிறது.

மனித சமுதாயம் நரகத்தின் வாயிலை நெருங்கிக்கொண்டு இருக்கிறது! படைத்தவன் நன்கு அறிவான் இவர்களின் உயிரை பலவந்தமாக பறிப்பதற்கு! அதுவரை இவர்கள் செய்யும் அத்தனையும் சோதனை ஓட்டமே! கேட்பதற்கு நாதி வராது! அதுவே இவர்களின் தலைக்கனம்...!

இன்ஷா அல்லாஹ்....!
நாம் அனைவரையும் நேரான வழியிலும், அல்லாஹ்வின் அருளாலும் வாழ்வதற்கு துனைப்புரிவானகவும் ஆமீன்...!

sabeer.abushahruk said...

//அதிரையின் இரு கவிதைக்கண்கள் சபீர் அவர்களும், கலாம் அவர்களும்//

காக்கா கவனம். பார்த்துச் சொல்லுங்க. நான் அரை(குறை)க்கண்தான். சகோ. கவியன்பன் அளவுக்கு இலக்கண பரிச்சயம் கிடையாது. அப்புறம் அதிரை ஒன்றரைக்கண்ணாகிவிடப்போகிறது:)

Yasir said...

அன்பு அன்சாரி மாமா அவர்களுக்கு....காந்தபோல் கவர்ந்து இழுக்கும் உங்கள் எழுத்து திறமையும் ,பேச்சும்,எண்ணங்களும்,அனுபவங்களும் யான் பெற்றது போல எல்லோரும் பெற வேண்டும் என்ற எண்ணம்தான்.....

//கட்டுச்சோறு/ காடை” விருந்து வைத்துவிடலா///ம்..கட்டுசோறுக்கு தொட்டுக்க கோழி பொரிச்சா வேணாம்டா சொல்லிடுவோம்..எப்பண்டு சொல்லுங்க வந்து இறங்கிடுறோம்

Yasir said...

//அதுசரி மையத்து புரண்டு படுக்கும் ஜோக் இன்னுமா ஓடுகிறது// அது ஜோக் ஆஃப் த சென்சுரி மாமா .ஒடிக்கிட்டே இருக்கும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு