Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேறு பெற்ற பெண்மணிகள்... தொடர்கிறது - 17 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 22, 2012 | , ,

தகைவுற்ற ‘தாயில்லாப் பிள்ளை!’

பிஞ்சுப் பருவத்தில் அலைக்கழிக்கப்பட்டது, அப்பெண்ணின் வாழ்க்கை!  அப்போது அவளுடைய வயது நான்குதான்!  இது நிகழ்ந்தது அவளது பிறந்தகமான வியட்நாமில்!

அந்த நாட்டு மக்களின் நளினமான தன்மையையும் ஏழ்மையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, அதன் மீது தன் ஆளுகையை நிலைநாட்டி, அடக்கியாளும் முயற்சியில் அமெரிக்கா என்ற வல்லரசு இறங்கியபோது, சுதந்திர வாழ்க்கையைத் தம் பிறப்புரிமையாகக் கொண்ட புரட்சிக்காரர்கள் பொங்கியெழுந்தனர்!  விளைவு?

அமெரிக்காவின் ‘வியட்நாம் போர்!’  அதன் விளைவுகளோ, அநியாயம்!  அட்டூழியம்!  கொலைகள்!  கற்பழிப்புகள்!  அகதிகள்!  அநாதைகள்!

அந்த அநாதைகளுள் ஒருத்திதான் அந்த நான்கு வயதுப் பிஞ்சுப் பெண் ‘மைமி மா’ என்ற அபலை!  ‘மைமி மா’ என்பதற்கு வியட்நாம் மொழியின் பொருளே, ‘தாய் இல்லை’ என்பதாகும்!  என்ன ஒற்றுமை!  ஆனால், படைத்த வல்லோன் அவளைப் பரிதவிக்க விட்டுவிடவில்லை!  அவளுக்கு ஏதோ ஒரு நன்மையை நாடியிருந்தான் போலும்!  அவள் பிறந்தது, புத்த மதத்தினரான பெற்றோருக்கு!  அநாதையாகி வளர்ந்ததோ, கிருஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த தமக்கையின் ஆதரவில்!

அமெரிக்கப் படைகளின் ஆதிக்கத்தில் இருந்தபோது, வியட்நாமின் அமெரிக்க அரசின் தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி ஒருவர், மைமி மாவின் மூத்த சகோதரியை மணமுடித்திருந்தார்.  பெற்றோரை இழந்த இச்சிறுமி அந்தத் தமக்கையின் பராமரிப்பில் வாழ்ந்துவந்தாள்.

சில ஆண்டுகளில் அந்த அமெரிக்க அதிகாரிக்கு வியட்நாமிலிருந்து ஆப்ரிக்காவுக்குப் பணிமாற்றம் கிடைத்தது.  அப்போது முழு நிம்மதியுடன் மைமி மாவும் தன் தமக்கையுடன் வியட்நாமை விட்டுச் சென்றாள்.  அந்த நேரம் அவள் பள்ளிப் பருவத்தை அடைந்திருந்தாள்.  ஆப்ரிக்காவில் அந்தத் தூதரக அதிகாரி பணி புரிந்த நாடுகள் அனைத்துமே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாகும்.  ச்சாத் (Chad), காமரூன் (Cameroon), மாலி (Mali), மவ்ரித்தானியா (Mauritania) என்ற நாடுகள் அவை.

அந்த நாடுகளில் எல்லாம், வெளிநாட்டவர்களுக்கென்று தனியாகச் செயல்பட்டு வந்த Midwestern Boarding School இல் சேர்ந்து படித்து வந்த மைமி மா, தன் சக முஸ்லிம் மாணவிகளின் மூலம் இஸ்லாம் மார்க்கம் பற்றியும், அதன் வேதமான குர்ஆன் பற்றியும் அறியும் வாய்ப்பைப் பெற்றாள்.  அது, ஏறத்தாழ இருபதாண்டுகளுக்கு முன், 1980 களின் தொடக்கத்தில் நிகழ்ந்தது.

அதன் பின்னர், தன் சகோதரியுடன் அமெரிக்காவுக்குச் சென்றபோது, மைமி மா ‘டீனேஜ்’ பருவத்தை (13-19) எய்தியிருந்தாள்.  தொடக்கத்தில், முஸ்லிம்களைப் பற்றித் தாழ்வான கருத்தைக் கொண்டிருந்த மைமி மா, ஆப்ரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் இருந்தபோது கிடைத்த உண்மையான அனுபவத்தால், முஸ்லிம்களைப் பற்றியும் அவர்களின் வேதமான குர்ஆனைப் பற்றியும் சரியான கருத்தைப் பெற்று, அருள் விளக்கு ஏற்றப் பெற்றவளாக அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்திருந்தாள்.

தன் 18 வது வயதில் ‘இண்டியானா போர்டிங் ஸ்கூல்’ (Indiana Boarding School) என்ற கல்விச் சாலையில் சேர்ந்து பயின்றுகொண்டிருந்தபோதுதான் மைமி மா தன் இஸ்லாமிய ஈடுபாட்டைக் கூட்டிக்கொண்டாள்.  அப்போது, இஸ்லாமிய வேதத்தை ஆய்வுக் கண்ணோட்டத்தில் அணுகத் தொடங்கியிருந்தாள்.  ‘பெண்ணுரிமை என்பது பேசப்படுகின்றது, பிற மதங்களில். பெண்ணுரிமை என்பது செயல்படுத்தப் பெறுகின்றது, இஸ்லாத்தில்’ என்ற உண்மை, மாவின் உள்ளத்தில் ஆழப் பதிந்தது.

“அமெரிக்காவிலும் மற்ற மேலை நாடுகளிலும் அதிவேகமாக இஸ்லாம் பரவி வருவதற்கு இதுவும் ஒரு காரணமே” என்று துணிவுடன் கூறுகின்றார், தற்போது அமெரிக்காவின் •ப்லோரிடா மாநிலத்தில் வசிக்கும் இந்தத் ‘தாயில்லாப் பிள்ளை’! இத்தகைய தெளிந்த சிந்தனையில் திளைத்திருந்த மா, ஒரு சில மாதங்களிலேயே துணிச்சலான முடிவை எடுத்தார், இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்வதென்று!  உள்ளத்தில் துளிர்த்த மாற்றம், உடலிலும் உடையிலும் பிரதிபளித்தது!  1988 ஆம் ஆண்டில் ஓரிறைக் கொள்கையில் இணைந்து உயர்வைப் பெற்றார்!

அந்த முடிவை எடுத்தது, மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதென்பதை ஏற்றுக்கொள்ளும் மா, அன்றிலிருந்து அவரது வாழ்க்கை இலகுவானதாக இருக்கவில்லை என்பதையும் உள்ளத்தின் உறுதியோடு உணர்த்துகின்றார்.  அதன் குறிப்பிடத் தக்க விளைவு, அவருடைய தமக்கையால் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது!  

அதன் பின்னர் அவரே தன் வாழ்க்கையை வரையறை செய்துகொள்ள வேண்டியதாயிற்று.  எனவே, அமெரிக்க-இஸ்லாமியத் தொடர்பு இயக்கமான CAIR (Council of American-Islamic Relations) அலுவலகத்தை அணுகினார்.  அவர்களின் வழிகட்டலுடன், தானாகவே தனது இஸ்லாமிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, முஹம்மது என்ற முஸ்லிம் கணவருடன் அமைதியாக வாழ்ந்துவருகின்றார்.  அதிலிருந்து அவருக்கு உறவினர் என்று எஞ்சியிருந்த ஓரிருவருடைய தொடர்பும் அறுந்து போயிற்று!

தற்போது West Palm Beach என்ற Florida மாநிலத்து நகரில் கணவருடன் வசிக்கும் மா, முழுமையான ஹிஜாபுடன் வெளியில் சென்று வரும்போது, அவரை அமெரிக்கர் என்றோ ஆசியன் என்றோ மக்கள் கருதுவதில்லை.  மாறாக, அவரை அரபு நாட்டுக்கரப் பெண் என்றுதான் கருதுகின்றனராம்!  அந்த அளவுக்கு, இஸ்லாமிய ஹிஜாபைக் கடைப்பிடித்து வருகின்றார் இப்பெண்மணி.

அமெரிக்காவில் நடந்த செப்டம்பர்-11 நிகழ்வுக்குப் பின்னர், தன்னையும் அமெரிக்கர்கள் ஐயக்கண் கொண்டுதான் பார்க்கின்றனர் என்று வருந்திக் கூறுகின்றார்

மைமி மா.  ஆனால், இவருடைய இஸ்லாமிய உறுதிப்பாடோ, எ•கு போல் இருக்கின்றது!  தன்னை நோக்கி விடுக்கப்படும் வினாக்களுக்குத் தகுந்த விடைகளைத் தயாராக வைத்துள்ளார் இவர்.  இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என்று கூறும் எவருக்கும் தகுந்த வாயாப்புக் கொடுக்கும் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளார்.  

குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்!  எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று?  சொத்துரிமை இல்லையா?  கல்வி கற்கக் கூடாதா?  மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா?  தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா?  ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா?  சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

ஹிஜாபுடன் முஸ்லிம் பெண் வெளியில் செல்வதால், ஓர் அமைதி, ஆறுதல், ஆதரவு, அடக்கம் எல்லாம் கிட்டுகின்றன என்ற கருத்தைக் கொண்ட இப்பெண்மணி, “கற்பைக் காத்துக் கொள்வதற்காகவே முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை அணிகின்றனர்.  நாங்கள் யார் என்பதையும், என்ன செய்கின்றோம் என்பதையும் மக்கள் பார்க்கின்றார்களேயன்றி, எங்களைக் கவர்ச்சிப் பொருளாக நோக்குவதில்லை!  இங்கு நாங்கள் மூடி மறைத்தவர்களாக இருக்கின்றோம்; ஆனால், எங்களுக்கு முழுமையான உரிமையினை வழங்கியுள்ளது இஸ்லாம்!  மற்ற சமூகங்களில் பெண்கள் திறந்து திரிகின்றார்கள்; ஆனால், உண்மையான உரிமை அங்கே இல்லை!” என்று பட்டிமன்றப் பேச்சையே நிகழ்த்தத் தயாராகின்றார்.

பெண்ணுரிமையே மாவின் மாற்றத்திற்குப் பிரதான காரணமாகும்.  நோக்கம் எதுவாயிருந்தாலும், மத மாற்றத்தின் பின் சொந்த-பந்தங்களால் ஒதுக்கப்படுவது உறுதி.  அதுதான் மத மாற்றத்தின் மிகப் பெரிய பாதிப்பு என்கிறார் இப்பெண்மணி.  “எனினும், எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி நான் எடுத்த முடிவுக்கு முன்பாக, உறவு முறைகளால் ஒதுக்கப்பட்ட நிலை எம்மாத்திரம்?  அது அவ்வளவாக என்னைப் பாதிக்கவில்லை!” என்கிறார்.

செப்டம்பர்-11 க்குப் பிறகு நிகழ்ந்த எதிர் விளைவுகளால் அச்சமடைந்த மைமி மா, வாஷிங்டன் DC வீட்டிலிருந்து பல மாதங்களாக வெளியில் வராமலிருந்தார்!  ஆனால், எதிர்நீச்சலிட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்து, சில மாதங்களில் West Palm Beach க்குக் குடிபெயர்ந்து சென்றார்.  அதன் பிறகும் தொல்லைகள் தொடர்ந்தன.  அதே நேரம், அன்புடன் கூடிய ஆதரவும் கிடைத்தது, நல்ல மக்களால்.                                    

தற்போது St. Lucie County யில் சொந்த வீட்டைக் கட்டிச் சுகமாக வாழ்கின்றனர் மைமி மா-முஹம்மது தம்பதியர்.

ரமளான் எனும் புனித மாதத்தைப் பற்றி நினைக்கும்போது, பூரித்துப் போகின்றார் மைமி மா.  “ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு.  ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம்.  இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது.  பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!”

முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிவதும், குறிப்பாக ஏழைகளை மகிழ்விப்பதும், வாழ்க்கையின் முக்கியச் செயல்பாடுகளைப் பற்றித் திட்டமிடுவதும் இந்த மாதத்தில் மைமி மாவைக் கவர்ந்தவையாகும்.  பதினைந்து அல்லது பதினாறு மணி நேரம் பசித்திருக்கும் இந்த நோன்பு வணக்கத்தை எவ்வளவு எளிதாக விவரிக்கிறார் தெரியுமா, இந்த வியட்நாமியப் பெண்?  கேளுங்கள்:

“அல்லாஹ்வுக்கென்றே நாம் ஒன்றைச் செய்யும்போது, அதன் தன்மையே அலாதிதான்.  எத்தனையோ பேர் -ஏன், பெரும்பாலோர்- காலை உணவே உண்பதில்லை.  ஆகவே, அடுத்துள்ள முக்கியமான உணவு, பகலுணவுதான்.  அந்த ஒன்றை மட்டுமே, நோன்பு வைப்பதன் மூலம், நாம் தியாகம் செய்கிறோம்!  அதனால்தான் நான் சொல்கிறேன், உணவின் நாட்டத்தை இறைவனுக்காக அர்ப்பணம் செய்கிறோமே, அந்தச் சில மணி நேர நோன்பாகிய வணக்கமே இறைவனால் பெரிதும் விரும்பப்படுகிறது.  அதனால்தான், ‘நோன்பு எனக்குரியது’ என்று இறைவன் சொன்னான்!”

நோன்பு மாதத்தை ஒவ்வோர் ஆண்டும் ஆவலுடன் எதிர்பார்த்து, அதில் அளவுக்கதிகமான நன்மைகளை நாடி நிற்கிறார் மைமி மா என்ற இந்த மாது சிரோமணி!

அதிரை அஹ்மது

10 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

சிலிர்க்கிறது - ஒவ்வொரு பத்தியையும் வாசிக்கும்போது...

//ஹிஜாபுடன் முஸ்லிம் பெண் வெளியில் செல்வதால், ஓர் அமைதி, ஆறுதல், ஆதரவு, அடக்கம் எல்லாம் கிட்டுகின்றன என்ற கருத்தைக் கொண்ட இப்பெண்மணி,//

உண்மை !

Ebrahim Ansari said...

// நாங்கள் மூடி மறைத்தவர்களாக இருக்கின்றோம்; ஆனால், எங்களுக்கு முழுமையான உரிமையினை வழங்கியுள்ளது இஸ்லாம்! மற்ற சமூகங்களில் பெண்கள் திறந்து திரிகின்றார்கள்; ஆனால், உண்மையான உரிமை அங்கே இல்லை!” என்று பட்டிமன்றப் பேச்சையே நிகழ்த்தத் தயாராகின்றார்.//

இந்த உறுதியே அழகுக்கு அழகு.

Shameed said...

//இது நிகழ்ந்தது அவளது பிறந்தகமான வியட்நாமில்!//''பிறந்தகமான''' அழகிய சொல்லாடல்

Yasir said...

அல்லாஹூ அக்பர்...மா நம் இன்றைய இஸ்லாமிய பெண்களுக்கு வழிகாட்டும் அம்மா

Anonymous said...

ரமளான் எனும் புனித மாதத்தைப் பற்றி நினைக்கும்போது, பூரித்துப் போகின்றார் மைமி மா. “ரமளான் ஒரு சுய பரிசோதனைக்கான வாய்ப்பு. ஓர் ஆன்மீகப் பயிற்சிக் கூடம். இம்மாதத்தில் உலக முஸ்லிம்கள் அனைவரும் நோன்புக் கடமையை நிறைவேற்றுகின்றனர் எனும்போது, நம்மையும் அறியாமல், இயல்பாகவே ஒரு நம்பிக்கையும் ஓர் ஆன்மீக ஆறுதலும் கிட்டுகின்றது. பகல் முழுதும் உண்ணாமல், பருகாமலிருந்து, இரவின் தொடக்கத்தில் இன்பத்தோடு நோன்பைத் துறக்கும் அந்த மகிழ்ச்சி, இந்த உலகில் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தானது!”


இந்த மாதத்தில் அரஃபா நோன்பு நோற்பது மிக ஏற்றமானது வியட்நாமில் உள்ள மைமி மாவாவுடைய அறிவுரையை கேட்டாவது பெண்மணிகள் திருந்தட்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

The collection of the converted Muslim girls/boys information are shining here and will be shined hereafter insha-allah. Sacha, please keep posting this kind of articles here now and then in order to refresh our mind and proud to be real Muslim until death insha-allh.

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்சா அல்லாஹ் இன்னும் அப்பாவுடைய சேவை தொடரட்டும்

Anvar Hamdoon

இப்னு அப்துல் ரஜாக் said...

Allahu Akbar.that's it.i don't find any other word to appriciate.jasakkallah sacha

sabeer.abushahruk said...

மாற்றுமதச் சகோதரிகளுக்கு அன்பளிப்பாகத் தரத்தக்கது இந்தத் தொகுப்பு.

அல்லாஹு ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Unknown said...

>>>>>>>>>>>>>
குர்ஆனை மேலோட்டமாகப் படிக்கும் ஒருவர், பெண்ணுரிமை பற்றி எதிர்மறை வாக்குவாதம் செய்ய வந்தால், “திறந்து காட்டுங்கள்! எங்கே இருக்கிறது, எங்களுக்கு உரிமையில்லை என்று? சொத்துரிமை இல்லையா? கல்வி கற்கக் கூடாதா? மக்களை -குறிப்பாகப் பெண்கள் சமுதாயத்தை- வழி நடத்துவதில் தலைமை வகிக்கக் கூடாதா? தனது பொருளாதாரத்தைப் பெண்ணொருத்தி நிர்வாகம் செய்யக் கூடாதா? ஆண்களுக்குள்ள உரிமைகளுள் எதனையும் பெண்கள் பெறக் கூடாதா? சொல்லுங்கள், பார்ப்போம்!” என்று சவால் விடும் மைமி மா, விவேகத்தின் விடியலாக விளங்குகின்றார்!

>>>>>>>>>

Super! Super!

People who accept Islam later in their life have excellent understanding of Islam.

anbudan Buhari

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு