Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்கவூட்டு மருமவோமா ! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2011 | , , ,

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இந்த உரையாடலாய் அமைந்திருக்கும்  ஆக்கம் யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பதிய பட்டவையல்ல, அன்றாடம் நமதூரில் பொதுவில் நடந்தேறும் நிஜமான நிகழ்வுகளின் நிழலாக மட்டுமே.

இரண்டு பெண்மக்கள் ஒரு ஆண்மகனை பெற்றெடுத்த அதிரைப்படினத்து உம்மா உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர்களின் படுக்கை அறையிலிருந்து இளைய மகளை "தங்கச்சி" என்று அழைக்க !

பள்ளிக்கூட பாடங்களை எழுதிக் கொண்டிருந்த இளைய மகள் "என்னம்மா?" என்று பதற்றத்தோடு உம்மா அருகே செல்கிறாள்.

புள்ளைங்கள பெத்த உம்மா "தங்கச்சி மனசுக்குள்ளே பட படண்டு செரவடியா வருதுமா காக்காவுக்கு போன் போட்டு டாக்டரை சட்டுன்னு கூட்டிக்கிட்டு வரச்சொல்லுமா" என்று பதற, துடித்தே விட்டாள் இளைய மகள்.

விளையாடச் சென்ற காக்காவுக்கு உடனே ஃபோன் பன்னுகிறாள் இளையமகள் - தன் வீட்டிலிருந்து டெலிஃபோன் வருகிறதே என்று அவனும் பதறியவனாக "ஹலோ ! அஸ்ஸலாமு அலைக்கும்" என்றதும்.

மறுமுனையில் "வ-அலைக்கு முஸ்ஸலாம், காக்கா உம்மாவுக்கு படபடண்டு வருதாம் சட்டுன்னு டாக்டரை கூட்டிக்கிட்டு வரச் சொல்லுது, எனக்கு என்ன செய்வதென்று தெரியலை" குரல் உருக்கியது.

"சரி இந்த வந்துறேன்" என்றவன் தன் நண்பனிடமிருந்து இரவலாக டூவீலரை வாங்கி கொண்டு வேகமாக மருத்துவமணைச் சென்று அங்கிருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறான்.

அங்கே டாக்டரும் அவர்களது உம்மாவை பரிசோதித்துவிட்டு.

"உங்களுக்கு ஒன்றுமில்லை தைரியமாக இருங்கள் நான் தர்ர மாத்திரைகளை சாப்பிடுங்க" என்று பிள்ளைகளின் உம்மாவிடம் சொன்ன டாக்டர் அவர்களின் மகனை தனியாக அழைத்து. 

"உங்க உம்மா கவலைப்பட்டு கவலைப்பட்டு ரொம்ப மனசு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அவங்களை கவலைப்படாம பாத்துக்கோ" என்று எடுத்துச் சொன்னார், அதன் பின்னர் டாக்டரை திரும்ப விட்டு விட்டு வந்ததும்.

வீட்டில் !

உம்மாவின் தோழி அதற்குள் நலம் விசாரிக்க வந்திருந்தார்கள்.. .

"அஸ்ஸலாமு அலைக்கும், என்னாவுளே ஒனக்கு  என்ன பன்னுனுச்சு?"

"யாருமா வா வா எங்கடி போன? ஒன்னே ஆளே கானோ இப்பவாவது வந்து கேட்டியே ஒரு மாசமா மனசுக்கு சரி இல்லடி இப்பதான் டாக்டரு வந்து பாத்துட்டு போறாரு".

"ஆமவுளே இப்ப ஒ இளய மொவ சொல்லித்தான் எனக்கு தெரியும். அதா ஒன்னே பாக்கலாம்டு ஓடியாரேன்."

"தங்கச்சி சாச்சிக்கு சீனி கொஞ்சமா போட்டு தேத்தணி குடுமா...." இளைய மகளுக்கு குரல் கொடுத்ததும்

"இந்த போட்டு கொடுக்குரமா." என்றாள் இளையவள்.

"ஆமா எங்க ஒ மூத்த மொவ மாமியாவூட்டுக்கு போய்க்கிதா?"

"அவளையா கேக்குறா? அவளநேச்சுதாண்டி எனக்கு பெரும் கவலையா ஈக்குது."

"என்னவுளே சொல்றா?"

"அவ மாப்புள மெட்ராசுலே விசா யாவாரம் பாத்துட்டு அப்புடியே நெலமும் வாங்கி வித்துகிட்டு இருந்தாகவுளே! நல்லாத்தான் போய்க்கிட்டு ஈந்துச்சு யாரையோ பெரிய நாட்டுக்கு அனுப்புரெண்டு சொல்லி விசா அடிச்சிக்கிறாஹ அது ஏதோ ஏம்மாத்து விசாவா போச்சுண்டு விசாவுக்கு பண கொடுத்தவரு பணத்த கேட்டு பெரச்சனே பன்னுராருண்டு அவ்வோ வாப்பாட்டே பனோம் கேட்டாவுளே! 

ஏதோ அங்க இங்க கடன வாங்கி அடைச்சோம், சரி அதோட வெளிநாட்டுக்கு போய் சம்பாரிச்சு வாங்குன கடனே எப்புடியாச்சும் அடைக்கச் சொன்னா அங்கெல்லாம் போமாட்டேண்டு சும்மாவே காலத்தே ஓட்டுரார்வுளே அதுனாலே ஏம்மொவ மாமியாவூட்டுலே ஈக்கிராவுளே! 

அவ்வொளுக்கு தேவையா இந்த வயசுலேயும் முதுகு வலியோடும்.கால் வலியோடும் கஸ்ட்டப்பட்டு வாழ்நாளெல்லாம் வீணாக்கிட்டு ஈக்கிராஹ அதுவும் ரொம்ப கஸ்ட்டப்பட்டு இந்த ஊடு பல வருசத்துக்குப் பிறகு கட்டுனதுவுளே.

இப்ப எனக்கு ஒடம்புவேற சரியில்லையா எண்ட ரெண்டாவது மொவதான்வுல எல்லா வேலையும் பாக்குறா ஒரு வாரமா பள்ளிகொடதுக்கு வேற போவல.

மொவனும் 12வது படிக்கிறான்  அவனை நல்லா படிக்க வைக்கனும்டு அவ்வோ வாப்பா கொஞ்ச கொஞ்சமா காசு சேக்குராஹா இந்த புள்ளைல்வோ நெலம தெரியாம ஆடுதுவோ."

அதற்குள் தோழி சாச்சி, "ஆமா வூட்டுக்கு வூடு வசப்படியான்தா ஈக்குது உளே! இந்த ஏண்ட ரெண்டுமகளுக்கும் எந்த கொரையும் இல்லாமதான் கல்யாணம் பண்ணி வச்சோம் ஏம்மகள்ற நகைகளெல்லாம் வித்து மூத்த மருமவனே மலேசியாவுக்கு அனுப்புனோம். போய் ஒரு வருசமாச்சு போனத்துக்கு ரெண்டு மாசம்தாவுல செலவுக்கு பணம் அனுப்புனாரு. இது வரைக்கும் அஞ்சி பைசா கூட இல்லவுளே!

ரெண்டாவது மருமொவனுக்குத்தான் வெளிநாடு அனுப்ப முயற்சி செஞ்சிட்டு இருக்கோம். அவருக்குத்தான் எங்கயுமே அமையமாட்டங்குது சரி விசா வரவரைக்கு எங்கயாவது ஒரு கடையிலே போய் இருக்க சொன்னாக்கா அதுலாம் சரியா வராதுன்னு சும்மா தோளமாரோட ஊற சுத்திக்கிட்டு வரார்வுளே!"

இவர்களின் சோகமான பேச்சுக்கிடையில் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று மீண்டும் மகனின் குரல்.

"வ-அலைக்க முஸ்ஸலாம் (வரஹ்) கண்ணான வாப்பா இன்னைக்கு ஸ்கூலுக்கு போவல ? தம்பி அசர் தொளுதுட்டியாமா?"

"இன்னும் தொளுவலமா டீ குடிச்சிட்டு போறமா."

மீண்டும் தொடர்ந்த தோழி சாச்சி "சரி அதெல்லாத்தயும் வுடு ஒ எளய புள்ளைக்காவது படிச்ச மாப்புள்ளையா பார்த்து கல்யாணம் பன்னி வைவுல."

"ஆமா நீ ஒன்னு படிச்ச மாப்புளைக்கு எங்க போறது? அதுவோ படிக்கவச்சதுக்குமுள்ள சேத்து நம்மட்டே லட்சக்கணக்குலே பணத்த கேக்குதுவோ."

"இப்ப உள்ள ஆம்புலபுள்ளைவோ அது வாங்ககூடாது இது வாங்ககூடாதுண்டு சொல்லுதுவோலே தவிர வூடு வானாண்டு புடிவாதமா சொல்ல மாட்டின்கிறதுவோமா"

"இது வொத்தான் அப்படி ஈக்குதுண்டு பார்த்தா ஓதி படிச்ச வூட்டுவொல்லேயும் ரொம்ப எதிர்பாக்குதுவோ."

ஆயிஷாராத்தா அங்கிருந்த தோழியின் மகனைப் பார்த்து, "இங்க பாத்தியா தம்பி ஒ ராத்தா மச்சான்ற சொல்லேக் கேட்டுகுட்டு உம்மாவே எவ்வளோவு கஸ்த்தப்படுத்துதூவோ .நீங்களாவது உம்மாவே கவலப்படவுடாம பாத்ததுகிடுங்கமா?"

"சரி சாச்சி, உம்மா நானாவது ராதாவுக்கு போனு போட்டு என்னாண்டு கேக்கவமா?"

"வானாண்ட வாப்பா இந்தக்கால புள்ளையள்வோலுக்கு நல்லது சொன்ன பொல்லாப்பா தெரியுது. அவங்களா அல்லாஹ்வுக்கும் மறுமைனாளுக்கும் பயந்து மனம்திருந்தி வரட்டும்"

"சரிவுளே நீ கவைப்படாத ஒ ஒடம்பே நல்ல மாறியா பாத்துக்கோ எல்லாத்துக்கு அல்லா ஈக்குரான் அவன் பாத்துக்குவா. நா போயிட்டு வரேவுல"

நிஜத்தில் நடந்திடும் நிகழ்வுகள் வாசிக்கும்போது நெகிழ்வைத் தந்தாலும், நேர்கொண்ட பார்வையும் நெஞ்சுரம் கொண்ட இளைய என் சமுதாயமே இனியாவது இவ்வாறன இழிவுக்குள் வீழ்ந்திடாமல் விழித்தெழுந்திடு உன்னைப் பெற்றவங்களும் உன்னவளைப் பெற்றவர்களும் இருவரும் பெற்றோரே ! அந்தப் பெற்றோரைப் பேனுவதில் நேர்மையை காட்டிடு முன்னுதாரமாய் திகழ்ந்திடு.

-லெ.மு.செ.அபுபக்கர்

20 Responses So Far:

sabeer.abushahruk said...

அதிரை நிருபர் கவனத்திற்கு,

ஆக்கத்தை எழுதியவர் எம் எஸ் எம் என்பதற்கு பதிலாக எல் எம் எஸ் என்று இருக்கிறது. கவனிக்கவும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சொல்ல வந்த விடயம் முதல் இரண்டு பாராவிலே தெரிந்தாலும், வட்டார வழக்காடலில் அழகுற உணர்வுகளோடு உராயும் பேச்சு நாடை சொல்லாமல் சொல்கிறது ! சூடு சொறனைக்கு ஒரு சொட்டு !

LMS(அ) தொடரவும் !

சறுக்கும் சஞ்சலங்களுக்கு சாட்டை கடைசி பாரா !

அதிரைநிருபர் பதிப்பகம் said...

//அதிரை நிருபர் கவனத்திற்கு,

ஆக்கத்தை எழுதியவர் எம் எஸ் எம் என்பதற்கு பதிலாக எல் எம் எஸ் என்று இருக்கிறது. கவனிக்கவும்.///

நான் அவரில்லை என்று இருவருமே சொல்ல மாட்டார்கள் காரணம் இருவருமே உறவுக்குள் உழல்பவர்களே, இவர்க் வீட்டுக் கல்யாணத்தில் அவர் வீட்டு விலாசமும் அழைக்கும் சுற்றமும் சூழ என்று !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கிட்டெ இருந்து சமாச்சாரங்களை அப்படியே கொட்டிப்புட்டா!
அடுத்து கடக்கி உன்னெட்டெ சாமான் வாங்க வர்ரவோடெ நடக்குற ஒரயாடலெ எழுது.
ஆனா இப்ப நெய்னாவுக்குதான் கவலையாம் நமக்கும் போட்டியா என்று!

சரியாச்சொன்னியோ சபீர்காக்கா.
நான் எழுதிகொண்டிருந்த கருவை நீங்க சொல்லிப்புட்டியோ.அதனாலெ சென்சார்.//ஆக்கத்தை எழுதியவர் எம் எஸ் எம் என்பதற்கு பதிலாக எல் எம் எஸ் என்று இருக்கிறது. கவனிக்கவும்.//

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல உரையாடல்(ஒரைக்குமா நம்மவர்களுக்கு?)இந்த அவளனிலைக்கு நாம் வல்ல அல்லாஹ்விடம் என்ன பதில்சொல்ல போறோம். வலுத்த கம்பீர, திறானிமிக்க, சொல் வழுவாத, சமுதாய நோக்குள்ள,அல்லாஹ்வின் மறுமைக்கு அஞ்சக்கூடிய ஆலீம் இருந்தா இந்த நிலை மாறலாம்????????

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதனை வாசித்த பெண்டிர் மற்றவர்களோடு கலந்துரையாடும் போது வெளிப்பட்ட உணர்வுகள் அதுவே காதிலும் விழுந்தவையாக !

"யாவுலே வூட்டு வோல பேசிரதெல்லாம் எப்படியுல இந்த ஆம்புளைங்க காதுல வுலுவுது?"

"அதயாங் கேக்குரே வூட்டுக்கு வூடு வாசப்படி தாவுலே ஒரு வூட்லையா இந்த கொதரத்து அம்புட்டு வூட்டுலேயும்ல இருக்கு ஹிம்முசு"

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சபீர் காக்கா அவர்களுக்கு : நல்ல வேலை எஸ்.எம்.எஸ் என்ற விலாசம் (அ.நி) வாசகர்களுக்கு இல்லை இருந்திருந்தால் நானே குழம்பி போய் இருப்பேன். வாழ்த்துக்கள் .
=============================================================
அபூ இபுராஹி அவர்களுக்கு :சொறனைக்கு ஒரு சொட்டு போதும் .சூடுக்கு சொட்டுகள் போதாது அள்ளி ஊத்தனும் அப்பத்தான் சூடு அடங்கும்.
சறுக்கும் சஞ்சலங்களுக்கு சாட்டையை முட்டு கொடுத்த விதம் அருமை.மிக்க நன்றி

// "யாவுலே வூட்டு வோல பேசிரதெல்லாம் எப்படியுல இந்த ஆம்புளைங்க காதுல வுலுவுது?" //

அது எப்படிவுள்ளே தெரியாமே போவு நம்மதான் நம்ம ஊட்டே போட்டுட்டு கல்லே வந்துட்டு போறது கோட தெரியாம அடுத்த ஊட்டுலே போய் மணி கணக்குலே உட்கார்ந்து பொறோ பேசுறத்துக்கு கலவையாக நம்ம குடும்ப செய்திகளையெல்லாம் கக்கிட்டு வந்துரோமே.
==========================================================

எம்.ஹெச்.ஜகாபர் சாதிக்குக்கு:நீதான் சொல்லிட்டியே நெய்னாவுக்குதான் கவலை என்று.அது நாளே கடைக்கு வர்ற கஸ்டமரை கவலைபடாம கண்ணிய படுத்துவதுதான்.வியாபாரியின் விருப்பம். so . நீ ஊருக்கு வந்து சாமான்கள் வாங்கு உரையாடலில்லை.திருவிளையாடலையே நடத்திடலாம் .இரவு போன் செய்திருக்குபோதே நினைத்தேன்.ஏதோ கவலையான செய்தி சொல்லப் போறா என்று.கவலையை மறந்து மகிழ்ச்சியடைகிறேன்.வாழ்த்துக்கள்.
=================================================================
தஸ்தகீர்க்கு : நண்பா சூடான கேள்விகளோடு .ஆறுதலான செய்திகளையும், நபிக்கையையும்.பதிந்திருக்கிறாய் ரொம்ப பிரமாதம் .
கம்பீரமான சில ஆலிம்களின் பயான்களை கேட்டு .கடல் அலையை போல். பல மனித மனங்கள் ஆடத்தான் செய்கின்றன.ஆனாலும் ராணுவ பலம் கொண்ட பணம் தான் அவர்களுக்கு முட்டு கட்டையாக இருக்கின்றது . வாழ்த்துக்கள்
================================================================

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

நண்பன் லெ.மு.செ. அபூபக்கரின் ஆதங்கத்துடன் கூடிய இவ்வாக்கம் சம்மந்தப்பட்டவர்களை தாக்கும்.(அதான் சும்மா பேருக்கு முஸ்லிமாக இருந்து கொண்டு அஞ்சு வேலை பள்ளியாசல்லெ தொப்பி போட்டு கொண்டு முன் சஃப்பில் தொழுது கொண்டு கலியாண நேரத்துலெ பண்ண வேண்டிய அட்டகாசத்தையும் செய்து மஹர் என்று சொல்லி இரண்டு பவுன் சங்கிலியை மணப்பெண்ணுக்கு நிக்காஹ் மணமேடையில் அளிப்பதாக வாக்கு கொடுத்து விட்டு பிறகு அதற்கு பகரமாக 50 லட்சம் மதிப்புள்ள முழு வீட்டையும் மணப்பெண் வீட்டினரிடமிருந்து வழுக்கட்டாயமாக‌ எழுதி வாங்கும் அராஜக அயோக்கியர்கள் (இதில் என் வீடோ, என் குடும்பமோ, என் தெருவோ, என் ஊரோ சம்மந்தப்பட்டிருந்தாலும் சரியே இதில் பாரபட்சம் வேண்டியதில்லை)

இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் யார், யார் மார்க்கத்திற்கு எதிரான இந்த‌ அராஜகத்தில் ஈடுபடுகிறார்களோ அவர்களின் முழு விவரங்களும் இயன்றால் கைபேசி, ஈமெயில் அட்ரஸுடன் வெளியிட வேண்டி வரலாம்.

அதனால் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் ந‌ம்மை தாக்க‌ அல்ல‌து கொலை செய்ய‌ முற்ப‌ட்டாலும் ப‌ர‌வாயில்லை. அத‌ற்குப்பிற‌காவ‌து அவ‌ர்க‌ள் திருந்த‌ட்டும் ஊரின் அவலம்/கேவலம் ஒழியட்டும். நாளை மறுமையில் அல்லாஹ்விட‌ம் இறைவா! நீ வெறுத்தொதுக்கிய‌ காரிய‌த்தை செய்ய‌ முற்ப‌ட்ட‌வ‌ர்க‌ளின் முக‌த்திரையை கிழிக்க‌ச்செய்தேன் அதனாலேயே நான் உல‌கில் கொல்ல‌ப்ப‌ட்டேன். என‌வே அத‌ற்கு ப‌க‌ர‌மாக‌ நீ என‌க்கு சுவ‌ர்க்க‌த்தில் புக‌ அனும‌திய‌ளிப்பாயாக! என்று அவ‌னிட‌ம் முறையிட்டு நிர‌ந்த‌ இன்ப‌த்தை அனுப‌விக்க முய‌ற்சிப்போம்.

அணுகுண்டின் தாக்கமும் அதன் கொடூரமும் ஹிரோஷிமா, நாக‌சாகி ம‌க்க‌ளை கேட்டால் தெரியும்.

ப‌சிக்கொடுமையின் வேதனை (வருடம் முழுவதும் நோன்பாக இருக்கும்) சோமாலிய‌ ம‌க்க‌ளிட‌ம் கேட்டால் தெரியும்.

ஒரு புறம் இலங்கை சிங்கள ராணுவம் மறுபுறம் விடுதலைப்புலிகளின் படை என்று இருமுனைத்தாக்குத‌லில் நடுவில் உயிர்பிச்சைக்காக‌ அங்குமிங்கும் ஓடித்திரிந்த‌ அப்பாவி இல‌ங்கை பொதும‌க்க‌ளை கேட்டால் தெரியும் போரின் கொடூர‌ம்.

கொக்கு,குருவிக‌ள் அன்றாட‌ ச‌மைய‌லுக்கு சுட்டுக்கொல்ல‌ப்ப‌டுவ‌துபோல் யூத இஸ்ரேல் அர‌சால் அன்றாட‌ம் சுட்டுக்கொல்ல‌ப்ப‌டும் பாலஸ்தீன‌ ம‌க்க‌ளின் துய‌ர‌ம் அவ‌ர்க‌ளை கேட்டால் ந‌ன்கு விள‌ங்கும்.

குஜ‌ராத் கோத்ரா ர‌யில் எரிப்பு ச‌ம்ப‌வ‌த்தால் அங்கு ப‌ர‌விய‌ க‌ல‌வ‌ர‌த்தில் கோடீஸ்வ‌ர‌னாக‌ இருந்த‌ சிறுபான்மை ச‌மூக‌த்தின‌ர் ஒரே நாளில் ந‌டுத்தெருவுக்கு வ‌ந்த‌ சோக‌ம் அவ‌ர்க‌ளை கேட்டால் தெரியும்.

என‌வே இந்த‌ ச‌மூக‌க்கொடுமையில் பாதிக்க‌ப்ப‌டாத‌ எவ‌ருக்கும் இந்த‌ க‌ட்டுரை ப‌டிக்க‌ அருமையான‌, அழ‌கான‌, ஃபென்ட்டாஸ்ட்டிக் க‌ட்டுரையாக‌த்தான் இருக்கும். ஆனால் இத‌ன் உட்க‌ருத்து பாதிக்க‌ப்ப‌ட்ட‌ எவ‌னுக்கும் அவ‌ர்க‌ளின் வேத‌னையின் வெளிப்பாடாக‌த்தான் இருக்கும்.

வ‌ர‌த‌ட்சிணை (ப‌ண‌ம், பொருள், நகை, வீடு, சொத்து, கார், ப‌ங்க‌ளா, படிப்பு செலவு, சீர், சீராட்டு, பால், ப‌ழ‌ம், விருந்து என்று எல்லாக்காடாத்துக்க‌ளும் இதில் அட‌ங்கும்) அராஜ‌க‌த்தை இன்றும் அர‌ங்கேற்றிக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளே! உங்க‌ள் போலி முக‌த்திரைக‌ள் இறைவ‌னால் உல‌கிலோ அல்ல‌து நிச்ச‌ய‌ம் மறுமையில் கிழிக்க‌ப்ப‌டும். என்னையும், உம்மையும் ப‌டைத்த‌ அவ‌னுக்கு அஞ்சிக்கொள்வோமாக‌...

இது போன்ற‌ உரையாட‌ல் க‌ட்டுரைக‌ளை நான் தான் எழுத‌வேண்டுமென்ப‌தில்லை பாதிப்புக்குள்ளான‌ அல்ல‌து ஊரில் இருந்து கொண்டு அத‌ன் பாதிப்புக‌ளை க‌ண்டும், கேட்டும் வ‌ரும் எவ‌ரும் தைரிய‌மாக‌ எழுத‌லாம். இத‌ற்கு ம‌ர‌ண‌ம் தான் ப‌ரிசாக கிடைக்கும் என்றால் கிடைத்து விட்டு போக‌ட்டும்.

அதிரையில் பிற‌ந்த ஒவ்வொருவருக்கும் இந்த‌ ச‌மூக‌க்கேடு ஒன்று ந‌ம் வீட்டை தாக்கி இருக்கும் அல்ல‌து குடும்ப‌த்தில் எவ‌ருக்கேனும் அல்ல‌து ந‌ம் தெருவில் அல்ல‌து ஊரில் எப்ப‌டியாவ‌து ஒருவ‌கையில் தாக்கி இருக்கும்.

இவை க‌ளைய‌ப்ப‌டாத‌வ‌ரை, தீமை உண‌ர்ந்து திருந்தாத‌வ‌ரை ந‌ம் எந்த‌ ந‌ல்ல‌ அம‌ல்க‌ளும் இறைவ‌னிட‌த்தில் ஏற்றுக்கொள்ள‌ப்ப‌டும் என்ப‌தில் எவ‌ருக்கும் எவ்வித‌ உத்த‌ர‌வாத‌மும் கிடையாது. உல‌கில் கால‌மெல்லாம் காஃபிராக‌ இருந்து எல்லாவற்றையும் என்‍ஜாய் செய்து விட்டு ம‌றுமையில் ந‌ர‌க‌ நெருப்பில் வேத‌னைய‌டைப‌வ‌னுட‌ன் இவ்வ‌ள‌வு தொழுது வ‌ண‌ங்கி தொப்பியுட‌ன், த‌ஸ்பீஹுட‌ன் அழைந்த‌ நாமும் த‌ங்குவ‌து வேத‌னையிலும் வேத‌னைய‌ல்ல‌வா?

இதுபோன்ற ஊரின் சமூகக்கேடுகளை களையும் தரமுள்ள நல்ல பல கட்டுரைகளை நண்பன் லெ.மு.செ. அபூபக்கரிடமிருந்து எதிர்பார்த்தவனாக....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

அப்துல்மாலிக் said...

இளைய தலமுறைக்கு சொல்லவேண்டியதை நம்மூரு பேச்சுவழக்குலே சொன்னது இன்னும் ஸ்ட்ராங்க். பொண்ணுக்கு இந்த ஊடு கொடுக்குறது எந்தளவுக்கு பாதிப்ப ஏற்படுத்துது என்பது தெளிவா தெரியுது, தெரிஞ்சு???? அப்படினு கேக்குறது புரியுது

நல்ல ஆக்கம் சகோ அபு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) ஆதங்கம், உள்ளக் கொதிநிலை, ஊராரும் உறவுகளும் உழன்றெழும் முரண்பாடுகளும் என்று விளாசித் தள்ளுவிட்டீர் !

இவர்களும் இம்மண்ணின் மைந்ததர்கள்தானே என்று சகித்துதான் சமந்தங்களாக கலந்து உரசுகின்றன என்ன செய்வது உடன்பிறவாமல் உள்ளுக்கு நுழைந்த இவ்வாறான காலந்தொட்டு கங்கனம் கட்டிக் கொண்டு கப்பம் கட்டும் பழக்கம் தொப்புல் கொடிபோல் தொடர்வதை தடுத்திட முயல்வதில் தொடர்ந்திடுவோம் !

அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை தெளிவாக்கிடுவானாக !

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

என்னா மாலிக், நல்ல ஆக்கம் சகோ அபு..என்று மரியாதை இல்லாமல் இப்படி எழுதிவிட்டாய்???

நம்மளோட வாய்க்கால் தெரு ஊ.ஒ.தொ. பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த பக்கரு தாம்ப்பா இவன்....(பள்ளிக்கொடத்துக்கு எதிர்த்தப்புலெ தான் இவன் ஊடு) வெளங்குதா???

சரி விசயத்துக்கு வருவோம் "நம் உன்னத மார்க்கத்தை புறந்தள்ளி விட்டு, எதையும் கண்டுகொள்ளாமல் வரதட்சிணையின் மூலம் மக்களின் அராஜக போக்கு தொடருமேயானால் அல்லாஹ் பாதுகாக்கனும் வரும் காலங்களில் பொம்புள்ளப்புள்ளையலுவொலெ பெத்து, வளத்து, ஆளாக்கி, பேராக்கி ஒருத்தன் (கெட்டவனாக அமைந்து விட்டால் அவ்வளவுதான்) கையிலெ புடிச்சி கொடுக்கிறதுக்குள்ளெ போதும், போதுமென்றாகி விடும் (அதுவும் மற்ற ஊர்களுக்கு நம்ம ஊரா இருந்தா சொல்லவே வேண்டியதில்லை) என்ற அவல நிலையை மனதில் கொண்டு பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே அதன் பெற்றோர்க‌ளே அந்த‌ குழ‌ந்தையை ஈவிரக்கமின்றி யாரும‌றியா வ‌ண்ண‌ம் கொலை செய்து விட‌ நேரிடும்"

"பெண் பிள்ளை பிற‌ந்தால் ஹ‌தீஸை மேற்கோள் காட்டி அல்லாஹ் அவ்வீட்டிற்கு ப‌ர‌க்க‌த் செய்வான் என்று ப‌ல‌ர் சொல்ல‌க்கேட்டிருக்கிறோம். ஆனால் அது ந‌ம்ம‌ ஊருக்க‌ல்ல‌ பெண்பிள்ளையைப்பெற்று க‌ண‌வ‌னின் வீட்டிற்கு அவ‌னுடைய‌ முழு க‌ட்டுப்பாட்டிலும், அவ‌னுடைய உழைப்பு/உடைமையிலும் வாழ‌ அனுப்பி வைக்கும் வழக்கம் கொண்ட ஊர்க‌ளுக்குத்தான் என்று பொருள் கொள்ள‌ வேண்டியுள்ள‌து".

"பாலில் ஒரு சொட்டு கொடிய விஷ‌த்தை இட்டு பிற‌கு அதில் ஃப்ரூட் ச‌லாட் செய்தாலும், பால் பாயாச‌ம் காய்ச்சினாலும், பால் கோவா செய்தாலும், ம‌சலாப்பால் காய்ச்சினாலும் எல்லாமே வேஸ்ட்டாகி நாசமாப்போய்விடும்" இதுபோல் ஆகிவிட‌க்கூடாது ந‌ம் வாழ்க்கையும் அத‌ன் அம‌ல்க‌ளும்....

மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

எம்.எஸ்.எம்.நெய்னாவுக்கு :வ அலைக்க முஸ்ஸலாம் .நெய்னவுக்கு கவலையா இருக்கிறதாம் என்று (எம்.ஹெச்) சொன்னதும்.நான் பயத்தில் இருந்தேன்.வீரனுக்கு கவலை அழகல்ல வெற்றிதான் அழகு என்பதை நிருபிக்கும் விதமாக. ஏ.கே.47 ல் இருந்து தோட்டாக்கள் பாய்வதுபோல்.இறைவனின் உதவியால் உன் மன கிடங்கிலிருந்து வார்த்தைகளை பாய்ச்சிவிட்டு மன குன்றிய மக்களை குடி பெயர்த்து விட்டாய்.
வாழ்த்துக்கள்.
================================================================================================
சகோ:அப்துல் மாலிக்குக்கு: நல்ல சைலன்டான கருத்து வாழ்த்துக்கள்.இளைய தல முறைக்கு சொல்லப்பட்ட செய்தியாக இருந்தாலும்.முக்கியமாக பெரிய தலைகள் சிந்திக்க வேண்டும் என்பதுதான் நம்மலுடைய ஹவா இல்லை என்றால் அல்லாஹ்விடத்தில் குற்றவாலியாக போய்விடுவார்கள் என்ற கவலைதான் .

அலாவுதீன்.S. said...

அன்புச்சகோதரர் -லெ.மு.செ.அபுபக்கர் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நேற்றுதான் நானும் கீழக்கரையைச் சேர்ந்த சகோதரரும் பெண் மக்களுக்கு வீடு கட்டுவது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். காக்கா மகள்களுக்கு இப்பொழுதே சரி சமமாக வீடு கட்ட ஆரம்பித்து விடுங்கள். எல்லா பெண்களுக்கும் நல்ல கணவர்கள் அமைவது கடினம். ஒரு பெண் ஏழை கணவரை அடைந்து ஒரு பெண் வசதியான கணவரை அடைந்து விட்டால் அவர்களுக்குள் கருத்தில் திண்டாட்டம் ஏற்படும். ஆண் மக்கள் இல்லா விட்டால் பெண் மக்களை மட்டும் கொண்ட வீட்டில் தந்தையே கஷ்டப்பட்டாவது வீடு சரி சமமாக கட்டி வைத்து விட வேண்டும் என்றார். நான் சகோதரிகளுக்கு திருமணம் முடித்து கொடுத்து அவர்கள் பிள்ளைகளும் பெற்று விட்டார்கள். இப்பொழுதுதான் இருக்கும் வீட்டில் பங்கும் மேற்கொண்டு சம்பாரித்து வீடும் நான் கட்டி கொடுக்க வேண்டும். அதனால் என்னைப்போல் கஷ்டப்படாதீர்கள். பெண் பிள்ளைகளை வைத்திருப்போர் இப்பொழுதே தனித்தனியாக சமமான அளவில் வீட்டை கட்டி விடுங்கள் என்றார்.

இன்று அ.நி திறந்தால் தங்களின் ஆதங்க கட்டுரை என்ன சொல்வது என்று புரியவில்லை.

வல்ல அல்லாஹ் பெண் மக்கள் இருக்கும் வீட்டிற்கு நல்லருள் புரியட்டும்.

Muhammad abubacker ( LMS ) said...

வ அழைக்க முஸ்ஸலாம் (வரஹ்)

அன்புள்ள அலாவுதீன் காக்கா உங்களுடைய கருத்த்தை கண்டவுடன் எனக்குள் பெரும் தாக்கத்தை உண்டுபன்னியது. அந்த கீழக்கரை சகோதரருக்கு சொல்லுங்கள்.பெண் பிள்ளைகளுக்கு சரி சமமான வீடுக்கு பதிலாக உண்மையான மார்க்கத்தை தீனை கொடுத்தால் திண்டாட்டத்திற்கு பதிலாக கொண்டாட்டம்தான்.என்பதை ஓரத்துச் சொல்லுங்கள்.ஒரு பிள்ளைக்கு வீடு கொடுபதற்க்கே காலமெல்லாம் கஷ்டப்பட்டு இடுப்பு முள்ளு தேய்ந்து.மருத்துவத்திற்கு கூட வசதி இல்லாமல் திண்டாடடும் ஆண் வர்க்கத்தினை சரி சமமாக வீடு கொடுக்க சொன்னால்.(நபி)ஸல் அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை யாரிடம் போய் சொல்ல.

// வல்ல அல்லாஹ் பெண் மக்கள் இருக்கும் வீட்டிற்கு நல்லருள் புரியட்டும்.//

பெண்களுக்கு ஏராளமான உரிமைகளும் சலுகைகளும் வழங்கி நல்லருள் புரிந்திருப்பதாக திரு மறையில் சொல்லி காட்டுகிறான் அல்லாஹ். அந்த நல்லருளை மறைத்து இருள் மயமாக ஆக்கியது நாம்தானே.

மணமகனை பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கு நல்ல புத்தியை கொடுத்து.மணமகன் மார்க்கத்தில் உறுதியாக இருந்து அதை நிலை நிறுத்தி காட்டுவதற்கு .அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்

// இன்று அ.நி திறந்தால் தங்களின் ஆதங்க கட்டுரை என்ன சொல்வது என்று புரியவில்லை.//

எனக்கு புரிகிறது மார்க்கத்தை சொல்ல கூடிய நீங்கள் என்ன சொல்வதென்று புரியாதது .


ஜஜாகல்லாஹ் ஹைரா.

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர் லெ.மு.செ.அபுபக்கர்அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நாம் மார்க்கத்தில் உள்ளதை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் மக்களுக்கு மனமாற்றம் ஏற்படுவது நம் கையில் இல்லை. உள்ளங்களை புரட்டக்கூடியவனாக வல்ல அல்லாஹ்வே இருக்கிறான். தீமைகள் விலகி தூய்மையான மார்க்கத்தை நம் மக்கள் கடைபிடிப்பதற்கு நம்மால் ஆன முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

வரதட்சணைப்பற்றிய இன்னொரு கலந்துரையாடல்:
நேற்று நான் இஷா தொழுதுவிட்டு பள்ளி வெளியில் வரும்பொழுது சிதம்பரத்தைச் சேர்ந்த சகோதரர் தொழுது விட்டு வெளியில் வந்தார். சந்தித்து பேசிக்கொண்டு இருக்கும்பொழுது என்ன தங்கம் விலை உயரே பறந்து கொண்டே இருக்கிறதே என்ற பேச்சு வரும்பொழுது அதை ஞாபகப்படுத்தாதீர்கள் பாய் என்றார்.

ஏற்கனவே திருமணம் நிச்சயம் ஆகி இருப்பதை என்னிடம் கூறி இருந்தார். (அவருக்கு வயது 27 இருக்கும் என்று நினைக்கிறேன்) ஏன் பயப்படுகிறீர்கள் என்று கூறும்பொழுது அவருக்கு நிச்சயம் ஆன நிகழ்வை கூறினார்.
நான் ஊரில் இருக்கும்பொழுது பெண் வீட்டில் வாங்குவது தவறு இல்லை மார்க்கம் அனுமதித்த காரியம் என்று நினைத்து இருந்தேன். இந்த நாட்டிற்கு வந்த பிறகு ஏகத்துவ பயான்களை கேட்டு கேட்டு தூய்மையான மார்க்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்த பிறகுதான் பெண் வீட்டில் வாங்குவது ஹராம் என்பதை புரிந்து கொண்டேன் என்று அந்த சகோதரர் சொன்னார் மேலும் அவரின் திருமண பேச்சு வார்த்தை வரும்பொழுது உறவில் நிறைய பெண் இருக்கிறது நீ சம்மதிக்க வேண்டும் என்பது அம்மாவின் கட்டளை. நான் எதுவும் பெண்வீட்டில் வாங்காமல் மஹர் கொடுத்து மணம் முடிப்பது என்ற முடிவோடு இருக்கிறேன் என்று தாயாரிடம் பதில் சொல்ல அவர்களின் பதில் உன் தங்கைக்கு நாம் செய்திருக்கிறோம். நாம் பெண் வீட்டில் வாங்கினால்தான் சரி செய்ய முடியும் என்றாராம். (உறவில் திருமணம் செய்தால் வருமானம் நிறைய வருமாம்)

இந்த திட்டத்திற்கு இந்த சகோதரர் ஒத்துக்கொள்ளாததாலும் மகனுக்கு திருமணம் ஆனால் போதும் என்ற காரணத்தாலும் மகனின் மஹர் கொடுத்து முடிக்கும் முடிவுக்கு தாயார் சம்மதிக்க, உறவுகள் இந்த சகோதரருக்கு ஏதோ குறை இருக்கிறது அதனால்தான் பெண் வீட்டில் எதுவும் வேண்டாம் என்கிறார் என்ற பேச்சுக்கள் தொடர. இவர் எனக்கு திருமணம் ஆனபிறகல்லவா என்ன குறை இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். நான் இறைவன் சொன்னபடி நடப்பேன் என்றால் எனக்கு குறை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்கள் உறவுகள் என்றார். உறவுகளில் மணம் முடிக்க மாட்டேன் என்ற முடிவு எடுத்த பிறகு சொந்தமில்லாத வெளியிடத்தில்தான் திருமணம் செய்வேன் என்று முடிவு எடுத்தாராம்.

என் நிய்யத்ப்படியே ஏகத்துவத்தில் ஈடுபாடுள்ள பெண் அமைந்து விட்டார். நபி(ஸல்) அவர்கள் சொன்னபடி என் குடும்பமும் அவர்கள் குடும்பமும் இருக்க பெண்ணை நேரில் பார்த்தேன் நிச்சயம் ஆகிவிட்டது. பிப்ரவரி 2012க்கு பிறகு திருமணம் என்றார். நல்ல செய்திதான்.

அவரின் கவலை தங்கை திருமணக் கடன் இன்னும் அடையவில்லையாம்.ஓரளவு அடைந்து பாக்கி 4 பவுனுக்கான கடன் அடைக்க வேண்டுமாம். திருமண கால அளவு குறைவாக இருக்கிறது. நான் திருமணம் ஆகி 2 மாதம் ஊரில் இருக்க வேண்டும். பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும். சம்பளம் குறைவு என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை என்று வருத்தத்துடன் சொன்னார். எனக்காக துஆச் செய்யுங்கள் என்றார்.
இந்த சகோதரரின் கடன் அடைந்து அவர் எண்ணப்படி திருமணம் நல்லபடியாக நடக்க வல்ல அல்லாஹ் நல்லருள் புரியட்டும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சும்மா ஷார்ட்டா சொல்றதா இருந்தா "சின்ன, சின்ன விசயத்துக்கெல்லாம் மார்க்கத்தை தூக்கி பிடிக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கி இருக்கும் பெரிசுகளும், சிறுசுகளும் (இதில் யார், யாரெல்லாம் அடங்குவர் என அவன் அறிவான்) பெண்ணுக்கு மஹர் கொடுக்கும் விசயத்தில் கண்ணைத்திண்டு விடுகிறது ஏனோ?"

இது எப்ப‌டி இருக்கிற‌தென்றால் பெரிய‌ ஹ‌ராமான‌ போதை த‌ர‌க்கூடிய‌ ம‌துபான‌ம் அருந்தும் பொழுது அத‌ன் சைட் டிஷ் (ஆடு, மாடு, கோழி வ‌றுவ‌ல்) ஹ‌லாலான முறையில் அறுக்க‌ப்ப‌ட்டு ச‌மைக்க‌ப்ப‌ட்ட‌தா? என உற்று நோக்குவ‌து போல் ஆகும்.


மு.செ.மு. நெய்னா முஹம்ம‌து.

Muhammad abubacker ( LMS ) said...

வ அழைக்க முஸ்ஸலாம்.

அன்பின் அலாவுதீன் காக்கா உங்களுடைய நீண்ட கருத்தினை கண்டு.மார்க்கத்தில் பிடிவாதம் பிடிக்கும் மணமகன்,மணமகள் பெற்றோரைப் பார்த்து கவலைப்படுவதா? அல்லது நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்தது பிரகாரம் திருமணம் செய்ய நினைக்கும் அந்த சகோதரின் கடன்சுமையை நினைத்து கவலைப்படுவதா?

இன்ஷா அல்லாஹ் அந்த சகோதரின்.உறுதியான எண்ணத்திற்கேற்ப அவருடைய திருமணத்தை நடத்தி வைப்பானாக. அவர்களுடைய கடன் சுமைகளை நீக்கி வைப்பானாக.பிடிவாதம் பிடிக்கும்.இருவரின் பெற்றோர்களுக்கும் நல்ல புத்தியை கொடுத்து மார்க்கத்தின் விளக்கத்தை கொடுப்பானாக.ஆமீன் ...

sabeer.abushahruk said...

எல் எம் எஸ் / அலாவுதீன்: உங்கள் டிஸ்கஷன் தொடர்புடையது இவ்வாரத் திண்ணையில்...

அதுவும் அவையும்!

யாரங்கே
என
ஏய்த்துக்கொண்டிருந்தது அது
பசுத்தோல் நம்பி
மேய்ந்துகொண்டிருந்தன அவை

பாம்புக்கு வாலும்
மீனுக்கு தலையும்
காட்டிக்கொண்டிருந்தது அது
பாம்பென்று பயந்தும்
மீனென்று வியந்தும்
மாட்டிக்கொண்டிருந்தன யாதும்

வாங்கமாட்டேன்
வரதட்சனை யென
விழித்துக்கொண்டது வாலிபம்
வெள்ளையுஞ் சொள்ளையு மென
வேட்டியுஞ் சட்டையுமோ
பட்டும் பகட்டு மென
சேலையுஞ் சோளியுமோ அணிந்து
இளித்துக்கொண்டிருந்தது அது

இருமனம் இணையும்
திருமண நிகழ்வை
ஒருமனதாக யாவரும்
ஏற்றுக்கொண்டிருந்தும்
ஆணுக்கு வரவும்
பெண்ணுக்கு செலவுமென
மாற்றிக்கொண்டிருந்தது அது

சிலாகித்தும் சமாளித்தும்
சிரித்தும் மழுப்பியும்
சேர்த்து வைத்தது மணமக்களை
சில காலம் சென்றபின்
கேட்டு வைத்த தொரு கேள்வி
வேட்டு வைத்த தது வாழ்வில்:

கல்யாணத்துக்கு முன்
பேசிக்கொண்டபடி
காசுமாலையும்
கற்களற்ற அட்டியலும்
வாங்கிக்கொண்டு
வீட்டுக்குள் வா

துரத்தியடித்தது அது

எதிர்க்கத் திராணியும்
இணங்கத் தகுதியு மின்றி
மரத்து நின்றன அவை!

நன்றி: http://puthu.thinnai.com/?p=4284
நன்றி: Zakir, KL

Yasir said...

சகோ.லெ.மு.செ.அபுபக்கர்- இது ஆக்கமல்ல .....சிலருக்கு கன்னத்தில் விடப்பட்ட “அறை” கிட்டத்தட்ட நம்மூரில் நடக்கும் எல்லா விசயத்தையும் அதிரை அழகுதமிழில் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்....சமுதாய சிந்தனை உள்ள ஆக்கம்

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// சகோ:யாசிர் சொன்னது.
சகோ.லெ.மு.செ.அபுபக்கர்- இது ஆக்கமல்ல .....சிலருக்கு கன்னத்தில் விடப்பட்ட “அறை” கிட்டத்தட்ட நம்மூரில் நடக்கும் எல்லா விசயத்தையும் அதிரை அழகுதமிழில் சொல்லி அசத்தி இருக்கிறீர்கள்....சமுதாய சிந்தனை உள்ள ஆக்கம் //

இதுக்கு பெயர்தான் சொல்லறை என்பார்களோ ? பொறுத்திருந்து பார்ப்போம் எத்தனைபேருக்கு வலிக்கிறதென்று.தாங்கள் கருத்திற்கு அறையல்ல முழு வாழ்த்துக்கள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு