Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சகோதரியே! - தொடர் - 7 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 02, 2012 | , , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அத்தியாயம் 5 மற்றும் 6ல் வரதட்சணை, மஹரைப்  பற்றி விரிவாகப் பார்த்தோம். இனி, பிற மத திருமணம், திருமணம் தேவையில்லை என்று கூறும் துறவிகளின் நிலைமை, நவீன காலத்திருமணத்தின் அவலம், மேலும் நமது சமுதாயத்தில் திருமணம் என்ற பெயரில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் அநாச்சாரங்களையும், 'இஸ்லாம்' நமக்கு காட்டித் தந்த வழியில் திருமணங்கள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதையும் பார்ப்போம். 

பிற மதங்களின் திருமணம்:
பிற மதங்களில் திருமணம் செய்து கொள்ளலாம், செய்யாமலும் இருக்கலாம், துறவியாகவும் இருக்கலாம். இவர்களின் திருமணங்களில் எளிமையையும் சில இடங்களில் காண முடிகிறது. நமது சமுதாயத்தை விட எல்லாவகையிலும் திருமணச் செலவும் குறைவுதான். (தற்பொழுது திருமணம் செய்யாமலேயே ஆணும் - பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்ற நிலையும் இருக்கிறது - இதற்கு விரைவில் சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைக்கலாம்).
பிற மத துறவிகளின் நிலைமை:
பிற மதங்களில் துறவறத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மனிதப் படைப்பின் உண்மையை அறிந்தும் 'அறியாதவர்கள் போல்'  துறவற போர்வையைப் போர்த்திக்கொண்ட அனைவரும் கம்பி எண்ணியதை நாம் அறிவோம். மேலும் இந்த 'துறவற பரிசுத்தங்கள்' பொதுமக்கள் மத்தியில், மானம் கப்பலேறிய பிறகும் 'மானமிழந்து' தைரியமாக செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் (இவர்கள்தான் உலகப் பற்றை துறந்தவர்களாம்). 

துறவறத்தைப்பற்றிக் குர்ஆன்:
...தாமாகவே துறவறத்தை உருவாக்கிக் கொண்டனர். அதைக் கூட பேண வேண்டிய விதத்தில் பேண வில்லை. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுவதைத் தவிர (வேறெதையும்) அவர்கள் மீது நாம் விதியாக்கவில்லை.(அல்குர்ஆன்: 57:27)

நவீன காலத் திருமணம்:
ராக்கெட்டை கண்டுபிடித்தோம், அணுவை கண்டுபிடித்தோம், என்று பெருமைப்பட்டுக்கொண்டு  'அறிவியில் பேசும்' 'அறிவு(கெட்ட)ஜீவிகள்' கண்டுபிடித்திருக்கும் புதிய கண்டுபிடிப்பு: 'ஆணுக்கும் - ஆணுக்கும் திருமணம்' 'பெண்ணுக்கும் - பெண்ணுக்கும் திருமணம்' இதுதான் நவீன நாகரீகமாம். இந்த கேடு கெட்ட திருமணத்திற்கு உலக முழுவதும் வரவேற்பு. 

தற்பொழுது ஒரு நாட்டு அரசாங்கத்திற்கே பைத்தியம் பிடித்துவிட்டது. பைத்தியம் பிடித்த அந்த நாடு 'பிரான்ஸ்'. இவர்களின் 'தலையில் மூளை என்ற ஒன்று இருக்கிறதா?' என்று சாதாரண 'பைத்தியம்' கூட கேட்கும். 'அம்மா' 'அப்பா' என்ற வார்த்தையை 'பிரான்ஸ் அரசு' அனைத்து துறை ஆவணங்களிலிருந்தும் நீக்க முடிவு செய்துள்ளதாம்.

'அம்மா - அப்பா' என்ற வார்த்தையை நீக்கக் காரணம்: 
'ஆணும் - ஆணும்', 'பெண்ணும் - பெண்ணும்' திருமணம் செய்தால் இதில் 'தாய், தந்தை'  யார் என்ற குழப்பம் வருவதால், அரசு ஆவணங்களில் 'அம்மா, அப்பா'  என்ற பெயருக்கு பதிலாக 'பெற்றோர் - 1, 2 என்று இடம் பெறும்' என்று சட்டம் இயற்றியிருக்கிறார்களாம். (ஒரே பாலினமான இவர்கள் குழந்தையைத் தத்து எடுத்தால் குழப்பம் வராமல் இருப்பதற்கு,  இந்த 1,2 உதவியாக இருக்குமாம்).

உலகம் முழுவதும் 'இறைநிராகரிப்பாளர்கள்' 'ஏட்டுச்சுரைக்காய் சட்டங்களை' எழுதி வைத்திருப்பதால், தங்கள் வசதிக்குத் தக்கவாறு சட்டத்தை மாற்றி 'அழிவுப் பாதையை' நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.

இஸ்லாமியத் திருமணம்:
உலகம் முழுவதும் திருமணம் என்ற பெயரில் பலவித அநாச்சாரங்கள் நடந்து கொண்டு இருக்கும்பொழுது, ''இஸ்லாம் மட்டுமே உலகம் தோன்றிய முதல் எந்த குழப்பத்திற்கும் (உலகம் அழியும் வரை) இடம் தராமல் திருமணத்தை கட்டாயம் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது''. வல்ல அல்லாஹ் கூறிய வழியில் 'ஆணும் - பெண்ணும்' (நவீன கால குழப்பங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது) திருமணம் செய்து தூய்மையான வாழ்வை வாழ்ந்தால்,  இம்மையிலும், மறுமையிலும் வெற்றியடையலாம் என்று தெளிவாக அறிவிப்புச் செய்கிறது.

திருமணத்தைப் பற்றிக் குர்ஆனில்: 
'(நபியே) உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் : 13:38)

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான்.(அல்குர்ஆன் : 4:1)

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.(அல்குர்ஆன் : 30:21) 

நபி(ஸல்) அவர்கள் திருமணத்தைப்பற்றிக் கூறியது:  

''உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்.''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ்(ரலி) அவர்கள், புகாரி : 1905 ) .   

''எங்களைத் திருமணம் புரியும்படி கட்டளையிட்டதுடன், திருமணம் புரியாதிருப்போரை கடுமையாக நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள்''. (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (முஸ்னத் அஹமத், இப்னு ஹிப்பான்).

''எவருக்கு திருமணப் பருவம் வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண்களுக்கும், வெட்க ஸ்தலத்திற்கும் அரணாகும். எவருக்குத் திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும்.'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, அபூதாவூத், நஸயீ, ,திர்மிதி). 

 'திருமணம் எனது வழிமுறை (சுன்னத்), எவர் எனது வழிமுறையை புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம், அஹ்மத்). 

மேற்கண்ட நபிமொழியில்: 'திருமணம் செய்ய வசதி இல்லை' என்றால் 'பெண்களே! நோன்பு வையுங்கள்!' என்று வரவில்லை. இதிலிருந்து 'ஆண்கள்தான் திருமணச் செலவுக்கும்,  வாழ்க்கைச் செலவுக்கும் பொறுப்புதாரி' என்பது புரியவில்லையா?

திருமண விஷயத்தில் நமது நிலை: 

வீடுகள் கட்டுவது, துணிமணிகள், நகைகள் வாங்குவது போன்ற  உலக காரியங்களில் நஷ்டமடைந்து விடக்கூடாது என்று ஒவ்வொரு காரியத்திலும் மிக  கவனமாகச் செயல்படுகிறோம். ஆனால் வாழ்வின் அனைத்துக்  காரியத்திற்கும் வழி காட்டிய இஸ்லாத்தை மட்டும் நமது வாழ்க்கையில் கடைபிடிப்பதில்  கவனமற்று இருந்து வருகிறோம். (குறிப்பாக திருமணத்தில் கவனிப்பதே இல்லை).

பெண் பார்க்கும் நிகழ்ச்சி:
தங்கள் வீட்டு பையனுக்கு 'பெண்' பார்த்து திருமணம் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட பெண்ணை பார்க்கலாம். 'அழகு, பணம்' இந்த இரண்டையும் வைத்துதான் பெண் பார்க்கப்படுகிறது. (பல இடங்களில் வரதட்சணை வரவு அதிகமாக இருந்தால் போதும் மார்க்கத்தைப் பற்றிய கவலையில்லை).

வெளியூர்களில் மாப்பிள்ளையை பெற்றவர்கள்தான் 'பெண்' கேட்டுப் போவார்கள். (கடற்கரை அருகில் இருக்கும் ஊர் பகுதிகளில்  'பெண்' கேட்டுப் போனால் கௌரவம் குறைந்து விடுமாம். பெண்ணைப் பெற்றவர்கள்தான் மாப்பிள்ளை கேட்டுப் போக வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வருகிறது).

இப்படிப்பட்ட போலி கௌரவத்தை  வெளியூர்களில் பார்க்க முடியவில்லை. பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்பதுதானே நியாயமான வழிமுறையாகும். (பூஜ்யமாக இருந்து கொண்டு இருக்கும் ஆண்மகனுக்கு, மனைவி வந்த பிறகுதானே மதிப்பும்,  குடும்பத்தலைவன் என்ற பட்டமும் கிடைக்கிறது). 

என் உறவினர் வீட்டின் பெண்ணிற்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்து விட்டார்கள். நான் மாப்பிள்ளையைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னது: ''அவர் பிறந்த ஊர் முதல் சென்னையில் வேலை பார்த்த அலுவலகம் வரை நன்றாக விசாரித்து விட்டோம். நல்ல சம்பளத்தில் அமெரிக்காவில் வேலை பார்க்கிறார், அருமையான மாப்பிள்ளை'' என்று சொன்னார்கள்.

நான் மார்க்கத்தின் நிலைமை என்ன?, அவர் 'தொழக்கூடியவரா' என்று கேட்டேன். அதற்கு ''அவர்கள் நீண்ட தயக்கத்திற்குப் பின் அது வந்து... அதுதான் தெரியவில்லை?'' என்றார்கள். (நல்ல மாப்பிள்ளை, நல்ல சம்பளம் மட்டும் வேண்டும் ஆனால் மார்க்கம் தேவையில்லை).

திருமணம் முடிந்து வருடங்கள் ஆகி குழந்தையும் பிறந்து விட்டது. அவர் இன்றுவரை  தொழ ஆரம்பிக்கவில்லை, இஸ்லாத்தின் அடிப்படையும் தெரியவில்லை என்று கேள்விப்பட்டேன்.

குர்ஆனை ஓதி, தொழுது வரக்கூடிய நல்ல குணமுள்ள 'மணமகன், மணமகள்'  தன் வீட்டிற்கு 'மருமகனாக, மருமகளாக' வர வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் உறுதி எடுத்தால்தான் 'ஆண்களுக்கும், பெண்களுக்கும்' பயம் வரும். நாம்  ஒழுங்காக  'ஓதி', 'தொழுகையை' கடைபிடித்து வராவிட்டால் நமக்குத் திருமணம் நடக்காது என்ற பயம் பசுமரத்தாணிப் போல் மனதில் பதியவேண்டும். (பெற்றவர்களுக்கும் அக்கரை வரும்).

திருமணத் தகுதிக்கு: ''மீசை முளைத்து விட்டால் மாப்பிள்ளை'', ''வயதுக்கு வந்து விட்டால் மணப்பெண்'' என்ற நிலை இருந்தால் ''பெயர் தாங்கிய இஸ்லாமியர்களாக'' மட்டுமே வாழ முடியும்.

பெண் அழகாக இருக்க வேண்டும், பணத்தோடு இருக்க வேண்டும், குடும்ப பாரம்பரியம் இருக்க வேண்டும் என்று தேடித் தேடி அலையும் 'தாய்மார்களே!', உங்களின் சிந்தனைக்கு நபிமொழி:  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 
1. அவளுடைய செல்வத்திற்காக 
2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 
3. அவளுடைய அழகிற்காக 
4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  அவர்கள் (புகாரி : 5090 )

மார்க்கத்தை கடைபிடித்து வாழும் பெண்ணை தங்கள் வீட்டுப் பையனுக்கு மணம் செய்து வைத்தால் நன்மையளிக்கும் என்பதை நபிமொழி மூலம் அறிய முடிகிறது அல்லவா? செல்வம், அழகு, பாரம்பரியம் இவையெல்லாம் 'பெண்ணை நேர்வழிப்படுத்தாது'. மார்க்கம் ஒன்றுதான் 'பெண்ணிற்கு நல்ல குணத்தையும், நேர்வழியையும் தரும்'.  (எங்களுக்கு வரதட்சணை வேண்டாம், 'மார்க்கம் அறிந்த பெண்தான் வேண்டும்' என்று எல்லா 'ஆண்களின் பெற்றோர்களும்' முடிவு செய்து அதன்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் பெண்ணை பெற்றவர்கள், 'பெண்பிள்ளைகளுக்கு' மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்).

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:

இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? 

பெண்ணோ, ஆணோ வயது அதிகரித்தாலும் வெளித்தெருவில் சம்பந்தம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது சரியா? (சில விதி விலக்குகள் இருக்கலாம்).
இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
S.அலாவுதீன்

20 Responses So Far:

Shameed said...

வாசகர்களுக்கு ஒரு கேள்வி:


//இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? //

இஸ்லாத்தில் ஐந்து வேலை தோளோடு தோள் ஒட்டி நின்று (வீட்டில் தொழாமல்) பள்ளியில் தொழவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடும் விதித்து தொழ சொல்வதன் முக்கிய குறிக்கோள் முஸ்லிம்கள் அனைவரும் சமம் இதில் ஏற்ற தாழ்வு கிடையாது என்பதற்கே

இந்த அடிப்படை காரணத்தை ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் வெளி ஊர் முஸ்லிம் வெளித்தெரு முஸ்லிம் என்று முஸ்லிம்களை பலவாறாக கூறு போட்டு இஸ்லாத்தின் அடிப்படை தெரியாமல் பிரித்து பார்ப்பதே 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு முக்கிய காரணம்.


//பெண்ணோ, ஆணோ வயது அதிகரித்தாலும் வெளித்தெருவில் சம்பந்தம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது சரியா? (சில விதி விலக்குகள் இருக்கலாம்).//

இது குளத்தின் மீது கோபித்துக் கொண்டவரின்....... நிலைமைதான் வெளித்தெருவில் சம்பந்தம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது

Yasir said...

அலாவுதீன் காக்கா ஆணித்தரமான ஆதாரங்களை அடுக்கி இஸ்லாத்தில் திருமணம் எவ்வாறு இஸ்லாமிய வரைமுறை இல்லாமல் நடக்கின்றது என்பதை அருமையாக சொல்லி இருக்கின்றார்கள்....”மார்க்க அறிவை “ ஆணுக்கும் பெண்ணுக்கும் பார்க்காமல் “மற்றதை “ பார்த்து செய்வதனால் பல குழப்பங்களும் / அநாச்சாரங்களும் திருமணமான தம்பதிகள் மத்தியில் நடக்கின்றது...அல்லாஹ் நாம் அனைவருக்கும் மார்க்கம் சொல்லிக்கொடுத்த ஒவ்வொரு வழிமுறைகளையும் பேணக்கூடியவர்களாக ஆக்கி அருள்வானாக

பெண்வீடு மாப்பிள்ளை பார்க்கும் பழக்கம் மற்ற ஊர்களில் இல்லைதான் ..நம்மூர் போன்ற சில ஊர்களில் மட்டுமே.அதுவும் பல குடும்பங்களில் உண்டு...ஒழிக்கப்படவேண்டியது

Yasir said...

//இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? //
பொதுவாக அந்த குடும்பத்தை பற்றிய ஆழ்ந்த தகவல்கள்,அறிவு இல்லாமல் இருக்கலாம்,ஒரே தெருவாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் ச்ண்டைக்காரியா / சமதானக்காரியா என்பதை விரைவாக அறியலாம்..உதாரணத்திற்க்கு நம்மூரில் ஒரு தெருவுக்கு மற்ற தெருக்களில் அழைக்கும் பெயர் “குடிகாரத்தெரு” ஆனால் அந்த் தெருவில் புகுந்து பார்த்தவர்களுக்கு தெரியும் உண்மை என்னவென்று...exceptions are not examples

//பெண்ணோ, ஆணோ வயது அதிகரித்தாலும் வெளித்தெருவில் சம்பந்தம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது சரியா? (சில விதி விலக்குகள் இருக்கலாம்).// சரியில்லை...இப்படி கா(ய்ந்து)ஞ்சிபோன சிலர் பிடிவாதமாக இருப்பதால்தான் ஆணும் பெண்ணும் ஒழுக்கம் தவறிப்போகும் சில சம்வங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன

Ameena A. said...
This comment has been removed by the author.
Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

ஜஸாக்கல்லாஹ் ஹைர் சகோதரரே.

** மார்க்கம் ஒன்றுதான் 'பெண்ணிற்கு நல்ல குணத்தையும், நேர்வழியையும் தரும்'.**

**'ஆண்களின் பெற்றோர்களும்' முடிவு செய்து அதன்படி நடக்க ஆரம்பித்துவிட்டால் பெண்ணை பெற்றவர்கள், 'பெண்பிள்ளைகளுக்கு' மார்க்கக் கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள்).**

ஆண்களுக்கும் இதே நியதிதான் ! இதில் யாருக்கும் வேறு கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.

பெண்மக்கள் தெளிவாக இருந்தால், எந்தச் சூழலையும் சுத்தப்படுத்தலாம்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் .
அன்பு சகோதரர் ஜனாப். அலாவுதீன் அவர்களுக்கு,
First of all Jasakkallaah-
Thank you for presenting varieties of highly valued thoughts in one article.
தெருவிட்டு தெரு திருமணம். – இந்த நீண்ட நெடுங்காலமாக நமதூரில் விவாதிக்கப்படும் பிரச்னை என்னைப் பொருத்தவரை தெருவிட்டு தெரு திருமணம் என்கிற பார்வையில் மட்டும் அல்லாமல் குடும்பம் விட்டு குடும்பம் திருமணம் என்கிற ரீதியிலும் பார்க்க வேண்டும்.
தெருவிட்டு தெரு திருமணம் என்பது அதிகம் நடைபெறாமல் இருக்கக் காரணம் அடிப்படையில் பெரும்பாலும் குடும்பம் விட்டு குடும்பம் திருமணம் செய்துகொள்வதில்லை என்பதுமே. ஒரே குடுமபத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு தெருக்களில் வாழ்ந்தால் அவர்களுக்கிடையில் திருமணங்கள் நடைபெற்றிருப்பதை நாம் காண முடிகிறது. உதாரணமாக குறிப்பிட்ட தெருவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் கடற்கரைத்தெருவில் வசித்தாலும் அவர்களுக்குள் தெரு பாகுபாடு காணாமல் மணம்புரிந்து வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர். அதேபோல் மேலத்தெரு, கீழத்தெருவாசிகள் , கடல்கரைத்தெரு, புதுத்தெருவில் மணம் புரிந்து இருக்கின்றனர்.
ஆகவே அடிப்படையில் குடும்பத்துக்குள்ளேயே அல்லது சொந்தங்களுக்குள்ளேயே மணம் புரிந்து கொள்ளும் வழக்கம் நம்மிடையே வேரூன்றி இருப்பதையும் கவனித்து கருத்திட வேண்டும். ஒட்டுமொத்தமாக தெருவிட்டு தெரு திருமணம் செய்வதில்லை என்று கூறிவிட இயலாது.

இதையும் மீறி தெருவிட்டு தெரு- முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் - மணம் புரிவது பரவலாக இல்லைதான். இதற்குக் காரணம் பல்வேறு தெருக்களில் வசிப்பவர்களுக்கு இடையில் அடிப்படையில் ஒருவருக்கொருவர் ஒத்துவராத சில பழக்கங்கள்- சடங்குகள். இவைகளை மீறி சம்பந்தம் செய்து கொள்ளும் மனப்பான்மைக்கு – குறிப்பாக பெண்கள் மத்தியில் – தயார் ஆகவில்லை.

Ebrahim Ansari said...

சில தெருக்களில் வாழ்வோர் மத்தியில் இன்றும் தர்கா, கந்தூரி, முத்துப் பேட்டைக்கு கிழமை ராத்திரி நேர்ச்சை, நாகூரில் போய் முடி இறக்குவது, பாப்பா ஊரில் புறா பறக்க விடுவது, மரியம்பீவி அம்மா தர்காவுக்கு திருமணம் முடிந்த உடன் மணமக்களை அழைத்துப் போய் சமாதியில் உள்ள சந்தனத்தை நோண்டிக்கொடுத்து பிள்ளைக்கு நேர்ந்துகொள்ளச்சொல்வது, கல்யாண வீட்டில் வாழை மரம கட்டுவது, இன்னிசைப்பாடல் ஒலிபெருக்கி மூலம் ஒலிப்பது, பட்டுக்கோட்டையில் இருந்து வரவழைக்கும் பேண்டு வாத்தியம் முழங்க மாப்பிள்ளை ஊர்வலம் நடத்துவது, வழமை செய்வது போன்ற சில பழக்கங்கள் இன்னும் ஒழிந்த பாடில்லை. மருமகனார் யாசிர் அவர்கள் குறிப்பிட்டுள்ள குடிகாரத்தெருவும் இதில் அடக்கம். இதில் வந்தா வரத்தார் வசிக்கும் தெருவும் தனியாக இருக்கிறது.
சில குறிப்பிட்ட தெருக்களில் வசிப்பவர்களோ, வெளிப்படையில் மார்க்கம் பேணுவதில் கருத்தாக இருக்கிறார்கள. பிள்ளைகள் காலையில் பள்ளிக்குப் போகும், மார்க்க கல்வி, திருமறை மனப்பாடம், தவராத தொழுகை, தலையில் தொப்பி, பெரியவர்கள் முகத்தில் தாடி, மற்றபடி ஷிர்க்கான காரியங்களில் மார்க்க அறிவு இருப்பதால் ஒதுங்கி இருத்தல் ஆகியன பரவலாக இருக்கின்றன. இப்படி பழக்கம் உள்ள மக்கள் வசிக்கும் தெருக்களும், ஏற்கனவே குறிப்பிட்ட பழக்கங்கள் உள்ள தெருவினரும் மனம் ஒப்பி சம்பந்தம் செய்து கொள்ள மனத்தளவில் தயாராக இல்லை. இதுவே ஒரு முக்கியகாரணமாக எனக்குத் தோன்றுகிறது.
அதேநேரம் இன்று உள்ள மாற்றங்களின் அடிப்படையில் எல்லாத்தெருவிலும் மார்க்கம் பேணும தனிப்பட்ட நல்லவர்களும் இருககிறார்கள். அதேபோல் கெட்டவர்களும் இருககிறார்கள். ஆனாலும் நம்மிலும் சில அக்கிரகார தெருக்கள் இருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கு மத்தியில் அவர்கள்தான் உயர்ந்தவர்கள் மற்ற சில குறிப்பிட்ட தெருக்காரர்கள் எவ்வளவு நல்லவர்களாகவே இருந்தாலும் ஒரு “குடல் புரட்டு” மனப்பான்மை இருக்கிறது. இதனால் எவ்வளவு படித்த நல்ல மாப்பிள்ளைகளாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சம்பந்தம் அமைவது இல்லை.
எல்லாம் சரிதான் ராத்தா தெருவு சரியில்லையே என்கிற பேச்சு இருக்கிறது. போயும் போயும் அந்த தெருவிலா என்று ஒரு மில்லியன் டாலர் கேள்வி வருகிறது. சில குறிப்பிட்ட தெருவைச் சேர்ந்தவர்கள் இளக்கமானவர்கள், நான் உயந்தவர்கள் என்ற மனப்பான்மை பரவலாக இருக்கிறது. சில குறிப்பிட்ட தெருவைச் சேர்ந்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்ற மனப்பான்மையும் இருக்கிறது. சில குறிப்பிட்ட தெருவைச்செர்ந்த அறிவாளிகளை அங்கீகரிக்காமல் இருப்பதும் இருக்கிறது.
இது ஒழிய வேண்டுமானால் ஒரு தெருவின் பெயரை வைத்து ஒட்டுமொத்த மதிப்பெண் போடும் மனப்பான்மை ஒழிந்து தனிப்பட்ட நபர எந்த தெருவைச் சேர்ந்து இருந்தாலும் அவரது குண நலன்களை அளவிட்டு சமபந்தம் செய்துகொள்ள மனதைத் தயார் செய்தால் இது நடக்கும். அப்போதுதான் நல்ல சோற்றுக்கு நல்ல கறி கிடைக்கும். இது அவ்வளவு விரைவில் நடக்குமென்று தோன்றவில்லை.
மனதில் பட்டதை எழுதியுள்ளேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//Ebrahim Ansari சொன்னது…

மனதில் பட்டதை எழுதியுள்ளேன். ///

வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் அனைவரின் சார்பாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் !

Shameed said...

//இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? //

தெரு மாற்றி கல்யாணம் செய்து கொடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் ஒரு சிறு பிரச்சனை வந்து அந்த பிரச்சனை அந்ததந்த தெரு பஞ்சாயத்துக்கு போகும் போது பஞ்சாயத்த்தில் உள்ளவர்கள் நியாயத்தை பேசாமல் தங்கள் தெரு மாப்பிள்ளை வீடோ அல்லது பெண்வீட்டிற்கோ சாதகமாக "அட்டு" பஞ்சாயத்துக்களை பேசி தெரு மோதலை உண்டு பண்ணி விடுகின்றனர் பஞ்சாயத்த்தில் உள்ள பஞ்சாயத்துகாரர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை தெரியாததே இதற்க்கு காரணம் தெரு சங்கங்களின் பெரும் தலைகள் எல்லாம் பதவி பெறுவது மூத்த வயது என்ற அடிப்படையில் தான் இஸ்லாமிய அறிவு அடிப்படையில் அல்ல . 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு இந்த பஞ்சாயத்துக்களும் ஒருகாரணம்

ZAKIR HUSSAIN said...

//இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? //


முஸ்லீமாக இருக்கிறோம்....இஸ்லாத்தை கடைபிடிக்காமல்.

sabeer.abushahruk said...

இந்த அத்தியாயம் சகோதரிகளோடு சகோதரர்களுக்கும் போதிக்கிறது.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, அலாவுதீன்.

மார்க்கம் அறிவித்த தகுதிகள் அடிப்படையில்தான் பெண் பார்க்க/ மாப்பிள்ளை பார்க்க வேண்டுமே தவிர வேறு காரணங்கள் சரியல்ல.

KALAM SHAICK ABDUL KADER said...

அல் ஹம்துலில்லாஹ்! என் உம்மா அவர்கள் கடற்கரைத் தெரு; என் வாப்பா அவர்கள் நடுத்தெரு. அன்றே இப்படித் தெருக் கலப்பு மணம் நடைபெற்றுத் தான் உள்ளது; இடையில் , அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கள் சொன்னபடி இடைவெளி உண்டாகியிருந்தாலும், தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வால் தெரு கடந்த திருமணம் மற்றும் வரதக்‌ஷணை இல்லாத் திருமணம், மஹரை பவுன் கணக்கில் கொடுத்தல் போன்றவைகளும் ஊரில் பரவலாக இருப்பதைக் கண்டு பெண் கொடுப்பவர்களும் தவ்ஹீத் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்கூடாக இருப்பதை அன்பர் கவனிக்கவில்லை போலும், மேலும், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு போன்ற ஊர்களிலும் இருந்து சம்பந்திகளாகியிருப்பதும் இன்று பரவலாக நடைமுறையில் உள்ள நற்பழக்கம் என்பதும் அறிக. டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கள் சொன்ன அதே காரணங்களைத் தான் மர்ஹூம் அலிய் ஆலிம் அவர்கள் கூறுவார்கள். ஆனால், இன்று மாப்பிள்ளை/ பெண் எந்தத் தெரு , எந்தக் குடும்பம் என்றெல்லாம் பார்ப்பவர்கள் மிகவும் அரிது. ஆனால் “காதல்” என்ற பெயரில் காமுகனுடனும், மாற்று மதத்தாருடனும் திருமணம் செய்யாமல் தடுக்கப்பட வேண்டும் என்றால் கல்லூரிகளில் இருபாலார் முறையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்; மர்ஹூம் AMS காக்கா அவர்களிடம் இது பற்றிப் பலமுறை வேண்டிக் கொண்டேன்; ஆனால், இன்று நம் கண்மணிகளாம் பெண்மணிகளின் ஓட்டம் கண்ட பின்னர், “இருபாலர்” கல்வியை ஊக்குவித்தவர்கள் பொது மக்களிடம் பொது மேடையில் மன்னிபும் கேட்டனர்; ஆயினும், இன்றும் “இருபாலர்” கல்வித் தொடர்வதால் எத்துணை ஆபத்துகளை நம் சமுதாயம் எதிர்நோக்கியுள்ளது என்பதைக் கண்ணீருடன் இக்கடிதம் மூலம் எழுதுகின்றேன்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாத்தில் திருமணம் பற்றிய சிறப்பான பதிவு!

1. இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்?

இஸ்லாமியர்களில் பெரும்பாலும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இதனால் தன் அக்கம் பக்கத்தவரின் குணாதிசயங்களையே முழுமையாக அறிந்து கொள்ள முடியும். எனவே பெரும்பாலும் இப்படி நடக்கிறது. "லவ்" பண்ணுர விளையாட்டுக்கு தெரு ஊர் எல்லையென்பதெலாம் இருக்காது. நம்மவர்களிடம் இந்த விளையாட்டு குறைவாலும் இப்படியாக உள்ளது.

2. பெண்ணோ, ஆணோ வயது அதிகரித்தாலும் வெளித்தெருவில் சம்பந்தம் செய்யமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பது சரியா?

மனதிருப்தி என்ற ஒன்றிற்காக பிடிவாதம் இருப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாம் ஒத்துவரும்போது தெரு மாற்றம் என்ற ஒன்றிற்காக பிடிவாதம் செய்வது நல்லதல்ல!

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் கூறியது

//வெளிக்காட்ட முடியாமல் தவிக்கும் அனைவரின் சார்பாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள் !// ஜசக்கல்லாஹ். கருத்து அங்கீகாரத்துக்கு மிக்க நன்றி.

Ebrahim Ansari said...

கவியன்பன் அவர்கள் சொன்னது

// என் உம்மா அவர்கள் கடற்கரைத் தெரு; என் வாப்பா அவர்கள் நடுத்தெரு. அன்றே இப்படித் தெருக் கலப்பு மணம் நடைபெற்றுத் தான் உள்ளது;//

இதைத்தான் நான் சொன்னேன். கடற்கரைத்தெருவும் நடுத்தெருவும் சம்பந்தம் செய்தது - காரணம் அவர்கள் ஒரே குடும்பம்- சொந்தம் விட்டுவிடக்கூடாது என்று - அவர்கள் எந்தத்தெருவில் வாழ்ந்தாலும் .

ஆனாலும் ஒரு கால கட்டத்தில் இப்படி மணமுடித்தோரும் கட்ல்கரைத்தெருவை காலி செய்துவிட்டு புதுமனை, சி. எம்.பி. என்று குடிபெயர்ந்து விட்டார்கள. அவர்கள் வாழ்ந்த பிரம்மாண்டமான பெரிய வீடுகளை குறைந்த விலைக்கு விற்றுவிட்டார்கள். அப்படி விற்ற பணத்தில் அவர்கள் குடிபெயந்த இடங்களில் மனை கூட வாங்க முடியவில்லை. இதற்கு காரணம்

அனைத்து தெருக்களும்
அதிரையின் கருக்கள் -

என்கிற அதிரைக் கவியசரின் வார்த்தைகளை மறந்ததே.

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

திருமணத்தை மறுமணம் செய்து கொள்ளும் அளவுக்கு தெளிவான விளக்கம்.s .அலாவுதீன் காக்காவின் அசத்தலான ஆக்கம். ஜஜாக்கல்லாஹ்

// //இஸ்லாமிய சமுதாயம் அதிகமாக வாழும் ஊர்களில் 'தெரு மாற்றி' சம்பந்தம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம்? //

நம்மிடம் ஏகத்துவக் கொள்ளகை இன்னும் முழுமையாக வரவில்லை ? என்பதை பறைச் சாட்டுகிறது.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கருத்திட்ட சகோதரர்கள் :
ஹமீது, யாசிர், நெய்னா தம்பி, ஜாகிர், சபீர், லெ.மு.செ.அபுபக்கர் அனைவருக்கும் நன்றி!

இதில் மிக விரிவாக விளக்கம் தந்த சகோதரர்கள் : சகோ. இப்ராஹீம் அன்சாரி (தங்களின் விளக்கம் மிக அருமை! ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு தங்களின் விளக்கம் இருந்தது. வாழ்த்துக்கள்!)

அபுல் கலாம் (தஃ பெ ஷைக் அப்துல் காதிர் ) (தங்களின் விளக்கத்தையும் வரவேற்கிறேன் - வாழ்த்துக்கள்!)

ஜஹபர் சாதிக் (மு.செ.மு) (தங்களின் விளக்கத்தையும் வரவேற்கிறேன்)

ஹமீது - யாசிர் (தங்களின் விளக்கத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.வரவேற்கிறேன்).


லெ.மு.செ.அபுபக்கர் : /// நம்மிடம் ஏகத்துவக் கொள்ளகை இன்னும் முழுமையாக வரவில்லை ? என்பதை பறைச் சாட்டுகிறது. ///
********* உண்மைதான்**********

தாங்கள் அனைவருக்கும் நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
***********************************************

எனக்கு நீண்ட காலமாக மனதில் இருந்த ஆதங்கத்தை தங்களின் முன்னால் கேள்வியாக வைத்தேன்.

தெரு மாற்றி, ஊர் மாற்றி திருமணம் நடந்து வருவதை நான் அறிவேன்.

இருந்தாலும் குலப்பெருமை, தெருப்பெருமை, பணப்பெருமை அதிக இடங்களில் மாறாமல் இருப்பதையும் மறுக்க முடியாது.

தெரு மாற்றி, ஊர் மாற்றி சம்பந்தம் செய்வதில் நன்மைகள், சங்கடங்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. ஊரே ஒன்று பட அனைத்து தெரு சம்பந்தங்கள் அவசியமானது.

ஏற்றத்தாழ்வுகளை தன் காலில் போட்டு மிதித்து விட்டேன் என்பது நபிமொழி. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் மத்தியில் கடுகளவும் மனிதர்களை சமமாக நடத்துவதில் ஏற்றத்தாழ்வு வரக்கூடாது என்பதே என் ஆதங்கம்.

வல்ல அல்லாஹ்வே! அனைத்தையும் அறிந்தவன்.

அலாவுதீன்.S. said...

சகோதரி Ameena A. அவர்களுக்கு: வஅலைக்கும் ஸலாம் வரஹ்!

///ஆண்களுக்கும் இதே நியதிதான் ! இதில் யாருக்கும் வேறு கருத்து இருக்காது என்றே நம்புகிறேன்.


இதில் யாருக்கும் வேறு கருத்து கண்டிப்பாக இருக்காது. ஆணுக்கும் பெண்ணுக்கும் மார்க்கம் அவசியம் என்பதை கீழ்க்கண்ட பாராவில் விளக்கியுள்ளேன்.

******குர்ஆனை ஓதி, தொழுது வரக்கூடிய நல்ல குணமுள்ள 'மணமகன், மணமகள்' தன் வீட்டிற்கு 'மருமகனாக, மருமகளாக' வர வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் உறுதி எடுத்தால்தான் 'ஆண்களுக்கும், பெண்களுக்கும்' பயம் வரும். நாம் ஒழுங்காக 'ஓதி', 'தொழுகையை' கடைபிடித்து வராவிட்டால் நமக்குத் திருமணம் நடக்காது என்ற பயம் பசுமரத்தாணிப் போல் மனதில் பதியவேண்டும். (பெற்றவர்களுக்கும் அக்கரை வரும்). ******

அலாவுதீன்.S. said...

சகோதரி Ameena A. அவர்களுக்கு : தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

KALAM SHAICK ABDUL KADER said...

//இதைத்தான் நான் சொன்னேன். கடற்கரைத்தெருவும் நடுத்தெருவும் சம்பந்தம் செய்தது - காரணம் அவர்கள் ஒரே குடும்பம்- சொந்தம் விட்டுவிடக்கூடாது என்று - அவர்கள் எந்தத்தெருவில் வாழ்ந்தாலும்//

டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நலமறிய அவா. நீங்கள் குறிப்பிடும் காரணம் (சொந்தம் விடுபடக் கூடாது என்று )கருதி என் பெற்றோர்களின் திருமணம் தெரு கடந்து நடந்ததாகத் தெரியவில்லை; காரணம்: என் வாப்பா அவர்களும், என் உம்மா அவர்களும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்.

ஏற்புரையில் என் கருத்துகட்கு மதிப்புரை வழங்கிய அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு