Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பேராவூரணி பலாப்பழம்! 26

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2012 | , ,

பேரன்பு மிக்க பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, அன்புத் தோழர்களே, ரத்தத்தின் ரத்தங்களே, ஹீமோகுளோபின்களே, கிட்னிகளே, சட்னிகளே, உடன்பிறப்புகளே, ஒன்று விட்ட பங்காளிகளே, என் உயிரினும் மேலான எலும்பின் மஜ்ஜைகளே, உங்கள் அனைவர்மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

பேராவூரணி பலாப்பழம்!

பேராவூரணியும் சரி பலாப்பழமும் சரி மேடை போட்டுக் கூட்டம் கூட்டி பேசப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா என்கிற கேள்வி, சந்தேகம், ஆர்வம் உங்களிடையே எழலாம். இதை ஒரே மூச்சில் உங்களுக்குச் சொல்லி முடிக்க வேண்டியது என் கடமை, தார்மீக உரிமை, தயவு தாட்சண்யம் பார்க்காத பொறுப்பு!

எந்த ஒரு சாதாரண நிகழ்வும் சற்று மாறுபட்டு நடந்தால் அதில் சுவாரஸ்யம் கூடிப்போகும் அல்லவா? அதைப்போல் ஒரு நிகழ்வுதான் இதுவும். 

அது அந்த இடத்தில் இருக்கத் துவங்கி இரண்டு நாட்களாகிவிட்டிருந்தது.  ஒவ்வொரு முறை வீட்டின் கதவைக் திறக்கும்போதும் முதலில் கண்ணில் படுவது அதுதான்.  மனைவி மக்கள் வேறு விடுப்பில் ஊருக்குப் போயிருந்ததால் விளக்கை அனைத்த பின்பும் மெல்லிய இருளில் அது போர்த்திக்கொண்டிருப்பதுபோல் அமர்ந்திருக்கும்.  குர்பானி கொடுப்பதற்காக வாங்கிய ஆடு தனது காத்திருப்பு தினங்களில் உட்கார்ந்து அசை போட்டுக்கொண்டிருக்குமே அதைப்போல இருந்தது அது.  தலை,வால், கைகள், கால்கள் என்றெல்லாம் அமையப்பெறாமல் வயிறு மட்டுமே அமையப்பெற்ற மிருகம் படுத்துக் கிடப்பதுபோல் இருந்தது அது.  வழவழவென்ற தோலுமில்லாமல் முள்ளம் பன்றியின் கூரான முட்களுமில்லாமல் சொறசொறத்த தோலுடன் படுத்திருந்தது அது.

என்ன செய்வதென்று குழம்பிப்போன நான் இரண்டு மூன்று பாகிஸ்தானியரிடம் விசாரித்தேன்.  அவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் புரியவில்லை.  “அப்னா முலூக்மே அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது” என்று சொல்லிவிட்டார்கள். நான் படம் வரைந்து பாகங்களைக் குறித்தும் உஸ்கோ சமஜ்மே நஹீ ஆயா. ஒருநாள் காலை என் அலுவலக உதவியாளனிடம் விளக்கிச் சொன்னதும் அவன் சட்டென்று, “ஓ ச்சக்கபழம், அல்லே?” என்று கேட்டான்.  நான் கூகுளில் தேடி படம் காட்டினேன். “அதே, இது ச்சக்கபழம்தன்னே. ஞான் இங்கென முறிக்காம்” என்று சொடுக்குப் போட்டுக் காட்டினான். அவன் ச்சக்கப்பழம் என்று சொன்னது நம்மூர் பலாபழத்தைத்தான்.  பலாப்பழம் வெட்டி சுளை எடுப்பதில் மலையாளிகள் கில்லாடிகள். மட்டுமல்லாது சுளை, கொட்டை, சக்கை (ச்சிப்ஸ்) என்று அத்தனையும் சாப்பிடுவர்.

அந்தப் பலாப்பழம் என்னைப் பாடாய்ப் படுத்தியதின் பின்னணி நம்ம “சகோதரியே” அலாவுதீனிடம் இருந்து துவங்குகிறது.

“நான் ஒரு ஐந்து நாட்களுக்கு ஊருக்குப் போகிறேன். வரும்போது லக்கேஜ் ஏதும் இல்லாமல் சும்மாதான் வருவேன். வீட்டில் சொல்லி ஏதும் சாமான் இருந்தால் தயார் பண்ணி வைக்கச்சொல் வரும்போது கொண்டு வருகிறேன்” என்று சொல்லும்போது அவனுக்குத் தெரியாது ‘சொந்த செலவில் சூனியம் வைக்கிறோம்’ என்று.

என் வீட்டார் என்மேல் பாசத்தை மழையாகப் பொழிவதில்லை. மாறாக, இடி மின்னலோடு அடைமழையாகவோ சுனாமி தரத்திலோதான் பொழிவார்கள் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.  “அலாவுதீன் வருகிறான். அவனிடம் கொஞ்சம் பலாப்பழமும், பப்பாளிப்பழமும், முடிந்தால் வீட்டில் வளரும் சப்போட்டாவிலிருந்து கொஞ்சமும் அனுப்பி வையுங்கள்” என்று சொன்னேன்.  காலகாலமாக பினாங்குக் காரவுகளுக்கும் வளைகுடாவாசிகளுக்கும் உம்மாக்களும் மனைவியரும் அனுப்பும் பாரம்பரியப் பொருட்களான பனியான், நாநக்கத்தான், நார்த்தங்கா ஊருகாய், சீனிச்சேவு மற்றும் தம்ரூட் ஆகியவற்றை கட்டாயம் அனுப்ப வேண்டாம் என்று கண்டிப்போடு சொல்லி வைத்தேன்.

நான் கேட்ட நேரம், பலாப்பழ சீஸன் இல்லாத நேரம் என்பதை எந்த ச்சேனலும் கொசுறுச் செய்திகள் ஓடுமே அதில்கூட சொல்லவில்லை.  உம்மாவோ,  தன் பேத்தியை அப்பதான் மணந்த புதுமாப்பிள்ளையிடம், "உன் மாமாவுக்குப் பலாப்பழம் வேண்டுமாம். போய் வாங்கி வந்துவிடு" என்று அனுப்ப அவரும் காரை எடுத்துக்கொண்டு புலி வேட்டையைப்போல் பலா வேட்டையில் ரொம்ப சிரத்தை எடுத்துத் தேடியும் எங்கும் கிடைக்காததால் கடைசியில் பேராவூரணியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு போய் வாங்கியிருக்கிறார்.

பத்து ரூபா கொடுத்தால் ஒரு உதாவக்கரை செய்தி அடங்கிய தினசரியின் கால்பக்கத்தில் இருபது சுளைகளை மடித்துத் தருவார்களே அப்படித்தான் எனக்கும் அனுப்பியிருப்பார்கள் என்று நீங்கள் கணித்தால் உங்களுக்கு நிச்சயம் ஃபெயில் மார்க்தான்.

விமான நிலையத்தில் அலாவுதீனை வரவேற்கச் சென்ற எனக்கு இருபது கிலோவுக்குமேலே எடைகொண்ட ஒரு பெட்டியை பாலித்தின் சட்டையெல்லாம் போட்டு, "இந்தா உன் வீட்டில் கொடுத்த சாமான்" என்று கொடுத்தபோது எனக்குச் சரியான குழப்பம். அந்தப் பெட்டி கனசெவ்வகமாகவோ கனசதுரமாகவோ இல்லாமல் இரண்டு பக்கங்களிலும் கர்ப்பவதிபோல் வயிறு பெருத்து இருந்தது.

"அப்டி என்னடா இருக்கு உள்ளே" என்று கேட்ட எனக்கு, "நீதானே பலாப்பழம் கேட்டியாம். திருச்சி ஏர்போர்ட்டில் அட்டைப்பெட்டியின் வடிவம் பார்த்து மிரண்டு க்ளிங் ராப் (cling wrap)பண்ணச் சொல்லி 300 ரூபாய் பிடுங்கிக்கொண்டான்" என்றான்.

"பலாச்சுளை ஒரு கிலோ அனுப்பினா போதாதா" என்று முனுமுனுத்துக்கொண்டே வீட்டுக்கு வந்து பெட்டியைப் பிரித்துப் பாசத்தை வெளியே எடுத்த எனக்கு  வெட்டுவது எப்படி என்று தெரியாததால் மேடைபோட்டு உங்கள்முன்னால் பேசும் அளவுக்கான மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடந்தேறின.

கத்தி கப்படாவோடு மலையாளி வீட்டுக்கு வந்து பலாப்பழத்தை  வெட்டி சுளைகளைத் தந்தாலும், சீஸன் இல்லாத நேரத்து பழமாதலால் சுளைகளைவிட சக்கைத்தான் அதிகமாக இருந்தது.

இதில் உச்சகட்டச் செய்தி என்னவெனில், பலாப்பழம் வெட்டித்தந்த நாள் முதல் வீட்டில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ரோபோ(ROBOT) போல தூக்கித்தூக்கித்தான் வைக்கப்பட வேண்டியிருந்தது. தரை முழுதும் அவ்வளவு பிசுபிசுப்பு. வெட்டிக்குளத்துச் சேற்றில் நடந்த அனுபவம் இருந்ததால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டுக்குள் தாம் தூமென்று நடமாட முடிந்தது.

பாசத்துக்கு அளவில்லை என்பார்கள். ஆனா,  பலாப்பழ சைஸ்ல பாசம் எல்லாம் ரொம்ப ட்டூமச்!

அப்பாடா... சோடா ப்ளீஸ்!

Sabeer AbuShahruk

26 Responses So Far:

Ebrahim Ansari said...

பலாச்சுளை போல் இனிக்கும் சொற்சுளைகள். ஒவ்வொரு வரியும் சிறப்பு மற்றும் சிரிப்பு.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"அப்பா கெணத்துலெ உழுந்த மேட்டரா ஈந்தாலும் சரி, ஊர்லேர்ந்து உம்மா ப்லாப்பழம் அனுப்புன மேட்டரா ஈந்தாலும் சரி ஒரு கட்டுரை மூலம் எப்படி நாலு பேர் ருசிக்க படிக்க வைக்க முடியும் என்ற கைங்கரியத்தை நம்ம அ.நி.ல் கற்றுக்கொள்ள இயலும்".

லேசுப்பட்ட சாமான் இல்லெ. சபீர் காக்கா நீங்க சொல்ற மாதிரி இந்த ப்லாப்பழத்தை வேட்றத்துக்கு ஒளிஹா கொடுக்க இருக்கும் ஆட்டை அறுக்க கச்சல் கட்டுவது போல் தான் இதற்கும் ரொம்ப கேர்ஃபுல்லா இறங்கனும்.

பழமா ஈந்தா அப்படியே திண்ட்றலாம். காயா இருந்தா கொஞ்சம் அது மேலே மொளவா செலவு போட்டு ப்லாப்பழ கவாப்புண்டு புதுசா ஒன்னு ஆரம்பிச்சிட வேண்டியது தான். இப்பொ எந்த சாமான் கெடச்சாலும் கவாப்புதான் போடச்சொல்லுது மனசு என்ன செய்யச்சொல்றியெ........???

ஊர்லெ மப்பும் மந்தரமுமா சீந்தாப்பா ஈக்கிதாமுல்லெ...ஊர்லெ ஈக்கிற யாராச்சும் கொஞ்சம் போட்டோ எடுத்து இங்கே போட்டு உட்டா நல்லா ஈக்கிமே....யாராச்சும் செய்வியலா????

ZAKIR HUSSAIN said...

http://azmiyahkadir.blogspot.com/2011/04/local-fruits-chempedak.html

மலேசியாவில் பலாப்பழம் போன்ற ஒரு பழம் [ பெரும்பாலும் காட்டில்தான் கிடைக்கும் ] , சுவையில் 200% பலாப்பழத்தை விட இனிப்பு அதிகம்.. [ This is just for information ]

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சபீர் ... உனக்கு வந்த பலாப்பழத்தை எனக்கு ஸ்கைப்பேயில் காண்பித்தாய்...ஆனால் அது இப்படி கதாநாயகியாய் நடிக்கும் என்று எனக்கு தெரியாது.



ஜலீல் நெய்னா said...
This comment has been removed by the author.
ஜலீல் நெய்னா said...

வழக்கமான கவி பானியிலிருந்து மாறி... சற்று மாறுபட்ட தொனியை கையாண்டு இருப்பது பாராட்டத் தக்கது, ஆனால் என்ன!!
இரவு நேரம் 10 மணியளவில் பலாப் பழத்தை பிரித்து மேய்ந்து ஹ..ஹ.. சிரிப்பொளி கேட்டு, மனைவி என்ன கெளன்டு விட்டதா என்று கேட்க‌
இந்த அக்ரமத்தை செய்தது நன்பன் சபீர் தான் என்று சொல்லி வைத்தேன்.

நீ தந்த சுளை சுவையாக இருந்தது.

Shameed said...

பலாபழம் என்றால் உடன் நினைவுக்கு வருவது ஈக்கள் தான் இருந்தாலும் எனனுபவத்தையும் இங்கு சொல்கின்றேன் அப்போது சென்னை ஏற் போர்ட்டில் இறங்கி பண்ருட்டி வழியாக போகும்போது அங்கு பலாப்பழம் வாங்கி காரில் காலுக்கு கிழே வைத்து சூ வை கழட்டிவிட்டு அதில் காலை அவைத்து உருட்டி கொண்டே இருப்பேன் அப்படி உருட்டுவதால் பயண களைப்பு இருக்காது

KALAM SHAICK ABDUL KADER said...

காதல் கதையைக் கவிதைச் சுவையாய்த் திண்ணையில் விதைத்த கவிவேந்தர்
பலாச் சுளையில் நடந்த கதையைக் கவிதைச் சுவையாய் அ.நி. எனும் எழுத்துப் பண்ணையில் எழுதியதைப் படித்து, அவரின் நாக்கில் சுவைக் கூடிய இடம் “நகைச் சுவை” என்றே அறியலாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனக்கு இந்த முள்ளு குத்துமே !?

இருந்தாலும் லொள்ளு தூக்கல் ! :)

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இனிக்கும் பலாப்பழ பார்சல் கதை!

பலாப்பழ சைஸ்ல பாசம் இருக்கு உங்க மருமகனுக்கும். வாழ்க!

//ஒரு உதாவக்கரை செய்தி அடங்கிய தினசரியின் கால்பக்கத்தில் இருபது சுளைகளை மடித்துத் தருவார்களே //

தினத்தந்தி 'ன்நு போட்டிருந்தால் ஓகே.
தினசரி 'ன்நு போட்டதுக்கு கோச்சுக்கிடாதியோ 'ன்நு உறவுகள் தொடர் சித்தீக் காக்காக்கும் உங்க பேருடைய காக்காக்கும் பின் குறிப்புல சொல்லிப்புடுங்க!

இப்னு அப்துல் ரஜாக் said...

சபீர் காக்கா பழத்தை கையாண்ட விதம் அருமை வேரி ஹியூ மரஸ்.

Shameed said...

இந்த பலா பழத்தை ஊரில் இருந்து எப்படி கொண்டுவந்து சேர்த்தேன் என்பது பற்றி அலாவுதீன் காகா ஒரு கட்டுரை போட்டால் பலாபழம் இன்னும் சுவை கூடும்

sabeer.abushahruk said...

//பலாப்பழம் வாங்கி காரில் காலுக்கு கிழே வைத்து சூ வை கழட்டிவிட்டு அதில் காலை அவைத்து உருட்டி கொண்டே இருப்பேன் அப்படி உருட்டுவதால் பயண களைப்பு இருக்காது //

அப்ப, க்ளெட்ச் ப்ரேக்கெல்லாம் ஆரு மெரிக்கிறது?

mulakkam said...

பேராவூரணி பலாபழதுக்கு இவ்வளவு கரகாட்டம் என்று தெரியாது பேராவூரணி என்றாலே மொய் மட்டும் தான் தெரியும் ஆனால் இந்த பலாபழத்தை இப்படி மொய்ப்பது ரொம்ப அதிகம் .சபீர் இந்த பலாபழத்தை வைத்து ஒரு கிளித்தட்டே ஆட்டம் ஆடிஉள்ளாய் . அருமையான உணர்வுபூர்வமான experience நானாக இருந்தாலும் இதை தான் செய்திருப்பேன் .ஏன் என்றால் எனக்கும் வெட்டிகுளத்து experience உண்டு .வாழ்த்துக்கள் நன்றி !!!

sali said...

arumai nanpare palaapalatthai pola...

அப்துல்மாலிக் said...

சீசன் இல்லாமல் பலாப்பழம் சுவையா இல்லாவிட்டாலும் உங்க எழுத்து நடை மேலும் சுவை கூட்டியது, ஒரே தம்முலே படிச்சி முடிச்சிட்டேன், எனக்கும் சோடா ப்ளீஸ் :)

Yasir said...

பலாப்பழத்தை வைத்து இவ்வளவு நகைச்சுவையாக பந்தாடி இருக்கின்றீகர்கள் சிரிப்புகாக்கா...அல்டிமேட் நகைச்சுவை ஆக்கம்

சில வருடங்களுக்கு முன் நான் என்னுடன் பணிபுரிந்த ஒரு சிரிய பெண்ணுக்கு பலாச்சுழைக்களை கொடுக்க அவள் அதனை உண்ணுமுறைய கேட்கமால் மேலே உள்ள பலாச்சுழையை பிய்த்து போட்டுவிட்டு கொட்டைகைளை மாங்கு மாங்கு கென்று விழுங்கிவிட்டாள் தொண்டை அடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் அளவிற்க்கு நிலமை போய்விட்டது...ஏன் அப்படி செய்தாய் என்று கேட்டதற்க்கு நான் மேல உள்ளது யெல்லோ கலர் தோல் என்று நினைத்து நீக்கிவிட்டு உள்ளே உள்ளதை சாப்பிட்டுவிட்டேன் என்றாள் சிரிப்பும் ஆத்திரமும் வந்தது

Shameed said...

Yasir சொன்னது…
//சில வருடங்களுக்கு முன் நான் என்னுடன் பணிபுரிந்த ஒரு சிரிய பெண்ணுக்கு பலாச்சுழைக்களை கொடுக்க//

'சிறிய' பெண்களுக்கு எதை கொடுத்தாலும் தொண்டையில் சிக்கும் என்பது பெரிய யாசிருக்கு தெரியாமல் போனது ஏனோ (எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் டமில் தெரியும் )

sabeer.abushahruk said...

ஹமீது,

அதுவந்து சின்னக்கு வர்ர சிரிய அல்ல;
சிரியா நாட்டுக்கு வர்ர சிரிய. இந்தியப் பெண்ணுக்கு என்பதுபோல் சிரியப் பெண்ணுக்கு.

உங்க டமிள் எங்கிட்ட ஒத வாங்காமப் பார்த்துக்கோங்க.

(மெயின் மேட்டரை வுட்டுட்டீங்க.இவுரு ஏன் அதை சிரிய ஆணுக்குத் தரலயாம்?)

Yasir said...

//அதுவந்து சின்னக்கு வர்ர சிரிய அல்ல;
சிரியா நாட்டுக்கு வர்ர சிரிய. இந்தியப் பெண்ணுக்கு என்பதுபோல் சிரியப் பெண்ணுக்கு.// காக்கா கரெக்ட் thanks for your quick rescue

ஆனா இங்கே கவுத்துபுட்டுடீங்களே :):)
//ஏன் அதை சிரிய ஆணுக்குத் தரலயாம்?//

KALAM SHAICK ABDUL KADER said...

யாசிர் சி(றி)ரியப் பெண்ணுக்குக் கொடுத்த பலாப்பழக் காட்சி “உள்துறை அமைச்சுக்கு” தெரியுமா?

Shameed said...

அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…

//யாசிர் சி(றி)ரியப் பெண்ணுக்குக் கொடுத்த பலாப்பழக் காட்சி “உள்துறை அமைச்சுக்கு” தெரியுமா? //



தெரிய வாய்ப்பில்லை ஏன் என்றால் இவர் பழம் தின்று கொட்டை போட்ட ஆள்

Yasir said...

கவியன்பன் கலாம் காக்கா..பெருநாள் வாழ்துக்கள்
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..மெதுவா உள்துறை இன்னும் கொஞ்ச நேரத்தில் அதிரை நிருபரை படிக்க வந்துடுவாங்க..நைட்டுக்கு ஈரல் பெரட்டி இடியாப்பம் செய்து தர்ரேண்டு சொல்லி இருக்காங்க அது நடக்கமாம செய்திடுவீங்கபோல....:))

Yasir said...

//தெரிய வாய்ப்பில்லை ஏன் என்றால் இவர் பழம் தின்று கொட்டை போட்ட ஆள்///இப்படி ஆன்லைனுலையும் ஆஃப் லைனுலையும் ஆப்படிப்பது நியாமா :) ..பலாப்பழம் இந்த அளவிற்க்கு வயித்து வலியை கிளப்பும்ண்டு தெரியாமே போய்ச்சே :)

sabeer.abushahruk said...

ஆச்சா?

ச்சப்புக்கொட்டி ஆளுக்கு ஒரு சுளை சாப்ட்டாச்சுல்ல?

பொறவு என்ன?

எடத்தக் காலி பண்ண வேண்டியதுதானே?

அடுத்தப் பதிவுல ஹமீது லக்கேஜோட கஷ்ட்டப்பட்றார். அங்கே வாங்க பேசுவோம்.

எம் ஹெச் ஜே,

//தினத்தந்தி 'ன்நு போட்டிருந்தால் ஓகே.
தினசரி 'ன்நு போட்டதுக்கு கோச்சுக்கிடாதியோ 'ன்நு உறவுகள் தொடர் சித்தீக் காக்காக்கும் உங்க பேருடைய காக்காக்கும் பின் குறிப்புல சொல்லிப்புடுங்க!//

அதே அதே!

Unknown said...

பலாச்சுளை போல் இனிக்கும் சொற்சுளைகள். ஒவ்வொரு வரியும் சிறப்பு மற்றும் சிரிப்பு.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

பலாப்பழத்தை சுவையுடன் சாப்பிடத்தான் பார்த்திருக்கிறேன்.

இப்பொழுது திருதிருவென்று விழித்து பலாப்பழத்தால் - ஒரு கட்டுரை கூட வரைய முடியுமா! என்பது நல்ல விறுவிறுப்பு! மாற்றி யோசித்தால் நிறைய கட்டுரை வரும் போலத் தெரிகிறது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு