Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 8 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 14, 2012 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அத்தியாயம் 7ல் இஸ்லாமியத் திருமணத்தைப்பற்றி சிறிதளவே பார்த்துள்ளோம். இந்த அத்தியாயத்தில் தொடர்ந்து பார்ப்போம். 


திருமணச் செலவு: 
எளிமையாக நடைபெற வேண்டிய திருமணம் பல ஆண்டு கால திட்டமாக மாறிப்போனது அவலமல்லவா? பெண்குழந்தை பிறந்தது முதல் அல்லது திருமண வயது நெருங்கும் நேரத்தில் ''திருமணச் செலவுக்காகத் திட்டமிட்டு; நகைகள், வீடு அல்லது மணைக்கு பணம் சேர்க்க வேண்டும் என்ற கவலையிலேயே, பெண்ணை பெற்ற தாய், தந்தையின்'' காலங்கள் ஓடிக் கொண்டு இருக்கிறது. 

இஸ்லாம் எளிமையாக வழிகாட்டியிருக்க,  இப்படி 'பெண் வீட்டாரை' பல ஆண்டுகள் நெருக்கடியிலும், கவலையிலும் தள்ளிவிட்ட குற்றத்திற்கு மாப்பிள்ளையும் இவரின் பெற்றோரும்தானே காரணம்.  (இவர்கள் வல்ல அல்லாஹ்வின் பயம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்).

'ஆண் பிள்ளைகளைப்' பெற்றவர்கள்தான் 'மகனைப்' படிக்க வைத்து வேலையின் மூலமோ, தொழில் மூலமாகவோ அவன் சம்பாரிக்கும் பணத்தை அவனுக்கான 'திருமணம்' மற்றும் 'வாழ்க்கைச்' செலவுகளுக்காகச் சேர்த்துவைக்க வேண்டும்.

மேலும் தங்கள் மகனிடம் உன்னுடைய திருமணச் செலவுக்குரிய பணத்தைச் சேர்த்தப் பிறகுதான் 'உனக்குத் திருமணம் செய்து வைப்போம்' என்று ஆர்வமூட்ட வேண்டும். (பெண் வீட்டில் வாங்கி உன்னுடைய திருமணத்தை நடத்தி விடுவோம் என்ற நிய்யத் வைக்கக்கூடாது).

மணமகனின் வருமானம்:
மணமகனைப் பெற்றவர்கள் பெண் வீட்டில் எவ்வளவு கிடைக்கும் (சுருட்டலாம்) என்றுப் பார்ப்பது போல், பெண் வீட்டார்கள் எதிர்ப்பார்ப்பது 'பையனுக்கு சொந்த வீடு இருக்கிறதா?' (இது நம்மூர் பழக்கம் இல்லைங்க!,  வெளியூர் பழக்கம்) 'சம்பளம் அதிகமாக  வாங்குகிறானா?' என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவனா? என்று பார்ப்பதில்லை.

திருமணத்தால் தன்னிறைவு பெறுவது:

மார்க்கத்தைப் பேணி நடக்கும்; 'நல்ல மணமகன்' கிடைக்கும் பொழுது ''பையனுக்கு வீடு இல்லை குறைந்த வருமானமாக இருக்கிறது அதனால் நம் பெண்ணை அவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது சரி வராது'' என்று தவிர்க்கும் நிலைமை இருந்து வருகிறது. 

இப்படி நினைப்பவர்களுக்காக  வல்ல அல்லாஹ்வின் விளக்கம்: 'வாழ்க்கையை நடத்த வசதி இல்லாதவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள்'. 'அவர்களை தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவேன்' என்று  அல்லாஹ் கூறுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.(அல்குர்ஆன் : 24:32)

திருமணம் செய்ய வசதியற்றவர்களை அல்லாஹ் தனது அருளால் தன்னிறைவு பெற்றோராக ஆக்கும் வரை அவர்கள் கற்பொழுக்கம் பேணட்டும். (அல்குர்ஆன் : 24:33)

மணமகன் - மணமகள் தகுதிகள்:

'நம்பிக்கை கொண்டவர்களுக்கிடையில் திருமணம் நடைபெற வேண்டும்' என்று வல்ல அல்லாஹ் வலியுறுத்துகிறான்:

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். (அல்குர்ஆன் :2: 221) 

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிற மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் : 24:3)

அதிக குழந்தைகளைப் பெறும் பாரம்பரியத்தில் மணமுடிப்பது:

'அதிக குழந்தைகள் பெற்றெடுக்கும் பாரம்பரியத்தில் பெண் எடுப்பது' பற்றி வரும் நபிமொழி:

அன்பு செலுத்தும்; அதிகக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் (பாரம்பரிய) பெண்களை மணம் முடித்துக் கொள்ளுங்கள். உலக மக்களுக்கு மத்தியில் (நீங்கள் அதிகமாக இருப்பது கண்டு) நான் பெருமிதம் அடைவேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), அவர்கள் (அபூதாவூத், நஸயீ)

மார்க்கத்தைக் கடைபிடித்து வருபவருக்கு பெண் கொடுப்பது:

'மார்க்கத்தைப் பேணி நடப்பவர்' பெண் கேட்டு வந்தால், 'பெண்ணை திருமணம்' செய்து வைப்பது பற்றிய நபிமொழி:

'மார்க்கத்திலும், குணத்திலும் (சிறந்த) நீங்கள் விரும்பும் மனிதர் உங்களிடம் (மணப்பெண் கேட்டு) வந்தால் அவருக்கு திருமணம் செய்து வையுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், பூமியில் கடுமையான குழப்பமும், ஒழுக்கமின்மையும், அமைதியின்மையும் ஏற்படும்.'  என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்: (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (திர்மிதி, ஹாகிம், முஸ்னத் அஹ்மத்.)

(இப்படிக் கேட்டு வருபவருக்கு பெண் கொடுப்போமா? என்பது கேள்விக்குறியே!).

மணப்பெண்ணின் சம்மதத்தைப் பெறுவதுப் பற்றிய குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழி:

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் : 4:19)

'(திருமண விஷயத்தில்) கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரவேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான், 'கன்னிப் பெண் (வெளிப்படையாகத் தன் சம்மதத்தைத் தெரிவிக்க) வெட்கப்படுவாளே?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'அவளுடைய மெளனமே அவளுடைய அனுமதி' என்றார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி : 6971 )

நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். (அறிவிப்பவர்: கன்சா (ரலி) அவர்கள் (அபூதாவூத், நஸயீ)

பெண்ணை நேரில் பார்த்து சம்மதம் தெரிவிப்பது:
இது என்ன புதுப் பழக்கம்? பெண்ணை நேரில் பார்ப்பதா? என்ற கேள்வி எழலாம். இது பற்றிய நபிமொழியைப் பார்ப்போம்.

நபித்தோழர் முகீரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நான் ஒரு பெண்ணை மணமுடித்துக்கொள்ள பேசியிருந்தேன். இதனை அறிந்த நபி (ஸல்) அவர்கள், நீர் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்ளும், ஏனெனில் அது உங்களிருவருக்கிடையில் உவப்பையும், நட்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என அறிவுரைப்பகன்றார்கள்.' (அறிவிப்பவர்: முகீரா (ரலி) அவர்கள் (நஸயீ, திர்மிதி, )

ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தான் ஒரு மதீனத்து (அன்சார்) பெண்ணை மணமுடிக்க நிச்சயித்திருப்பதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் நீர் அப்பெண்ணை நேரில் கண்டீரா? எனக் கேட்டார்கள். அதற்கு நபித் தோழர் இல்லை என்றார். நபி (ஸல்) அவர்கள் நீர் சென்று பார்த்துக் கொள்வீராக! (பின் விவகாரமாகக் கூடாது) எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்)

தனிமையில் பார்க்க அனுமதிக்க வேண்டியதில்லை. இரு குடும்பத்தார் இருக்கும்பொழுது பார்த்துக் கொள்ள அனுமதிக்கலாம். போட்டோவை கொடுப்பதை விட நேரில் பார்ப்பது சிறந்ததாகவே இருக்கும். நிறைய இடங்களில் திருமணம் ஆனவுடன் பிடிக்கவில்லை என்று விவாகரத்து நடக்கிறது. 'ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன் யாரையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு தெருவில் நடப்பதில்லை', அதனால் மார்க்கம் அனுமதித்த வழியில் மணமக்களை நேராக பார்க்க வைத்து சம்மதம் பெறுவது பல வகையில் நன்மையளிக்கும். 

மஹர் கொடுப்பது:
மஹர் கொடுப்பது, வாங்குவது பற்றி சென்ற அத்தியாயங்களில் பார்த்து விட்டோம். அதனால், ஸஹாபாக்கள் மஹர் கொடுத்த விபரங்கள் நமது சிந்தனைக்காக:

நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி). அவர்கள் (புகாரி, முஸ்லிம் )

ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்). (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் 'உனக்கு ஏதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்' என்றார்கள். (அறிவிப்பவர்: ஸஹல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம், திர்மிதி, நஸயீ)

இஸ்லாமியத் திருமணத்தைப் பற்றிய விபரங்கள் இன்னும் இருக்கிறது. அடுத்த அத்தியாயத்தில் தொடர்ந்து பர்ப்போம் இன்ஷாஅல்லாஹ்!.

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:
'மணமக்கள், திருமணத்திற்கு முன்' குடும்பத்தாருக்கு நடுவில் நேராக பார்த்து 'சம்மதம்' தெரிவிப்பது பற்றிய தங்களின் கருத்து என்ன?
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
S. அலாவுதீன்

20 Responses So Far:

sabeer.abushahruk said...

திருமணம் சம்பந்தமான சினமூட்டும் சீர் கேடுகளை இறை வசனங்கள் மற்றும் நபிமொழிகளின்மூலம் சாந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறாய்.

நல்வழியை பின்பற்றச் சொல்லி நித்தம் நிர்பந்திக்கும் இத் தொடர் இடறின்றித் தொடர என் து ஆ.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, அலாவுதீன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

திருமணம் பற்றிய உயர்வான தகவல்கள்.

கருத்து: திருமணத்திற்கு முன் நேரில் பார்த்தோ, பார்க்காமலோ மொத்தத்தில் இருவரின் சம்மதமே முக்கியம்.

sabeer.abushahruk said...

//'மணமக்கள், திருமணத்திற்கு முன்' குடும்பத்தாருக்கு நடுவில் நேராக பார்த்து 'சம்மதம்' தெரிவிப்பது பற்றிய தங்களின் கருத்து என்ன?//

சபீர்/அப்போ: பார்க்கனும் பார்க்கனும் அவசியம் பார்க்கனும். அலாவுதீனாக்கா வாழ்க!

சபீர்/இப்போ: அதெல்லாம் பார்க்கக்கூடாது. பெருசுங்க பார்த்து செஞ்சா நல்லாத்தான் இருக்கும். ஏம்ப்பா அலாவுதீன், உனக்கு வேற வேலை இல்லையா?

Ebrahim Ansari said...

//மணமக்கள், திருமணத்திற்கு முன்' குடும்பத்தாருக்கு நடுவில் நேராக பார்த்து 'சம்மதம்' தெரிவிப்பது பற்றிய தங்களின் கருத்து என்ன?//

கேள்வி கேட்பது ஜனாப். அலாவுதீன்

பதில் சொல்வதும் அவரே.

//தனிமையில் பார்க்க அனுமதிக்க வேண்டியதில்லை. இரு குடும்பத்தார் இருக்கும்பொழுது பார்த்துக் கொள்ள அனுமதிக்கலாம். போட்டோவை கொடுப்பதை விட நேரில் பார்ப்பது சிறந்ததாகவே இருக்கும். நிறைய இடங்களில் திருமணம் ஆனவுடன் பிடிக்கவில்லை என்று விவாகரத்து நடக்கிறது. 'ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன் யாரையும் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டு தெருவில் நடப்பதில்லை', அதனால் மார்க்கம் அனுமதித்த வழியில் மணமக்களை நேராக பார்க்க வைத்து சம்மதம் பெறுவது பல வகையில் நன்மையளிக்கும். //

நான் வழிமொழிகிறேன்.

Shameed said...

ஆணோ பெண்ணோ போட்டோவை பார்த்து திருமணம் செய்வது நல்லதல்ல
காரணம் போட்டோவில் நிறைய தகிடு தித்தம் வேலை செய்து பிராடு செய்ய நிறைய வாய்ப்புக்கள் இருக்கு

இரண்டு குடும்பத்தார்களின் முன்னிலையில் மணப்பெண்ணை பார்த்து திருமணம் செய்வது நல்லது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சகோதரியே தந்த சகோதரருக்கு (அலாவுதீன் காக்காவுக்கு) ஜஸாகல்லாஹ் ஹைர் !

sabeer.abushahruk said...

ஹமீது,

பார்க்க அனுமதிக்கிறதுன்னு முடிவாயிட்டா அப்புறம் பெற்றோர்கள் முன்னிலையாயிருந்தா என்னா... உம்மம்மாவோட முதுகுக்குப் பின்னாலிருந்தா என்னா...ஜன்னலாயிருந்தா என்னா... தலவாசல் நிலைப்படியாயிருந்தா என்னான்னு மேட்டர் கைமிஞ்சிப் போயிடுமே?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

72 மணி நேர அதிரை விசிட்டில், காது குளிர கேட்டது பெண்டிர் மத்தியில் பிரபலமைடைந்திருக்கும் தொடர்களில் இதுவும் ஒன்று என்று பெண்டிரே வாய்மொழியாக பாராட்டியது !

அல்ஹம்துலில்லாஹ் !


வாசிக்கும் பழக்கம் எல்லோர் மத்தியிலும் ஆட்கொண்டிருப்பதை காண முடிகிறது !

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

// கைமிஞ்சிப் போயிடுமே?//

அந்த மாதிரி கையை க(வெ)ட்டிப்போடுடனும்

Shameed said...


m.nainathambi.அபுஇபுறாஹிம் சொன்னது…

//72 மணி நேர அதிரை விசிட்டில்//

அதில் எத்தனை மணிநேரம் பவர் கட் ஆனது

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஒரு நினை ஊட்டல்

நாளை இரவு பிறை ஒன்று குர்பானி கொடுப்பவர்கள் தங்கள் நகம் முடிகளை நாளைக்குள் கலைந்தது விட்டு குர்பானி கொடுப்பதற்கான நிய்யத்தை வைக்க வேண்டும்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கருத்திட்ட சகோதரர்கள்: sabeer.abushahruk, M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு), Ebrahim Ansari, Shameed, m.nainathambi.
அனைவருக்கும் நன்றி!

மணமக்கள் நேரில் பார்த்துக் கொள்வதுப் பற்றி மேலதிக விளக்கத்தை அடுத்த அத்தியாயத்தில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.

KALAM SHAICK ABDUL KADER said...

கட்டாயத் திருமணம். “குண்டா மாற்று” (பண்டமாற்று) கூடுமா?

y.m.ansari said...
This comment has been removed by the author.
y.m.ansari said...
This comment has been removed by the author.
y.m.ansari said...

வீடு பெண்ணிடம் சீதனமாக பெற்று வாழும் எவரும் இஸ்லாமிய திருமண சீர்திருத்தம் பற்றி எழுதவோ பேசவோ தகுதி அற்றவர்கள்

http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

Yasir said...

சகோதரியே பலருக்கு சந்தோஷத்தையும் ,சிலருக்கு சங்கடத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம்..இறைபொருத்தத்தை நாடி நன்மை செய்வோருக்கும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி...வாழ்த்துக்கள் காக்கா

y.m.ansari said...

இந்த வீடியோ பயானை அவசியம் பாருங்கள்

http://srilankamoors.com/Media-centre/Veedum-sheetham-ahumaa.html

Yasir said...

//y.m.ansari சொன்னது…/// பார்த்தாச்சு நண்பரே நல்ல விசயம் இப்பவாது உங்க clip-board-யை கிளியர் பண்ணிடுங்க ..எத்தன தடைவதான் காப்பி/பேஸ்ட பண்றது :)

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்புச் சகோதரர் S.அலாவுதீன் அவர்களுக்கு,

இந்தப் பதிவில் சிலருக்கு அல்ல பெரும்பாலோருக்கு எரிச்சலூட்டும் சீர்கேடுகளை அழகாக கோடிட்டு காட்டி இருக்கிறீர்கள்.

ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு