Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2012 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது

21 Responses So Far:

Iqbal M. Salih said...

//விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை//

இதுபோன்ற யதார்த்தமான மொழியில்
உள்ளூர் பேச்சு மணம் கமழ
நம்ம நெய்னா முஹம்மது மட்டுமே
எழுத முடியும்!

மாஷா அல்லாஹ்!

sabeer.abushahruk said...

இப்படி எழுத்தில் மண்வாசணைமணக்க, மண்ணின் பாரம்பரிய உணவு வகை கமகமக்க, விறுவிறென்று சொல்ல வந்ததைச் சொல்ல

இந்தத் தளத்தில்

தம்பி நெய்நாவுக்கென்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகப்பெருமக்களின் தலைவன் என்கிற முறையில் சொல்கிறேன்...

ஹோம்ஸிக்கைத் தூண்டுவதும் நீரே அதைத் தீர்த்துவைப்பதும் நீரே.

அடிக்கடி எழுதுங்கள் ப்ளீஸ்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

இந்த குடிமன்னர்களின் தொல்லைக்காகவே
லங்கா விமானத்தை வெறுத்து
ஏர்இந்தியாவில் (பல்லவன் பஸ்)
போய் வந்தேன்.

தற்பொழுது
லங்கா விமானம்
ஏர் இந்தியா விமானம்
இரண்டிலும் குடிமன்னர்களின்
தண்ணீரை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்
அதனால் தற்பொழுது
குடிமன்னர்களின்
கொட்டம் அடங்கி இருக்கிறது.

அவர்கள் கொடுக்கும் மெனு கார்டில்
எல்லாம் இருக்கும்
நேரில் கேட்டால் ஒரே மெனுதான் இருக்கும்
லங்கா, ஏர்இந்தியா இரண்டிலும்
மனிதர்களுக்கு சாப்பாடு தருவதில்லை!
நம் வீட்டில் இருக்கும் பறவைகளுக்குரிய
உணவுதான் தருகிறார்கள் -- கொள்ளைக்காரர்கள்!

இப்பொழுதெல்லாம்
இங்கிருந்து புறப்படும்பொழுதும்
திரும்பி வரும்பொழுதும்
உணவை தயார் செய்து
கொண்டு போய் விடுகிறேன்.










விமான முதலைகள் பணத்தை மட்டும்
கறந்து விடுகிறார்கள்
சேவை கேள்விக்குறிதான்
விமனாத்தை நம்பினால் பட்டினிதான்!

திருச்சிக்கு வேறு கம்பெனி
விமானங்கள் வரும் வரை
லங்கா, ஏர்இந்தியாவின் சேவையற்ற
பகல் கொள்ளைத் தொடரும்!

பயணத்தை சுவராஸ்யமாக வழங்கியதற்கு
வாழ்த்துக்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இந்தத் தளத்தில்

தம்பி நெய்நாவுக்கென்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகப்பெருமக்களின் தலைவன் என்கிற முறையில் சொல்கிறேன்...//

தொண்டன் என்கிற முறையில் நானும் கொடி அசைக்கிறேன்... :)

மண்வாசனை மயக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் MSM(n) ! இன்னும் எழுதனும்னு !

அலாவுதீன்.S. said...

விமான முதலைகள் பணத்தை மட்டும்
கறந்து விடுகிறார்கள்
சேவை கேள்விக்குறிதான்!
விமானத்தை நம்பினால் பட்டினிதான்!

திருச்சிக்கு வேறு கம்பெனி
விமானங்கள் வரும் வரை
லங்கா, ஏர்இந்தியாவின் சேவையற்ற
பகல் கொள்ளைத் தொடரும்!

பயணத்தை சுவராஸ்யமாக வழங்கியதற்கு
வாழ்த்துக்கள்!

sabeer.abushahruk said...

"அவன்ட்ட சலுவாதே" என்றும் சொல்கிறார்களே, எது மிகச்சரி?

எசல்றதா சலுவுறுதா

Anonymous said...

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக குடிபதர்காவே சேட்டன் மார்கள் போறார்கள்.

Shameed said...

மண்ணைவிட்டு விண்ணில் நடந்த செய்தியா இருந்தாலும் மண் வாசனை செந்தூல் பறக்குது

ZAKIR HUSSAIN said...

Bro MSM NainaMohamed வாசக ரசிகர்களில் நானும் ஒருவன். உங்களுக்கு ஒரு சின்ன தகவல்...வாந்தியெடுக்க பிராந்தி / விஸ்கியின் அளவு தேவையில்லை. வெஸ்டிபுலர் சிஸ்டத்துக்கும், விஷுவல் சிஸ்டத்துக்கும் வரும் சண்டையே ஏர்ஹோஸ்டஸை போர்வை எடுத்து மூடச்சொல்லும்.

பெரும்பாலும் மது பரிமாறுவது எல்லா ஏர்லைன்சும் இந்த தவறை செய்கிறது. காரணம் "பணம்".

ஒசியில் கிடைத்தால் பினாயிலையும் வயிற்றுக்குள் தள்ளும் தரித்திரம் பிடித்தவர்கள் இருக்கும்வரை எதுவும் செய்ய முடியாது.


m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ஏர்ஹோஸ்டஸை போர்வை எடுத்து மூடச்சொல்லும். //

ஹாஹ்ஹா !!!

வாந்தி வரக் காரணம் சூப்பர் !

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 said...

Naina ur text of style is FLYING LIKE FLIGHT. NICE TO READ .KEEP ON .

M.S.முஹம்மது தவ்பிக். #9790282378 said...

\\\\தரையை எட்டி உதைத்து
வானிற்குத்தாவியது\\\\ Is it naina???

KALAM SHAICK ABDUL KADER said...

ஊர் வழக்குச் சொல்லில் வழக்கமான நடையில் பயண அனுபவத்தைச் சொல்லிய அன்புச் சகோதரர் நெய்நா அவர்கட்குப் பாராட்டுகள். இம்முறை நீண்ட நாட்களுக்குப் பிறகு அடியேனும் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் வானூர்தியில் பயணித்தேன்; பல முறை அவ்வானூர்தியில் பயணித்த பொழுது மது அருந்துவோரின் இப்படிப்பட்ட தொல்லைகளை விட்டு விலக நாடியே மாற்றமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்ஸை நாடினேன். ஆனால், அபுதபி-திருச்சி சேவை நிறுத்தப்பட்டதால், இம்முறை விருப்பமின்றி ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் வானூர்தியை நாட வேண்டியதாகிவிட்டது. நீங்கள் குறிப்பிட அனைத்தும் அடியேனும் அனுபவித்தேன்; குறிப்பாக, “மெனுகார்டு” கொடுத்து விட்டுச் சிலருக்கு மட்டும் உணவை வழங்குவதும்பின்னர் நீண்ட நேரம் பசி போன பின்னர் மீதமுள்ளோர்க்கு வழங்குவதும் ஏன் என்று தெரியவில்லை.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன் மச்சான்!
குடிகாரன்கள் பண்ணுர அலிச்சாட்டியம் மற்றும் நம் நாட்டு விமானக் கம்பெனிகள் நம்மை அவங்களோடு எசலும்படி, சலுவும்படி நடந்துகொள்ளும் அவங்க மேலாண்மை அவலத்தை அழகு அதிரைத் தமிழில் தந்தமை இனிமை.
இன்னும் எழுதனும்னு நானும் கொடியசைக்கிறேன்!

இப்னு அப்துல் ரஜாக் said...

ஊர் மனம் கமழும் எழுத்து
அழகாய் சொல்லும் பேச்சு
சீரியசும் காமெடியும் கலந்த
லஞ்ச்
இது நம் சகோ நெய்னா அவர்களின்
பன்ச்
-
நானும் அவரு விசிறிதான்

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி நெய்னா அவர்களுடைய ஆக்கம் என்றால் முந்திக்கொண்டு படிக்க வரும் ஒரு பட்டாளம் இருக்கிறது. அதில் நானும் ஒருவன். இந்த விமானப் பயணத்துக்கு தாமதமாகிவிட்டது.

இங்கே மண்வாசனையோடு பகிரப்பட்ட நிகழ்வுகளை பலமுறைகள் பார்த்து அலுத்தவர்களில் நம்மூறார் மிகப்பலர் இருப்பார்கள். அவர்களின் மனக்குறைகளை நகைச்சுவையாக சொல்லும் தம்பி நெய்னா அவர்களைப் பாராட்டுகிறேன்.

அப்துல்மாலிக் said...

எசலவேண்டும்/மற்றும் சாப்பாட்டு மெனுவைப்படிக்கும்போதே அறிந்துக்கொண்டேன் இது நெய்னாவுடைய படைப்பு என்று...

எத்தனையோ வருஷம் கழித்து பெற்றோர், மனைவி, அண்ணன்/தம்பி இப்படி குடும்பத்தை சந்திக்கப்போகும் உள்ளத்தையும், மூளையையும் சுத்தமாக வைத்திருக்கனும், என்ற அறிவு கூட வேண்டாமா?, வரும் உறவினர்கள் , தொழுதுக்கிட்டு, ஏர்ப்போர்ட்க்கு வரும் வழியெல்லாம் எப்படியெல்லாம் துஆ செய்துக்கிட்டு வந்திருப்பாங்க.... நாம ஒழுங்கா இருக்கோமா என்ற எண்ணம் எப்படி எழாமல் இருந்தது.....?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நெயனாவின் கட்டுரை என்றால் ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் .
மறுபடியும் அப்படியே !!!!!!!!!!!.

abraarhussain said...

'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக'சரியான உவமை

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கொஞ்சம் வேலைவெட்டியால் வெரசன வந்து நன்றி சொல்ல இயலவில்லை. இங்கு கருத்திட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு