Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்! - தொடர் - 25 36

அதிரைநிருபர் பதிப்பகம் | July 27, 2013 | , ,

தொடர் : இருபத்தி ஐந்து
இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் – ஜகாத்

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ்  பெற்ற ஒன்று. ஆனால் அவை எல்லாம் வெற்று கோஷத்துடன் நின்று விட்டன.  அல்லது நீர்க்குமிழிகள் போல் சில திட்டங்கள் சில வருடங்கள் மட்டுமே தோன்றி மறைந்துவிட்டன. அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மறைக்கப்பட்டுவிட்டன.  காலம் தோறும்  நின்று நிலைக்கும்படி ஆக்கபூர்வமாக எதுவும் செய்யப்படவில்லை.  ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் ஏற்றத்தை என்றுமே காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்

பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இஸ்லாத்தின் கோட்பாடுகளில், இஸ்லாத்தின் ஐந்து கட்டாயக் கடமைகளில் ஒன்றாக சேர்க்கப் பட்டு, உலகில் மனித இனம் வாழ்வதற்கு பொருளாதாரம் எவ்வளவு முக்கியம் என்பதை இறைவனே உலகுக்குப் பறைசாற்றும் ஒரு ஜீவாதாரக் கொள்கை ஜகாத். படைத்த இறைவனின் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரக் கொள்கைதான் ஜகாத். இஸ்லாமிய அமைச்சரவையின் பொருளாதார  திட்டக் கமிஷனின் தலைமை இடம் ஜகாத்துக்குத்தான்.  ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.

அவரவர் திறமைக்கேற்ப  பொருளீட்டும் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வை எடுத்தெறிந்து  பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமையை இக்கடமை பெற்று இருக்கிறது. பொருளாதாரத்தின் ஆணிவேரான  உற்பத்திப்  பெருக்கத்துக்கு ஜகாத்  காரணமாகிறது. அடுத்து,  செல்வம் ஒரே  இடத்தில் குவியாமல் செல்வத்தின் பகிர்வு பகிர்வு என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் மற்ற இசங்களுக்கு மத்தியில் ஆன்மீக முறையில் அடக்கமாக கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் பணியைச் செய்கிறது. மேலும் ஜகாத் பொருளாதாரத்தின் ஆதாரமான வேலை வாய்ப்புப் பெருக்கத்தையும் வாய்ப்புகளையும் அதிகமாக்குகிறது. உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது.

நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால்  உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால்  வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது.  இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும்.  பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது  முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்.

அடுத்து சொல்ல வருவதுதான் மிக முக்கியம்.

இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும்.  இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.

தனது செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை எழைகளுக்கு வருடா வருடம் வரியாகப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டுமென்கிற சட்டம் சமுதாயத்தில் பாய்கிற போது கொடுப்பவருக்கும் துன்பமில்லை. அதைப் பெறுபவர் அந்த நிதியைக் கொண்டு தங்களின் ஏழ்மை வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள இயலும் என்பதே இதன் பொருளாதாரத் தத்துவம். ஒரு பணக்காரரின் வருமானத்திலிருந்து ஒரு சிறு அளவு,  ஜகாத்தாக ஏழைக்கு சென்று சேர்கிற பொழுது பணக்காரருக்கு ஏற்படும் இழப்பைவிட ஏழைக்குக் கிடைக்கும் இலாபமே அதிகமாகும். இதனால் ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம்    சம்மணம்  போட்டு அமரும்.

ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல்  வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். ஆண்டுதோறும் ஜகாத்  செலுத்தப் படவேண்டுமென்கிற  விதி  இந்த ஆன்மீகப் பணியின் மூலமான சமுதாய வளர்ச்சி   தொய்வில்லாமல் நடைபெற வழி வகுக்கிறது.  சொர்க்கத்தில் நமக்கென இடத்தைப் பதிவு செய்யும் நன்மைக் கட்டணமாக ஜகாத் இறைவனிடம் சென்று செயல்படுகிறது.

மனிதப்  பிறவியின் மாறுபட்ட மோகம், பொறாமை, கர்வம், அகம்பாவம் போன்ற கெட்ட இயல்புகளை  மாற்றும் மாபெரும் சக்தி ஜகாத்துக்கு இருக்கிறது.

‘ஆசைகளின் மூட்டை’ என வர்ணிக்கப் படும்  மனிதனிடம் இயல்பாகவே பொருளாதாரத்தில் மோகம் இருக்கின்றது. பொருளாதாரத்தைத் தேடி, திரட்டி அதைப் பார்த்து மகிழ்வடையும் மனநிலை காணப்படுகின்றது. தொடர்ந்து நியமப்படி ஜகாத்  வழங்கிவரும் ஒருவனிடம், பொருளாதாரத்தின் மீதான வெறித்தனம் தணிந்து அதிலே ஓரளவு தாராளத்தன்மை ஏற்படும். இது ஏற்பட்டு விட்டால் நியாயமான முறையில் பணம் திரட்டும் பக்குவம் ஏற்பட்டுவிடும். நீதியையும் நேர்மையையும் நெறிப்படுத்தும் மாபெரும் சக்தி பெற்றது ஜகாத்.

தான் தேடிய செல்வத்தை, தான் கூட அனுபவிக்காமல், அதனைப் பார்த்துப் பார்த்து ரசிக்கும் தன்மை பலரிடம் காணப்படுகின்றது. தனக்கே செலவழிக்காதவன் பிறருக்கு எப்படிக் கொடுப்பான்? இறைவனின் ஆணையை ஏற்று, இந்தக் கட்டாய தர்மத்தைச் செய்பவனிடம் கஞ்சத்தனம் விடுபட்டுவிடும். அதன் பின் அவன் தாராளத் தன்மையுடன் உபரியான தர்மங்களைச் செய்பவனாக மாறிவிடுவான். கஞ்சத்தனம் இஸ்லாத்தில் கண்டிக்கப்பட்ட குற்றமாகும்.

தனக்குக் கிடைத்தது அடுத்தவனுக்குக் கிடைத்து விடக்கூடாது, அல்லது அடுத்தவனுக்குக் கிடைத்தது அவனிடமிருந்து அழிந்துவிட வேண்டும்என்ற உணர்வே பொறாமையாகும்.  ஜகாத்  கொடுப்பவன் தன்னைப் போல் அடுத்தவனும் பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று விரும்புவதால் அவனிடமிருந்து இயல்பாகவே பொறாமைக் குணம் பாதியிலேயே கழன்றுபோய் விடுகிறது.  ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத்  மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.

சிலரிடம் பெருமை, கர்வம் என்ற தீய குணம் இருக்கலாம். தன்னைப் போல அடுத்தவனும் உயர்வடைவதை, கர்வம் கொண்டவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், ஜகாத்   செல்வந்தர்களிடம் இந்த கர்வ உணர்வை ஒழிக்கின்றது. ஏழைகளும் செல்வந்த நிலையை அடைவதை விரும்புபவனிடம் கர்வம் அற்றுப்போகும். பொது நல உணர்வு மேலோங்கும்.

பணம்படைத்தவர்களில் பலர்  சமூக உணர்வு அற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் ஜகாத் வழங்குபவர்களாக மாறும் போது சமூகத்தில் நலிவடைந்தவர்களின் வாழ்க்கை நிலவரத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்கள் மீது அக்கறை  காட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இவர்கள் ஏழைகளின் மீது  அக்கறை செலுத்தும் போது,  இயல்பாக சமூக உணர்வு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு நோக்கும் போது ஜகாத் பல்வேறு விதத்திலும் மனித மனங்களைத் தூய்மைப்படுத்தி நல்ல மாற்றங்களை                       விளை விக்கின்றது.

உலக சரித்திரத்தில் பொருளாதார சித்தாந்தங்களில் இன்றுவரை பேசப்படும் ஒரு வார்த்தை வர்க்க பேதம் என்பதாகும். செல்வம் ஒரே இடத்தில் குவிவதால் ஒரு புறம்  பணக்கார வர்க்கமும் , அவர்களின் செல்வத்தின் குவியலுக்குக் காரணியாகத்  திகழ்கிற - காலத்துக்கும்  பஞ்ச்சையாக, பராரியாக யாரிடமும் எதுவும் கேட்கமுடியாத ஊமையாக  பாட்டாளி வர்க்கமும் அமைந்துவிட்டதால் - செல்வத்தைப் பகிர்வதற்கு ஆன்மீக ரீதியாக அன்பு முறையில் முறைகள் சொல்லப் படாததால் - வழிகள் வகுக்கப் படாததால் செங்குழம்பு இரத்தம் சிந்தப்  பட்ட  வரலாறுகளைப் படித்து இருக்கிறோம். அத்துடன் நேற்றைக்குப் பணக்காரன் இன்றைக்குப் பிச்சைக்காரன் ஆகும்படி அவனது செல்வங்கள் வன்முறையால் பிடுங்கப் படும் வரலாறுகளை ஜகாத் தடுத்து நிறுத்துகிறது. ஒரு ஆன்மீக உடன்பாட்டில் –இறையச்சத்தில்-  ஏழைகளுக்கு,  அவர்களுக்குரிய செல்வம் பணக்காரர்களால் பாசத்துடன் பந்திவைத்துப் பரிமாறப் படுகிறது.  அரசியல் சரித்திரத்தில் ஆன்மீக மேம்பாட்டில் அமைதியை  தழைக்கச் செய்யும் அருமருந்தே ஜகாத்.

இறைமறையிலும் நபி மொழியிலும் வலியுறுத்திக் கூறப்  படுகிற ஜகாத்துடன் நவீனப் பொருளாதாரத்தை ஒப்பிட்டுக் காட்டினால் ஜகாத்தின் சிறப்பு இன்னும் புலப்படும்.

இன்றைக்கும் வளரும் நாடான நமது இந்தியாவில் நக்சலைட்டுகள் என்றொரு இயக்கம் உருவாகி வெறியாட்டம் போடுவதன் பின்னணியில் வறுமையும் வேலை இல்லாத் திண்டாட்டமும் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. ஏழைகளின்பால்               இறக்கமற்றவர்களின் செல்வக் குவிப்பு - தனக்கே எல்லாம் வேண்டும் என்கிற சுயநலப் போக்கு  காடுகளில் மலைகளில் பல ஏழை இளைஞர்களை நெஞ்சில் பொறாமையுடனும்  கையில் துப்பாக்கிகளுடன் வன்முறை வெறியாட்டங்களுக்கு வித்திட்டு வைத்திருக்கிறது. பணக்காரர்கள் இரக்கமற்ற பாவிகளாக இருப்பதால் இல்லாதவர்களின் நெஞ்சில் அவர்களின் மேல் ஏற்படும் பொறாமைத் தீ  அமைதியான  வாழ்வுக்கு அங்கங்கே சாவுமணி அடித்துக் கொண்டே இருக்கிறது. ஜகாத்தின் சட்டங்கள் அமுலில் இருக்கும் நாடுகளில் - ஜகாத் வழங்கப் படும் சமுதாயத்தில் பணக்காரர்களின் மேல ஏழைகளுக்கு பொறாமைக்கு பதிலாக மரியாதை ஏற்படுகிறது என்பதே கண்கூடான காட்சி. ஜகாத் அரசாளும் பிரதேசங்களில் ஆண்டான் அடிமை வர்க்க பேதங்கள் அடிபட்டுப் போகின்றன. ஏழைகளையும் பணக்காரர்களாக்கும் இறைவனின் வித்தை இது . பணக்காரர்களை நன்மை செய்யத்தூண்டும் நற்பணி மன்றம் இது.

நவீனப் பொருளாதாரத்தில் வரிவிதிப்புக் கொள்கைகளை சில முறைகள் வரையறுக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது 

Keep it simple. The tax system should be as simple as possible, and should minimize gratuitous complexity. The cost of tax compliance is a real cost to society, and complex taxes create perverse incentives to shelter and disguise legitimately earned income.  என்பதாகும் . அதாவது, எந்த ஒரு வரியும் வசூலிப்பதற்கு இலகுவாகவும்  எளிதாகவும்  இருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சம். 

இன்றைய அரசுகள் வசூலிக்கும் வரிகள் இந்தத்தன்மையைப்பெற்று  இருக்கின்றனவா என்றால் இல்லை என்ற சொல்ல நேரிடும். வரியை வசூலிக்க அந்த குறிப்பிட்ட வரியால் வரும் வருமானத்தைவிட அதிகம் செலவழிக்க வேண்டி இருக்கிறது. விற்பனை வரிச்சட்டம்- வருமானவரிச்சட்டம்- நிலவரிச்சட்டம்- உள்ளூராட்சிவரிச்சட்டம் –  என்பன போன்ற சட்டங்கள், அவற்றிற்கான தனித்தனி அலுவலகங்கள்- அவற்றிற்கான ஊழியர்கள் என்றெலாம் அளவிடமுடியாத அமைப்புகள் மற்றும் செலவுகளை மேற்கொண்டே அரசுகளால் வரிகளை வசூலிக்க முடிகிறது. இத்தனை ஏற்பாட்டுக்குப் பிறகும் கூட இவற்றில்  பல கள்ளக் கணக்குகள்,  தில்லுமுல்லுகள், செப்பிடுவித்தைகள்,  ஏமாற்றுகள்,  நிலுவைகள் என்று   பலதகிடுதத்தங்கள் வெளிப்படுகின்றன.

இந்தியாவில் வசூலிக்க முடியாத நிலுவையில் உள்ள  வருமான வரிமட்டும் ஒழுங்காக வசூலிக்கப் பட்டால் அதைவைத்து எதிர்காலத்தில் வரியே போடாமல் ஆள முடியுமென்று ஒரு ஆய்வு கூறுகிறது. பலருடைய வரி பாக்கிகளுக்காக அவர்களுடைய இருப்பிடம் உட்பட சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுகின்றன. இருக்கும்போது  நவாப்சாவாக இருந்தவன் இல்லாவிட்டால் பக்கீர்சாவாக ஆகிவிடுகிறான். வரியை  ஏய்ப்பதற்கு தகுந்தபடி கணக்கை சரிக்கட்டுவதற்கே தனித்திறமை பெற்ற ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். அரசை ஏமாற்றி பதுக்கப் பட்ட பணம் கள்ளப் பணமாக உருவெடுத்து மற்றொரு பொருளாதார சீர்கேட்டின் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இவ்வளவுக்கும் காரணம் , வரி வசூலிக்கும் முறையும் சரியில்லாமல் இருப்பது மட்டுமல்ல வரிகளின் விகிதமும் உச்சாணியில் ஏறி , ஏமாற்றுவதை  தூண்டிவிடும்வகையில் அதிகமாக இருப்பதுதான்.  

இதற்கு மாறாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் ஜகாத் பிரதான  வரியாக விதிக்கப்படுவதாக நாம் கற்பனை பண்ணிப் பார்ப்போம்.  இறையச்சத்தின் அடிப்படையில் அமையும் அந்த சமுதாயத்தில் ஏமாற்று வேலைகளுக்கு வேலை இல்லை. சட்ட நடவடிக்கைகளுக்கு சாத்தியம் இல்லை. இருக்கும் சொத்தை ஏலம் விட அவசியம் இல்லை. தந்து தேவைகள் போக திரளும் செல்வத்தில் மட்டுமே செலுத்துபவர் தரும் சதவீதம் மிகவும் குறைவு என்பதால் செலுத்துபவர்களுக்கும் கஷ்டம் இல்லை; அரசுக்கு வருமானம் திட்டமிட்டபடி வந்து சேரும். ஜகாத் செலுத்துவதும் இறைவணக்கத்தின் ஒரு பகுதி என்று ஆகிவிடுவதால்  இன்முகத்துடன் எல்லோரும் அவரவர் வைத்திருக்கும் செல்வங்களுக்கு ஏற்றபடி தந்துவிடுவார்கள். இறையச்சத்தின் அடிப்படையில் கூடுதலான சதகா என்கிற தர்ம சிந்தனையும் சேர்ந்துகொண்டால் ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும்  பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும்.  இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா? 

நவீனப் பொருளாதாரத்தைப் பின்பற்றும் நாடுகள் மாய்ந்து மாய்ந்து தீய்ந்து போவது இரண்டு விஷயங்கள் பற்றித்தான். ஒன்று உள்நாட்டில் வறுமை, மற்றது வெளிநாட்டுக் கடன் அதன் வட்டிமற்றும் அதன் குட்டிகள்.

அரசின் வரி  வருமானம் ஜகாத் மூலம் சரியாக , ஒழுங்காக வருமானால் அரசு வெளிநாடுகளிடம் கடனுக்காக கை ஏந்தவேண்டியது இல்லை. அதற்காக பெரும்தொகையை வருடாவருடம் உலகவங்கிகளுக்கு வட்டியாகக் கட்டிவிட்டு தனது நாட்டு மக்களின் நல்வாழ்வுத்திட்டங்களுக்கு பணமில்லாமல் ஈரச்சாக்கைப் போட்டுப் போர்த்திக் கொண்டு படுக்க வேண்டியது இல்லை.

வளர்ந்து வரும் நாடான இந்தியா தனது வருமானத்தில் 26% த்தை வெளிநாடுகளில் வாங்கிய கடன்களுக்காக அழுது வருகிறது என்று புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. நாட்டில் வாழும் மக்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முழுமையாக தரப்படவில்லை. வறுமைக்கோட்டுக்கு கீழே பல கோடிமக்கள். இந்நிலையில் இவ்வளவு பெரும்தொகை வட்டியாகப் போகிறது . இந்த சுமையில் இருந்து மீள வல்லுனர்கள் கூறும் கருத்து வரிகளையும் வரிகளின் நிலுவைகளையும்  வசூல் செய்யுங்கள் என்பதுதான். ஆனால் வரி செலுத்தும் நிலுவைப் பட்டியலில் உள்ளவர்களோ மலை முழுங்கி மகாதேவன்களாக இருக்கின்றனர்.   அரசியலில் வாலாட்டும் தன்மை கொண்டவர்களுக்கு எலும்புத்துண்டுகளைப் போட்டு அவ்வப்போது தப்பித்துக் கொள்கின்றனர்.  இந்த நிலையில் ,

இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது மொத்த வெளிநாட்டு கடனான 390.04 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 172.35 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த தொகை இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடனில்  44 சதவீதம் ஆகும். 

உலகம் முழுதும் இத்தகைய நிலைகள் இருக்கின்றன. இப்படிப்பட்ட பொருளாதார சறுக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? யாரால் காப்பாற்ற முடியும்? இஸ்லாம் காப்பாற்றும். இஸ்லாமியப் பொருளாதாரம் காப்பாற்றும். காப்பாற்றச் சொல்லி இறைவனை நோக்கி கை ஏந்துவார்களா?

ஜகாத் பற்றிய இறைவனின் வாக்குகள், எச்சரிக்கைகள், நபிமொழிகள், வரலாற்று சம்பவங்கள் ஆகியவற்றை அடுத்து காணலாம்.


இன்ஷா அல்லாஹ் தொடரும்...

இபுராஹீம் அன்சாரி

36 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாத்தில் ஜகாத்தின் அவசியத்தை தக்க சமயத்தில் தெளிவாக நாட்டின் பொருளாதார நிலையுடன் மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். ஜஸாக்கல்லாஹ் ஹைர்.

உலகமே ஏழ்மையிலிருந்து மீள நம்மவர்களுக்கு இன்னும் அதிக செல்வத்தை தந்து அதற்கேற்றவாறு ஈந்து உதவ அல்லாஹ் நாடிடுவானாக ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

//“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்று முழங்கப் பட்ட கோஷம் அண்மைக்கால அரசியலில் இடம்பெற்ற கோஷங்களில் புகழ் பெற்ற ஒன்று.//

இந்த சிரிப்பு / இறைவன் எல்லாம் திராவிடக்கட்சிகளின் "உட்டாலக்கடி"- அதே சமயம் " கடவுள் இல்லை" என்பது இவர்களின் கோஷம் தான்....இல்லாத கடவுளை எப்படிக்காண்பீர்கள் என்று யாரும் கேட்டதாக தெரியவில்லை..

sabeer.abushahruk said...

ஏனைய பொருளாதரக் கொள்கைகள் கேனை மனிதர்களால் தொகுக்கப்பட்டதால் தோல்வியுற்று மண்ணைக் கவ்வுகின்றன.

ஜகாத், அல்லாஹ்வால் வகுக்கப்பட்டது. படைத்தவனால் உருவாக்கப்பட்ட ஜகாத்தைச் சரியாகப் பின்பற்றினாலே பொருளாதாரத்தில் எல்லோரும் தன்னிறைவடையலாம் என்பதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அதே சமையம் தெள்ளத் தெளிவாகவும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி ஜகபர் சாதிக்! அஸ்ஸலாமு அலைக்கும்.

சூரியனே மறையாத சாம்ராஜ்யத்தின் தலைநகரில் சூரியன் விரைவில் உதிக்கிறதா? முதல் பின்னூட்டத்துக்கு நன்றி. நோன்பு முடிந்து அந்த டீ வருமா?

அன்புத்தம்பி ஜாகிர்!

திராவிடக் கட்சிகள் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ப்பர்கள். இறைவனே இல்லை என்பார்கள். பிறகு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பார்கள். இவர்கள் நோக்கத்துக்கு கும்பலில் ஏதாவது அடிச்சு விடுவது. இப்படியே பேசிப் பேசி பிழைக்கக் கற்றுக் கொண்டார்கள். உலகப் பணக்காரர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டார்கள். நண்பர் பகுருதீன் பட்டாக் கத்தியைத் தீட்டி வைத்திருக்கிறார், வரும் வாரங்களில் சுழற்றி வீசுவார்.

அன்புக் கவிஞர் தம்பி ! ஜசக்கல்லாஹ் ஹைரன். கேள்வி ப்ளீஸ்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அருமையான விளக்கங்கள் அடங்கிய காட்டுகள் !

வருடந்தோறும் சிந்தனையில் வைத்திருக்க வேண்டிய ஜகாத்தை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே ஞாபகத்திற்கு கொண்டுவருகிறார்கள் நம்மக்கள்.

sabeer.abushahruk said...

கேள்வி கொஞ்சம் நேரம் கழித்துக் கேட்கிறேன்.

இப்ப, கத்துரையில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளுமையைச் சற்றே சுட்டிவிட விழைகிறேன்.

//ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம்.//

நெத்தியடி!

---------

//ஜகாத் என்பது பக்தர்கள் செலுத்தும் காணிக்கையல்ல; கடமை. ஜகாத் என்பது ஒரு சடங்கு அல்ல ; சட்டம்.//

பொற்கிழி பெற வழங்கப்பட வேண்டிய; பதாகையில் எழுதி ஊரெங்கும் வைக்கப்பட வேண்டிய கோஷம்.

---------
//ஒட்டுமொத்த சமுதாயத்தில் சமத்துவம் சம்மணம் போட்டு அமரும்//

அமராமல் எழுந்து நிற்கிறது எழுத்து; தலை நிமிர்ந்து நிற்கிறார் எழுத்தாளர் அவர்கள்.

----
//ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல் வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும்.//

கவிதை விரும்பியை, கட்டுரையை ரசித்து வாசிக்க வைப்பது என்ன தந்திரமோ!
----

இப்படியாக கட்டுரையின் சாராம்சம் இஸ்லாமியர் அல்லாதவரையும் ஜகாத் கொடுக்கத்தூண்டும் அளவிற்கு நேர்மையாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்டுள்ளது.

இந்தப் பேசுபொருளில் இந்தக் கட்டுரை பொருளாதார மற்றும் இஸ்லாமியப் பொருளாதாரத்தில் ஒரு மைல் கல்லாகவே கருதப்படும் என நம்புகிறேன்.

கேள்வி ரொம்ப சிம்ப்பிள் காக்கா, கேட்கவா?

sabeer.abushahruk said...

உங்கள் மதத்தின் ஜகாத் மூலம் இதுநாள்வரை என்னதான் சாதித்தீர்கள்? வருடத்திற்கு ஒருமுறை பிச்சையெடுக்கும் தற்காலிகப் பிச்சைக்காரர்களை உருவாக்கியதைத் தவிர?” என்று செவிட்டில் அடித்தான் ஒரு சக-வேலையாள்.

எனக்கு உறைத்தது. “ஜகாத் கொள்கையை விமரிசிக்கிறாயா அதை நடை முறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை விமரிசிக்கிறாயா?” என்ற கேள்விக்கு, “இப்படியே சமாளிச்சு காலத்த கடத்துங்க” என்று அவன் சொன்னதில் எனக்கு அர்த்தமுள்ளதாகப் படுகிறது. எனவே, என் கேள்வி:

-நடைமுறைப்படுத்தப்படாதவரை ஜகாத்தால் என்ன லாபம்?

-அப்படி நடைமுறைப்படுத்த முனைந்தாலும் “நம்ம ஆட்களின் தலைகள்” ஆயிரத்தெட்டு மாறுபட்ட வழிமுறைகளைச் சொல்லி சளிப்பு ஏற்படுத்தும்போது மனசு விட்டுப் போகிறதே. இதற்குத் தீர்வே இல்லையா?

-பைத்துல்மாலைக்கொண்டு ஜகாத்தை நிர்வகிப்பது சாலச்சிறந்ததென்கிறேன் (நான் ஓரு பைத்துல்மால அபிமானி;உருப்பினன்). மாற்றுக்கருத்துண்டா காக்கா.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா,காக்கா.

sabeer.abushahruk said...

கத்துரையை கட்டுரை என்று திருத்தி வாசிக்கவும்.

(ஸாரி காக்கா, கம்பெனில புதுசா ஐஃபோன் 5 கொடுத்தாய்ங்க. அபு இபு அதுல 'செல்லினம்' அமைத்துக்கொடுத்தார். எனக்குப்புதுசு. அதான் இந்த தகர டகர தடுமாற்றம், மன்னிக்கவும்.)

aa said...

மரியாதைக்குரிய இப்ராஹிம் அன்சாரி காக்கா அவர்களுக்கு:

//ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் திட்டத்தை மனிதனின் வாழ்நாள் கடமையாக்கி மார்க்கத்தின் சட்டமாக்கி வைத்திருப்பது இஸ்லாம். //

இவ்வாறு ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதென்பதெல்லாம் நம் இஸ்லாமிய கோட்பாடல்ல. மாறாக அது இஸ்லாமிய அடிப்படை அகீதாவிற்கு முரணானது. இத்தகைய வார்த்தைகள் இலக்கியத்திற்காக, உவமையாக சொல்லப்பட்டாலும் இஸ்லாம் கூறும் கலப்படமற்ற தவ்ஹீதிற்கு இந்த வார்த்தைகள் முரணாகவே உள்ளன. இந்த உவமைகளெல்லாம் ’எல்லாம் கடவுள் எல்லாவற்றிலும் கடவுள்’ என்ற அத்வைத கொள்கையுடைய குஃப்பார்களிடமிருந்து நாம் தொற்றிக்கொண்டது. கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் காஃபிர்கள் வருணிக்கும் தண்மைகளிலிருந்தும் தூய்மையானவன்.

எனவே தாங்கள் இந்த வரிகளை நீக்கிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி உங்களின் ஆக்கங்கள் மாஷா அல்லாஹ் மிகுந்த பிரயோசனமாக உள்ளன.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். எப்பொழுதும் போல் சிறப்பான ஆக்கம்.ஜ"காத்"=தீமையிலிருந்து ஜனங்களை காப்பாத்தும் அரன்.

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர் அஹமது பிர்தவுஸ் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும். ஜசக்கல்லாஹ் ஹைரன். தாங்கள் சுட்டிக் காட்டிய வார்த்தையை திருத்திப் பதியும்படி நெறியாளர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அன்புடன் குறிப்பிட்டுக் காட்டியதற்கும் ஆக்கத்தைப் பாராட்டியதற்கும் மிக்க மகிழ்ச்சி. தங்களைப் போன்றவர்கள் படிக்கும் விதமாக எழுத்தும் தகுதியைத் தந்த வல்ல இறைவனுக்கே எல்லாப் புகழும்.

வஸ்ஸலாம்.

Iqbal M. Salih said...

//இப்படி உபரியாக மனிதனால் ஈட்டப்படும் அந்தப் பணம் அடுத்தவர்களின் தேவைக்கு அளிக்கப் பட்டால் அது அவர்களின் அத்தியாவசிய காரியங்களுக்குப் பயன்படும். அதாவது ஒருமனிதன் தனக்குப் போதும் என்கிற நிலையில் கருதும் பணம் மற்றவனுக்கு வாழ்வின் ஆதாரமாக ஆகும். இதுவே ஜகாத் என்கிற தாரக மந்திரத்தின் சூட்சமக் கயிறு. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே ஜகாத் விதியாக்கப் பட்ட போது இன்றைக்கு நவீனப் பொருளாதாரத்தின் விதி இவ்வாறு இறைவனால் அன்றே உபதேசிக்கப் பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது.//

பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொருளாதாரச் சிந்தனை!

அறிஞர் அன்சாரி காக்கா அவர்கள், அதிரை நிருபர் மூழ்கி எடுத்து வந்த ஆழ்கடல் முத்து ஆவார்!

Ebrahim Ansari said...

கத்துரை என்று நீங்கள் சொன்னதும் ஒரு வகையில் சரியே தம்பி சபீர்.

நேற்று இங்கு ஜூம் ஆ பயானில் இந்தக் கத்துரையின் சாராம்சங்களே பேசும்படிக் கொடுத்து பேசப்பட்டது. ஏழையின் சிரிப்பு போன்ற சமாச்சாரங்கள் தவிர்க்கப் பட்டன. அந்த வகையில் இது ஒரு கத்துரையே. ஹஹஹாஹ்.

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி, வார்த்தைகளின் வடிவமைப்பாளர் கிரவுன் அவர்களே வருக!
ஜசக் அல்லாஹ் .

தம்பி இக்பால் இந்த ஆக்கத்தின் உயிர்நாடியைப் பிடித்து விட்டீர்கள். நீங்கள் பொருளியளிலும் மாணவர் என்று நான் நினைப்பது சரியா?

KALAM SHAICK ABDUL KADER said...

\\நவீன பொருளியல் கோட்பாடுகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்கள் LAW OF DIMINISHING MARGINAL UTILITY (குறைந்துசெல் பயன்பாட்டுவிதி) என்கிற கோட்பாட்டை விழுந்து விழுந்து படிப்பார்கள். இது வேறொன்றுமல்ல . ஒரு மனிதனின் பயன்பாட்டுக்கு உதவும் ஒரு பொருள் , அந்தப் பொருளின் அளவு அவனிடம் சேரச்சேர தொடக்கத்தில் அந்தப் பொருள் அவனிடம் சேரத்தொடங்கிய போது அந்தப் பொருள் அவனுக்குப் பயன்பட்டதாக அவன் உணர்ந்த அளவுக்குப் பயன்பாட்டை தொடர்ந்து சேரும் அதே பொருளால் அந்த மனிதனால் உணர முடியாது என்பதே இந்த விதி. உதாரணமாக சொல்லப் போனால் வேலைக்குச்சென்று வாங்கும் முதல் சம்பளத்தின் மீது இருந்த ஆர்வம், பயன்பாடு, தேவை, வேட்கை ஆகியவை முப்பது வருடங்கள் டேரா போட்டு சம்பாதித்து வாங்கும் கடைசி சம்பளத்தின் மீது மனிதனுக்கு இருக்காது. இடைப்பட்ட காலத்தில் அவன் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளத்தின் மீதும் ஆசை குறைந்துவிடும். பணம் சேரச்சேர மனதளவில் அதன் மதிப்பு இறங்கிக் கொண்டே வரும். முதல் சம்பளத்தின் தேடல் மற்றும் தேவைகளின் அளவு இருபதாவது முப்பதாவது சம்பளத்தில் இருக்காமல் இறங்க ஆரம்பித்துவிடும்\\

அன்பின் முனைவர் இ.அ.காக்கா என்னும் பேராசான் அவர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்

புகுமுக வகுப்பில் LAW OF DIMINISHING RETURNS படிக்கும் பொழுது புரியாத ஒரு விடயம் இப்பொழுது LAW OF DIMINISHING UTILITY யை இவ்வளவு எளிதான ஒரு காட்டுடன் விளக்கும் தங்களிடம் யான் அப்பொழுது பாடம் படிக்காமல் போய்விட்டேனே என்று எண்ணுகிறேன். ஆயினும், தங்களைப்போல், எங்கட்குப் பொருளாதாரப் பாடம் நடத்திய பேராசிரியர் அப்துல்ஜப்பார் அவர்களும் சிறிய உதாரணங்களைக் கொண்டே பெரிய விதிகட்கும் விளக்கம் தருவார்கள். UTILITY எனபதற்கு அவர்கள் சொன்ன - புரியும்படியான உதாரணம்: குளிர்காலத்தில் தேநீரும்; கோடை காலத்தில் குளிர்பானமும் தேவைப்படுதல். 1974ல் புகுமுக வகுப்பில் பொருளாதாரம் பயின்ற ஞாபகஙகளை எல்லாம் தங்களின் கட்டுரை என் நினவறையிலிருந்து மீண்டும் எழுந்து வரச் செய்து விட்டது.

ஏற்கனவே சொன்னதுதான்:
அஃதாவது,
அப்பொழுது பொருளாதாரப் பாடங்களைப் படிக்கும் காலத்தில் (1974 புகுமுக வகுப்பிலும்- 1975ல் வணிகவியல் பட்டப்படிப்பிலும்) கற்பிக்கப் பட்டப் பாடங்களில் எல்லாம் பொருளாதாரக் கொள்கைகள் (theories/concepts) நாத்திகமும்; “இயற்கை தான் எல்லாம்” என்னும் இஸங்களும் ஆகவே எம் முன்னால் காட்டப்பட்டன; இதில் வேடிக்கை என்னவென்றால் இதனை எமக்குக் கற்பித்தப் பேராசான்கள் எல்லாம் முஸ்லிம்கள் ஆவார்கள்! அதனைப் படித்துப் படித்தும் கேட்டும் எம் மனத்தினுள்ளும் அப்படிப்பட்ட நாத்திகம் மற்றும் “எல்லாம் இயறகை தான்” என்னும் நச்சுவிதைகளும் ஊன்றப்படுவதை அடியேனின் அடிமனத்திலும் அப்பாதிப்பை உணரத்தொடங்கினேன்; முன்னர் நான் சொன்னபடி மூன்றாமாண்டு (இறுதியாண்டு) பி,காம் படித்துக் கொண்டிருந்த வேளையில் தப்லீக் என்னும் திருப்பணியின் தொடர்பால் தமியேனின் “ஈமானும்” காப்பாற்றப்பட்டது; அல்ஹம்துலில்லாஹ்!

இப்பொழுதுதான் தூய்மையான- இஸ்லாம் போதிக்கும் உண்மையான பொருளாதராம் என்றால் என்னவென்றும் அதனடிப்படையும் “ஜகாத்”தான் என்பதும் விளங்க வைத்து விட்டீர்கள்; இவ்வாக்கங்களோ அல்லது தங்களின் தொடர்போ அப்பொழுது கிட்டியிருந்தால் எனக்குள்ளும் நச்சான நாத்திகப் பாதிப்புகள் ஏற்படாமலிருந்திருக்கும் அல்லவா?

தொடர்ந்துப் பொருளாதாரப் பாடத்தை எட்டிக் கூட பார்க்காமலிருந்தேன்; எங்கே மீண்டும் என “ஈமான்” என்னும் கண்ணைப் பறித்து விடுமோ என்ற அச்சத்தால்...

இப்பொழுது தங்களின் இஸ்லாமியப் பொருளாதாரம் என்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டிருக்கின்றது,முனைவர்= பேராசான் இ.அ. காக்கா அவர்களே!

அல்லாஹ் தங்களின் ஆயுளை நீட்டித்தும், ஆரோக்கியம் மற்றும் பேறுகளை வழங்குவானாக!

வாழ்க வளமுடன்!
சூழ்க பலமுடன்!!
.

Ebrahim Ansari said...

அன்பின் கவியன்பன் அவர்களுக்கு,

அலைக்குமுஸ் ஸலாம். இரண்டு விஷயங்கள் சொல்ல வேண்டும். நானும் புகுமுக வகுப்பில் அப்துல் ஜப்பார் சார் அவர்களின் மாணவனே. மேலும் படித்தது தமிழ் மீடியத்தில் என்பதால் பாடங்கள் இன்றுவரை மறக்கவில்லை. அதே வருடங்களில் ஆங்கில மீடியத்தில் படித்தவர்களிடம் பொருளாதாரத்தில் ஏதாவது கேட்டால் சொல்லத்தெரியாது.

நீங்கள் குறிப்பிட்டு இருக்கிற LAW OF DIMINISHING RETURNS நாம் மூலதனம் முதலீடு பங்குச் சந்தை ஆகியன பற்றி எழுதும்போது விளக்க முயற்சிப்பேன். இன்ஷா அல்லாஹ்.

இன்றைய கல்வி முறைகளில் கற்பிக்கப்படும்போது நாம் நிறைய பிற மதக் கருத்துக்களையும், இறைமறைக்கு எதிரான கருத்துக்களையும் பாட திட்டத்தில் வைக்கப் பட்டு அவற்றை கட்டாயமாகப் படித்து தேர்வு எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டு இருக்கிறோம்.

உதாரணமாக தமிழ்ப் பாடத்தில் எடுத்த உடனே கடவுள் வாழ்த்து - மனப் பாடப் பகுதி எந்தக் கடவுளைப் பற்றிய பாடலாக இருந்தாலும் மனப்பாடம் செய்தே ஆகவேண்டிய நிலை. இல்லாவிட்டால் பத்து மார்க் போய்விடும்.

அடுத்தது இராமாயணம், வில்லி பாரதம், சிலப்பதிகாரம், திருவாசகம், தேவாரம் போன்ற பால்டல்கள் உரைநடைகள் துணைப் பாடங்கள்.

உலக வாழ்வுக்காக இவற்றிலும் நம்மவர்கள் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டங்களும் வாங்கி வேலையை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. ஆனாலும் நம்மில் ஈமான் உறுதியாக இருக்கும் நிலையில் நம்மை ஒன்றும் அசைக்க முடியாது.

பொருளாதாரப் பாடங்கள் நம்மை நாத்திகக் கருத்துக்களை நோக்கி அழைத்துச் செல்லும் என்பதை நானும் மறுக்கவில்லை. காரணம் இந்தக் கோட்பாடுகளை எழுதிவைத்த ஆடம ஸ்மித் முதல் ராபின்ஸ் வரை இன்னும் பல பொருளியல் வல்லுனர்கள் என்று கொண்டாடப் படுவோர் அமெரிக்க, ஐரோப்பிய, யூத இனத்தவர்.

இஸ்லாமியப் பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளை உலகுக்குக் கொணரும் பல்கலைக் கழகங்கள் இன்னும் கூட சரிவர உருவாகவில்லை. இஸ்லாமியப் பல்கலைக் கழகங்கள் கூட ஆங்கிலப் பொருளாதாரத்தைதான் போதித்துக் கொண்டு இருக்கின்றன.

நமது மதரசாக்களில் பொருளாதாரம் ஒரு பாடமாக போதிக்கப்படுகிறதா என்பதை நான் அறியேன். யாராவது இதுபற்றித் தெரிவித்தால் நலமாக இருக்கும்.

Anonymous said...

''ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம்'' என்று திராவிட கட்சிகள் சொன்னதை சொன்னபடி செய்தே காட்டினார்கள். அப்போதும் திராவிட கட்சி தலைவர்களின் குடும்பங்கள் எல்லாமே ஏழைகளே! இப்போதும் கூட அந்தகட்சி தலைவர்களுக்கு பிறக்கப் போகும் கொள்ளுப் பேரனுக்கு கொள்ளுப் பேரன்கூட ஏழையாகவே பிறப்பார்கள்!

மதுரை வைகை ஆற்றங்கரை ஓரத்திலும் சென்னை கூவம் நதிக்கரை ஓரத்திலும் அவர்கள் பனை ஓலையில் குடிசைபோட்டு .இன்னும் ஏழையாகவே வாழ்ந்தாலும் ''சிரித்து வாழா வேண்டும்-பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே'' என்ற' சுயமரியாதை 'கைவிடாமல் சிரித்தே வாழும் ஏழைகள்.

'கடவுளை காணவேண்டும்' என்ற ஆசைஉங்களுக்கு இருந்தால் அ.நி.யில். கமெண்டு அடிச்சுகிட்டு சும்மா இருக்காமே ஏழைகளான திராவிட கட்சி தலைவர்களின் குடும்ப அங்கத்தினர்களில் யாரையாவது சிரிக்கச் சொல்லுங்கள். அந்த '.ஏழைகள்'. சிரிப்பில் நீங்கள் 'இறைவனை' காணலாம்!

பின்குறிப்பு: இறைவனை கண்டதும் ஏமாளித்தனமா இறைவனை சும்மா உட்டுடாமே அப்படியே 'குபிர்' என்று அவர் மேலே ஒரேபாச்சலா பாஞ்சு அவர் மடியை "குரங்குப் புடியா' புடிச்சுகிட்டு உங்களால் யவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் இப்போவே கறந்துகிட்டு ஆளேவிடுங்க!. இப்போ அவரே விட்டுட்டா இனிமே அவரே புடிப்பது குதிரை கொம்புதான்.

சிரிப்பதற்கு இனிமேல் இந்தியாவில் ஏழைகளே. கிடைப்பது அரிது;. ஏழைகள் சிரிச்சா தானே இறைவனை காணலாம்!. நீங்களும் நானும் சிரிச்சுட்ட இறைவன் வந்துடுவாரோ? {.ரெம்ப முக்கியமான பின்குறிப்பு இறைவனிடம் கறந்ததில் எனக்கும்'' கொஞ்சம் பாத்கோங்கோது!''......... என்னபுரிகிறதா?"

S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்

KALAM SHAICK ABDUL KADER said...

\\இஸ்லாமியப் பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளை உலகுக்குக் கொணரும் பல்கலைக் கழகங்கள் இன்னும் கூட சரிவர உருவாகவில்லை. இஸ்லாமியப் பல்கலைக் கழகங்கள் கூட ஆங்கிலப் பொருளாதாரத்தைதான் போதித்துக் கொண்டு இருக்கின்றன.

நமது மதரசாக்களில் பொருளாதாரம் ஒரு பாடமாக போதிக்கப்படுகிறதா என்பதை நான் அறியேன். யாராவது இதுபற்றித் தெரிவித்தால் நலமாக இருக்கும்.//

இந்த ஏக்கம் தான் என்னிடம் நீண்ட நாட்களாக உள்ளது; ஒருவேளை, “விடையறியா வினாவாக” ஆகிவிடுமோ அல்லது தடைபோடும் விடயமாக ஆகிவிடுமோ என்கின்ற அச்சமும் அணமைக்கால அரசியலாரின் ஏற்பாடுகளை அவதானிக்கின்ற எனக்குள் ஐயமும் உண்டாகி விட்டது. மோடியின் கரத்தை வலுப்படுத்தவே மோசடி அரசியல் வியாதிகள் எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு பாசிச ஆட்சியைக் கொண்டு வந்து விடுவாரகளோ என்றும் கீழ்க்காணும் சுட்டியைப் படித்ததிர்லிருந்து பயந்து கொண்டிருக்கிறேன்; நம்மையும் நாட்டையும் பாரதீய சக்திகளிடமிருந்து காப்பாற்றினாற்றான், நாம் ஏங்கும் இஸ்லாமியப் பொருளாதாரம் பாடத்திலும் இருக்கும்; பாராளுமன்றச் சட்டத்திலும் இருக்கும்; இலையெனில் எல்லாம் கனவுதான்!

http://tamil.oneindia.in/news/2013/07/26/tamilnadu-admk-dmk-try-to-join-bjp-alliance-179877.html

Shameed said...

கட்டுரயின் ஒவ்ஒரு வரியும் பொருள் பட சிந்திக்க வைப்பதால் தான் இந்த கட்டுரைக்கு பெருளாதார சிந்தனைகள் என்று பெயர் வைத்தீர்களா !? மாமா

sabeer.abushahruk said...

இது
இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனை

சில்லறைச் சிந்தனைகள்
சிதறிக்கிடக்க
நிரந்தர வைப்பிற்கான
தரமான ஆலோசனை

இந்தச் சிந்தனை
ஈடேற்றத்திற்கான நிபந்தனை

தீர்ப்புநாளின்
வரவு செலவுகளைப் பற்றிய
கேள்வி கணக்குகளுக்காக
பதில்களை
இம்மையில் தயார்செய்துதரும்
ஒரு தர்ம பாடசாலை

கற்றுக்கொள்ளுங்கள்
கலங்கமற்ற காசுபணத்தைக்கொண்டு
கணக்குக் காண்பிக்க!

Unknown said...


அழகிய பொருளாதார பாடசாலை.

பொருளாதாரம் எந்த பள்ளியிலும் பயிலத்தேவை இல்லை.
சனிக்கிழமை தோறும் A.N. வலைதளத்தில் கண் பதித்தால்.

அபு ஆசிப்.



Unknown said...

ஜக்காத் இது ஏழைகளின் உரிமை.
செல்வந்தனின் கடமை.

பெறுபவன் பெற்றுக்கொண்டே இருப்பதற்காக உள்ளதல்ல ஜக்காத்.
பெறுபவன் ஒரு நாள் கொடுக்கும் நிலை வரவேணும்.
இதுதான் இந்த ஜக்காத்தின் பிரதான நோக்கம்.

கையேந்துவதை (யாசிப்பதை) யோசிக்காமல் செய்து கொண்டே இருப்பவர்களுக்கும் இஸ்லாத்தில் சாட்டை அடி உண்டு.

கொடுக்கும் கை ( மேலுள்ள கை )
யாசிக்கும் கையை (கீழுள்ள ) விட சிறந்தது (நபி ஸல் ) என்று யாசிப்பவனை யோசிக்க சொல்லும் அண்ணல் நபியின் எச்சரிக்கை மொழிகளும் உண்டு.

ஜக்காத் பெற தகுதி உள்ள இஸ்லாம் நிர்ணயிக்கும் அந்த எட்டு நபர்கள்
அல்லாத மற்ற அனைவரும் ஜக்காத் கொடுத்தாக வேணும்.

இது ஒரு பொருளாத சமன்பாட்டு விதியே தவிர,
பிச்சைக்காரர்களை உருவாக்குவதல்ல நோக்கம். அல்லாஹ் உருவாக்கிய விதியில் ஓட்டை காண முடியுமா ?

ஒவ்வருவருக்கும் உணவளிக்க பொருப்பேற்றுக்கொண்டவனின் சட்டத்தில்
உணவில்லா ஏழ்மைக்கு இடமுண்டா? அனைத்தும் மனிதன் ஏற்படுத்திக்கொள்வதே.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///இது
இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனை

சில்லறைச் சிந்தனைகள்
சிதறிக்கிடக்க
நிரந்தர வைப்பிற்கான
தரமான ஆலோசனை

இந்தச் சிந்தனை
ஈடேற்றத்திற்கான நிபந்தனை

தீர்ப்புநாளின்
வரவு செலவுகளைப் பற்றிய
கேள்வி கணக்குகளுக்காக
பதில்களை
இம்மையில் தயார்செய்துதரும்
ஒரு தர்ம பாடசாலை

கற்றுக்கொள்ளுங்கள்
கலங்கமற்ற காசுபணத்தைக்கொண்டு
கணக்குக் காண்பிக்க!//

இருபத்தி ஐந்தாவது அத்தியாயம் சொன்ன அனைத்தையும் தூக்கிப் பிடித்தார்போல் 17 வரிகளில் உள்ளடக்கிய 32 வார்த்தைப் பிரிவுளைக் கொண்டு உரக்க பக்கபலமாய் நிற்கிறது !

மைஃபோன் ஆனாலும் ஐஃபோன் ஆனாலும் விரல் நுனியில் சுரக்கும் அமுதசுரபி !

மாஷா அல்லாஹ் !

அடுத்ததாக ! கிரவ்னுரை ப்ளீஸ் !:)

Unknown said...

ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்போம் என்னும் வாரத்தைகளினால் ஏகத்துவத்தின் கோட்பாட்டுக்கு எந்தவித களங்கமும் வந்துவிடாது என்பது என் கருத்து. தமிழ் மொழியில் உவமைகளை ஆழப்படுத்தி அதற்க்கு ஒரு வலு சேர்ப்பதற்காக சொல்லப்படும் சொர்க்களுக்கெல்லாம் இறைவனிடம் தண்டனை இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

ஏனனில் அல்லாஹ் பார்ப்பது அனைத்தையும் உள்ளத்தை
வைத்துத்தான் . அது எந்த வணக்க வழிபாடோ , திக்ரோ, நோன்போ, ஜக்காத்தோ அல்லது ஹஜ்ஜோ, இன்ன பிற வணக்கங்களோ அவனுக்காக செய்யப்படுகின்றதா என்பதைத்தான்.

உதட்டளவில் வார்த்தை ஜோடனை என்றளவில் சொல்லப்படும் எந்த விஷயமும் அக்கீடாவை பாதிக்காது.

ஏனனில் ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் , காபிர்களின் உச்சகட்ட கொடுமை தாங்க மாட்டது, சஹாபாக்கள் வந்து ,யாரசூலுல்லாஹ் ! இந்த ஓரிறைக்கொள்கையில் நிலைத்திருக்க எங்களுக்கு இவர்கள் செய்யும் கொடுமை எல்லை மீறிப்போய் இருக்கிறதே, இப்பொழுது நாங்கள் என்ன செய்ய என்று கேட்ட போது, நீங்கள் உள்ளத்தில் ஈமானை மறைத்து வைத்துக்கொண்டு , அவர்களுக்காக உதட்டளவில் அவர்கள் சொல்வதுபோல் சொல்லிக்கொள்ளுங்கள் என்று அனுமதி தந்தார்கள் என்று ஹதீதில் இருக்கின்றது.

ஆதலால் எந்த விஷயமும் அல்லாஹ் நோக்குவது உள்ளத்தையே.

இதை உறுதி செய்து கொண்டு நடப்போமேயானால் , ஈமானோடு எந்த சந்தர்ப்பத்திலும் இவ்வுலகை விட்டு விடை பெற்றுச்செல்லலாம்

அபு ஆசிப்.

adiraimansoor said...

//ஜகாத் என்பது ஒரு பெரிய ஏரியின் வரப்புகள் நீர் மிகுதியால் உடைப்பெடுத்துக் கொள்ளாமல் வெட்டிவிடப்பட்ட ஒரு சிறு வாய்க்கால். அதிலிருந்து ஏழைகளின் வயல்களை நோக்கி உற்பத்திக்கான நீர் ஓடிக்கொண்டே இருக்கும் . அதே நேரம் இறைவனின் அருள் என்கிற ரஹ்மத்தும், பரக்கத்தும் பெருமழையாய் பெய்து ஏரியை நிரப்பிக் கொண்டே இருக்கும். //

அஸ்ஸலாமு அலைக்கும்
காக்கா மிகவும் பிரமாதம்

ஜக்காத் பற்றி மிகவும் எளிமையான ஒரு விளக்கம்
மிகவும் சாதாரன மக்களால் இந்த வார்த்தையின் ஆழத்தையும் அகலத்தயும் புரிந்து கொள்ள முடியும்
ஜக்காத் பற்றிய இந்த வார்த்தைகளை மட்டும் கல் உள்ளம் படைத்த செல்வந்தர்களிடம் போய் சேர்க்கவேண்டிய ஒன்று இதை பார்த்தாவது அவர்களிடம் இருக்கும் செல்வம் உடைந்துபோய் பிரையோஜனமில்லாமல் போவதைவிட வெட்டிவிடட்டும் அவர்கள் செல்வத்தில் சிறு வாய்க்கால், ஓடட்டும் செல்வம் என்ற நீர் ஏழை குடும்பங்களை நோக்கி .

adiraimansoor said...

// ஏழைகள்கூட செல்வந்தர்கள் மீது பொறாமை கொள்ளலாம். அதே செல்வந்தர்கள் ஜகாத் மூலம் தமக்கு உதவும் போது தமக்கு உதவுபவர்கள் மீது அவர்களுக்கு பொறாமை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, ஜகாத் கொடுப்பவர், எடுப்பவர் இருவரிடமும் பொறாமை என்ற தீய குணம் ஏற்படுவதைத் தவிர்க்கின்றது.///

இதுவும் செல்வம் படைத்தோர் உள்ளத்தில் மிகவும் ஆழமாக பதியவேன்டிய விஷயம் இதை படித்டாலே கல் நெஞ்சும் கரையும்

Anonymous said...

சகோதரர் அஹ்மது ஃபிர்தெளஸ் அவர்களின் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்குப் பின்னர் பதியப்படுகிறது...

@அபு ஆசிஃப்

அஹ்லுஸ் ஸுன்னாவின் அகீதாவானது “ஈமான் என்பது மனதால் நம்பி, நாவால் மொழிந்து செயல்களால் உறுதிப்படுத்துவதாகும்”. இதில் எல்லா அம்சங்களும் முக்கியமானவையே. தாங்கள் மேற்கோளிட்ட உதாரணம் நிர்பந்த சூழ்நிலைகளுக்குரியது. நிர்பந்த சூழ்நிலையில் பன்றியின் இறைச்சி கூட ஹலால் என்பதை அறிக.

தாங்கள் சௌதி அரபிய்யாவில் இருப்பீர்களானால் தங்களுக்கு ஓரளவு அரபு மொழியும் தெரிந்திருக்கும், பாக்கியமிக்க அந்நாட்டு அறிஞர்களின் சபைகளில் பகிரப்படும் அகீதாவை கொஞ்சம் கவனியுங்கள். சேஹ் ஸாலிஹ் அல் ஃபவ்ஜான், சௌதியின் தலைமை முஃப்தி செய்ஹ் அப்துல் அஜீஸ் ஆலஸ் ஸேஹ், சேய்ஹ் ரபி இப்னு ஹாதி அல் மத்ஹலி, சேய்ஹ் உபைத் அல் ஜாபிரி போன்ற சௌதிய்யாவின் மூத்த அறிஞர்களின் சபைகளிலிருந்து கலப்படமற்ற தூய்மையான தவ்ஹீதை அறிய வாய்ப்புகள் அதிகம் உங்களுக்கு இருக்க வாய்ப்புகள் உண்டு என்று அறியத் தருகிறீன்..

கீழ்காணும் இணைப்பு பயனுள்ளதாக இருக்கக்கூடும்.
http://www.spubs.com/sps/sp.cfm?subsecID=AQD13&articleID=GSC050004&articlePages=1

வஸ்ஸலாம்.

அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி

aa said...

@அபு ஆசிஃப்

செய்ஹுல் இஸ்லாம் இமாம் தகியுத்தீன் அபுல் அப்பாஸ் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அகீதத்துல் வாஸிதிய்யாவையும், இமாம் அபு ஜஃபர் அஹ்மத் இப்னு முஹம்மத் அத் தஹாவி அவர்களின் அகீதத்துல் தஹாவிய்யாவையும் தவறாமல் படிக்கவும்.

அகீதத்துல் வாஸிதிய்யா: http://www.salafipublications.com/sps/sp.cfm?subsecID=AQD04&articleID=AQD040003&articlePages=1

அகீதத்துல் தஹாவிய்யா: http://www.masud.co.uk/ISLAM/misc/tahawi.htm (பார்க்க: 62வது பாயிண்ட்)

adiraimansoor said...

// ஜகாத்தும் சதக்காவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வறுமை என்னும் பிசாசின் அடையாளத்தை அடித்து நொறுக்கிவிடும். இப்படி ஒரு இனிய சமுதாயம் அமையுமா? ///

இந்த ஒரு தாரக மந்திரமே போதும் எல்லா இடங்களிலும் நோன்பு நேரத்திலும் சரி நோன்பு அல்லாத நேரங்களிலும் மக்கள் கண்களில் படும்படியாக தமிழகத்திலுள்ள அணைத்து மஸ்ஜித்களுக்கு முன்னாடியும் பேருந்து நிலையங்களிலும் பெரிய பெரிய விளம்பர
போர்டுகள் போன்று போர்டுகள் வைக்கலாம்
இதுவே சாதாரன மக்களயும் ஜக்காத் கொடுக்கதூண்டும் அருமையான வார்த்தை

Yasir said...

ஜகாத், அல்லாஹ்வால் வகுக்கப்பட்டது. படைத்தவனால் உருவாக்கப்பட்ட ஜகாத்தைச் சரியாகப் பின்பற்றினாலே பொருளாதாரத்தில் எல்லோரும் தன்னிறைவடையலாம் என்பதை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் அதே சமையம் தெள்ளத் தெளிவாகவும் விளக்குகிறது இந்த அத்தியாயம்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, mama

KALAM SHAICK ABDUL KADER said...

ஆஹா என்னப் பொருத்தம்!

கட்டுரையைச் சுருக்கித் தரும்
கவிவேந்தரின் சிந்தனைக் “கருவூலம்”

அருளாதாரம் என்பதைக் காட்டும்
பொருளாதாரம் பற்றிய” வைப்புத் தொகை”

தட்டிக் கொடுக்கும் எங்களின் “ஊக்கத்தொகை”
”வட்டி” என்றெண்ணாதீர்; வாழ்த்துகிறோம்
கைதட்டி!

”பணவீக்கம்” பற்றியெல்லாம்
பொருளாதாரம் பேசும்;
மனவீக்கம் இல்லாமல்
மறுமை நினைவே
மணமிகு கவிதையில் வீசும்!

இப்றாஹிம் காக்காவின்
இஸ்லாமியப் பொருளாதாரத்தை
”க்விகாக்கா” வரிகளால்
கடிதாய்ச் “சந்தைப் படுத்தும்”
கவித்துவச் சிந்தை!

உள்நாட்டிலிருந்து
உற்பத்தியான கட்டுரை விதைக்கு
”அன்னியநாட்டுச் செலவாணியில்”
அமோக “கொள்முதல்”!

நாமெல்லாம்

நாக்கின் ருசியை
நோன்பால் அடக்கி
ஏழைகளின் பசியை
எண்ண வைத்தோம்!

கவிவேந்தரோ..

தொடுதிரை பேசியில்
சடுதியில் ம்டக்கியே
ஏழைகளின் வரியை
ஏற்றமிகு வரிகளால்
போற்றும்படி வைத்தார்!

இவர்
கணிணியைத் திறந்தாலே
மணிமணியாய் முத்துக்களாய்
வைரங்களாய் மாணிக்கமாய்
வரிகள்தான் திற்ந்து கொட்டுகின்றனவோ?
“வரிகள்” மட்டும் போட இயலா.


வணிகக் கணக்கை
வண்ணத் தமிழ்க் கவியில்
துணிகரமாய்ச் சொல்லிய
பௌதீகவாதி!

எப்பொருளிலும்
மெய்ப்பொருள் காணும்
சிந்தனைச் சிற்பி
நீயும் எனக்கு உன் திறன் கற்பி!




sabeer.abushahruk said...

//நீயும் எனக்கு உன் திறன் கற்பி!//

வகுப்பிற்குள்
வாத்தியாரின் வரவு
நல்வரவாகுக

அருளையும் பொருளையும்
அழகாய்ச் சொல்லும் இப்பதிவில்
தங்களின் பங்கு
தங்கமெனெ உயர்வானது

எந்திரப் படகென நீங்கள்
இந்தத்
துடுப்பதெற்கு?

துட்டுக்குப் புகழ்பாடும்
தமிழர்களுக்கிடையே
என்
சொற்களுக்கு
முட்டுக்கொடுக்கும் தயாளன் நீங்கள்.

நன்றி.



KALAM SHAICK ABDUL KADER said...

//தங்களின் பங்கு
தங்கமெனெ உயர்வானது\\

தமியேன் விட்டுவிட்டத்
தங்கத்தைத்
தமியேனுக்கேத் திருப்பித்
தந்தத் தங்கமகன்!

பொன்மனம் உங்களின்
சொந்தம்
என்மனம் என்றும்
பந்தம்!

கவிவரிகளில் மார்க்கம்
கலப்படமின்றி இருக்கவே
கவிவரிகளை உங்கட்குக்
காண்பிப்பதில் தயாளனே!

உங்களின் உருக்கத்தை
உள்வாங்கிப் படித்தாலே
எங்களிடமும் நெருங்கிவரும்
இதுபோன்ற “புதுக்கவிதைகள்”!

வார்த்தைச் சித்தரின்
வார்த்தைகளைப் படித்தாலே
வார்த்தைகள் அருவியாய்
வாரிச் சுருட்டி விழுதல் போலே!

”கரு” தேடியலையாமல்- நீங்கள்
இருக்கும் இடத்தில்- நானும்
இருந்து கொண்டால்
விருந்து படைக் கலாம்!





Ebrahim Ansari said...

அல்ஹம்துலில்லாஹ் ! அருமைச் சகோதரர்களே!

மிகவும் மகிழ்வாக உணருகிறேன். அற்புதமான பின்னூட்டங்கள் தந்து ஆர்வப் படுத்திக் கொண்டு இருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் அழைத்துப் பாராட்டிய அறிஞர் பெருந்தகைகளுக்கும் அனுமதி பெற்றும் பெறாமலும் வெளியிட்டுள்ள மற்ற ஊர் வலைத்தள நண்பர்களுக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன். நெஞ்சம் நிறைந்த நன்றி.

தம்பி சபீர் அவர்களும் கவியன்பன் அவர்களும் சூட்டியுள்ள கவிச்சரங்களை பெருத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

அரை மணி நேரம் அலைபேசியில் பேசி ஆர்வப்படுத்திய தம்பி கிரவுன் தஸ்தகீர் அவர்களுக்கும் மிக்க நன்றி.

தம்பி சபீர் அவர்கள் கேட்டிருக்கும் கேள்விக்குரிய பதில், வரும் அத்தியாயத்தில் இன்ஷா அல்லாஹ் இன்னும் சற்று விளக்கமாக.

இஸ்லாமியப் பொருளாதாரம் பற்றி எழுதப் போகிறேன் என்கிற அறிவிப்பை குறிப்பிட்ட சில அன்பு நண்பர்களுடன் பகிர்ந்தபோது " பார்த்து பார்த்து- நிறைய விவாதங்கள் வரும் " என்றெல்லாம் என்மேல் கொண்ட அன்பால் எச்சரிக்கை செய்து கவனப் படுத்தினர். இருந்தாலும் இதுவரை கத்தி மேல நடப்பது போல் நடந்து யார் மனமும் புண்படாமல் எழுதி வந்து இருப்பதாகக் கருதுகிறேன். அல்லாஹ் வழி காட்டினான். இன்னும் நான்கு ஐந்து அத்தியாயங்கள் அவ்விதமே எழுதப் பட்டு நிறைவுறவும் வல்ல இறைவன் வழி காட்டுவானாக!

தொடர்ந்து இந்த கட்டுரைத்தொடர் நூல் வடிவில் வெளிவரவும் து ஆச் செய்யும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அதற்கு ஏற்ற தரத்தில் இதை செம்மையாக நிறைவுறச்செய்ய இறைவன் வழிகாட்டுவானாகவும்.

வஸ்ஸலாம்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

A great awareness about Zakath and an indepth explanation about rational behind the principles of Zakath.

May Almighty Allah offer you health and strength to write more. InshaAllah.

Jazakkalah khair,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com.

அப்துல்மாலிக் said...

ஜக்காத்தையும் அதன் மகிமையையும் இவ்வளவு எளிமையாக வேறு யாராலும் புரியவைக்கமுடியாது என்பது என் கருத்து...

மேலோட்டமாக படிக்கும் பதிவாக இது இல்லை, ஒவ்வொரு வரியும் பல உள் அர்த்தங்களாக மிளிர்கிறது... நன்றி காக்கா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு