நாடுகாக்க வந்தவராய் வரலாற் றேட்டில்
.. நாம்காணும் முந்தையநல் லோர்கள் ஆட்சிப்
பீடுடனே மக்களுக்குப் பணியை ஆற்றிப்
.. பேர்பெற்ற நிகழ்வுதனைச் சொல்லப் போமோ?
காடுமேடு வளைத்ததனால் குடும்பம் காக்கக்
.. கட்சிவளர்ப் பதையின்று காண்கின் றோமே!
கூடிநிற்கும் தொண்டருக்குக் கைய சைப்பே
.. குதூகலத்தைக் கொடுக்குமென்ப தவரின் கொள்கை!
சிந்திக்கும் பழக்கமின்றி மூளை வேலை
.. செய்யவிடாக் கூட்டம்தான் காண்போம் இன்று
நிந்திக்கும் பழக்கமான காலில் வீழும்
.. நிலைகெட்டக் கூட்டமிவர் பின்னால் செல்லும்
மந்திக்கும் மனிதனுக்கும் வேறு பாடே
.. மதியென்று அறிந்திடாத மடையர்க் கூட்டம்
சந்திக்கும் பொழுதெல்லாம் என்ன பேசும்?
.. சதித்திட்டம் தீட்டத்தான் கூடு வாரே!
எப்படியோ நலமாக வழிகள் காட்டி
.. இவர்களெல்லாம் சபையில்நற் திட்டம் போட
தப்பென்று அறிந்துகொண்டே வாக்கை விற்கும்
.. தாராளம்தான் வறியவரின் நெஞ்சில் ஊறும்
அப்படியே அவர்வாழ்க்கை இருந்தால் தானே
.. அடுத்தமுறை பதவித்தேர் ஏறிப் போவார்
இப்படியே எந்நாட்டில் குடிகள் ஆட்சி
.. இழிநிலையில் இருப்பதனால் அதிர்ச்சி யுண்டோ?
ஆங்கிலேயர்க் கடிமையாக இருந்த நாளில்
.. ஆர்வமுடன் இளைஞர்கட் தலைவர் பின்னே
ஓங்கியபே ருணர்வோடு கிளர்ந்த மாட்சி
.. ஒருநொடியில் உள்ளத்தில் தோன்றும் காட்சி
நீங்கியதும் அடிமைவாழ்வே எனுங்கொண் டாட்டம்
.. நீடிக்கும் நிலையுளதா? ஏழை மக்கள்
ஏங்குகிறார் கொள்ளையராய்ச் சொந்த நாட்டார்
.. ஏய்ப்பூழல் கொடுஞ்சுரண்டல் காணும் போழ்தே!
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைத்ததனால் ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளைய பெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளை யாடக் கண்டு
முறைதவறி நடப்பதற்குத் தூண்டும் தீமை
.. மூளையில்லார்க் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் சொல்வார் உண்டோ?
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டு வாரோ?
பெற்றவர்கள் கற்றவனாய் ஆகு தற்குப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற் றானும்
பற்றுமொழி நாட்டின்முன் னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பா யாநீ?
முற்றுமிந்தக் கொடுமைகளை இளைஞர்க் கூட்டம்
.. முற்றிலுமாய் ஒழித்திடத்தான் வழிகாண் பீரே !
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com
24 Responses So Far:
மந்திக்கும் மனிதனுக்கும் வேறு பாடே
.. மதியென்று அறிந்திடாத மடையர்க் கூட்டம்
சந்திக்கும் பொழுதெல்லாம் என்ன பேசும்?
.. சதித்திட்டம் தீட்டத்தான் கூடு வாரே!
--------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். சரியான சொல்லாடல்.மிகையில்லா உண்மை! நடப்பின் பிரதிபலிப்பு! தெளிவான எழுத்தோட்டம்.
திரைப்படங்கள் மிகைப்படுத்தும் ஆட்டம் பாட்டம்
.. திசைமாற்றி வைத்ததனால் ஒழுக்கம் ஓட்டம்
நரைமறைத்து நடிகனவன் இளைய பெண்ணை
.. நளினமின்றித் தீண்டிவிளை யாடக் கண்டு
முறைதவறி நடப்பதற்குத் தூண்டும் தீமை
.. மூளையில்லார்க் கூட்டத்தில் இளைஞர் முந்தி!
குறைகண்டால் சீற்றமுடன் சொல்வார் உண்டோ?
.. கூரறிவின் செயல்திறனைக் காட்டு வாரோ?
------------------------------------------------------
ஒரு மதரஸாவில் சொல்லிகொடுக்கும் பாடம் போல இருக்கிறது. மேலும் இதை எழுதியது பாவேந்தர் பாரதிதாசனா? என வினா கொள்ளும் அளவில் எழுத்தில் தீரம்!வீரம்!காரம்!
பெற்றவர்கள் கற்றவனாய் ஆகு தற்குப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற் றானும்
பற்றுமொழி நாட்டின்முன் னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பா யாநீ?
முற்றுமிந்தக் கொடுமைகளை இளைஞர்க் கூட்டம்
.. முற்றிலுமாய் ஒழித்திடத்தான் வழிகாண் பீரே !
-----------------------------------------------------
வசந்தத்தின் வாசல் தன்னை இளைகர்காள் திறக்க வேண்டும். இனிவரும் சமுக தூண்கள் அந்த வசந்த்தில் திளைக்கவேண்டும். நல்லதை ஏவி,தீமையை தடுக்கும் போக்கு இனி நாளேல்லாம் பரவ வேண்டும், இப்படி நல்லதை தூண்டும் எழுத்து தினம் தோறும் எழுத வேண்டும்.கவிஅன்ப சக்கரவர்திக்கு முடிசூடா மன்னன் பெயர் சூடும் ஆசை என்மனதிலே எழுகிறதே என்ன செய்வேன்?
அன்பர் கவியன்பன் அவர்களே! இது ஒரு கவிதைச் சுரங்கம்- கருத்துக்கள் கோர்க்கப்பட்ட மணி மாலை- காலம் கருதி வடிக்கப்பட்ட எண்ணக்குவியல் .
மிகுந்த பாராட்டுக்கள்.
காலம் கருதி வெளியிடப்பட்ட இக்கவிதையை கவிக்கோ, வைரமுத்து,வாலி,பா.விஜய் போன்றோர் படிக்க நேரிடின் "என்னம்மா கவிதை வடிக்கிறார்கள் இங்கு" என்று நிச்சயம் முணகத்தான் செய்வார்கள்.
கவியன்பன் கலாம் காக்கா, கவிக்காக்கா சபீர், அதிரை அஹமது சாச்சா ஆகியோரின் தோற்றத்தைப்பார்க்கும் பொழுது இவர்களுக்கும் தமிழுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என்று தான் தெரியும். ஆனால் இவர்கள் இலக்கிய எரிமலைகளை மென்று விழுங்கிய திமிங்கிலங்களாக இருக்கின்றனர். வாழ்த்துக்கள்......
//மந்திக்கும் மனிதனுக்கும் வேறு பாடே
.. மதியென்று அறிந்திடாத மடையர்க் கூட்டம்//
பின்னிட்டீங்க கவியன்பன்.
அடிமேல் அடியடித்தால் அம்மியே நகருமாம்; சுட்டிச்சுட்டிக் காட்டினால்தான் புத்திக்கு எட்டும்.
சகோ நெய்னா அவர்களே அவர்கள் யாவரும் எரிமலைகளே,இப்படி வெடிக்கிறார்கள் சாரி வடிக்கிறார்கள் கவிதையை
தன்னிலை மறந்து படிக்க வைத்த “உன்னிலைகள்” ஒரு கவி லீலையை நடத்தி இருக்கின்றீகள் கவியன்பன் அவர்களே....துவாக்களும் / வாழ்த்துக்களும்
வார்த்தைகள் அனைத்தும் 440 வோல்ட் கரண்ட்
அப்போதே எழுத்தர் ஏகாம்பரமாக வந்து ஒரு கலக்குக் கலக்கிய தளபதி கவியன்பன் அவர்களே!
தரமான கவிதையிலும் இன்று அசத்தி விட்டீர்கள்!
வாழ்த்துக்கள்.
சகோ. கவியன்பன்: --
/////பெற்றவர்கள் கற்றவனாய் ஆகு தற்குப்
.. பெரும்பாட்டின் அருமையினை அறிவா யாநீ?
மற்றவர்போல் நீயின்றி உன்னைச் சான்றாய்
.. மதித்துப்பின் தொடர்ந்திடவே பல்லாற் றானும்
பற்றுமொழி நாட்டின்முன் னேற்றம் என்றே
.. பணியாற்றும் அணியொன்றைக் காண்பா யாநீ?
முற்றுமிந்தக் கொடுமைகளை இளைஞர்க் கூட்டம்
.. முற்றிலுமாய் ஒழித்திடத்தான் வழிகாண் பீரே !/////
இளைஞனுக்கு அழகான அறிவுரைகள்! வாழ்த்துக்கள்!
Assalamu Alaikkum!!!
Brother Kaviyanban.
It is a masterpiece of your KaviCholai. Absolutely amazing and interesting. After a very long time I enjoyed this type of classical lines.
Each and every verse reveals the reality of life and questions all of us to ask ourselves "where are we going now?".
Alhamdhulillah!!!
May Allah bless you.
Wassalam
N.A.Shahul Hameed
அழகிய கவி..
இது நெறியாளருக்கு.
தலைப்பில் சிறு திருத்தம் செய்ய வேண்டியிருப்பதுபோல் தோன்றுகின்றது..சரியாக இருப்பின் சரி பார்க்கவும்..
என்னாட்டின் இளைஞர்காள்!
(என்நாட்டின் இளைஞர்கள்!)
என்னாச்சு உன்னிலைகள்?!
(என்னாச்சு உன் நிலைகள்?!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோதரர்காள்!
ஜஸாக்கல்லாஹ் கைரன் என்னும் துஆவுடன் உளமார்ந்த நன்றி!!
மகுடக்கவிஞர் என்னைப் போல் ஒருவர் என்பதால் என் “மனசாட்சி” என்றே அவரை நினைக்கிறேன்.
டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் வாழ்த்தும் துஆவும் என்னை இன்னும் உச்சத்தில் உயர்த்தும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
நகைச்சுவை எழுத்தாளர் “நெய்நா” அவர்கள் குறிப்பிட்டுள்ள அனைத்துக் கவிஞர்களுடனும் அடியேனுக்குத் தொடர்பு உண்டு.அவர்களும் மரபின் வழிநின்றுப் பாக்களை வனைந்தவர்களே; இப்பொழுதுத் திரையிசைப் பாடல்களில் மக்கள் இரசனைக் கூடியிருப்பதால் அவர்களின் வழி மாறிப்போய் விட்டாலும், எனக்கும் அவர்கட்கும் உள்ளத் தொடர்பு அறுபட வில்லை; குறிப்பாக, பா.விஜய் அவர்களின் பரிந்துரையின் பேரில் “நான்” என்னும் திரைப்படத்திற்கு என்னைப் பாடல் எழுத விஜய் ஆண்டனி எனும் இசையமைப்பாளர் வழியாக எனக்கு வந்த அழைப்பை மறுத்து விட்டேன் என்பதால் அவர்கட்கு என் மீது வருத்தம்; ஆனால் எனக்கு என் மார்க்கத்தின் மீது பொருத்தம்! நீங்கள் குறிப்பிட்டுள்ள அதிரைக் கவிஞர்கள் வரிசையில் அஹ்மத் காக்கா அவர்களின் பெயரை முதலில் வைக்க வேண்டும்; வயதிலும் புலமையிலும் எங்களை விட மூத்தவர்கள்; குறிப்பாக என்னைச் செய்யுள் படைக்கச் சொல்லித் தூண்டும் ஆசான் ஆவார்கள்.
கவிவேந்தே நீங்களும் நானும் ஓரினம்; கவிதையால்- செய்யுள் எனும் பாடலால் சமுதாயச் சாடலும்- அன்பின் கூடலும் படைப்பது என்பதை அறிந்தவர்களாதலால், இப்படி- அடிக்கடிச் சாடல் நிறையும் பாடல் வந்து விழுவது- நலம் நாடி உழுவது போன்றதாகும்.
அன்புத் தம்பி அர.அல. உங்களை நல்ல கவிதையின் இரசிகராக மாற்றியதற்கு உங்கள் அன்பு சாச்சா அவர்கட்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். உங்களை ஊரில் சந்திக்க இயலாத வருத்த்ம் இன்னமும் என் நெஞ்சை வாட்டும் ஒரு வேதனையாகவே உள்ளது.
கல்வியாளர் யாசிர்! தன்னிலை மறத்தல் என்றால் “போதை” என்று மாற்றுப் பொருள் மயக்கம் ஏற்படும். ஆயினும், எதுகையின் பாடத்தில் ஓரிடத்தில் குறிப்பிடுவர்:”எதுகை என்பது படிப்போரை ஈர்க்கும் தன்மைக் கொண்டதாகும்”. இக்கருத்தின்படி உங்களை என் செய்யுளின் எதுகைகள் ஈர்த்தன என்றால், எனக்குச் செய்யுள் பாடம் நடத்திய ஆசான்கட்கே உங்களின் பாராட்டுகளைச் சமர்ப்பிக்கிறேன்.
அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்: உங்களை என் மாணவனாக அன்றே (உங்களுடன் +2 படித்த பத்ருதீன் மற்றும் அபுலகலாம் ஆகியோர் என்னிடம் ஆங்கிலம் மற்றும் கணக்குப் பதிவியல் கற்றுக் கொண்ட பொழுது) எனக்குக் கிட்டாமல் போனதை வருந்தியதற்கு இன்று எனக்கு அருகில் இருந்து நீங்கள் பாடம் சொல்லித் தருவதைப் போன்று உணர்கிறேன். உங்களைச் சந்திக்கும் நன்னாளை எதிர்நோக்கியுள்ளேன். (குறுவிடுப்பில் ஊரில்-பெருநாளில் இருந்த பொழுது என் முன்னாள் மாணவன் அபுல்கலாமை சந்தித்தேன்)
மார்க்க போதகர் அன்பர் அலாவுதீன்: உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் “ஜஸாக்கல்லாஹ் கைரன்” எனும் துஆவுடன் நன்றி.
Respected Sir, NAS, Waalaikkum salaam,
I am so glad to see your kind and heart-felt appreciation on my poem-creation which led you more satisfaction. I realize that you should have visited my "KAVITHAICHCHOLAI" (MY BLOG). This is why you have compared this poem with my other poems. Jazaakkallah khairan. All praise be to Allah alone and my regards to my teacher Adirai Ahmad kakka who encouraged me to write this type of classical poems.
அன்புத் தம்பி மீராசா: வாழ்த்துக்கு நன்றி-”ஜஸாக்க்கல்லாஹ் கைரன்”
நீங்கள் குறிப்பிடும் பிழைகள் சரியா என்பதில் என் ஆசான் அதிரை அஹ்மத் காக்கா அவர்களிடம் வேண்டி நிற்போம். என்னறிவுக்குப்பட்டவரை அடியேன் எழுதிய தலைப்பு சரியென்றே நினக்கிறேன். காட்டு: மேல்நிலைப் பள்ளி= மேனிலைப்பள்ளி, கவிஞர்காள்/மக்காள் என்பது விளிச்சொல் என்பதாகும்; அவ்வாறே “இளைஞர்காள்” என்று விளிச்சொல்லில் அமைத்தேன்
கவியம்பர் [ன்’ சேர்க்குமளவுக்கு வயசில்லை] காக்கா அவர்களே சிறந்த உத்வேக வரிகள்..இளைஞர்களுக்கு தேவையான கவியூட்டல்.. வாழ்த்துக்கள் காக்கா..
மீராசா.... இளைஞர்காள்’ என்பது சரியே... உன்னிலை = உந்நிலை [இதில் குழப்பம் எனக்கு...அநேகமாக ரெண்டாவது சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.. கவனிக்க;நினைக்கிறேன்]
அன்புத் தம்பி இர்ஷாத் : உங்களின் மரியாதைக் கலந்த வாழ்த்துகட்கு மிக்க நன்றி; ஜஸாக்கல்லாஹ் கைரன். பக்கத்தில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன் என்று வருந்துகிறேன்;இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.
//உன்னிலை = உந்நிலை [//
’’தன்னிலை’’ விளக்கம் எனபதில், தன்+நிலை புணர்ந்து= தன்னிலை என்று வருவது போல், உன்+நிலை புணர்ந்து உன்னிலை என்று வ்ரலாம் அல்லவா?
இலக்கண அறிஞர்கள் இந்நேரம் உறக்கத்திலிருப்பதால், இனஷா அல்லாஹ் நாளை காலையில் விடைகள் கிடைக்கலாம்
பக்கத்தில் இருந்தும் பார்த்துக் கொள்ளாமல் இருந்து விட்டேன் என்று வருந்துகிறேன்;இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.//
இன்ஷா அல்லாஹ்... ஆனால் நான் இருப்பது கத்தார்... நீங்கள் இருக்கிறது யுஏஇ என்கிறதே உங்கள் ப்ரோஃபைல்?
//நான் இருப்பது கத்தார்..// விசா அனுப்பினால் வருவேன் அல்லவா/
விசா அனுப்பினால் வருவேன் அல்லவா//
:)
Assalamu Alaikkum,
Excellent contemporary self awareness poetry which
are plighted with our culture and our nation's patriotism, inseparable cinema even with muslims, politics of India, value of parents. It portrays our fellowmen's(regardless of religions) position now.
To get the real benefit of this poetry of please read between lines to grasp the author's concern.
Solutions?
There are pragmatic solutions by sincere following of Islam only.
Best Regards
அஸ்ஸலாமு அலைக்கும், கலாம் காக்கா...
NAS சார் சொன்னதையே நானும் சொல்லியே ஆகவேண்டும்.It is a masterpiece of your KaviCholai.
அழகான அறிவுரைகள். ஜஸகல்லாஹ் ஹைரன்..
இன்று அஹ்மது மாமா அவர்கள் இந்த பதிவை மிகவும் பாராட்டினார்கள்.
//தன்னிலை விளக்கம் எனபதில், தன்+நிலை புணர்ந்து= தன்னிலை என்று வருவது போல், உன்+நிலை புணர்ந்து உன்னிலை என்று வ்ரலாம் அல்லவா?
இலக்கண அறிஞர்கள் இந்நேரம் உறக்கத்திலிருப்பதால், இனஷா அல்லாஹ் நாளை காலையில் விடைகள் கிடைக்கலாம்//
சரி.
Post a Comment