Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 20 28

ZAKIR HUSSAIN | October 08, 2012 | , , , ,

சேமிப்பின் அவசியம்.

சேமிப்பது நல்லது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனாலும் தெரிந்தும் செயல் படுத்தாமல் போவதற்க்கு ஒரு  டிசிப்ளின் இல்லாத காரணமே தவிர, வசதியில்லை என்பதல்ல.

சேமிப்பின் முதல் விதி:  

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

Income – Savings > expenses.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் தவறான விதி: வருமானம் [மைனஸ்] - செலவுகள் > [மீதி] = சேமிப்பு.

Income – Expenses > Savings.

பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை.

தொடர்ந்து சேமிக்காததால் சில சமயங்களில் வாழ்க்கையே வெறுத்துப்போகும். ஏனெனில் வாழ்க்கையின் அடுத்த நிமிடம் அவிழ்க்கப்போகும் மிகப்பெரிய உண்மைகளில் செலவுகளின் அத்யாயங்களுக்கே முதல் இடம். அதற்க்கு பிறகுதான் இயற்கையை ரசிப்பதும், உறவுகளின் கவனிப்பும், உங்களுக்கு பிடித்த அந்த கடற்கரை காற்றும், அடைமழையில் சூடான ஸ்ட்ராங் டீயும்.

Financial Planning ல் சில முக்கியமான விசயங்களுக்கு உங்களிடம் சேமிப்பு இருக்க வேண்டிய அவசியத்தை சொல்கிறார்கள். இது நிச்சயம் உங்களால் முடியக்கூடிய விசயம்தான்இருப்பினும் சென்டிமென்ட், அளவுக்கு அதிகமான ஆசைபோன்ற கற்களில் தடுக்கிவிழுவதும் ,விழாததும் உங்கள் சமத்தை பொறுத்தது.

Emergency Fund :

உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதன் காரணம் நீங்கள் வேலை பார்க்கும் சூழல் திடீரென நிர்வாக முறைகேடால் உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம். இல்லாவிட்டால் முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.

எது எப்படியோ. உங்கள் வாழ்க்கை ஏறக்குறைய டார்ஜான் மாதிரி. அடுத்த கயிற்றை பிடிக்க தவறினால் கீழே விழுந்து பலத்த அடி படலாம். எனவே இந்த ஆறு மாத சேமிப்பு உங்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள உதவியாக இருக்கும். வருசக்கணக்கில் "சும்மா" உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதுவரை எந்த பொருளாதார நிபுனராலும் எந்த விதியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு தற்காலிகம்தான். இன்னும் 6 மாதம் இருக்கிறது என்று அடுத்த வருமானத்தை தேடாமல் "நானும் ஊருக்கு நல்லது செய்ரேன்" என கிளம்பினால் 5 வது மாத ஆரம்பத்திலேயே நெருக்கமான உறவுகளும் தத்துவமெல்லாம் பேச ஆரம்பிக்கும். அதை நாம் வேறு கேட்டுத்தொலைக்க வேண்டி வரும்.

Emergency Medical Fund


இந்த விசயத்தை எழுத என்னிடம் பலஎபிசோடுக்கு விசயம் இருக்கிறது.

இன்றைய செடன்ட்ரி லைஃப், நம்முடைய அன்றாட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி நமது ஆர்கன்கள்பெரும்பாலும் அதன் அதன் முழு வீச்சில் இயங்காமல் போய் முன்பெல்லாம் வரும் வயதானவர்களுக்கான நோய் இப்போது சின்ன வயதில் வந்து விடுகிறது. நோயின் தாக்கம் என்பது வேறு, அதில் உங்கள் சம்பாத்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திற்கு சரியான தீர்வு மெடிக்கல் இன்சூரன்ஸ். இப்போது இஸ்லாமிக் இன்சூரன்ஸ் [TAKAFUL] வந்து விட்டதால் இதில் கொஞ்சம் அதிகப்படியான ஆட்கள் பயன் அடைய முடியும்.

உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சேர்த்து தபாரு [பிரிமியம்] கட்டுவதால் இக்கட்டான சூழ்நிலையில்உங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் காப்பாற்றலாம்.

இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கமுடியாமல்போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது. 20 ஆண்கள் உழைக்கும் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட ஆஸ்பத்திரியின் பெரிய பில்களை கட்ட முடியாமல் போய் ரெஸ்பிரேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒருவரின் இதயம் நிறுத்தப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். காரணம் பணம். 

Retirement Fund:

சமீபத்தில் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருக்கு 3 ஆண்பிள்ளைகள். ஒரு மகனுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. 2வது 3 வது மகனும் நல்லபடியாக படிப்பதால் ' உங்கள் வாழ்க்கை இனிமேல் ஈசியாகிவிடும். பசங்க சம்பாதித்தால் அட்லீஸ்ட் நீங்கள் ஒய்வெடுக்கலாம்" என்று சொன்னேன். அதற்கு அந்த நண்பர் சொன்ன பதில் எல்லோருக்கும் பொருந்தும். ' அப்படித்தான் எல்லோரும் நினைத்து வாழ்கிறோம், ஆனால் நடைமுறை வாழ்க்கையில் மகன் சம்பாதிக்க ஆரம்பிக்கும்போதுதான் அவனது கல்யாணம், அவனுக்கென்று வாகனம், வீடு இப்படி பெரும் செலவுகளை மனிதன் சந்திக்கிறான். எனவே நாம் சம்பாதிக்க கூடிய செயல் ஒரு 'தொடர்கதை" அதற்கு முடிவு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. ஆனால் ரிட்டயர்மென்டுக்கு என்று ஏதாவது தொடர் வருமானம் வருகிறமாதிரி ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கஷ்டம்தான். பிள்ளைகள் தருவார்கள் என்ற எதிர்பார்ப்புள்ள வாழ்க்கை எப்போதும் ஒரு மர்ம நிமிடங்கலுடன் கடந்து போகும். இதை எத்தனை பேர் தாங்கி கொள்ள முடியும்" .....இதை அவர் சொன்னவுடன் ஏதோ எனக்குள் செய்தது. கொஞ்சம் நான் "ஹேங்'  ஆனது என்னவோ உண்மை. நாம் காலம் கடந்து சில விசயங்களை யோசிப்பதுடன் , இப்படி அனுபவபூர்வமாக பேசுபவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதாக நான் உணர்கிறேன்.

இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்.

Child Education Fund

இது  1- 5 & 6-10 படிக்கும் மாணவர்கள் உங்களுக்கு பிள்ளைகளாக இருந்தால் அவசியம் கவனம் செலுத்த வேண்டிய விசயம். பிள்ளைகள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்களுடன் அவர்கள் தயாரான பிறகு பெற்றோர்களான நாம் தயாராக இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று நானே அனுபவித்திருக்கிறேன். அதே மாதிரி பல பெற்றோர்கள்  பட்ட டென்சனான சூழ்நிலையையயும் நான் பார்த்திருக்கிறேன். இதற்கு நாம் பல காரணம் சொன்னாலும் உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?. இந்த விழிப்புணர்வை எனக்கு தந்தது அதிகம் படித்திராத என் சீனியர்.

இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது. பிள்ளைகள் எங்கே அவ்வளவு படிக்கப்போகிறது என்ற அவநம்பிக்கையிலும் சேமிக்காமல் இருப்பதும் தவறு. ஏனெனில் உங்களின் அவநம்பிக்கையின் தாக்கம் அவனது படிப்பு வரையில் பாதித்திருக்களாம். கடைசியில் உங்கள் நெகடிவ் எனர்ஜியால் உங்கள் வம்சமே பாதிக்கப்படக்கூடும்.

பிள்ளைகளுக்கு பணம் சேர்ப்பதுடன் கொஞ்சம் நம்பிக்கையையும் சேர்த்து வையுங்கள். உங்கள் பிள்ளையின் எதிர்காலக்கனவுகளை அடிக்கடி ஞாபகப்படுத்துங்கள். அதற்காக உங்கள் பிள்ளையை ஓய்வெடுக்க விடாமல் அவனை ஒரு மாடு மாதிரி நடத்துவதையும் தவிர்த்து விடுங்கள். பிள்ளைகள் பெற்றோர்களின் நச்சரிப்பையும் புத்தக மூட்டையையும் சுமக்கும் பொதிகழுதை ஆகாமல் பார்த்துக்கொள்வதும் உங்கள் கடமைதான்.

எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். அதில் செக் புக் அல்லது ஏ டி எம் கார்டு இருந்தால் கை அரிக்கும். எனவே அதை கடாசிவிட்டு  சேமிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.

இதற்கும் நான் முன்பு சொன்ன  Visualization Technique  உதவும். உங்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்து பாருங்கள். உங்கள் சேமிப்பும் உயரும்.
 
 

சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம். ஊரில் சிலரை பார்த்திருக்கிறேன். என்னிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, அதை வைத்து என்ன செய்யலாம் என்று வெட்டியாக திரிபவர்களிடம் ஐடியா கேட்பது. அதில் ரிசல்ட் எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

சிலருக்கு சொத்து வருமானம் அல்லது பிசினஸ் வருமானம் என்று இருக்கும்  [ கவனிக்க: இவர்கள் மாதசம்பளம் வாங்குபவர்கள் அல்ல] சில சமயங்களில் தான் நினைத்ததை விட அதிக வருமானம் வர வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. எப்போது அதிக வருமானம் வருகிறதோ. அந்த மாதத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற அனைத்து உபரிவருமானத்தையும்  சேமிப்பில் போட பழகிக்கொண்டால் பல சமயங்களில் இவர்களுக்கான பொருளாதாரச்சுமை தவிர்க்கப்படலாம்.  அதை விட்டு நல்ல வருமானம் வரும்போது தனது மனசு சொல்லும் செலவுகளை செய்துவிட அவசரப்படுபவர்களை யாராலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியாது.
ஏற்றம் தொடரும்
ZAKIR HUSSAIN

28 Responses So Far:

Ebrahim Ansari said...

//முதலாளியின் மச்சானுக்கு உங்கள் வேலை எல்லாம் நீங்களே படித்து கொடுத்து விட்டதால் நீங்கள் இன்ஸ்டலேசன் முடிந்த சி.டி மாதிரி ஒரு என்வலப்பில் போட்டு ஒரங்கட்டுவதுபோல் ஓரங்கட்டப்படலாம். அல்லது உங்கள் வீட்டுவிழாவில் கலந்து சிறப்பித்து விட்டு வந்ததால் உங்கள் இருக்கையில் ஒரு யுவதி அமர்ந்து உங்களை ஏதோ கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்.//

மேலே உள்ளவை யாரோ சொல்ல மறந்த கதை அல்லது எங்கேயோ கேட்ட குரல்.

Ebrahim Ansari said...

இந்தப் பதிவில் தம்பி ஜாகிர் குறிப்பிடும் சூழ்நிலைகள் நமது சொந்த வாழ்விலும், நாம் சந்திக்கும் நண்பர்களின் வாழ்விலும், அண்டை அயல் வீட்டார் வாழ்விலும் நடந்தவை; நடப்பவை; நடக்கப்போகிறவை.

இது ஒரு வரலாறு- ரன்னிங்க் கமெண்ட்ரி -எச்சரிக்கை.

இதில் எனக்கும் அறிவுரைகள் உள்ளன என்று உணர்கிறேன் ஜாகிர். அப்படியே பலர் உணர்வார்கள்.

Iqbal M. Salih said...



//இப்போது சேமிக்களாம் அப்புறம் சேமிக்கலாம் என்றால் காலமும் கடல் அலையும் நமக்காக காத்திருக்காது.//

மிகச்சிறந்த அறிவுரை.சேமிப்பின் அவசியம் பற்றி எனக்கு எழுதியிருப்பது போலவே உணர்கிறேன்! இன்ஷா அல்லாஹ்,இனியாவது கடைபிடிக்க வேண்டும்.அறிவுரை எழுதியவனுக்கும் சேர்த்து அல்லாஹ் பரக்கத் செய்வானாக!



Abdul Razik said...

I never focus on saving even I read many times this kind of articles, But your words are entirely dissimilar from old issues and pushed me to initiate save a part of money from my income. Thanks for a beneficial information.

Abdul Razik
Dubai

Yasir said...

//கூழ்காய்ச்சி ஊத்துவதற்கு டொனேசன் கேட்க வந்த ஆளை பார்ப்பதுபோல் பார்க்கலாம்// ஹாஹா நான் நிறைய கண்டு இருக்கின்றேன்

இதுவரை சேமிக்கவில்லை இனிமேயாவது கொஞ்சம் ஆரம்பிக்கவேண்டும்...6 மாத காலத்தை சமாளிக்ககூடிய பொருளாதார வசதி இல்லையென்றால் கஷ்டம்தான் காக்கா நான் அதை அனுபவித்து இருக்கின்றேன்
அருமையான அறிவுரை தாங்கிய உயர்வுதரும் ஆக்கம் இந்த ஏற்றம்

Shameed said...

//நீங்கள் சேமிப்பில் புலி / நரி என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தால் பக்கத்தில் கழுகுகள் பறக்க ஆரம்பித்து விடும்.//


மற்ற செய்திகள் எல்லாம் அனுபவங்களால் எழுதுகின்றிர்கள் இது போன்ற புலி நரி கழுகெல்லாம் எப்படி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Anonymous said...

நாம் எவ்வளவு சேமித்தாலும் சரி,சேமிக்காவிட்டாலும் சரி அது நோய் அல்லது மற்ற எதற்காவது செலுவு ஆகிவிடுகிறது. நம்மவர்களுடைய சேமிப்பு என்ன வென்றால் அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை நாம் என்ன சேமித்தாலும் இறந்து போகும் போது பணமோ,காசோ கொண்டு செல்வதில்லை.

நாம் பணம் காசு சேமித்து வைத்தால் வேற யாரோ அனுபிவித்து விடுகிறார்கள்.

ZAKIR HUSSAIN said...

To Bro அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. )

//நாம் எவ்வளவு சேமித்தாலும் சரி,சேமிக்காவிட்டாலும் சரி அது நோய் அல்லது மற்ற எதற்காவது செலுவு ஆகிவிடுகிறது. நம்மவர்களுடைய சேமிப்பு என்ன வென்றால் அல்லாஹ்வுக்கு பிடித்தமானவை நாம் என்ன சேமித்தாலும் இறந்து போகும் போது பணமோ,காசோ கொண்டு செல்வதில்லை.

நாம் பணம் காசு சேமித்து வைத்தால் வேற யாரோ அனுபிவித்து விடுகிறார்கள். //




அமல்கள் செய்வதையும் , பணத்தேவைகளுக்கு சேமிப்பதையும் ஒன்றாக சிந்திக்க வேண்டாம். அமல்கள் மட்டும்தான் செய்வேன் , உலக தேவைகள் தேவையில்லை என்றால் நபிபெருமானார் அவர்கள் தனது வாழ்க்கையில் வணிகம் செய்யாமல் இருந்து இருப்பார்கள். உலகத்தேவைகளுக்கு உழைப்பும் அவசியம் அதே போல் சமயங்களில் சேமிப்பு இல்லாவிட்டால் எப்படி வாழ்க்கை மாறிவிடும் என்பதற்காகத்தான் நான் விவரமாக எழுதியிருக்கிறேன்.

தொடர்ந்து பைப்பில் தண்ணீர் வந்தாலும் வீட்டின் மேல் பகுதியில் டேங்க் வைத்து கட்டும் முறைதான் சேமிப்பின் அவசியம்.


மற்றவர்கள் அனுபவித்துவிடுவார்கள் என்றால் வீடு கூட சொந்தமாக கட்டமுடியாது. இறந்து போகும்போது பணமோ காசோ கொண்டு செல்லப்போவதில்லை என்பதற்காக நம்மை நம்பியிருக்கும் பிள்ளைகளை தனது உயர்கல்வி காலத்தில் நீங்கள் சொன்ன வாக்கியங்களை வைத்து காம்ப்ரமைஸ் செய்ய முடியாது.

sabeer.abushahruk said...

பள்ளிப்படிப்பு முதல் அறிவைச் சேமித்து, உழைக்கும் வலிமையின்போது பொருளைப் பொறுப்பாய்ச் சேமித்து, இம்மை வாழ்வுதனில் நன்மைகளைச் சேமித்து வாழ்ந்துவந்தால் என்றும் இன்ப வாழ்வுதான்.

எனக்கெல்லாம் சொன்னாப் பத்தாது, ஒரு பயிற்சிப்பட்டரை நடத்தினால்தான் கேட்பேன்.

"சேர்த்த பணத்தச் சிக்கனமா செலவு செய்ய பக்குவமா அம்மா கைல கொடுத்துப் போடு செல்லக் கண்ணு. அவங்க ஆற நூரு ஆக்குவாங்க செல்லக்கண்ணு"

அலாவுதீன்.S. said...

வருமானம் - [மைனஸ்] சேமிப்பு > [மீதி] செலவுகள்.

((((( உண்மைக் கணக்கு )))))

/////பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவளித்து விட்டு மிச்சம் மீதி இருந்தால் சேமிப்பேன் என்பது நடக்ககூடிய காரியமாக எனக்கு படவில்லை./////

நிறைய பேர் பணம் கைக்கு கிடைத்தவுடன் செலவழித்து விட்டு மற்றவர்களிடம் கடன் வாங்க ஆரம்பித்து விடுகிறார்கள். நமது சமுதாய பெண்களுக்கு எவ்வளவு பணம் அனுப்பினாலும், பணம் பற்றவில்லை என்ற புலம்பல் வருவதாக நமது சகோதரர்களின் புலம்பல்.


/////உங்கள் வருமானத்தில் ஆறுமாத வருமானம் அல்லது உங்களுக்கு ஆகும் செலவில் [ ஒரு மாத செலவு ] ஆறு மடங்கு உங்களிடம் நிச்சயம் பணமாக சேமிப்பில் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.////


சரியான ஆலோசனை. சேமிக்க முடியுமா? என்பதுதான் சகோதரர்களின் கேள்வி.

//////இது போன்ற மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்க முடியாமல் போகும் சூழ்நிலையில் இருப்பவர்கள் தனது குடும்பத்தில் உழைப்பவர்களை சேர்த்துக் கொண்டு தங்கள் குடும்பத்தினருக்கு என்று ஒரு மெடிக்கல் நிதியை தனியாக நிர்வகித்து வருவது நல்லது.////

மெடிக்கல் இன்சூரன்ஸ் என்பது தற்பொழுது ஏமாற்றும் வேலையாகத்தான் இருந்து வருகிறது. பணமாக சேர்ப்பது???? தங்கமாக (நகை, காயின்ஸ்) சேர்த்து வந்தால் அவசரத்திற்கு விற்றுக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

//////இப்போது விற்கும் சொத்து விலைகளால் ஏதும் வாங்க முடியுமா என்று யோசிப்பவர்கள் பல முதலீடு விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. இந்தியா போன்ற இடங்களில் ம்யூச்சுவல் ஃபன்ட் நிறைய இருக்கிறது. இவைகளில் முதலீடு செய்வது நல்லது என்றாலும் Syariyah compliance counters இவைகளை செக் செய்வது உங்கள் கடமை, அதோடு Historical return of Fund எப்படியிருக்கிறது என்பதையும் செக் செய்து கொள்ளவும்./////

ம்யூச்சுவல் ஃபன்ட் என்பதிலும் நிறைய ஏமாற்று வேலைகள் நடந்து வருகிறது. வெளிநாட்டுக் கொள்ளைக்காரனும், உள்நாட்டுக் கொள்ளைக்காரனும் கூட்டணி வைத்து இந்திய மக்களின் சேமிப்பை சூறையாட தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். கவனமாக செயல்பட வேண்டிய காரியம்.

/////உங்கள் மகனோ மகளோ 19 வயதில் கல்லூரிக்கு போகப்போவது 19 வருடத்துக்கு முன்னே தெரியும், ஏன் நாம் தயாராகவில்லை?.////


நிச்சயம் பிள்ளைகள் படிப்பிற்காக ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மனையாக வாங்கி வைப்பது நல்லது. கல்லூரிக்கு போகும்பொழுது விற்பதற்கு வசதியாக இருக்கும் யாரிடமும் கடன் வாங்க வேண்டியதில்லை. குறைந்த அளவு விலையுள்ள மனைகளை வாங்குவதே சிறந்தது.


/////எதற்கு சேமித்தாலும் அதற்கென்று ஒரு தனி வங்கிகணக்கு இருத்தல் அவசியம். அதில் பணம் சேர்க்க மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்./////

வங்கி மட்டும்தான் தனியார் வசம் செல்ல வில்லை. விரைவில் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அரசாங்க வங்கியாக இருக்கும் வரை வங்கிகளை நம்பலாம்.

////சம்பாதிப்பது எல்லோராலும் முடியும். அதை சரியாக காப்பாற்றுவதுதான் சவாலான விசயம்./////

காலம் அறிந்து காரியமாற்றுவது அறிவுடமை. வாழ்த்துக்கள்! சகோ. ஜாகிர்.

KALAM SHAICK ABDUL KADER said...

கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி
மடமைக்குப் பின்னால் மடிந்து விடாதிருக்கச்
சிக்கனம் தானே சிறந்த படகாகும்
இக்கணம் தீர்வாம் இது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் கொஞ்சம் லேட்டுதான் !

KALAM SHAICK ABDUL KADER said...

//பள்ளிப்படிப்பு முதல் அறிவைச் சேமித்து//

கல்வி எனும் செல்வம் சேமிக்கப்பட்டுக் கற்பித்தல் எனும் செலவைச் செய்து கொண்டேயிருந்தாலும் வற்றாமல் மேன்மேலும் வளரும் ஓர் அற்புதமானச் செல்வம்;தீயினால் அழிக்கப்படாதது; திருடரால் களவாடப்படாதது. அறிவெனும் செல்வம் இருந்தாற்றான் தொழிலும், வணிகமும் சிறப்பாகச் செய்ய இயலும்.

அல்லாஹ் நம் அனைவர்கட்கும் அறிவின் வாயிலைத் திறப்பானாக!

KALAM SHAICK ABDUL KADER said...

//

நான் கொஞ்சம் லேட்டுதான் !//

நீங்க லேட்டு இல்லை தலைவா! டேப்”லேட்” எனும் சி”லேட்”டும் பென் ட்ரைவ் எனும் கல்லுக்குச்சியுமாய்க் கவனத்துடன் “எடிட்டர்” பணியிலும், மின்மடல்கட்கு மறுமொழி இடுதலுமாய் இருப்பதை யாம் அறிவோம்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...


சேமிப்பதின் அவசியம் பற்றி உயர்தரமான தகவல்கள்.

//தொடர்ந்து பைப்பில் தண்ணீர் வந்தாலும் வீட்டின் மேல் பகுதியில் டேங்க் வைத்து கட்டும் முறைதான் சேமிப்பின் அவசியம்.//

சேமிப்பின் அவசியத்துக்கு தண்ணி டேங்க் அருமையான உதாரணம்.
---------------------------------------------------------------
//அபூபக்கர் - அமேஜான் ( மு.செ.மு. ) சொன்னது…
நாம் எவ்வளவு சேமித்தாலும் சரி, அது நோய் அல்லது மற்ற எதற்காவது செலவு ஆகிவிடுகிறது.
இறந்து போகும் போது பணமோ,காசோ கொண்டு செல்வதில்லை.
வேற யாரோ அனுபிவித்து விடுகிறார்கள்.//

ஏன் பக்கரு இப்படி எழுதிப்புட்டா?
அந்த சேமிப்பானது எதிர்பாரா பிணிச் செலவுக்காவது கை கொடுக்குமே!
மெளத்தாகும் போது அந்த செலவுக்காவது கை கொடுக்குமே!
வேற யாரோ ஏன் அனுபவிக்கனும், அனுபவிக்க அதிகத்தகுதியான வாரிசு இருக்கே!
நாளை மகனை கல்லூரியில் படிக்க வைக்க கால் கோடி தேவைப்படுமே!
அடுத்து மகள்களுக்கு வீடு கட்டி கல்யாணம் கட்டி பார்க்க அரை கோடி தேவைப்படுமே!
இதற்கெல்லாம் இன்றே (பிஸ்மில்லாஹ்) சேமிப்பை துவங்கு, நாளை அது கைய பிடிக்காமெ கை கொடுக்கும்!
இன்சா அல்லாஹ்!


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இந்த படிக்கட்டு மடியில் கட்டு முதலில் என்று தெள்ளத் தெளிவாக ஊசி போட்டிருக்கிறது !

உங்களோடு உறவாடினால், செலவில்லா சுற்றுலா சென்றுவந்த புத்துணர்வு என்றுமே கிடைக்கும்.... 15 நிமிடத்தின் ஆயுள் கூடிய உணர்வும் ஏற்படும் (நகைச்சுவைக்கு உத்திரவாதம் இழையோடும் தொடர் உரையாடலிலே)... :)

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

காக்கா, ஊரில் மின்சாரம் ஒட்டு மொத்த மாநிலத்து மக்களின் கழுத்தை மொட்டைக்கத்தியை வைத்து அறுக்கப்படும் (சித்ரவதை செய்யப்படும்) ஆட்டைப்போல் அறுத்துக்கொண்டிருக்கிறது. கேட்பதற்கு நாதியில்லை. பிளாஸ்டிக் பொருட்களால் என்றோ வர இருக்கும் பேராபத்திற்காக விழித்துக்கொண்ட சமூகம் இன்று மின் தட்டுப்பாட்டால் அல்லோலப்பட்டு நிற்பதற்கு இதுவரை தகுந்த உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தெரியவில்லை. கட்டணம் கொடுத்து பெறப்படும் மின்சாரத்திற்கு ஏன் இந்த அவலமும், அல்லோலலும் தெரியவில்லை.உலக மக்கள் தொகையில் முதன்மை வகிக்கும் சீனா பின்பற்றும் நடைமுறையை மின்சார தேவைக்கும் நம் நாடு ஏன் பின்பற்றக்கூடாது?

காக்கா, ஆயிரம் தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்குமிடையே உங்களின் இந்த அற்புதமான ஆக்கத்தை என் மனைவியுடன் சேர்ந்து (என் ஆக்கத்தைக்கூட திட்டிக்கொண்டே படிக்கும் பழக்கம் உள்ளது) படிக்க வாய்ப்பு கிடைத்தது. மாஷா அல்லாஹ், என்ன தத்துவம்? என்ன அனுபவம்? சான்ஸ்சே இல்லை காக்கா. தொடருங்கள் காக்கா, உங்களின் பேனா முனை படிக்கும் எம் மூளையை நிச்சயம் இன்ஷா அல்லாஹ் செம்மைப்படுத்தும். ஆமீன்.

விழிப்புணர்வு பக்கங்கள் போல் உங்கள் படிக்கட்டுகளும் நிச்சயம் புத்தக வடிவில் வெளியிடப்பட வேண்டியவையே.

எனக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஊரின், உலகின் நடப்பு நிலைமையை நம் ஊரின் படித்த வயதான இரு அப்பாக்கள் யதார்த்தத்துடன் உரையாடுவது போல் எழுதி வெளியிட ஆசை. ஆனால் மின்சாரமும், சம்சாரமும் அதற்கு தகுந்த ஒத்துழைப்பு தர வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன்.

வஸ்ஸலாம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது

Unknown said...

ஹலலாஹா சம்பாத்தியம் மட்டுமே நிழச்சி நிற்க்கும்.ஏமாற்றி ஹரமாஹா சம்பாதித்தது ! கடல் அலையை போன்றது !! ஒரு இடத்தில நிற்காது !!

அப்துல்மாலிக் said...

பிள்ளைகளுக்கு கொடுக்கும் சிறந்த கல்வி ஒன்றே அதிகப்படியான சொத்தாக இருக்கும், அதற்கான வழிமுறைகளில் ஒன்றான அவர்களுக்கென்ற தனி வங்கி கணக்கு – எனக்கு இதை யோசிக்க வைத்த ஜாஹிர்காக்காவுக்கு நன்றிகள் பல..

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

//இது ஒரு வரலாறு- ரன்னிங்க் கமெண்ட்ரி -எச்சரிக்கை//

இந்த ஆக்கத்தின் மிகத்தெளிவான , சுருக்கமான வரிகளில் உங்கள் விளக்கம். ஒரு சிறந்த விமர்சனம்.

To Iqbal M.Salih

//எனக்கு எழுதியிருப்பது போலவே உணர்கிறேன்!//

எனக்கும்தான்..

To Bro Abdul Razik,

சேமிக்க முடிவெடுத்தது சந்தோசம். சேமிப்பு என்பது பல் விளக்குவது மாதிரி. தொடர்ந்து இருக்கவேண்டும் என்று என் சீனியர் மேனேஜர் சொல்வார்.

To Bro Yasir

இதுவரை சேமிக்கவில்லை இனிமேயாவது கொஞ்சம் ஆரம்பிக்கவேண்டும்.

தாமதிக்க வேண்டாம். 10 வருடத்துக்கு முன் ஆரம்பித்து இருந்தால் ...என்று புலம்புவதை விட இந்த நிமிடத்தை பிரயோஜனமாக கழிப்பதே மேல். Female எதுனு கேட்கப்படாது.

To Shahul

//நரி கழுகெல்லாம் எப்படி //

துப்பாக்கி எடுக்காமல் வேட்டைக்கு போகாமல் நாம் பார்க்க கூடியவர்கள்தான்.
To Bro Kaviyanban AbulKalam

//கடனட்டைச் சேற்றுக் கடலிலே மூழ்கி//

இந்த வார்த்தை கிரடிட் கார்டு அப்ளிகேசனில் சிகப்பு மையில் எழுதவேண்டிய எச்சரிக்கை.

To Bro MHJ...இன்னும் உதாரணங்கள் இருக்கிறது.











ZAKIR HUSSAIN said...

To Bro Abu Ibrahim

//படிக்கட்டு மடியில் கட்டு முதலில்..//

சரியாக சொன்னீர்கள். உங்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்வது 'சுயநலம்" அல்ல. உங்கள் மீதான கடப்பாடு , பொறுப்பு.

To Bro MSM Naina Mohamed,

உங்கள் ஆக்கம் திட்டுவதுவது மாதிரியா இருக்கு. இல்லை..எப்போதும் பாராட்டுவது போல்தான் இருக்கும்.

To uroo vaasi..தமிழில் தட்டச்சு தவறுகள் இருந்தாலும் சொல்ல வந்தது புரிகிறது. உங்கள் கருத்து உண்மை.

To Bro Abdul Malik,

வங்கி கணக்குதான் என்றில்லை. எந்த இன்வஸ்ட்மென்ட்டும் [ with Syariyah compliance]

To Alaudeen,

உன்னுடைய இன்வஸ்ட்மென்ட் டிப்ஸும் வாசகர்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இருப்பினும் இன்டஸ்ட்ரியில் நடக்கும் முறைகேடுகளுக்காக ஒட்டு மொத்தமாக எல்லோரையும் / எல்லா கம்பெனிகளையும் அப்படி பார்க்க முடியாது.

wetting is always from customer. In Law Of Contract " Caveat Emptor"

sabeer.abushahruk said...

அம்பி,
நானும் கருத்துச் சொல்லியிருக்கிறேன்.
என் பேர் விடுபட்டுப் போச்சு.

நியாயமா?

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

இந்தப் பதிவில் நீங்கள் சொன்ன கருத்து எல்லோருடைய வாழ்விலும் நடந்து கொண்டிருப்பவை தொடர்ந்து பைப்பில் தண்ணீர் வந்தாலும் வீட்டின் மேல் பகுதியில் டேங்க் வைத்து கட்டும் முறைதான் சேமிப்பின் அவசியம். சேமிப்பை பற்றி எழுத இதைவிட ஒரு வார்த்தை இல்லை இனிமேலாவது பலர் கடை பிடிக்கலாம்.It's not too late.

ZAKIR HUSSAIN said...

To Sabeer,

உனக்கு ஏன்டா பதில் சொல்லனும்...பேசனும்னா ஸ்பீட் டயல் அழுத்தி பேசப்போறெ..

ஒன்னு மட்டும் எழுதனும்னு நெனெச்சேன். உன்னுடைய கருத்தை பார்த்தாலே தெரிகிறது நீ பிசியா இருக்கேனு.


To Bro N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York,

உங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி. எப்படி இருக்கீங்க. மலேசியாவில் 15 வருடத்துக்கு முன் உங்களை பார்த்தது. இன்னும் சந்திக்க முடியவில்லை.


N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

தம்பி ஜாகிர் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் சந்திக்க அல்லாஹ் நாடுவான் நீண்ட இடைவெளிக்குப் பின் தஙகள் தகப்பனாரை இக்பால் ஹாஜியார் பேரன் திருமணத்தில் சென்ற வருடம் சந்தித்த்தேன்.தங்கள் தகப்பனார்,தாயார்,நிஜாம் மற்றும் அனைவருக்கும் என் சலாம் சொல்லவும்.தங்கள் எழுத்துபணி தொடர என் வாழ்த்துக்களும் துவாவும்
அன்புடன்
வாஹித்

புதுசுரபி said...

அருமையான பதிவினை பதித்தமைக்கு சகோதரர் ZAKIR HUSSAIN அவர்களுக்கு நன்றி, 2006ம் ஆண்டில் இதனை தெரிந்துகொண்டேன், செய்முறையிலும் வந்து பல இக்கட்டான சூழ்நிலைகளை சமாளிக்க முடிந்தது

ZAKIR HUSSAIN said...

நன்றி சகோதரர் வாஹித். I will convey your salam.

நன்றி சகோதரர் புதுசுரபி. நீண்ட இடைவெளி விட்டு எழுதியிருக்கிறீர்கள். போன மாதம் சென்னை வந்த போது உங்களை பார்க்க நினைத்தேன். பெற்றோர்களுடன் ஹாஸ்பிட்டல் அப்பாயின்ட்மென்ட்ஸ் அதிகம் இருந்ததால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

புதுசுரபி said...

please let me know your email ID or send me a test mail to yesrafi@gmail.com

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு