Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2012 | , ,

தொடர் - 12
அமீருல் முஃமினீனும் அந்-நுஐமானும்...

படைப்புகளில் எல்லாம் மகிமையானவர், மனித குலத்தின் மாண்பாளர் நம் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் மறைவிற்குப் பிறகு, அண்ணல் நபியின் 

எளிமையான, ஆனால் எல்லா வகையிலும் மாட்சிமை பொருந்திய, சக்தியும் யுக்தியும் நிறைந்த போதனைப் பிரகாரம் நேர்வழி நடந்த குலபாயே ராஷிதீன்களில் (*)  மூன்றாவது கலீபா நமது உதுமான்(ரலி) அவர்கள் ஆவர்!

முதன்முதலில் தூய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட எட்டு நபர்களில் ஏழாவது இடத்தையும் சுவனத்தைக்கொண்டு இவ்வுலகிலேயே அஷரத்துல் முபஷ்ஷரா (**) என்று  நன்மாராயம் பெற்ற பதின்மரில் மூன்றாவது இடத்தையும் பெறுபவர் உதுமான் (ரலி) அவர்கள்!

மிக முக்கியமாக, ஒவ்வொரு நபிக்கும் மறுமையில் ஒரு நெருங்கிய தோழருண்டு. தேன் சுரக்கும் சொர்க்க லோகம், தூயவர்கள் வாழும் இல்லம்! அங்கே "எவர் என் ஆத்ம நண்பர் என்றால், அவர்தாம் உதுமான் இப்னு அஃப்பான்" என்ற அல்லாஹ்வின் தூதரின் ஆத்மார்த்த நட்பு எனும் அபூர்வமான, நிலையான பாக்கியத்தையும் பெற்றவர்!

வெற்றிகரமான வணிகராகவும் குறைஷிகளில் மாபெரும் செல்வந்தராகவும் திகழ்ந்த உதுமான் கனி (ரலி) அவர்கள், பல சமயங்களில் சன்மார்க்கம் செழிக்க தன்  செல்வத்தை வாரி வழங்கினார்கள். குறிப்பாக,  தபூக் யுத்தத்தின்போது, மொத்தம் ஆயிரம் ஒட்டகங்களும் பதினாயிரம் திர்ஹங்களும் நிதியாக அல்லாஹ்வின் தூதரிடம் வழங்கினார்கள்!

யூசுப் நபியின் வசீகரமான அழகைக் காண விரும்புபவர்கள், உதுமான் இப்னு அஃப்பானை கண்டுகொள்ளுங்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களால், அவர்தம் எழில் தோற்றம் குறித்துப் பாராட்டைப் பெற்றவர். அண்ணலாரின் இரு பெண்மக்களான ருக்கையாவையும் அதன்பின், உம்முகுல்தூமையும் மணமுடித்த, மாண்புமிக்க மருமகன் ஆதலால், துன்நூரைன் (இரு ஒளிகள் உடையவர்) எனும் சிறப்புப் பெயர் பெற்றவர்!

நெஞ்சின் இருள்கள் நீங்கிடச்செய்யும் நேரிய வாழ்வு ஓங்கிடச்செய்யும் அருள்மறையைத் தொகுத்தளிக்கும் அரும் பணியை ஆற்றியவர் அவர்!

"நான் நாணத்தின் நகர் என்றால், அதன் நுழைவாயில் உதுமான்" என்று அல்லாஹ்வின் தூதரால் அடையாளம் காட்டப்பட்டவர்.

நபி பெருமானின் நல்லுரைகள் பேணி நானிலத்தில் வாழும் நல்லவர்களின் தலைவராக, நீதி மிகுந்த, நெறி மிகுந்த ஆட்சியாளராக அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி)அவர்கள் அரசோட்சிய காலம் அது!

அன்று மதீனாவில் மஸ்ஜிதுன் நபவீ வழக்கம்போல் மக்களால் நிரம்பி வழிந்தது.

அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி)ன்  மனைவி, நபிகளாரின் நெருங்கிய தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரி என்பதை முன்னரே நாம் கண்டோம்.  அந்த கோத்திரத்தில் கண்பார்வை அற்றுப் போய்விட்ட மக்ரமாஹ் பின் நஃபல் என்ற வயோதிகர் இருந்தார். வயது வெறும் 115 தான்! இவர் அந்-நுஐமானின் மனைவிக்கு பாட்டனார் முறை.

மனைவியின் நெருங்கிய உறவினர் என்ற உரிமையில், மக்ரமாஹ்வை சற்று அதிகப்படியாகவே சீண்டிப்பார்ப்பதும் கிண்டல் செய்வதும் அந்-நுஐமானின் (***) வாடிக்கையாகவே இருந்தது!

பள்ளியில் அமர்ந்திருந்த மக்ரமாஹ் வுக்கு, அடிக்கடி வயோதிகர்களுக்கே  இயல்பாக வரும் உணர்வாகிய சிறுநீர் உபாதை தோன்றிவிட்டது. தன் கைத்தடியை ஊன்றிக் கொண்டே தள்ளாடி நடந்து சென்று ஓரிடம் தேர்ந்தெடுத்து சிறுநீர் கழிக்க அமர முயன்ற அவரைப் பார்த்து  கும்பலில் இருந்து கூச்சல் எழுந்தது! அவர் இன்னும் தள்ளிப்போக வேண்டும் என்று கும்பலின் அதிரொலிகளால் ஆட்சேபிக்கப்பட்டார். தடம் புரியாத தவிப்பில், சரியான இடம் கண்டுபிடிக்கத் தடுமாற்றம் அந்தகர் அவருக்கு!

என் இன்னல் தீர்ப்பதில் உதவிக்கு  எவர் முன் வருவர்? என்று ஏங்கி நின்ற அவருக்கு ஆதரவாக, ஒரு குரல் ஒலித்தது!

"உதவ நான் தயார்!" அந்தக்குரல் மக்ரமாஹ் வுக்கு மட்டும் தெரிந்ததல்ல!

அனைவருக்கும் அறிமுகமான அதே கிண்டலடிக்கும் கீச்சுக் குரல்தான்! அது யாருமல்ல. நம் அந்-நுஐமான் (ரலி)தான்!

அதாவது, அவரைப் பொறுத்தவரை மக்ரமாஹ்வை வைத்து ஒரு வேடிக்கை செய்து பார்க்க வசமான ஒரு வாய்ப்பு கிட்டி விட்டது!

"வாருங்கள் பாட்டனாரே!, ஒரு தோதான இடத்திற்கு உங்களை கூட்டிச் செல்கிறேன்" என்று என்ன செய்தார் தெரியுமா?

முன்பு இருந்த இடத்திலிருந்து சில அடி தூரமே  தள்ளி அவரை அழைத்துச்சென்று, இதுதான் வாகான  இடம். நான் தங்கள் முன்னால் நின்று மறைத்துக் கொள்கிறேன். இப்போது நீங்கள் தாராளமாகப் பெய்யலாம் என்று கிழவருக்கு தைரியம் கொடுத்துவிட்டு, மக்ரமாஹ் சிறுநீர் கழிக்கத் துவங்கியதும் சுற்றுமுற்றும் பார்த்த அந்-நுஐமான் வயோதிகரை அதே நிலையில் அப்படியே  விட்டுவிட்டு, நைஸாக நழுவி ஓடிவிட்டார்.

அந்த இடம் இன்னும் பள்ளியின் எல்லைக்கு உட்பட்டதாகவே இருந்ததால், மக்களுக்கு அவர் மறைவாகத் தோன்றவில்லை!

சப்தம் எழுந்ததும் மக்ரமாஹ் வுக்கு மானப் பிரச்சினை ஆகிவிட்டது! மக்களில் சிலர் அவரை அதட்டி, ஆட்சேபம் செய்ததில் மிகவும் சங்கடப் பட்டுப்போன மக்ரமாஹ் சபதம் செய்து நின்றார். "இப்படி என்னை மோசம் செய்த அவனை நிச்சயமாக, என் கைத்தடியாலேயே ஓங்கி அடித்து அவன் மண்டையைப் பிளப்பேன்!"

அடுத்த நாள், அந்-நுஐமான் மஸ்ஜிதுக்குள் நுழையுமுன்பே, அங்கு மக்ரமாஹ் அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டார்.

சற்று தூரத்தில் அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். "தொழுகை" அவர்களுக்கு அண்ணலாரின் பாசறையில் பயின்ற நேரடிப் பயிற்சி அல்லவா? எனவே, தக்பீர் கட்டி தேனமுதம் திருமறையை உகப்பான முறையில் உதுமான் (ரலி) அவர்கள் ஓதத் தொடங்கி விட்டார்கள் என்றால், அதன்பிறகு, இந்த உலகையே மறந்து அதன் இனிமையிலேயே லயித்து விடுவார்கள்!

கிழவர் மக்ரமாஹ்வை  மீண்டும் சீண்டிப் பார்க்கத் தோன்றியது அந்-நுஐமானுக்கு!

நெருங்கி வந்தார். குரலை கனைத்து வைத்துகொண்டார். தொனியை அடிக்குரலில் அழுத்திக்கொண்டு "பெரியவர் அவர்களே!

அந்-நுஐமான் எங்கிருக்கிறான் என்று உங்களுக்குக் காட்டித் தந்தால்  அது உதவியாக இருக்குமா" என்று கேட்டார் நயமாக!

நேற்று நடந்த அந்-நுஐமானின் அட்டூழியம் நினைவுக்கு வந்து ஆவேசமானது. "பேராண்டி! உடனே அந்த உதவியைச் செய்! எங்கே அந்தக் காட்டுப் பயல்? காட்டு உடனே" என்றார், நேற்றைய சபதத்தை நிறைவேற்றும் நோக்கத்துடன்!

சற்றுத் தள்ளி, தொழுகையில் ஒன்றிப் போய் இருந்த அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்களுக்கு நேர் பின்னால் கொண்டுபோய் கிழவரை சரியாக நிறுத்தினார். இதோ, அந்-நுஐமான். உங்களுக்கு எதிரேதான் நிற்கிறான். கவனித்துக் கொள்ளுங்கள் என்று கிழவரின் காதுக்குள் அவசரமாய் சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார்!

மனதில் தேக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, இருகைகளாலும் அவர் கைத்தடியை உயரே தூக்கி ஒரே போடாக போடுவதற்கு ஓங்கினாரே கிழவர்!

அவ்வளவுதான்! உடனே பாய்ந்து சென்று மக்ரமாஹ்வை பின்னால் இழுத்துப் போட்டார்  ஒருவர். மக்களிடையே ஒரே கூச்சலும் குழப்பமும் சேர்ந்துகொண்டது!

புனித மஸ்ஜிதுன் நபவீயில் இருந்து கொண்டு அமீருல் முஃமினேயே தாக்கும் முயற்சியா? என்று ஒரே அமளி துமளியாய் ஆகிப்போனது! கிழவரைப் பிடித்து வைத்துகொண்டு ஆளாளுக்கு ஏசத்தொடங்கினார்கள்! முதலில் அவருக்குப் புரியவில்லை!

பிறகுதான், ஒருமுறை அல்ல! இருமுறை, தான் அந்-நுஐமானால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அங்கிருந்த அனைவருக்கும் விளக்கி வைத்து வருத்தம் தெரிவித்தார்.

அந்-நுஐமானைப் பிடித்து வர சிலர் எழுந்தபோது, அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள் மக்களைக் கட்டுப் படுத்தி விட்டார்கள்.

அந்-நுஐமானை அவர் வழியிலேயே விட்டு விடுங்கள். என்னதான் எப்படி இருந்தாலும் அவர் பத்ருப் போரில் பங்கு கொண்ட சகோதரர் (****)

என்று புன்னகைத்த வண்ணம் நவின்றார்கள்  நிலவில் மலர்ந்திடும் அல்லிமலரைப்போன்ற மென்மையானவராகவும் பொதுவாழ்க்கையிலே சாந்தம் கொண்ட மிகவும் நல்லவராகவும் திகழ்ந்த அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள்!

***********************************************************

(*) அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு கலீபாவாக ஆகி நேர்வழியில் ஆட்சி செய்த நம்பிக்கையாளர்களின் தளபதிகள்.

(**) இவ்வுலகில் வாழும்போதே அல்லாஹ்வின் தூதரால் சுவர்க்கவாசிகள் என்று நற்செய்தி வழங்கப்பட்ட பத்து முக்கியமான நபித்தோழர்கள்: (1) அபுபக்கர் (ரலி), (2)உமர் (ரலி) (3)உதுமான் (ரலி) (4)அலீய் (ரலி) (5)தல்ஹா (ரலி) (6)ஜுபைர் (ரலி) (7)அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) சயீது இப்னு ஸைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு ஜர்ரா (ரலி)

(***) அந்-நுஐமான் இப்னு அம்ர் (ரலி அவர்களை முன் மாதிரியாகக் கொண்டே, பிற்காலத்தில் அல்-அஸ்மயீ, அபூநுவாஸ், முல்லா நஸ்ருத்தீன் போன்ற நகைச்சுவை வித்தகர்கள் தோன்றினர் என்பர் வரலாற்று விற்பன்னர்கள்.

(****) இப்போரில் முஸ்லிம்கள் இறைமறுப்பாளர்களை வெட்டவில்லை என்றும் தானே வெட்டியதாகவும் அண்ணல் நபி(ஸல்)  அவர்கள் இறை மறுப்பவர்கள் மீது கற்களை எறிய  வில்லை என்றும் தானே எறிந்ததாகவும் தூயோன் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்  திருமறையில் குறிப்பிடுகின்றான் (8:17)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

17 Responses So Far:

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

உதுமான்(ரலி) அவர்களைப் பற்றிய வர்ணனை அருமை !

மாஷா அல்லாஹ், ஒவ்வொரு வாரமும் புத்துணர்வு தரும் தொடர்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன் நுஅய்மான் ரலி அவர்களின் சேட்டைகளை எண்ணி சிரிப்பு வருகிறது ,எவ்வளவு அழகான மார்க்கம் இஸ்லாம்.உதுமான் ரலி அவர்களின் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் கண்ணீர் பணித்தது .

அந்-நுஐமானை அவர் வழியிலேயே விட்டு விடுங்கள். என்னதான் எப்படி இருந்தாலும் அவர் பத்ருப் போரில் பங்கு கொண்ட சகோதரர் (****)

Ebrahim Ansari said...

இதுவரை படித்திராத செய்திகள் காணாத நிகழ்வுகள். ஜசக்கல்லாஹ்.

sabeer.abushahruk said...

அந்தக் காலத்தில பெருசுகள்தான் பொடுசுகள ட்டார்ச்சர் பண்ணுவாங்க.

வூட்டுக்குத் தெரியாம பகல்ல வெட்டிக்குளத்தில எங்க குரூப்பு தொட்டு விளயாடும். துணி நனைந்தால் வூட்டுக்குத் தெரிஞ்சிடும்னு வேட்டி சட்டையை அவிழ்த்து படிக்கரைல வச்சிட்டு தண்ணில ஒரே சொறுவு. ஆட்டம் ஆரம்பமாயிடும். வெட்டிக்குளத்தின் தெளிந்த நீர் நாங்க கலக்குற கலக்குல சேற்றுத்தண்ணீராப் போய்டும்.

அது அப்புறமா தெளிஞ்சிடும் என்றுகூடத் தெரியாம எங்க உடுப்பையெல்லாம் ஒரு ஒற்றனை வைத்து அள்ளிக்கிட்டுப் போயிடுங்க பெருசுங்க.

புளியமரத்தடி மேடையில சுருட்டும் கைய்யுமா உள்ள பெருசுங்க முன்னாடி தோப்புக்கரணம் போட்டுத்தான் உடுப்பை வாங்குவோம்.

அந்தப் பெருசுங்களுக்கு கவுன்ட்டர் வைக்க, அப்ப எங்க செட்ல  இல்லாமல் போய்ட்டாங்களே அந்நுஐமான் ரலி அவர்கள்!

இக்பால், இந்த வாரம் நம்மாளு கொஞ்சம் ஓவர்தானே?

Unknown said...

வழக்கம் போல வார்த்தைகளில் வர்ணிப்பு
மாநபியின் மத்தில் சஹாபாக்களின் சிரிப்பு
மக்களுக்கோ திகைப்பு
எளிமையான எழுத்துக்களை கண்டு எனக்கோ மலைப்பு
வாரம் கடைசியில் சோரம் போகதே சிந்திப்பு
தொரட்டும் நபிமணி
மலரட்டும் நகைசுவை
,,,,,,,,,,,,,,
இம்ரான்.M.யூஸுப்

Yasir said...

வலிமையான செய்திகளுடன்,மனதை மகிழவைக்கும் தொடர்,கேள்விப்படாத செய்திகள்,படிக்க படிக்க தெவிட்டாத எழுத்து நடை...தொடருங்கள் காக்கா

Unknown said...

Assalamu Alaikkum
Very nice depiction of funny story in the golden days of Sahabas.

Making fun out of elders and poor guys in our place and surroundings are to be given consideration in our awareness. We have to get good dua, not Bad'dhua...

Jokes and making fun should not hurt any other hearts. But innocent children are exceptions.

Yasir said...

என்ன B.Ahamed Ameen நலமா ? இன்னைக்குதான் உங்க படத்தை கூர்ந்து கவனித்தேன் அட நம்மளுக்கு தெரிஞ்ச ஆளு bytheway i like some of your's commendable comments...keep going......மொபைல் நம்பரை இங்கு தெரிவியுங்கள் mdyasir@msn.com

ZAKIR HUSSAIN said...

To Iqbal,

சஹாபாக்கள் காலத்தில் நடந்தவிசயமானாலும் இப்போதுள்ள குசும்பு அப்போதே இருந்திருக்கிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சஹாபாக்கள் மத்தியில் அளவான நகைச்சுவைக்கு பஞமில்லாமலிருந்திருக்கு... அதோடு அவர்களின் பொறுமையும் அதனை வென்றிருக்கிறது !

வாரம்தோறும் வருடும் புன்னகைத் தொடர் ! :)

P.S.: ஒவ்வொரு வாரமும் ஒரு பெயர் வைத்து அழைக்கத் தூண்டும் தொடர் இது !!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இதுவரை படித்திராத செய்திகள் காணாத நிகழ்வுகள். ஜசக்கல்லாஹ்.

Shameed said...

நம்ம ஆளுகளுக்கு குறும்பு ஜாஸ்தியா இருப்பது ஏன் என்று இப்போதான் விளங்குது (அகளில் துணி துவைத்ததும் அதற்க்கு போட்டியா அகளில் குளித்ததும் நினைவில் வருகின்றது )

KALAM SHAICK ABDUL KADER said...

//அகளில் துணி துவைத்ததும் அதற்க்கு போட்டியா அகளில் குளித்ததும் நினைவில் வருகின்றது )//

ஹவுழில் தள்ளிவிட்ட வேடிக்கைகளும் பல உள.

நினைவாற்றலைப் பெருக்கும் வண்ணம், அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மஹ் ஸாலிஹ் அவர்களின் கைவண்ணம் வாரந்தோறும் நமக்கு ஊட்டி விடும் நகைச்சுவை எண்ணம்.

Unknown said...

More funny incident about Nauman (RA).
http://www.youtube.com/watch?v=9dGWyOk2nfw

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். பொக்கிஷம்,பொக்கிஷம்,பொக்கிஷம்,பொக்கிஷம்,.....

Canada. Maan. A. Shaikh said...

இதுவரை படித்திராத செய்திகள் காணாத நிகழ்வுகள். ஜசக்கல்லாஹ்

Iqbal M. Salih said...

மதிப்பிற்குரிய சகோதரி அவர்கட்கும்
மரியாதைக்குரிய டாக்டர் இ.அ.காக்கா அவர்கட்கும்

அன்பிற்குரிய சகோதரர்கள்: அஹ்மது அமீன், அப்துல்லத்தீஃப், அபுஇப்ராஹீம், இம்ரான்,
அன்பிற்கினிய சகோ.கவியன்பன் கலாம், தாஜுதீன், சாவண்ணா, AAF பொதுச்செயலாளர் ஷெய்க் நஸீர், யாசிர், தஸ்தகீர், ஷெய்க் ஜலாலுத்தீன்

மற்றும் நண்பர்கள் சபீர், ஜாகிர் ஆகியோர்க்கும் கருத்திட்டமைக்காக நன்றிகள்!

சபீர்:இந்த வாரம் நம்மாளு கொஞ்சம் ஓவர்தானே?

இந்த வாரத்தோடு அவரும் ஓவர்தான்!

சாவண்ணா: துணி துவைத்ததற்குப் போட்டியாக, நம்ம பள்ளியின் ஹவுலிலேயே இறங்கிக் குளித்த பழைய சம்பவத்தை நினவூட்டியதும் எனக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்துவிட்டது. நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு