Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2012 | ,

தொடர் - 7
நிலவின் ஒளியில் சலங்கை ஒலிகள்:

"அஸ்ஸலாமு அலைக்கும் யா ரசூலல்லாஹ்!"

தயங்கி நின்ற சஹாபியை பதில் முகமன் கூறிக்கொண்டே அவரை அன்புடன் உற்று நோக்கினார்கள் அண்ணலார்.

யாரையும் எதிர் கொள்ளும்போதும் எந்தச்  சந்திப்பின்போதும் அரைகுறையாக வரவேற்றார்கள் என்றோ   முகத்தை மட்டும் கழுத்தை வளைத்துத் திரும்பிப் பார்த்தார்கள் என்றோ   ஒரு நிகழ்ச்சியைக்கூட நம் தங்கத் தலைவரின் வரலாறு நெடுகிலும் எவரும் காணவே முடியாது! எவரை எதிர் கொண்டாலும்  அவர் மீது முழுமையான அக்கறையுடனேயே எதிர் கொள்வார்கள். 

இத்தகைய உன்னதமான தன்மையின் பிரதிபலிப்பால் ஒவ்வொரு தோழரும், அல்லாஹ்வின் தூதர் இவ்வுலகத்தில் வேறு எவரையும்விட தன் மீதே அதிக அக்கறையும் அன்பும் கொண்டிருப்பதாக உணர்ந்தனர் (*). அதனால்தான் தோழர்கள் அல்லாஹ்வின் தூதரைத் தங்கள் அழகிய முன்மாதிரியாய் ஆத்மசுத்தியுடன் ஆக்கிக் கொண்டனர். அந்தச்  சரித்திரத்தின் சான்றாக சுந்தர நபி (ஸல்) உதிர்த்த  சுத்தமான சொற்களெல்லாம் பசுமரத்தில் ஆணியாய் அவர்தம் மனதில் பதிந்து போயின!

இந்த மானுட வர்க்கம் முழுதும் நல்லவர்களாகவும் அந்த நல்லவர்கள் அனைவரும் சுந்தர நந்தவனமாம் சுவர்க்கத்தை அடைந்துவிட வேண்டும் என்பதும் அண்ணலின் அபிலாஷையாய் ஆகிப்போனது. அந்தப் பாலைவன மணற்குன்றுகளில் நின்று, இந்த அவனியை அவர் பார்த்த வெளியெங்கும் பாதைப் பரந்து விரிந்தப் பரப்பானது!

எனவேதான், இந்தியாவிலிருந்து வந்த ஏகத்துவத்தின் தென்றலையும் அண்ணல் எங்கள் ஆருயிர் நபியால் ஆயிரத்து நானூறு  ஆண்டுகளுக்கு முன்பே அனுபவித்துச் சொல்ல முடிந்தது. அழகின் சிகரம் அண்ணல் ரசூல் அவர்கள் அமைத்துக்கொடுத்த வாழ்வியல் நெறிகள் எல்லாம் அல்குர்ஆனின் அறுவடைப் பயிரானது!

அல்லாஹ்வும் அல்குர்ஆனிலே "நீர் ரஹீமாகவும் ரஹ்மத்துல் ஆலமீன் ஆகவும் இருக்கின்றீர்" எனச் சான்று பகர்கின்றான். அதன் விளைவாகவே, "எம் இன்னுயிரைவிடவும் உயர்வானவரே!" என்று தங்களின் உயிரையே அண்ணலை நோக்கி அனுதினமும் சமர்ப்பித்து நின்றனர் அருமைத் தோழர்கள். இவை வெறும் வெற்று வேட்டு வார்த்தைகளில்லை!

நிஜத்திலும் அது நிஜமானது! மகிமை நிறைந்த மாநபியின் நிழல் முள்ளில் பட்டாலும் அவர்கள் நெஞ்சினில் உதிரம் கொட்டுவதை உணர்ந்தே அதை உரைத்தனர்!

தங்களின் இஷ்ட அசைவுகளால் ஏற்படும் எந்தச்  சிறிய-பெரிய தவறுகளையும் குற்றங்களையும் நன்மைகளையும் உத்தமத் திருநபியிடம் உரைக்காமல் அவர்கள் ஒளித்துக் கொண்டதே இல்லை. கருணைக் கடலாம் காவலனின் தூதரின் முன், உள்ளதை உள்ளபடி உரைத்துத்  தங்கள் தலைவரின் தீர்ப்புக்காகக்  கண்ணசைக்காமல் காத்து நின்றனர்.

அவர்களில் ஒரு நபித்தோழர்தான் இதோ திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஸலாம் கூறி நிற்கின்றார்.

அண்ணலாரின் கனிவான பார்வையில் ஓரளவு ஆறுதல் பெற்றவராக, தயங்கியபடியே தொடங்கினார்.

"யா ரசூலல்லாஹ்! என் மனைவியைத் தாய்க்கு நிகராக ஒப்பிட்டு நான் ளிஹார் (**) செய்து விட்டேன். ஆனால், ஒப்பிட்டதற்குப் பரிகாரம் காணுமுன்பே மீண்டும் அவளுடன் தாம்பத்தியத்தில் நான் இணைந்துவிட்டேன். இதோ தங்களின் தீர்ப்புக்காக முற்றிலும் கட்டுப்படுவதற்குக் காத்து நிற்கின்றேன்!"

நபி (ஸல்) அவர்கள் பேசினால் அவர்களின் நண்பர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாது அசையாது அமைதியாக இருப்பார்கள்" (***) என்பதற்கிணங்க, அத்தோழர் ஆணியறைந்ததுபோல் நின்றார்.

கூர்ந்து நோக்கிய அண்ணலார் அவர்கள், "இதற்கு உன்னைத் தூண்டியது எது?" என்று வினவினர்.

சிறிது தயங்கியபின், அவர் பதில் உரைக்கத் தயார் ஆனார்:

"அல்லாஹ்வின் தூதரே! அந்த வான் நிலவின் ஒளிச்சுடரில் என் இனிய மனைவியின் கால்களை அலங்கரித்து இருக்கும் கால் காப்பின் அழகை அந்தச்   சலங்கைகளின் வெண்மையைக் கண்டேன்.அதில் நான் மயங்கினேன்..... அதன் பின்னர், என்னைக் கட்டுப்படுத்த என்னாலேயே  இயலாமல் போய்விட்டது! அந்தச் சூழ்நிலையில் அவளுடன் இல்லறச் சோலையில் நான் இணைந்து விட்டேன், யா ரசூலல்லாஹ்!"

இந்த வர்ணிப்பைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது! இறுக்கமான சூழ்நிலை, இனிய நபியின் அழகு சிரிப்பால் இளகிப்போய் விட்டது!

தீர்ப்பு: மனித வாழ்வினில் இனிமை சேர்த்த மகிமை நபி(ஸல்) அவர்கள் பரிகாரம் (கஃப்ஃபாரா) காணுமுன்பே இனிமேல் மனைவியுடன் தாம்பத்திய உறவுக்கு நெருங்க வேண்டாம் என்று அன்புடன் அவரை நோக்கி ஆதரவாய்ச்  சொல்லி அனுப்பினார்கள்.

அறிவிப்பு: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : இப்னு மாஜா எண் 2055

(*) ஷமாயில் திர்மிதீ எண் 8
(***) புகாரி 2842
(**) லிஹார். விளக்கம்:
بسم الله الرحمن الرحيم

مَّا جَعَلَ اللَّهُ لِرَجُلٍ مِّن قَلْبَيْنِ فِي جَوْفِهِ وَمَا جَعَلَ أَزْوَاجَكُمُ اللَّائِي تُظَاهِرُونَ مِنْهُنَّ أُمَّهَاتِكُمْ ...

எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப் போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விடமாட்டான் ... (அல்குர்ஆன்: 33:4).

ஏதேனும் ஒரு காரணத்துக்காகத் தன் மனைவியை ஒதுக்கிவைக்க நினைக்கும் ஒருவன் "உன் முதுகு என் தாயின் முதுகை ஒத்திருக்கிறது" என்று சொன்னால் போதும் என்பது அன்றைய அறியாமைக் காலத்தில் அரபுலகில் பரவலாக இருந்த நடைமுறையாகும். 'ளஹ்ரு' (முதுகு) எனும் பெயர்ச் சொல்லிலிருந்து 'ளிஹார்' எனும் வினை பிறந்ததென்பர்.

கவ்லா பின்த் ஃதஅலபா எனும் நபித்தோழியின் விவகாரத்தில் அவருடைய கணவர் ளிஹார் செய்தபோது அதைச் செல்லாததாக்கி, அஞ்ஞான ளிஹாரை முற்றிலும் மனித சமுதாயத்திலிருந்து ஒழித்துக் கட்டுவதற்காக, அதற்கான பிராயச்சித்தத்தோடு கீழ்க்காணும் வசனத்தை அல்லாஹ் அருளினான்:

قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ وَاللَّهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا إِنَّ اللَّهَ سَمِيعٌ بَصِيرٌ .
الَّذِينَ يُظَاهِرُونَ مِنكُم مِّن نِّسَائِهِم مَّا هُنَّ أُمَّهَاتِهِمْ إِنْ أُمَّهَاتُهُمْ إِلَّا اللَّائِي وَلَدْنَهُمْ وَإِنَّهُمْ لَيَقُولُونَ مُنكَرًا مِّنَ الْقَوْلِ وَزُورًا وَإِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورٌ .
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِن نِّسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِّن قَبْلِ أَن يَتَمَاسَّا ذَلِكُمْ تُوعَظُونَ بِهِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ .
فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِن قَبْلِ أَن يَتَمَاسَّا فَمَن لَّمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ذَلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتِلْكَ حُدُودُ اللَّهِ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ .

(நபியே!) தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான்- மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன். (58:1)

"உங்களுள் சிலர் தம்மனைவியரைத்"தாய்கள்" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள் (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்களாவர் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும் பொய்யானதையுமே கூறுகிறார்கள்- எனினும், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன். (58:2)

மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி(மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் இல்லறத்தில் ஈடுபடும் முன்னர் ஓர் அடிமையை(க் கணவன்) விடுதலை செய்ய வேண்டும் எனும் அறிவுரையைக் கொண்டு நீங்கள் அறிவுறுத்தப் படுகின்றீர்கள். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான். (58:3)

ஆனால் (அடிமையை விடுதலை செய்ய) வசதியற்றவர் (தன் மனைவியுடன்) இல்லறத்தில் ஈடுபடும் முன்னர் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; இதற்கு சக்தி பெறாதவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும்(உறுதியான) விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், மறுதலிப்போர்க்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (58:4).
தொடரும்...
இக்பால் M.ஸாலிஹ்

11 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

அண்ணல் நபிகளின் கன்னல் மொழிகளும் சஹாபா பெருமக்களின் நபிகளார் மேல் கொண்ட அன்பும் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

sabeer.abushahruk said...

வழக்கம்போல் கண்மணி நபி (ஸல்) அவர்களின் தனிதன்மைகள் பற்றியும் உயர் குணங்கள் பற்றியுமான வர்ணனைகளில் இலக்கிய ரசம் சொட்டுகிறது.

ரசூலின்மேல் சகாபாக்களின் அன்பு எத்தகையது என்கிற விளக்கங்களும் பிரமிக்க வைக்கின்றன.

மேலாக,

இந்த அத்தியாயத்திற்கான தாம்பத்திய கருவை இவ்வளவு நாசூக்காகவும் நாகரிகமாகவும் எந்தப் பெரும் எழுத்தாளனோ கவிஞனோகூட சொல்லிவிட முடியாது நண்பா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி இக்பால் அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஒரு புறம் இலக்கியச் சோலையில் தங்கி இளைப்பாறியது போலவும் , மறுபுறம் அறிவுத் தடாகத்தின் சுனை நீரை அள்ளிப் பருகியது போலவும் உணர்கிறேன்.

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் அவர்களுக்கு,

கவி சகோதரர் சொன்னது போன்று இவ்வள்வு நாசுக்காகவும் தமிழ் இலக்கிய தரம் உயர்ந்திருக்கும் உங்களின் எழுத்துக்களை வாசிப்பது பாக்கியமே. அல்ஹம்துலில்லாஹ்.

இன்று ஒரு நன்மையான காரியத்தை தெரிந்து கொண்டேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வசிகரிக்கும் வரிகள், மனதை வருடும் வர்ணனை புத்தம் புது தகவல்கள் !

எல்லாமே அருமை !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

Shameed said...

அழகிய வர்ணனைகளும் அழகிய எடுத்துக்காட்டுக்களும்

Unknown said...

உத்தம திருநபியின் அழகுமிக்க பண்புகளின் படைப்பு இந்த பதிப்பு. வழக்கம் போல படிப்பவர் மனதில் மிகை இல்லா தெளிவு
இதுதான் கண்மணி நபிகளார் பற்றிய தொடரின் ஆக்கங்கள் தொடரட்டும், இறைவனின் அருள் நிறையட்டும்.
ஜஸாக்கல்லாஹ் ஹைர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அழகு தகவல்கள்
ஜஸாக்கல்லாஹ் ஹைர்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சில சமயங்களில் இவரை பார்க்க சென்றால் கடல்பாசி காய்சிவைத்து நமக்கு தருவார்!எப்படி கடல்பாசி குளிர்ச்சியாகவும், பதமாகவும் இருக்குமோ அதுபோல் இவரின் எழுத்தும் இருப்பது சுகானுபவம். எல்லாப்புகழும் அல்லாஹுக்கே! ""இந்த வர்ணிப்பைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது! இறுக்கமான சூழ்நிலை, இனிய நபியின் அழகு சிரிப்பால் இளகிப்போய் விட்டது!""
இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் மெல்லிய புன்னகை என்னும் மல்லிகை மொட்டவிழ்ந்து உதிரும் போது இருகிய சூழ்னிலையும் இளகியதாகியது" என எழுத தோன்றியது.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

ளிஹர் பற்றிய விளக்கம் அருமை.

ளிஹர் செய்வதை வழக்கமாக கொண்டிருந்த அந்த அறியாமை காலத்தில், அஞ்ஞான ளிஹாரை முற்றிலும் மனித சமுதாயத்திலிருந்து ஒழித்துக் கட்டுவதற்காக, அதற்கான பிராயச்சித்தத்தோடு அல்லாஹ் இறக்கிய வசனங்கள் அனைத்திலும் நமக்கு படிப்பினை உள்ளது.

ஒரு தவறுக்கான பரிகாரத்திலும் அல்லாஹ் choise தந்துள்ளான். அல்லாஹ் எவ்வளவு இரக்கமுள்ளவன் என்பதை மிக அழகாக மேல் சொன்ன இறைவசனங்கள் நமக்கு உணர்த்துகிறது.

அழகிய வர்ணனைக்கு மிக்க நன்றி. ஜஸக்கல்லாஹ் ஹைரன்.

Iqbal M. Salih said...

அப்துல்லத்தீஃப்-தஸ்தகீர் சகோதரர்களுக்கும்

அபுஇப்றாஹீம்-தாஜுதீன் சகோதரர்களுக்கும்

டாக்டர் இ.அன்சாரி காக்கா, இம்ரான் கரீம், ஜஃபர் ஸாதிக், சாவண்ணா மற்றும் நண்பன் சபீருக்கும்

மரியாதைக்கும் பாசத்திற்கும் உரிய சகோதரி ஆமினா அவர்கட்கும்
இந்தக் கட்டுரையை விமர்சனம் செய்தமைக்காக நன்றியை உரித்தாக்குகின்றேன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு