தெரிந்தோ தெரியாமலோ திராவிட முன்னேற்றக் கழகம் தி மு க என்கிற பெயரை சுமந்தது. திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் கரங்களுக்குள் இந்தக் கட்சி சென்றுவிடுமென்ற அனுமானம் கட்சி ஆரம்பித்தபோதே தோன்றியதோ என்னவோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.
அரசியல் உலகில் நாம் பார்த்த அபூர்வ மனிதர்களில் கருணாநிதியும் ஒருவர். வாழ்க்கையின் அடித்தளத்தில் அடிகள் பல வாங்கி அரசியலில் ஒரு உதயசூரியனாக இன்றுவரை திகழ்பவர். அரசியல் வித்தகர்; வில்லாதிவில்லன்; விதைத்தவைகளை வாழ்நாளில் அறுவடை செய்து புசித்தவர். விதியின் வெப்பச்சலனத்தில் வீதியெல்லாம் மேடையேறிப் பேசி மன்னாதி மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்தவர். இவரைப் பற்றி நிறைய அறிமுகம் தேவை இல்லை. அதிகம் அறியப்படாதவை என்று கருதுகிற ஒன்றிரண்டு செய்திகளுடன் தொண்ணூறு வயதைத் தாண்டிய கருணாநிதியின் வாழ்வோடு தமிழ்நாட்டின் கடந்த நாற்பத்தியைந்து வருடங்களின் வரலாறுபின்னிப் பிணைந்து இருக்கிறது என்று சொல்லித்தொடங்குவோம்.
துடுக்கான பள்ளிச் சிறுவனாக இருந்தபோது , திருவாரூரில் கிருபானந்த வாரியார் உரையாற்றுகிறார். இடைக்கிடையே நாத்திகத்தைக் கண்டித்து நகைச்சுவையை வழங்கிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் உயிர்களைக் கொல்லக் கூடாது அடித்து கேட்டாலும் அப்போது கூட உணவுக்காகக் கொல்லக் கூடாது என்று உபதேசம் செய்தார். அப்போது ஒரு அரை டவுசர் போட்ட பையன் கூட்டத்தில் இருந்து எழுந்தான். ஐயா! ஒரு கேள்வி இன்று வகுப்பில் ஆசிரியர் தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று பாடம் நடத்தினார். அப்படியானால் காய்கறிகளை மட்டும் சாப்பிடலாமா என்று கேட்டான்.
இந்தக் கேள்விக்கு பதில் அளித்த வாரியார் , பிள்ளையாண்டா ! ஒரு ஆடு , மாடு, கோழி ஆகியவறை வெட்டி சாப்பிட்டால் அவற்றின் உயிர் போய்விடுகிறது . தாவரங்களிலோ விளச்சளைத்தான் சாப்பிடுகிறோம். உதாரணமாக தக்காளிச் செடியில் தக்காளியையும் கத்தரிக்காய் செடியில் கத்தரிக்காயையும்தான் சாப்பிடுகிறோம். செடி கொடி அப்படியே இருக்கிறது இது உனக்குப் புரியலையா? “ என்று கேட்டார். பலத்த கைதட்டல் வாரியாருக்கு .
மீண்டும் எழுந்தான் அரை டவுசர். “ அப்படியானால் கீரைத்தண்டை அப்படியே வெட்டி சமைத்து சாப்பிடுகிறோமே! அதை கொல்வதாக ஆகாதா? ” என்று கேள்வி எழுப்பினான். இந்தக் கேள்விக்கு வாரியாரால் பதில் சொல்ல முடியவில்லை. கூட்டம், உட்கார்! உட்கார்! என்று கூக்குரல் எழுப்பியது. அன்று அந்த வயதில் வாரியாரிடம் கேள்வி கேட்ட அரை டவுசர்தான் பின்னாளில் கலைஞர் கருணாநிதியாக உருவெடுத்தார்.
கருணாநிதி பிற்காலத்தில் முதலமைச்சர் ஆனதும் வாரியாரையும் பெரியாரையும் ஒரு விழாவில் வைத்துக் கொண்டு “ அன்று நான் வாரியார் சுவாமிகள் இடம் கேட்ட கேள்விக்கு அவர் இன்று வரை பதில் சொல்லவில்லை “ என்றும் குத்திக் காட்டினார். கருணாநிதியின் வாதாடும் திறமைக்கு இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம் மட்டுமே.
இளமையில் வறுமை! வளர்ந்த பின் முன்னேற வேண்டுமென்ற வெறி! கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் நல்லபடி உழைத்துப் பயன்படுத்திக் கொண்டவர்தான் கருணாநிதி. பள்ளிச்சிறுவனாக இருந்த போதே சக மாணவர்களைக் கூட்டி வைத்து நாத்திகக் கருத்துக்களை விவாதிப்பதில் அலாதி ருசி. வறுமையின் வாட்டம் அவரை முடக்கிப் போட்டுவிடவில்லை. படிக்கும் காலத்திலேயே முரசொலிப் பத்திரிகையை கையெழுத்துப் பிரதியாக எழுதி நடத்தும் உழைப்பு மற்றும் ஆற்றலின் வளர்ச்சி பின்னர் தமிழகத்தை பலமுறை ஆளும் நிலைக்கு அவரை உயர்த்தியது. கருணை ஜமால் என்ற பெயருடைய திருவாரூர் நண்பரை துணைக்கு சேர்த்துக் கொண்டு தலையில் முரசொலி பத்திரிக்கை கட்டுகளை ஆற்றை நீந்திக் கடந்த கருணாநிதிக்கு வாழ்க்கைக் கடலில் எதிர்நீச்சல் போடுவது கஷ்டமாகிவிடவில்லை.
இங்கே குறிப்பிட்ட கருணை ஜமால் என்பவர் திருவாரூரில் கருணாநிதி அச்சகம் என்ற பெயரில் நடத்தியவர். கருணாநிதியுடன் இளமைக்காலம் அல்ல பால்ய காலம்தொட்டே பாசத்துடன் பழகியவர். கருணை- கருணா இந்த சொற்களின் தாக்கத்தை அன்பர்கள் சிந்தித்து அவர்களின் உறவின் அல்லது நட்பின் வலிமையை அறியலாம். இந்திராகாந்தியின் ஆட்சி அறிமுகப் படுத்திய அவசரகால அடக்குமுறை நேரத்திலும் வீட்டை விட்டு வெளியே வராத கருணாநிதி கருணை ஜமால் வீட்டுத்திருமனத்துக்கு வந்த்து மணமக்களை வாழ்த்திய கருணாநிதி வேறு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் திரும்பிச்சென்றார்.
இங்கே கருணை ஜமால் அவர்களுடைய பெயரை குறிப்பிடக் காரணம் , இன்று கருணாநிதி இந்தியாவின் மிகப் பெரும் தலைவர்களில் ஒருவராக இருக்கலாம். ஆனால் இவரை வடிவமைத்த இவருடைய உயர்வுக்கு வித்திட்ட இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர். இவர்களில் தம்பிக் கோட்டை கீழக்காடு ஆர். எம். எஸ். என்கிற சோமுத்தேவரிலிருந்து, அதிராம்பட்டினத்தின் அன்றே கோடீஸ்வர குடும்பத்தைச் சார்ந்த என். எஸ். இளங்கோவில் இருந்து , அன்பில் தர்மலிங்கத்தில் இருந்து பலரும் அடங்குவர். ஆனால் மரம் வைத்தவன் ஒருவன் அதன் பலனை அனுபவிப்பவன் மற்றவன் என்கிற முறையில்தான் கருணாநிதி வளரக் காரணமானவர்களும் அவர்களின் சந்ததியினரும் அந்த வளர்ச்சியின் பயனை அடைய முடியாத வலை வாழ்க்கை வலை அது பாச வலை. இதுபற்றி இறுதியில் விவரிப்போம்.
மேடைப் பேச்சில் சோடை போகாமல், அல்லும் பகலும் அரசியலில் அதுவும் நாத்திகம் கலந்த அரசியலில்- சுயமரியாதை இயக்கம் சார்ந்த பிரச்சாரக்கூட்டங்களில் தனது நாட்டத்தை செலுத்தினார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் காரைக்காலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிராமண சமூகத்தினரைப் பற்றியும் அவர்களது கடவுள்கள் பற்றியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். கோபம் கொண்ட அந்த சமூகத்தார். ஆட்களை ஏவி கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டு இருந்தவரை வழிமறித்து வன்முறையாகத் தாக்கினர். கருணாநிதி இரத்த வெள்ளத்தில் மிதந்து உணர்வற்று விழுந்தார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு விரைந்தது அடியாட்கள் கூட்டம்.
பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள் சிலரின் காதுகளில் நடுஇரவில் சாக்கடையில் தூக்கிப் போடப்பட்ட கருணாநிதியின் முக்கல் முனகல் கேட்டது. மூச்சு மட்டும் ஓடிக கொண்டிருந்ததைக் கண்ட முஸ்லிம் பெருமக்கள் உடனே முனைப்புடன் செயல்பட்டு மருத்துவம் செய்து குளிப்பாட்டி உடைமாற்றி உணவளித்து உயிர் காப்பாற்றினர்.
காலையில் போட்ட இடத்தில் உடல் தேடி வந்த பிராமண அடியாட்கள் தவித்தனர். கருணாநிதி தப்பினாரா இல்லையா என்று சந்தேகம் கொண்டு அலசினர். ஆனால் கருணாநிதியோ காரைக்கால் முஸ்லிம்களால் தொப்பி, சால்வை ஆகியவை அணிவிக்கப்பட்டு பத்திரமாக பாண்டிச்சேரி கொண்டு போகப்பட்டு அங்கு வந்திருந்த பெரியாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அங்கிருந்து பெரியாரால் பத்திரிகையில் பணியாற்ற பின் ஈரோடு சென்றார்.
கருணாநிதியின் நா முனைக்கு மட்டுமல்ல பேனாவின் முனைக்கும் நாடே நடுங்கியது. பல உதாரணங்களைத்தரலாம். தான் பிறந்த திருவாரூரின் தியாகராஜா சுவாமியை இப்படி வம்புக்கு இழுத்தார்
"ஏரோட்டும் உழவரெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே - தேரோட்டம் உனக்கேன் திருவாரூர் தியாகராசா!" என்று கேட்டார். (இப்படி எழுதியவர் நாற்பது ஆண்டுகள் கழித்து ஓடாத அந்தத்தேரை ஓட வைத்தது வேறு விஷயம்.)
கோடை காலத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளை ஊட்டியில் நடத்தலாமென்று காங்கிரசார் தீர்மானம் போட்டபோது,
"கும்பி எரியுது குடல் கருகுது - குளு குளு ஊட்டி ஒரு கேடா?" என்று பத்திரிகையில் கேள்வி எழுப்பினார்.
கருனாநிதியின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் நாடகம் மற்றும் திரைப்படம் பலவகையில் உதவியது. தூக்குமேடை என்று ஒரு நாடகம் எழுதினார். அதற்கு காங்கிரஸ் அரசு தடை விதித்தது. தனது பேனாவின் முனைகளைத் தீட்டிக் கொண்டு திரைப்படத்த்துறையில் வசனகர்த்தாவாக களம இறங்கினார். அப்போது எழுதப் பட்ட வசனங்கள் சாகா வரம் பெற்றன. அவரது பேனா கொட்டித்தீர்த்த வசனத்துளிகள் சில:-
கோயிலிலே குழப்பம் விளைவித்தேன்- பூசாரியைத்தாக்கினேன்- குற்றம் சாட்டப் பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் – கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவனின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காக
பூசாரியைத் தாக்கினேன்- அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாக ஆகிவிட்டதைக் கண்டிப்பதற்காக
****
"என்னடா முழிக்கிறே? "
"தூங்கினவனை எழுப்பினால் முழிக்காமல் என்ன செய்வான்?"
***
என் சுய நலத்திலே பொதுநலமும் கலந்திருக்கிறது. ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப் படுத்துகிறதே மீன் ! அதைப்போல.
***
வந்தாரை வாழவைக்கும் தமிழகமே! நீ சொந்த நாட்டுக்காரனையே சுரண்டுவது எத்தனை நாளாய்?
வானத்தை முட்டும் மாளிகைகள் ! மானத்தை மறந்த மனிதர்கள்!
வீரப் பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே! நீ விபச்சாரிகளை வீதியில் திரியவிட்டு விழிகளை மூடிக்கொண்டது ஏன்?
ஓடினாள் ! ஓடினாள்! வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்! அந்த ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும் இன்று சட்டத்தை தீட்டுவோர் .
***
"உன்னை ஏன் அழைத்து வந்திருக்கிறேன் தெரியுமா?"
"திருத்திக் கொள்ளுங்கள் தயவுசெய்து. அழைத்துவரவில்லை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்."
***
என்றெல்லாம் வசன அக்கினிக் குழம்புகள் ஜனரஞ்சகமாகி கருணாநிதிக் கென ஒரு கூட்டத்தை கூட்டியது. அரசியல் வானிலும் மின்னுவதற்கு வழி செய்தது. திமுகவில் இருந்த நெடுஞ்செழியன், சம்பத் போன்றோரும் எழுத்திலும் மேன்மை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் எழுதியவை பல்கலைகழகம் சென்றோரை மட்டுமே சென்றடைந்தது ஆனால் கருணாநிதி எழுதியது பாமரனை சென்றடைந்தது. அத்துடன் அவரது நாடகங்களும் திரைப் படங்களும் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது அவரை விளம்பரம் இல்லாத விற்பனைப் பொருளாக உயர்த்திவிட்டது. இனி நான் சொல்வதைவிட கருணாநிதியின் ஆத்ம நண்பராக இருந்த கவிஞர் கண்ணதாசனின் வரிகளிலும் கேட்போமே.
“இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.
ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.
கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.
பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.
கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.
எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.
நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.” என்கிறார் கண்ணதாசன்.
பொதுத்தொண்டும் பொதுநோக்கும் நிறைந்து வழிந்த தலைவர்கள் ஆண்ட தமிழகம் ஒரு சுயநல சுரங்கத்துக்குள் போய், நேற்றும் இன்றும் இன்னும் நாளையும் தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிவைத்த- ஆட்டி வைக்கும் அரசியல் தன்னலத்தின் விதைகள் தெளிக்கப்பட்டதால் விளைந்த விபரீதங்களின் விளைவுகள் யாவை என்பதை தொடர்ந்து இன்னொரு அத்தியாயத்தில் காணலாம்.
இன்ஷா அல்லாஹ் ரமளானுக்குப் பிறகு தொடரும்..
முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,
15 Responses So Far:
தமிழக அரசியல் வரலாற்றில் அதிகமாக விமர்சிக்கப்பட்டவரும், விமர்சனத்திற்கு ஆளானவருமான தாத்தாவின் இளமைப் பருவம் புரட்சியாளனின் சாயல் இருந்தது, அன்று பொது நலமே குடும்பாக இருந்தார், பின்னர் பொது நலனுக்குள் குடும்பம் என்றார்.. எது எப்படி இருந்தாலும் தி.மு.க.வே ஒரு மிகப் பெரிய குடும்பம் (இது கட்சிக் காரர்களுக்கும் / குடும்பத்திற்கும் பொருந்தும்)...
தலைவரு, சின்ன வயசுலேயே ! ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து விடுவேன் என்று 'வாத்தியாரை'யே மிரட்டி பனியவைத்து பள்ளியில் சேர்த்தவராயிற்றே !
அருமையான எழுத்து நடையில் எல்லோருக்கும் விரும்பியோ விரும்பாமலோ பிடித்துப் போன அன்றைய மு.க. வைப் பற்றி அறிந்து கொண்டோம் !
இன்னும் வரும் என்றும் எதிர்பார்க்கிறோம் !
கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை இளங்கலை அரசியல் பாடத்திட்டத்தில் இணைத்தால் அரசியல் சாணக்கியம் அறியும் வாய்ப்பைப் பெறுவர் மாணாக்கர்.
நாளுக்குநாள் சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது கட்டுரை. இலக்கிய/கவி ரசும் சொட்டுகிறது பல இடங்களில். உதாரணமாக:
//அரசியல் வித்தகர்; வில்லாதிவில்லன்; விதைத்தவைகளை வாழ்நாளில் அறுவடை செய்து புசித்தவர். விதியின் வெப்பச்சலனத்தில் வீதியெல்லாம் மேடையேறிப் பேசி மன்னாதி மன்னர்களை எல்லாம் மண்டியிட வைத்தவர்//
//இவருக்கு உற்றுழி உதவி உறுபொருள் கொடுத்து வளர்த்தவர்கள் பலர். //
//பகலவன் எழுவதற்கு வாழ்த்துக் கூறி பறவைகள் கீதம் பாடத்தொடங்கிய நேரத்தில் படைத்தவனின் பள்ளியிலில் இருந்து பாங்க்கொலி கேட்டு பஜ்ர் தொழ வந்த முஸ்லிம்கள்//
Allah aathik aafiyaa, kaakkaa!
இன்றைய முதியவர் பற்றிய அன்றைய அரிய தகவல்கள்!
இப்படியெல்லாம் நம்மவர்களால் பஜ்ர் தொழுகை நேரத்தில் காப்பாற்ற இந்த முதியவர் நம்மை அரசியலிலும் அரசு வேலை வாய்ப்பிலும் ஏனோ அவருக்குரிய தந்திரங்களால் நம்மை பின்னுக்கு தள்ளி நமக்கு கிடைக்க வேண்டிய விகிதாச்சாரத்தை கூட பெற முடியாமல் செய்ததும் அன்று மதவாத கட்சியோடு கூட்டு சேர்ந்ததும் மிகவும் வேதனையே!
// அத்துடன் அவரது நாடகங்களும் திரைப் படங்களும் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது அவரை விளம்பரம் இல்லாத விற்பனைப் பொருளாக உயர்த்திவிட்டது//.
தம்பி சபீர் அவர்கள் தந்துள்ள பட்டியலில் இதையும் சேர்க்க வேண்டும்.
//ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.”//
கவிஞர் கண்ணதாசன் மோந்துகிடுரமாதிரி கருணாநீதி மூக்கை கடித்த விதம் உண்மையிலும் உண்மை
கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்தனம் அவரை எப்படி அரசியல் உச்சாநிக்கொம்புக்கு கொண்டு சென்றதோ, அதே கலைஞரின் குடும்ப பாசமும், குடும்ப அரசியலும் அவரின் அரசியலுக்கு அவ்வப்பொழுது சாட்டையடி கொடுக்கத்தான் செய்தது.
இருப்பினும் இன்றுவரை அவரின் நிர்வாகத்திறமை, மற்றும் ஞாபக சக்தி , தமிழகத்தை பொருத்தவரை வேறெந்த அரசியல் வாதிக்கும் இருந்ததாகத்தெரியவில்லை.
சுய நலம் இல்லை என்றால்
இவரைவிட ஒரு சிறந்த அரசியல் வாதி இந்தியாவிலேயே இல்லை எனலாம்
சுயநலமே ஒரு நடிகரிடம் தோற்க வைத்தது .
சுயநலமே ஒரு நடிகையிடம் தோற்க வைத்தது.
சுயநலமே ஒரு பண்பட்ட பெருந்தலைவரை (காம ராஜர் ) தோற்கடிக்க ஒரு மாணவனை நிற்க வைத்தது.
இவரைப்போல சிறந்த அரசியல்வாதியும் இல்லை.
இவரைப்போல சிறந்த சுயநலவாதியும் இல்லை.
அபு ஆசிப்.
காதரின் கருத்து எதார்த்தமானது. உண்மையிலேயே கவனத்தை ஈர்க்கிறது.
//இவரைப்போல சிறந்த அரசியல்வாதியும் இல்லை.
இவரைப்போல சிறந்த சுயநலவாதியும் இல்லை.//
ஸ்மாஷிங்.
தண்டாவாளத்தில் தலை வைத்து படுத்தவரின் சங்கதிகள் இன்னும் நிறைய இருக்கிறதாம் - பகுருதீன் சொல்கிறார்.
தம்பி காதரின் கருத்து SUPERB.
ஒரு அருமையான வரலாற்றுத் தொடர்! இக்கால இளம் வயதினர் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடமே தவிர, கருணாநிதி சொல்லும் பாடம் வேறு; நீங்கள் படிக்க வேண்டிய பாடம் அது அல்ல.
''யானோகள்வன்; யானோ அரசன்'' என்று நீதி தவறிய பாண்டிய மன்னனின் கதையே [சிலப்பதி காரம்] நாடெங்கும் தன் 'நா'வண்மையாலும் 'சொல்' வளத்தாலும் சொல்லிச் சொல்லி தன்னையும் தன் குடும்பத்தாரையும் வளப்படுத்திக் கொண்டவர் கருணாநிதி-பசித்தவர்களின்' பசி'பற்றி பேசிப் பேசியே கிடைத்ததை எல்லாம் புசித்தவர் அவரே! மற்றவரெல்லாம் பசித்தே செத்தார்.
நெஞ்சுக்கு நீதி 'சுயசரிதை எழுதியவரும் அவரே! ஆனால் அவை எல்லாம் ஏட்டோடும் பாட்டோடும் நின்றதே தவிர மக்களை வந்து அடையவில்லை அதாவது நாட்டு மக்களை வந்து அடையவில்லை.
ஈழத்தமிழர்களுக்காக கருணாநிதி விட்ட கண்ணீரெல்லாம் 'முதலை' கண்ணீரே தவிர வேறு ஒன்றுமில்லை. 'ஈழத்தமிழர்கள் துயரம் போக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுத்து கொள்ளாததால் காங்கிரசுடன் கூட்டணி இல்லை'' என்று கடந்தச ட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று தோல்வி கண்டதோடு மட்டுமல்லாது எதிர்கட்சியாக கூடவர முடியாத நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டது அது அவருக்கு மக்கள் புகட்டிய பாடம்
அடுத்து எந்த காங்ராஸ் ஈழத்தமிழர்களின் இன்னல் நீக்க நடவடிக்கை எடுக்கவில்லையோ' அதே காங்கிரசிடம் மண்டி இட்டு தன்மகள் கனிமொழி மேலவைக்கு செல்ல வாக்கும் வாங்கி வெற்றியும் பெற்றது. .ஈழத்தமிழர் பிரச்சனையை குப்பை கூடையில் போட்ட காங்கிரஸ் கொடுத்த ஓட்டுக்கு தி.மு.க. கொடுக்கப் போகும் விலை என்னவோ?
''கொள்கை நாங்கள் இடுப்பில் கட்டிய வேட்டி; பதவி நாங்கள் தோளில் போட்டதுண்டு..தோளில் போட்ட துண்டை தூக்கி எறிந்து விட்டு போவோமே தவிர இடுப்பு வேட்டியே நழுவவிட மாட்டோம்.' 'என்றார் அண்ணா! இப்போ கருணாநிதிக்கு நழுவியது இடுப்பு வேட்டியா? தோளில் போட்ட துண்டா?
ஒரு சித்தர் சொன்னார் ''கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்''. [இதன் பொருள்: இறைவனை கண்டவர்கள்'' கண்டேன் கடவுளை'' என்று சொன்னதில்லை; ''கண்டேன் கடவுளை' என்று' சொன்னவர்கள் கடவுளை கண்டதில்லை' என்பதே]; கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும்'' பசித்தவர் புசித்ததில்லை; புசித்தவர் பசித்ததில்லை. 'என்ற நிலை வந்தது'
தமிழ் தாத்தா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட உ.வே. சுவாமிநாதர் என்பவர் அரும்பாடு பட்டு தேடி எடுத்த சங்ககால இலக்கியங்கள் எல்லாம் மு.க.வின் குடும்ப முன்னேற்றதுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
எது எப்படி ஆனாலும் '' தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், இறுதில் தர்மமே வெல்லும் ''ஒரு நாள் கருணாநிதியோ அவர் குடும்பமோ இந்த வாசகத்தின் உண்மையை சந்தித்தே ஆகவேண்டும்.
உலகம் சுற்றும் உமர்கயாம்
மு.க. BillGates சோடு எழுந்து நின்று பேசுகிறாரே! அதற்கு எவ்வளவு பில் போட்டார்?
S.முஹம்மதுபாரூக்,அதிராம்பட்டினம்
மு.க. பற்றி கண்ணதாசன் கூறிய மற்றொரு நிகழ்வு உண்டு. அதை நினைக்கும்போது எவ்வளவு திட்டமிட்டு ஒரு மனிதன் தன்னை முன்னிலைப் படுத்தி வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை அறியலாம்.
சென்னை மாநகராட்சிக்குத் தேர்தல் வந்தது. திமுக மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த காலம். திமுக கூட்டங்களுக்கு எக்கச்சக்க கூட்டம். ஆதரவு. அந்த தேர்தலில் தி மு க பெற்ற வெற்றி திமுகவின் சரித்திரத்தில் முக்கியக் கட்டம். ஒரு வளர்ந்து வரும் கட்சி தலைநகரின் மாநகராட்சியைக் கைப்பற்றுவது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி/ நிகழ்ச்சி.ஊக்கம். ஊட்டம்.
திமுகவின் அனைத்துத் தலைவர்களும் மூலைக்கு மூலை ஊடியாடி/ ஓடியாடிச்சென்று பாடுபட்டு அந்த வெற்றிக் கனியப் பறித்தனர். முகவின் உழைப்பும் கணிசமானது.
மேயருக்கு பாராட்டுவிழா வெற்றிவிழா நடைபெற்றது.
அண்ணா பேசினார் - பேசும்போது ஒரு மோதிரத்தைக் கூட்டத்தினருக்குக் காட்டினார்.
"என் மனைவிக்குக் கூட தங்கம் வாங்குவதற்கு நான் இவ்வளவு சிரமப் பட்டது கிடையாது. அப்படி கடைகளில் ஏறிப்போய் இந்த ஒரு பவுன மோதிரத்தை வாங்கினேன். இந்த சென்னை மாநகராட்சியில் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அருமைத்தம்பி கருணாநிதிக்கு உங்கள் சார்பாக இதனை சூட்டி மகிழ்வதில் பெருமைப் படுகிறேன். "
என்று அண்ணா பேசி மோதிரத்தை கருனாநிதியின் விரலில் அணிவித்தார். கூட்டம் கைதட்டி மகிழ்ந்தது.
மறுநாள் கோபத்துடன் அண்ணாவை சந்தித்தார் கண்ணதாசன்.
" என்ன வேடிக்கை அண்ணா? கருணாநிதி மட்டுமே உழைத்துப் பாடுபட்டு வெற்றிக்கனியைப் பறித்ததாக நீங்கள் மோதிரம் போட்டீர்கள்? மற்றவர்கள் எவரும் உழைக்க வில்லையா ? " என்று கேட்டார்.
அண்ணா நமுட்டு சிரிப்புடன் சொன்னார்.
" எல்லோரும் உழைத்தீர்கள். ஆனால் சொந்தக் காசில் மோதிரம் வாங்கித் தந்து கூட்டத்தில் பாராட்டி அணிவிக்கச்சொன்ன அறிவு கருணாநிதிக்கு மட்டும்தானே இருந்தது? நீயும் அதுபோல் ஒன்றை வாங்கித்தந்து இருந்தால் அணிவிப்பதில் எனக்கென்ன தயக்கம்" என்றாராம்.
எப்படி இருக்கிறது கதை?
//சொந்த காசில் மோதிரம் வாங்கி தந்து பாராட்டி அணுவிக்க சொன்ன//..
அவரவர் காசில் தங்கத்தில் மோதிரமும் போட்டுக் கொள்வார்கள், காலில் தண்டை காப்பும் போட்டு 'சலக்-சலக்' என்றும் சௌண்டு விட்டும் நடப்பார்கள். அது அவரவர் இஷ்டம்.. இருந்தும் இதைப் போய் ஒருபெரிய விஷயமாய் எடுத்து என் மைத்துனர் இப்ராஹிம் அன்சாரி எழுதுகிறாரே! அதில் அவருக்கு ஏன் இவ்வளவு பொறமை?
நான் அவர் ராத்தாவை கட்டி நாலுபிள்ளை பெத்து, அஞ்சுபேரன்-பேத்தி எடுத்த பின்கூட அவர் எனக்கு ''மச்சினன் மோதிரம்'' விடவில்லை' என்ற குறையை இதுவரை யாரிடமாவது நாக்கில் பல்போட்டு காதோடு காதாககூட 'சொல்லி இருப்பேனா?'. என்று கேட்டு பாருங்கள். பதிலே வராது [குறிப்பு: வரதட்சனை வாங்குவதை எதிர்த்து எழுதுவதெல்லாம் மச்சினன் மோதிரதுக்கு' டிமிக்கி 'கொடுக்கத்தான்]
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்
ஆஹா இது குடும்பபிரச்னையகிவிடும்போலத் தோன்றுகிறதே! கருணாநிதியின் கை இங்குமா?
இருந்தாலும் பதில் சொல்கிறேன்.
//மச்சினன் மோதிரம் // உங்களுக்கு திருமணம் நடந்த போது இப்படி ஒரு அயிட்டம் இருப்பதே தெரியாத வயது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன். சட்டத்தின் மொழியில் பேசுவதானால் ஒரு மைனர்.ஒரு மைனரிடம் இப்படி என்றோ விடத்தவறிய மோதிரம் கேட்பது நல்லாவா இருக்கு?
நானே ஸ்கூலில் ஐஸ் வாங்கி ஆசுவாசப்படுத்திக்கொள்ள நீங்கள் தரும் இரண்டு ரூபாயை எதிர்பார்த்து நின்ற காலம் . மச்சினன் மோதிரம் என்று நீங்க வேறே மச்சான்.
இன்னும் பழைய நினைப்பிலேயே இருப்பீக போலிருக்கு.
//தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தவரின் சங்கதிகள் இன்னும் நிறைய இருகிறதாம்- பகுருதீன் சொல்கிறார்//
அந்த ரயில் 'Guard கைலே பச்சை கொடி 'இல்லை' என்ற சங்கதி பகுருதீனுக்கும் தெரிந்து விட்டதோ! அது கலைஞருக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்தேன்
S.முஹம்மதுபாரூக், அதிராம்பட்டினம்.
சாகப் போகிறேன் என்று முழக்கமிட்டு தண்டவாளத்தில் படுக்குமுன் தோளில் கிடந்த துண்டை எடுத்து விரித்துக் கொண்டு படுத்தார்- சட்டை அழுக்காகக் கூடாது என்று குமரி அனந்தன் அன்று கூறினாரே!
Post a Comment