Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இவனா யிரு: 27

அதிரைநிருபர் பதிப்பகம் | October 01, 2012 | , , , ,


உழுது  விதைப்பவன்
உணவை  விளைக்கிறான்
எழுதிப்  படைப்பவன்
எண்ணம்  விதைக்கிறான்.

தொழுது  துதிப்பவன்
தூய்மை  யுறுகிறான்
பழுது  அற்ற  நற்
பண்பைப்  பெறுகிறான்

பொழுது  புலர்கையில்
ஒழுகும்  கதிரைப்போல்
முழுதும்  நல்லதாய்
ஒழுக்கம்  வளர்க்கிறான்

விழுது  விட்ட  பழம்
ஆலைப்  போலவே
தழுவும்  குளிர்ச்சியாய்
நிழலும்  விரிக்கிறான்

எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
அழுது புலம்பும் சிலர்
அறிவைப் பழிக்கிறான்

கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்

மெழுகு உருகவே
துலங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்

காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்

சின்னஞ் சிறியதாய்
வார்த்தை கோக்கிறான்
பெற்றம்  பெரியதாய்
ஞானம் வார்க்கிறான்.

தனக்கு வாய்த்த சந்
தோஷம் பகிர்கிறான்
தன்னைப் போல யவர்
சிறக்க நினைக்கிறான்

பட்டுத் தெளியுமுன்
பலதும் சுட்டுவான்
பசிக்கும் செவிக்குத் தேன்
பாகை யூட்டுவான்

ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!

--------0-0-0--------

Sabeer AbuShahruk

27 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தனக்கு வாய்த்த சந்
தோஷம் பகிர்கிறான்
தன்னைப் போல யவர்
சிறக்க நினைக்கிறான்//

ம்ம்ம்ம்ம் ! (இது கவிதை பதில்!)

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

எழுது கோலினால்
உலகை வெல்கிறான்
நன்பரே எழுதுகோல் இன்று வேறொரு உருவாய் உருப்பெற்று இருக்கின்றது என நினைக்கின்றேன்

Yasir said...

//கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய் தவிர்க்கிறான்// நான் இவனாகவே இருந்துடரேன்...
“ன்” கவிதை “கன்,கன்”ன்று மனதில் இறங்குகின்றது

ZAKIR HUSSAIN said...

//காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்//

புரியலெ பாஸ்...ஆனா என்னமோ இருக்குனு மட்டும் தெரியுது.

Yasir said...
This comment has been removed by the author.
Yasir said...

அப்ப நம்மூருக்கும் “ அகல ரயில் பாதை “ வருதா ? இல்லை முத்துப்பேட்டையோடு முடிந்துவிடுமா ? பார்க்க செய்தி

http://muthupettaibbc.blogspot.com/2012/10/blog-post.html

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாசிர்:

அவங்க ஆயத்த மாவது அகல ரயில் பாதைக்கு...
நாம தவிப்பது அகலாத ரயில் பாதையை வைத்துக் கொண்டு !

முத்துபேட்டைக்கு டிக்கெட் எடுக்க போற நமக்கும் வராமலா போயிடும் !?

காதிருப்பதிலும் ஒரு சுகமே, நான் சொன்னது காற்றுக்காக மாலை நேர இரயிலடியிலே !

Shameed said...

ZAKIR HUSSAIN சொன்னது…

//காலம் கடந்துபின்
ஞாலம் துறப்பினும்
நாலும் ரெண்டும்போல்
நாவில் நிலைக்கிறான்//

//புரியலெ பாஸ்...ஆனா என்னமோ இருக்குனு மட்டும் தெரியுது.//


நாளும் இரண்டும் 4 + 2 = 6.இந்த ஆறு நாவில் பெருக்கெடுத்து ஆறாய் ஓடுதாம் (பல கோணத்துலே யோசிப்போமுளோ )

sabeer.abushahruk said...

அம்பி,

தமிழ் கூறும் நல்லுலகில் நூற்றுகணக்கில் நூல்கள் எழுதப்பட்டாலும் அறநெறி சொல்வதில் நாலடியாரும் திருக்குறளும் தனித்தன்மையும் சிறப்பும் பெற்றவை என்பது அறிஞர்கள் கூற்று.

இந்த நாலடியாரை நான்கு அடிகளில் இருப்பதால் நாலு என்றும் திருக்குறள் இரண்டடியில் இருப்பதால் இரண்டு என்றும் செல்லமாக அழைப்பர் சான்றோர்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி;
நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி” கேட்டதில்லை?

இப்பப் படிச்சுப் பாரு, மங்கலாகவாவதுத் தெரியும்.

டேய் ச்சாம்ப்பியன், தமிழ் வகுப்பைக் கட்டடித்துவிட்டு கிரவுன்டுக்குப் போனால் இப்படித்தான்.

அப்புறம், நீ என்னைய பாஸ் பாஸ் நு செல்லமா(?) கூப்பிடும்போதெல்லாம் எனக்கு முழங்காலுக்குக் கீழ்வரையான கருப்பு கோட் சூட்டும் தமிழ்வாணன் தொப்பியும் வாயில் ஹபானா சுருட்டும் சகிதமாக யாரையாவது, “டேய் மாயாண்டி”ன்னு கூப்பிட்டு, “வைரங்கள் எங்கேய்?”னு கேட்கனும்போல இருக்கு. அதுக்காக உடனே தமிழ்படுத்தி “தலீவா”ன்னு கூப்பிட ஆரம்பிச்சிடாதே அது இன்னும் மோசம். கரை வேட்டியும் கூனிய முதுகும் கூழைக் கும்பிடும் குழைந்த பேச்சும் பார்த்தாலே எனக்கு பசபசன்னு அரிக்கும். ரெண்டுக்கும் இடையிலே “டடாங் புடாங்” நு ஏதாவது உங்கூர் பாசைலே கூப்பிடேன். “துவான்” வேணாம். அப்படித்தான் நீ ஹமீதுவைக்கூப்பிட்றே. அப்பால ரெண்டு பேரும் “யான்”ன்டு கேட்டா குழம்பிடும்.

sabeer.abushahruk said...

அன்புச் சகோதரர் சபீர் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

எழுதுகோல் வேறு எந்த உருவாய் உருப்பெற்றிருக்கிறது என்கிறீர்கள்? இன்னும் சற்று விளக்கமாகச் சொல்லவும்.

எனக்குத் தெரிந்து எழுதுகோல் எழுதுகோலாகத்தான் இருக்கிறது. பேனா பேனாவாக, பென்ஸில் பென்ஸிலாக, தட்டச்சு தட்டச்சாக, கணினி விசைப்பலகை விசைப்பலகையாக என்று அப்படி அப்படியாகத்தான் இருக்கின்றன.

உலகை ஆளும் இறைவேதமும், நபி வழிகளும், பல நாகரிகங்களின் குறிப்புகளும் நூல்களும், இவ்வுலகை நிர்வகிக்க எழுதப்பட்ட சட்டங்களும் எழுதுகோலாலேயே எழுதப்பட்டன.

தவிர, நீங்கள் கணினிமூலம் எழுதுவதை குறிப்பிடுகிறீர்கள் எனில், இதுவும் கடந்து போகும். இப்பவெல்லாம் கணினியைவிட இன்னும் அட்வான்ஸாக வந்துவிட்ட உபகரணங்களால்தான் எழுதுகிறார்கள். நான் பெரும்பாலும் ஐஃபோனில்தான் எழுதுகிறேன்.

எனினும், எழுத்து எனில் அதன் அடிப்படையாக எழுதுகோலைச் சொல்வதே சாலச்சிறந்தது.

இந்த இடத்தில் ஒன்றை நினைவில் வைக்க வேண்டும். எவ்வளவுதான் எழுதும் முறை வந்துவிட்ட போதிலும் கையொப்பம் எனும் அங்கீகாரம் பேனாவெனும் எழுதுகோலால்தான் கிடைக்கிறது.

சரியா,சகோ?

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இவனா இருந்து அவனையும் மாற்றுவதற்கான நல்லுபதேசம்.

பனிரென்று பவுண்டரிகளை அடித்து விலாசு விலாசுண்டு விலாசிபுட்டிய சபீர் காக்கா.

வாழ்த்துக்கள் .

Anonymous said...

'' மெழுகு உருகவே
துளங்கும் தீபம்போல்
கொழுந்துவிட்டச் சுடர்
வெளிச்சம் தருகிறான்''

மெழுகு வெளிச்சம் தருவதுபோல் இந்த கவிதை வெளிச்சம் காட்டுகிறது.

KALAM SHAICK ABDUL KADER said...

உள்ள மொன்றில்
துள்ளும் தென்றல்
.. ஓடும் இன்று
.. பாடல் ஒன்றைப்
பார்த்தேன்! - நன்றி
கோர்த்தேன்!
உள்ளம் ஈனும்
கள்ளை நானும்
.. உற்ற றிந்து
.. சொற்க லந்திங்(கு)
குடித்தேன்! - கவி
படித்தேன்!
உள்ள வானின்
புள்ளி மீனை
.. ஒத்தி வண்ணம்
.. கொத்திப் பண்ணில்
காட்டினாய்! - சுவை
கூட்டினாய்!
சொல்என் காதை
வெல்லும் போது
.. தோயும் தேனில்
.. பாயும் நானும்
தோற்கிறேன்! - சுவை
ஏற்கிறேன்!
சொல்லின் பந்தம்
சொல்லும் சந்தம்!
.. சொக்கும் கண்கள்
.. விக்கி இன்பம்
துய்க்கவே! - ”தேனீ”
மொய்க்கவே!
சொல்லென் நெஞ்சின்
எல்லை மிஞ்ச
.. வாழ்த்துச் செண்டு
.. கோர்த்துக் கொண்டு
வாழ்த்துகிறேன்! - அன்பால்
போர்த்துகிறேன்!
சொல்லின் எண்ணம்
மெல்ல வண்ணம்
.. தூவும் மாரிப்
.. பூவில் ஏறித்
தூங்குவேன்! - நான்
ஏங்குவேன்

KALAM SHAICK ABDUL KADER said...

//பொழுது புலர்கையில்
ஒழுகும் கதிரைப்போல்
முழுதும் நல்லதாய்
ஒழுக்கம் வளர்க்கிறான்//

பிள்ளை மனம் எனும்
வெள்ளிப் பாத்திரமதில்
ஒழுக்கம் எனும் நீரை
ஒழுங்காய்ப் பரப்பினால்
தங்கமென மின்னும் பார்!

KALAM SHAICK ABDUL KADER said...

கணினியுடன் எலியும் பொறியில் சிக்குண்டுக் கிடப்பதில் மூழ்கிப் படிப்பவர்தான் “பொறியியலாளர்” என்கின்றனரோ?

//கையொப்பம் எனும் அங்கீகாரம் பேனாவெனும் எழுதுகோலால்தான் கிடைக்கிறது. //

தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து என்பதையே(இன்ஷா அல்லாஹ்) அடுத்த என் கவிதைக்குத் தலைப்பெழுத்தாக்க அடியெடுத்துக் கொடுத்த கவிவேந்தர் சபீர் அவர்கட்கு “ஜஸாக்கல்லாஹ் கைரன்”

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எட்டாம் அறிவுக்கு எட்டிடும் கவிக் கலக்கல்
அதை எட்டிபிடிக்க கமென்ட் கலக்கல்
அருமை!
நானும் இறுதியா வந்து
இவனாய் இருந்து விடுகிறேன்.

crown said...

கழுகுப் பார்வைக்கு
நழுவும் கோழிபோல்
அழுக்கு மனங்களை
இழுக்காய் தவிர்க்கிறான்
-------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.என்னே உருவகம்!கழுகுவிற்கு இரையாகக்கூடாது என நழுவும் கோழியும், அசுத்தம் கொண்ட அழுக்கு மனம் இழுக்கு(கேவலம் )என்று தன் பக்கம் இழுக்காமல் தள்ளுகிறான். அவன் நல்லவன்!வன் எண்ணம் கொள்ளாதவன்! வண்ண மலரொத்த நல்லெண்ணம் கொண்டவன்!(மகரிப் தொழுதுவிட்டு வந்துடுரேனே!)

crown said...
This comment has been removed by the author.
crown said...

ஏழாம் அறிவென
ஏய்க்கும் உலகிலே
எழுதி நிலைத்திடும்
இவனாய் இருந்திடு!
-----------------------------------
இப்படி எட்டாகனியை எட்டியதாய் கட்டிவிடும் கதைக்கு,
கவிவேந்தே! (ஒ)உன்பதில் கவிதையில் சொன்ன நீவீர் பத்து அறிவு கொள்ளவும் கூடும். உம் பாட்டில் கனியிருக்கும் காயிருக்காது! காயத்திருக்கு பத்துபோட்டு ,மருந்து உள்ளே இருக்கும். அது உம்போல் சிலருக்கே வாய்க்கும் அறிவு! அதுபோல் நான் எல்லாம் முயற்சிப்பது முடவன் கொம்புத்தேனுக்கு படும் ஆசை போன்றதே ஆகும்.எல்லாப்புகழும் அல்லாஹுக்கே இப்படி இதுகாறும் முயற்சித்தால் இவனாய் இருந்திடலாம் வரும் சமுதாயமும்.

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

பேனா=எழுதுகோல்
பென்ஸில்=எழுதுகோல்
தட்டச்சு=எழுதுகோலின் மாற்று
விசைபலகை=தட்டச்சின் முழுமை பெற்ற மருவடிவம்
தங்கள் கூற்றிலிருந்து நானும் மருபடவில்லை சகோதர் சபீர் அவர்களே

sabeer.abushahruk said...

இவனாகிய என்னுடன் கருத்துகள் பகிர்ந்துகொண்ட சகோதரர்களுக்கு நன்றி.

வஅலைக்குமுஸ்ஸலாம் கிரவுன்.
நலமாயிருக்க துஆ.

// நான் எல்லாம் முயற்சிப்பது முடவன் கொம்புத்தேனுக்கு படும் ஆசை போன்றதே ஆகும்.// இந்த உவமானம் நீங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொள்வது மரபு ஆகாது. பிறர் சொன்னாலே அதில் அர்த்தம் இருக்கும. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். எழுதுவதைத் தள்ளிப்போட்டே எதிர்பார்ப்பைக் கூட்டிக்கொண்டு போகிறீர்கள், ஜாக்கிரதை. அடுத்த படைப்பு அடிபொலியாக இருக்க வேண்டும் (அடிபொலி = ரொம்ப சிறப்பாக)

கவியன்பன், கவிக்கருத்து நல்லாயிருக்கு.

எம் ஹெச் ஜே: அவனா இருக்காதே என்று போட்டிக்கவிதை எதிர்பார்க்கலாமா?

வஸ்ஸலாம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

சபீர் காக்கா, சலாம்+
நான் இவனா வே இருந்து விடுகிறேன் நு தானே சொன்னேன்.

"அவனா யிருக்காதே"ன் நு இப்புடி இழுத்துபோட்டால் எப்புடி? நல்லாவுலோ இங்கே வந்து மாட்டிக்கிட்டேன்.

எப்புடின் நு பார்க்கிறேன். இன்சா அல்லாஹ்.

KALAM SHAICK ABDUL KADER said...

//எப்புடின் நு பார்க்கிறேன். இன்சா அல்லாஹ்.//

அவனா இவன் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசத்த வேண்டும், இலண்டன் வாழ் இளங்கவிஞரே!

Ebrahim Ansari said...

உங்களுடன் என்றும் இருக்கும் ஒருவனாகிய இவன் இரண்டுநாட்கள் வெளியூர் சென்றுவிட்டதாலும், வந்த உடன் சகோதரர் அலாவுதீன் உடைய ஆக்கத்துக்கு நீண்ட பின்நூட்டம் இட்டதாலும் அவனாயிருக்க தாமதம். ஆப்சென்ட் போடாமல் இருக்க லீவு லெட்டர் சமர்ப்பிக்கிறேன்.

இவனாய் இருப்பவனை நேற்று அவசரமாக படிக்காமல் இன்று விடிகாலை ஆற அமரப் படித்தேன். வழக்கம்போல் களை! வார்த்தைகள் சுளை!

//உழுது விதைப்பவன்
உணவை விளைக்கிறான்
எழுதிப் படைப்பவன்
எண்ணம் விதைக்கிறான்.//

என்று ஆரம்பிக்கும்போதே பைக்குள் இருக்கும் மல்கோவா மாம்பழம் மணப்பதுபோல் மணக்க ஆரம்பித்துவிட்டது.அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஆஹா! இவனை -(இவனாயிரு) தாமதமாகவல்லவா பார்த்தேன்:

படித்ததில் பிடித்தது:
உழுது விதைப்பவன்
உணவை விளைக்கிறான்
எழுதிப் படைப்பவன்
எண்ணம் விதைக்கிறான்.

தொழுது துதிப்பவன்
தூய்மை யுறுகிறான்
பழுது அற்ற நற்
பண்பைப் பெறுகிறான்

இன்ஷாஅல்லாஹ் - இவனாயிருப்போம். வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

என் மதிப்பிற்குரிய ஜமீல் காக்கா தனி அஞ்சலில் சுட்டிக்காட்டிய திருத்தங்களை இப்பதிவில் நன்றியோடு சரிசெய்துகொண்டோம். இருப்பினும், இந்தத் திருத்தத்தின் சுவாரஸ்யம் உணர்ந்து வாசகர்களும் அறிய வேண்டி அவற்றை இங்குப் பதிகிறேன்.

பார்வை : http://adirainirubar.blogspot.in/2012/10/blog-post.html

அழுக்கு மனங்களை
இழுக்காய்த் தவிர்க்கிறான்

மெழுகு உருகவே
துளலங்கும் தீபம்போல்


(ஈற்றில் ஒற்றும் ஈற்றயலில் நெடிலும் (ஆய், போய்) அமைந்திருந்து, வருமொழி வல்லினமெனில் (கசதப) ஒற்று மிகும்.
சான்றுகள்: புயலாய்க் காற்று, போய்ச் சொல், வாய்ப் பேச்சு.

***

வில்லி பாரதத்தில் ஒரு காட்சி:

துரியோதனின் மனைவி பானுமதியும் அவனுடைய உயிர் நண்பன் கர்ணனும் சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்தில் பானுமதி தோற்று, கர்ணன் வெற்றி பெறப்போகும் வேளை. வெளியில் சென்றிருந்த துரியோதனன் அங்குத் திரும்பிக் கொண்டிருந்தான். தூரத்தே கணவனைக் கண்ட பானுமதி எழுந்தபோது, ஆட்டத்தின் வெற்றியில் குறிக்கோளாயிருந்த கர்ணன், நாட்டு மன்னனும் தன் நண்பனுமான துரியோதனனைக் கவனிக்காமல், பானுமதியின் இடையில் கைவைத்து, "எங்கே ஓடப் பார்க்கிறாய்?" என்பான். பானுமதியின் இடையில் கட்டப்பட்டிருந்த சரம் அறுந்து, முத்துகள் அறை முழுக்கச் சிதறும்.

அந்த நேரத்தில் அறைக்குள் நுழைவான் துரியோதனன். கர்ணன் வியர்த்துப் போவான். ஆனால், துரியோதனன் இயல்பாக,

அரையில் அறுபட் டறையில் சிதற
குறையிலா நண்பன் குருகுல மன்னன்
அடுத்தது கேட்டான் அருமைநண்ப முத்தை
எடுக்கவோ கோக்கவோ யான்?

எனக் கேட்பான்.

பிற்றைக் காலத்தில் குந்தி தேவியிடம் கர்ணன் இந்நிகழ்வை எடுத்துக் கூறுவான் - துரியோதனனின் களங்கமில்லா நட்புக்கு இலக்கணமாக,

உற்றஉயிர்த் தோழன் உடல்நடுக்கம் காணுற்று
கொற்றவன் கோன்துரியன் பாங்காய் மொழிந்தானாம்
கொட்டிய மாலையதின் முத்தினை;என் செய்ய
எடுக்கவோ கோக்கவோ என்று.

கோர்ப்பது பிழை ; கோப்பது சரி.

கோத்து வைப்பதால் கோப்பு (File) என்றானது.

**************************

அலாவுதீன் மற்றும் ஈனா ஆனா காக்கா ஆகியோரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

KALAM SHAICK ABDUL KADER said...

அல்ஹம்துலில்லாஹ்!
நல்ல தமிழ் எழுதவும், பேசவும் பயிற்றுவிக்கும் ஈராசான்களை நமக்கு, நம் சமுதாயத்திலிருந்தே உருவாக்கித் தந்த அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு