அன்றையக் கதிரவன்
அனலாய்க் கொதித்தது;
அரஃபாத் பெருவெளியில்
அக்கினி உதிர்த்தது!
பதிவுசெய்த ஏற்பாட்டில்
பயணம் வந்தவர்கள்
கூம்பியக் கூரைகொண்ட
கூடாரங்களிலோ
குளிரூட்டப்பட்டக் குடில்களிலோ
குழுமி யிருக்க
நாங்களோ
பாலங்களின் மேலோ
பாலக்கண்ணின் கீழோ
ஈருடையில்
மேலுடை விரித்து,
தாழ்வாரமிட்டு,
சூடான நிழலுக்குள்
சுருண்டிருந்தோம்
செப்பனிடப்படாப் பாதைகள்
செருப்பணிந்தப் பாதங்களை
குதிகாலில் குத்தின
கூழாங்கற்களின் கூர்முனைகள்
போக வர எங்களுக்குப்
போக்கு வரத்து வசதியில்லை
போனால் வருவதற்கு,
போதுமானப் பழக்கமில்லை
எல்லாக் கூடாரங்களிலிருந்தும்
ஏகனை இரைஞ்சும் ஒலி
எல்லா இனத்தவரும் தொழுகையில்;
எல்லா மொழிகளும் அழுகையில்!
உச்சியில் அடித்த வெயில்
உள்ளங்கால்களில் உருகி யோட
வரிசை வரிசையாக
வணங்கி நின்ற பொழுதுகள்
அந்த வயதினில்
அவனிடம் கேட்க
அதிகமாக வொன்றும்
அறிவினில் உதிக்கவில்லை
காசுபணம் கேட்டோம்
கவலையில்லா கணங்கள் கேட்டோம்
கற்பொழுக்கப் பெண்ணுக்கு
கணவனாக அருள் கேட்டோம்
வாப்பா உம்மாவுக்கு
வயிற்றுக்குச் சோறு கேட்டோம்
வாழும் காலமெல்லாம்
வலியில்லா வாழ்க்கைக் கேட்டோம்
சொந்தபந்தம் யாவருக்கும்
சொகுசான வாழ்வு கேட்டோம்
சொற்ப நேரம்கூட
சோகமிலா சீவிதம் கேட்டோம்
பாவங்கள் செய்வதற்கு
படித்தவர்க ளல்லர்யாம்
அறியாது செய்திருப்பின்
அதற்காக மன்னிக்கக் கேட்டோம்
அரஃபாத்தின் அனலில்
காது கன்னம் மூக்கெல்லாம்
கண்ணாடி சுட்டெரித்துக்
கண்டிப்போனத் தழும்பிருக்க,
நெஞ்சில் நிறைந்திருக்கு
நஞ் சகன்றத் தூய்மை
நெற்றியில் இன்னுமிருக்கு
நிலம் சுட்ட அடையாளம்!
- சபீர்
நன்றி : சத்தியமார்க்கம்.com
5 Responses So Far:
அரபா தினம் ஹஜ் செய்தவர்களால் மறக்க முடியாத தினம்
//எல்லா இனத்தவரும் தொழுகையில்;
எல்லா மொழிகளும் அழுகையில்!// - இங்கேதான் மனிதக்கடல் சமத்துவமும் சகோதரத்துவமும் நாடு, இன, மொழி ஆகிய எல்லைகளைக் கடந்து அழுகை என்னும் மொழி பேசி ஆர்ப்பரிக்கும் விந்தையை இரு வரிகளில் சொல்லும் எம் கவிஞ்ர் யாம் பெற்ற பெரும் பேறு. மாஷா அல்லாஹ்.
அதுமட்டுமா?
//நெற்றியில் இன்னுமிருக்கு
நிலம் சுட்ட அடையாளம்!// இதைத்தான் சுவர்க்கத்தின் திறவுகோல் என்று சொல்கிறார்கள். நாங்கள் துஆச்செய்கிறோம்.
அரஃபாத் மீள்பார்வை
நிகள் காலத்தை இன்னும் அழுத்தமாக சிந்திக்க வைத்தது
இதில் எனக்கு பிடித்த யதார்த்தமான வரிகள்
அந்த வயதினில்
அவனிடம் கேட்க
அதிகமாக வொன்றும்
அறிவினில் உதிக்கவில்லை
அருமை, வாழ்த்துக்கள்.
அமல்களில் சொல்லப்பட்ட அனைத்தும் மனிதனுக்கு கஷ்டமான விசயங்கள்...இருப்பினும் மனம் எப்போதும் இந்த ஹஜ் கடமையை எப்போது செய்யப்போகிறோம் என்றுதான் ஏங்குகிறது.
உடலில் கஷ்டம் அனுபவித்தாலும் ஜீவனில் சந்தோசம் நிரந்தரமாய் கிடைக்கும் இந்த ஹஜ் எல்லோருக்கும் கிடைக்க இறைவன் ஆசீர்வதிக்கட்டும்.
எதை பாராட்டுவது என தெரியவில்லை,அனைத்தும் ஆயிரம் அர்த்தங்களை கொண்டவைகள்.நன்றி சபீர் காக்கா
Post a Comment