Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு :: அலசல் 20

அதிரைநிருபர் பதிப்பகம் | October 09, 2012 | , , ,

இந்தியப் பொருளாதாரத்துக்கு விலங்கா? சிறகா ?- ஒர் அலசல் !

பல பொருளாதார மேதைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியாவின் மத்திய அமைச்சரவை அண்மையில் சில்லறை வர்த்தகம், விமானப் போக்குவரத்து, தொலைதொடர்பு , மின்சாரம் ஆகிய துறைகளில் அந்நிய நாடுகளிலிருந்து  நேரடி (FDI) முதலீடுகளை அனுமதித்து இருக்கிறது. விமானப் போக்குவரத்து, தொலை தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கு நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை எழவில்லை. ஆனால் சில்லறை வணிகத்திலும் அந்நிய நேரடிமுதலீட்டை அனுமதிப்பதற்கு பெரும் எதிர்ப்பலை உருவாக்கி இருக்கிறது.   சில்லறை வர்த்தகம் என்பது சிறு சிறு வணிகர்கள், தங்களின் சிறு தொகை முதலீடுகளைக்கொண்டு சக்திக்கு ஏற்றப்படி நாட்டின் சிறு கிராமங்களில் கூட  நடத்தி வருகிற வர்த்தக அமைப்புகள்- கடைகள்- ஏஜென்சிகள்  என்கிற  காரப்பொடிகளையும் கத்தாளம் பொடிகளையும் பெரும்  முதலீடு மற்றும் நிர்வாக அமைப்புகளுடன் படை எடுத்து வரும் கார்பரேட் திமிங்கலங்கள் விழுங்கி ஏப்பம் விட்டுவிடும் என்பதே பொதுவான அச்சம். இந்த அச்சத்துக்கு  முக்கியக் காரணம்- அடிப்படைக் காரணம் குறி வைக்கப்பட்டிருப்பது மக்களோடு ஒன்றிப்போயிருக்கும்  சிறு வணிகம் ஆகும்.  அதை குறி வைத்து விழுங்க வருவது பெரும் பன்னாட்டு நிறுவனங்கள். எறும்பை குறிவைப்பது யானை. இதை முதலில் புரிந்து கொண்டால் இந்த தலைப்பை விளக்குவதில் அல்லது விளங்குவதில் சிரமம் இருக்காது.   

முதலில் இப்படி சில்லறை வர்த்தகத்தில் நேரடி முதலீட்டை அனுமதிக்க தாங்கள் எடுத்த முடிவுக்கு சாதகமாக நமது நாட்டின் பிரதமர் கூறுகிற சில வாதங்கள் அத்துடன் மத்திய அரசு பத்திரிகைகளில் தனது முடிவுக்கு ஆதரவாக பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்து தனது முடிவுக்கு ஆதரவு தேடுகிறது.  அரசு கூறும் சாதகங்களையும் அது குறித்து பொருளாதார வல்லுனர்களின் எதிர் வாதங்களையும் இங்கே குறிப்பிடுகிறேன். 

அதற்கு முன் அதிரை நிருபர் தளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நான் எழுதி இருந்த “அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும்” ( 24/02/2012)  என்ற தலைப்பிட்ட ஆக்கத்தை கொஞ்சம் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டால் இந்த சுடு கஞ்சி தொண்டையில் இறங்க உதவியாய் இருக்கலாம். 

ஆரம்பமாக,   சில்லறை வணிகத்தில் செய்யப்படும் நேரடி அந்நிய முதலீடுகளில் ஐம்பது சதவீதம் கிராமங்களின் கட்டமைப்பு மற்றும்  பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று பிரதமர் கூறுகிறார். விவசாய முறைகளின் மேம்பாடு, செய்முறைகள், குளிர்பதன சாதன வசதிகள், உற்பத்திப்பகுதிகளில் இருந்து நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனை செய்யும்  சூப்பர் மார்கெட்டுகளுக்கு செல்லும் வசதிகள், விவசாயிகளுக்கு நல்ல விலை , ஆண்டிற்கு ஒரு     கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி, சீனாவைப்போல் நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கும் வாய்ப்பு என்றெல்லாம் ஆசை காட்டும் பட்டியல் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் போல்  நீள்கிறது.     

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடலாம்தான். அரசு தந்திருக்கும் நம்பிக்கை பட்டியல் அத்தைக்கு மீசை முளைப்பது போல்தான்.

முதலாவதாக பண்ணை விவசாயம் என்பது இந்தியாவில் இன்றைக்கு இருக்கும் அமைப்பில் சாத்தியப்படாத ஒன்று. வால்மார்ட், டெக்ஸ்கோ, கேரிபோர் ஆகிய மிகப்பெரும் உலக திமிங்கலங்கள் வெளிநாடுகளில் விவசாய பண்ணைகளில் நேரடியாக மொத்தவிலைக்கு கொள்முதல் செய்கின்றன என்பது உண்மைதான். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போல்தான் இந்தக்கதை. வெளிநாடுகளில் அப்படி சூழ்நிலை இருப்பதால் நடைமுறைப்படுத்த முடிகிறது. காரணம் மேல்நாடுகளில் ஒவ்வொரு விவசாயியும் ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களுக்கு உரிமையாளராக இருக்கிறார்.  சராசரியாக பிரான்சில் 274 ஏக்கரும், பிரிட்டனில் 432ஏக்கரும் ,கனடாவில் 798 ஏக்கரும் , அமெரிக்காவில் 1089 ஏக்கரும் , ஆஸ்திரேலியாவில் 17975 ஏக்கரும் விவசாயிகள் நிலம் வைத்து இருக்கிறார்கள். இதனால் மொத்த உற்பத்தியும் மொத்த கொள்முதலும் சாத்தியமாகிறது.  

ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு விவசாயியும் சராசரியாக வைத்திருக்கும் நிலத்தின் அளவு ஐந்து ஏக்கருக்கும் குறைவே. (அதிலும் நெல் விளையும் பூமிகளில் கல் விளைந்து இருக்கிறது.) சராசரி என்றுதான் குறிப்பிட்டேன். நடைமுறையில் ஏழை விவசாயி  வைத்து இருக்கும் நிலத்தில் அளவு ஒன்று அல்லது இரண்டு ஏக்கர்களே. இந்த சிறு துண்டு நிலங்களில்  பண்ணை விவசாயமும், மொத்தக் கொள்முதலும் சாத்தியமே இல்லை. ஆனாலும் முதலீடு செய்யும் அந்நிய நிறுவனங்கள் அதற்காக கை கட்டி இருக்காது. இதற்காக சிறு விவசாயிகளிடம் அவர்கள் வைத்திருக்கும் ஒன்று  இரண்டு ஏக்கர்  நிலங்களையும் ஆசை வார்த்தை கூறி விலைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுப்பதாக அபகரித்து பெருமபண்ணை விவசாயங்களை தொடங்கும். இயந்திரங்கள் வேலை செய்யும் இதனால் விவ்சாயக் கூலித்தொழிலாளர்கள்  பெருமளவில் வேலை இழக்க வாய்ப்புண்டாகும். விவசாயிகள் தங்களின் சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். பிரதமர் கூறுகிற 50% , அந்நிய முதலீடு கிராமத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்பதன் உண்மையான பொருள் விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களை அபகரிக்க இந்த முதலீட்டுப்பணம் உதவும் என்பதே இலைமறை காய்.    

அடுத்ததாக, விவசாய உற்பத்திப் பொருள்கள் குளிரூட்டப்படும் என்று ஒரு ஐஸ் வைக்கப்படுகிறது. குளிரூட்ட மூலதனம் மட்டுமல்ல  மின்சாரமும் தேவை. இப்போதைய கணக்கின்படி  இந்தியாவில் இன்னும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு பத்து சதவீதத்துக்கு மேலாகவே மின்சார பற்றாக்குறை இருக்கும். எதிர்கால தொழில் திட்டங்கள், மக்கள் தொகை வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி ஆகியவைகளை கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டங்கள் அமைப்புறவில்லை. இதில், மின்சாரப் பற்றாக்குறையால் படிக்கும் மாணவர்களுக்கும், குடிக்கும் தண்ணீருக்குமே பஞ்சம் என்கிறபோது குளிரூட்ட மின்சாரம் குதிரைக்கொம்புதானே. அப்படியே சொந்தமாக மின்சார உற்பத்தி செய்தால் அந்த செலவுத்தொகை பொருட்களின் விலையின் மேலே ஏறி சவாரி செய்யும்.    

மேலும், தற்போது கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் விளபொருள்களில் 60 சதவீதம் வரை விளையும் இடத்தில் வாழும் மக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள் ஆகியோருடைய பயனுக்கோ கட்டுப்பாட்டுக்கோ போய்விடுகிறது. மீதி உள்ள   40 சதவீதத்தில்  35 சதவீதம் அருகில் உள்ள சந்தை, சிறு கடைகள், சிற்றூர்கள் ஆகிய மூலங்களில் செலவாகிறது. எஞ்சி உள்ள  5 சதவீதம் மட்டுமே அரசின் நியாயவிலைக்கடைகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இப்போது அரசு அறிவித்திருக்கும் திட்டத்தின்படி அமுல் படுத்தினால் இந்த சங்கிலித்தொடர்பு அறுந்துபோகும். நிலத்திலிருந்து நேரடியாக ஒட்டு மொத்த விளைச்சல்கள் சூப்பர் மார்கெட்டுகளுக்கு கொண்டு செல்லப்பட்டால்  உற்பத்தி செய்யப்பட இடத்திலேயே ஒன்றும் கிடைக்காமல் போகும். நிலத்துக்கு சொந்தக்கார விவசாயி கூட தன் நிலத்தில் விளைந்த பொருளை வாங்க சூப்பர் மார்கெட்டுக்கு  செல்லும் நிலை ஏற்படும்.  நகரங்களில் விற்கும் பெரும் விலைக்கே கிராமத்து மக்களும் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். பலாப்பழம்  விலை  சவுகரியமாக வாங்கலாமென்று  துவரங்குறிச்சி முக்கூட்டு சாலைக்குப்  போனால் அங்கு வெறும் ஐந்தாறு பேர் உட்கார்ந்து இருக்கும் ஆற்றுப்பாலம்தான் இருக்கும். பலாப்பழங்கள் பக்கத்து பெரு நகரத்துக்கு உருண்டு போயிருக்கும்.  பலாமுசு வாங்கவேண்டுமானாலும் பட்டுக்கோட்டைக்குத்தான் போகவேண்டும். கிராமத்து சந்தைகள், உழவர் சந்தைகள், கூடைகளில் வரும் அன்று காலையிலே   பறித்த காய்கறிகள் யாவும்  அடையாளம் இன்றிப்போகும். அவைகளை நம்பி பிழைத்துக்கொண்டிருப்போர் வேலை இன்றி ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள்.  மொத்தத்தில் ஒரே கணக்காக கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் விலைவாசி ஏறவும் வேலைவாய்ப்புகள் பறிபோகவுமே இது காரணமாகும். 

நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் வரும் நன்மை என்று அடுத்து பிரதமர் பட்டியலிடுவது புதிய வேலை வாய்ப்புகளாகும். உலகப்பொருளாதரத்தில் ஏற்பட்ட   தேக்கநிலைக்குப் பிறகு , வேலை வாய்ப்புகள் அருகிப்போய்விட்டன. அதுமட்டுமல்லாமல் பலரின் வேலைகள் பறி போய்விட்டன.  இப்போது சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் நவீனமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு அனுமானிக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய கடைகளை அமைக்கும்போது சிலருக்கு வேலை  கிடைக்குமென்பது உண்மைதான் என்றாலும் ஏற்கனவே வேலையில் அல்லது சொந்த தொழில் செய்து பிழைக்கும் பலரின் வேலைவாய்ப்பின் மீது கணை தொடுத்து அவைகளை மாய்த்து அந்த  கல்லறைகளின்  மீது எழுப்பப்படும் சுவர்களே இந்த எண்ணிக்கை குறைவான புதிய  வேலைவாய்ப்புக்கள். கிராமங்களில் உள்ள எண்ணற்ற அண்ணாச்சி கடைகளும், அம்மாபட்டினத்தார் கடைகளும் என்ன ஆச்சு என்று கேட்கப்படும் நிலைமைக்கு ஆளாகிவிடும். அங்கெல்லாம் வலுவான திண்டுக்கல் பூட்டுக்கள் தொங்கும்.    இதன் படிப்பினை தாய்லாந்திலும், மெக்சிகோவிலும் இன்னும் இந்த ஆமை புகுந்த பல நாடுகளிலும் படிப்பினை தந்து இருக்கிறது. 

தாய்லாந்தில் இந்த ஆமைக்கு அனுமதி தந்த  பத்து ஆண்டுகளில் 39 லட்சம்  சிறு வணிக நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன.  3 கோடியே  75 லட்சம் மக்கள் வேலை இழந்தனர். இந்த திட்டம் அமுலுக்கு வந்த பிறகு அந்நாட்டில் செக்ஸ் தொழிலாளர்களின் எண்ணிக்கை முன்னை விட கூடி விட்டதாம். இதற்கு மேல் இதை  விளக்க வேண்டியதில்லை. பசி வந்திட பத்தும் பறந்து போகும். 

மெக்சிகோவில் ஐம்பது சதவீத உள்ளூர் சில்லறை வர்த்தக நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு இருக்கின்றன. மக்கள் போதை மருந்தை பயிரிடவும், கடத்தவும் ஆரம்பித்துவிட்ட சமூக அவலத்துக்கு தள்ளப்பட்டனர். “சாலை  ஓரத்தில் வேலையற்றவர்கள் – வேலையற்றவர்கள் நெஞ்சங்களில் விபரீத எண்ணங்கள் அரசே இது ஆபத்தின் அறிகுறி” என்றார் அண்ணா. இதுதான் மெக்சிகோவின் நிலைமை.   

அடுத்து அரசு சொல்வது, சிறு தொழில்கள் பிரம்மாண்ட வளர்ச்சி அடையும் என்பதாகும். அதாவது முப்பது சதவீதம் உள்ளூரில் உள்ள சிறு தொழிற்சாலைகளை இருந்தே பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது அரசே எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறுவது போலாகும். 

முப்பது சதவீதம் உள்ளூரில் கொள்முதல் செய்யப்படும் என்றால் மீதம் எழுபது சதவீதம் அந்நிய நாட்டிலிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று பொருள். அப்போது, நம்நாட்டில் சிறு, குறு தொழில்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு தொழில் நெருக்கடிக்கு உள்ளாகும்        என்பது சொல்லாமலேயே விளங்கும். வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இப்போது சீனாவில் இருந்து மிகக் குறைந்த விலைக்கு ஒட்டுமொத்தமாக பொருள்களை  ஏற்றுமதி /இறக்குமதி செய்து தங்களின் கடைகளில் விற்பனை செய்து வருகின்றன. அதே நேரம் இந்தியாவில் சிறு. குறு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு தொடர்ந்த தேவை மற்றும் ஏற்கனவே அமைப்பு ரீதியிலான தொடர்புகள் இருந்து வருகின்றன. இதனால் நியாயமான வேலைவாய்ப்புடன் பலர் பிழைத்து வருகிறார்கள். கோவை, ஈரோடு, லூதியானா ,  ஆகிய பகுதிகள் சிறு குறு தொழில்களின் மையங்களாக இருந்து வருகின்றன. பெரிய நிறுவனங்கள் சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு பொருள்களை தருவிக்கும்போது போதுமான தேவை இன்றி நமது சிறு/ குறுந்தொழில்களும் நாளடைவில் அழிந்துவிடும். இந்த அழிவுக்கு நேரடி அந்நிய மூலதனம் அடிக்கல் நாட்டிவிடும். 

பொருளாதார கோட்பாடுகளில் PROTECTION என்ற கோட்பாடு உள் நாட்டுத்தொழில்களை பாதுகாப்பதற்காக நாடுகள் கடைப்பிடிக்கும் இன்றியமையா  கோட்பாடாகும். அளவற்ற- கட்டுப்பாடற்ற அந்நிய  நிறுவனங்களின் முதலீட்டை அனுமதிப்பது  உள்ளூர் தொழில்களை வளரவிடாது என்பது,   பொருளாதாரத்தின் அரிச்சுவடி  படித்த அனைவருக்கும் தெரியும்., இந்த நிலை, ஹார்வார்டு பலகலைக்கழகத்தில்  படித்தவர்களுக்கு       தெரியாதது ஆச்சரியம் ஆனால் உண்மை. அதற்கும் காரணம் இருக்கும். என்ன காரணமாக இருக்கலாம்? இறுதியில் காணலாம். 

இதற்கு அடுத்ததாக அரசு எடுத்துவைக்கும் வாதம் நுகர்வோருக்கு விலை குறையும் என்பதாகும். உற்பத்திப் பகுதிகளிலிருந்து மொத்தக்கொள்முதல்- நேரடியாக விற்பனை மையங்களுக்குப் போய்விடும் – இடைத்தரகர்கள் இல்லாததால் , சில்லறை நுகர்வோர்க்கும், மொத்த விலைக்கே சாதனங்கள் மற்றும் பொருள்கள் கிடைக்கும் எனவே விலைவாசி  வீழ்ச்சி ஏற்படும் என்று அரசு நம்பிக்கை ஊட்டுகிறது.  இது நடைமுறையில் இருக்குமா என்றால் இருக்காது என்றே வல்லுனர்கள் கருதுகிறார்கள். 

உற்பத்தி பகுதிகளில் இருந்து விற்பனை இடத்துக்கு நேரடியாக் கொண்டு சென்றாலும், தொடர்புடைய செலவினங்கள் பொருள்களின் மீது ஏற்றியே விலை நிர்ணயம் செய்யப்படும். எடுத்துக்காட்டாக, போக்குவரத்து செலவு, ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, கடைகளில் உள்ள குளிர்பதன செலவு, கடைக்குரிய பெரும் வாடகை, விளம்பரம், விற்பனையாளர்களின் ஊதியம், அவர்கள் கட்டி இருக்கும் டை யின் சலவை செலவு, வாங்குவோருக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்வரை பொருள்களின் மீது ஏற்றப்பட்டு விற்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள  ஒரு வியாபாரி சந்தையிலோ, மொத்த வியாபாரியிடமோ, ஏலம் மூலமோ கொள்முதல் செய்து போக்குவரத்து செலவை மட்டும் கணக்கிடும் அடக்கவிலை பழக்கம் அடிபட்டுப்போகும்.  ,  

அமெரிக்காவில் கூட வால்மார்ட் நிறுவனம் பால் பண்ணைகளில் ஒரு லிட்டர் பாலை ரூ.77.38  பைசாவுக்கு கொள்முதல் செய்து, அதன் பிரம்மாண்ட கடையில் வைத்து ரூ.176.12 பைசாவுக்கு விற்பனை செய்கிறது.

அதேபோல்தமிழ்நாட்டில் பால் பண்ணைகளில் லிட்டர் ரூ 22க்கு கொள்முதல் செய்யப்படும் பால் லிட்டர் ரூ   32க்கு ஆவின்  விற்பனை நிலையங்களில் விற்கப்படுகிறது. இது ஒரு உதாரணம் போதும் வால்மார்ட் வந்தால் என்ன விலைக்கு விற்கப்பட்டுக்கொண்டிருக்கும் பால் என்ன     விலைக்கு விற்கப்படும்  என்று நாமே கணக்குப் போட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.  

சீனாவில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஒரு வாதத்தை  அரசும் பிரதமரும் எடுத்து வைக்கிறார்கள். சீனாவுடன் எல்ல விஷயங்களிலும் இந்தியாவை ஒப்பிட பிரதமர் தயாரா? அப்படியானால் ஒலிம்பிக்கில் சீனா வென்ற தங்கப்பதக்கம் எத்தனை? இந்தியா வென்றது எத்தனை? சீனாவில் அடிப்படைத்தேவையான தண்ணீர், மின்சாரத்துக்கு மனிதர்கள் ஆலாய்ப் பறக்கவில்லை. ஆனால் இந்தியாவில்????? சொல்லவேண்டுமா?  அன்றாடம் அனுபவிக்கிறோமே. ஒப்பிடுவதானால் எல்லாவற்றையும் ஒப்பிடவேண்டும். 

சீன நாடு, அந்நிய நேரடி முதலீட்டை  அனுமதித்து இருப்பதற்குக் காரணம் சீனாவின் சிறு/குறு/ குடிசைத்தொழில்களில் உற்பத்திப் பெருக்கம். அவற்றிற்கு முதலீடுகள் தேவை. சீனப்பொருட்களுக்கு உலகளாவிய சந்தை இருக்கிறது. தான் முதலீடாகப் பெரும் அன்னியப் பணத்துக்கு, சீனா பொருள்களை ஏற்றுமதி செய்து கழித்துவிடும். ஆனால் இந்தியாவில் நிலை அப்படியா  இருக்கிறது? இதனால் அவர்களுக்கு உபரி அந்நிய செலாவணி கிடைக்கிறது. இதனால் சீனா அனுமதிக்கலாம். இந்தியா போன்ற தண்ணீரில் தள்ளாடும் தாமரைப்பூவுக்கு-  அயிரை  மீனுக்கு  ஏன் விலாங்கு மீன் சேட்டை? கீழ்க்கண்ட புள்ளி விபரம் நமக்கு இதை தெளிவாக்கும். 

சீனா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது ஆண்டுக்கு 36, 500 கோடி டாலர்கள். 

சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வது ஆண்டுக்கு 10,000 கோடி டாலர்கள். 

ஆக, சீனாவுக்கு உபரியாக ஏற்றுமதி மூலம் வருவது 26, 500 கோடி டாலர்கள் . 

அதுமட்டுமல்ல, சீன உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகம். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், அதிக அளவில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து தான் பொருட்களை குறைந்த விலையில் இறக்குமதி செய்து தங்களது கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்து வருகின்றன. சீனப்பொருள்கள் சீனாவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வால் மார்ட் நிறுவனத்தால் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆகையால் வால் மார்டை சீனாவிற்குள் அனுமதிப்பது சீனாவிற்கு நஷ்டமல்ல.

ஆனால் இந்தியாவின் நிலை என்னவாக இருக்கிறது. ஏற்றுமதிக்கும், இறக்கு மதிக்கும் இடையில் 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இன்னும் சமநிலைக்கு வந்த பாடில்லை. அதுமட்டுமல்ல, இந்தியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 40 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்னும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. இன்னும் பல துறை களில் தன்னிறைவு காணப்படவில்லை. குடிதண்ணீர் குடங்கள் தவமிருக்கின்றன. மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டு இருககிறார்கள். அடிப்படை சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. இந்த அவலங்கள் எல்லாம் அரசு கைகாட்டும் சீனாவிலோ, பெல்ஜியத்திலோ, மெக்சிகொவிலோ, இந்தோநேசியாவிலோ, ஹாங்காங்கிலோ  இருக்கிறதா?. சீனா அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத்தரத்தையும்  அந்நிய முதலீட்டிற்கு காவு கொடுக்கவில்லை. கண்மூடித்தனமாக சில்லரை வர்த்தகத்தில் சீனாவுடன் அல்லது மற்ற நாடுகளுடன்  இந்தியாவை ஒப்பிடுவது சில்லரைத்தனமானது. இந்திய மக்களின் நலனை பாது காக்கும் வகையில் திட்டமிடுவதே புத்தி சாலித்தனமாக இருக்கும். ஐந்து பிள்ளைகள் அமெரிக்காவில் இருந்து சம்பாதித்து பணம் அனுப்பும் வீட்டில் தினமும் ஆடு அறுத்து சமைக்கலாம். அன்றாடம்  ஆட்டோ ஓட்டிப் பிழைப்பவன் அதைப்பார்த்து நானும் ஆடு அறுப்பேன் என்று மல்லுக்கு நிற்க முடியுமா? அடுத்த வீட்டுக்காரி ஆண்பிள்ளைப் பிள்ளை பெற்றால் எதிர்த்தவீட்டுக்காரி அம்மிக்குழவியைத்தான்  அடிமடியில் கட்டவேண்டும். 

அதுமட்டுமல்ல இன்று உலக அளவில் அந்நிய நேரடி முதலீட்டால் ஏற்படப்போகும் அபாயங்களை முன் கூட்டியே உத்தேசித்து ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் பல முன்னேற்பாடான சட்ட திட்டங்களை வகுத்து அமுல படுத்தி இருக்கின்றனர். இவை இந்த நேரடி முதலீட்டால் ஏற்படும் தீய விளைவுகளில்  இருந்து அந்த மக்களை காப்பாற்றும்.இப்படி எவ்வித முன்னேற்பாடான சட்டங்களும், பொருளாதார திட்டங்களும் இந்தியாவில் இன்னும் உருவாக்கப்படவில்லை. ஆனால் கிடப்பதெல்லாம் கிடக்கட்டுமென்று கிழவியைத்தூக்கி மணவறையில் வைத்த கதையாக இருக்கிறது. 

“அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காற்றுக்கு நிற்காது- அழகாய் இருக்கும் காஞ்சீபுரம் புடவை சந்தையில் விற்காது” என்று கண்ணதாசன் பாடியதுதான் நினைவுக்கு வருகிறது.  இந்தியாவை போன்று சொந்த நாட்டு மக்களின் நலனை நரபலி  கொடுத்து எந்த ஒரு நாட்டிலும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் விதிகள்                உருவாக்கப்படவில்லை. 

இந்த திட்டத்தை அறிவித்த இந்திய  அரசின் திட்டக்கமிஷன் 8.2% வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதை அறிவிப்பதாக சொல்லி இருக்கிறது. இந்த வளர்ச்சி கணக்கிடப்பட்டிருப்பது யாருக்கு என்றுதான் தெரியவில்லை. இதன் பின்னணியில் பெரும் சதி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நாட்டை சுரண்டும் மேல்மட்ட கும்பல்களின் அந்நிய  செலாவணி முதலீடுகளின் மறு சுழற்சி முறைக்கு இந்த திட்டம் பெருமளவில் உதவப்போகிறது. 

அதாவது  அந்நிய முதலீடு இப்போ மத்திய அரசு அவசரம் அவசரமாக கொண்டு வர என்ன காரணம் ? 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சில வருடங்களுக்கு  முன்  39 ரூபாய் என்கிற   அளவில் இருந்தது இப்போது ஒரு டாலரின்  இந்திய மதிப்பு 56 ரூபாய். அரசியல் வியாதிகள் இந்திய வளங்களை சுரண்டி இந்திய ரூபாய் 39 மதிப்பு இருந்த போது கருப்புபபணமாக அந்நியநாடுகளில் பதுக்கினார்கள்.  இப்போது இந்திய ரூபாய் மதிப்பு அதள பாதாளத்தில் உள்ளது. அதாவது நாம் ஒரு அமெரிக்கா டாலர் வாங்க ரூபாய் 56 கொடுக்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் சில வருடங்களுக்கு முன் நூறு டாலர் வாங்க இந்திய பணம் 3900 ரூபாய் செலவழித்தவன் ,இப்போது அதை மீண்டும் உள்ளே கொண்டு வந்தால் 5600 ரூபாய் கிடைக்கும்.

இப்போது அந்நிய நிறுவன முதலீடு அனுமதி என்பது  அரசியல்வியாதிகள் அந்நிய நாடுகளில் பதுக்கி வைத்து இருக்கும் கறுப்புபணத்தை வெள்ளையாக்கி இந்தியாவிற்குள் கொண்டு வர மத்திய அரசை நடத்துபவர்கள், அவர்களின் கைப்பாவைகள் மூலம்   நடத்தும் நாடகமே என்று வல்லுனர்கள் சந்தேகம் தெரிவிக்கிறார்கள். இந்த சந்தேகத்தில் உண்மை இருக்கலாமென்று அச்சமாக இருக்கிறது. அந்நிய முதலீடு அனுமதியால் வால்மார்ட் மட்டுமா வரபோகுது? மொரீஷியஸ், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆகிய நாடுகளில் இருந்தெல்லாம் அரசியல்வியாதிகளின் ஒரு லெட்டர் பேடில் உருவாக்கப்பட்டுள்ள போலி நிறுவனங்கள்    இந்தியாவில் முதலீடு என்ற பெயரில் ஏற்கனவே நம்மிடம் இருந்து கொள்ளை அடித்த பணத்தை மீண்டும் உள்ளே கொண்டு வரும். இதுவே நமது அரசியல்வியாதிகளின் அந்நிய  முதலீட்டின் மறு சுழற்சி.   

இந்த திட்டத்தில் உள்ள இன்னொரு கேலிக்க்கூத்து இந்த திட்டத்தை  நாடு முழுதும் செயல் படுத்த முடியாது என்பதாகும். பி. ஜெ. பி. ஆளும் மாநிலங்கள், தமிழ்நாடு, ஒரிசா போன்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை துடைப்பக்கட்டையால் அடிக்காத குறையாக   விரட்டிவிட்டன.  காங்கிரஸ் ஆளும் கேரளாவும் கதவை “சாரி”  சொல்லி சாத்திவிட்டது.  நாடு முழுதும் ஒரேமாதிரியாக செயல்படுத்தமுடியாத ஒரு  திட்டம் நாட்டுமக்களுக்கு நன்மையை அள்ளித்தரும் என்று எப்படி நம்ப முடியும்?

இறுதியாக இந்த நாட்டின் பிரதமர் கூறுவது என்னவென்றால் புதிய புதிய பொருளாதார திட்டங்கள்  இல்லாமல் வளர்ச்சிக்குத் தேவையான பணத்தை உண்டாக்க  முடியாதாம். பணம் மரத்தில் காய்க்காதாம். நாட்டின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பணத்துக்கு எங்கே போவது என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்வதற்கு ஒரு பொருளாதர நிபுணர் வேண்டாம்.  கோடி கோடியாய் உலகநாடுகளில் பதுக்கப்பட்ட கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்து நாட்டுக்குக் கொண்டுவந்தால் என்ன? அலைவரிசை ஊழல, நிலக்கரி சுரங்க ஊழல, காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என்றல்லாம் சுரண்டப்பட்ட மக்கள் பணத்தை அந்த சுரண்டல்வாதிகளை தயவுதாட்சண்யமின்றி  தூக்கில் போட்டாவது இந்த நாட்டுக்குக் கொண்டுவந்தால் என்ன என்று ஒரு பாமரன் கேட்கிறான். ஆனால் இதை யாரிடம் கேட்பது? ஆப்பத்தை பங்குவைத்த குரங்கிடமா? மங்கை களங்கப்பட்டால் கங்கையில் குளிக்கலாம் என்பார்கள் ஆனால் கங்கையே களங்கப்பட்டால்? 

இத்தனை பக்கங்களில் விவரித்த இந்த கதையை ஒரு புதுக்கவிதை நச்சென்று இப்படி சொல்கிறது. 

ஆடு மாடு மேய்த்துக் கிடைபோட்ட மேய்ச்சல் 

நிலங்கள். 
அடுப்பெறிக்க விறகு ஒடித்த கருவேலங்காட்டு 
புறம்போக்கு நிலங்கள் 
ஆங்கிலேயன் அடிமை வர்க்கத்திற்குத் 
தந்துவிட்டுப் போன 
பஞ்சமி நிலங்கள் 
உழுது பயிரிட்டு உண்டு வாழ்ந்த 
நன்செய் நிலங்கள் 
அனைத்தையும் அபகரித்துக் கொண்டு 
அந்நிய முதலாளித்துவம் 
விளக்கம் சொன்னது 
இது 
கிராமத்தானை நகரத்தானாக மாற்றும் 
திட்டம் என்று.
உண்மைதான் 
கிராமத்தான் நகரத்தான் ஆனான்
மாநகரத்து நடைபாதையில் 
உள்நாட்டு அகதியாக.

ஆகவே சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய  முதலீட்டை அனுமதிப்பது இந்திய பொருளாதாரப் பறவை மேலும்  உயரப் பறக்க உதவும் சிறகாக இருக்காது .  மாறாக பறக்க நினைக்கும் பறவையை முடக்கிப்போடும் விலங்காகவே அமையும்.  மக்களிடம் புரட்சி எண்ணம் வேண்டாம் எழுச்சி எண்ணம் வந்தால் போதும். 

இப்ராஹீம் அன்சாரி

Reference: 
  • U.S.A FOREIGN AGRICULTURAL SERVICES, OSEC BUSINESS NETWORK, ECONOMIST INTELLIGENCE UNIT, TIMES OF INDIA, ECONOMIC TIMES. 
  • அதிரை நிருபர்  வலைதளத்தில் 24/02/2012   அன்று வெளியான எனது அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் கட்டுரை. 

20 Responses So Far:

sabeer.abushahruk said...

எழுந்து நின்று ஓர் ஐந்து நிமிடம் கைதட்டனும்போல் இருக்கிறது காக்கா.

அருமையான லெக்ச்சர். அற்புதமான உதாரணங்கள், பொருத்தமான கிண்டல்கள், தொலைநோக்குப் பார்வை என்று மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது இந்தக் கட்டுரை.

-இப்படிக்கு ஒரு ஃபிஸிக்ஸ் பிரியன். (அஃதாவது, ஒரு இயற்பியல் பிரியனுக்குப் பிடிக்கிறமாதிரி பொருளாதார வகுப்பு எடுப்பது சாதாரணமா?)

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Iqbal M. Salih said...

இதற்குத்தான்டா சபீர் ஒரே வார்த்தையில் 'டாக்டர்' என்றேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

//இதற்குத்தான்டா சபீர் ஒரே வார்த்தையில் 'டாக்டர்' என்றேன்.//

அதனாற்றான், அடியேனும் வழிமொழிந்தேன் அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் நற்சான்றுக்கு.

பொருளாதாரப் பாடத்தைத் துணைப்பாடமாகக் கற்றவனாதலால், டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களிடம் பாடம் படிக்காமற் போன அக்குறையை அ.நி. பல்கலைக்கழகம் வழியாகத் தொலை தூரக் கல்வியில் பொருளாதார மேற்படிப்பைப் படிக்கும் இவ்வரிய வாய்ப்புக் கிட்டியது.

ஓய்வு நேரங்களை ஆய்வுக்குரிய நேரங்களாய் மாற்றிக் கொண்டு வாழும் இவ்வறிஞர்க்கு அல்லாஹ் நீடித்த ஆயுளையும், உடல் நலத்தையும் , குறைவற்ற செல்வத்தையும் வழங்குவானாக(ஆமீன்)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பின்னணி என்னவாகும் என்பது பற்றி அருமை விரிவுரை!

நம்ம டாக்டருக்கு தெளிவாக புரிந்த எதிர் விளைவுகள், டெல்லி டாக்டருக்கு புரியாத மர்மம் என்னவோ!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தேடித் தேடிச் சென்று பலதரப்பட்ட பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வாசித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் ஒரே இடத்தில் அற்புதமான அலசலாக விரிவான பாடமெடுக்கும் டாக்டர் இ.அ.(காக்கா) அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹ் ஹைர்...

Shameed said...

அழகிய விளக்கங்கள் அதன் கூட தேன் தடவிய நக்கல்கள்

பெரும் பணம் புரளும் வியாபாரமா இருக்கும் இதை சில்லறை வியாபாரம் என்று சொல்கின்றார்களே அது ஏன் ?

அலாவுதீன்.S. said...

உள்நாட்டுக் கொள்ளைக்காரனும், வெளிநாட்டுக் கொள்ளைக்காரனும் பலனடைய, இந்திய மக்களை பலி கொடுக்கும் திட்டம்தான் அந்நிய நேரடி முதலீடு.

(இன்னும் பாக்கி இருப்பது வங்கியும், தண்ணீரும்தான் - விரைவில் இதுவும் தாரை வார்க்கப்படும்).

இதை கொண்டு வந்தவரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. மன் (மண்ணு)மோ. சிங், என்பவர் ஒரு உலக வங்கியின் தயாரிப்பு. (அங்குதான் வேலை பார்த்தவர்) எஜமானனுக்கு விசுவாசமாக ''இந்தியாவை'' தாரை வார்க்கிறார்.

எத்தனை காலம் மக்கள் புழுவாக இருப்பது, இந்த நாட்டை விற்றுக் கொண்டு இருக்கும் அரசியல் வியாதிகளிடம்.

தெளிவாக விளக்கியதற்கு வாழ்த்துக்கள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...


//உண்மைதான் 
கிராமத்தான் நகரத்தான் ஆனான்
மாநகரத்து நடைபாதையில் 
உள்நாட்டு அகதியாக.///

Very nice pudu kavithai..

காக்கா இது சாட்டையடி அல்ல
crocodile பெல்ட்ல அடி.

Yasir said...

வெளிநாட்டு முதலீடை அனுமதித்தால் என்ன ஏற்படும் என்பதைப்பற்றி தெள்ளத்தெளிவான விளக்கம் மாமா...பொருளாதார மாமேதை போதையில் இருந்தாரா இந்த முடிவுகளை எடுக்கும்போது

KALAM SHAICK ABDUL KADER said...

What is the difference between EAST INDIA COMPANY (before freedom) and FOREIGN INVESTMENT (now)?

sabeer.abushahruk said...

FOREIGN INVESTMENT is even worst.

To understand it better, remove the letter "S" from East India Company and you will get

EAT INDIA COMPANY

Meerashah Rafia said...

எத்தனையோ முறை இதை பற்றி சரிவர புரிந்துகொள்ள கூகுல் முதல் டைம்ஸ் ஆஃப் இந்தியா வரை சுற்றிவந்துவிட்டேன்...ஒரு மண்ணும் புரியமாட்டேண்டுவிட்டது...

தங்கள் ஆக்கத்தில் பாதி படித்ததுக்கொண்டிருக்கும்போதே ஆஹா 'இவரை வணிகவியளுக்கு கெஸ்ட் லெக்சராக தமிழ்நாடு பூரா சுத்தவிடலாம்போளிருக்கே' என்று தோன்றியது.. அவ்வளவு எளிய முறையில் தங்களின் விளக்கம்..

KALAM SHAICK ABDUL KADER said...

Good answer , Kavivender.

Had our freedom fighters not sacrificed for throwing EIC, we should not have got freedom. What is the use of their sacrifices now? Again, our country will be under slavery in the name of FID.

Things are at sixes and sevens.

KALAM SHAICK ABDUL KADER said...

//FID// read as FDI (Foreign Direct Investment)

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 said...

Wonderful ,we must know about FDI,its seems like bad for us.good article.keep on write like this

ZAKIR HUSSAIN said...

வெளிநாட்டு முதலீட்டை நம்பி உள் நாட்டு மக்களை சிரமத்தில் தள்ளும் மிகப்பெரிய தவற்றை இந்தியா செய்கிறது. நிறைய கடைகள் வியாபாரம் இல்லாமல் மூடப்படுவதால் மறுபடியும் இந்தியா வெளிநாட்டினரிடம் அடிமைப்ப்ட்டு போகும்.

உங்களின் இந்த விளக்கமான பதிவு ரொம்ப உதவியாக இருந்தது, புரிந்து கொள்ள.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...


அன்றைய "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் அருமை காக்கா இபுறாஹிம் அன்சாரி அவர்களின் இவ்வாக்கத்திற்குப்பின் "கொள்ளையனே வெளியேறு" என புதுப்பிக்கப்படலாம்.

யாங்காக்கா, வ‌ங்கிக‌ளில் ஒரு சாதார‌ன‌ குடிம‌க‌ன் ரூபாய் 50,000க்கு மேல் செலுத்த‌/சேமிக்க‌ பேன் கார்டு இருக்கா? உங்க‌ வாப்பாக்கு மிளாரிக்காட்லெ ம‌னைக்க‌ட்டு இருக்கா?ண்டு எல்லாம் கேக்குறாங்க‌....ஆனால் 13,000 கோடி, 1,26,000 கோடிக‌ளை எல்லாம் வ‌ங்கிகளில் (வைப்பு/நடப்பு கணக்குகளில்) இடுவ‌த‌ற்கு என்னவெல்லாம் கேட்ப்பார்க‌ளோ? ரேச‌ன் கார்டு ம‌ட்டும் போதுமா? தெரிய‌வில்லை. சும்மா கேட்டேன்.....

அதிரை சித்திக் said...

பெரிய முதலைகள் ..
சிறிய குளத்திற்குள் வளர்க
ஆசை ..சிக்குவது என்னவோ
அப்பாவிகள் மட்டும் தான்
முதலைகள் பெரும் ஆற்றுப்பக்கம்
போக வேண்டியது தானே
ஒன்றும் இல்லா குளத்தை
நாடுகிறது ...?

Ebrahim Ansari said...

கருத்திட்ட அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் ,

மிக்க மகிழ்ச்சி. ஜசக்கல்லாஹ்.

மிக நீண்ட பதிவானாலும் அனைவரும் படித்து கருத்திட்டு இருப்பதைக்காண மிக்க மகிழ்ச்சி.

உங்கள் அனைவரின் தகவலுக்காக - அதிரை நிருபர் தளத்தில் வெளிவந்த " மனு நீதி மனித குலத்துக்கு நீதியா?" தொடர் , நூல் வடிவம் பெற்று வருகிறது. இன்ஷா அல்லாஹ் விரைவில் வெளியிடப்படும். முடிந்தவரை ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறையில் வெளியிட முழு முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். துஆச்செய்யுங்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு