Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 3 தொடர்கிறது 24

அதிரைநிருபர் பதிப்பகம் | November 03, 2012 | , , ,

பகுதி: மூன்று 

பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் ஒரு முறை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின்  கவிதைகளைப்  பாராட்டி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் தான் மெய்மறந்து ரசித்துப் பாராட்டிய  ஒரு கவிச் சிந்தனையைக் குறிப்பிட்டதாகக் கூறினார். அந்த வரிகள்

இந்த மரங்கள்
கூந்தலை நிலத்துக்குள்  புதைத்துவிட்டு 
கைகளில் பூக்களைத் தாங்கி நிற்கும் பைத்தியங்கள். 

பொருள்: மரங்கள் கூந்தல் போன்ற தங்களின் வேர்களை நிலத்துக்குள் புதைத்துவிட்டு கைகள் போன்ற கிளைகளில் பூக்களை பூக்கச்செய்து தாங்கி நிற்கின்றன. எனவே இந்த மரங்கள் பைத்தியங்கள்  என்ற சிந்தனை.

இதை பற்றி விவரித்தும் புகழ்ந்தும்  பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் பேசியது  பற்றி கவிக்கோ அவர்களிடம்   வேறு யாரோ ஒரு பேராசிரியர் தெரிவித்தாராம் . இதை செவியுற்ற  கவிக்கோ அவர்கள் வேறு ஒரு நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுடன் கலந்து கொண்டபோது அதைக் குறிப்பிட்டு  மகிழ்ந்தாராம்.  

உடனே நான் , ஹாஜா முகைதீன் சார் அவர்களைப் பார்த்து,  “நீங்கள் கணக்காசிரியர் – கணக்கு பற்றி கவிக்கோ ஒரு கவிதை பாடி இருக்கிறார் .  நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“கேள்விப்பட்டு இருக்கிறேன். வரிகள் சரியாக நினைவில்லை. உனக்குத் தெரிந்தால் சொல்” என்றார். நானும் நினைவுபடுத்தி அவர் பாடிய கவிதையின் கருத்தைத்  தழுவி சொல்ல முடியும் ஆனால் அவைதான் எழுதப்பட்ட  வாசக வரிகள் என்று நிச்சயமில்லை  என்று சொல்லிவிட்டு அந்த கவிதை அரங்கேறிய சம்பவத்தையும், கவிதையின் கருத்து  வரிகளையும்  சொன்னேன்.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் சேலத்தில் அவர் தலைமையில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது.    அப்போது வாணியம்பாடியில் நான் படித்துக்கொண்டு இருந்தேன்.  அந்தக் கவியரங்கத்தின் தலைப்பு கணக்கு. கவிஞர் ஈரோடு தமிழன்பன், முடியரசன் போன்றவர்களுடன் கவிக்கோவும் பங்கேற்றார். கணக்கினை கழித்தல், கூட்டல், பெருக்கல், வகுத்தல் என்கிற நான்கு  தனித்தனித் தலைப்பில் நால்வரும் கவிதை வாசிக்க வேண்டும். கவிக்கோவுக்கு கொடுக்கப்பட்டத்  தலைப்பு வகுத்தல் என்பதாகும்.   

கவியரங்கத்தின் தலைவர் கலைஞர். கவிக்கோ தொடங்கினார் இப்படி

“வகுத்தலை தலையில் வகிடாய் வைத்த தலைவா!” 

கவியரங்கம் பலத்த கை தட்டலுடன்  களை கட்டத் தொடங்கிவிட்டது. கலைஞர் கருணாநிதி தனது தலையைத் தடவிப்பார்த்தார். அவரது  தலை முடியை (நிகழ்ச்சி நடைபெற்ற காலங்களில் அவருக்கு தலையிலும்  முடி இருந்தது; ஆட்சியின் முடியும் அவரிடம்தான்   இருந்தது)   இருபுறமும் சரியாக ஒதுக்கிச் சீவி ‘நடு வகிடு ’ எடுத்திருப்பதைத்தான் கவிக்கோ அப்படிக்குறிப்பிட்டார்.  இப்போது கணக்குக்கு வருவோம். கணக்கின் குறியீடுகளை வர்ணிக்கத்தொடங்கினார்.

கழித்தலோ நீட்டிப் படுத்துவிட்ட நெடும் சவம் -
கூட்டலோ படுத்துவிட்ட சவத்தின் மீது நாட்டப்பட்ட சிலுவைக்குறி +
பெருக்கலோ அனைத்துமே தவறென்று போடப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் - தப்புக்குறி X
வகுத்தலோ வாழ்வரசி
குளித்து வந்த குடும்பப் பெண் நெற்றியில்  
வெண்சாந்து     நீறு தீட்டி
குங்குமமும் சந்தனமும் பொட்டிட்டு வந்ததுபோல் வாழ்வரசி. 

என்று படித்தார். கர ஒலி கால்மணி நேரம் ஆகியும் அடங்கவில்லை.

கவிக்கோ அவர்களின் இந்த வாழ்வின் வகுத்தல் கணக்கின் கவிதையைத் தழுவித்தான் பின்னாளில் புகழ்பெற்ற ‘எட்டு எட்டாய் மனித வாழ்வைப் பிரிச்சுக்கோ நீ எந்த எட்டில் இப்போ இருக்கே தெரிஞ்சுக்கோ’ என்ற திரைப் பாடல் எழுதப்பட்டது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

அந்தக் கவிதையின் முழுப் பக்கங்களையும் அடுத்த நாள்  வகுப்பில் வந்ததும் வாசித்துக் காட்டினார். இது அவரது பழக்கம். தான் பங்கேற்கும் கவியரங்கங்களில் தான் பாடும் கவிதையை வகுப்பில் வந்தும் மாணவர்களுக்குப் படித்துக்  காட்டும் பழக்கமுடையவர். அத்துடன் அருகில் உள்ள ஊர்களில் உள்ள கல்லூரிகளில்  அல்லது பொது விழாக்களில் நடக்கும் இலக்கிய  நிகழ்ச்சிகளுக்கு தன்னுடன் தமிழ்த்துறையையும், தமிழ் ஆர்வமுள்ள மாணவர்களையும் அழைத்துச் செல்வதும் கவிக்கோ அவர்களின் வாடிக்கை.    அப்படி அவருடன் சென்றிருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்போதும் மறக்க முடியவில்லை என்று சொன்னேன். அந்த நிகழ்ச்சி.

ஆம்பூரில் ஒரு இலக்கிய மன்ற விழா நடைபெற்றது. கவிக்கோ அவர்கள் கவியரங்கத் தலைமை ஏற்று நடத்தினார். வழக்கம் போல் என்னையும் சேர்த்து சில மாணவர்களையும் பார்வையாளராக அழைத்துப் போனார்.  கவியரங்கத்துக்குப் பிறகு திரு அவ்வை.நடராசன் அவர்கள் தலைமையில் பட்டி மன்றம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அந்தப் பட்டி மன்றத்தில் பங்கேற்க வேண்டிய இரண்டு முக்கிய பேச்சாளர்கள் ஏதோ காரணத்தால் வரமுடியவில்லை. நிலைமையை நிகழ்ச்சி நடத்துபவர்கள் , கவிக்கோ அவர்களிடம்  கூறினார்கள்.  உடனே கவிக்கோ அவர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் கவலைப்படவேண்டாம். எனது இரண்டு மாணவர்களை பகரமாகப் பேச வைத்து சமாளித்துவிடலாம் என்று உறுதி கூறிவிட்டார்கள். அதன் பின் சற்று நேரத்தில் பந்தலில் அமர்ந்து இருந்த என்னையும்  எனது சக நண்பர்  திருவண்ணாமலையைச் சேர்ந்த முருகன் என்பவரையும் கவிக்கோ அழைப்பதாக கூறி கூட்டிச் சென்றார்கள்.  எங்கள் இருவரையும் கவிக்கோ அவர்கள் ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்று  இரண்டு பட்டி மன்றப் பேச்சாளர்கள் வராத காரணத்தால் நீங்கள் இருவரும் ஆளுக்கொரு அணியில் பேசி   அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்றார்கள்.

தலைப்பு  எங்கள் இருவருக்குமே பெரும் மலைப்பாக இருந்தது.  வள்ளுவர் வகுத்தவழி வாழ்வாங்கு வாழ்ந்தவள் கண்ணகியா ? சீதையா? என்பதே தலைப்பு. திருக்குறள், சிலப்பதிகாரம், இராமாயணம் ஆகிய மூன்று இலக்கியங்களை நன்கு படித்தவர்களால் மட்டுமே இந்த தலைப்பில் பேசி அரங்கில் பாராட்டுப் பெற முடியும்.

எங்களின் மலைப்பைக் கண்ட கவிக்கோ அவர்கள் எங்களுக்கு தைரியமூட்டினார். பேசுவதற்கான குறிப்புகளை கவிக்கோ அவர்களே தருவதாகவும் அரைமணிநேரத்தில் தயாராகி விடலாமென்றும்  கூறியது மட்டுமல்லாமல், எங்கள் இருவருக்கும் தலைப்பை ஒட்டியும் வெட்டியும் பேசுவதற்கான குறிப்புகளை தனது அறிவுக்கடலில் இருந்து மளமளவென்று காகிதத்தில் எழுதித் தந்ததுடன் அந்தக் குறிப்புகளை விளக்கியும் சொன்னார். நாங்கள் கற்பூரம் அல்ல  ஆனாலும் கரித்துண்டுகள். கவிக்கோ அவர்கள் அறிவு நெருப்பைப் பற்றவைத்து விசிறிவிட்டதும் பற்றிக் கொண்டோம்.   இருந்தாலும் எனக்குள்  ஒரு வியப்ப்பு எப்படி ஒரு மனிதர் ஒரு பட்டிமன்றத்  தலைப்பின் இரு மாறுபட்ட அணிகளில் பேசவேண்டிய  கருத்துக்களை உடனே  இரு அணிகளும் சிறப்புற விவாதிக்கும் வண்ணம் தர முடிகிறது என்று எண்ணி வியந்தேன். பட்டிமன்றம் சிறப்புற நடைபெற்றது. நாங்கள் இருவரும் மிகவும் நன்றாகப் பேசினோம் என்று பாராட்டப்பட்டோம்.  கவிக்கோ அவர்களை நினைக்கும் போது இந்த சம்பவம் எனக்கு என்றும் நினைவுக்கு வரும்.

அத்துடன் கவிக்கோ அவர்கள் எத்தனையோ கவிதைகளை எழுதி இருந்தாலும் என்னை மிகவும் ஈர்த்த  கவிதை  இதை கலந்துரையாடலில் பகிரமுடியாவிட்டாலும் இப்போது அனைவருடனும் பகிர நினைக்கிறேன்.

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை இங்கு
முடித்தல் என்பது எதற்குமில்லை.

மணந்தேன் என்பாய் சடங்குகளும் வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப் பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே நீ
அளித்த தெதுவும் உனதல்ல.

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் ஒரு
வினாவாய்  நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பாய் மனிதரெல்லாம் பெறும்
வெற்றியிலேதான் தோற்கின்றார்.

ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டாய்  உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.

நான்என்பாய் அது நீயில்லை வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
ஏன்?’ என்பாய் இது கேள்வியில்லை அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு.

(-கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்)

இப்படி கவிதைக் கடலில் மூழ்கி இருந்த நேரம் ஹாஜா முகைதீன் சார் அவர்கள் எப்படி தனக்கு தொடர்பில்லாத துறைகளில் கூட  தனது சொந்த ஈடுபாட்டைக் காட்டி பல்துறை ஆசிரியராக பரிணமிக்க முடிந்தது என்ற வினாவை நான் எழுப்பினேன். அதற்கு அவர்கள் தான் மாணவர்களின் வளர்ச்சியில் தான்  வைத்து இருந்த ஈடுபாடே காரணம் என்று சொன்னார்கள். உடனே நூர் முகமது அவர்கள்  ஹாஜா முகைதீன் சார் அவர்களுடைய  பல்துறை ஈடுபாட்டை விவரித்தார். பள்ளியில் கணிதப் பாடம் நடத்தும் ஆசிரியர்,  உதாரணங்களை தமிழ் இலக்கியங்களில் காணக்கிடைக்கும் சுவை மிகுந்த சம்பவங்களில்  இருந்து சுட்டிக் காட்டி மாணவர்களை கட்டிப் போட்ட விதமும்,  பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளிலும், மாவட்ட அளவிலான போட்டிகளிலும் மாணவர்களை உற்சாகப் படுத்திய விதமும் ஹாஜா முகைதீன் சார் அவர்களை ஒரு தமிழாசானாகவும் , உடற் பயிற்சி ஆசிரியராகவும் எண்ண வைத்தது. மணி அடித்தால் சாப்பாடு மாதம் முடிந்தால் சம்பளம் என்று இல்லாமல் மாணவர்களோடு எல்லா விதங்களிலும் இவர்களைப் போல் ஈடுபாட்டுடன் இருக்கும் ஆசிரியர்களின் குறைவால்தான் இன்று எங்கு பார்த்தாலும் ஆசிரியர் – மாணவர் பிரச்னை தலை தூக்கி நிற்கிறது. 

ஹாஜா முகைதீன் சார் அவர்களின் இரண்டு அனுபவங்களை அவர்களே பகிர்ந்த விதம் கேட்போம்.

“ ஒரு முறை  பட்டுக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற ஒரு தமிழ் இலக்கியமன்ற  நிகழ்ச்சியில் என்னை சிறப்புப் பேச்சாளராக அழைத்து இருந்தார்கள். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர்,   மாவட்டக்  கல்வி அதிகாரியாவார். நான் ஒரு ஒன்றரை மணி நேரம் மாணவர்களுக்கு மத்தியில் பேசிவிட்டு வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்று பட்டுக்கோட்டை நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய அதே மாவட்ட கல்வி அதிகாரி நமது கா.மு. மேல்நிலைப் பள்ளியை சோதனைப் பார்வை இட வரப்போகிறார் என்ற சுற்றறிக்கை கல்வித்துறையிடமிருந்து வந்தது. அன்றைய தினம் வழக்கம்போல் நான் ஒரு வகுப்பில் கணிதப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன். அப்போது திடீரென்று இந்த மாவட்டக்  கல்வி அதிகாரி நான் வகுப்பெடுத்துக் கொண்டு இருந்த வகுப்பறைக்குள் நுழைந்து அமர்ந்தார் . அவரது கைகளில்  அன்றைய டைம் டேபிளை வைத்து இருந்தார்.  

நான் அதைப் பற்றி கவலைப்படாமல் பாடம் நடத்துவதில் கவனமாக இருந்த போது திடீரென்று அந்த  அதிகாரி என்னைப் பார்த்து இப்போது  இந்த வகுப்பிற்கு டைம் டேபிள் பிரகாரம் கணிதப்பாடம்.  நீங்கள் ஏன் இங்கு பாடம்   நடத்துகிறீர்கள்  என்று  கேட்டார். எனக்குத்  தூக்கிவாரிப் போட்டது. இது கணித வகுப்பு எனவே கணிதம் நடத்துகிறேன் என்று சொன்னேன். அப்படியானால் நீங்கள் கணித ஆசிரியரா என்று அதிகாரி கேட்டார் . நான் ஆமாம்  என்றேன் . அவர் ஆச்சரியப்பட்டுவிட்டு சொன்னார்  அன்று நீங்கள் மேடையில் பேசியதைப் பார்த்துவிட்டு நீங்கள் ஒரு தமிழ் ஆசிரியர் என்று தவறாக நினைத்துவிட்டேன். பொதுவாக கணிதம் பயிற்றுவிப்பவர்கள் இவ்வளவு நல்ல தமிழில் சொற்பொழிவு ஆற்ற மாட்டார்கள் என்று கூறினார்.

ஒரு மாவட்டத்தின் தலைமைக் கல்வி அதிகாரியே இவர் தமிழாசிரியர் என்று நினைக்கும் அளவுக்கு ஹாஜா முகைதீன் சார் அவர்கள்  பெற்றிருந்த  தமிழ்வளம் அன்றைய மாணவர்களுக்கு எவ்வாறெல்லாம் உதவியது என்று சொல்லத்தேவை இல்லை. அடுத்து ஒரு சம்பவம் அதையும் ஹாஜா முகைதீன் சார் அவர்களின் வாயாலேயே சொல்லக் கேட்போம்.

“ ஒரு  தேர்தல் நாள். மதுக்கூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தேர்தல் பணிக்காக அனுப்பப் பட்டு இருந்தேன்.  அங்கு அனுப்பப்பட்ட மற்ற தேர்தல் அலுவலர்களுக்கும் என்னைத்தான்   PRESIDING OFFICER என்று சொல்லப்படும்  அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் தலைமை தேர்தல் அதிகாரி .

எனக்குக் கீழே பணியாற்ற அனுப்பப்பட்ட சில அதிகாரிகளில்   பட்டுக்கோட்டை அரசு உயர் நிலைப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியரும்  ஒருவர்.  நானும்  அவரும் இதற்கு முன் பலமுறை பட்டுக்கோட்டையில்  மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போதேல்லாம்  சந்தித்து இருக்கிறோம். தேர்தல் அன்று நான் குறிப்பிடும் பட்டுக்கோட்டை உடற்பயிற்சி ஆசிரியர் , வாக்குச்சாவடியில் இணைந்து பணியாற்ற வந்திருந்த மற்ற அலுவலர்களிடம்  அரசாங்கத்தையும், நிர்வாகத்தையும் திரும்பத் திரும்பக்  குறை கூறிக்கொண்டு இருந்தார். அரசு அலுவலர்களுக்கான தேர்தல் பணி ஒதுக்கீடு சரியில்லை என்றும், யாரைத் தலைவராகப் போடவேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரியவில்லை என்றும் முனங்கிக்கொண்டு இருந்தார்.  நான் அவரை அழைத்து அவரது பிரச்னை என்ன என்று கேட்டேன்.  பின்னே என்ன சார் நீங்களும் பி. இ.டி . நானும் பி.இ.டி ; உங்களைவிட நான் சீனியர். இந்த வாக்குச்சாவடிக்கு உங்களைத்  தலைமையாகப் போட்டு இருககிறார்கள்  நான்  சீனியராக இருந்தும்  உங்களின் கீழ் வேலை  பார்க்க வேண்டி இருக்கிறது  அதனால்தான் எனக்கு ஒரு சங்கடம்.  நீங்கள் தப்பாக நினைக்காதீர்கள் இந்த அரசாங்கம் இப்படி செய்கிறது  என்று கூறினார்.

நான் உடற் பயிற்சி ஆசிரியர் என்று உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்டேன்.

பின்னே இல்லாமலா எல்லா  விளையாட்டுப் போட்டிகளுக்கும் உங்கள் மாணவர்களோடு வந்து அவர்களை ஊக்கப்படுத்துகிறீர்கள்? ஒத்துழைக்கிரீர்கள்? போட்டி அணிகளின் பட்டியல்களை  சரி பார்க்கிறீர்கள். ? என்று கேட்டார். 

"ஐயா ! நான் ஒரு பி.டி. தலைமை ஆசிரியர் எனது மாணவர்கள் பங்கேற்கும் எல்லாப் போட்டிகளிலும் அவர்கள் உடன் சென்று உற்சாகப்படுத்துவது எனது  வாடிக்கை. இதை வைத்து என்னை உடற் பயிற்சி ஆசிரியர் என்று நினைக்காதீர்கள் என்று கூறினேன். "

இப்படித்  தனது தொடர்புடைய பாடங்களை நடத்தி மாணவர்களை வெற்றி பெறச்செய்வது மட்டுமல்லாமல் மாணவர்களோடு அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் ஈடுபாடு   காட்டும் ஆசிரியர்கள் கிடைப்பது பெரும் பாக்கியம்.  இதனால் அண்மையில் நாம் காணும் வகுப்பறை வன்முறைகள்  குறைய வாய்ப்புண்டாகும்.

n (n +1)
2

அது சரி , மேலே காணும் இந்த பார்முலா எதற்கானது? இதன் பயன் என்ன? இந்த கணித சூத்திரத்தைப் பற்றி ஹாஜா முகைதீன் சார் என்ன சொல்கிறார்  என்பதையும் , தமிழ்ப் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் , தனக்கு ஆங்கிலப் புலமையும் உண்டு என்று நம்மை உணரவைத்த  அழகிய ஆங்கில அடுக்குமொழிச் சொற்களையும் அவை சார்ந்த அறிவுரைகளையும் (ஆங்கிலம் பைத்தியக்காரர்களின் மொழி என்று எழுதியதற்கு பரிகாரம் தேட வேண்டாமா?)  அறியக்   காத்திருப்போம்.? இப்போது இடைவேளை மணி அடிப்போம்.

இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்.  
இபுராஹீம் அன்சாரி

24 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

Haji SKMH சார் அவர்களை ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் என தவறாக நினைத்த சம்பவம் பற்றி என்னிடமும் சொல்லியிருக்கிறார்கள். சார் எப்போதும் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குபவர்.

எனக்கு "கார்னர்ஷாட்" [ கால்பந்தாட்டத்தில்] சொல்லிக்கொடுத்ததே Haji SKMH சார் அவர்கள்தான்.

sabeer.abushahruk said...

காக்கா,

ஹாஜாமீன் ஸார்ட்டே கணக்கு படிச்ச பசங்க புழங்குகிற தளத்தில் "என் இன்ட்டு என் ப்ளஸ் ஒன் பை ட்டூ" போன்ற இலகுவான கேள்விகள்லாம் கேட்கலாமா?

(ஒன்றிலிருந்து எத்தனையாவதும் எண் வரைக்குமான எண்களின் கூட்டுத்தொகைக்கான ஃபார்முலா அது)

உண்டியலில் காசு சேர்க்கும் முறை சொல்லி எங்களுக்கு இந்த சூத்திரத்தை மனதில் பதிய வைத்த மேதை எங்கள் எஸ் கே எம் ஸார்.

Iqbal M. Salih said...

//ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டாய் – உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.//

பாங்கு சப்தம்தானே?

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை நான் படித்ததில்லை.

இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது!

sabeer.abushahruk said...

காக்கா,கவிக்கோவின் சிறப்பான கவிதைப் பகிர்விற்கும் கலையான உரையாடலை சுவை குறையாமல் சொல்லி வரும் தங்களுக்கும் நன்றி.

(காணொளி ஆக்கியிருந்தால் "ஸி" சென்ட்டர்களிலும் வெற்றிநடை போட்டிருக்கும் இப்பதிவு.)

Yasir said...

மலைக்க வைக்கின்றது உங்கள் அனைவரின் “ ஞாபகத்திறமைகள்”...உரையாடல்களை தொகுத்தளிப்பது என்பது மலையைகுடைந்து பாதை அமைக்கும் சிரமத்திற்க்கு சமம்...அதனை தொய்வில்லாமலும் ,ரசனையுடனும் தரும் அன்சாரி மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

மதிப்பிற்குரிய ஆசான் ஹாஜா முகைதீன் சார் அவர்களின் முயற்ச்சியாலும்,பயிற்ச்சியாலும் என் குரல் 1992-ம் வருடம் அகில இந்திய வானொலியில் “காந்தி ஜெயந்தி” அன்று ஒலித்தது,அதற்க்கு முன்னர் வானொலி வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்து சிறப்பும்,பணமுடிப்பும் பெற்றுத்தந்தார்கள்...இன்னும் பல நிகழ்ச்சிகள்..நினைவுகள் மலருகின்றன

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

நமது காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு (வணிகவியல்) வரை படித்த நானே மதிப்பிற்குரிய ஹாஜா முகைதீன் சார் அவர்கள் எந்த ஒரு விழாவிலும் "அலகில்லா அருளும் அளவில்லா அன்பும்" என்று துவங்கும் இறையைப்புகழும் அந்த அழகிய தமிழ்ப்பாடலை உச்சரித்து துவங்குவதை வைத்து இவர்கள் ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் பல நாட்கள் என்றிருக்கும் பொழுது அவர்களை வெளியூர்க்காரர்கள் தப்பாக எண்ணியதில் தவறேதுமில்லை என்றே சொல்வேன்.

இப்பொழுதுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோரிடம் அந்த 'மல்டி பர்சனாலிட்டி' இல்லாமல் அது பல்டி அடித்து முதலுக்கே மோசம் என்ற நிலையில் இருந்து வருவதை ஆங்காங்கே நாம் கண்டு வருகிறோம்.

Shameed said...

ஒரு முறை ஜனாப் ஹாஜா முஹைதீன் சார் கணக்கு பாடம் நடத்த கிளாஸ் உள்ளே வந்ததும் கேட்டார்கள் கூட்டு வட்டி என்றால் என்ன என்று நான் உடனே வட்டிக்கு வட்டி வாங்குவது கூட்டு வட்டி என்றேன் சார் ஒருகணம் திகைத்து நின்றுவிட்டார்கள் (காரணம் அவர்கள் இதற்க்கு முன்பு கேட்ட கேள்விக்கெல்லாம் நான் பதில் சொன்னதே கிடையாது) அதன் பிறகு சொன்னார்கள் இனி இந்த வருடம் முழுக்க நீ எந்த கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று சிரித்துக்கொண்டே சொன்னார்கள் (1981 ண்ணில் நான் ஜனாப் ஹாஜ முஹைதீன் சார் காலம் சென்ற தாஜுதீன் சார் மற்றும் ஹனிபா சார் ஆகியோர் மலேசியாவில் ஒன்றாக சுற்றி பார்க்கும் வாய்ப்பும் அவர்கள் கூட தங்கும் வாய்ப்பும் கிடடைத்தது அது என் வாழ்கையில் மறக்க முடியாத இனிய நினைவுகள்.


Ebrahim Ansari said...

கவிஞர் சபீர் அவர்கள் சொன்னது

//ஹாஜாமீன் ஸார்ட்டே கணக்கு படிச்ச பசங்க புழங்குகிற தளத்தில் "என் இன்ட்டு என் ப்ளஸ் ஒன் பை ட்டூ" போன்ற இலகுவான கேள்விகள்லாம் கேட்கலாமா?//

ஒ ! அப்படியா? என்னைப் போல் கணக்கில் வீக் ஆனவர்களும் இருக்கலாம் என்று எண்ணிவிட்டேன்.அத்துடன் பேசப்பட்ட செய்திகளைத் தருவதே நோக்கம். விடையை நீங்கள் சொல்லி இருப்பதால் அதுவே போதுமென்று கருதி அதன் விளக்கம் தொடர் நான்கில் இல்லாமல் எடுத்து ( EDITத்து ) விடுகிறேன்.

Ebrahim Ansari said...

தம்பி இக்பால் அவர்கள் சொன்னது.

//கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை நான் படித்ததில்லை.

இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது!//

தம்பி ! நேரம் கிடைத்தால் படியுங்கள். கீழே உள்ள வரிகளும் உங்களுக்குப் பிடிக்கும். இந்த வரிகள் தாயிப் நகரத்தில் எம்பெருமானார் நபிகள் ( ஸல்) அவர்கள் மீது எறியப்பட்ட கற்களைப் பற்றி கவிக்கோ எழுதிய வரிகள்.


(சிலை வணக்கம்.)

" கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள் !"

Ebrahim Ansari said...

மருமகனார் யாசீர், ஷாகுல் !

நீங்கள் இருவரும் குறிப்பிட்ட வானொலி நிகழ்ச்சி, மலேசிய பயணம் ஆகியன பற்றி ஹா. மு. சார் அவர்கள் சொன்னார்கள். வரப்போகும் தொடர்களில் அவையும் இடம் பெறும். இன்ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி எம். எஸ். எம். நெய்னா அவர்கள் சொன்னது

//இப்பொழுதுள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோரிடம் அந்த 'மல்டி பர்சனாலிட்டி' இல்லாமல் அது பல்டி அடித்து முதலுக்கே மோசம் என்ற நிலையில் இருந்து வருவதை ஆங்காங்கே நாம் கண்டு வருகிறோம்.//

இப்பொழுது உள்ள ஆசிரியர்கள் பெரும்பாலோரிடம் மல்டி பர்சனாலிட்டி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களிடம் மல்டி பிசினஸ் இருக்கின்றன.
பல ஆசிரியர்கள் வட்டித் தொழில் செய்கிறார்கள்.
பல ஆசிரியர்கள் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் சீட்டுப் பிடித்து ஏலச்சீட்டு நடத்துகிறார்கள்.
பல ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.
பல ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு ஆள் பிடித்துவிட்டு கமிஷன் வாங்குகிறார்கள்.
பல ஆசிரியர்கள் கல்லூரிகளில் நன்கொடை கொடுத்து சீட் வாங்கிக் கொடுத்து உள் கமிஷன் வைத்து சம்பாதிக்கிரர்கள்.

கேட்டால் நாங்கள் இலஞ்சம் கொடுத்து வேலை வாங்க வேண்டி இருந்தது. அந்தக் கடனை அடைக்க தனியாக ஏதாவது தொழில் செய்ய வேண்டி இருக்கிறது என்கிறார்கள்.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி ஜாகிர்! அவர்கள் குறிப்பிடுவது.

//எனக்கு "கார்னர்ஷாட்" [ கால்பந்தாட்டத்தில்] சொல்லிக்கொடுத்ததே Haji SKMH சார் அவர்கள்தான்.//

அப்போ இந்த இந்த கமெண்ட்ஸ் ஷாட் அடிப்பது எப்படி என்று யார் சொல்லிக்கொடுத்தார்கள் என்றும் தெரிவித்தால் நாங்கள் எல்லோருமே அவரை ஆயுட்கால கோச் ஆக நியமிப்போம்.

அலாவுதீன்.S. said...

நல்ல கல்வியாளர்களின் சபையில், நான் நேரடியாக கலந்து கொண்ட உணர்வைத் தருகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

"ஆன் யுவர் மார்ச் - செட் - கோ"

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ஆன் யுவர் மார்ச் - செட்டா?" வ்ளோவ் நாளா சேட்டுண்டுலெ நென‌ச்சிக்கிட்டு இருந்தேன்....அது ச‌ரி.....

ப‌ள்ளிக்கொடத்துக்கு வெளியிலெ நிக்கிற‌ ஐஸ் வ‌ண்டி பொட்டியின் ம‌ர‌த்துலெ செஞ்ச‌ கைப்புடி உள்ள ரெண்டு மூடியை "டப்"புண்டு யாரோ அடிச்ச‌ மாதிரி ச‌த்த‌ம் கேக்குதுங்க‌....

அப்புற‌ம் மேக‌லா டீச்ச‌ரின் "அர‌ங்கின் வட‌க்குப்ப‌குதியில் மேன்மேலோருக்கான‌ 400 மீட்ட‌ர் அஞ்ச‌ல் ஓட்ட‌ப்போட்டியில் க‌ல‌ந்து கொள்ளும் மாண‌வ‌ர்க‌ள் கோட்டிற்குள் அவ‌ர‌வ‌ர் இட‌ங்க‌ளில் தயாராக நிற்குமாறு கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்" என்ற‌ ஒலி பெருக்கி ச‌த்த‌மும் சைல‌ண்ட்டாய் கேட்கிற‌து போல் இருக்கிற‌து.........

அட‌ யாங்க‌ங்க‌ ப‌ழ‌சை நென‌க்க‌ வ‌ச்சி இப்புடி பாடுப‌டுத்துரியெ......

ZAKIR HUSSAIN said...

To Bro Ebrahim Ansari,

முன்பு நான் , சபீர் எல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கால்பந்தாட்டத்திடலில் அதிக நேரம் பந்து விளையாடிக்கொண்டிருப்போம். சமயங்களில் Haji SKMH சார் வந்து சொல்லித்தரும் டெக்னிக் எங்களுக்கு புதுமையாகவே இருக்கும். இப்போது உள்ள டி.வி மற்றும் சர்வதேச நிலையில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டுகளை பார்க்க முடியாத காலத்தில் சார் சொல்லிக்கொடுத்ததுதான் ஆச்சர்யம். [ சரி இக்பால் எம்.சாலிஹ் என்னோடுதானே படித்தான்??..நாங்கள் விளையாடும் திடலை திரும்பிகூட பார்க்க மாட்டான் ]

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
To Bro Ebrahim Ansari,

முன்பு நான் , சபீர் எல்லாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது கால்பந்தாட்டத்திடலில் அதிக நேரம் பந்து விளையாடிக்கொண்டிருப்போம். சமயங்களில் Haji SKMH சார் வந்து சொல்லித்தரும் டெக்னிக் எங்களுக்கு புதுமையாகவே இருக்கும். இப்போது உள்ள டி.வி மற்றும் சர்வதேச நிலையில் விளையாடப்படும் கால்பந்து விளையாட்டுகளை பார்க்க முடியாத காலத்தில் சார் சொல்லிக்கொடுத்ததுதான் ஆச்சர்யம். [ சரி இக்பால் எம்.சாலிஹ் என்னோடுதானே படித்தான்??..நாங்கள் விளையாடும் திடலை திரும்பிகூட பார்க்க மாட்டான் ]
------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.இக்பால் காக்காவுக்கு புட்பால் என்றால் பிடிக்காதோ?இது எங்கோ உதைக்கிறதே!

crown said...

Iqbal M. Salih சொன்னது…
//ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டாய் – உன்
அசலைச் சந்தையிலே விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்.//

பாங்கு சப்தம்தானே?

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களை நான் படித்ததில்லை.

இந்த வரிகள் மிகவும் பிடித்திருக்கிறது!
-------------------------------------------------------
கவிக்கோவின் எழுத்து 'பாங்கு'அப்படி சிலேடையின் ஓடையின் தாய் அவர்( நதி)!

Meerashah Rafia said...

சகோ. இபுராஹீம் அன்சாரி அவர்களின் ஞாபக சக்தி மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது..

இப்னு அப்துல் ரஜாக் said...

கணக்கு எனக்கு ஆமணக்கு என்றார் பாரதி ஆனால் நம் ஹாஹா முகைதீன் சார் தமிழ் விளையாட்டு கணிதம் எல்லாவற்றிலும் கலக்குவது அருமை.இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் நாடக அனுபவம் பிரம்மிக்க வைக்கிறது

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வியாளர்களின் கலந்துரையாடலும் அதைத்தொடர்ந்து நம்மவர்களின் கருத்தாடலும் ரொம்ப சுவராஸ்யம்.

RAFIA said...

அய்யோ.. பாவம்...வாய் பேசத்தெரியாத.......என்று என்னை (கலை)உலகுக்கு அறிமுகம் செய்தார்கள் ஹாஜமிசாச்சா .......இன்று வரை நம் வண்டி நன்றாக ஓடிக்கொன்டிருக்கிரது.அல்ஹம்துலில்லாஹ்!
அதே மேடையிலே "அதிரையின் பாலச் சந்தர்"என்றும்
தமிழக பெர்னாட்ஷா என்றும் துணை வேந்தரால் பாராட்டப்பெற்றவர்கள்.

சகோ. நூர் முஹம்மத்,ஷெய்க் தம்பி,ஹுசேன்,அனச்,.....பரினமித்து மிலிரிய ணாண்பர்களே நினைவுக்ளை மலரவிடுங்கள்.

KALAM SHAICK ABDUL KADER said...

//சகோ. நூர் முஹம்மத்,ஷெய்க் தம்பி,ஹுசேன்,அனச்,.....பரினமித்து மிலிரிய ணாண்பர்களே நினைவுக்ளை மலரவிடுங்கள்.//

அந்த “எழுத்தாளர் ஏகாம்பரம்” என்ற நாடகத்தில் அரசு வக்கீலாக அடியேனை நடிக்க வைத்தார்கள்,”இதோ குற்றவாளிக் கூண்டில் இருக்கும்...” என்று துவங்கும் அவ்வசனம் இன்றும் நினைவில் ஓடும் வண்ணம் எங்களைக் கலையார்வம் மிக்கவர்களாகவும், கல்வியாளர்களாகவும் மாற்றிய மரியாதைக்குரிய ஆசான் அவர்களை என்றும் மறக்க மாட்டோம்.

Iqbal M. Salih said...

அப்போது நான் ஆறாம் வகுப்பு சின்னப்பையன்.

எனினும் எழுத்தர் ஏகாம்பரம் கதாபாத்திரம் இன்னும் என் மனதில் நிற்கின்றது. உணர்ச்சிகரமான நடிப்பு. அது நீங்களேதானா?

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு