Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அவனா யிராதே...! 40

அதிரைநிருபர் பதிப்பகம் | October 12, 2012 | , , ,

அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்

எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல
தொழுது வணங்கி – முகச்
செழுமை யடைகிறான்

பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்

எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்

அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்

அழுது கண்ணீர் வடித்து
மெழுகாய் ஒளிர்வது போல
அழுதே அக்காலமாய்
மின்சாரம் தருகிறான்

எல்லை தாண்டி
இவ்வுலகில் பிறப்பினும்
ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்

மெல்ல மெல்ல நல்
வசனம் இணைக்கிறான்
பெருதற் கரிய பல்
அறிவை வளர்க்கிறான்

தானடைந்த செல்வம்
தானமாய் பகிர்கிறான்
தான் பெற்ற நலன்
தம்பிக்கும் தருகிறான்

சுட்டு புண்படுமுன்
வாங்கி இருத்திடுவான் 'பர்னால்'
ருசிக்கும் நாவிற்கு
சுவைக்கும் உணவிடுவான் ஆனால்

ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!

M.H.ஜஹபர் சாதிக்

40 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஜாபரு,

பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல. கவிக்காக்கா சமூகத்தில் ஐக்கியமாகிய நீயும் நாராய் மணக்க ஆரம்பித்து விட்டாய்!!! வாழ்த்துக்கள்.

ஊரில், உலகில் எழுதுவதற்கும், பேசுவதற்கும், அறிவுரை வழங்குவதற்கும், உபதேசம் பொழிவதற்கும் ஓராயிரம் விசயங்கள் இல்லாமல் இல்லை. அதை எப்படியோ எம்மால் எழுதுவதும், பேசுவதும் எளிதாகவே இருக்கின்றது. ஆனால் தனக்கென ஒரு இடர் இறைவன் நாட்டப்படியே குறுக்கிடும்பொழுது அதை நம் சன்மார்க்க நெறியில் சாதுரியமாக சந்திக்க, சாந்தமாய் எதிர்கொள்ள இன்று படித்த, போதிய மார்க்க அறிவு பெற்ற பெரும்பான்மையான மக்களுக்கு கூட‌ இயலாமல் போய் சறுக்கியே விழுந்து விடுகிறோம்.

இறைவ‌ன் உலகில் எல்லாவ‌ற்றிற்கும் முன் அனுப‌வ‌த்தை வைத்து விட்டு ம‌ர‌ண‌த்திற்கு ம‌ட்டும் வைக்காம‌ல் அதை அப்படியே ம‌றைத்து வைத்துள்ளான்.

"அர‌ச‌ன் அன்றே கொல்வான்; இறைவ‌ன் நின்றும் கொல்வான், நிற்காம‌லும் கொல்வான்" என்ப‌தை உல‌கில் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் நாம் அன்றாட‌ம் காணாம‌ல் இல்லை.

ZAKIR HUSSAIN said...

கடைசி வரி....பட்டயம் தீட்டி எழுதப்படவேண்டியவை.

பொதுவாக கவிதை எழுதுபவர்களுக்கு உண்மையுடன் ஏற்படும் உரசலே கவிதையாய் பிறக்கிறது என்று யாரோ [ ஜே.கே..அல்லது ஒசோவாக இருக்க கூடும்] சொல்லக்கேள்வி.

பதிலை கவிதை எழுதும் உங்களிடமும், சகோதரர் கவியன்பன் இடமும், சகோதரர் சித்தீக் இடமும் , சகோதரர் அதிரை அஹ்மதிடமும், சபீரிடமும் கேட்கிறேன்.


Shameed said...

இவனா யிரு: அவனா யிராதே; சபாஷ் சரியான போட்டி

அலாவுதீன்.S. said...

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்
************* உண்மை *************
கவிஞர் வரிசை தொடர்கிறது... சகோதரருக்கு வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

//சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்//

அன்பிற்குரிய தம்பி எம் ஹெச் ஜே,

முதலில் வாழ்த்துகள். வாழ்த்துகளுக்குக் காரணங்கள்:

01) கேட்டவுடன் குறுகிய நேரத்தில் கேட்டத் தலைப்பில் கவிதை எழுதுவது சுலபமல்ல. அதை நீங்கள் இலகுவாகச் செய்கிறீர்கள்.

02) புதுக்கவிதை என்னும் கைவிலங்குகளற்றத் தோரணையில் எழுதினாலும் எல்லா கவிஞர்களுக்குள்ளும் உள்ள அந்த சந்த சப்தம் ஆங்காங்கே இழையோடுகிறது. சந்தத்தின் அடையாளங்களைச் சுட்டிக்காட்ட எனக்குத் தெரியாது. கவியன்பன் அதில் விற்பன்னர்.

03) நன்மை நாடும் மனப்போக்கு ஒவ்வொரு படைப்பாளிப்பும் வேண்டும். தீமை நாடுதல் சமுதாயத்தில் நோய் பரப்பும். நீங்களும் தவறானவனாக இராதே என்கிறீர்கள்.

இனி,
மேலே குறிப்பிட்ட "தொட்டே சாதிக்கிறான்" என்னும் சொற்கள் சட்டென யாவருக்கும் புரிந்துவிடாது. ட்டச் ஸ்கிரீனைத் தொட்டே எழுதுவதைக் குறிக்கிறீர்கள் என்பதைப் பிறகுதான் புரிய முடிந்தது.

//எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்//

இதிலும் தட்டி = க்கீ போர்டைத் தட்டித் தட்டி என்றும்
தொட்டும் = ட்டச் ஸ்கிரீனைத் தொட்டுத் தொட்டும் என்றும்
அர்த்தம்பட எழுதி இருக்கிறீரகள்.

இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் வாசிப்பில் சற்றே தடை ஏற்படுத்தும் என்பது என் கருத்து. (சஃபீர் பாய் கவனிக்க: "என் கருத்து மட்டும்தான்" :-))

//ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!//

என்கிற உச்சகட்ட முழக்கம் கவிஞர்களுக்கு மட்டும் வசப்படும் லாவகம்.

குட் ஜாப், எம் ஹெச் ஜே.

sabeer.abushahruk said...

// உண்மையுடன் ஏற்படும் உரசலே கவிதையாய் பிறக்கிறது //



உரசலில்தான் நண்பா
உலகே இயங்குகிறது

உரசல் இல்லையேல்
வெப்பம் இல்லை

வெப்பம் இல்லையேல்
வெளிச்சம் இல்லை

வெளிச்சம் இல்லையேல்
உலகே இல்லை!

உண்மையுடனான உரசலில்
கவிதை பிறக்கிறது

உயிர்களுக்கிடையே யான
உரசலில்தான்
குழந்தை பிறக்கிறது!

கவிதைகளில் இருக்கும்
உயிரோட்டத்திற்கு
உரசலே காரணம்.

இல்லையேல்
நீர்த்துப் போய்விடும் மொழி!



Iqbal M. Salih said...

//எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்//

அ.நி.யின் பங்களிப்பாளர்களைப்பற்றி
அவரையும் சேர்த்து தம்பி
அருமையாய் ஓர் அணிந்துரை அளிக்கிறார்.
அற்புதம்! அற்புதம்!

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அவனாய்யிராதே
******************************

கரகாட்டம்
குத்துப்பாட்டு
கந்தூரி என்ற பெயரால்
கயவர் கூட்டம்
நீ அவனாய் யிராதே
-------
வியாபாரம் என்றபெயரால்
வறைமுறையற்ற
வருமானம்
கட்டுபாடி.ல்லா
வாழ்க்கை
நீ அவனாய்யிராதே
--------
வாய் பேச்சில்
வசீகர வார்த்தைகள்
வார்தையிலே
இறை வேத போதனைகள்
வாழ்க்கையிலே
அத்தனையும் பேதமைகள்

நீ அவனாய் யிராதே
-----------
மாத வட்டி
மீட்டர் வட்டி
கந்து வட்டி
கொல்லை லாபம்
பார்த்துவிட்டு
வள்ளல் எனும் பெயர்
கொண்டு
பலகூட்டம் உலாவுதப்பா
நீ அவனாய்யிராதே
-
ஊரும் வேண்டாம்
உரவும் வேண்டாம்
சமுதாய ஒற்றுமைக்கு
சங்கமும் வேன்டாம்
தரிகெட்ட இளைஞர் கூட்டம்
நீ அவனாய்யிராதே
------
கல்யானம் கச்சேரி
சீர்செனத்தி
எனும் பெயரால்
வரதச்சனை
வாங்கும் கூட்டம்
பலரில் உண்டு
நீ அவனாய்யிராதே

m.s.m.safeerahamed

sabeer.abushahruk said...

எம் எஸ் எம் சஃபீர், நல்லாச் சொன்னிய. எவனாயிருந்தாலும் அவனாமட்டும் இருக்கவே கூடாது. அப்படி எவனாவது அவனா யிருந்தால், எவனுமே அவன் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

எல்லாமே டூப்பு
ஈமான்தான் ட்டாப்பு

என்று சொல்லாமல் சொல்லி யிருக்கிறீர்கள்.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
எழுந்து விழிப்பது எப்படி? முறண் தொடையாகத் தெரிகிறதே?
கவியன்பன் அவர்களே நான் சொல்வது சரியா?
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

KALAM SHAICK ABDUL KADER said...

இலண்டன் வாழ் இளங்கவிஞர் ஜெஹபர் சாதிக் அவர்கள் கவிஞர்களின் வரிசையில் முன்னேறுவது கண்டு அகமகிழ்ந்தேன்;படித்தேன் உங்கள் கவிதையை;ஒருபடித்தேன் குடித்தேன்.

கவிவேந்தர் சபீர்:

சந்தங்கள் கவிஞர்களின்
சொந்தங்கள்;
எதுகை மோனைகள்
கவிதைக் குழந்தைக்கு
இருகைகள்

அளவொத்த ஓசை நயம் எனும் ஓட்டமானது (அசை, சீர், தளை) வாய்பாடு எனும் இலக்கண வரம்புக்குள் வசப்பட்டால் சந்தங்களின் சத்தங்களில் இனிமைக் கூடும். அதனைக் கற்றுக் கொண்டு பற்றிபிடித்துக் கவனமாய் யாத்தால் மரபுப் பா ஆகும்; அவ்வண்ணம் ஓசை நயத்துக்குட்பட்ட -மரபிலக்கணத்துக்கு வசப்பட்டச் சந்தமாக இல்லாமல் வெறும் எதுகை எனும் ஒன்றாகி வரும் எழுத்துக்குக் கவிதையாக அமைப்பதும் நீங்கள் கண்டெடுத்த இவ்வுண்மை. எல்லாம் கவிதைகற்றான் என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இற்றைப்பொழுதில் வந்து விட்டதனால், வளரும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்போம். இன்று துபை வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பில் நடந்த கவியரங்கில் என்னைப் பாராட்டிச் சான்றிதழ் அளித்து மதிப்பளித்தார்கள்;அங்குக் கவிதை வாசித்தவர்களில் பலரின் கவிதைகளில், கவிதை என்றால் எதுகை மட்டும் இருந்தால் போதும் என்ற உணர்வுடன் எழுத்துக்குக் கவிதை என்ற அமைப்பில் இருந்தன; உங்களைப் போன்று உள்ளத்தில் ஊடுருவும் புதுக் கவிதைகளும் எழுதி வாசித்தனர்.அடியேன் மட்டும் யாப்புக் கவிதையைப் பற்றிப் பிடித்து வாசித்தேன். எனக்குப் பாராட்டுப் பத்திரம் அளித்த அவ்விழாவின் தலைவர், ஷார்ஜா தமிழர் பண்பாட்டுக் கழகத் தலைவர் இராமலிங்க அய்யா அவர்கள்,@ யாப்பின் வழிநின்று இலக்கணம் பேணும் உங்கள் கவிவரிகள் எங்கள் செவியில் தேனாய் இனித்தன; காரணம் சந்தங்கள் அந்த அந்தச் சீரின் அளவொத்து எடுத்தாளப்பட்ட சொல்லாட்சி, உங்கள் கவிதையின் காட்சி; அஃதே உங்கட்கு இறைவன் வழங்கிய மாட்சி@ என்று பாராட்டி என்னைக் கட்டித் தழுவினார்கள்; எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று மறுமொழி கொடுத்தேன். என்னை இவ்வழியில் பற்றி நிற்கப் பணித்த என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்கட்கு அப்பாராட்டுகளைக் காணிக்கையாக்குகின்றேன். கற்றுக்குட்டியாக இருந்து என் ஆசான்கள் கொடுக்கும் வீட்டுப்பாடங்களைப் பதிந்து கொண்டிருக்கும் அடியேனை விற்பன்னர் என்று ஆஸ்தான கவிஞரால் பாராட்டப்பட்டாலும், இன்ஷா அல்லாஹ் அவர்கள் விருப்பம் நிறைவேறும் காலம் நெருக்கத்தில் தெரிகின்றது!

அன்புச் சகோ.என்.ஏ.ஷாஹூல்ஹமீத்;
எழுதலும்-விழித்தலும் ஒரே செயல். எழுதிய கவிஞர் விளக்கம் தரலாம்!

சகோ.ஜாஹிர்:
உற்ற நண்பரை உரசி விட்டீர்; உரசலில் நம்மை உறைய வைத்து விட்டார். கவிஞர்கள் அப்படித்தான்.

கவிவேந்தர் சபீர், இலண்டன் கவிஞர் ஜெஹபர் இவர்களைத் தொடர்ந்து தொழிலதிபர் சபீர்(திருப்பூர்) அவர்களும் இவனாய், அவனாய், எவனாய் என்று எழுதி விட்டதால் நான் எவனாய் இருந்து எழுதுவது? ஆயினும், எதிர்பாராமல் அடியேன் இப்பொழுது ஆயத்த நிலையில் உள்ள @போலிகள்@ எனும் தலைப்பிலான கவிதையும் இங்குத் திருப்பூர்த் தொழிலதிபர் சபீர் அவர்களின் கவிதை வரிகளும் ஒன்றானவைகளாய் அமைந்து விட்டன என்பதைக் கண்டு மீண்டும் சிறிது மாற்றங்களுடன் திருத்தி அன்பு நெறியாளர்க்க்கு அனுப்புவேன்; அஃது என் மரபுப்பா இனத்தில் தான் அமையும் என்பதால் போட்டியில் சேராது; மேலும், என் கவிதை வியாழன் அன்று ஆயத்த நிலையில் உள்ளதாகவும் , அனுப்புவதற்கு அனுமதியும் அ.நி. அன்பு நெறியாளர் அவர்களிடம் பெற்று விட்டேன். இன்று தான் எங்கள் இருவரின் வரிகளும் ஒன்றானவைகளாகக் காண்கின்றேன்; அதனால் அடியேன் எழுதுவது போட்டிக் கவிதை அல்ல.

sabeer.abushahruk said...

என் ஏ எஸ்ஸ் சார்,

படுக்கையைவிட்டு எழுந்து திருதிருவென விழித்தான். இன்னும் இருட்டாகவே இருந்தது. 

விழித்து எழும் சாதாரண மக்களின் அனிச்சை வாழ்க்கை முறை, எழுந்தும் விழிக்குமாறு இருட்டைத் திணிப்பது முறன் தொடையா மின் தடையா?

வாழ்வதற்காக உண்பவர்களுக்கிடையே 
உண்டு வாழ்பவர்களும் உண்டுதானே?

உயிர்நாடி துடித்துக்கொண்டிருக்க வேண்டுமே என்கிற கவலையில் அவற்றரைத் தூண்டி விட்டிருக்கும் எம் ஹெச் ஜேயிடம் உள்ளங்கால் அரிக்கிறதே என்று முறையிடுதல் முறையா? 



sabeer.abushahruk said...

ஹமீது,

"டேய் கேவலப் பயலே"ன்னு சப்தம் கேட்கிறதே, வியட்நாமிலிருந்து சப்தம் போட்டால் ஷார்ஜாவில் கேட்பதற்கு இவர் என்ன அந்த சாரா?

அசரீரி போலும்.

Ebrahim Ansari said...

அருமை ! அற்புதம்! அழகு!

லன்டன் ரபிக் said...
This comment has been removed by the author.
அதிரை சித்திக் said...


அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்\\
அற்புதமான வரிககள்
எனக்கு பிடித்த குணம் என் குணம்

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

ஹமீது,

//"டேய் கேவலப் பயலே"ன்னு சப்தம் கேட்கிறதே, வியட்நாமிலிருந்து சப்தம் போட்டால் ஷார்ஜாவில் கேட்பதற்கு இவர் என்ன அந்த சாரா?

அசரீரி போலும்//


அந்த சார் தான் இந்த சார் "டேய் கேவலப் பயலே" என்ற சப்தம் தம்மாம் வந்துதான் சார்ஜா வந்தது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

வாசித்து நேசித்து கருத்திட்ட அன்பு சகோதரர்கள் இப்ராஹிம் அன்சாரி காக்கா, இக்பால் சாலிஹ் காக்கா, ஜாஹிர் காக்கா,அலாவுதீன் காக்கா, ஹமீத் காக்கா, 2 சபீர் காக்காக்கள், சித்தீக் காக்கா, மச்சான் நெய்னா முகமது, கவிதை விற்பன்னர் இன்று வரை பாராட்டு பெற்ற அபுல் கலாம் காக்கா, சாகுல் சார், நிருபரின் அமீர் தாஜுதீன் மற்றும் நேசித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.

ஜாஹிர் காக்கா: உரசலுக்கான விடயத்தை உங்க தோழன் அழகாக வரிந்து இருக்கார். அதுக்கு நன்றி.

சாகுல் சார்: எனக்காக பிரதான கவிஞர் விளக்கம் தந்துள்ளார். அதுக்கும் நன்றி.

சித்தீக் காக்கா: உங்க நற்குணம் அது ஒரு பொற்குணம்!

அடுத்து சில வரிகளின் பின்னணி:
*********************************************
//எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்//

கவிஞர் சபீர் அவர்கள் ஐ போனிலேயே அனைத்தும் சாதிப்பதாக சொன்னதாலேயே இந்த வரி பிறந்தது.
--------------------------------------------------
//எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்//

2 சபீர்களின்(அவர்களின்) சென்ற முறை உரையாடல் தாக்கமே இது.
---------------------------------------------------
//ஆறும் அஞ்சு போல்
நாவில் சுவைக்கிறான்//

விஞ்ஞானி ஹமீதாக்கா எப்படியெல்லாம் கணக்கு போடுவார்கள் என்ற ஆவல் இதை எழுதத் தோன்றியது.
---------------------------------------------------
//எழுந்து விழிக்கையில்
ஒளிரும் கதிரவன் போல//

இந்த வரியை தக்க வைக்க (தி.மு.க.& அ.தி.மு.க.) அரசியலே புகுந்து கலக்கியது.
---------------------------------------------------

நன்றி மீண்டும் ஒரு முறை: கவிஞராக்கா & நெறியாளராக்காவுக்கு.
--------------------------

Ebrahim Ansari said...

தம்பி ஜகாபர் சாதிக்! அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் சிறப்பான கவிதைகளில் ஒன்றாகிய இந்த ஆக்கத்துக்கு மூன்றே வார்த்தைகளில் பின்னுட்டம் இட்டது அல்ல இட வைத்தது நமதூரில் நிலவும் மின்சாரத் தடை. கிட்டத்தட்ட மனிதனுக்கு மவுத் எப்போ வரும் என்று தெரியாது என்பதுபோல் இந்த மின்சாரமும் எப்போ போகும் எப்போ வரும் என்று ஆள்வோருக்கோ, நிர்வ்கிப்போருக்கோ கூட தெரியாது. மக்கள் படும் அவதியை சொல்லமுடியாது. ஆகவே மின்சாரம் போவதற்குள் சுருக்கமாக உங்களை acknowledge செய்துவிடவேண்டுமென்றே சுருக்கமான பின்னுட்டம்.

மற்றபடி சும்மா சொல்லவில்லை நேற்று முழுதும் என் மனதை ஆக்ரமித்த கவிதை இது. நமது கவியரசரின் வழித்தடத்தில் அவரது விரல் பிடித்து நடக்க முயன்று தடுமாறாமல் நடந்து காட்டி இருக்கிறீர்கள். தடுமாறிய இடங்களில் அவர் உங்களை தாங்கிப் பிடித்து இருக்கிறார். உங்கள் இருவருக்காகவும் நாங்கள் து ஆச்செய்கிறோம்.

(நேற்றே எழுதிய கருத்து இது ஆனால் போஸ்ட் செய்வதற்குள் மின்சாரம் பொசுக்கென்று போய்விட்டது.)

இனிமேல் , மழை வருமென்று வெளியில் செல்லும்போது குடையுடன் செல்வதுபோல் கவியரசர் கவிதை வரும்போதெல்லாம் ஜகபர் சாதிக் உடைய கவிதையும் தொடர்ந்து வருமென்று எதிர்பார்த்து இந்த தேன் மழைக்காகக் காத்து இருப்போம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல சிந்தனை கவிவடிவமாய், அம்சமாய், அழகாய் இருக்கிறது. கவிஞர் ஜாஹபர் சாதிக்(கிறார்).
------------------------------------------------------

crown said...

அழுது கேட்பவன்
அகம் மகிழப் பெறுகிறான்
எழுதி சடைத்தவன்
தொட்டே சாதிக்கிறான்.
-----------------------
தொன்று தொட்டே எழுதி சாதித்தவன்
இன்று சடவினாலே தொட்டு சாதிக்கிறான்
இது இதயம் தொட்ட இடம்.!

crown said...

தொழுது கேட்பவன்
திருப்தி யுறுகிறான்
கொள்வோ மெனும்
உள்ளமும் அடைகிறான்
-------------------------------------
அருமை! இறைவனை தொழுது கேட்பவன் பழுதில்லா வாழ்வை அடைவது சாத்தியமும், சத்தியமும்.

crown said...

பழம் புளிய மரத்தின்
காயும் நிழலும் போல்
குழம்புக்கும் பயனாகி
குளிர்ச்சியும் தருகிறான்
--------------------------------------------
காரமின்றி ஆகாரம் சமைத்த கவிஞரின் பக்குவம் பழம் தின்று கொட்டை போடும் அனுபவம்.

crown said...

எழுது கோலினால்
அன்று சாதித்தான்
எழுதாமலே யின்று
தட்டி தொட்டு படைக்கிறான்
----------------------------------------
விரல் நுனியில் உலகம்! அதி நுனுக்கம் செலுத்தும் மூளை வைத்து பட்டி,தொட்டி எல்லாம் எட்டிவிடும் நொடியில் மனிதன் சாதிப்பதில் நித்தம் பல போட்டி!

crown said...

அழுகைப் பார்வைக்கு
உருகும் நெஞ்சம் போல
நல்ல குணமுமாய்
நாளும் சிறக்கிறான்.
---------------------------------------
மனிதாபிமானம், நல்லவர்களை பற்றிய அபிமானம், அதற்கு சன்மானம் நல்ல மனங்களை சம்பாதிப்பதே!

Ebrahim Ansari said...

அஞ்சா கொலையும்,ஆறா விலையும்,
பொல்லா கொசுவும்,போதையும் கள்ளும்,
இல்லா கரண்டும்,இருளும் இல்லமும்,
கொல்லென தொடரும்,சொல்லொனா இடரை
வெல்லவும் முடியுமோ வேடிக்கை ஆட்சியில்!!!

- முகமது அஸ்லம்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

சும்மாஎழுதி பார்த்தேன் சான்றோர் முன்னே!பிழைக்கு மன்னிக்கவும்.

crown said...

அஞ்சா கொலையும்,ஆறா விலையும்,
பொல்லா கொசுவும்,போதையும் கள்ளும்,
இல்லா கரண்டும்,இருளும் இல்லமும்,
கொல்லென தொடரும்,சொல்லொனா இடரை
வெல்லவும் முடியுமோ வேடிக்கை ஆட்சியில்!!!
நல்லோர் ஆளும் காலம் நீளும் என நினைத்தால்
கள்ளர் ஆளும் நாளும் வருதே!
இல்லோர் எல்லாம் வீதியில் இருக்க!
பொல்லாதார் கையில் பணமும் இருந்து
நல்லோர்தனை நிதமும் வாட்டும்
காலம் என்று தீரும் ? நம்மை நன்மை வந்து சேரும்?
-------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா நலமா? பிழை இருப்பின் மன்னியுங்கள்

Ebrahim Ansari said...

அன்பு கிரவுன்! தழைக்கும் உங்கள் கவிதையில் பிழைக்கு வழி ஏது?

நான் பதிவு செய்த கவிதையை எழுதிய முகமது அஸ்லம் அவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இப்ராஹிம் அன்சாரி காக்கா:
உங்களின் பேரன்பிற்கும் நல் துஆவுக்கும் குமரி நட்பின் அருமை கருத்துக்கும் மகிழ்வுடன் நன்றி. மேலும் மின் தடைகளே தொடர்ந்தாலும் தங்களின் கண் பார்வையில் தடங்கள் இல்லாமலும் அனைத்து ஆரோக்கியங்களும் தொடர துஆ செய்தவனாக!

மிஸ்டர் க்ரவ்ன்:
வ-அலைக்கு முஸ்ஸலாம்,
மின் தடைகளான இவ்வாட்சி காலத்தில் சொல்லாமல் வரும் மின்சார மின் ஒளி போல் மின்னும் கருத்துகள் இந்த அவைக்கு ஒளிரூட்டும் பிரகாச நட்சத்திர ஒளி.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் கைபிடித்து “நடை” பயிலும் பிஞ்சுக் கவிக்குழந்தாய்!

உன்னிடம் சுகாதாராமானத் தமிழ்க் காற்றின் சுவாசமும்;வீரமான எழுச்சியூட்டும் குருதியாய்ப் பாயும் எண்ண ஓட்டமும்;குறைகளைத் தாங்கும் எதிர்ப்பு சக்தியாய் ஊட்டமுள்ள “பின்னூட்டவாதிகளாய்” இருக்கும் இரத்த அணுக்களும் உன்னைச் சுற்றிலும்- உன்னைப் பற்றியிருப்பதால், நீ வாழ்வாய்; வளர்வாய்!
இன்ஷா அல்லாஹ்!

Yasir said...

அவனாயிருக்காவிட்டாலும்,இவனாயிருக்காவிட்டாலும் நான் M.H. ஜஹபர் சாதிக்கின் நல்ல நண்பனாக இருக்க ஆசை....உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் கவிதையையும் சேர்த்து...வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அருமை கவிதை வரிகள்.
வாழ்த்துக்கள் ஜாபர்சாதிக்

//ஏழ்மை இழிவெனெ
பழிக்கும் உலகிலே
இல்லார் தூற்றும்
அவனா யிராதே!//

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நட்புக்கு நன்றி. நண்பர் யாசிர்,
கருத்துக்கு நன்றி சம்சு காக்கா.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நட்புக்கு நன்றி. நண்பர் யாசிர்,
கருத்துக்கு நன்றி சம்சு காக்கா.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு