கலந்துரையாடல். – பகுதி ஒன்று.
கடந்த 8/10/2012, அன்று அதிரை இமாம் ஷாபி மேல்நிலைப்பள்ளியில், முன்னேற்பாடு எதுவும் இல்லாமல் , தற்செயலாக ஒரு அரிய சந்திப்பு ஏற்பட்டது. சந்திப்புக்கு முதல் காரணம் தம்பி நூர் முகமது அவர்கள், சவூதியிலிருந்து விடுமுறையில் ஊர் வந்து இருககிறார்கள். அன்றைய தினம் காலை என்னை அலைபேசியில் அழைத்து, சந்திக்க வேண்டுமென்று சொன்னார்கள். நான் என் வீட்டுக்கு அழைத்தேன். ஆனால் நூர் முகமது அவர்களோ, காலை பத்து மணிக்கு இமாம் ஷாபி பள்ளியில் ஏதோ வேலை இருப்பதால் அங்கு வந்துவிட்டால் பேராசிரியர் ஜனாப். அப்துல் காதர் அவர்களையும் சந்தித்தது போல இருக்கும் என்று என்னையும் அங்கேயே வரும்படிக் கேட்டுக் கொண்டதற்கிணங்கி நானும் பத்து மணிக்கு அங்கு ஆஜராகி விட்டேன். நான் சென்று சற்று நேரத்தில் மரியாதைக்குரிய ஜனாப். S. K. M. ஹாஜா முகைதீன் சார் அவர்களும் நாங்கள் நினைக்காமலேயே அங்கு வந்து விட்டார்கள். அதன்பின் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும் வரவே, நாங்கள் நால்வரும் அங்கு அமர்ந்து பொதுவாக சில செய்திகளைப் பேசிவிட்டு, நலம் விசாரித்து விடைபெற்றுச் செல்லலாமென்றுதான் அங்கு அமர்ந்தோம்.
ஆனால் பசியும் மறந்து, (இடையில் இரண்டு சமூசா டீ?) நான்கு மணி நேரம் நாங்கள் பல தலைப்புகளில் கலந்துரையாட வேண்டியதாயிற்று. இந்தக் கலந்துரையாடல் ஒரு பார்வையில் ஒரு கருத்தரங்கமாகவும், சில நேரங்களில் ஒரு பட்டிமன்றம் போலவும், சில நிமிடங்களில் தகவல் மாற்றமாகவும், சில தருணங்களில் நினைத்தாலே இனிக்கிற அழியாத கோலங்களை அசை போடும் நிகழ்வாகவும் அமைந்து விடுமென்று நான் நினத்துக் கூடப் பார்க்கவில்லை. அந்தச் செய்திகளை அனைவருடனும் பகிரவே இந்தபதிவு குறுந்தொடராக.
முதலாவதாக, நூர் முகமது அவர்கள் எனது உடல் நலம் குறித்து விசாரித்தார்கள். நான் யாரிடம் மருத்துவம் பார்த்துக்கொள்கிறேன் என்று கேட்டார்கள். நான் கூறினேன் தஞ்சையில் இதய நோய் சிகிச்சை நிபுணர் மருத்துவர் கி. மூர்த்தி அவர்களிடமென்று. உடனே கலைக்களஞ்சியம் தனது பக்கங்களை புரட்ட ஆரம்பித்து, பொழிய ஆரம்பித்தது.
தஞ்சையில் இன்று மிகவும் பிரபலமான மருத்துவர்கள் பலரும் கிராமப்புறங்களில் இருந்து மருத்துவம் படித்துவிட்டு பெரும் புகழுக்கு ஆளாகி இருககிறார்கள். நமது ஊரார் பலரும் இவர்களின் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக டாக்டர் அழகரசன் , டாக்டர் மூர்த்தி, டாக்டர் குணசேகரன், டாக்டர் வாஞ்சி லிங்கம் , டாக்டர் ராஜ்குமார், டாக்டர் பாஸ்கர், டாக்டர் முரளி போன்ற பெரும்பாலோர் அதிரையை ஒட்டிய விக்ரமம், தாமரங்கோட்டை, குருவிக்கரம்பை, கல்யாண ஓடை போன்ற சிறு கிராமங்களில் பிறந்து படித்து இன்று புகழ்பெற்ற மருத்துவர்களாக திகழ்கிறார்கள். இவர்களில் சிலர் நமது காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் கல்வி பெற்றவர்களும் இருக்கிறார்கள். நூர் முகமது அவர்களின் கேள்வி என்னவென்றால் , சிறு கிராமங்களில் பிறந்து படித்தவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்று இருக்கிறார்களே அவர்களோடு ஒப்பிடும்போது அதிரையில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் டான் பாஸ்கோ, பாஸ்டன், சர்ச் பார்க், கிரசன்ட், அல்-அமீன் என்றெல்லாம் புகழ்பெற்ற கல்வி நிலையங்களிலும், மாநகரங்களிலும் படித்தவர்கள் பலர் இருந்தார்களே/இருக்கிறார்களே அவர்களெல்லாம் ஏன் இப்படி ஒரு நல்ல துறையில் கல்வி கற்று புகழ் பெற முடியவில்லை? அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வயதுடைய உயர்கல்வி கல்லூரி இருக்கும் ஊரைச் சேர்ந்தவர்கள் ஏன் அந்தக் கல்லூரியில் பேராசிரியர்களாக , விரிவுரையாளர்களாக பணியாற்றிட முடியவில்லை? நம் ஊரில் இல்லாவிட்டாலும் வெளியூர்களில் கூட ஏன் இத்தகைய பணிகளை ஆற்றுவாரில்லை ? ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞரரோ, காவல்துறையில் உயர் பதவி வகிப்பவரோ , I.A.S., I. F.S. அதிகாரிகளோ இதுவரை ஏன் நமதூரில் உருவாகவில்லை என்ற ஒரு மில்லியன் டாலர் கேள்வியை மிகுந்த சமுதாயக் கவலையோடு எழுப்பினார்.
இதற்கு நான் பதில் சொன்னேன். முதல் காரணம் நமதூராருக்கு அரசு பதவி வகிக்கவேண்டுமென்ற ஆர்வமில்லை.காரணம் நமது தேவைகளுக்கு அரசு தரும் சம்பளம் பற்றாது என்கிற ஆணிவேராக மனதில் பதிந்துள்ள எண்ணம்தான். அரசு பதவி வகித்தால் மாதக்கடைசியில் பால்காரருக்குக் கடன்தான் சொள்ளவேண்டிவரும் என்பது நமது மக்களுக்கிடையில் ஊறிப்போன ஒரு பரவலான எண்ணம். நமது பெண்களுக்கு மத்தியில் சம்பளம், மற்ற வாழ்க்கைத்தர வசதிகளை அண்டை அயல்வாசிகளுடன் ஒப்பிடும் மனப்பான்மை. பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம் என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் சொன்னோம் என்றால் அடுத்த கேள்வி மாப்பிள்ளை எந்த ஊர் சபூர் என்பதுதான். அதில் கூட துபாய் மாப்பிள்ளை என்றால் ஏன் அமெரிக்காவில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள்.
மேலும் பெண்களுக்கு வீடு கொடுப்பது, பெரும் அளவு நகை கொடுப்பது, வரதட்சணை கொடுப்பது போன்ற காஸ்ட்லியான சமூக காரணங்களுக்கு உள்ளூரில் எவ்வளவு பெரிய அரசுப் பதவியில் இருந்தும் பெறும் சம்பளம் பற்றாது என்கிற காரணங்கள்.பிற சமயங்களில் உள்ளவர்கள் கத்தரிக்காயையும் துவரம் பருப்பையும் வைத்து காரியங்களை சிறப்புடன் முடித்துவிடுவார்கள். நமக்கோ கிடாய் அறுக்கவேண்டும்; சீர் கொடுப்பதற்கு நெய்யில் சுட்ட அதியதரம் வேண்டும்; பெண் அழைப்புக்கு நானக்கத்தான் சுட்டுப் பரத்தவேண்டும்; பசியாற்ற வட்டிலப்பம் வைக்க வேண்டும். காலைப் பசியாற ஆட்டு நுரையீரலும், அறுக்கப்பட்டு சூடு ஆறாத ஈரலும் வேண்டும். ரம்பை இலையும், இஞ்சி பூண்டும் சேர்த்து தாளிக்கும் மணம் மணக்காத மண வீடு நமக்கு மணவீடா? திருமணம் மற்ற காரியங்களுக்கு ஊரைத் திரட்டி விருந்து வைப்பதற்கும், அடுத்த வீட்டுக்காரரின் மனைவி துபாயிலிருந்து கணவர் கொண்டுவந்து கொடுக்கும் கவர்னர் மாலையை போட்டு ஆட்டும்போது உள்ளூரில் கலெக்டர் மனைவியாக இருந்தாலும் அதற்கு ஈடு கொடுக்க முடியாத “ஒப்பீட்டு வாழ்க்கைத்தரப் பொருளாதாரம்” பெரும் தடையாக இருக்கிறது. ஆகவே உள்ளூர் பதவிகளைத் தேடாமல் கட்டை துடைப்பமானாலும் கப்பல் கூட்டும் துடைப்பமாக வேண்டுமென்றே படித்தவர்கள் கூட திரைக்கடல் ஓடி திரவியம் தேடப் புறப்பட்டுவிடுகிறார்கள்.
இதனால் பல பட்டதாரிகளுடைய பல்கலைக்கழக பட்டம், அவர்களுக்கு உயர்ந்தபட்சமாக உதவுவது திருமணப் பத்திரிகையில் போட்டுக்கொள்ள மட்டுமே. மற்றபடி எம். பி. எ. படித்துவிட்டு அமெரிக்காவில் ஹைபர் மார்க்கெட்டில், பார்கோடு பார்த்து பில் போடப் போய்விடுகிறார்கள். பலர் லண்டனில் கிடைக்கும் வேலையை செய்கிறார்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் வருடக்கணக்கில் விசாக் காரணங்களால் தொடர்ந்து தங்கி ஊர் வரமுடியாமல் இரு தரப்பு ஏக்கப் பெருமூச்சில் இரவில் காலம் கழிக்கிறார்கள். நமதூரில் அரசுப் பதவிகளில் ஆட்கள் அமர ஆர்வம் காட்டா ததற்கு காரணம் வெளிநாட்டு மோகம், பெண்களின் பேராசை ஆகியன என்று நான் சொன்னேன்.
படித்த படிப்புக்கும் செல்வமுடைமைக்கும் பல நேரங்களில் தொடர்பு இல்லாமல் போய்விடுவதாக கூறிய பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் தனது பாணியில் ஒரு கதையைக் கூறினார்கள். அந்தக்கதை:
ஒரு பெரிய பணக்கார வியாபாரி இருந்தார். அந்த குறிப்பிட்ட வருடத்தில் அவரது நிறுவனங்களின் மொத்த வரவு செலவு மற்றவர்களை விட அதிகமாக இருந்ததால் அந்தப் பணக்காரர் கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் நிர்வாகிகள் கூடி அந்தப் பணக்காரருக்கு ஒரு பாராட்டு விழா வைத்தார்கள். அந்த பாராட்டுவிழா முடிந்த பிறகு அந்த வங்கியின் முது மேலாளர் அந்தப் பணக்காரரிடம் தயங்கிக் கொண்டே ஒரு சந்தேகம் கேட்க விரும்புவதாக கூறினார்.பணக்கார வியாபாரி,கழுத்திலிருந்த மாலையைக் கழற்றிக்கொண்டே ,
“ அதற்கென்ன தாராளமாக கேளுங்கள்”.
வங்கி அதிகாரி கேட்டார். “ ஐயா! தாங்கள் இவ்வளவு பெருந்தொகை வரவு செலவு செய்கிறீர்கள் ஆனால் நானும் பார்க்கிறேன். உங்கள் நிறுவனங்களின் சார்பில் வரும் ஒரு செக்கில் கூட உங்களின் கையெழுத்து இல்லையே”
“ எனக்குக் கைஎழுத்துப் போடத் தெரியாது. அப்படித் தெரிந்து இருந்தால் நான் இவ்வளவு பெரிய முதலாளியாக ஆகி இருக்க முடியாது மாறாக ஒரு சர்சில் மணி அடித்துக்கொண்டு இருப்பேன்”
வங்கி மேலாளர் அதிர்ந்து போனார். “ அது எப்படி?”
பணக்காரர் தனது கதையைக் கூறினார். “ பல ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு சர்சில் மணி அடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது அங்கிருந்த வயதான பாதிரியார் இறந்து போனார். அவருக்கு பதிலாக புதிதாக ஒரு பாதிரியார் பதவி ஏற்றார். அவர் பதவியேற்று சர்சின் வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து அந்த மாத சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மற்ற எல்லா வேலைக்காரர்களும் கையெழுத்துப் போட்டு சம்பளம் வாங்கினர். எனக்குக் கையெழுத்துப் போடத் தெரியாதாகையால் கை நாட்டு வைத்தேன். அப்போது பாதிரியார் கூறினார் ‘ இதற்கு முன் எப்படியோ –என் நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள் குறைந்தது கை எழுத்தாவது போட தெரிந்து இருக்க வேண்டுமென்றார்’. எனக்கு படிப்பில்லையே என்றேன். சரி உனக்கு மூன்று மாதம் டயம் தருகிறேன். கையெழுத்துப்போட கற்றுக்கொள் என்று அனுமதி யளித்தார்.
நானும் மூன்று மாதங்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஏன் கையெழுத்தைப் போட கற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் பாதிரியார் எனக்காக இன்னும் மூன்று மாதங்கள் டயம் தந்தார். அப்போதும் கூட என்னால் என் கையெழுத்தைப் போடக் கற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே, சர்சில் எனது ஊழியக் கணக்கை முடித்து பணி முடிவுக் கொடை மற்றும் இதர படிகளைக் கணக்கிட்டு ஒரு சிறு தொகையை என்னிடம் தந்து என்னை வேலையை விட்டு நீக்கிவிட்டனர். சர்சை விட்டு வெளியே வரும்போது மனது சரியில்லை. புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றலாமென்று ஒரு சிகரெட்டுக்காக பெட்டிக் கடையைத் தேடினேன். அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக் கடை கூட தென்படவில்லை. இது எனக்கு ஒரு யோசனையைக் கொடுத்தது. என்னிடம் இருக்கும் சிறு தொகையைக் கொண்டு அந்தப் பகுதியில் ஒரு பெட்டிக் கடை வைத்தேன். வியாபாரம் படிப்படியாக சூடு பிடித்து ஒரு கடை இரண்டு, மூன்று என்று உருவெடுத்து இறுதியில் ஒரு பெரிய சூப்பர் மார்கெட் தொடங்கும் வசதி வந்தது. அதையும் தொடங்கி நாளடைவில் பல ஊர்களிலும் பல சூப்பர் மார்கெட்டுகளைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன்.
பாதிரியார் சொன்னபடி நான் கையெழுத்துப் போடப் படித்து இருந்தால், இன்னமும் ஏதாவது ஒரு சர்சில் மணி அடித்துகொண்டு மாத சம்பளத்தை எதிர்பார்ப்பவனாகவே இருந்து இருப்பேன்” என்று கதையை முடித்தார். வங்கி அதிகாரி வியந்து போனார். நாமும்தான்.
இப்போது திடீரென்று ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஆங்கிலம் ஒரு பைத்தியக்காரர்களின் மொழி ( English is the language of lunatics) என்று பெர்னாட்ஷா ொன்னார் . அந்த விபரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்.
அது என்ன விபரம்? - தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இபுராஹீம் அன்சாரி
30 Responses So Far:
பசி மறந்து ஊரில் இருக்கும் பிஸி மறந்து குஷியாக நடந்த கலந்துரையாடலில் ஏராளமான முத்துக்கள் சிதறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது முதல் தொடர் !
இ.அ. காக்கா என்றாலே எல்லாமே அவர்களைத் தொடரும் ! :) இன்ஷா அல்லாஹ் !
கல்வியாளர்கள் நன்கு அறியப்பட்ட வர்கள், கலைக்களஞ்சியம் அருமையான சூடல் ! தகுமான பட்டம் ! நூர் முஹம்மது காக்கா அவர்களுக்குரியதே ! அருவிபோல் கொட்டுமே புள்ளிவிபரங்களும், வரலாற்று குறிப்புகளும் மாஷா அல்லாஹ் !
ஆடம்பர வாழ்க்கை ..
மிக சுலபமாக பெற
நம்மவர் நாடும்போது
கல்வியின் அருமை தெரியாமல்
போய் விடுகிறது ..தொலை நோக்கு
பார்வை வேண்டும் ..தற்போதைய நம்
இளைய தலை முறைக்கு அதிகம்
உள்ளது
ஆஹ்ஹா அருமை. உங்கள் கருத்தாடல் எங்களுக்கு வாழ்க்கைப்பாடம்.
உங்களின் கலந்துரையாடலை அதோடு முடித்துவிடாமல் எங்களுக்கும் தருவது நல்ல முற்போக்கு சிந்தனை.
நன்றி ஈனா ஆனா காக்கா, மற்றும் அன்றைய நாயகர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும். மயில் இறகால் மெல்ல வருடிகொடுக்கும் சுகமாய் இருக்கிறது இந்த சந்திப்பின் மூலம் நீங்கள் எழுதும் ஆக்கம்.அறிஞர் பெருமானே மாஸா அல்லாஹ் நீங்கள் படைக்கும் எல்லா ஆக்கமும் மின்சாரகுதிரை(ஹார்ஸ்பவர்)வேகம்.அதுவும் முப்பெரும் அறிஞர்களும் அவர்களின் சீடனும் கலந்துரையாடல் சுகானுபவம்.அறிஞர் பெருமானிடம் மேலும் ஒரு வேண்டுகோள். நீங்கள் சி(தி)றந்த பொருளாதர சிற்பி என்பது அறிந்தவகையில் பங்கு சந்தை பற்றி அறிய தரமுடியுமா உங்கள் அரிய ஆக்கத்தின் மூலம்?
அலைக்குமுஸ்ஸலாம்.
அன்புள்ள மகுடத்தம்பியே! இன்ஷா அல்லாஹ் பங்கு சந்தையையும் நமக்குள் பங்கு வைக்கலாம். விரைவில் எதிர் பார்க்கவும்.
மாஷா அல்லாஹ்.....இபுறாஹீம் அன்சாரி காக்கா, நூர் முஹம்மது காக்கா குடையை பிய்க்கும் அடைமழை போல் கொட்டட்டும் உங்களின் இந்த உன்னதமான சந்திப்பில்...
ஊரில் இருந்தால் ஊர் ஒரு வேண்டா வெறுப்பானதாகவும், வெளிநாட்டில் இருந்தால் ஊர் தலையில் அமர்ந்து கொள்ளும் தலைப்பாகையாகவும் மாறிவிடுவது என்னவ்வோ உண்மையே.
நமக்கு நாமே நம் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு விட்டு வானில் பறக்கும் காக்கை, குருவிகளையும், தரையில் மேயும் ஆடு,மாடுகளையும் குறைகூறி நாம் திரிவதில் அர்த்தமில்லை என்பதே என் கருத்தாக இருக்கிறது.
ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்களின் அடுத்த தொடருக்காக...
அஸ்ஸலாமு அலைக்கும்!!!
இபுராஹீம் அன்சாரி காக்கா!!!
அசத்தலான ஆரம்பம். உவப்பக் கூடி உள்ளப் பிரிதல் ஆக அமைந்த உங்கள் கலந்துரையாடல் எங்கள் அனைவருக்கும் ஒரு நல் விரிந்தாக அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு வருகிறது.
என் அன்புத் தம்பி நூர் முகம்மது நினைவாற்றலில் பேறு பெற்றவர். மரியாதைக்குரிய பேராசிரியரும் பாசத்திற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களும் அதிரைப் பட்டினத்தின் நல் முத்துக்கள். நீங்கள் அறிவுக் கடலில் திளைத்தவர்கள். புல்லுக்கும் ஆங்கே புசிவது போல் உங்களின் கலந்த்துரையாடல் எங்களுக்கும் பயனாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.
வஸ்ஸலாம்.
N.A.Shahul Hameed
அன்புத் தம்பி மு.சே. மு. நெய்னா அவர்களே!
தாங்கள் ஊரில் இருப்பதால் அடுத்த அமர்வுக்கு நீங்களும் வாங்களேன். எங்களோடு சேர்ந்து முத்துக் குளிக்கலாம். எனக்குத் தெரியும் நீங்கள் நிறைய முத்தெடுப்பீர்கள்.
அலைக்குமுஸ்ஸலாம்.
மரியாதைக்குரிய பேராசிரியர் ஜனாப். N.A.S. அவர்களுக்கு,
தாங்கள் தொடர்ந்து இந்தத் தளத்தில் வெளியாகும் எங்களது பதிவுகளை படிப்பதுடன் அழகான ஆர்வமூட்டும் வார்த்தைகளால் ஊக்கப்படுத்துவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்கு சுண்டக்காய்ச்சிய பசும்பாலில், பாதம் பருப்பை அரைத்து , பனங்கற்கண்டு கலந்து குடித்தது போல் இருக்கிறது உங்களின் அனைத்துப் பின்னூட்டங்களும். ஜசக்கல்லாஹ் ஹைரன்.
தாங்கள் குறிப்பிட்டு இருப்பது போல் தம்பி நூர் முகமது அவர்களுடைய நினைவாற்றல் பிரம்மிக்கவே வைக்கிறது. அதனால்தான் அவருக்கு அதிரையின் கலைக்களஞ்சியம் என்று பட்டம் சூட்டி இருக்கிறோம்.
இந்த உரையாடல் வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்.
உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
//நன்கு சுண்டக்காய்ச்சிய பசும்பாலில், பாதம் பருப்பை அரைத்து , பனங்கற்கண்டு கலந்து குடித்தது போல் இருக்கிறது//
இங்கு பகல் மணி 1.00 ....பசிக்குது!!
அருமையான சந்திப்பு; கலந்துரையாடல் அளவானத் தித்திப்பு!
இதை எங்களோடு பகிர நினைத்தது நாங்கள் செய்த பாக்கியம்.
காக்கா,
திருமண வீட்டில் சிறப்பு உணவும்; உறைப்பும் புளிப்பும் எல்லாம் சரிதான். ஆனால், அதைக்கூட நம் வீட்டுப் பெண்கள் சமைக்காமல் சம்பளத்துக்கு ஆள்வைத்தல்லவா செய்கிறார்கள்?!
அந்த அடுமடச்சிக்கு மணவறை சமையற்காரவர்கள் என்றே நாமம்.
எங்கேச் செல்லும் இந்தப் பாதை
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பிற்கினிய இபுறாகிம் அன்சாரி காக்காவுக்கு,
அசெளகரியங்கள் ஆயிரம் இருந்தும் ஆனந்தம் தரும் நம் ஊருக்கும், சம்பளத்திற்கு சாட்டையை சுழற்றும் நான் பணிபுரியும் அந்த அரபு நாட்டு நிறுவனத்திற்கும் எம் புறக்கண்களுக்குத்தெரியாமல் நடந்த அந்த இறுதி கயிறு இழுக்கும் போட்டியில் என்னவ்வோ அந்த அரபு நாட்டு நிறுவனம் என் வேதனையில் வெற்றி பெற்று விட்டது காக்கா சென்ற 18ம் தேதி (வந்திறங்கி விட்டேன் சவுதி அல்ஹம்துலில்லாஹ்)
ஊரில் நீண்ட நாட்கள் வாயுள்ள ஜீவன் முதல் வாயில்லா ஜீவன் வரை அனைத்தும் காத்திருந்த இறைவனின் அந்த அருள்மழை தூவத்தொடங்கி அதன் மூலம் என் கைபேசியும் ஆவலில் சிறுது அந்த மழைத்துளியை பருகி விட்டது. அதனால் என் கைபேசி புறப்படும் நேரம் பார்த்து செயலிழந்து விட்டது. அதனால் அன்பிற்கினிய தங்களைப்போன்ற என் முத்தான மூத்தவர்களை தொடர்பு கொண்டு என் பயணம் பற்றி பேச இயலாமல் போனது கண்டு வருந்துகிறேன்.
காலை என் மண்ணை விட்டு புறப்படும் நிலையில் நாளை காலை எனக்கு நீதி மன்றத்தால் தூக்கு தண்டணை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் கைகள் முறையே கட்டப்பட்டு, கழுத்தில் கருப்பு துண்டு அணிவிக்கப்பட்டு தூக்கு கயிறும் கழுத்தில் மாட்டப்பட்டு இன்னும் ஒரு சில மணித்துளிகளில் தண்டணை நிறைவேற இருக்கும் அந்தவேளையில் எப்படி நம் மனம் இருக்குமோ அந்தளவுக்கு வேதனையான வலியை தராமல் இல்லை என் மனம் மண்ணை விட்டு பிரிய இருக்கும் அந்த இரவில்.
கூட்டத்தில் மவுனமாய், தனிமையில் சப்தமிட்டு அழும் எம் கூக்குரலை அந்த இறைவனே நன்கறிவான்.
அல்லாஹ் விரைவில் நம் நிலைமைகளை நல்ல முறையில் சீராக்குவானாக. ஆமீன்....
அன்பு இ.அ. காக்கா உங்களின் எதிர்பார்பிற்கும், அழைப்பிற்கும் என் உளமார்ந்த நன்றிகள் பல.
முன்னரே அறிவிக்கப்படும் என் உள்ளம்கனிந்த தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
உங்கள் கருத்தாடல் அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி இபுராஹீம் அன்சாரி காக்கா!
அருமையான சந்திப்பு/கலந்துரையாடல் ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது வாழ்த்துக்கள்..ஆவலுடன் காத்திருக்கிறோம் உங்களின் அடுத்த தொடருக்காக..
//நூர் முகமது அவர்களின் கேள்வி என்னவென்றால் , சிறு கிராமங்களில் பிறந்து படித்தவர்கள் இவ்வளவு பேரும் புகழும் பெற்று இருக்கிறார்களே அவர்களோடு ஒப்பிடும்போது அதிரையில் பிறந்து வளர்ந்தவர்கள் பலர் டான் பாஸ்கோ, பாஸ்டன், சர்ச் பார்க், கிரசன்ட், அல்-அமீன் என்றெல்லாம் புகழ்பெற்ற கல்வி நிலையங்களிலும், மாநகரங்களிலும் படித்தவர்கள் பலர் இருந்தார்களே/இருக்கிறார்களே அவர்களெல்லாம் ஏன் இப்படி ஒரு நல்ல துறையில் கல்வி கற்று புகழ் பெற முடியவில்லை?//
உண்மை. நல்ல கேள்விதான். நம்மூர் trend இப்படி இருக்கிறதே! என்ன செய்வது?
இந்த ஆக்கம் பற்றி:
எத்தனையோ அறிவார்ந்த உரையாடல்கள் நாள்தோறும் நடக்கத்தான் செய்கின்றன. எல்லாமா எழுத்துருப் பெறுகின்றன? அங்கே எழுத்தாளன் ஒருவன் இருக்கவேண்டும். இதைத்தான் சகோதரர் இ.அ. செய்துள்ளார்; தேர்ந்த எழுத்தாளர் என்ற அடையாளம் ஆகியுள்ளார்! அதிரையின் எழுத்தாளர் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்!
நாங்களெல்லாரும் இத்துறைக்கு வருமுன், 'ஆதிரையன்' என்ற புனைபெயரில் அதிரையின் எழுத்துப் பாரம்பரியத்துக்கு வித்திட்டவரைப் பற்றித் தெரியுமா? 'வாவன்னா' சாரிடம் கேளுங்கள். அவர்களின் மச்சான்தான் அவர். ஊராரில் 99.99 சதவீதத்தினருக்கு அவரைப் பற்றித் தெரியாது!
வாவன்னா காக்கா! சொல்லுங்களேன்.
அன்புத் தம்பி M.S.M. NAINA அவர்கள் சொல்வது
//காலை என் மண்ணை விட்டு புறப்படும் நிலையில் நாளை காலை எனக்கு நீதி மன்றத்தால் தூக்கு தண்டணை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் கைகள் முறையே கட்டப்பட்டு, கழுத்தில் கருப்பு துண்டு அணிவிக்கப்பட்டு தூக்கு கயிறும் கழுத்தில் மாட்டப்பட்டு இன்னும் ஒரு சில மணித்துளிகளில் தண்டணை நிறைவேற இருக்கும் அந்தவேளையில் எப்படி நம் மனம் இருக்குமோ அந்தளவுக்கு வேதனையான வலியை தராமல் இல்லை என் மனம் மண்ணை விட்டு பிரிய இருக்கும் அந்த இரவில்.//
பலர் உணர்வார்கள். நீங்கள் உணர்ந்து உணர்த்தி இருக்கிறீர்கள்.
ஆக, என்னைப் பொருத்தவரை இந்தப் பெருனாளைக்குப் பிறகு வரும் சந்திப்பில் உங்களை சந்திக்க இயலாது என்ற உண்மையை உணரும்போது இதயத்தின் ஒரு ஓரத்தில் வலிக்கிறதே! INSHA ALLAH NEXT TIME. ALL THE BEST.
மரியாதைக்குரிய ஜனாப். அஹமது காக்கா அவர்களுக்கு,
JASAKKALLAH HAIRAN FOR ENTERING MY NAME IN YOUR GOOD BOOK.
MASHA ALLAH.
மதிப்பிற்குரிய சகோதரர்களே, உண்மைய சொல்றீங்க, நிறைய தெரிஞ்சுக்க விரும்புறோம்...
பகிர்ந்து சாப்பிடுவது நல்பண்பு அதேபோல் நல்லவிசயங்களை பிறர் அறிய தொகுத்து தருவதும் மேன்மை தாங்கிய பண்பு...அந்த வகையில் கருத்தாடல்களை உரையாக ஏற்றி எங்கள் அனைவரையும் உசுப்பேத்தி இருக்கும் அன்சாரி மாமா அவர்களுக்கு வாழ்த்த்துக்கள்
//'ஆதிரையன்' என்ற புனைபெயரில் அதிரையின் எழுத்துப் பாரம்பரியத்துக்கு வித்திட்டவரைப் பற்றித் தெரியுமா? // எங்களுக்கு தெரியதவர்-அவசியமாக தெரிந்த கொள்ளப்படவேண்டியவர்...பின்னூட்டத்தில் அல்ல ஆக்கமாக...அறிந்தவர்கள் செய்வார்களா ?
//நாங்களெல்லாரும் இத்துறைக்கு வருமுன், 'ஆதிரையன்' என்ற புனைபெயரில் அதிரையின் எழுத்துப் பாரம்பரியத்துக்கு வித்திட்டவரைப் பற்றித் தெரியுமா? 'வாவன்னா' சாரிடம் கேளுங்கள். அவர்களின் மச்சான்தான் அவர். ஊராரில் 99.99 சதவீதத்தினருக்கு அவரைப் பற்றித் தெரியாது! //
அபுல் ஹசன் சாச்சா, மிகச் சிறந்த சிந்தையாளர், எழுத்தாற்றல் மிக்கவர்கள், பத்திரிகைகளை விமசர்சனம் செய்வதில் வல்லவர்..., pre-justification சரியாக இருக்கும் ! நிரம்ப அவர்களால் வாங்கப்பட்ட பத்திரிகைகளை அவர்களோடு தரையில் அமர்ந்து நானும் வாசித்திருக்கிறேன்...
தம்பி அபூ இப்ராஹீம் அவர்களே!
நீங்கள் குறிப்பிடும் அபுல் ஹசன சாச்சா அவர்களைப் பற்றி சிலமுறைகள் சின்ன வயதில் ஜனாப். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் குறிப்பிட்ட நினைவு நிழலாடுகிறது.
மாமா நீங்க மூணு பெரும் சேர்ந்து செலவே இல்லாமல் எங்க எல்லோருக்கும் ஒரு பெரிய கலரியோ வச்சிபுட்டியலோ!! இதிலே தொடரும்முன்னு போட்டு மறுசோறு வேற ரெடி செய்கின்றீர்கள் நல்ல வயறு மூட்ட சாப்பிட நாங்கள் ரெடி சாப்பாடு அனைத்தும் நல்ல சுவை
அடுத்ததொடரில் மதிப்பிற்குரிய ஜனாப் ஹாஜா முஹைதீன் சாரின் ஆங்கில சாப்பாட்டை எதிர்பார்த்துள்ளோம்
கிரவுன் சொன்னது ...//பங்கு சந்தை பற்றி அறிய தரமுடியுமா //
ஒரு ஊர்ல குரங்குகள் நிறைய இருந்ததாம்..யாரும் பிடிக்கவோ அதனை அழிக்கவோ முயற்ச்சி செய்யவில்லையாம்,
அப்ப அந்த ஊருக்கு வெளியூரிலிருந்து இரண்டு பேர் வந்தாகளாம்,குரங்குகள் அதிகமாகவும்,சேட்டைகள் செய்து கொண்டும் இருப்பதையும் கண்ட அவர்கள்
குரங்குகளைப் பிடித்து வருவர்களுக்கு 10 ரூபாய் தரப்படும் என்று அறிவித்தார்களாம்,மக்கள் சந்தோஷப்பட்டு குரங்கு வேட்டையில் இரங்கி
நிறைய குரங்குகளை பிடித்து வந்தார்களாம்,அதன் பிறகு குரங்குகளின் எண்ணிகை வெகுவாக குறைந்தாம்,உடனே அந்த வெளியூர்காரர் மக்களை உற்சாக்ப்படுத்த வேண்டி 25ரூபாய் தரப்படும் என்று அறிவித்தாராம்,கேட்ட மக்கள் காடு,மலை என்று கஷ்டம் பார்க்காமல் முடிந்த அளவுக்கு குரங்குகளை பிடித்து வந்தார்களாம்,பிடித்து வந்த குரங்களை பத்திரமாக கூண்டில் அடைத்தாராம்,மீண்டும் குரங்கள் வரத்து குறையவே ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தரப்படும் என்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டாராம்,மக்கள் இன்னும் பையித்தியமா அழைந்துகொண்டு இருக்கும்போது…அவர் அம்மக்களிடம் நான் வேலை விசயமாக வெளியூர் போகின்றேன் என்று சொல்லிவிட்டு அதன்பிறகு உதவியாளரிடம் காதில் ஏதோ கூறிவிட்டு சென்றுவிட்டார்,குரங்குகள் அனைத்து பிடிபட்டுவிட்டதால் குரங்கு கிடைக்காமல் தவித்தவர்களிடம் உதவியாளர் சென்று நான் இங்கு அடைப்பட்டு இருக்கும் குரங்குகளை உங்களுக்கு 35ரூபாய்க்கு தந்துவிடுகின்றேன்,நீங்கள் அவர் திரும்பி வந்ததும் 50ரூபாய் க்கு விற்றுவிடலாம் என்று கூற மக்கள் எல்லாரும் சந்தோஷமாக ஏதாவது கிடைத்தால் போதும் என்று கருதியவளர்களாக போட்டிபோட்டுக்கொண்டு வாஙகி வைத்து காத்திருந்தார்கள் ,காத்திருந்தார்களாம் அவர் வரவே இல்லையாம்,இதனால யாருக்கு லாபம் ---இதாங்க “பங்கு மார்க்கெட்” புரிஞ்சுதா ??
சும்மா ஜோக்குகாதான் தப்ப நினைக்காதீங்க மாமா..உங்களின் “பங்கு சந்தை” கட்டுரையை படிக்க ஆவலாக காத்திருக்கின்றோம்
மருமகனார் யாசிர் அவர்கள் சொன்னது
//சும்மா ஜோக்குகாதான் தப்ப நினைக்காதீங்க மாமா..உங்களின் “பங்கு சந்தை” கட்டுரையை படிக்க ஆவலாக காத்திருக்கின்றோம்//
இவ்வளவு நாள் பங்கு சந்தையைப் பற்றி எழுதாத காரணம் மார்க்க ரீதியாக இதற்கு அனுமதி உண்டா ? என்பது பற்றிய ஒரு சந்தேகம். சிலரிடம் கேட்டேன். ஆனால் இன்னும் தெளிவுறவில்லை. ( ஒருவேளை அவர்களும் குரங்கு பிடிக்கப் போய்விட்டார்களோ?) இந்தத் தெளிவு பெற்ற பிறகு எழுதலாம் அல்லது எழுதி எச்சரிக்கலாம்.
மேலும் பங்கு சந்தை , பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள், முதலீடுகள், ஊக வணிகம், இலாபப் பங்கீடுகள் இவை பற்றியெல்லாம், ஒரு முழுமையான ஆய்வில் இஸ்லாம் ஒரு கவிதைப் பார்வை போலவே ஒரு பொருளாதாரப் பார்வை என்ற தலைப்பில் தொடராகவும் பின்னர் நூலாகவும் வெளியிட வேண்டுமென்று அவ்வப்போது படித்து குறிப்புகள் தயார் செய்து வருகிறேன். அவற்றை மார்க்க அறிஞர்களிடம் காண்பித்து விவாதித்த பிறகு இன்ஷா அல்லாஹ் அதிரை நிருபரில் வெளியிடப்படும். அந்த நேரம் பங்கு சந்தை பற்றிய சாதக பாதகங்களை விளக்க முயற்சிக்கலாம்.
இந்த பொருளாதாரப் பார்வை கட்டுரைகள் மார்க்க அடிப்படையான விளக்கங்களுடன் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு அமையவேண்டுமென்பதால் என்பதால் பல மாதங்களுக்கு முன்பு நெறியாளருக்கு வாக்களித்தும் இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறது.
மருமகன் சாகுல் !
//நல்ல வயறு மூட்ட சாப்பிட நாங்கள் ரெடி சாப்பாடு அனைத்தும் நல்ல சுவை//
குற்றாலம் போய்வந்ததிலிருந்து "சாப்பாடு"- "வயிறு முட்ட"- இப்படியே விபரங்களை குறிப்பிடுகிறாய் - பின்னூட்டம் இடுகிறாய்.
கவிஞர் சபீர் அவர்கள்தான் இதற்கு நாடி பார்த்து சொல்லவேண்டும்.
யாசிராக்கா உங்க குரங்கு கதை ச்சே பங்கு சந்(க)தை விவரமாகவும், நகைச்சுவையாகவும் விளக்கியுள்ளீர் அருமை
உண்மையிலேயே பங்கு சந்தை சூதாட்டமா அல்லது நியாயாயமாக பணம் சமாதிக்கும் ஒரு வழியா? இது பற்றி ஒரு தெளிவு வேண்டும் என்றால் நாம் நிறைய விஷயங்களை அலச வேண்டியிருக்கும். பங்கு சந்தையின் அடிப்படையில் இருந்து ஆரம்பித்து அதிலுள்ள சாதக பாதகங்களை எல்லாம் அலச வேண்டியிருக்கும்.
அப்படி பட்ட ஒரு அலசலை நம் மூத்த சகோதரர் இப்ராஹீம் காக்கா அலசி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். நாம் லாபம் ஈட்டினாலும் சரி நஷ்டம் அடைந்தாலும் சரி, அதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டியது நமக்கு மிக மிக அவசியமானது. எனவே இந்த பங்கு சந்தையை ஒரு தொடராக அமைத்தால் நன்றாக இருக்கும் இன்ஷா அல்லாஹ்
அன்பான நண்பர்களே!
நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் மன்னிக்கும் முன்பு திருவாளர் ஷேக்ஸ்பியர் என்னை மன்னிக்க வேண்டும். காரணம் பெர்னாட்ஷா சொன்னதை ஷேக்ஸ்பியர் சொன்னதாக தவறாக குறிப்பிட்டுவிட்டேன். தம்பி நூர் முகமது அவர்கள் அலைபேசியில் அழைத்து கவனப்படுத்தினார். அவருக்கு நன்றி.
மேலும் உயர் நீதிமன்றத்தில் நமதூர் வழக்கறிஞர்கள் இல்லை என கூறியிருக்கிறேன். உயர் நீதிமன்றத்தில் ஒரு சிலர் இருககிறார்கள். ( ஆனால் அதை நாம் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும்) உச்ச நீதிமன்றத்தில்தான் இல்லை.
அடுத்து மருத்துவர்கள் லிஸ்டில் டாக்டர் ஜானகிராமன் , மற்றும் வெற்றிச்செல்வனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கருத்துத் தந்துள்ள அனைவருக்கும் எனது ( எங்களது)நன்றி.
கற்றவர் சபையில் எனக்கோர் இடமில்லாமல் (இவ்வரிய வாய்ப்புக் கிட்டாமல்) போனதற்கு எண்ணி மிகவும் வருந்துகிறேன். இன்ஷா அல்லாஹ், குறுவிடுப்பில் அவ்வாய்ப்புக் கிட்டுமா? கலந்துரையாடலில் ஈடுபட்டக் கல்வியாளர்களின் அறிவுத்திறன் அதிரைப்பட்டினத்துக் கல்விக்கூடத்தில் கற்பிக்கப்பட்டுப் பெறப்பட்டவைகள் என்பதை எண்ணும் பொழுது, இவர்களால் அதிரைப்பட்டினத்தின் புகழ் மேலோங்கி இருப்பதும், முன்னர் வாழ்ந்த “ஆதிரையன்” எனும் பெயரில் ஊடகத்துறையில் இருந்த அபுல்ஹசன் என்ற பெரியவர் பற்றிய அரிய குறிப்பும் என் ஆசான் அவர்கள் மூலம் கிடைத்துள்ளதும் கண்டு, இவ்வளவு அறிஞர்களைக் கொண்டப் பட்டினமாக நம் அதிரைப்பட்டினம் இருந்துள்ளது/ இருக்கின்றது/இன்ஷா அல்லாஹ் என்றும் இதே புகழுடன் இருக்கும் என்ற நம்பிக்கைப் பிறந்தது. என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களும் அடுத்த அமர்வில் இன்ஷா அல்லாஹ் இருக்க வேண்டும் என்பது என் அவா.
நூர் முஹம்மத் மாமா அவர்களின் பேச்சில் எப்பொழுதும் சமூக,சமுதாய சிந்தனை மேலோங்கியே நிற்கும்..
Post a Comment