அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரைநிருபர் வலைத்தளம் பலரின் வாழ்த்துகளுடன் சிறப்புடன் வளர்ந்தோங்கி வருகிறது. இதன் தொடக்க காலத்திலிருந்து இந்த தளத்துடன் நான் கைகோர்த்து வருபவன் என்கிற உரிமையில் மட்டுமல்ல - இந்தப் பதிவு அதிரைநிருபர் தளத்தில் முத்தாய்ப்பாக எனது ஐம்பதாவது பதிவு என்கிற முறையில் மிகவும் சந்தோஷப் படுகிறேன்.
அரை நூறு என்பது அனைவரின் வாழ்விலும் ஒரு மறக்க முடியாத மைல்கல். இந்த தருணம் என்னைப் பொருத்தவரை மகிழ்வான தருணம். இந்த மகிழ்ச்சியை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது இன்னும் மகிழ்வான தருணமாக எனக்குள் உணர்கிறேன்.
ஒரு புகைப்படக் கலைஞனாக ஊடகத்துறையில் ஊடுருவிய நான் பல்வேறு தருணங்களில், பல்வகையான காட்சிகளை எனது பேசும்படத்தின் மூலம் காட்சிப் படுத்திக் காட்டி இருக்கிறேன்.
நமது பிறப்பிடமான அதிரை, அது குற்றாலமோ, கொடைக்கானலோ அல்ல. ஆனாலும் அதிரையிலும் குளுமை உண்டு என்று பலமுறை காட்டிய ஆத்ம சந்தோசம் எனக்குண்டு.
அதேபோல் தமிழகம் உட்பட நாட்டின், உலகின் பலபகுதிகளை சுட்டிக்காட்ட - சுட்டுக்காட்டிய உள்ளார்ந்த ஆத்ம திரும்ப்தியும் எனக்குண்டு.
பழங்களை, பறவைகளை, ஊற்று நீரை, ஓடும் ரயிலை, உப்பலங்களை, ஊற்று நீரை, தென்னந் தோப்புகளை, தெருக்களை, மீன்பிடிக் காட்சிகளை, மிதக்கும் படகுகளை, சுட்ட நண்டுகளை, சூடு மாறாத கோழிகளை இப்படி பலவற்றை படம் பிடித்து எனது நாற்பத்தி ஒன்பது பதிவுகளை அலங்கரித்து இருக்கிறேன்.
அத்துடன் அவ்வப்போது எனது சிற்றறிவுக்கு எட்டிய சில கருத்துக்களை கட்டுரைகளாகவும் பகிர்ந்து இருக்கிறேன். நான் படிக்க நேர்ந்த சில அறிவியல் ஆக்கங்களுக்கு என் பாணியில் உங்கள் அனைவர் கவனத்துக்கும் தந்து மகிழ்வித்தும், எச்சரித்தும் இருக்கிறேன். பகிர்ந்து கொள்ளப்பட்ட இன்பம் இரட்டிப்பு ஆகுமென்பதை அறிந்தவனாகையால் நான் சந்திக்க நேர்ந்த நகைச்சுவையான நிகழ்வுகளை பகிர்ந்து இருக்கிறேன்.
இத்துடன் ஐம்பது பதிவுகளும் அரங்கேற உறுதுணையாக இருந்த வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த அதிரைநிருபரின் நெறியாளர், நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் ஆக்கங்களுக்கும் பேசும் படங்களுக்கும் பின்னுட்டமிட்டு என்னை உசுப்பேத்திய அனைவருக்கும் நான் மிகவும் கடமைப்பட்டு இருக்கிறேன். பல கவிஞர்கள், அறிஞர்கள் கோலோச்சும் இந்த தளம் மென்மேலும் வளர்ந்து சமுதாயப் பனியாற்ற துஆச்செய்தவனாக எனது ஐம்பதாவது பதிவை இங்கே பதிவு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் !
லக்கேஜும் நானும் ! 50 வது பதிவு !
விடுமுறை நாட்கள் ஓடிய ஓட்டம் எந்தப்பக்கம் என்று திருப்பிப் பார்க்கும் முன்னறே எங்கள் விடுமுறையும் நிறைவுக்கு வரும் நாளும் நெருங்கியது. அதுவும் சவூதிக்கு என்றது எடுத்து செல்ல சாமான்களும் கூடியது 26 ஆகஸ்ட் பகல் திருச்சியிலிருந்து கொழும்பு வழியாக தமாமுக்கு விமான டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததை உறுதி செய்து கொண்டு, அன்று இரவு சாமான்களை எடை போட்டு பார்த்ததில் மொத்தம் 70 கிலோ இருந்தது ஏர்-லங்காவில் 35 கிலோ தான் அனுமதி பெட்டி கட்டும்போதே தலை சுத்தி வாந்தி மயக்கம் எல்லாம் சேர்ந்தாற் போல் வந்தது. ஒரு குருட்டு கணக்கில் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் போவது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற, இரவே அனைத்தையும் சாமான்களையும் ரெடி செய்து வைத்து விட்டேன் .
வாடகைகார் காரரிடம் காலை பத்து மணிக்கு வந்துவிட சொல்லி விட்டேன் அப்போ தானே பத்தரைக்காவது வருவார் என்ற எண்ணத்தில். ஆனால் மனுஷன் சரிய பத்துமணிகெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டார் வந்ததும் வராததுமா ஏம்பா “நீ பொறபுட்டு போற ஆளா தெரியலையே” என்று குதர்க்கமா பேசி லக்கேஜ் டென்சன் பத்தாதற்கு இவரும் BP (!!?)யை ஏற்றிவிட்டார் அப்போதுதான் விளங்கியது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டது
அனைத்து சாமான்களையும் எடுத்துக்கொண்டு (அள்ளிக்கொண்டு) அரக்க பரக்க காரில் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது புறப்பட்ட சிறிது நேரத்தில் நமக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
டிரைவரிடம் “காகா AC யை கொஞ்சம் போடுங்களேன்” என்றதும்
அவர் “A /C போட்டால் வாடகை கூடுமே” என்ற தத்துவத்தை உதிர்த்தார்.
“வாடகை கூட தாரேன் முதலில் A/C யை போடுங்கள்” என்றேன்.
அதற்குள் பெட்ரோல் பம்ப் வந்தது டிசல் போட வண்டியை நிறுத்தினார். நம் ஊரில் காரும் சரி ஆட்டோவும் சரி வாடகைக்கு எடுத்துப் போனால் போகும் போதுதான் எரிபொருள் நிரப்புகின்றனர் முன்பே யாரும் எரிபொருள் நிரப்பி வைப்பதில்லை அந்த பெட்ரோல் பங்க் போற வரைதான் எரிபொருள் வைத்துள்ளனர்.
வாடகை வாகனங்களை அவசரத்திற்குத்தான் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், நம் ஊரை பொறுத்தவரை பாம்பு கடித்து சாகும் நிலையில் உள்ளவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனால் கூட வாகன ஓட்டுனர்கள் பெட்ரோல் பங்க் போய் பெட்ரோல் / டிசல் போட்டுக் கொண்டுதான் ஆஸ்பத்திரிகே போவார்கள்!!
சரி விசயத்திற்கு வருவோம் கார் டிசல் போட்டுக் கொண்டு திருச்சி நோக்கி புறப்பட்டது A/C போடுவதும் அமத்துவதுமாக காரை ஓட்டிக் கொண்டு வந்தார். செல்லும் வழியில் மாடு ஒன்று குறுக்கே புகுந்தது. என்னுடன் துணைக்கு வந்த நாண்பர் “மாடு காக்கா” என்று சத்தம் போட்டதும் ‘பிரேக்’ அடித்து வண்டியை நிறுத்தி மாடு போன பின்பு வண்டியை எடுத்தார் "பகலில் பசு மாடு தெரியாதவருக்கு இரவில் எப்படித்தான் எருமை மாடு தெரியப் போவுதோ" ஒருவழியாக திருச்சி ஏர்போர்ட் வந்து சேர்த்தார்.
ஏர்போர்ட் உள்ளே போவதற்கு சாமான்களை சிறிய தள்ளு வண்டியில் ஏற்றி கொண்டு சாமான்கள் இல்லாமல் யாரும் தம்மாம் போகிறார்களா என்று தேடியதில் ஒருவர் சிக்கினார், இல்லை இல்லை நாம் அவரிடம் சிக்கினோம். லகேஜ் இல்லாதவரிடம் சலாம் சொல்லி நம் லகேஜ் விவரம் சொன்னதும் உடன் சரி சொன்னவர் ‘ரூபாய் இரண்டாயிரம் பணம் வேண்டும்; என்று பேரம் பேச ஆரம்பித்தார்.
உடன் வந்த நண்பர்கள் அவரிடன் ஒருவாறாக பேசி ஆயிரத்திற்கு ஒப்புக் கொண்டார் பணத்தை கையில் வாங்கி பக்கத்தில் நின்ற அவர் மனைவி வசம் கொடுத்தார் மனைவிக்கு கணவரை பிரியும் சோகமெல்லாம் மறந்து பணம் முகத்தில் மலர்ச்சியை ஏற்ப்படுத்தியது. நமது லகேஜை வாங்கிக் கொண்ட அவரின் விமான டிக்கெட்டை வாங்கி பார்த்தால் திருச்சியில் இருந்து அவருக்கு 4:30க்கு தான் மிஹென் லங்கா விமானம். நமக்கு 3:30க்கு ஸ்ரீலங்கன் விமானம் ஆனால் இருவருக்கும் கொழும்பில் இருந்து மாலை 6:50 மணிக்கு ஒரே விமானம் தான்.
நம் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு போர்டிங் வேலை அனைத்தையும் முடித்துவிட்டு விமானத்தில் அமர்ந்ததும் விமானம் புறப்பட்டு மாலை நான்கு முப்பது மணிகெல்லாம் கொழும்பு ஏர்போர்ட் வந்தடைந்தோம். நம் லக்கேஜ் கொண்டு வருபரின் விமானம் ஐந்து முப்பதுக்கெல்லாம் கொழும்பு வந்து இறங்கியது கேட் நம்பர் எட்டு தமாம் போவதற்கான வாயில் நாம் காத்திருந்தும் நாம் சாமான் கொடுத்தவர் வந்த பாடில்லை விமானம் புறப்படுவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
ஆகா இதற்கு மேல் தாமதித்தால் சரியா வராது என்று கொழும்பு ஏர்போர்ட்டில் லகேஜ் கொடுத்தவரை தேட ஆரம்பித்தேன் ஆள் கிடைக்கவில்லை ஆனால் அங்கு ஸ்ரீலங்கன் ஆபீஸ் வாசலில் ஒரு கும்பல் ஆக்ரோசமாக ‘சப்தம்’ போட்டு கொண்டிருந்தது அங்கு சென்று பார்த்ததில் நம் லகேஜ் ஆளும் நின்றார் விவரம் கேட்டதற்கு கொழும்பு தமாம் விமானத்தில் இவருக்கும் இன்னும் ஒரு இருபது பேருக்கும் இடம் இல்லையாம் இரண்டு நாள் தங்கி மூன்றாவது நாள் ரியாத் ஏர்போர்ட்டிற்கு தான் அனுப்பி வைப்பார்களாம் என்றார்.
இதற்கிடையே விமான ஊழியர்கள் இந்த இருபது பேருக்கும் அடுத்த முறை போக வர விமான டிக்கெட் இலவசம் என்று சொல்லி ஒரு டிக்கெட் பிட்டை போட்டதால் நாம் லகேஜ் கொடுத்த ஆள் மிக கூலா சொன்னார் “நான் ரியாத் வந்து பிறகு தம்மாம் வருவேன் அப்போ உங்க லகேஜ்ஜை வந்து தந்து விடுகின்றேன்” என்றார். அடப்பாவி அதற்குள் அதன் உள்ளே இருக்கும் இரண்டு ஆட்டுத் தலை அதன் கூட நம் ஊர் ஆட்டு இறைச்சி, பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு பெரிய கொடுவா மீன் வெட்டியது, இது இரண்டையும் இரண்டு நாட்களுக்கு முன் ப்ரோசன் செய்து பாதுகாப்பாக வைத்து கொண்டு வந்தது எல்லாம் கூல் போய் வீணாகி நாறிப்போய் விடுமே. குப்பென்று வேர்த்த்து உடனே அவர் கையில் இருந்த பாஸ்போர்ட் டிக்கெட் மற்றும் லக்கேஜ் போட்டதற்கு கொடுத்த பார்-கோடு டிக்கெட் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அங்கு பணியில் இருந்த ஆபீஸ்சரை நோக்கி போனேன்
அவரிடம் போய் “இவர் என் பிரதர் இவருக்கு டிக்கெட் கன்ஃபாம் இல்லை இவரை நாளைக்கோ அல்லது நாளை மறுநாளோ சவுதிக்கு அனுப்புங்கள். ஆனால், இவர் கொண்டு வந்த லகேஜ் மட்டும் நான் போகும் விமானத்தில் ஏற்றி விடுங்கள் காரணம் அதில் நிறைய ப்ரோசன் பொருட்கள் உள்ளது” என்றேன். அந்த ஆபீஸர் உடனே நம் கையில் இருந்த பார்-கோடு டிக்கட்டை அனைத்தையும் வாங்கி பார்த்து விட்டு இன்டெர் காமில் செய்தியை சொல்லிவிட்டு நீங்கள் புறப்படுங்கள் அந்த லக்கேஜ் தம்ம்முக்கு உங்கள் கூட வந்துவிடும் என்றார்.
அவருக்கு நன்றியை சொல்லி விட்டு தம்மாம் செல்லும் விமான கேட்டை நோக்கி தலை தெறிக்க ஓடினேன் (இதே போன்று ஒரு சம்பவம் நம் நாட்டு ஏர்போர்ட்டில் நடந்து இருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்) நான் வந்து போர்டிங் போட்டு விட்டு அங்கிருந்த ஆபீஸ்சர் வசம் நமது லகேஜ் ஏறிவிட்டதா என்று பார்க்க சொன்னதும் அவர் உடனே பார்த்துவிட்டு லகேஜ் உங்களுடன்தான் வருகின்றது என்று சொன்னதும் தான் மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது காரணம் அந்த கொடுவா மீனும் நம் ஊர் ஆட்டுத்தலை மற்றும் இறைச்சியும்… ருசி கண்ட நாக்கு சும்மாவா விட்டுச்சு !?
Sஹமீது