Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும்...! 29

அதிரைநிருபர் பதிப்பகம் | November 08, 2012 | ,

தொடர் - 9

சுவைமிக்க உணவும் நகைமிக்க நிகழ்வும்:

சஹாபி என்றாலே பொருள் நபித்தோழர்தாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லுரைகளாலும் தோழர்களுடன் நடந்துகொண்ட பெரும் கனிவினாலும் அவர்கள் நபித் தோழமையில் பேருவகை கொண்டிருந்தனர். நபி தந்த அருள் மறையை தினமும் வாசித்தார்கள். அறியாமை இருளில் ஏகத்துவச் சுடரை ஏற்றிவைத்த ஏந்தல் நபியை உயிருக்கும் மேலாய் நேசித்தார்கள். எந்த அளவுக்கு என்றால், யுத்த களத்தில் உயிர் பிரியும் தருவாயில் கூட, இந்தத் தரணியில் மானிடர் நலமுடன் வாழ, வழி வகுத்துத் தந்த தங்கள் தலைவரின் காலில் ஒரு முள் தைப்பதைக்கூடப் பொறுக்க மாட்டாத அளவுக்கு அவர்கள் பெருமான் நபி (ஸல்) மீது பேரன்பு கொண்டார்கள்.

நபித்தோழர்களுள் உங்களுக்கு உத்மான்(ரலி) பற்றித் தெரிந்திருக்கலாம்; சல்மான்(ரலி) பற்றித் தெரிந்திருக்கலாம். ஆனால், அந்-நுஐய்மான்(ரலி) பற்றிக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? நகைச்சுவைக்கு உயிர் வந்து நடமாடினால், அதன் பெயர் அந்-நுஐய்மான் என்றுதான் இருக்கும்.

இரண்டாவது அகபா உடன்படிக்கையில் வள்ளல் நபியிடம் வாக்குறுதி வழங்கிய முக்கியமான தோழர்களில் நமது அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி)யும் ஒருவர்.

மட்டுமல்லாமல், அல்லாஹ் அந்த முஃமின்களைப் பொருந்திக்கொண்டான் (*) என்றும் அதிலும் பத்ரு யுத்தத்தில் பங்கு கொண்ட நபித்தோழர்களின் பாவங்களை முன்கூட்டியே மன்னித்து விட்டான் என்றும் அல்லாஹ்வின் தூதரால் நன்மாராயம் சொல்லப்படும் அருட்பேறு பெற்றவருள் ஒருவருமாவார் அருமைத் தோழர் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு(ரலி) அவர்கள்.

ஆள்தான் கொஞ்சம் வெகுளித்தனமானவர். மற்றபடி, 'நகைச்சுவை நகரின் நுழைவாயில் அந்-நுஐய்மான்' அவர்கள்தான்!

அந்-நுஐய்மான்(ரலி), புனித மதீனா நகரில் அண்ணல் நபியின் தாய் மாமன்களான கஸ்ரஜ்களின் பனூ நஜ்ஜார் குலத்தைச் சார்ந்தவர். அதுமட்டுமின்றி, குறைஷி நபித்தோழர்களில் பெரும் செல்வந்தரும் திறமை மிக்கத் தொழிலதிபருமான நபித்தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) உடைய சகோதரியைத்தான் மணம் செய்திருந்தார்! இதனாலேயே, எல்லோருக்கும் ஒரு செல்லப்பிள்ளை போலவே தோழர்கள் சமூகத்தை உரிமையுடன் அவர் வலம் வந்து கொண்டிருந்தார். ஒரு கூட்டத்தில் கலகலப்பும் உற்சாகமான சப்தமும் கொடி கட்டிப் பறக்கிறது  என்றால், அங்கு நம் அட்டகாசமான நகைச்சுவையாளர் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) உடைய தலையைப் பிரதானமாகக் காணலாம். அந்த அளவுக்கு நகைச்சுவை என்பது அவர் உதிரத்தில் கலந்து ஓடிக்கொண்டிருந்தது!

சன்மார்க்கம் உயர்ந்தோங்குவதற்காக பெரும் சஞ்சலங்களைத் தாங்கி நின்ற சத்தியத்தூதர் அவர்களுக்கும் வான்மறைப் பாதையில், வள்ளல் நபியின் போதனையில் இந்த இனிய இஸ்லாத்தின் புகழ் பரப்பும் பணியில் எண்ணில்லா இடர்களைச் சுமந்த அருமை நபித்தோழர்களுக்கும் சோர்வு தொற்றும் போதெல்லாம் குதூகலமான நம் அந்-நுஐய்மான் இப்னு அம்ரு (ரலி) உடைய சேட்டைகள் எல்லாம், சொல்லி சொல்லிச் சிரிக்கும் நல்ல கதைகளாயின!

நபித்தோழர்கள் எல்லாம் நபியை நேசிப்பதில் சற்றும் குறைந்தவர்களில்லை எனினும் அவர்களின் குணாதிசயங்களிலும் பழக்க வழக்கங்களிலும் பலதரமான படித்தரங்களைக் கொண்டிருந்தார்கள். அந்த அனைவரிலும் நகைச்சுவை நாயகர் யார் என்றால் நம்  அந்-நுஐய்மான் இப்னு அம்ர் (ரலி) அவர்கள்தாம்!

சித்திரை முழுநிலவாம் முத்திரை நபிக்கு, நுஐமானின் குதூகலமான குறும்புகளால் சமயத்தில் சில சங்கடங்கள் வந்து சேர்ந்தாலும் கண்ணியத்தின் இருப்பிடமாம் கண்மணி நபியவர்கள் அதையெல்லாம் பெருந்தன்மையுடன் பெரிதாகக் கண்டுகொண்டதுமில்லை! அதுபற்றி ஒரு புன்முறுவல் மட்டுமே நம் பொன்மனச் செம்மல் பூமான் நபி (ஸல்)யின் பதிலாய் இருந்தது.

நமது சஹாபி அந்-நுஐய்மான் இப்னு அம்ர் (ரலி) இயல்பாகவே உணவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். மொத்தத்தில் பசி பொறுக்க மாட்டார்; மற்றவர் பட்டினி இருக்கவும் விடமாட்டார். அப்படிப்பட்ட உயர் கொள்கை அவர் கொள்கை!

அவர் செய்யும் கேலிக்கூத்துகளும் பெரும்பாலும் உணவைச் சுற்றியே இருக்கும்.

அன்று மதீனாவில் சந்தை நாள்!

பலவிதமான அங்காடிகள் கடைத்தெருவை அலங்கரித்திருந்தன. மக்கள் கூட்டம் பொருட்கள் வாங்குவதில் மும்முரமாகவும், வியாபாரிகள் விற்பனை செய்வதில் பரபரப்பாகவும் இயங்கிக்கொண்டு இருந்தார்கள்.

அந்-நுஐய்மான் கண்கள் மட்டும் உணவகத்தையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தன!

ஆஹா! எத்தனை வகை வகையான அறுசுவை உணவுகள்! பலவகை மணங்களில்! பலவகை நிறங்களில்! பார்க்கும்போதே உமிழ் நீரை ஊற வைத்தன!

தாயைச் சற்று நேரம் பிரிந்து விளையாடச் சென்றுவிட்ட சிறுவனுக்கு திடீரென்று அம்மாவின் நினைவு வந்ததைப்போல அன்பே வடிவாம் அண்ணல் நபியின் நினைவு அந்-நுஐய்மானுக்கு வந்து விட்டது. கூடவே, பளிச்சென ஒரு பொறி தட்டியது!

உணவக உரிமையாளரை அழைத்தார். இருந்ததிலேயே உயர்ந்தவகை உணவுகளை ஒரு குடும்பத்தினர் உண்ணும் அளவுக்கு உடனே கட்டித் தருமாறு கட்டளையிட்டார்.

தாமதிக்கவில்லை! ஓர் ஆளைக் கூப்பிட்டு, "இந்த உணவு மரவையைக் கொண்டுபோய் அல்லாஹ்வின் தூதரிடம் கொடு!

'அந்-நுஐய்மானின் அன்பளிப்பு' என்று மறக்காமல் சொல்லி வை" என்று அனுப்பி வைத்தார்!

உலகமக்கள் யாவருக்கும் உரிமையான உத்தம நபியும் உணவை நன்றியுடன் பெற்று, குடும்பத்தினருடன் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தார்கள். சிறந்த உணவு இதுவென அல்லாஹ்வைப் புகழ்ந்து, உணவு அனுப்பிய அந்-நுஐய்மானுக்காக துஆச் செய்தார்கள்!

சற்று நேரம் கழித்துக் கடைக்கார முதலாளி வந்தான். "அந்-நுஐய்மான், காசு கொடு" என்றான்.

"சாப்பாட்டுக்கு காசுதானே! அது வந்து........ நீ அல்லாஹ்வின் தூதரிடம் போய்ப் பெற்றுக்கொள். அந்த உணவே ரசூலுல்லாஹ்வுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்தான் தெரியுமா உனக்கு?" என்று அதட்டலாக அவனை அனுப்பி வைத்தார்!

கடைக்காரனும் காத்தமுன் நபி (ஸல்) யிடம் போய் காசு கேட்கவே, துணுக்குற்ற நபி (ஸல்) அவர்கள் அந்-நுஐய்மானை வரவழைத்தார்கள்.

"உணவு அனுப்பியது நீதானே, அந்-நுஐய்மான்?"

"ஆமாம் நாயகமே!"

"அதை உன் அன்பளிப்பு என்றுதானே அனுப்பினாய்?"

"நிச்சயமாக, அது 'என் அன்பான அளிப்புதான்' அல்லாஹ்வின் தூதரே!"

அதாவது என்னவென்றால்,

"இறைவனின் தூதுவரே, எங்கள் இதயங்களை ஆள்பவரே! அந்த உணவு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றுதான்! அதை நீங்கள் உண்டு மகிழ வேண்டும் என்றுதான் ஏற்பாடு செய்தேன்!

அதை என் பரிசு என்றும் அனுப்பி வைத்தேன். ஆனால், கடைக்காரனுக்குக் கொடுக்க என் சட்டைப்பையில் ஒரு பைசா கூட இல்லையே, யா ரசூலல்லாஹ்!" என்றார் அப்பாவியாக!

அவ்வளவுதான்!

ஆயிரம் நிலவின் ஒளியும் அண்ணல் நபியின் முகத்தில் சிரிப்பாய்ச் சிதறி மின்னலாய் அது வண்ணமடித்தது! கூடிநின்ற குடும்பத்தினரும் குதூகலச் சிரிப்பை அண்ணலுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர்!

சுற்றி நின்ற தோழர்களுக்கும் சிரிப்பு தொற்றிக்கொண்டது! அத்துடன் அனைவரையும் பற்றிக்கொண்டது!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என, அன்புமுகம் கொண்ட அல் அமீன் நபிக்கு வயிறார உணவையும் மனமார சிரிப்பையும் அளித்துவிட்டு நைஸாக நழுவி நடையைக் கட்டினார் அந்-நுஐய்மான்(ரலி) .

கடைசியில், கடைக்காரனுக்குக் காமிலான மாமணி (ஸல்) தான் காசு கொடுத்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?
***
அடுத்த வாரமும் அசத்த வருவார் அந்-நுஐய்மான்(ரலி)

(*) அல்-குர்ஆன் (9:100)
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M.ஸாலிஹ்

29 Responses So Far:

Ebrahim Ansari said...

எளிமை! இனிமை! இன்பம்! எப்போது வரும் இந்தக் கட்டுரை என்று ஏக்கம்.

இப்னு அப்துல் ரஜாக் said...

சுப்ஹானல்லாஹ் அருமை தலைவர் கண்மணி நாயகம் ஸல் அவர்களின் வாழ்கையின் சுவடுகளை நல்ல வருனனையுடன் காணும் போது கண்கள் அந்த மாமனிதரை தேடுது

Unknown said...

மாஷா அல்லாஹ், உத்தம திருநபியின் உயர்ந்த பண்புகளை பதிப்புகளாய் , வார்த்தைகளின் வர்ணிப்பகவும் எளிமையான நடையில் அமைந்துள்ளது , எழுத்துகளை கண்முன்னே காட்சிபடுத்தும் அருமையான கட்டுரை, எல்லாம் வல்ல ரஹ்மான் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்கியத்தையும் தந்தருள்வானாக... இதுபோல் பல பதிப்புகள் படைத்திட இறைவன் அருள் புரியட்டும்

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

மாஷா அல்லாஹ், ஒவ்வொரு பதிவிலும் நிறைய படிப்பினைகள்.

நம் உயிருனும் மேலான நபியவர்களை ஒவ்வொரு பத்தியிலும் உங்களின் எழுத்துகளால் வர்ணிப்பது அப்படியே வசீகரிக்கின்றன - அல்ஹம்துலில்லாஹ் !

sabeer.abushahruk said...

வியாழன் வந்தால் - என்
தோழன் வருவான்
வெள்ளி விடிவதற்குள் - நல்லதைச்
சொல்லித் தருவான்

பொன்னகைத் தோற்கும்
புன்னகை நபியின்
நன்னகைச் செய்திகள்
நாம்நகைக்கச் சொல்வான்

நபித்தோழர் கையில்
நயாபைசா இல்லை 
நகைச்சுவையாளருக்கோ
நாயகத்தின் மீது
தாயையொத்தப் பாசம்

அவர்
அனுப்பியது உணவல்ல
கலங்கமற்ற அன்பென
கண்டுகொண்ட கண்மணி
காசு கொடுக்காததற்கு
கோபமுற
அற்ப மனிதரல்ல
அவர்கள்
அல்லாஹ்வின் தூதரன்றோ

அதனாற்றான்
அறுசுவை உணவுண்டு
நகைச்சுவை உணர்வுற்றார்கள்.

sabeer.abushahruk said...

இக்பால்,

நீ கட்டுரை எழுதுவதாகச் சொல்லிக்கொண்டு காப்பியம் படைக்க முயல்கிறாய்.  

ஒரு தரமான கவிதையின் வரிகளை எடுத்து உன் ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் தலைப்பென வைக்கிறாய். 

PhD தரத்திற்கு ஆதாரங்களை ஆராய்ந்து ஒரு thesis தயாரிக்கிறாய். 

தமிழ் அறிஞர்க "யாரிது எழுதுவது" என்றும் தேடும் அளவிற்கு சங்கத்தமிழ் ரசம் சொட்டுகிற மொழியால் ஒரு பாடமே நடத்துகிறாய்!

நல்லாருடா நண்பா.

Iqbal M. Salih said...

மொழி அது
நடந்தால் அது நடை.

அது உரை நடை!

நான் நடப்பவன்.

அதுவே, நாட்டியமாடினால்
கவிதை!

நீ நாட்டியக்காரன்!

தளபதியும் பலசமயம்
மொழியால் பரதமாடுவார்!

sabeer.abushahruk said...

டேய்
உரைநடைக்காரா
உன் நடையோடு
ஒரு கூட்டமே நடப்பதன்
காரியமென்ன - உன்
உரைநடையின்
வீரியமென்னே!

உரைநடைக்காரனுக்கு
ஆங்காங்கே
நாட்டியங்களோடு
உரசல்கள் ஏனோ?

இது
எதேச்சையா - இல்லை
இரண்டுலும் நீ
சுதேட்சையா?

sabeer.abushahruk said...

சுதேட்சையை
சுயேட்சையா என்று திருத்தி வாசி.

crown said...

Iqbal M. Salih சொன்னது…

மொழி அது
நடந்தால் அது நடை.

அது உரை நடை!

நான் நடப்பவன்.

அதுவே, நாட்டியமாடினால்
கவிதை!

நீ நாட்டியக்காரன்!

தளபதியும் பலசமயம்
மொழியால் பரதமாடுவார்!
---------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.தல'பதியும் வொவ்வொன்றும் மனத்தோட்டத்தில் போடும் பதியம்!தளபதியும் சளைத்தவர் அல்லர்.இவர் பதியும் ஓவ்வொரு பதிப்பும் ஏற்றிவிடும் படிக்கட்டு!துள்ளிக்கிட்டு வரும் ஜல்லிக்கட்டு!எல்லாருக்கும் விழிப்புனர்வு எனும் கொம்பை சீவிக்கிட்டே இருப்பார்.இருவரும்,ஒருவரே!இவர்கள் இருவரும் இந்த தளத்தின் அதிபதிகளில் ஒருவர்.இதில் அதிகம் பதிந்தவரும் அன்பில் ஆதிக்கம் செலுத்துபவரும்(ஷா)மன்னர் தான்.

Shameed said...

நபிமணியும் நகைச்சுவையும் தலைப்பிற்கு ஏற்றாற்போல் நல்ல நகைசுவையுடன் போய்கொண்டிருக்கின்றது வாரத்துக்கு இரண்டு வியாழகிழமை வர கூடாத என்ற ஏக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது

Iqbal M. Salih said...

த்வனி, யாப்பு, படிமம், குறியீடு,சந்தம், யதுகை, மோனை என்பதெல்லாம் நீ, கவியன்பன் போன்ற நளினமானவர்கட்கு உரியது. நான் சாமான்யன்! உங்களைப்போலவெல்லாம் ஒரு பிறவிக்கவிஞனல்ல!

நாம் சொல்லவருவதை புரியும்வகையில் மொழியை இயக்கும்போது அது கவிதையாகவும் கட்டுரையாகவும் தன்னை வசீகரிக்கும் வார்த்தைகளைக் கொண்டு தானே அலங்கரித்துக்கொள்கிறது! சரியா?

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். அருமைத்தொடர்! பொறுமல் இல்லாத வாய் அண்ணலாரின் புன் முறுவல் மட்டுமே பூக்கும் நந்தவனம். அன்பின் நுழைவாயில்!இவர் வாயில் வருவதெல்லாம் அன்பின் வெளிப்பாடு!அல்ஹம்துலில்லாஹ்! நல்லதொரு எழுத்து நடை!

sabeer.abushahruk said...

அபு இபு,

கிரவுன் வந்தாச்சு. ஆட்டம் கலைகட்டுது. என்னையமாதிரி, வேலையெல்லாம் அப்டி அப்டியே போட்டுட்டு சீக்கிரம் வாங்க.

"அதிபதி அதிகம் பதி" என்று கிரவுன் ஆரம்பிச்சிட்டார்.

அதிகம் பதிந்தவர்
அதிபதி என்றால்
குறைந்து பதிந்தவர்
குபேரபதியாமா?

நாம ஊரைக்கூட்டி உட்கார்ந்து எழுதி "சொல்லுங்கப்பா"ன்றோம்.

கிரவுனோ, நாலைந்து வார்த்தைகளை வைத்து கடைவிரித்து கல்லாகட்டிட்டுப் போய்ட்றார். கூட்டம் அவருக்கு அலமோதுது. நாம அதிபதியாம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா,

நம்ம(தமிழ்)

மொழி உங்களிடம்
விழி திறக்கும்

அதே!

மொழி கிரவ்னிடம்
செழிப் படையும்..

நீங்க சொன்ன மாதிரி அவன் குறைவா பதிஞ்ச்சுட்டு குரோர் பதியாயிட்டானே !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நபிமணியும் நகைச்சுவையும் பதிவாக வெளிவந்து அங்கே வாசிக்கும்போது கிடைக்கும் பரவசமே தனிதான் !

பதி யும் பார்க்கிறார் என்பதே சிறப்பு !

Yasir said...

வரலாற்றை வாரி வழங்கும் தொடர்..வள்ளல் நபி(ஸல்)யைப்பற்றி எவ்வளவு படித்தாலும் எழுதினாலும் சடைக்காமல் இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் எடுக்கின்றது...தொடருங்கள் காக்கா..நாங்களும் விடாமல் துரத்துவோம்

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
////சித்திரை முழுநிலவாம் முத்திரை நபிக்கு,

ஒரு புன்முறுவல் மட்டுமே நம் பொன்மனச் செம்மல் பூமான் நபி (ஸல்)யின் பதிலாய் இருந்தது.

அன்பே வடிவாம் அண்ணல் நபியின் நினைவு அந்-நுஐய்மானுக்கு வந்து விட்டது. ////

"இறைவனின் தூதுவரே, எங்கள் இதயங்களை ஆள்பவரே!///


உலகத்தின் அருட்கொடை நமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பற்றிய அழகிய உரைநடை, அழகிய எழுத்து நடையில்!. அன்புச் சகோதரர் இக்பாலுக்கு வாழ்த்துக்கள்!

Ebrahim Ansari said...

//கிரவுனோ, நாலைந்து வார்த்தைகளை வைத்து கடைவிரித்து கல்லாகட்டிட்டுப் போய்ட்றார். கூட்டம் அவருக்கு அலமோதுது. நாம அதிபதியாம்.//

என் தலையை முன்னூறு முறை ஆம் என்று ஆட்டி ஒப்புக் கொள்கிறேன்.

crown said...

Ebrahim Ansari சொன்னது…
என் தலையை முன்னூறு முறை ஆம் என்று ஆட்டி ஒப்புக் கொள்கிறேன்.
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். கல்லா, நல்லா கட்ட அல்லாஹ்வின் அருள் தான் காரணம். அந்த அருள் உங்களைப்போல் பெரும் தலைகளின் பெருந்தன்மையே!

Iqbal M. Salih said...

எங்கே நம் தளபதி கவியன்பன்?
இதுவரை ஆளைக் காணோம்!

எழுத்தர் ஏகாம்பரமாய் வந்து
உணர்ச்சிகர நடிப்பில்
நம்மை உருக வைத்தவர் எங்கே?

எங்கே அந்தப் பிறவிக்கலைஞன்?

KALAM SHAICK ABDUL KADER said...

தாயகம் சென்ற பொழுது என் மடிக்கணியை என் பெயரன் ( 3 வயது) அப்துற்றஹ்மான் அன்புடன் தர வேண்டும் என்று வேண்டியதால் கொடுத்து விட்டேன்.”இந்தச் சிறுவயதில் உனக்கு இந்த லேப்டாப் வேணுமா?” என்று என் பெயரனிடம் கேட்டேன். “அப்பா! www.games.com போட்டுப் பார்ப்பேன்; www.rhymes.com போட்டுக் கேட்பேன்” என்று மறுமொழி கொடுத்த என் ஆருயிர் பெயரனின் ஆற்றலை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி கூறி உடன் என் கணிபியை அவனிடம் கொடுத்து விட்டேன். இன்று துபையில் புதிய கணினி வாங்கி விட்டேன்; இடைப்பட்ட இந்த ஒரு வாரக் காலத்தில் நம் அதிரை நிருபருடன் தொடர்பில் இல்லாமற் போனதற்கு இதுவே காரணமாகும்.

KALAM SHAICK ABDUL KADER said...

அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ்,
உரைநடைத் தமிழ் பற்றிய ஒரு நூலை அண்மையில் வாசித்தேன்;அப்பொழுது, உண்மையில் அந்நூலில் குறிப்பிட்டத் தூய நடை- இலக்கணப் பிழையற்ற உரைநடையைக் கொண்டு எழுதுவது என்றால் நம் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களாற்றான் முடியும் என்று என் மனம் சொன்ன விடயத்தை எப்படியும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏங்கினேன்; அதற்குரிய வாய்ப்பு இவ்வாக்கத்தின் பின்னூட்டம் வழியாக ஈண்டு எழுதி விட்டேன்.

மூத்த சகோதரர்கள் / ஆசான்கள் அஹ்மத் காக்கா மற்றும் உங்கள் உடன்பிறப்பு ஜெமீல் ம. ஸாலிஹ் காக்கா ஆகியோரின் தமிழ் மொழி உரைநடைகளை நாம் போற்றிப் புகழ்ந்தாலும், அவர்களை விட வயதில் இளையவரான நீங்கள் பிழையற எழுதும் ஆற்றலும்; அழகு வர்ணணைகளுடன் அமைக்கும் மொழி நடையும் கண்டு , உங்களின் திறன் வியந்துப் பாராட்டுகின்றேன்; மாஷா அல்லாஹ்!.


Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…


//தாயகம் சென்ற பொழுது என் மடிக்கணியை என் பெயரன் ( 3 வயது) அப்துற்றஹ்மான் அன்புடன் தர வேண்டும் என்று வேண்டியதால் கொடுத்து விட்டேன்.”//


தங்கள் பேரன் பெயருக்கும் கவிதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கே

KALAM SHAICK ABDUL KADER said...

\\தங்கள் பேரன் பெயருக்கும் கவிதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கே//

சுட்டும் விழிச்சுடரே! புரியவில்லை; என் பெயரன் பெயர்\; அப்துற்றஹ்மான் (நபிகளார் (ஸல்) அவர்கள் விரும்பிய ஒரு நற்பெயர்) இதில் கவிதைத் தொடர்பு என்னவென்று விளக்கினால் அடியேன் மகிழ்வேன்.

sabeer.abushahruk said...

தமிழில் முதன்முதலாக புதுக்கவிதை என்னும் புரட்சிகரமான கவிதை வடிவத்தைக் கண்டெடுத்ததே கவிக்கோ என்று புகழ்பெற்ற

அப்துர்ரஹ்மான்

அல்லவா கவியன்பன்?

Shameed said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

//சுட்டும் விழிச்சுடரே! புரியவில்லை; என் பெயரன் பெயர்\; அப்துற்றஹ்மான் (நபிகளார் (ஸல்) அவர்கள் விரும்பிய ஒரு நற்பெயர்) இதில் கவிதைத் தொடர்பு என்னவென்று விளக்கினால் அடியேன் மகிழ்வேன்//

இங்கே கவி காக்காவே வந்து விடை சொல்லி விட்டதால் உங்களுக்கு இரட்டை மகிழ்ச்சி தானே

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தரின் அதிவேக விடை கண்டு அதிகம் இன்பத்தில் திளைத்தேன்! உண்மையில், கவிக்கோ அவர்களைத் தான் அடியேன் முன்மாதிரியாக வைத்துக் கொண்டேன்; பலமுறை திரையிசைக்குப் பாடல் எழுத என் முகநூல் நண்பர்கள் மற்றும் என்னுடன் தொடர்பிலிருக்கும் கவிஞர்களின் பரிந்துரைகளின் வழியாக வந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்த பொழுது, அடியேனுக்கு முன்ன்னுதாரணமாகத் தென்பட்டவர் இக்கவிக்கோ அவர்கள் தான். அம்மாமேதையை அபுதபி அய்மான் சங்க விழாவில் சந்தித்து என் கவிதையைக் கொடுத்த பொழுது, அவர்கள் சொன்னார்கள், “நான் இங்குப் பேசிய உரையின் கரு (முஸ்லிம் இளைஞர்களின் கல்வி)வும் உங்களின் கவிதையின் கருவும் எப்படி ஒன்றாக அமைந்தது?” என்று வியந்துக் கூறினார்கள். நான் சொன்னேன்,” இக்கவிதையை அடியேன் எழுதியது 2010 ல் நீங்கள் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது 2011 ல்; கவிஞர்களின் எண்ண ஓட்டம் ஒன்றென்பதை உணர இஃது ஓர் அரிய சான்று” என்றேம்; அன்று முதல் அம்மாமேதையுடனானத் தொடர்பும் தொடர்வதை ஈண்டுக் குறிப்பிடுகின்றேன்.

Iqbal M. Salih said...

மரியாதைக்குரிய சகோதரி அவர்களுக்கும்
டாக்டர் இ.அன்சாரி காக்கா அவர்களுக்கும்

அபுஇப்ராஹீம்,அலாவுதீன்,அப்துல்லத்தீஃப்,
இம்ரான் கரீம், யாசிர், கவியன்பன் கலாம்,
தஸ்தகீர், சபீர், சாவண்ணா ஆகியோர்க்கும்
கருத்துகளுக்காக நன்றிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு