Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 4 தொடர்கிறது 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2012 | , , ,

பகுதி : நான்கு
n (n +1) 
2
மேலே காணும் கணித சூத்திரம் எதற்கானது என்று ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம் கேட்டேன்.

அவர்கள் என்னைத் திருப்பிக்கேட்டார்கள். “ ஒன்றிலிருந்து பத்து வரை உள்ள எண்களின் கூட்டுத்தொகை  உனக்குத் தெரியுமா?”

நான் “ தெரியாது . ஆனால் ஒவ்வொன்றாகக் கூட்டி சொல்லிவிடுவேன் “ என்று சொல்லிவிட்டு  ஒன்றிலிருந்து பத்து வரை ஒரு காகிதத்தில் எழுதி அந்தக் கால தேங்காய் மண்டி கணக்கப்பிள்ளைகள் காதிலிருந்து  பென்சிலை  எடுத்துக்  கூட்டுவது போல் கூட்டத்தொடங்கி, ஐம்பத்தி ஐந்து என்று விடை சொன்னேன்.

“ சரி. ஒன்றிலிருந்து ஆயிரம் வரை அல்லது பத்தாயிரம் வரை கூட்டுத்தொகை என்ன?” என்று கேட்டார். பசியால் வயிறு வேறு  தம்பூரா மீட்ட  ஆரம்பித்தது.  இப்போது ஆயிரம் வரை எழுதி கூட்டி சொல்ல வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு, “ எழுதிக் கூட்டி சொல்ல வேண்டுமா சார்”  என்று பத்தாம் வகுப்பில் கேட்டது போலக் கேட்டேன்.     

“ தேவை இல்லை. ஒவ்வொரு எண்ணின் இலக்கமாக எழுதிக் கூட்டிப் பார்க்க தேவை இல்லாமல்  நான் சொன்ன சூத்திரத்தை பயன்படுத்தி விடையைக் காணலாம். அதுவே இந்த சூத்திரத்தின் பயன்பாடு “ என்றார். அப்பாடா! இன்று நமக்கு சுடு சோறு கிடைத்துவிடுமென்று அதைப் போட்டுப் பார்த்துவிடலாமென்று நானும் நூர் முகமது அவர்களும் கணக்குப் போட்டோம். அதாவது ஒன்றிலிருந்து ஆயிரம் வரை உள்ள எண்களின் கூட்டுத்தொகை

 n (n +1) 
என்கிற கணித சூத்திரத்தின்படி

1000 X 1001
    2  = 500500  என்று வந்தது. ஹாஜா முகைதீன் சார் அவர்களிடம்  எங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும் கிடைத்த மகிழ்வில் பேராசிரியரின் பக்கம் திரும்பினோம்.

ஆங்கிலத்தைப் பற்றி ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஒரு கருத்தை பெர்னாட்ஷா சொன்னதாக சொன்னார்கள் . நீங்கள் ஏதாவது சொல்கிறீர்களா என்று நூர் முகமது அவர்கள் பேராசிரியர் அவர்களிடம் கேட்டார்கள்.  அதற்கு பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் தான் மாணவராக இருந்த போது அவருடைய பேராசிரியர் ஒருவர் ஆங்கிலத்தில் சொன்ன ஒரு அருமையான சொற்களின் தொகுப்பைச்  சொன்னார்.  அது விளங்க வேண்டுமானால் சாக்ரடீஸ் கேட்டது  போல,  சற்று நேரம் உங்களின் காதுகளை எனக்குக் கடன் கொடுங்கள் என்றுதான் நான் கேட்கவேண்டும்.  அந்த சொற்றொடர்கள் முதலில் ஆங்கிலத்தில் பின்னர் தமிழில்

One who knows and knows that he knows; He is wise.  follow him.
One who knows and knows not that he knows; He is asleep . Wake him.
One who knows not and knows that he knows not ; He is a student . Teach him.
One who  knows not and knows not that he knows not ; He is a fool; shun him.  

பேராசிரியர் தமிழில் விளக்க ஆரம்பித்தார்.

தான் அறிந்தவன் என்பதை தனக்குத்தானே அறிந்தவன் . இவன் ஒரு அறிஞனாக இருப்பான். இவனைப்  பின்பற்று.

தான் அறிந்தவன் என்பதை தனக்குத்தானே அறியாதவன். இவன் உறங்குகிறான். இவனை எழுப்பி விடு.

தான் அறியாதவன் என்பதை தனக்குத்தானே அறிந்தவன். இவன் ஒரு மாணவன் . இவனுக்கு கல்வி கொடு.

தான் அறியாதவன் என்பதையே தனக்குத்தானே அறியாதவன் .  இவன் ஒரு மடையன். இவனை ஒதுக்கிவிடு.

பேராசிரியரின் வார்த்தைச்  சொல்லாடல்களில்  எங்களுக்கு இவை புரிய சற்று நேரம் பிடித்தது என்னவோ உண்மைதான்.   ஆங்கிலமும் செந்தமிழும் அறிந்து கற்றவர் , எமக்கு உற்றவராகவும் இருப்பது  உண்மையிலேயே மகிழ்ச்சிதான். மாஷா அல்லாஹ்.

உடனே நூர் முகமது அவர்கள் பேராசிரியரை நோக்கி ஒரு  கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் எனக்கு  ஏற்கனவே தெரியுமென்றாலும், பேராசிரியர்  அவர்களே பதில் சொல்லட்டும் என்று  வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டேன். 

“நீங்கள் இவ்வளவு திறமை வாய்ந்தவர்கள். தமிழகம் முழுவது மட்டுமல்ல பல வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றி வந்து இருக்கிறீர்கள். கல்லூரியில் முதல்வராக பணியாற்றி இருக்கிறீர்கள்.  ஆனாலும் ஒரு ஆராய்ச்சிப் பட்டமான  Ph.D. அதாவது  டாக்டர் என்கிற முனைவர் பட்டம் வாங்கிக் கொள்வதற்கு  நீங்கள்  ஏன் முயற்சிக்கவில்லை? “ என்று நூர் முகமது,  பேராசிரியர் அவர்களிடம் கேட்டார்.

இதற்கு பதில் சொன்ன பேராசிரியர் அப்துல் காதர் , தனது மணி முடியில் அப்படி ஒரு பொன் சிறகை சூட்டிக்கொள்ளவில்லை என்கிற  பெரும் வருத்தம் இருப்பதாகவும் , ஒருவேளை தான் அந்தப் பட்டத்தையும் பெற்று இருந்தால் பெயருக்கு முன்னாள் முனைவர் என்கிற பட்டத்தை சுட்டிக் கொண்டிருந்திருக்கலாமென்றும்  பணியாற்றிய காலத்தில் இன்னும் அதிக மாதச் சம்பளமும் , ஒய்வு பெற்றுள்ள காலத்தில் இப்போது வாங்கிக் கொண்டு இருப்பதைப்போல இரு மடங்கு ஓய்வூதியமும் வாங்கி இருந்து இருக்கலாம் என்றும்  விரும்பியும் முயற்சி செய்தும்  அந்த விருப்பத்தையும்  முயற்சியையும்  ஒரு மிக நியாயமான காரணத்துக்காகக்  கைவிட வேண்டி வந்ததாகவும்  கூறினார்.  கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஆவல் அதிகமாயிற்று. அவரே இப்படி விவரித்தார்.

“ஒரு ஆய்வுப் பட்டமும் பெற்று விடவேண்டுமென்ற மன உந்துதலில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தேன். இதற்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு : ஒப்பு இலக்கியம் சீறாப்புராணமும் கம்பராமாயணமும் என்பதாகும்.  இதைப் பற்றி பல அறிஞர்களிடமும் கலந்துரையாடியபோது  மர்ஹூம் அப்துல் வஹாப் சாஹிப் அவர்களிடமும் கலந்து பேசும் வாய்ப்புக் கிடைத்தது. ஆராய்ச்சித் தலைப்பைக் கேட்ட அப்துல் வஹாப் சாஹிப் அவர்கள் சொன்ன கருத்துக்கள் மிகவும் சிந்திக்க வைத்தன.

சீறாப்புராணத்தையும் இராமாயணத்தையும் ஒப்பிடுவதென்றால் அவ்விரு காப்பிய நாயகர்களையும்  ஒப்பிட வேண்டி இருக்கும் . அதாவது சீறாப்புராணத்தின் காப்பிய நாயகரான  நமது இன்னுயிரான நபிகள் நாயகம் முஹமது ரசூல் (ஸல்)  அவர்களோடு இராமாயணத்தின் காப்பிய நாயகனான தசரதனின் மகனான இராமனை ஒப்பிடவேண்டும். நீங்கள் இதற்குத் தயாரா என்று அப்துல் வஹாப் சாகிப் அவர்கள் என்னிடம் வினவினார்கள்.  

நான் சிந்தித்தேன் . யாரை யாரோடு ஒப்பிட முடியும்?

நபிகள் நாயகம் ( ஸல்) அவர்களின்  வாழ்வின் நிகழ்வுகள்  அனைத்தும் வரலாற்று ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.    அவர்கள் எங்கே பிறந்தார்கள், எப்படி வளர்ந்தார்கள், எத்தனை  போர்களை  நடத்தினார்கள், எங்கே படுத்தார்கள், எங்கே தும்மினார்கள், எப்போது சிரித்தார்கள், எங்கெல்லாம் பயணம் செய்தார்கள் ஆகிய  இன்ன பிற செய்திகள் வரலாற்று ஏடுகளில் ஆணித்தரமான ஆதாரங்களோடு காணக்கிடைக்கின்றன.  அவர்களது தாடியில் பதினாறு நரை முடிகள் இருந்தன என்று சான்று பகரும் அளவுக்கும் , சிரிக்கும்போது கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள் என்பது வரையிலும்   வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு  வரலாற்று நாயகரோடு

- வாழ்ந்ததாக சொல்லப்படும் வரலாற்றில் நிரூபிக்க முடியாத  பல குழப்பங்கள்.

- வாழ்ந்தவரா அல்லது ஒரு கதையின் கற்பனைப் பாத்திரமா என்கிற விவாதங்கள்.

- காப்பியங்கள் பலராலும் அவர்கள் மனம் போனபடி சித்தரிக்கப்பட்டவை என்கிற விமர்சனத்திற்கு ஆளான  காப்பிய நாயகனை ஒப்பிடுவது எப்படிப் பொருத்தமாகும் ?

ஒரு புறத்தில்  உண்மை நாயகரையும் மறு புறத்தில்  கற்பனை நாயகனையும் ஒப்பிடுவது சரியாகுமா ? ஆய்வுப் பட்டம் என்ற பெயரில் அரிக்கும் சென்தூண்டியை உடலெங்கும் நான் தடவிக்கொள்ளத்தான் வேண்டுமா?   என்கிற கேள்விகள்   ஆராய்ச்சிப் பட்டத்துக்கான முயற்சிக்கு நடுவே பெரும் தடைக் கற்களாக  எழுந்து நின்றன.  

இந்தக்  கேள்விகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்து பணத்துக்காகவும், பட்டத்துக்காகவும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் என்னளவு நெடுங்காலம்   அனுபவமிக்க கல்லூரி தமிழ்ப் பேராசிரியன்  – நாட்டோரால் நன்கு அறியப்பட்டவனே  இப்படி எழுதி இருந்தால் அது என் மீதும் எனது  சமுதாயத்தின் மீதும்  நானே  பூசிக்கொள்ளும் சேறாகவே  இருக்கும் என்று கருதி அந்த ஆராய்ச்சியைக் கைவிட வேண்டியதாயிற்று” என்று  கூறினார்.  மாற்றார் முன் பட்டத்துக்காக மண்டியிடும் மக்கள் நிறைந்துவிட்ட சமுதாயத்தில்   இரட்டை ஓய்வூதியம் போன்ற பெரும் பொருளாதார நன்மைகளையும் ஒரு  உயர்வான பட்டத்தையும் பழிச்சொல் வந்துவிடக்கூடாது  என்கிற உயர்ந்த  மனப்  பக்குவத்தில்  விட்டொழித்த பேராசிரியர் அவர்களைப்  பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தொடர்ந்து, கல்லூரிகளில் பேராசிரியர், விரிவுரையாளர் பதவிகளில் நியமனம் பெறுவதற்கு  Ph.D. , M.Phill பட்டங்களைப் பெற்றே ஆக வேண்டு மென்பது இன்றியமையாத விதியாக்கப்பட்டிருப்பது ( MANDATORY)  பற்றி  பேச்சு திரும்பியது.

பேராசிரியர் அவர்கள்  இப்படிக்  கடுமையான விதிகளால் பித்தலாட்டமும், ஊழலும், ஆள் மாறாட்டமும் அதிகமாகிவிட்டது என்று சொன்னார்கள். இன்றைய நிலையில் சொல்லப்போனால் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்வு பெறுவதுதான்  மிகவும் கடினம் ஆகிவிட்டது என்றும்   Ph.D. , M.Phill ஆகிய பட்டங்களைப் பெறுவது மிகவும் சுலபமாகிவிட்டது என்றும் கூறினார். மேல்  நிலை மற்றும் இள முது கலைப் பட்டங்களைப்  பெறுவதற்கு மாணவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் அறிவும் காரணமாக இருந்தால் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெறுவதற்கு பணமும் செல்வாக்குமே காரணமாக இருக்கின்றன என்றும் சொன்னார். இதை உணர்த்தும் வகையில் அவர் சொன்ன ஒரு சம்பவம் மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

கவனமாகக் கேளுங்கள்.

அதாவது,  ‘காளை மாட்டு  வண்டி ஓட்டிகளின் வாழ்க்கை நிலை’ என்கிற தலைப்பில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை பி. எச்.டி பெறுவதற்காக ஒரு கல்லூரிப் பேராசிரியர் தனது வழிகாட்டியாக இருந்த மூத்த பேராசிரியர் இடம் அவரது பரிந்துரைக்காக  சமர்ப்பித்து இருந்தார்.  அதைப் படித்துப் பார்த்துக்கொண்டு வந்த வழிகாட்டும் மூத்த பேராசிரியர்  , அந்த ஆராய்ச்சிகட்டுரையில் ஒரு இடத்தில் ‘காளை மாட்டு வண்டி ஓட்டிகள்’ என்ற பதத்திற்கு பதிலாக ‘ஒட்டக வண்டி ஓட்டிகள்’  என்கிற வார்த்தை இருந்ததைக கண்டார். மூத்த பேராசிரியருக்கு எப்படி இதில் ஒட்டக வண்டி ஓட்டிகள் பற்றி வருகிறது என்று புரியவில்லை. காளை  மாடு என்கிற வார்த்தைக்கும் ஒட்டகம் என்கிற வார்த்தைக்கும்  இடையில் தட்டச்சுப் பிழை கூட வர வாய்ப்பில்லையே என்று யோசித்தார். அவருக்கு ஏதோ எங்கோ இடறுவது போலத்  தோன்றியது.

உடனே கடந்த சில வருடங்களில் ஒட்டக வண்டி ஓட்டிகள் பற்றி ஏதேனும் ஆராய்ச்சிக்  கட்டுரைகள்        சமர்ப்பிக்கப்படிருக்கின்றனவா என்று அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களின் வலை தளங்களிலும் சென்று பார்த்தபோது  குஜராத் பல்கலைக்கழகத்தின் வலைதளத்தில் அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.  அவர் கையில் இருந்த காளை மாட்டு வண்டி ஓட்டிகள் பற்றிய ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட பத்து  ஆண்டுகளுக்கு முன்பாக குஜராத் பல்கலைக் கழகத்தில்  ஒட்டக வண்டி  ஓட்டிகளின் வாழ்க்கை முறைகள் என்ற ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை குஜராத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரால் சமர்ப்பிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு , ஏற்றுக்கொள்ளப்பட்டு, அந்தப்  பேராசிரியருக்கு டாக்டர் பட்டமும் வழங்கப் பட்டாகிவிட்டது.  ஒட்டக வண்டி  ஓட்டிகளின் வாழ்க்கை முறை என்று தலைப்பிட்டு  குஜராத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரையை பத்து வருடங்களுக்குப் பிறகு திருடி கடத்தி வந்து  அதை காளை மாட்டு வண்டி ஓட்டிகளின் வாழ்க்கை முறை என்கிற ஒரே ஒரு  சொற்றொடரை மட்டும் மாற்றி ஆராய்ச்சிப் பட்டத்துக்கு  சமர்ப்பித்து முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்ற கதை அம்பலமானது.  அப்படி மாற்றப்படும்போது கவனக்குறைவாக ஒரே ஒரு இடத்தில் ஒட்டக வண்டி ஓட்டிகள் என்ற சொற்றொடர் மாற்றப்படாமல் விடுபட்டுப்போய்விட்டது. அதுவே இந்த கருத்துத் திருடர்  பிடிபட காரணமும்  ஆயிற்று. பிறகென்ன? சட்டபூர்வ நடவடிக்கைகள்தான்.  ஆராய்ச்சி செய்ய வந்த அண்ணன் மாமியார் வீடு சென்றார்.

இந்த நிலைமைகளில்தான்  இருக்கிறது நம்மவர்களில் சிலர் வாங்கும் முனைவர் பட்டங்கள்.

கற்பாம்! மானமாம்! கண்ணகியாம்! சீதையாம்!
கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம் !
காசு இருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம் ! – என்று கண்ணதாசன் எழுதினார். அதுபோல்

பட்டமாம்! பதவியாம்! முனைவராம்! ஆராய்ச்சியாம்!

கடைத்தெருவில் விற்குதடா ஐயோ பாவம்!

காசு இருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்! என்றுதான் கல்வித் துறையும் பாடவேண்டி இருக்கிறது.  தேவைப்படுவோருக்கு அவர்கள் பெயரில் சமர்ப்பித்துக் கொள்ளும்படி ஆய்வுக்கட்டுரைகளை வழங்க சிலர் வர்த்தக ரீதியில் தயாரித்து வைத்திருக்கிறார்களாம். ஒரு ரெடிமேட் கடை போல் திறந்து வைத்திருக்கிறார்களாம். உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் விலை  கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இப்படிப்பட்டவர்களை நாம் டாக்டர் என்று அழைத்து பெரும் தொகையாக மாதச்சம்பளமும்  வழங்கிவருகிறோம். அதைவிட நம்மை கவலைப்பட வைப்பது இத்தகைய காபி அண்ட் பேஸ்ட் ஆட்களிடம் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைப்பதாகும். இட்லி சாப்பிடவேண்டுமானால் அரிசி, உளுந்து ஆகியவற்றை அளவிட்டு, ஊறவைத்து, குடைக்கல்லில் இடுப்பொடிய ஆட்டி, வழித்து, புளிக்க வைத்து, அடுத்த நாள் கல்லில் வார்த்து, சுட்டு, எடுத்து சாப்பிட்டது ஒரு காலம். இப்போது ரெடி மிக்ஸ் காலம். இந்த ரெடி மிக்ஸ் சமாச்சாரம் இட்லிக்கு  வேண்டுமானால் சரியாக இருக்கலாம். கல்லூரியின் மிக உயர்ந்த  பட்டங்களுக்கும் எப்படி சரியாகும்?

பல இணைய தளங்களில்  நாம் அவ்வப்போது பல விளம்பரங்களை கண்ணுறுகிறோம். உங்களுக்கு அந்தப் பட்டம் வேண்டுமா இந்தப் பட்டம் வேண்டுமா என்று இந்த விளம்பரங்கள் நம்மைத் தூண்டுகின்றன. நம்மிடம் ஒரு கிரெடிட் கார்டோ அல்லது ஒரு டெபிட் கார்டோ இருந்தால் போதும் அதன் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டு இந்தப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டு திருமணப் பத்திரிகைகளில் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளலாம்; கண்ணாடி சட்டம் போட்டு வீட்டின்  வரவேற்பு அறைகளில் மாட்டிக்கொள்ளலாம்; நம் ஊர் மொழியில் சொல்வதானால் பெரும் பீத்துப் பீத்திக் கொள்ளலாம். ஆனால் நாம் வாங்கியுள்ள பட்டத்துக்குத் தேவையுள்ள  அரிச்சுவடி அறிவாவது நமக்கு இருக்குமா என்றால் அது கேள்விக்குறியே. கல்வி இப்படி  எல்லாம் களவாடப்படுகிறது.   

நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் இப்படிப்  பணத்தை வாங்கிக்கொண்டு கவுரவ டாக்டர் பட்டங்கள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களால் விற்கப்படுகின்றன. இங்கே இருக்கிற  ‘பேயன்கள்’ அரிசோனா பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கிய அண்ணனே! என்று போஸ்டர் அடிக்கிறார்கள் ; பேனர் கட்டுகிறார்கள்.  உண்மையிலேயே அந்த பட்டம் வாங்கிய அண்ணனுக்கு அரிசோனா என்று ஒரு பல்கலைக் கழகம் இருப்பதும் தெரியாது; அதன் திசையும் தெரியாது. 

மேற்கண்டவைகள் எல்லாம் கல்வியாளர்களின் கவலைகள்.

பேராசிரியர் தனது லேப்டாப்பை மூடிவிட்டு  வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமானார். எல்லோரையும் வயிற்றுப் பூச்சிக்  கடிப்பதை  உணர்ந்தோம். அவரவர் மனைவிமார்களிடமிருந்து ஐம்பதாவது அலைபேசி அழைப்பு வரும் முன்பு,   மீண்டும் ஒரு  சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என்று  ஸலாம் கூறியவண்ணம் அவரவர் விடை பெற்றுக்கொண்டு  பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். பிரியும்வரை, அல்லது இந்தத் தொடர் அதிரைநிருபர் தளத்தில் வெளியிடப்படும் வரை   இந்த கலந்துரையாடல் ஒரு காவியமாகப் போகப்  போகிறது என்று எழுதிய  என்னையும் , வெளியிட்ட      நெறியாளரையும் எங்களைப் படைத்த இறைவனையும்  தவிர வேறு யாருக்கும் தெரியாது.  இதனை வரவேற்றுப் படித்த அத்தனை நெஞ்சங்களுக்கும் நன்றி.

இந்தத் தொடரின் வெற்றியாக நான் கருதுவது சென்னையில் இருந்து ஒரு பெருமகன் எனது அலைபேசி எண்ணை தேடி அலசிப் பெற்று என்னை அழைத்துப் பாராட்டியதோடு பெருநாள் விடுமுறைக்கு ஊர் வர இருப்பதால் தானும் எங்களுடன் ஒரு அமர்வில் இருந்து பேசவேண்டுமென்று விரும்புவதாகவும் கூறினார்கள். ஆனால் மழை காரணமாக இயலாமல் போய்விட்டது.

முதல் அமர்வின் கலந்துரையாடல் பற்றிய பதிவு  இத்துடன் நிறைவு பெறுகிறது.

அதிரைநிருபர் தளத்தின் அருமையான வாசகர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அடுத்த ஒரு அமர்வு இருக்கிறது. அந்த அமர்வில் அலசப்படப் போகும்  சம்பவங்கள், கருத்துக்கள், கவிதைகள், கால நிகழ்வுகள் , கல்விச் செய்திகள் இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்.
தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

21 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஓர் சகாப்தம் - சாட்சி பகர்கிறது !

அற்புதமான ஆய்வாளர்களின் உரையாடலும் - ஆய்வு அறிக்கையே !

அழகுற அனைத்து உரையாடலையும் எழுத்துக்களில் கொண்டு வந்து எங்களைப் போன்றோர்க்கு இன்னும் ஊக்கம் அளிக்கும் உங்களின் பெரும் முயற்சிக்கு நாங்கள் என்றும் கடமை பட்டிருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா !

Shameed said...
This comment has been removed by the author.
Iqbal M. Salih said...


பேராசிரியர்களின் கலந்துரையாடல்
நமக்குப் பெருமகிழ்வையும்
பெரும்பயனையும் அளித்திருக்கின்றன!

நன்றி டாக்டர் இ.அ. காக்கா அவர்களே!

Shameed said...

மாமா அடுத்த வாரத்திற்குள் உங்களுக்கு அதிரை நிருபரில் G1 என்கிற கிரேடு கிடைக்கப்போகின்றது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உங்கள்களின் உரையாடல்கள் எங்களுக்கு மனமகிழ்வுடன் சுவைத்தமிழுடன் படிப்பினையும் அறிவேற்றமும் தரும் அமுதம்.

இன்னும் அமருங்க! நிறைய தாருங்க!

crown said...

தான் அறியாதவன் என்பதையே தனக்குத்தானே அறியாதவன் . இவன் ஒரு மடையன். இவனை ஒதுக்கிவிடு.
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சிக்ஸர்!!!!!!!!!!!!!!
மேற்கண்ட சொல்தொடரில் சொல்லபடுபவன் மேல் எனக்கு பரிதாபம் வருகிறது. ஒதுக்கிவைக்க மன வராது! அவன் அப்பாவி!அவனைத்தான் அந்த வாழை மட்டையைதான் பேராசிரியர்கள் பொறியை ஊதி பெருந்தனழாய் ஆக்கனும் என்பது என் கருத்து.(இந்த சிறியவனின் கருத்தை ஒதுக்கிவிடாதீர்கள்).

crown said...

ஆராய்ச்சிப் பட்டமான P.Hd. அதாவது டாக்டர் என்கிற "முனைவர்" பட்டம் வாங்கிக் கொள்வதற்குபலர் "முனைவர்". காரணம் காசும்,பதவியின் பவிசும். ஆனால் அந்த "முனைவர்" பட்டத்துக்கு நல்லதொரு காரணத்தால் "முனையாதவர்" நம் பேராசிரியர் என்பதை நினைத்து பெரிமிதம் கொள்கிறது மனது.

crown said...

அந்த ஆராய்ச்சிகட்டுரையில் ஒரு இடத்தில் ‘காளை மாட்டு வண்டி ஓட்டிகள்’ என்ற பதத்திற்கு பதிலாக ‘ஒட்டக வண்டி ஓட்டிகள்’ என்கிற வார்த்தை இருந்ததைக கண்டார்.
--------------------------------------------------------------------
ஆங்கே ஒட்டகத்தை ஒட்டவைக்க முடியாது! காரணம் ஒட்ட(Gum)'கம்' தேவை! எல்லாம் பசைக்காகவும்,பதவிக்காகவும் செய்த குளறுபடியில் ஏற்பட்ட கோளாறு இது!

Unknown said...

ஏன் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கவில்லை என்பதற்கான விளக்கமே ஓர் அற்புதமான ஆய்வுக் கட்டுரை. (பிஹெச்டி) முனைவருக்கு இதைவிட வேறு தகுதிகள் வேண்டுமா என்ன?

எந்தப் புலவனுக்கும் கல்லூரிகள் தரும் பட்டங்களே பெறாத ஒரு கவிஞனுக்கு முன் நிற்கத் தகுதி இருந்ததில்லை :-)

இந்தத் தொடரை மட்டும் நான் தொடர்ந்து வாசித்தேன். நிறைவடைந்ததில் மகிழ்ச்சியா துக்கமா என்று தெரியவில்லை!

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும்.
தொடர் நிறைவுற்றது என்பதை தொடர் இன்னும் தொடரும் என்றிருந்தால் எங்களின் அறிவுப்பசிக்கு உணவு நிரந்தரமாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கும். குறுவிடுப்பில் தாயகத்தில் உங்களையும், பேராசிரியர் மற்றும் நாவலர் அவர்களையும் சந்தித்தாலும், இதுவே போன்ற ஓர் அரிய கலந்துரையாடலில் அடியேனும் கலந்து கொள்ளலாம் என்ற உங்களின் அழைப்பு, தொடர் மழையின் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது எனக்கு வருத்தமாக அமைந்தது. இன்ஷா அல்லாஹ் வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றேன்; இன்ஷா அல்லாஹ் அப்படிப்பட்ட நிகழ்வில் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்பது என் பேரவா.

Anonymous said...

கிரவ்ன் சொன்னது [மட்டுறுத்தலுக்கு பின்னர் பதியப்பட்டுள்ளது]

தசரதனின் மகனான இராமனை நம் உயிரினும் மேலானா ரசூல்(ஸல்)அவர்களுடன் ஒப்பிடாத அதிரைமகன் ஈமானை காத்துக்கொண்டார். இராமனால் ஈமான் பறிபோவது தடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.இதை எடுத்து சொல்லி அந்த பாவத்திலிருந்து காப்பாத்திய வ"காப்"சாஹிப் ஒரு சாகாப்தம் உருவாக்கியவராகிறார்!அதனால் தான் இங்கே அவர்களைபற்றி அலசபடுகிறது இதில் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நன்மை இருக்கிறது.

Anonymous said...

அர அல சொன்னது [மட்டுறுத்தலுக்குப் பின்னர் பதியப்பட்டுள்ளது]

வெட்கங்கெட்ட சங் பரிவார் சிந்திக்குமா உண்மை உலக நாயகர் நபிகள் நாயகத்தை ஏற்குமா ? Thanks Ibrahim ansari Kakka for your precious article,and may Allah bless you and your family here and hereafter.

sabeer.abushahruk said...

மூன்று ஆறுகளின் சந்திப்பு முக்கூடல் என்றாகி சுற்றுலாத் தலமானதுபோல மூதறிஞர்களாம் மூவறிஞர்களின் சந்திப்பு அறிவைத் தேடுவோருக்குத் தரமானவொரு தலம்போல வாய்த்தது.

இந்தக் கதம்பக் கருக்கள்கொண்ட கலந்துரையாடல் இன்னும் தொடர வேண்டும்.

அலாவுதீன்.S. said...

மூத்த கல்வியாளர்களின்
சுவையான உரையாடல்
தெளிவான விளக்கங்கள்
நேரில் கலந்து கொண்ட
எழுத்து நடை!
சகோ. இ.அ. அவர்களுக்கு
வாழ்த்துக்கள்!

அப்துல்மாலிக் said...

நானும் நிறைய தெரிந்துக்கொண்டேன் இத்தொடரின் மூலம், நன்றிகளும் வாழ்த்துக்களும்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தினமும் அதிகாலை அதிரைநிருபரை தொடர்ந்து வாசிக்கும் பிறமத நண்பர் ஒருவர் என்னோடு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வார், அதேபோல் இன்று அதிகாலை 06:15 மணியளவில் அலுவலகம் செல்லும் வழியில் எனக்கு அலைபேசியில் அழைத்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு நண்பரும் அலைபேசியில் அழைத்தார் இருவருமே கோடிட்டு காட்டியது ஒன்றே.

பிறமத கோட்பாடுகளை விமர்சனம் செய்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள், ஆனால் பிறமத கடவுள்களை ஏசாதீர்கள் திட்டாதீர்கள் என்று சொல்லித்தந்த நபியை பின்பற்றும் நீங்கள் ஏன் நேரடியாக பிறமத கடவுளை ஏசுகிறீர்கள் என்று கடிந்து கொண்டார்.

அவரின் மனவேதனை என்னை ஏதோ செய்தது, அவரிடம் விளக்கமளித்து விட்டு, மீண்டும் கட்டுரையில் இடம்பெற்ற அவர் சுட்டிக் காட்டிய பகுதிகளை நெறியாளுமைக்குட்படுத்திய பின்னர் பதியப்பட்டுள்ளது.

மீண்டும் தெளிவுற எடுத்துரைக்கிறோம், பிறமத சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம் அவர்களுக்கும் எங்களுக்கும் நேரான வழி எதுவென்று எடுத்துரைப்பதில் முன்னிருப்போம் அதனையே நடைமுறைபடுத்துவோம் இறைவனின் நாட்டப்படி.

தொடர்ந்து வழமைபோல் உங்களின் வருகையும் அலைபேசி / மின்னஞ்சல் விமர்சனங்களையும் வரவேற்கிறோம் என்றும்.

ZAKIR HUSSAIN said...

முனைவர் பட்டம் வாங்க மிகவும் உதவுவது பேராசிரியர்களை விட கம்ப்யூட்டரில் உள்ள COPY & PASTE வசதிதான் என்று ஒரு முனைவரே ஒரு முனிவர் மாதிரி வந்து என்னிடம் சொல்லிவிட்டுபோனார்.

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான நண்பர்களே! நெறியாளர் அவர்களே!

தாங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்கும் எனது நன்றி. கவியன்பன் கலாம் அவர்கள் குறிப்பிட்டு இருப்பது போல் இந்தத் தொடர் முடியவில்லை. முதல் அமர்வில் கலந்துரையாடப்பட்ட பகுதிகளே நிறைவுபெற்றன. இரண்டாம் அமர்வு நிகழ்ந்தது . கவிஞர் சபீர் அவர்களின் ஆசை போல் இன்ஷா அல்லாஹ் தொடரும் .

வார்த்தைகளின் வடிவமைப்பாளர் தம்பி கிரவுன் அவர்கள் பின்னூட்டம் இட்டதுடன் 58.19 நிமிடங்கள் அலைபேசியில் உரையாடியது மிக்க மகிழ்வைத் தந்தது.

பிறரை மனம் நோகச் செய்யும் வண்ணம் எழுதவேண்டுமென்று நமது நோக்கமில்லை. சில உணமைகள் கசப்பது இயற்கையாகப் போய்விட்டது. இருந்தாலும் யார் மனமும் வருத்தமுற்று இருக்க காரணமாக இருந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.



N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அஸ்ஸலாமு அலைக்கும்
One who knows and knows that he knows; He is wise. follow him.
One who knows and knows not that he knows; He is asleep . Wake him.
One who knows not and knows that he knows not ; He is a student . Teach him.
One who knows not and knows not that he knows not ; He is a fool; shun him.
இந்த தகவலை பேராசிரியர் அவர்கள் நான் கல்லூரியில் படிக்கின்ற காலத்தில் சொன்னது இன்றும் பசுமரத்தாணி போல் மனதில் பதிந்துள்ளது.மேலும் Ph.D வாங்காததுற்கான மிக உன்னதமான காரணத்தையும் சொன்னது போற்றத்தக்கதாகும் கலந்துரையாடலில் பங்கு பெற்ற அணைவருக்கும் என் வாழ்துக்களும்,துவாவும்.

Meerashah Rafia said...

இந்த மாதிரி கணக்கு வாத்தியார் எமக்கிருந்திருந்தால் நான் ஏன் Just Pass ஆகிருக்கப்போரேன்...

வாத்தியார் பெரியப்பாவின் சாதாரண பேச்சும் எப்பொழுதும் அருவியாய் தவழும்.

மொத்தத்துல தங்கள் சுவாரஸ்ய சந்திப்பின்மூலம் எங்களை எல்லாம் பொறாமை படவைத்துவிட்டீர்.

Unknown said...

பயன் தரும் உரையாடல் ...!

அதை எங்கள் பார்வைக்கு தர
உழைத்த அன்சாரிக்காக்கவுக்கு நன்றி .........

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு