தொடர்... 18
1985 ஆம் ஆண்டின் ஒரு மாலைப் பொழுது அது. 20 வயதுப் பெண்ணான கேத்ரீன் குய்க்கர் தன் வழமையான புத்தக வாசிப்பில் ஈடுபட்டிருந்தாள். புத்தகத்தின் தலைப்பு, ‘Words of Wisdom’ என்றிருந்தது. சான்றோர், சிந்தனையாளர்கள், மதவாதிகள் போன்றோரின் சிந்தனைச் சொற்களின் தொகுப்பு அது. அவள் வாசித்துக் கொண்டிருந்த தலைப்பு, இறையருள் மற்றும் அதன் நெருக்கம் பற்றியதாகும். ஓரிடத்தில் கேத்ரீனின் வாசிப்பு தடை பட்டு நின்றது.
“உம்மை அநாதையாகக் கண்டு, அதிலிருந்து நாம் விடுவிக்கவில்லையா? வழி அறியாதிருந்த உம்மை நாம் நேர் வழியில் செலுத்தவில்லையா?” அடுத்த வசனம்,
“நாம் அவருடைய பிடரி நரம்பைவிட அவருக்கு நெருக்கமாயுள்ளோம்!”
இவ்விரு வசனங்களைப் படித்தபோதுதான் கேத்ரீனின் பார்வை நிலை குத்தி நின்றது! ஓரிரு நிமிடங்கள் அவற்றை விட்டு அகலவில்லை! அவை யாரோ ஞானி ஒருவரின் கூற்றாயிருக்கலாம் என்று நினைத்தாள் அப்பெண். அந்த நினைவுடன், அவற்றின் கீழே அடைப்புக் குறிக்குள் இருந்த எழுத்துகளைக் கூட்டி வாசித்தாள்:
T.H.E. K.O.R.A.N....
‘கொரான் (குர்ஆன்) என்பது முஸ்லிம்களின் வேத நூல் அல்லவா? அவர்களைப் பாலைவனக் காட்டுமிராண்டிகள் என்றல்லவா இதுவரை அறிந்து வைத்துள்ளேன்? அப்படியானால், உண்மைதான் என்ன?’ இவ்வாறு சிந்தித்த கேத்ரீன், மீண்டும் அச்சொற்களைப் படித்தாள். மீண்டும் மீண்டும் படித்தாள். படித்துக்கொண்டே தன் சிந்தனையை ஞான வானில் பறக்கவிட்டாள்!
அடுத்து நிகழ்ந்ததோ அற்புதம்! அவளது கண்கள் குளமாயின! அவளையும் அறியாமல், அழுகையின் எல்லையை அடைந்தாள்! கண்ணீர் சொரிந்தவண்ணமே இருந்தது! “நான் வாசித்த அந்தச் சொற்கள் என்னை ஆட்கொண்டன. என்னை எங்கோ இனம் புரியாத நிலைக்கு இட்டுச் சென்றன அவை! அடியாருக்கு அருள் புரியும் ஆண்டவன் மாதா கோவிலில் இல்லையா? நம்மோடுதான் இருக்கின்றானா? நம் பிடரி நரம்பைவிட நெருக்கமாக இருக்கின்றானா? எத்துணை அன்பான, ஆதரவான, ஆர்வமூட்டும் வசனங்கள்!” சிந்தனை வயப்பட்டாள் கேத்ரீன்.
இத்தகைய எண்ண ஓட்டத்தில் எத்தனை நேரம் அப்பெண் அமர்ந்திருந்தாள் என்பது அவளுக்கே தெரியாது! அடுத்து என்ன? முஸ்லிம்களின் வேத நூலாம் குர்ஆனைத் தேடி நூலகத்திற்குச் சென்றாள்.
குர்ஆனின் பிரதியைப் பெற்றவுடன், தான் படித்த அந்த வசனங்கள் அவ்வேதத்தில் இருப்பது உண்மைதானா என்று பக்கங்களைப் புரட்டினாள். ஆம்! அவை அதில் இடம்பெற்றிருந்தன! முதல் வசனத்தின் பின்னணியான வரலாற்றை
அடிக்குறிப்பில் படித்தபோது, கேத்ரீனின் உணர்வு அடங்க மறுத்தது! அழுகை பீறிட்டு வெளி வந்தது!
‘இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்திய அந்த இறுதித் தூதரின் வாழ்வு இத்துணைப் பரிதாபமாகத் தொடங்கிற்றா?! பின்னர், குணத்தால் உயர்ந்த மாமனிதராக, மனிதப் புனிதராக, தேர்ந்தெடுக்கப்பெற்ற திருத்தூதராக ஆன இவரின் நேரிய பாட்டையன்றோ நான் பின்பற்றத் தக்கது?!’ இத்தகைய எண்ண ஓட்டத்தில், கேத்ரீனின் உள்ளத்தில் உண்மையை அறியும் ஆர்வம் ஆழப் பதிந்தது.
இயல்பாகவே புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் மிக்க இப்பெண், இஸ்லாம் பற்றிக் காழ்ப்புணர்வின்றி எழுதப்பெற்ற நூல்களைத் தேடி எடுத்துப் படிக்கத் தொடங்கினாள். உண்மை உதயமாயிற்று! ஓராண்டு முயற்சிக்குப் பின், 1986 ஆம் ஆண்டில் ‘ஷஹாதா’ மொழிந்து, ‘சகீனா’ என்ற பெயரில் சாந்தி பெற்றாள் இந்த 20 வயதுப் பெண்!
‘இஸ்லாமிய வழிபாடுகள் பாலைவனக் காட்டுமிராண்டித் தனமானவை’ என்று போதிக்கப்பட்டு, கிருஸ்தவ மத நூல்களை மட்டுமே படித்துப் பயிற்சி பெற்றிருந்த இவர், எதிர் காலத்தில் தான் ஒரு கிருஸ்தவ மிஷனரியாகப் பணியாற்றவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தார். ஆனால், தற்செயலாக நடந்த மேற்கண்ட நிகழ்ச்சி, கேத்ரீனை ‘சகீனா’ (அமைதியானவள்) என்றாக்கி, சாந்தியுறச் செய்தது அற்புதமல்லவா?!
“குர்ஆனிய வசனங்கள் என் இதயத்தைக் கூறு போட்டுத் தூய்மைப் படுத்தியது போல், வேறு எதுவும் என்னில் மாற்றத்தை விளைக்கவில்லை; என்னைக் கிளறிவிடவில்லை; என் உள்ளுணர்வுகளை ஊக்கப் படுத்தியதில்லை! முதன்முதல் படித்த அந்த அற்புத வசனங்களை இன்று படித்தாலும், அவை என்னோடு பேசுவது போன்று உணர்வேன். என் உளம் கனிந்து கண்ணீர் சிந்துவேன்! அந்த அளவுக்கு, அச்சொற்றொடர்கள் என்னை மாற்றிவிட்டன!
“நான் படித்த அந்த ‘Words of Wisdom’ என்ற நூலில், குர்ஆனின் சொற்களைப் போன்று, அதாவது என்னை அழச் செய்த வசனங்களைப் போன்று வேறு ஏதாவது உண்டா எனத் தேடினேன். வேறொன்றும் கிடைக்கவில்லை!” என்று கூறும் சகோதரி சகீனா, தனது ஓராண்டு ஆய்வின்போது, கிருஸ்தவப் பெண்ணாகவே இருந்து, இது ஓர் அறிவு சார்ந்த பயிற்சி (intellectual exercise) என்றுகூட எண்ணியிருந்தார். ஓராண்டுக்குப் பிறகுதான் உண்மை மார்க்கத்தில் ஒருவரானார்!
“அந்த வசனங்கள்தாம் இஸ்லாத்தின் வாசலைத் திறக்க வகை செய்தன. பழைய சிந்தனைகள், தகுதியற்ற தகவல்கள் பற்றிய பதிவுகளை எனது மூளை என்ற பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக அழித்துவிட்டு, ‘அண்டத்தைப் படைத்த ஆண்டவனின் மார்க்கம் இஸ்லாம்தான்’ என்ற முடிவுக்கு வந்தேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றார் சகோதரி சகீனா.
இவரது ஆறாண்டு முயற்சிக்குப் பிறகு, சகீனாவின் அன்னையும் தந்தையும் (1992 இல்) இஸ்லாத்தைத் தழுவினர். 1996 முதல் சஊதி அரேபியாவின் ஜித்தாவில் தன் கணவருடன் வசிக்கிறார் சகீனா. லெபனான் நாட்டுத் தலைநகர் பெய்ரூத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கட்டடக் கலைஞரான தன் கணவருடன் இணைந்து ‘தஅவா’ப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவர், சஊதிக்கு வந்து வாழத் தொடங்கிய அந்த ஆண்டிலேயே ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றினார். அதற்கடுத்த ஆண்டே தன் பெற்றோருக்கும் ஹஜ் செய்யும் பேற்றை வழங்கிப் பெருமிதம் கொண்டார்.
“சஊதியில் நல்ல மக்களோடு, நல்ல சூழலில் வசிப்பதில் நான் பெருமகிழ்வு கொள்கிறேன்” எனக் கூறும் திருமதி சகீனா அல்-பெய்ரூத்தி, தனது முதல் ஹஜ்ஜுப் பயண அனுபவத்தை வர்ணனை செய்வது அருமையானதாகும்.
“அ•தோர் அற்புதக் காட்சிதான்” என்று பெருமிதத்தோடு கூறித் தொடர்கின்றார்: “ஹஜ்ஜுக் கடமையும் அதனை மக்கள் ஒன்றாக ஓரிடத்தில் கூடி நிறைவேற்றுவதும், அனைத்துலக இஸ்லாமியச் சகோதரத்துவத்தை உறுதிப் படுத்துவதாகும். நோக்கம் ஒன்றே. மனத்தின் உந்து சக்தியும் ஒன்றே. இந்த வணக்கம், அனைத்தையும் படைத்து உயிர் கொடுத்தவனை, மரித்த பின் மீண்டும் எழுப்பிக் கொண்டுவருபவனை, ஒரே இடத்தில்-மக்காவில் கூடி வணங்கும் உயர்வான வணக்கமாகும் இது!
“எனது முதல் ஹஜ்ஜின்போது, என்னுள் எழுந்த உணர்வுகளைச் சொல்லால் வடிக்க முடியாத நிலைக்கு ஆளானேன்! திகைத்துத் திணறி நின்றேன்! நான் எப்படி இந்த இடத்திற்கு வந்தேன்? கடல் போன்ற மக்கள் கூட்டத்தினிடையே நான் ஒரு துரும்பாக நின்றேன்! பல இனத்தவர்கள், பல நிறத்தவர்கள், பல மொழி பேசுவோர் - அனைவரும் ஓரிடத்தில், ஒரே நேரத்தில் (அர•பாவில்) ஒன்றுகூடிய காட்சி, ‘ஆம்; இஸ்லாம் ஓர் அனைத்துலக மார்க்கம்தான்’ ( Yes; Islaam is the Universal Religion ) என்று கூற வைத்தது!
“உண்மையின் பக்கம் அழைப்பு விடுப்பதை விட்டு, தேசியவாதமோ, இனப் பாகுபாடோ-எதுவுமே இஸ்லாத்தைத் தடுக்க முடியாது! அதனால்தான், எனது பூர்வீக மதத்தின் இன வாதம், நிறப் பாகுபாடு என்பவற்றிலிருந்து விடுபட்டு, உண்மையான சகோதரத்துவத்தைக் காட்டும் இஸ்லாத்தின் பக்கம் வந்து சேர்ந்தேன். இது என் வாழ்வின் அரிய அருட்பேறு என்றால், மிகையாகாது. இந்த மாக்கடல் போன்ற மக்கள் கூட்டத்தில் ஒருத்தியாக நானும் இருப்பேன் என்று எனது இருபதாவது வயதுக்கு முன் நான் கனவுகூடக் கண்டதில்லை! இது என் மரணம்வரை மாறாத நினைவாகும்!”
அல்லாஹ் ஒன்றை நாடிவிட்டால், அதனை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது என்பதற்கு, சகோதரி சகீனாவின் மத மாற்றம் சிறந்த சான்றாகும். வாழ்க்கையின் முற்பகலில் ( 20 வயது ) நின்றவரை வான்மறையின் முற்பகல் ( அல்-ளுஹா ) அத்தியாயம் மாற்றியது, எத்துணை வியப்பிற்குரிய உண்மை!
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
அதிரை அஹ்மது
8 Responses So Far:
//“உண்மையின் பக்கம் அழைப்பு விடுப்பதை விட்டு, தேசியவாதமோ, இனப் பாகுபாடோ-எதுவுமே இஸ்லாத்தைத் தடுக்க முடியாது! அதனால்தான், எனது பூர்வீக மதத்தின் இன வாதம், நிறப் பாகுபாடு என்பவற்றிலிருந்து விடுபட்டு, உண்மையான சகோதரத்துவத்தைக் காட்டும் இஸ்லாத்தின் பக்கம் வந்து சேர்ந்தேன். இது என் வாழ்வின் அரிய அருட்பேறு என்றால், மிகையாகாது. இந்த மாக்கடல் போன்ற மக்கள் கூட்டத்தில் ஒருத்தியாக நானும் இருப்பேன் என்று எனது இருபதாவது வயதுக்கு முன் நான் கனவுகூடக் கண்டதில்லை! இது என் மரணம்வரை மாறாத நினைவாகும்!”//
சகோதரி சகீனாவின் உளம்நிறைந்த - ஆணித்தரமான-நுட்பமான தெளிவுரை எமக்கு ஓர் அரிய பாடம்.
//“உண்மையின் பக்கம் அழைப்பு விடுப்பதை விட்டு, தேசியவாதமோ, இனப் பாகுபாடோ-எதுவுமே இஸ்லாத்தைத் தடுக்க முடியாது!//
சகோதரி சகீனாவின் உளம்நிறைந்த - ஆணித்தரமான-நுட்பமான தெளிவுரை
குரான் ஒரு காந்தம்
அன்று நமக்கு ஒரு உமர் ரலி
இன்று சகோதரி சகீனா
இன்னும் பல கோடி இதயங்களை
நேர்வழிக்கு மாற்றியது
இன்னும் மாற்றும்
அல்லாஹ்வின் அருட்கொடை அல்லவா
அது
//வாழ்க்கையின் முற்பகலில் ( 20 வயது ) நின்றவரை வான்மறையின் முற்பகல் ( அல்-ளுஹா ) அத்தியாயம் மாற்றியது//
அழகிய வரிகள்!
மாஷா அல்லாஹ்.
//‘இஸ்லாம் மார்க்கத்தை நிலை நிறுத்திய அந்த இறுதித் தூதரின் வாழ்வு இத்துணைப் பரிதாபமாகத் தொடங்கிற்றா?! பின்னர், குணத்தால் உயர்ந்த மாமனிதராக, மனிதப் புனிதராக, தேர்ந்தெடுக்கப்பெற்ற திருத்தூதராக ஆன இவரின் நேரிய பாட்டையன்றோ நான் பின்பற்றத் தக்கது?!’ இத்தகைய எண்ண ஓட்டத்தில், கேத்ரீனின் உள்ளத்தில் உண்மையை அறியும் ஆர்வம் ஆழப் பதிந்தது.//
இப்படிப் பல உண்மைகளை, புரியாதவர்களின் பக்கம் புரியவைக்கும் பணியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வதை நமது அன்றாடக் கடமைகளில் ஒன்றாக்க வேண்டும் .
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
///“உண்மையின் பக்கம் அழைப்பு விடுப்பதை விட்டு, தேசியவாதமோ, இனப் பாகுபாடோ-எதுவுமே இஸ்லாத்தைத் தடுக்க முடியாது!
அல்லாஹ் ஒன்றை நாடிவிட்டால், அதனை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது
வாழ்க்கையின் முற்பகலில் ( 20 வயது ) நின்றவரை வான்மறையின் முற்பகல் ( அல்-ளுஹா ) அத்தியாயம் மாற்றியது, எத்துணை வியப்பிற்குரிய உண்மை!///
மாஷா அல்லாஹ்!
மிகப் பெரிய உண்மை!
//“உம்மை அநாதையாகக் கண்டு, அதிலிருந்து நாம் விடுவிக்கவில்லையா? வழி அறியாதிருந்த உம்மை நாம் நேர் வழியில் செலுத்தவில்லையா?” அடுத்த வசனம்,
“நாம் அவருடைய பிடரி நரம்பைவிட அவருக்கு நெருக்கமாயுள்ளோம்!”
இவ்விரு வசனங்களைப் படித்தபோதுதான் கேத்ரீனின் பார்வை நிலை குத்தி நின்றது! //
இன்னும் கோட்டன கோடிபேருக்கு இது போன்ற சம்பவம் நடக்கவேண்டும்
நற்பகிர்வுக்கு நன்றி!
Post a Comment