Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இரு கல்வியாளர்கள், ஒரு கலைக்களஞ்சியம், ஒரு கட்டுரையாளர் - கலந்துரையாடல் ! - 5 தொடர்கிறது 19

அதிரைநிருபர் பதிப்பகம் | November 17, 2012 | , , ,

பகுதி : ந்து 

இந்தக் கலந்துரையாடல் தொடரை முதல் பகுதியோடு நிறுத்தி விடாமல் தொடரும்படி அன்புச் சகோதர்கள் கட்டளை இட்டதால் இரண்டாவது அமர்வின் கலந்துரையாடலையும் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறேன்.   இனி வரும் அமர்வுகளில் மேலும் சில பன்னூலாசிரியர்களையும், கல்வியாளர்களையும், மார்க்க அறிஞர்களையும்,           இணைய தளப் பதிவாளர்களையும்,  இணைத்துக் கொண்டு கலந்துரையாடிப்      பதியலாமென்று கருதுகிறேன்.   இன்ஷா அல்லாஹ். 

இப்போது இங்கு பதிய இருப்பது  இரண்டாவது அமர்வின் நினைவலைகள்; கருத்துக் கருவூலங்கள் ஆகும். முதல் அமர்வில் பங்கேற்ற பேராசிரியர் ஜனாப். அப்துல் காதர் அவர்களும், ஜனாப். ஹாஜா முகைதீன் சார் அவர்களும், ஜனாப். நூர் முகமது அவர்களும் நானுமே பங்கேற்றோம். 

பள்ளிகளில் மாணவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் வளர நற்போதனை வகுப்புக்கள் அவசியமென்றும், இத்தகைய வகுப்புக்கள் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை போதிப்பதுடன் எப்போதும் பாடப் புத்தகங்களிலேயே மூழ்கி இருக்கும் அவர்களுடைய சிந்தனைகளை சற்று ஆசுவாசப்படுத்தவும் இவ்வகுப்புக்கள் உதவும் என்று  நற்போதனை வகுப்புகளைப் பற்றிய பேச்சைத் தொடங்கி வைத்தவர் ஜனாப். ஹாஜா முகைதீன் சார் அவர்கள். முன்பெல்லாம் இத்தகைய வகுப்புக்களுக்கு மாணவர்கள் கட்டுப்பாட்டோடு செல்வார்கள்; சொல்வதை கூர்ந்து கவனிப்பார்கள்; தயக்கம் இல்லாமல் சந்தேகம் கேட்பார்கள்.  

அவற்றுள் நெஞ்சை வீட்டு நீங்காத நினைவுகளைத் தருவது  மர்ஹூம். முகமது அலிய் ஆலிம் அவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரத்யோகமான வகுப்புகள் ஆகும்.  அன்றைய காலக்கட்டத்தில்  படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு  ஓரளவு அடிப்படை மார்க்க அறிவை எத்தி வைத்தததில்  மர்ஹூம் முகமது அலிய் ஆலிம் அவர்களின் பங்கு மகத்தானது  என்று நான் சொன்னேன். இது எனது சொந்த அனுபவம் என்றும் சொன்னேன். மார்க்கம், பேணுதல் ஆகிய காரியங்களில் ஒரு இமய மலைபோல எழுந்து நின்று வாழ்ந்து மறைந்த ஒரு பெருமகன். இஸ்லாமியக் கொள்கைகளோடு உலக நடைமுறைகளை சமரசம் செய்து கொள்ளாத  ஒரு மாமனிதர்.  இவர்கள் தொடர்பாக ஹாஜா முகைதீன் சார் அவர்கள் நினைவலையின் ஒரு ஒளிக்கீற்றைப் பகிர்ந்தார்கள். 

ஒரு முறை,  முதல் நாள் மாலை கடைசி வகுப்பாக ஒரு வகுப்பறையில் வட்டி, கூட்டு வட்டி தொடர்பான பாடம் ஹாஜா முகைதீன் சார் அவர்களால் நடத்தப்பட்டது. பாடம் நடத்தப்பட்டபோது கரும்பலகையில் வட்டி , கூட்டு வட்டி என்று எழுதப்பட்டு மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அன்றைய வகுப்பு அந்தப் பாடம் நடத்தப்ப்படும்போதே முடிந்ததால் அனைவரும் சென்று விட்டனர். கரும்பலகையில் எழுதப்பட்ட வட்டி, கூட்டு வட்டி ஆகிய வார்த்தைகள் அப்படியே அழிக்கப்படாமல்  இருந்தன. அடுத்த நாள் காலை முதல் வகுப்பு தீனியாத் வகுப்பு நடத்த உள்ளே நுழைந்த  மர்ஹூம் முகமது அலிய் ஆலிம் அவர்கள் கரும்பலகையில் அழிக்கப்படாமல் இருந்த  வட்டி என்கிற வார்த்தையை பார்த்ததும் பதைத்துப் போனார். “ வட்டியா? இந்த பாவத்தை  எல்லாமா பாடமாக நடத்துகிறார்கள்? “என்று கேட்டார்.    

 “ அது சரி இந்த பாடத்தை  நடத்துபவர் யார்? “ என்று அடுத்துக் கேட்டார்.

 மாணவர்கள் ஹாஜா முகைதீன் சார் என்று கோரஸாகக் கூறியதும்   கதி கலங்கிவிட்டார். காரணம் ஹாஜா முகைதீன் சார் அவர்களும் ஆலிம்சா அவர்களும் நெருங்கிய உறவினர்கள்.

 உடனே வகுப்பைவிட்டு வெளியேறி, ஹாஜா முகைதீன் சார் அவர்களைக் காண விரைந்து சென்று வட்டி பற்றிப் பாடம் நடத்துவதைப் பற்றிய  தனது எதிர்ப்பை அந்த இடத்திலேயே பதிவு செய்தார். ஹாஜா முகைதீன் சார் அவர்கள் ஆலிம்ஷா அவர்களுக்கு விளக்கம் சொன்னார்கள். “ இது பாடத்திட்டத்தில் உள்ள கணிதம். தேர்வில் இதில் கேள்விகள் வரும். மாணவர்களுக்கு இது இலகுவாக  பதினைந்து மதிப்பெண்கள்வரை பெற்றுத்தரும் . கணிதப்  பாடத்தில் குறைந்த மதிப்பெண் வாங்கிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் தேர்வு பெற  இது பெரும் உதவியாக இருக்கும்” என்று விளக்கிச் சொன்னார்கள். அதற்கு ஆலிம்சா அவர்கள், “அப்படியா! அப்படியானால் பாடம் நடத்தும்போதே   பரீட்சை எழுதிய பின் இந்த வட்டி பற்றிய நினைப்பை அறவே  மறந்துவிடும்படி மாணவர்களுக்குச் சொல்லுங்கள். அது தொடர்பான அல்லாஹ்வின் எச்சரிக்கை மற்றும் ஹதீஸ்களையும் அவர்களுக்கு வகுப்பிலேயே  எடுத்துச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்களாம்.   அவ்வளவு உறுதி படைத்த மனிதர். அவர்கள் தெருவில் நடந்து வரும்போது எதிரே பெண்கள் கவனக்குறைவாக  முகத்தை மூடாமல் வந்தால் உஸ் உஸ் என்று ஒலி எழுப்பி கவனப்படுத்துவார்கள். தனது கையில் குடை இருந்தால் அதை விரித்துப்  பெண்கள் இருக்கும் திசையை மறைத்து நடந்து செல்லும் பேணுதல் உள்ள பண்பாளர். அல்லாப் பிச்சை , நாகூர்ப் பிச்சை, நாகூர் அடிமை, என்றெல்லாம் பெயர்கள் வைக்கக் கூடாது. நாம் அனைவருமே அல்லாஹ் போட்ட பிச்சைதான். எனவே அவனது எண்ணற்ற பெயர்களில் ஒன்றையே சூட்டிக்கொள்ள வேண்டும்  என்று கண்டிப்புடன் கூறுவார்கள்.     அல்லாஹ் அவர்களது கபூரை வெளிச்சமாக்கி அவர்களை நல்லடியார்களோடு சேர்ப்பானாக! 

அடுத்து பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள்  மற்றொரு பேணுதலான ஆலிம் அவர்களை நினைவூட்டினார்கள். இது மர்ஹூம் அப்துல் பத்தாஹ் ஆலிம் அவர்களைப் பற்றியது. பத்தாஹ் ஆலிம்சா அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஓதும்போது இரத்த வாந்தி வரும் அளவுக்கு  முற்றிவிட்டது. மருத்துவமனைக்கு அவர்களைக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படும்போது மருத்துவர்கள் அப்துல் பத்தாஹ் ஆலிம் அவர்களுக்கு இரத்தம் உடலில் செலுத்த வேண்டுமென்று சொன்னார்கள். ஆனால் இரத்தத்தை உடலில் செலுத்திக்கொள்ள ஆலிம்சா அவர்கள் மறுத்துவிட்டார்கள். அருகில் இருந்த மற்ற   ஆலிம்களும் இதில் மார்க்க ரீதியான தவறு இல்லை என்று எடுத்துச் சொன்னாலும், இரத்தம் எடுக்கப்படும்போது அல்லது செலுத்தப்படும்போது தனது உடையில் இரத்தம் பட்டுவிட்டால் அது நஜீஸ் ஆகிவிடும் என்றும் அந்தச்செயல் பேணுதலுக்கு பொருத்தமாக இருக்காது என்றும் கூறி மறுத்து வபாத் ஆனார்கள். அல்லாஹ் ரஹ்மகும்.

சற்று நேரம் அமைதி நிலவியது. 

இந்த நேரம் மீண்டும் ஒரு மறக்க முடியாத இரத்ததான நிகழ்வை சுட்டிப் பேசத்தொடங்கினார் பேராசிரியர் அவர்கள்.,  கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட 5 மாணவர்கள் தொடர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களைக் கல்லூரியில் இருந்து நீக்காமல் அவர்களின் பட்டப் படிப்பு முடிந்து நன்னடத்தை சான்றிதழ் வழங்கும்போது பார்த்துக் கொள்ளலாமென்று அவர்களின் பெயர்களை இரகசியக்  குறிப்பேட்டில் குறித்து வைத்து இருந்தார்கள்.  இதை சற்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாணவர்கள் பற்றிய  ஒரு செய்தி பின்னர் வரவிருக்கிறது.  

அந்த நேரம் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெரிய விபத்து ஏற்பட்டு கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு விட்டது. அந்தப் பெண்ணையும் வயிற்றில் உள்ள குழந்தையையும்  காப்பாற்ற வேண்டுமானால் அதிக அளவு இரத்தம் தானமாக கொடுக்கப்பட வேண்டும். ஆனால் தேவைப்பட்ட  இரத்தத்தின் குரூப் மிகச்சிலரிடமிருந்து மட்டுமே கிடைக்கக் கூடிய ஓ நெகடிவ் ஆகும்.  ஓ பாசிடிவ் இரத்தம் பரவலாக கிடைக்கக் கூடியது. ஓ நெகடிவ் கிடைப்பது சிக்கலாகும். அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனக் கவலைக்கு ஆளாயினர்.

இந்த நிலையில் கா.மு. கல்லூரிக்கு இந்த   இரத்தத்துக்கான  கோரிக்கை வந்தது.  விருப்பமுள்ள கல்லூரி  மாணவர்களும் ஆசிரியர்களும்  மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று இந்த உயிர்காக்கும் உதவியைச் செய்ய வேண்டுகோள் விடுத்தோம்.  அவர்களில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் அவரது இரத்தப் பிரிவு ஓ நெகடிவ்  என்பதால் இவ்வழைப்புக்கு இணங்கி இரத்தம் கொடுத்தார். மேலும் சில மாணவர்களும் அவ்விதம் கருணை உள்ளத்துடன் தாங்களாகவே நேரில் சென்று இரத்தம் கொடுத்திருந்தனர் . தாயும் குழந்தையும் இறைவனின் கருணையால்  காப்பாற்றப்பட்டனர். 

மனமகிழ்வுக்கு ஆளான அந்தத் தாயின் குடும்பத்தினர் கல்லூரிக்கு வந்து இரத்தம் தந்த பேராசிரியர் அவர்களுக்கு நிறைய பழங்கள், பரிசுப்பொருட்கள் , ஒரு கணிசமான தொகை பணம் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுக்க வந்தார்கள். அவைகளை வாங்கிக் கொள்ள அந்தப்  பேராசிரியர் மறுத்துவிட்டார். ஒரு உயிரைக் காப்பாற்ற இரத்தம் கொடுக்கும் நிலையில் தன்னை வைத்திருக்கும்  இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் அதற்கு பதிலாக பணமோ, பொருளோ பெற்றுக்கொள்ள  என்றும் அவர் மறுத்துவிட்டார். பழங்களையாவது பெற்றுக்கொள்ளும்படி மிகவும் வற்புறுத்தியும் மறுத்துவிட்ட அந்தப் பேராசிரியர் சொன்னார். “எனக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் ஒரு காரியம் செய்யுங்கள். எனக்குத் திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்லாப் பேறுகளையும் தந்த இறைவன் இதுவரை எங்களுக்கு  குழந்தை பாக்கியத்தைத் தரவில்லை. ஆகவே நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எங்களுக்காக து ஆச் செய்யுங்கள் அதுவே போதுமானது “என்று சொல்லி ஒரே ஒரு பழத்தைக் கூட  வாங்க மறுத்துவிட்டார். அதன்படி அவருக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் து ஆச்  செய்தார்கள். சுபஹானல்லாஹ். சரியாக இந்த நிகழ்ச்சி நடந்து ஒரு வருடத்துக்குள்ளாகவே அந்தப் பேராசிரியருக்கு நல்ல சுகமாக ஒரு குழந்தை பிறந்தது. 

இறைவன் தனது திருமறையில் 

"நன்மைகளின் பக்கம் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ள முயலுங்கள்" ( 5: 48 ) என்றும் 

"நீங்கள் ஒருவருக்கொருவர் தயாள குணத்துடன் நடந்து கொள்ள மறக்க வேண்டாம்" ( 2: 237) என்றும்

சொன்ன வாக்குகளை ஏற்று நடந்த அந்தப் பேராசிரியர் பெரும் பாராட்டுக்குரியவர். இவ்வளவும் சொல்கிறீர்களே அவர் பெயர் என்ன என்று சொல்லவில்லையே என்கிறீர்களா? அவர் பெயர் முனைவர் ஜனாப். ராஜா முகமது அவர்கள் ஆகும் .  இன்று வரை  நமது கல்லூரியில் இரசாயனத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்கள். 

இப்போது அந்த ஐந்து  மாணவர்களைப் பற்றிய செய்திக்கு வருவோம்.

மேலே குறிப்பிடப்  பட்ட விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு கல்லூரி மாணவர்களில் இந்த ஐந்து மாணவர்களில் இரண்டு பேர்களும் வலியச் சென்று இரத்தம் கொடுத்து விட்டு அதைப் பற்றி கல்லூரி நிர்வாகிகள் உட்பட யாரிடமும் சொல்லாமல் இருந்து விட்டார்கள். நன்றி சொல்வதற்காக இந்த மாணவர்களையும்  தேடி அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கல்லூரிக்கு வந்து முதல்வராக இருந்த பேராசிரியர் அப்துல் காதர் அவர்களிடம் அந்த மாணவர்களின் பெயர்களைக் கொடுத்து அழைத்து வரச் செய்தார்கள். மாணவர்களை நேரில் கண்ட முதல்வருக்கு பெரும் அதிர்ச்சி இருந்தது. எந்த மாணவர்கள் உடைய பெயர்களை  ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக கல்லூரி இறுதியாண்டில் நன்னடத்தை சான்றிதழ் வழங்கும் போது குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டுமென்று இரகசியக் குறிப்பேட்டில் குறித்து வைத்திருந்தாரோ அவர்களில் இரு மாணவர்கள் இப்படி சாதி இன மத வேறுபாடு இல்லாமல் கருணையுடன் நடந்து  இரத்தம் கொடுத்து ஒரு உயிர் காப்பாற்றப்பட காரணமாக இருந்தார்கள் என்பதை கண்ணுற்றபோது வியப்பு மேலிட்டது. 

அதுமட்டுமல்லாமல் அந்த இரு மாணவர்களும் எந்தப் பரிசுப் பொருளையும், பணத்தையும், பழங்களையும் கூட வாங்க மறுத்து பிறகு முதல்வரின் சொல்லுக்கு மதிப்பளித்து பழங்களை மட்டும் பெற்றுக்கொண்டார்கள்.  இந்த மாணவர்களின் கல்லூரிப் படிப்பு முடிந்து பட்டமளிப்பு விழா நடைபெற்ற போது இந்த மாணவர்களின் பெயர்களைப் பட்டம் பெறுவதற்காக அழைக்கப்பட்ட நேரத்தில் அரங்கில் இருந்த  அனைவரின் கர ஒலிகளுக்கு  இடையே இவர்களின் இந்தக் கருணையான செயலை   அங்கு வீற்றிருந்த பலகலைக் கழகத்தின் துணைவேந்தர் அவர்களிடம் விவரித்துச் சொல்லி, அனைவரும் அந்த மாணவர்களைப்  புகழ்ந்து பாராட்டியதாக பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் இந்த நிகழ்வைச் சொல்லி முடித்தார்கள்.     மாணவர்கள் கூட்டமாக இருக்கும்போது மற்றவர்கள் ‘உசுப்பேத்தி’ விடுவதில் தவறுகளை செய்யத்   துணிகிறார்கள். வேலை நிறுத்தம் போன்ற ஒழுங்கீனங்ககளுக்குத் தலைமை ஏற்கிறார்கள். அதே நேரம் தனி மனிதர்களாக மிகவும் மனிதாபிமானம் உடையவர்களாகவே  இருககிறார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு நல்லுதாரணம். .  

இதன்பின் பேச்சு இஸ்லாமிய இலக்கியங்களை நோக்கித் திரும்பியது. இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டு, ‘அப்பாசியா’ ஆட்சிக்காலம். முஸ்லிம்கள் கல்விப்பணியில் உச்சநிலை அடைந்திருந்த பொற்காலமாகும். ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்களும் அவர்களைச் சூழ்ந்திருந்தவர்களும் பேரறிஞர்களாகத் திகழ்ந்த நல்ல காலமாகும். இப்படிப்பட்ட அறிஞர்களால் வடித்தெடுக்கப்பட்ட இஸ்லாமிய இலக்கியச் செல்வங்களின் குவியல்கள்  இன்று எங்கே? 

இதனைப் பற்றி ,  ஜனாப் நூர் முகமது அவர்கள் சொன்ன தகவல்கள்  பிரம்மிப்பும், அதே நேரம் மிகுந்த வேதனையும் தருவதாகவும் அமைந்தது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..
இபுராஹீம் அன்சாரி

19 Responses So Far:

sabeer.abushahruk said...

காக்கா,

அமர்வு, கலந்துரையாடல், அலசல் என்று எப்படி வேண்டுமானாலும் வகைப்படுத்திக்கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு வாய்ப்பதோ அரிதான, அருமையான தகவல்கள் தேன் தமிழ் உரைநடையில்.

வாழ்ந்து மறைந்த ஆலிம்ஷாக்களின் மார்க்கம் பேணும் பண்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. நம் ஈமானின் பலகீனம் எண்ணி பயமாயிருக்கிறது.

தொடர்வதற்காக நன்றியும் துஆவும்.

Abdul Razik said...

This memorable events from top literates of Adirai has been strapped me to know all moments of their life. Kaka please don’t keep long interval to script the further sweet moments.

Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இரண்டு ஆலிம்களும் அவர்களின் நிலையில் மார்க்கத்தில் உறுதியாகவும், தனது ஈமான் பலமிக்கதாகவும் இருப்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்கள் (அல்லாஹ் ரஹ்மகும்)... அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக !

மார்க்கத்தில் அவர்களின் உறுதி போன்று நம்மையும் இருக்க அல்லாஹ் அருள் புரிவானாக !

என்னைப் பொறுத்தமட்டில் ஆலிம்கள் இருவரும் வாழ்ந்த காலத்தில் மன உறுதிக்கும் மார்க்கத்தின் பிடிப்புக்கும் சிறந்தவர்களாகவே இருந்தார்கள் என்றே நான் கருதுகிறேன்...

மொத்தத்தில் இந்த உரையாடல் பல்சுவையாக தடம் பதிந்து கொண்டு பயணிக்கிறது... தொடரனும் இன்னும் இன்ஷா அல்லாஹ் !

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா..

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மார்க்கத்தை பேணி நடந்த
ஆலிம்களுக்கு வல்ல அல்லாஹ்!
நல்பதவி வழங்கி
நல்லருள் புரியட்டும்!

தொடர்ந்து கல்வியாளர்களின்
சுவைமிக்க உரையாடல்!
அழகிய எழுத்து நடை!
வாழ்த்துக்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அன்றைய நிகழ்வுகளின் அருமைத் தகவல்கள்!

//அல்லாப் பிச்சை நாகூர்ப் பிச்சை, நாகூர் அடிமை, என்றெல்லாம் பெயர்கள் வைக்கக் கூடாது. நாம் அனைவருமே அல்லாஹ் போட்ட பிச்சைதான். எனவே அவனது எண்ணற்ற பெயர்களில் ஒன்றையே சூட்டிக்கொள்ள வேண்டும் என்று கண்டிப்புடன் கூறுவார்கள். அல்லாஹ் அவர்களது கபூரை வெளிச்சமாக்கி அவர்களை நல்லடியார்களோடு சேர்ப்பானாக!//

அது போல பெயர் வைக்கும் போது தமிழில் உச்சரிக்கக்கூடிய எழுதக்கூடிய வகையில் பெயர் வைப்பது அவசியம் என சொல்லியும் இருக்கிறார்கள்.. இவ்வாறு தாய் மொழிக்கும் முக்கியத்துவம் கருதினார்கள். அரபு தமிழ் இரண்டையும் ஒப்பிடாமல் வைக்கும் பெயர்கள் தான் இன்று அரசு பதிவேடுகளில் பெயர்கள் சின்னாபின்னமாக்கப் படுகிறது. (திட்டமிட்டு செய்யும் பெயர்க் கொலைகள் வேறு)

KALAM SHAICK ABDUL KADER said...

முஹம்மத் அலிய் ஆலிம் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகள் மனத்தினில் நினைவு நாடாக்களைப் பின்னோக்கிச் சென்று காட்சிகளாய்க் காண வைத்தன.
அவர்கள் வாழ்ந்த தெருவில் பிறந்து-வளர்ந்தும்; அவர்கள் தொழ வைத்த பள்ளியில் தொழுதும்; அவர்களுடன் நிரம்பக் கற்றும் தெளிவு பெற்ற அடியேனிடம்,”அபுல் கலாம் என்றால் பேச்சின் தந்தை என்ற ஒரு பட்டம்; பட்டத்தைப் பெயராக வைத்தது யார்?” என்று சொல்லி பெயரை மாற்று என்பார்கள். மேலும், ”அறபு மொழிக்கு ஈடான தமிழ் உச்சர்ப்பைப் பயன்படுத்த வேண்டும்; அதனால் உச்சரிப்பு ஒன்றாக அமையும்” என்பார்கள். பெண் வீட்டில் கணவர் வாழுவது முறையா என்ற என் வினாவிற்கு , அவர்கள் தந்த விடை:” நம் நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்கள் , ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் வீட்டில் வாழ்ந்துள்ளார்கள்” என்பார்கள்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இபுறாகிம் அன்சாரி காக்கா, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் தாங்கள் அப்படியே அன்று நடந்த நிகழ்வுகள் முதல் இன்று நடந்த நிகழ்வுகள் வரை வரிசைப்படுத்தி அழகுற இங்கு தந்து மகிழ்வது எமக்கு என்றோ விடுபட்ட முக்கிய சிலபஸ்களை சாகவாசமாக எங்கோ இருந்து கொண்டு படிப்பது போல் ஒரு அற்புதமான உணர்வு ஏற்படுகிறது. தொடருங்கள் உங்கள் எழுத்துப்பணியை......

இப்னு அப்துல் ரஜாக் said...

அலி ஆலிம் அவர்களை பற்றிய நினைவுகள் அருமை அல்லாஹ் அவர்களுக்கும் நம்மை விட்டு முந்தி சென்ற எல்லா முஸ்லிம்களுக்கும் அருள்புரிவானாக

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். பொற்குவியலில் இருந்து இப்படி வாரி,வாரி வழக்கும் இந்த சொற்கண்டு, கற்கண்டாய் இனிப்பதை மறுக்க முடிவில்லை.அல்ஹம்துலில்லாஹ்! நியாபகத்திரட்டும், அதை திரட்டும் உங்கள் எழுத்துபா(ப)ணியும் சிறப்போ. சிறப்பு!

Ebrahim Ansari said...

அன்பானவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

படித்துக் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றிஉடன் து ஆக்கள்.
ஜசக்கல்லாஹ்.

அபு முஹம்மத் said...

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…
/// முஹம்மத் அலிய் ஆலிம் அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகள் மனத்தினில் நினைவு நாடாக்களைப் பின்னோக்கிச் சென்று காட்சிகளாய்க் காண வைத்தன...................... பெண் வீட்டில் கணவர் வாழுவது முறையா என்ற என் வினாவிற்கு , அவர்கள் தந்த விடை:” நம் நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்கள் , ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் வீட்டில் வாழ்ந்துள்ளார்கள்” என்பார்கள். ///

என்று ஒரு தவறான கருத்துப்பிழை பதியப்பட்டிருப்பது போல் தோன்றுகிறது. சகோ. S. அலாவுதீன் அவர்களை, இவ்விஷயதில் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

அப்துல் கபூர்.
துபை

அப்துல்மாலிக் said...

//அனைவரும் அந்த மாணவர்களைப் புகழ்ந்து பாராட்டியதாக பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் இந்த நிகழ்வைச் சொல்லி முடித்தார்கள்.//

“சாட்டை” திரைப்படம் இது மாதிரி நல்ல விசயங்களை சொல்லுது. நல்ல செய்தி (மாணவர்களுக்கும்/ஆசிரியர்களுக்கும்) சொல்லும் சிறந்த படைப்புகளுக்காகவே இங்கே திரைப்படம் பற்றி சொன்னேன்...

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அப்துல் பத்தாஹ் ஆலிம் அவர்கள் இறந்த இரங்கல் செய்தியில் ஆரூர் ஜலால் அவர்கள் இப்படி எழுதி இருந்தார் என்னுடைய திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பத்தாஹ் வந்திருந்தார்கள் அப்பொழுது எங்களூரில் ஒரு சாரார் இந்த திருமணத்தில் கலந்து
கொள்ளாமல் திரும்பி சென்றுவிடுங்கள் இல்லையென்றால் உங்களை கொலைசெய்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.அதற்கு பத்தாஹ் ஆலிம் அவர்கள்
மிக அமைதியாக ஜலாலுடைய திருமணதில்தான் என்னுடைய உயிரை வாங்க வேண்டும் என அல்லாஹ் நாடினால் அதை தடுக்க யாரால்முடியும் என கேட்க,, வந்தவர்கள் திரும்பிசென்றுவிட்டார்கள் என எழுதி இருந்தார்கள்
பத்தாஹ் ஆலிம் அவர்களின் ஈமான் எந்த அளவு
உறுதியானது,எவ்வளவு பொறுமையானவர்கள் என்பது இதன் மூளம் விளங்குகிறது.இன்னும் பல காலம் இருந்து நம் சமுதாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்களை ஏனோ இறைவன் இளம்வயதில் அழைத்துக்கொண்டான்.மர்ஹூமான அவர்களின் மஹ்பிறத்தில் நற்பதவியை கொடுக்க துவாசெய்வோம் ஆமீன்

Unknown said...

நல்ல உரையாடல்களை மகிழ்வோடு வாசித்து வருகிறேன். இந்த ஜனாப் என்ற பயன்பாட்டில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.

தமிழக முஸ்லிம்கள் திரு என்ற சொல்லை ஒருவரின் பெயருக்குமுன் இட்டு பயன்படுத்தினால் ஏதேனும் பிழையாகக்கூடும் என்று நினைத்து ஜனாப் என்று பயன்படுத்தினர். ஜனாப் என்ற சொல் எங்கிருந்து எப்படி வந்தது என்று தேடிப்பார்த்தேன். இது அரபு மொழி வழக்கமாக இருக்கும் என்றுதான் நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நான் சவுதி அரேபியா சென்று அங்கே அவர்களோடு உரையாடியபின்தான் புரிந்துகொண்டேன் அராபியர்களுக்கு ஜனாப் என்றால் என்னவென்றே தெரியாது என்ற உண்மையை.

முகம்மது நபி அவர்கள் ஜனாப் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. அவரையும் யாரும் ஜனாப் என்று அழைத்ததும் இல்லை. பிறகு எங்கிருந்து இந்தச் சொல் வந்திருக்க முடியும் என்று தேடினேன். பார்சி மொழியில் ஜனாப் என்றால் உயர்வான என்று பொருள். பார்சிக்காரர்கள் இச்சொல்லை பரப்பி இருக்கக் கூடும் அல்லது அவர்களிடமிருந்து தமிழ் முஸ்லிம்கள் பெற்றிருக்கக் கூடும்.

தமிழ் முஸ்லிம்கள் ஒன்று அரபிச் சொல்லைப் பயன்படுத்தலாம் அல்லது நேரே நம் தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு ஏன் பார்சி மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

சவுதி அரேபியாவில் ஜனாப் என்பது அல்-கசீம் என்ற மாநிலத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர். அதைப்போய் தமிழ் முஸ்லிம்களின் பெயர்களுக்கு முன் இட்டு அழைப்பது ஏற்புடையதா என்று சிந்திக்க வேண்டும்.

இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.

அராபியர்களின் மரியாதைக்குரிய வழக்கம்தான் என்ன? சேக் என்று அழைப்பதுதான் அவர்களின் வழக்கம். வயதில் மூத்தவர்களையும் கற்றறிந்தவர்களையும் உயர் பதவி வகிப்பவர்களையும் மரியாதையாக அவர்கள் சேக் என்றே அழைக்கிறார்கள்.

முழுவதும் வாசிக்க: http://anbudanbuhari.blogspot.ca/2012/11/blog-post.html

அன்புடன் புகாரி

KALAM SHAICK ABDUL KADER said...

//இதில் சிலர் பெண்களை ஜனாப் என்ற சொல்லுக்கு பெண்பாலாக ஜனாபா என்ற சொல்லைக் கொண்டு அழைத்துவிடுகிறார்கள். ஜனாபா என்றால் அசுத்த நிலை என்று பொருள். காம உணர்வின் காரணமாக அசுத்தமாகிவிடுதலையே இது குறிக்கிறது. ஜனாபாவாக இருப்பவர்கள் தொழுகைக்கு முன் குளித்துவிட வேண்டியது இஸ்லாத்தில் கடமை.//

இதே கருத்தை இக்கட்டுரையில் அலசப்படும் முஹம்மத் அலிய் ஆலிம் அவர்கள் ஜூம் ஆ பயானில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

Anonymous said...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புச் சகோதரர் அப்துல் கபூர் அவர்களுக்கு:

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

///நம் நபிகளார் முஹம்மத்(ஸல்) அவர்கள் , ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் வீட்டில் வாழ்ந்துள்ளார்கள்” என்பார்கள்.///

இந்தக் கருத்து அடியோடு தவிர்க்கப்பட வேண்டும். நபி(ஸல்) அவர்களின் மீது அவதூறான கருத்து. இப்பொழுதுள்ள மஜ்துன் நபவி - மதீனா பள்ளி இருக்கும் இடம் நபி(ஸல்) அவர்களின் சொந்த பணத்தால் வாங்கப்பட்டது. அதில் நபி(ஸல்) அவர்களை அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்தான் நபி(ஸல்) அவர்களும், அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும் வாழ்ந்த வீடு. நபி(ஸல்) அவர்கள் எல்லா மனைவிக்கும் மஹர் கொடுத்துதான் மணமுடித்தார்கள்.

இந்தக் கருத்தை சொல்லியவர்: எவ்வளவு பெரிய ஆலிமாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இந்த அவதூறான கருத்து தவிர்க்கப்பட வேண்டும்.

அதிரை நிருபரில் இந்த கருத்துப் பதிந்திருந்தால் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

-----
அலாவுதீன். S.

அபு முஹம்மத் said...

வ அலைகுமுஸ்ஸலாம்.

தெளிவுபடுத்தியதற்கு, மிக்க நன்றி.

ஜஜாகல்லாஹ் கைர்.

அப்துல் கபூர்.
துபை.

KALAM SHAICK ABDUL KADER said...

ஜஸாக்கல்லாஹ் கைரன், மார்க்க போதகர், அன்புச் சகோதரர் அலாவுதீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு