தெளிவான வேதம் தரைவந்த மாதம்
ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம்
பிரகாச இரவை பிசகாத அருளை
பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா
பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து
பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற
கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில்
கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’
கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்
நிற்கின்ற நிலையில் நெடுநேரம் தொழுதோம்
நெற்றி நிலம்தொட்டு நின்றன்முன் விழுந்தோம்
பட்டதுய ரெல்லாம் போதுமென அழுதோம்
பகலிரவு பாராமல் பிரார்த்தித்தே எழுந்தோம்
கணக்கிட்டுக் கொடுத்த தர்மங்கள் அறிவாய்
மெனக்கெட்டு செய்த தியானங்கள் ஏற்பாய்
மனக்கட்டுக் கொண்டு துதித்தது உனையே
இனக்கட்டுச் சிறக்க இறைஞ்சுகிறோம் அல்லாஹ்
அன்பிலும் அருளிலும் அளவற்ற நீதான்
அகத்தையும் புறத்தையும் அறிந்திட்ட அல்லாஹ்
எண்ணமும் செயல்களும் செய்திட்டப் பாவம்
மன்னித்துக் காத்திடு மறைதந்த இறையே
இம்மையும் மறுமையும் அழகாக்கி தருவாய்
இழிவையும் அழிவையும் நிகழாது நீக்கு
உன்னையே துதிக்கிறோம் உளமாற கேட்கிறோம்
நரகத்து நெருப்பை எமைவிட்டு விலக்கு
ஏந்திடும் கரங்களில் ஈடேற்றம் இடுவாய்
ஏகனே எங்களைச் சுவர்க்கத்தில் விடுவாய்
நீர்நிலை நெளிந்தோடும் நதிக்கரை தருவாய்
நின்னையே வணங்கினோம் எம்மைநீ காப்பாய்
நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா
ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
26 Responses So Far:
உருக்கத்தைக் கொட்டி உள்ளத்தைத் தட்டி -இறை
நெருக்கத்தைக் கேட்டு நெகிழ்வான பாட்டு!
கணங்களைச் சொற்களால் கட்டிப் பிடித்தே
மணங்கொள வைத்திடும் மாண்பும் - வணங்கிடப்
பாட்டிலே மின்னல் படரொளிப் பாய்ச்சலும்
காட்டுவான் நல்ல கவி
Assalamu Alaikkum
Dear brother Mr. Sabeer AbuShahrukh,
An excellent poem on Lailathul Qadr, dictated by your voice.
اللهم إنك عَفُوٌ تُحِبُ العَفوَ فاعفُ عَنِّي
O Allah, you are the forgiver; You love to forgive, so forgive me(us).
B. Ahamed Ameen
பாராட்டுக் காகப் பதர்கள்பின் செல்லாமல்
சீராட்டிச் செஞ்சொல் சிறப்புறுவான் -ஆராட்டி
ஞாலத்தில் வந்ததற்கு நன்றிசொல்வான், தம்கவியில்
காலத்தை வெல்வான் கவி.
மறைவந்த இரவினைத்தான் தூய
,மரபுவழி நெருக்கத்தில் பாடி
நிறைதந்தீர் என்னாசை தீர
நெஞ்சத்தின் நன்றிதனை ஏற்பீர்!
///நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா
ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!///
ஆமீன் அமீன் ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்!அல்ஹம்துலில்லாஹ்!அல்ஹம்துலில்லாஹ்!........
தெளிவான வேதம் தரைவந்த மாதம்
ஒளியான இரவில் இறைதந்த மார்க்கம்
பிரகாச இரவை பிசகாத அருளை
பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா
-------------------------------------------------
பிரகாச இரவை பிசகாத அருளை(அல்லாஹ் அக்பர்)மொழியின் மந்தஹாசம் இந்த வரிகளில் தவழ்கிறது!பிறைசார்ந்த உறவை படைத்திட்ட இறைவா!-இந்த உறவைத்தான் நாம் பிரித்து கொண்டு குறை நிறைந்த இனமாக்கிகொண்டோம் அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன். இனியேனும் விழித்தெழுவோம்.
பாவமென அறிந்தும் பழகியன பொறுத்து
பாரமென அழுத்தும் தண்டனை அகற்ற
கடைப்பத்து நோன்பின் ஒற்றைப்படைப் பிறையில்
கிடைத்திட அருள்வாய் ‘லைலத்துல் கதிர்’
---------------------------------------------------
இந்த லைலத்துல் "கதிர்" நன்மை விளைக்கும் கதிர் அமல்கள் அருவடை செய்வோம்.ஆமீன்
கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்
-----------------------------------------------
மொழியின் வீரியத்தில் திளைக்கும் வேளை!பொறுமையின் பெருமை பேசும் அழகிய வரிகள்!
நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா
------------------------------------------------
ஆமீன்,ஆமீன்,ஆமீன்
ஆயிரம் இரவுகளுக்கு மேலான இரவின்
அருள்மழை எம்மீது பொழியட்டும் அல்லாஹ்
முகமன் செய்தொழுகும் அதிகாலை வரையே
வானவர் உலவவே இறைஞ்சுகிறோம் அல்லாஹ்!
------------------------------------------------
இன்சாஅல்லாஹ் ! அல்லாஹ் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிட்ட அருள் புரியட்டும். அல்லாஹ் அக்பர்!
கவிசக்கரவர்த்தியே! ஓவ்வொரு வரியிலும் நம்மையை வாரிகொண்டீர். அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். எமக்கும் உங்கள் தூஆவில் நினைவுகூறுங்கள்.
அலைக்குமுஸ் ஸலாம்.
//கைக்கெட்டும் தூரம் கவளமென சோறும்
கைப்பிடி குவளையில் கனிகளின் சாறும்
கண்படும் அருகில் கிடைத்திட்ட போதும்
கடன்பட்ட நாவோ இறைப்புகழ் ஓதும்//
மெய்யான வரிகள். என்னை மெய்மறக்கச் செய்த வரிகள். மாஷா அல்லாஹ்.
நன்மை வேண்டி உருக்கமாய் செதுக்கி வரைந்த அர்த்தம் நிறைந்த அருமை கவி அறுவடை!
உளம் உருக வேண்டி நிற்கும் தண்டனையின் தற்காப்பு.
மறை வந்த இரவின் மகத்துவத்தின் சிறப்பு.
ஒன்றுக்கு ஆயிரமாக அள்ளித்தரும் இரவு.
நன்மையெனும் நாற்றங்காலை நடு நிசியில் நட்டால்
நஷ்டமில்லா இறைவனின் வெகுமதியின் சிறப்பு.
ஆயிரம் மாதங்களை விட சிறப்பு பொருந்திய புனித மிக்க இரவை
போற்றும் ஒரு அழகிய கவிப்பதிவு.
அபு ஆசிப்
//நரகத்து நெருப்பிற்கு விறகாக்க வேண்டாம்
நாள்தோறும் வெந்தழியும் தண்டனை வேண்டாம்
சுவனத்துக் கதவுகள் திறக்கின்ற மாதம்
சுகமான சீவிதம் கிடைக்கட்டும் இறைவா//
சுவனத்து தென்றலே மேனியிலே வீசிவிட்டு போகுதோ
என்ற நினைப்பை ஏற்படுத்திய வரிகள்.
abu asif.
//கணக்கிட்டுக் கொடுத்த தர்மங்கள் அறிவாய்
மெனக்கெட்டு செய்த தியானங்கள் ஏற்பாய்
மனக்கட்டுக் கொண்டு துதித்தது உனையே
இனக்கட்டுச் சிறக்க இறைஞ்சுகிறோம் அல்லாஹ்//
மாஷா அல்லாஹ் !
நல்லதொரு (கவிக்) கட்டு !
பிரார்த்தனைகள் அனைத்தையும் வல்லமை நிறைந்த அல்லாஹ் ஏற்று நம் அனைவருக்கும் அருள்புரிவானாக !
மாஷா அல்லாஹ்....அழகான து ஆ ...யா அல்லாஹ் கபூல் செய்வாயாக.ஆமீன்.ஆமீன்....யா ரப்புல் ஆலமீன்
நண்பனின் துவா நாவினில் உரைக்க கேட்டு தேம்பியழ நினைத்தது. தீங்குகளெல்லாம் நீங்கிடவே.!
பொருத்தமான இத் ''துவா''வை
அர்த்தம் புதைந்த இக் கவி நடையை
நிறுத்தாமல் நான் படித்து
நிலை மறந்தேன் உன் நினைவால்.!
நண்பனின் துவா
நாவினில் உரைக்க கேட்டு
தேம்பியழ நினைத்தது
தீங்குகளெல்லாம் நீங்கிடவே
பொருத்தமான இத் ''துவா''வை
அர்த்தம் புதைந்த இக் கவி நடையை
நிறுத்தாமல் நான் படித்து
நிலை மறந்தேன் இறை நினைவால்.!
அஸ்ஸலாமு அலைக்கும்,
அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று ஏகத்துவ சிந்தனை தூணடும் வரிகள்.
அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று ஏகத்துவ சிந்தனை தூணடும் வரிகள்
சபீர்..உன் குரலில் / எழுத்தில் ஒரு நல்ல ஆக்கம். பயன்படுத்துபவர்கள் - பயனடைவர்.
வல்ல அல்லாஹ் நம் அனைவரின் துஆவையும் அங்கீகரித்து லைலத்துல் கத்ர் இரவின் அருள்மழை பொழியச் செய்வானாக, ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஒன்பது கவிதை கட்டுகளிலும்' எதை தொடலாம்? எதை விடலாம்?' என்ற 'டைலிமா'வில் நான் கொஞ்சம் தடுமாறியே போனேன்! அத்தனையும் அல்லாஹ்வை போற்றும் அற்புத வரிகளே!
தமிழ் கவிதை உலகுக்கு அதிராம்பட்டினம் ஒரு குழந்தையை பிரசவித்து விட்டது! அது 'அதிரைநிருபர்' தொட்டிலில் இப்போது
தாலாட்டு பாடுகிறது.
ஆம்!
இது 'குழந்தை பாடும் தாலாட்டு!''.அந்த குழந்தை யார்?'
'வேறு யாருமல்ல! மருமகன் சபீர் அபுசாருக்கேதான்.
'இறைவன் அருளியஇரவு' அதற்கு அச்சாரம் போட்ட கவிதை வரிகள்.
Sமுஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்
Post a Comment