Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 2 தொடர்கிறது 24

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2012 | , , ,

கலந்துரையாடல். – பகுதி ண்டு

ஜனாப்.  ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின்  மொழி ( English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா சொன்னார் . அந்த விபரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதும் அங்கிருந்த நானும் பேராசிரியரும்  அதை ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மூலமே தெரிந்து கொள்ள விரும்பினோம்.  நூர் முகமது அவர்கள் மட்டும்  ஒரு சிறிய நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பின்  பொருள் நூர் முகமது அவர்களுக்கு இந்த விபரம் ஏற்கனவே தெரியுமென்பதன் அடையாளம்  ஆகும். 

“என்ன நூர் முகமது உங்களுக்குத் தெரியுமா “  இது நான்.

“தெரியும். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் எங்களுக்கு வகுப்பு எடுக்கும்போது சொல்லி இருககிறார்கள். ஆனாலும் அதிலும் ஒரு வியக்கத்தக்க செய்தி உண்டு அதை  பெர்னாட்ஷா  ஆங்கிலத்தைப் பற்றிச் சொன்ன விமர்சனத்துக்கான ஜஸ்டிபிகேசனுக்குப் பிறகு சொல்கிறேன்” என்றார்.  

நாங்கள் ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம் விபரம் கேட்டோம். 

ஹாஜா முகைதீன் சார் அவர்கள் கூறினார்கள். “ ஒரு முறை ஒரு அவையில் பெர்னாட்ஷா  ஆங்கிலத்தின் சில குழப்பமான உச்சரிப்புகளின் காரணமாக அதை ஒரு பைத்தியக்காரர்களின் மொழி என்று கூறினார் . உடனே பெரிய எதிர்ப்புக் கிளம்பியது.  பெர்னாட்ஷா  மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று பலர் கிளம்பினார்கள். இதற்கு பெர்னாட்ஷா  மன்னிப்புக் கேட்கமாட்டேன். ஆனால் நான் அப்படிக் கூறியதற்கான காரணத்தை வேண்டுமானால்  சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு ஆங்கிலம் பைத்தியக்காரர்களின் மொழியா இல்லையா? என்பதை   நீங்களே சொல்லுங்கள்”  என்று  கூறிவிட்டு அவர் அப்படிக் கூறியதற்கான காரணத்தை அவர்களிடம் விளக்கினார்.  பெர்னாட்ஷாவை   எதிர்த்தவர்கள் வாயடைத்துப் போனார்கள்.  “ அப்படி அவர் என்ன நிரூபித்தார் “ என்று நான் கேட்டேன்.

உடனே அவர் ஒரு காகிதத்தை எடுத்து GHOTI   என்கிற ஆங்கில வார்த்தையை எழுதி இதைப்படி என்றார். நான் அதை இந்தியில் GH என்கிற உச்சரிப்பு  வரும் விதமாக கோட்டி என்று படித்தேன். எல்லோரும் அப்படித்தானே படித்திருக்க முடியும்?   ( நானும் இந்தி படித்து இருக்கிறேனாக்கும்!)

இதையேதான் தன்னிடம் எதிர்க் கேள்வி கேட்டவர்களிடம் பெர்னாட்ஷா   GHOTI என்று எழுதி  அவர்களைப் படிக்கச்சொன்னார். அவர்களும் நான் படித்தது போலவே  கோட்டி என்றே படித்தனர். ஆனால் பெர்னாட்ஷா  சொன்னாராம் இதன் உச்சரிப்பு FISH  என்று.  வந்தவர்களுக்கு மூளை குழம்பி விட்டது. இந்த பெர்னாட்ஷா  சரியான கிறுக்கராக இருப்பார்  போல் தெரிகிறது என்று தமக்குள்ளே சிரித்துக்கொண்டே, “ என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டார்கள்.  அவர் விபரம் சொன்னார். 

ஆங்கிலத்தில் ROUGH என்கிற வார்த்தையில் கடைசி இரண்டு எழுத்துக்கள்  ஆகிய  GH க்கு உங்கள் ஆங்கிலம் தரும் உச்சரிப்பு  F , அதேபோல்  WOMEN என்கிற வார்த்தையில்  O என்கிற எழுத்து   I என்கிற உச்சரிப்பைத் தருகிறது அத்துடன்   STATION என்கிற வார்த்தையில் TI என்கிற எழுத்துக்கள் தரும் உச்சரிப்பு  SH என்பதாகும். அப்படிப் பார்த்தால் GHOTI என்பதை FISH  என்று படிக்கலாமா கூடாதா என்றும்,  இப்படி குழப்பம் ஏற்படுத்தும் மொழி பைத்தியக்கார மொழியா ? இல்லையா? என்று கேட்டாராம். 

மேலே கண்ட இந்த விளக்கத்தை ஜனாப். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் கூறியதும் , நூர் முகமது அவர்கள் இது தொடர்பான மற்றொரு செய்தியை கூறி  ஆச்சரியப்படுத்தினார்கள். அதாவது நூர் முகமது அவர்கள் காதிர் முகைதீன் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது 1972 –ஆம் வருடம்  ஹாஜா முகைதீன் சார் அவர்கள்  இந்தத்  தகவலை வகுப்பில்  கூறியதாகச் சொன்னார்கள். ஆனால் அதைவிட வியப்புக்குரியதாக  நூர் முகமது அவர்கள்  சொன்னது என்னவென்றால்   1972 ஆம் ஆண்டு ஹாஜா முகைதீன் சார் அவர்கள் வகுப்பில் சொன்ன இந்த செய்தி,  39 ஆண்டுகளுக்குப் பிறகு   2011 ஆம் ஆண்டு கனடா நாட்டிலிருந்து     International Language Institute, Canada, www.ili.ca என்கிற  வலை தளத்தில் வெளிவந்து ஆங்கில  மொழி தொடர்பான சிக்கல்கள் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். அப்படியென்றால் நாம் எவ்வளவு பேறு பெற்ற பெருமகன்களை நமது ஆசிரியர்களாகப் பெற்று இருந்தோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த நேரம் நானும் நமது பள்ளியில் குறைந்த காலமே தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுக்கூரைச் சேர்ந்த  புலவர் திருஞன சம்பந்தம்  அவர்களை நினைவுறுத்திச் சொன்னேன்.  புலவர் அவர்கள் ஒரு தமிழாசிரியர் மட்டுமல்ல நல்ல கவிஞர்- சிந்தனையாளர். புரட்சிக் கவி பாரதிதாசனின் பாடல்களை அவர் வகுப்புகளில் விவரிக்கும் அழகே அழகு. திராவிடக் கழகத்திலும் – பெரியாரோடும்  ஈடுபாடுடையவர். தமிழ் மொழிக்கல்வி கற்க வேண்டுமென்று மாணவர்களிடம்  வகுப்புகளில் வலியுறுத்துவார். ஆங்கில மொழிக் கல்வியின் எதிர்ப்பாளர். அவர் கூறிய ஒரு சொற்றொடர் எனக்கு நினைவுக்கு வந்தது . அது கிட்டத்தட்ட ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் பற்றிய கருத்துக்கு துணை நிற்பதாகும்.  அதாவது,  பி(P) யு டி  PUT  புட் என்றும்  பி( B) யு டி    BUT  பட் என்றும் கூறி நமை குழப்பும் மொழி தேவையா  என்று  கேட்பார்.  

புலவர் அவர்களை இன்னொரு சம்பவத்திலும் நான் நினைவு படுத்திச்சொன்னேன். அதற்கு முன் சில நிகழ்ச்சிகளை குறிப்பிடவேண்டும். 

காதிர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியாராக பணிக்கு சேரும் முன்பு ஹாஜா முகைதீன் சார் அவர்கள்    காதிர் முகைதீன் கல்லூரியில் நூலகராக வேலை பார்த்து வந்தார்கள். (அந்த நூலகத்தில்  இருந்த  நூல்களை கல்லூரி மாணவர்கள் படித்தார்களோ என்னவோ ஹாஜா முகைதீன் சார் அவர்கள் படித்து இருப்பார்கள்.) நான் குறிப்பிட விரும்பும் அந்த வருடம் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள்  பள்ளியின் மாணவர் தலைவர் மற்றும் அன்றைய S.S.L.C என்கிற பள்ளியின் இறுதியாண்டு படிக்கும் மாணவர். பள்ளியில் வருடா வருடம் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த ஆண்டு விழாக்களில்  மாணவர்கள் பங்கேற்று நடிக்கும் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது  வழக்கமாகும்.

அந்த வருடமும்  நாடக நிகழ்ச்சியுடன்   ஆண்டு விழாவை நடத்த வேண்டுமென்று அன்றைய தலைமை ஆசிரியர் மர்ஹூம் P.S.R. ஜெயினுலாபிதீன் அவர்கள்  பணித்து இருந்தார். நான் அப்போது ஒன்பதாம் வகுப்பு  மாணவன். ஆண்டு விழா நாடகத்துக்கான தேர்வு பற்றிய கலந்துரையாடலின் போது மதிப்பிற்குரிய வாவன்னா சார் அவர்கள், கல்லூரியில் நூலகராக இருக்கும் ஹாஜா முகைதீன் அவர்கள்  நிறைய நாடகங்கள் எழுதிவைத்து இருக்கிறார் என்று கூற ஜனாப். ஹனிபா சார் அவர்கள் அதை வழி மொழிந்தார். உடனே நானும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு  கல்லூரியின்  நூல் நிலையம் சென்று ஹாஜா முகைதீன் சார் அவர்களை சந்தித்து விபரம் சொன்னோம். உடனே அவர்கள் எங்களுக்காகத் தர சம்மதித்த நாடகம்தான் ஒட்டக்கூத்தர்.

இதில் ஓட்டக்கூத்தராக பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், சீத்தலைச் சாத்தனாராக மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ரெஜாக் ( கனடா) அவர்களும், சோழ மன்னனாக நானும், எனக்கு  அரசியாக அப்துல் மஜீது என்கிற நண்பரும் (பெண்வேடமிட்டுத்தான் ) நடித்தோம். அந்த நாடகத்தில் ஒரு காட்சியில் ஒட்டக்கூத்தர்  மிகவும் மனமொடிந்து போயிருப்பார். அரசன் வேடமிட்ட நான் அவருக்கு ஆறுதல் கூறும்போது,

“நீங்கள் அரும்பைத் தொள்ளயிரம் அளித்த அறிஞராயிற்றே!  தக்கயாகப்பரணி தந்த செக்கர் வானத்து முழுமதியாயிற்றே” என்று      வசனம் பேச வேண்டும். (இந்த வசனங்கள் இன்று வரை எனக்கு மறக்கவில்லையே!) 

இந்த நாடகத்துக்கான ஒத்திகைகள் பலமுறைகள் நடந்தன. பள்ளி வேலை நேரம் முடிந்ததும், நாங்களும் , கல்லூரி நூல் நிலையத்திலிருந்து ஹாஜா முகைதீன் சார் அவர்களும்  இப்போது இ. சி. ஆர். சாலையில் இருக்கும் அப்போதைய பள்ளியின் நெசவுக் கூடத்தில் கூடி தினமும்  ஒத்திகைகள் பார்ப்போம்.  

பள்ளியின் ஆண்டுவிழா நடைபெறுவதற்காக குறிப்பிடப்பட்ட இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியின் ஆசிரியர்கள்  அனைவரையும் அழைத்து ஒத்திகைகள் முழுமையடைந்த முழு நாடகத்தையும் அச்சுப் பிசகாமல் அரங்கேற்றிக் காட்டவேண்டுமென்று நாடகத்தின் இயக்குனர் ஹாஜா முகைதீன் சார்  அவர்கள் கூறினார்கள். அதன்படி பள்ளியில் அப்போது பணியில் இருந்த அனைத்து ஆசிரியர்களும் நெசவுக்கூடத்தில் கூட,   முழு வடிவம் பெற்ற நாடகத்தை அரங்கேற்றிக் காட்டினோம்.  நாடகத்தில் மேலே கண்ட வசனத்தை நான் பேசும்போது வழக்கு மன்றங்களில் ‘அப்ஜெக்க்ஷன் மை லார்ட்’  என்று ஒரு குரல் கேட்குமே அப்படி ஒரு உரத்த குரல் கேட்டது. குரல் எழுப்பியவர் நான் முன்னர் குறிப்பிட்ட மதுக்கூர் புலவர் திருஞனசம்பந்தம் அவர்கள் ஆவார். “இந்த வசனத்தில் வரும் செக்கர் வானத்து முழுமதி என்பதில் ‘செக்கர்’ என்கிற  வார்த்தை தமிழில் இல்லை. ‘செக்கர்’ என்பதற்கு பதில் ‘செவ்வானத்து  முழுமதி’ என்றுதான் இருக்க வேண்டும்   “ ஆகவே அதன்படி வசனத்தை மாறுங்கள் என்று கண்டிப்புடன்  சொன்னார். சொன்னவர் தமிழ் ஆசான். எழிதியவரும் தனது தமிழ் ஆற்றலில் சற்றும்  குறைந்தவர் அல்ல.  தக்கயாகப்பரணி என்பதற்கு எதுகை மோனை மாறாமலிருக்க செக்கர் வானம் என்று போட்டிருந்தாலும்  தமிழில் இல்லாத அந்த  வார்த்தையை தவிருங்கள் என்று  அறிவுரை தந்தார்  புலவர். உடனே ஹாஜா முகைதீன் சார் அவர்கள் அந்த இடத்திலேயே வசனத்தை மாற்றினார். “தக்கயாகப்பரணி தந்த சொக்கத்தங்கம் நீங்களாயிற்றே!” என்பதே  திருத்தப்பட்ட வசனம். கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்ட பள்ளியின் ஆண்டுவிழாவில் நாடகம் அரங்கேறியது.   இந்த விபரங்களை நான் நினைவுபடுத்திக் கூறியதும் ஹாஜா முகைதீன் சார் அவர்கள் மலைத்துப் போனார். 

இந்த சந்தர்ப்பத்தில் நான் ஹாஜா முகைதீன் சார் அவர்களிடமும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களிடமும்     அதிரைநிருபரில் தொடர்ந்து கல்வி பற்றிய விழிப்புணர்வு தரும் ஆக்கங்களை அவர்கள் இருவரும்  தொடர்ந்து எழுதவேண்டுமென்று ஒரு கோரிக்கை வைத்தேன். இருவரும் ஏற்றனர். ஆனால் தட்டச்சு செய்ய முடியாது என்று சொன்னார்கள். நான்,  “ நீங்கள் எழுதி மட்டும் கொடுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று சொன்னேன். விரைவில் எதிர்பாருங்கள். இறைவனருளால்  அதிரை நிருபரின் தரம் இன்னும் கூடப்போவதை பகிர்கிறேனே தவிர வேறொன்றுமில்லை. 

அடுத்து ஹாஜா  முகைதீன் சார் அவர்கள் என்னை நோக்கி “ நீ வாணியம்பாடியில் படிக்கும்போது பேராசிரியர் தி. மு. அ. காதர் அங்கு பணியாற்றினாரா ?“ என்று கேட்டார். நான்  “ ஆமாம் ! நாங்கள் நல்ல நண்பர்கள் போல் இருந்தோம். மூன்று ஆண்டுகள் தமிழ் மன்றத்தின் செயலராக நான்  தொடர்ந்து இருந்ததால் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடனும் மற்ற தமிழ்      பேராசிரியர்களுடனும் நெருக்கமான உறவு இருந்தது”  என்று கூறினேன்.

“பேராசிரியர் தி .மு. அ. காதர் கவிதை எழுதுவாரா?” என்று கேட்டார்.  அவர் கவிதை    வகுப்புகளாகவே நடத்துவார் என்றும்    சில சூழ்நிலைகளைச் சொல்லி  அதற்கு கவிதையின் சிந்தனையில் மாணவர்களை பதில் சொல்லச் சொல்லும்  பழக்கம் அவருடையது. என அவருடன்  அனுபவத்தைச் சொன்னேன் .

ஒரு முறை வகுப்பில் ஒரு கேள்வி வைத்தார். வாழ்நாள் முழுதும்  மலடியாகவே  வாழ்ந்த ஒரு  பெண் உயிர் துறக்கும் வேளையில் ஒரு உயில் எழுதி வைக்கிறாள். அந்த உயிலில் என்ன எழுதுவாள்? இது கேள்வி. 

மாணவர்கள் சொதப்பினார்கள் என்றால் அப்படி சொதப்பினார்கள். இறுதியில் அவரே கரும்பலகையில் எழுதினார்  இப்படி

மலடியின் மரண ஓலை  
என் உடலை நான்   இறந்த பிறகு
 எரிக்க வேண்டாம் 
புதைத்துவிடுங்கள் 
அப்போதாவது 
என் வயிற்றில் 
புழு பூச்சி வைக்கட்டும். 

இப்படி சுருக்கமாக  கவிதை சிந்தனைகளை வளர்ப்பது பேராசிரியர் தி.மு. அ. காதர் அவர்களின் இயல்பு.  இன்னும் இது போல் எத்தனையோ. (விலை மகளின் கல்லறையில் என்ன எழுதலாம்? போன்றவை- இவை நேயர் விருப்பம் . கேட்டால் அடுத்துத் தருவேன். ) 

அடுத்து,  பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் தான் ஒரு முறை கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை புகழ்ந்து பேசிய ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட ஆரம்பித்தார். 

அந்த நிகழ்ச்சியும், கவிக்கோ அவர்களுடன் எனது அனுபவங்களும் அறிய காத்திருப்போமா?
இன்ஷா அல்லாஹ் தொடரும்.  
இபுராஹீம் அன்சாரி

24 Responses So Far:

sabeer.abushahruk said...

கலந்துரையாடலை வாசித்ததைவிட கலந்துகொண்டு கேட்ட உணர்வே என்னில் தங்குகிறது.
அப்படியொரு யதார்த்த நடையைக் காக்கா அவர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

ஜனரஞ்சக சஞ்சிகைகளில் நாட்டம் குறைந்து வருவதற்கு இதுபோன்ற தரமான எழுத்தாளர்களைக்கொண்டு அதிரை நிருபர் நடத்தப்படுவதே காரணம்.

மலடியின் உயிலில் கவிஞரின் உணர்வு நெஞ்சை அள்ளுகிறது.

"வேண்டுமா?" என்றெல்லாம் கேட்காமல் அத்தனையும் அள்ளித் தாருங்கள் காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

(ரசனைமிக்க பெருசுகளின் இந்தக் கலந்துரையாடலில் படிப்பினை இருப்பதைக் காண்கிறேன். வாழ்த்த வயதில்லை. து ஆச்செய்கிறேன், பெருசுகள் பெற்றம் பெருசுகளாக நீடூழி வாழ)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கற்றோர் மன்றத்தில் நடந்த உரையாடல் எழுத்தோவியமாக எங்களுக்கு கிடைக்கப் பெறுவது பாக்கியமே !

சுவராஸ்யம் கூட்டும் அச்சு பிசகாத அசத்தல் கலந்துரையாடல்...

தொடருங்கள் அதோடு தனி மின்னஞ்சலில் குறிப்பிட்ட அந்த பெருமகனையும் அழைத்துக் கொள்ளுங்கள் அடுத்த உரையாடலில் இன்ஷா அல்லாஹ் !

crown said...

(விலை மகளின் கல்லறையில் என்ன எழுதலாம்? போன்றவை- இவை நேயர் விருப்பம் . கேட்டால் அடுத்துத் தருவேன். )
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இவள் இன்றுதான் தனிமையாக உறங்குகிறாள். என்று தானே இருக்கும்?????

crown said...

அற்புதம்,அற்புதம்,அற்புதம் அழகிய நடையியல்! முத்துக்குவியல்!சுவைதரும் (குழப்பம் இல்லாத=குழம்பு)அவியல்!படைத்தோரும்,பரிமாறியோரும் சடைத்தவர் அல்லர் அள்ளி உண்ணும் நமக்கு ஏது தயக்கம்??????

Unknown said...

<<<<<<<<<
மலடியின் மரண ஓலை
என் உடலை நான் இறந்த பிறகு
எரிக்க வேண்டாம்
புதைத்துவிடுங்கள்
அப்போதாவது
என் வயிற்றில்
புழு பூச்சி வைக்கட்டும்.
>>>>>>>>>>>>

அமர்க்களமான கவிதை சகோ இபுறாகிம் அன்சாரி.

”ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி” என்று பெர்னாட்சா சொல்லலாம். ஆனால் அவருக்கே தெரியும் எந்த மொழியிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் உண்டு என்று.

இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.

ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார்.
புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் கொண்டு வந்தீர்கள். 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்

இதையே வேறு விதமாகவும் அழகாக அருந்தமிழ் கட்டினார்கள்

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
மன்னன் : தருகிறேன்.
புலவர்: அறுநூறு------ தரமுடியுமா?
மன்னன்: தருகிறேன்.
புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
மன்னன்: தருகிறேன்.
புலவர்: எண்ணூறு சந்தோஷமாக இருக்கும்.
மன்னன்: தருகிறேன்.

ஆனால், மன்னன் கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றீறே?
மன்னன்: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: அறுநூறு தருகிறேன் என்றீறே?
மன்னன்: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றீறே?
மன்னன்: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
மன்னன்: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும், மன்னனே உங்கள் தமிழ்முன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.
மன்னனும், புலவரே, யாம் தமிழுடன் விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

அன்புடன் புகாரி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்களாலும் இரு சாராலும் இறைவனருளால் அதிரை நிருபரின் தரம் இன்னும் கூடி வருவது மகிழ்வை தருகிறது.

தொடர்ந்து அள்ளித்தாருங்கள் உங்கள்கள் உள்ளத்தில் உள்ள நல்லதை!

இப்னு அப்துல் ரஜாக் said...

Haja முகைதீன் சாரின் விளக்கம் மீண்டும் கிளாஸ் எடுத்தது போல் இருந்தது. அதை இன்ராஹீம் அன்சாரி காக்கா விளக்கம் அருமை. நூர் முஹம்மத் காக்கா என்ன சொல்லப்போகிறார்கள் என அறிய ஆவலாய் ullathu.Haja முகைதீன் சாரின் விளக்கம் மீண்டும் கிளாஸ் எடுத்தது போல் இருந்தது. அதை இன்ராஹீம் அன்சாரி காக்கா விளக்கம் அருமை. நூர் முஹம்மத் காக்கா என்ன சொல்லப்போகிறார்கள் என அறிய ஆவலாய் உள்ளது.

KALAM SHAICK ABDUL KADER said...

கற்றவர் சபையின் கலந்துரையாடலில் நற்றமிழ்ப் புகழ்பாடும் ஆனந்தம் மனத்தினில் பரவும் ஓர் உணர்வினைக் காண்கிறேன். மீண்டும் கா.மு.உ.பள்ளிக்குச் சென்று தமிழ்ப்பாடம் படித்தது போன்ற ஓர் உணர்வினைக் கண்டேன். திருஞானச் சம்பந்தனார் அவர்களிடம் தமிழ்ப்பாடம் கற்கும் வாய்ப்பு இல்லாமற் போனதில் வருத்தம் உணர்கிறேன். தி,மு.அப்துல்காதிர் அவர்கள் தலைமயில் சென்ற மாதம் துபையில் நடந்த கவியரங்கில் அடியேனும் கவிதை வாசித்தேன் என்பதும் அவர்களின் வாழ்த்துரையில் “வயதைப் போல் வளர்க இவ்விலக்கிய அமைப்பு” என்ற பொருள் பொதிந்த அச்சொற்களின் ஆழம் என்றும் என் நினைவில் நிற்கும்.
நாவலர் நூர்முஹம்மத் அவர்களின் நினைவாற்றல் கண்டு வியந்தேன்!

sabeer.abushahruk said...

அன்புடன் புகாரி அவர்கள் தந்திருக்கும் அவைத் தமிழின் சுவைக்கு நூற்றுக்கு நூறு தரலாம். இவை மொழிக்கு குறையல்ல, குதூகலம்.

crown said...

sabeer.abushahruk சொன்னது…

அன்புடன் புகாரி அவர்கள் தந்திருக்கும் அவைத் தமிழின் சுவைக்கு நூற்றுக்கு நூறு தரலாம். இவை மொழிக்கு குறையல்ல, குதூகலம்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஈத் முபாரக்.கவிஞர் காக்கா அப்ப நான் சொன்ன பதிலுக்கு எனக்கு எவ்வளவு மதிப்பெண்?காரணம் நான் சரியான பதிலைஎழுதி இருப்பதாக அறிஞர் இபுறாகிம் காக்கா இன்று காலை தொலைபேசியில் பேச்சினூடே சொன்னார்கள்.

Shameed said...

'கட்டா மீனு சுட்டாலும் நாறாது'

'கடல் மீனுக்கு கண்ணுலே சூடு'

இப்படி பட்ட மீன் கதை தெரிந்த எங்களுக்கு ஜனாப் ஹாஜா முஹைதீன் சார் அவர்களின்
வித்தியாசமான மீன்கதையும் விளக்கமும் அருமை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்னு... உனக்கு சொல்லியா தரனும் அல்லது தட்டியா கொடுக்கனும்... தானா வருமே(டா)ப்பா !

ஆஹா ! சகோதரர் அன்புடன் புகாரி அவர்களின் வருகையும் களைகட்டியிருக்கிறது...

Ebrahim Ansari said...

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றபடி இந்த ஆக்கத்தில் கவிதை தொடர்பான கருத்துக்களை தெரிவித்த கவிஞர் சபீர், கவியன்பன், அன்புடன் புகாரி ஆகியோருக்கும் மிக்க நன்றி.

கிரவுன் என்கிற ஒரு பாசப்பறவை தொலை தூரத்திலிருந்து அடிக்கடி அழைத்து அலை பேசியில் கவிதை நடையில் உரையாடும் . இவரை ஒரு கவிஞர் என்று சொன்னால் ஏற்க மறுப்பார். அத்தனை தன்னடக்கம். ஆனால் கவிஞர்கள் ஒரே மாதிரியாக சிந்திப்பார்கள் என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்தும்படி பேராசிரியர் தி, மு.அ. காதர் அவர்கள் விலைமகளின் கல்லறையில் என எழுதலாம் என்ற சிந்தனைக்குரிய பதிலை ஒரே கருத்தில் சரியாக எழுதி இருக்கும் சிறப்பு மகிழத்தக்கது. பாராட்டத்தக்கது.

Shameed said...

crown சொன்னது…
(விலை மகளின் கல்லறையில் என்ன எழுதலாம்? போன்றவை- இவை நேயர் விருப்பம் . கேட்டால் அடுத்துத் தருவேன். )
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இவள் இன்றுதான் தனிமையாக உறங்குகிறாள். என்று தானே இருக்கும்?????

---------------------------------------------------------------------'இன்றுமுதல் இவளை தனிமையில் உறங்க விட்டுள்ளார்கள்' என்றும் சொல்லலாம் அல்லவா நான்
கவிஞன் அல்ல அதனால் மாறுபட்ட கருத்து மாமா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மலேஷியாவில் இன்னும் பெருநாள் மஸ்து இருக்கோ !?

Ebrahim Ansari said...

சாகுல் ! விளைவு என்னவோ தனிமை உறக்கம்தான். ஆனாலும் பலர் மாறுபட்ட கோணங்களில் சிந்திப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.

Ebrahim Ansari said...

//இதோ தமிழின் பைத்தியக்காரத்தனம். உண்மையில் இவை பைத்தியக்காரத்தனமா? அல்லது மிகுந்த சுவையுடையவையா என்பதை நேயர்கள்தான் முடிவு செய்யவேண்டும்.//

ஜனாப். அன்புடன் புகாரி அவர்களின் பின்னூட்டத்தின் மேற்கண்ட பகுதியை பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மிகுந்த சுவை உடையவை என்று கூறுகிறார்.

அதே நேரம் தமிழின் பைத்தியக்காரத்தனம் என்கிற வார்த்தையை கடுமையாக சாடுகிறார்.

ஹாஜா முகைதீன் சார் அவர்கள் சுட்டிக்காட்டிய ஆங்கிலத்தின் குழப்பம் தரும் சொல்லை சிலேடை நயமுள்ள தமிழின் சொற்சுவையுடன் முடிச்சுப் போட்டு தமிழின் பைத்தியக்காரத்தனம் என்று எழுதுவதும் அவ்விதம் சிந்திப்பதும் ஒரு தமிழ்ப் பேராசிரியரால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பதியச்சொன்னார்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

கட்டுரை ஆசிரியர் இபுராஹீம் அன்சாரிகாக்கா ஹாஜாமுஹைதீன் சார், நூர் முஹம்மது காக்கா ஆகியா மூவரையும் இன்று(28.10.2012)ஓர் கருத்தரங்கில் சந்தித்தேன் நானும் அதில் கலந்து கொண்டமைக்கு பெருமை அடைகிரேன்
பேராசிரியர் அப்துல் காதர்(மச்சான்)அவர்களோடு காரில் பயணம் செய்யும் சந்தர்ப்பம் கிட்டியது அப்பொழுது 5 க்கும் மேர்பட்ட நபர்கள் பயனித்தோம் அப்பொழுது அவர்கள் கூரினார்கள் 4 நபர்கள் இதில் பயனித்தால் அது ப்லசர்கார் 6 நபர்கள் பயனிக்கும் பொழுது இது ப்ரசர்கார் ஆகிறது என்றார்கள்

Unknown said...

>>>>>Ebrahim Ansari சொன்னது…
அன்புடன் புகாரி அவர்களின் பின்னூட்டத்தின் மேற்கண்ட பகுதியை பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மிகுந்த சுவை உடையவை என்று கூறுகிறார்.
அதே நேரம் தமிழின் பைத்தியக்காரத்தனம் என்கிற வார்த்தையை கடுமையாக சாடுகிறார்.<<<<<

அமுத தமிழை விளையாட்டாகக் குறைத்துக்கூறினாலும் அதை ஒரு தமிழனும் ஏற்கமாட்டான். தமிழ்ப்பேராசிரியர் எப்படி ஏற்பார்?

ஆங்கிலத்தில் இடத்திற்கு ஏற்ப உச்சரிப்பு மாறுவதும் அந்த மொழிக்கே உரிய தனிப் பண்புதான் அழகுதான். அதில் பிழை ஏதும் இல்லை.

அது போலவே தமிழில் சொல்லாடல் ஓர் அழகுதான் பிழையில்லை.

ஒரு மொழியை ஒரு காரணத்திற்காகப் பைத்தியக்கார மொழி என்று சொல்ல வந்தால் எல்லா மொழிகளையுமே பைத்தியக்காரமொழி என்று சொல்லிவிடலாம்.

இதழ்கள் ஊருமடி -> இதழ் கள் ஊருமடி

எழுத்துக்களுக்கு இடையில் ஒரு இடைவெளி இட்டால் பொருளே மாறிப்போகும் மொழியை அழகென்பதா பைத்தியக்காரன் மொழி என்பதா?

இந்த இருநூறு முந்நூறு நானூறு விளையாட்டால் தமிழை நீதிமன்றத்தில் பயன்படுத்துவதில் பெரும் சிக்கல் வரும் என்று கண்ணதாசன் சொன்னார். நீதிபதிக்குப் பைத்தியமே பிடித்துவிடும் தீர்ப்பு வழங்க எப்படி முடியும் என்றார்.

இப்படியான மேலும் சிலவற்றையும் காண்போம்:

”வாரும் இரும்படியும்” என்றான் கொல்லன். சினந்த கவிஞருக்கே கொல்லன் விளக்கம் தர வேண்டியதாயிற்று “வாரும், இரும், படியும்” உங்கள் கவிதைகளை என்று

”பணத்தட்டு யாருக்கு” என்றான் புலவன், இரண்டும் உனக்குத்தான் என்றான் மன்னன். பணத்தட்டும் உனக்கு பணத்துக்கான தட்டுப்பாடும் உனக்கு.

கடைமடை என்ற ஊரிலிருந்து கடைசியாக மேடையேற வந்த கவிஞரை ”கடைமடையரே” என்றழைத்தார் கவியரங்கத் தலைவர், ”மடத்தலைவரே” என்று வணக்கம் சொன்னார் கடைமடைக் கவிஞர்

இப்படியாய்த் தமிழில் ஏராளம் உண்டு. சுவைத்துச் சுவைத்து இதயம் மகிழ்வானில் இறக்கைகட்டிக்கொண்டு பறக்கும்.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் "வளையும்"
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்

நான் பிறந்தேன் என்பது என் அறிமுகக் கவிதை.... இதில் கதிர் விளையும் என்றல்லவா இருக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். அவருக்கு நான் எழுதிய மறுமொழி இதோ:

கதிர் விளையும்தான். அது மற்றவர்கள் ஊரில்!

ஆனால் கதிர் விளைந்து அழகு நெல்மணிகளின் பாரம் தாளாமல் அப்படியே வளையும்!
அது எங்கள் ஊரில், ஒரத்தநாட்டில் :-)

இது பிழையாய் எழுதியதல்ல, அமுதத் தமிழில் அழகாய் எழுதியது.

(தொடரும்)

அன்புடன் புகாரி

Unknown said...

>>>>>ஹாஜா முகைதீன் சார் அவர்கள் சுட்டிக்காட்டிய ஆங்கிலத்தின் குழப்பம் தரும் சொல்லை சிலேடை நயமுள்ள தமிழின் சொற்சுவையுடன் முடிச்சுப் போட்டு தமிழின் பைத்தியக்காரத்தனம் என்று எழுதுவதும் அவ்விதம் சிந்திப்பதும் ஒரு தமிழ்ப் பேராசிரியரால் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று பதியச்சொன்னார்.<<<<<

ஒரு தமிழ்ப்பேராசிரியரின் மனம் நோகச் செய்வது என் விருப்பம் அல்ல. நான் தமிழை நேசிப்பவன். அதன் இனிமைக்குள் சிலிர்ப்பவன். எந்த மொழியிலும் பைத்தியக்காரத்தனம் என்பது நம் பார்வையில்தான் இருக்கிறது என்பதே நான் முன்வைக்கும் கருத்து.

இதோ மேலும் சில நயங்கள்:

”என்னங்க வடை ஊசி இருக்கா” என்றாள் பழைய உளுந்து வடையைக் கணவனிடம் கொடுத்த மனைவி.

ஊசி மட்டும் இல்லை, நூலும் இருக்கு, தையலுக்கு உதவும் இந்தா என்றார். (தையல் = பெண்)

”பால் கசக்கிறதா?” எனக் கேட்டாள் பாலைத் துணியில் தோய்த்து படுக்கையில் சாகக் கிடக்கும் கவிஞனுக்கு ஊட்டிவிடும்போது அவன் முகம் சுளித்ததனால்.

கவிஞனுக்கு மரணப்படுக்கையிலும் சிரிப்புதான் வந்தது தமிழின் சுவைதான் எழுந்தது.

”பாலும் கசக்கவில்லை, துணியும் கசக்கவில்லை” (துணி கசக்கவில்லை = அழுக்குத் துணியைத் துவைக்கவில்லை)

தமிழ்ப் பேராசிரியர் என்னைத் தவறாக எண்ணக்கூடாது என்பதற்காக நான் எழுதிய ஒரு கவிதையை இங்கே இடுகிறேன்:

இதயத்தில் இனிக்கின்ற...

இதயத்தில் இனிக்கின்ற
மொழி - தமிழ்
மொழியினுள் துடிக்கின்ற
இதயம்

கவிதைக்குள் விளைகின்ற
வைரம் - தமிழ்
வைரத்துள் ஒளிர்கின்ற
கவிதை

விரலுக்குள் ஊறிவரும்
எழுத்து - தமிழ்
எழுத்தினில் நிமிர்கின்ற
விரல்

ஓசைக்குள் கூடுகட்டும்
சுகம் - தமிழ்
சுகங்களில் வெடிக்கின்ற
ஓசை

காற்றுக்குள் சிறகோட்டும்
வாசம் - தமிழ்
வாசத்தால் எழுந்தாடும்
காற்று

பார்வைக்குள் விரிகின்ற
வானம் - தமிழ்
வானத்துள் மிளிர்கின்ற
பார்வை

மண்ணுக்குள் கருவான
வளம் - தமிழ்
வளத்தினில் கொழிக்கின்ற
மண்

இயற்கைக்குள் முத்தாடும்
மழை - தமிழ்
மழையினில் தழைக்கின்ற
இயற்கை

மனசுக்குள் எழுகின்ற
உணர்வு - தமிழ்
உணர்வினுள் கசிகின்ற
மனசு

மூச்சுக்குள் உள்ளாடும்
தாகம் - தமிழ்
தாகத்தில் தீயாகும்
மூச்சு

மோகத்துள் கமழ்கின்ற
இளமை - தமிழ்
இளமையில் திரள்கின்ற
மோகம்

முயற்சிக்குள் முளைவிடும்
சிறகு - தமிழ்
சிறகினில் தெறிக்கின்ற
முயற்சி

மனிதத்துள் செழித்தோங்கும்
கருணை - தமிழ்
கருணையால் வேர்பாயும்
மனிதம்

உயிருக்குள் குடிகொண்ட
மானம் - தமிழ்
மானத்தில் துடிக்கின்ற
உயிர்

தீபத்துள் வாழ்கின்ற
புனிதம் - தமிழ்
புனிதத்தில் நிமிர்கின்ற
தீபம்

இந்தக் கவிதைக்கு ஒரு தனி நடைச்சிறப்பு இருக்கிறது. முதல் பத்தியைக் கவனியுங்கள். 'இதயம்' என்று துவங்கி 'மொழி' என்று முடிகிறது. பின் 'தமிழ்' என்ற உயிர்ச் சொல்லைத் தனிச் சொல்லாக நிறுத்திவிட்டு, பின் 'மொழி' என்னும் சொல்லிலேயே துவங்கி 'இதயம்' என்ற சொல்லுக்கு வந்து ஒரு முழு சுற்றினையும் ஆனந்தமாய் நிறைவு செய்கிறது.

இதே போலவே இக்கவிதை முழுவதும் தமிழைப் போற்றிப் பாடும் இக்கவிதையைத் தமிழ்த்தாய் புன்னகையோடு தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்று நம்புகின்றேன்.

அதோடு இக்கவிதை இதுவரை கையாளப்படாத யாப்பிலக்கண வடிவம். இதுவரை அந்தாதி என்ற அமைப்பு மட்டுமே யாப்பில் உண்டு. அது முடிந்த சொல்லில் தொடங்கும் அடுத்த வரியைக் கொண்டதாய் அமையும். இக்கவிதையோ, முடிந்ததில் தொடங்கியதோடில்லாமல், தொடங்கிய சொல்லிலேயே முடிவதுமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிரமமான வடிவமைப்புக்குள் கருத்தாழமிக்க கவிதையை அமரச்செய்ய எனக்கு சொற்கள் தந்த தமிழன்னைக்கு நன்றி.

அன்புடன் புகாரி

Unknown said...

அட இதை மறந்துவிட்டேனே?

http://anbudanbuhari.blogspot.ca/2009/08/blog-post_23.html

அத்திக்காய் காய் காய் பாடலுக்கான விளக்கம். இதில் இல்லாத சுவையா?

அன்புடன் புகாரி

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அனுபமிக்க கல்வியாளர்களின் அழகிய, பயனுள்ள கலந்துரையாடல் - இந்த கலந்துரையாடலை அழகிய எழுத்து வடிவில் சுவையுடன் வழங்கியதற்கு சகோதரர்: இபுறஹிம் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

Yasir said...

தேன் சிந்தும் கருத்து செறிவுமிக்க-கலந்துரையாடல்களை தொகுத்து அளித்தவிதமும் அருமை...தொடருங்கள் மாமா

Yasir said...

அன்புடன் புகாரி அவர்களின் தமிழ்ச்சொல்லாடல் தமிழ் பிரியர்களுக்கு நல் விருந்து

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு