இப்ராஹீம்(அலை) மூலம் விடுத்த அழைப்புக்கு
“லப்பைக்” திருச்சொல்லால் லட்சக் கணக்கானோர்
ஒப்பிலா னில்லத்தில் ஓதும் மறுமொழி
இப்புவி யெங்குமே ஈர்ப்பு.
சாந்தம் பொழியச் சமத்துவம் காணவே
காந்தமாய் ஈர்க்கும் கருவான பள்ளி
துருவான பாவம் துடைக்கும் பணிகள்
இரும்பு மனமே இலகு.
குழந்தையாம் இஸ்மாயில்(அலை) குத்திய பாதம்
உழன்றதால் பாலையில் உண்டான நீரை
அருந்துவோ ரெண்ணம் அடையும் பலன்கள்
மருந்தாம் பிணிக்கு மகிழ்ந்து.
மறுமையாம் தீர்ப்புநாள் மஹ்ஷரின் தோற்றம்
பொறுமையாய் நிற்கும் பொழுதில ரங்கேற்றம்
நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.
பிறக்கும் நிலையில் பிழைக ளறியா(து)
பிறக்கும் குழந்தைப் பிறத்தலைப் போல்
புடமிடும் தங்கமாய்ப் பூமியில் வாழ
திடமுடன் மாற்றும் திறன்,
அறுக்கத் துணிந்தார் அருமை மகனை
பொறுத்தே பணிந்தார் புதல்வர் மகிழ்வுடன்
ஐயம் களைந்த அடியாரின் அன்பினை
மெய்பிக்கச் செய்திடும் மாண்பு.
இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து.
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
14 Responses So Far:
மாஷா அல்லாஹ்....உங்களிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை கட்டவில்த்து,கட்டுப்பாட்டுடனும்,கண்ணியமாகவும் தியாகத்திருநாளின் மாண்புகளை மேன்மையாக சொல்லியிருக்கின்றீர்கள்...எங்கள் அன்புக்கவியன்பன் அவர்களின் அசாத்திய திறமை ஒவ்வொரு வரிகளிலும் இக்கவிதையில் மின்னுகின்றது...வாழ்த்துக்கள்
///இறைச்சி இரத்த மெதுவுமே நம்மை
இறைவனும் வேண்டு மியல்பில் கிடையாது
அன்பு நிலைக்க அறமாய் வறியோர்கள்
இன்பம் பெறுவதற் கீந்து// மிகச்சரியே
தம்பி யாசிர் சொல்லியிருப்பதையே நானும் வழிமொழிகின்றேன் கவியன்பர் அவர்களே!
குல்லு ஆம்ம் வ இன் த்தும் பி க்ஹைர்!
//நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து.//
அரஃபாத் தினங்களை நினைவு படுத்திய வரிகள். வாழ்த்துகள் கவியன்பன்.
கவிதையை ரசிக்கவும், நேசிக்கவும், சுவாசிக்கவும் மட்டுமே எனக்குத் தெரியும் !
இது சரியா / தவறா ?
ஐந்து கடமைகளில் இறுதிகடமையான ஹஜ் பற்றி நான்கு நான்கு வரிகளாக வடித்த கவிதை அருமை
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
//// நீண்ட இறைஞ்சுதல் நெஞ்சை உருக்கிட
மீண்டு வருவோம் மிளிர்ந்து. ////
அரஃபாத் தினத்தை நினைவு படுத்திய அழகிய வரிகள்!
சகோதரர் கவியன்பன் அவர்களுக்கு: வாழ்த்துக்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்ஷா அல்லாஹ்,
குறுவிடுப்பில் தாயகம் செல்ல இருப்பதால், துரிதமாக ஏற்புரையை வழங்கிவிட எண்ணியுள்ளேன்:
அன்புத்தம்பி, கல்வியாளர் யாசிர்:
நீங்கள் முதல்மதிப்பெண் பெறுவதற்கும், அடியேன் யாப்பிலக்கணம் கற்றுக் கொள்வதற்கும் தாய்மடியாக விளங்கிய கா.மு.மே.பள்ளியையும் , ஆசான்களையும் மறக்க மாட்டோம். நம் ஒவ்வொரு சொல்லின் ”அசை”வுகளும் அங்குக் கொடுக்கப்பட்ட விசைகள் தான் அடிப்படை என்றறிந்து நம் ஆசான்களை மதிப்போமாக!
அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்:
உங்கட்கும் அவ்வண்ணமே ஆகுக! உங்களின் பள்ளிப்பருவத்துத் தோழர்கட்கு அடியேன் கணக்குப் பதிவியல் பாடம் கற்பித்த வேளையில் உங்களையும் என் மாணவனாகப் பெற்றிடத் தவறியதற்குப் பகரமாக அதிரை நிருபர் எனும் அதிரையின் பல்கலைக்கழக்த்தின் வழியாகச் சந்திக்க வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
கவிவேந்தர் சபீர்:,
ஆம். அதுவே உண்மை. ஒவ்வொரு வெண்பாவின் நாலடிகட்குள்ளும் ஹஜ்ஜின் ஒவ்வொரு விடயமாக நினைவுபடுத்தும் வண்ணம் அமைப்பதே இப்பாடலில் என் எண்ணம். உங்களின் கணிப்பும் எப்பொழுதும் போல் மிகச் சரியே! இன்ஷா அல்லாஹ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கட்கானக் கவிதைப் போட்டி அறிவிக்கலாம் என்று எண்ணியுள்ளேன்; அவ்வாறு அறிவிக்கப்பட்டு என்னிடம் வந்து சேரும் எல்லாக் கவிதைகளையும் தேர்ந்தெடுக்கும் நடுவராக உங்களைத் தான் நான் தேர்ந்தெடுப்பேன், இன்ஷா அல்லாஹ்; காரணம், கவிதைகளை மேலோட்டமாகப் படிக்காமல், ஆழ்ந்துப் படித்து, முத்தாய்ப்பான கருவினைச் சரியாகக் கண்டுபிடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருப்பதை உங்கள் பின்னூட்டங்கள் அறிவிக்கின்றன!
அன்பு நெறியாளர் அபூ இப்றாஹிம்:
எனது இச்செய்யுள் உங்கள் தளத்தில் பதியப்படும் ஆக்கங்களின் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தாலும், ஹஜ்ஜின் தருணத்தில் பதிந்தமைக்கு மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன். நீங்களும் ஒரு கவியன்பர்= கவிநேசர் என்பதை யாம் அறிவோம். “மூன்றாம் உலகப் போரை ”முழுவதுமாக நீங்கள் வாசித்ததனால், கவிப்பேரரசின் கவிதையின்பால் நீங்கள் கொண்டுள்ள இரசனையும்; உங்கள் தளத்தின் ஆஸ்தானக் கவிஞர் - கவிவேந்தர் சபீரின் கவிதைகளை முழுவதுமாக உளவாங்கியதால் “கவிகாக்கா” என்று ஒவ்வொரு பேச்சிலும், எழுத்திலும் அன்பொழுக அழைப்பதிலும் நீங்களும் கவியன்பர் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை!
அன்புச் சகோதரர் , சுட்டும் விழிச் சுடர் ஹமீத்:
ஐந்தாம் கடமையை நினைவுபடுத்தும் வண்ணம், ஐந்து அடிகளிலும் எழுதியிருக்கலாம்
(பஃறொடை வெண்பாவாக) என்று இப்பொழுது என் எண்ணம் , உங்களின் அருமையான பின்னூட்டம் கண்டதன் பின்னர்! ஜஸாக்கல்லாஹ் கைரன்.
மார்க்க விரிவுரையாளர், அன்புச் சகோதரர் அலாவுதீன்:
இச்செய்யுளை யாத்திட்ட வேளையில், என் உள்மனத்தில் ஓர் அச்சம்:”அன்பர் அலாவுதீன் போன்ற- மார்க்கத்தைச் சரியாகப் புரிந்து அமல் செய்து வருபவர்கள், இக்கருத்துக்களில் பிழைகள் காண்பார்களேயானால், நான் திருத்திக் கொள்கின்றேன்” என்று எண்ணியே பதிவுக்கு அனுப்பினேன். அல்ஹம்துலில்லாஹ் உங்களின் வாழ்த்து என்னை மேலும் ஊக்கப்படுத்தும்.
மாதத்தைப் போல மகத்துவம் கனிந்த கவியாக்கம்!
அருமை கலாம் காக்காவின் ஹஜ் கவிதையும் உவமையும் உள்ளம் தொடும் மேன்மை.மாஷா அல்லாஹ்
Azhahaana kavithai ithukku.
அன்புள்ள கவியன்பன் அவர்களுக்கு,
தங்களின் ஏற்புரை வழங்கப்பட்ட பிறகு கருத்திட வந்துள்ள காலதாமதத்துக்கு பொறுத்திட வேண்டுகிறேன்.
நேற்று அ. நி. யில் கவிதை தினம் என நினைக்கிறேன். காலையில் கவியரசர் கவிதையும் மாலையில் கவியன்பன் கவிதையும் படிக்கத் தந்தார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாள் பிறை கண்டு, பெருநாள் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தில், அதிரையின் மக்கள் பலர் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்ற- பயணத்துக்காக தலைநகரில் கூடியுள்ள வேளையில் பொருத்தமாக உங்களின் கவிதை வந்திருப்பது பாராட்டுதல்களுக்குரியது.
வார்த்தைகள் எங்கேர்ந்த்துதான் எடுத்தீங்களோ காக்கா, அருமை
அனைவருக்கும் அட்வான்ஸ் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்,
டாக்டர் இப்ராஹிம் காக்கா:
ஏற்புரையை விரைவாக அளித்தற்கான காரணம்: இன்ஷா அல்லாஹ் குறுவிடுப்பில் தாயகம் செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டேன்;அதனால், உடனுக்குடன் மறுமொழி இடல் எனக்குக் கடன் ஆகிவிட்டது! ஏற்புரையை இறுதியில் வைப்பதே நலம்; அதனால் பின்னால் பின்னூட்டமிடுபவர்களுக்கும் சேர்த்து ஒரே ஏற்புரையாக அமைக்கலாம் என்று ஏற்கனவே, கவிவேந்தர்ச் சொல்லியிருந்தார்கள்.
சரியான தருணத்தில் வெளியிட்டமைக்கு நெறியாளர் நெயானாதம்பி (அபு
இப்ராஹிம்) அவர்கட்குப் பாராட்டைச் சமர்ப்பிப்போமாக!
இலண்டன் வாழ் இளங்கவிஞர் மு.செ.மு.ஜெஹபர் சாதிக்:
அல்லாஹ் சிறப்பிக்கும் மாதங்களில் துல்ஹஜ்ஜும் இருப்பது அல்லாஹ்வின் அருட்கொடை; என்னிடம் யாப்புச் செய்யுள் யாத்திடும் திறனை வைத்ததும் அல்லாஹ்வின் அருட்கொடை. அதனாற்றான், மகத்துவம் என்று உணர்ந்துகொண்டு உளப்பூர்வமாய் வாழ்த்தும் உங்கள் உள்ளம் பார்த்து என் நன்றியை உரித்தாக்குகிறேன்: ஜஸாக்கல்லாஹ் கைரன்.
அன்புத்தம்பி அர.அல.
ஊரில் சந்திக்கலாம் என்று இந்தக் “கலாம்” நினைத்தேன்;அதற்குள், நீங்கள் அமெரிக்காவிற்குப் பயணமாகி விட்டீர்கள்; உங்களின் வழிகாட்டுதலின் வரம்பில் நின்று யான் யாத்த இச்செய்யுள் உங்களை ஈர்த்தன் மூலம் என்னையும் உங்களையும் அன்பால் இணைத்து வைத்த அல்லாஹ்வுக்கு நன்றி; அல்ஹம்துலில்லாஹ்.
ZAEISA சொன்னது…
//Azhahaana kavithai ithukku.//
ஜஸாக்கல்லாஹ் கைரன்
அன்புச் சகோதரர் அப்துல் மாலிக்:
வாழ்கைக்குள் வலம் வரும் வார்த்தைகளைக் கோத்ததனால், செய்யுள் வடிவத்தில் யாத்ததனால் “ஓசை”க்குள் அடங்கும் “அசை”க்குள் அலகிட்டுப் பார்த்தனால் வார்த்தைகள் எங்கிருந்தும் ஊற்றெடுக்கலாம்!
Post a Comment