Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரையில் ரமளானும் அன்பளிப்பு எனும் சீதனங்களும் ! 9

அதிரைநிருபர் பதிப்பகம் | July 28, 2013 | , , , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும் - நபிமொழி !

நபிமொழி அதுதான் நம் அனைவருக்கும் நேரான வழி, மானுட வாழ்வியலை அர்த்தமுடன் எக்காலத்திற்கும் எடுத்துரைக்கும் சூளுரைகள் !

அல்ஹம்துலில்லாஹ் !

அதிரையைப் பொறுத்தமட்டில் வரதட்சனைகள் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்தாலும், ஆண்மக்களைப் பெற்றவர்கள் வீட்டில் வரதட்சனைகளாக கேட்டாலும் பெண்ணைப் பெற்றவர்கள் உறுதியாக தர இயலாது என்று மன உறுதியுடன் சொல்லும் நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், முற்றிலுமாக நின்றுவிட்டது என்று மார்த்தட்ட இயாலாவிடினும், பெரும்பாலும் குறைந்திருக்கிறது.

என்ன பயன் !?

தலைவாசலின் கதவுகள் அரைகுறையாக பூட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது கொல்லைப்புற வாசல்களை திறந்து வைத்துக் கொண்டு இருக்கும் நம்மவர்களின் கலாச்சாரமாக மாறிவரும் வரதட்சனைக்கு மறுபதிப்பாக விஷேட காலங்களில் குறிப்பாக ரமாளன் காலங்களில் தலை தூக்கும் விரையங்களை அள்ளிக் கொட்டும் சம்பந்திபுற சாப்பாட்டு பரிமாற்றங்களே.

அன்பளிப்புகள் அவரவர்களுக்குள் பரிமாற்றமாக இருந்திருந்தால் விமர்சனங்களாக எடுத்துரைக்கப்பட மாட்டாது, ஆனால், வீட்டாரின் தேவைகளுக்கு மேல் பன்மடங்கு பெறப்படும் அன்பளிப்புகளால் அதனை ஏற்பாடு செய்பவர்களின் செலவினங்களை அதிகரிக்கும் இந்த விரையம் தேவைதானா என்று சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.

மாப்பிள்ளை, பெண் பேசி வைத்துவிட்டால் இருவீட்டாரின் நட்புறவுகள் வலுப்பெற பரஸ்பர பரிமாற்றங்கள் இருவீட்டாருக்குள் இருந்தால் விதிமீறல்கள் இருக்க வாய்ப்புகள் குறைவு, ஆனால் பகட்டுக்காக அடுத்தவர்களின் பார்வைக்காக, ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக கேட்டுப் பெறுவது ஒரு வழக்கமாக இருப்பின், கேட்காமலே வாரிவழங்கும் வள்ளல்களாக மாறும் பெண் விட்டாரை என்னவென்று சொல்வது!?.

இயன்றவர்கள் செய்யும் செலவுகள், இயலாதவர்களையும் அசைத்துப் போடுகிறது பொருளாதார எல்லைதாண்டி செலவுகள் செய்து இப்படிச் செய்ய வேண்டும் என்று அப்படி என்னதான் அவசியம் !?

பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய அன்பளிப்புகள் அவசியம் தானா ?

மார்க்கம் அனுமதிக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரியும் ஏனோ அதனை துப்பட்டிக்குள் போர்த்தி மூடி வைத்துவிட்டு, சஹனுக்கு மற்றொரு சஹனை போர்வையாக போர்த்திச் செல்லும், கேட்டுப் பெறும், அல்லது கேட்காமல் அனுப்பி வைக்கப்படுவதை வாங்கும் / கொடுக்கும் அனைத்து சீதனங்களும் சீர்கேடுகளே.

சிந்தியுங்கள் ஈமானிய சகோதர சகோதரிகளே !

இஸ்லாம் அனுமதித்தவைகளோடு இல்லறம் சிறக்க வாழ்வோம் இன்ஷா அல்லாஹ் !

மேலும் பார்க்க : http://adirainirubar.blogspot.ae/2013/05/blog-post_27.html

நேரம் ஒதுக்கி இங்கே கீழே பதிக்கப்பட்டிருக்கும் காணொளியில் எடுத்து வைக்கப்படும் கருத்துரைகளை தயைகூர்ந்து கேட்டுப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ்.


அதிரைநிருபர் பதிப்பகம்

9 Responses So Far:

Shameed said...

எனக்கு தெரிந்த ஒருவர் ஆட்டுத்தலையின் ஒரு துண்டு (செவுலு )மட்டும் திண்டு கொண்டிருந்தவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்த பிறகு பெண் வீட்டில் இருந்து வாரி வாரி போன சீதனங்களை தின்று பழகியதில் தற்போது ஒரே ஆள் இரண்டு ஆட்டுத்தலையை திங்கும் அளவுக்கு அவர் குடல் வைட் ரேஞ்சுக்கு போய் அகண்டு விட்டார்

Unknown said...

தன் சக்திக்கு மீறி பெண்னைபெற்ற ஒரே காரணத்திற்க்காக
சீதனம் என்னும் சீர்கேட்டை , கொடுப்பவர்களும் ஓய்ந்தபாடில்லை.
அதை மானம் கெட்டு பெறுபவர்களும் குறைந்தபாடில்லை.

உண்மை ஆண்மகனாக வளம் வர வேண்டியவன், புடவை உடுத்தாத குறையாக, தொப்பிபோட்ட, வேஷ்டி கட்டிய பெண்ணாகத்தான் இன்றளவும் உலாவருகின்றான். இதை துடைத்தெறிய, எத்தனை ஆலிம்களை வைத்து எவ்வளவு சிறப்பு பாயான் ஏற்ப்பாடு செய்தாலும் அனைத்தும் செவிடன் காதிய ஊதிய சங்குதான்.

இதை கொடுப்பவர்களும், பெறுபவர்களும் தானாக திருந்தினால் ஒழிய
இதற்க்கு முற்றுப்புள்ளி என்பது இல்லை. என்றுமே கமா தான். இது தொடரும் ஒரு நோய் தான்.

வறட்டு கௌரவமும் வீண் பிடிவாதமும்
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஏதும் நினைத்து விடுவார்களோ என்னும்
உப்பு சப்பில்லாத காரணங்கள் தலை தூக்கி இருக்கும் வரை.

இது நம் சமுதாயத்தை பிடித்த ஒரு புற்று நோய்.

அபு ஆசிப்.

Anonymous said...

தேவைக்கு மேல் பணம் கையேலே நிறைய நிறம்பி விட்டால் வேதத்தின் ஓசைகள் காதுகளில் கேட்பதில்லை.. கருப்பு எது சிவப்பு எது பச்சை எது என்று கண்களும் காண்பதில்லை பொருட்களை விரயம் செய்வது செய்தானின் செயல் என்பதையும் உணர்வதில்லை அங்கே நல்ல போதனைகள் செய்வது குருடர்கள் ஊரில் ஓவியம் விற்பதை போல வீன் வேலையே!

S.முஹம்மதுபாரூக் அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

இப்படிப்பட்டவர்களுக்கு வெட்க உணர்வே இருக்காதா? பிச்சைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லையே.

இந்தச் சாபம் நீங்க வேண்டும். இதை நீக்க நீங்கள் வேண்டும் நன்மக்களே.

KALAM SHAICK ABDUL KADER said...

\\பகட்டுக்காகவும், பெருமைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் இத்தகைய அன்பளிப்புகள் அவசியம் தானா ?\\

வேடிக்கை என்னவென்றால், திருமணமாகிக் குழந்தைகள் பெற்ற பின்னரும் இந்த “சீர்வரிசைகள்” தொடர்கின்றன!

வாங்குபவர்கட்கும் வெட்கமில்லை; கொடுப்பவர்கட்கும் “அச்சம்” குறையவில்லை!

மார்க்கம் அறிந்தவர்கள் வீட்டிலும் இக்கொடுமைகள் தொடர்வதும் வேடிக்கையிலும் வேடிக்கை; இதுவே அதிரையின் வாடிக்கை!

Ebrahim Ansari said...

இதைப் பற்றி எத்தனை முறை எழுதுவது? யாருக்கும் வெட்கமில்லை.

மார்க்கம் அறிந்தவர்கள் வீடுகள் என்ன? அறியாத பாமரர் வீடுகள் என்ன? எல்லாமே இந்த வலைக்குள் சிக்கிய மீன்களே!

அடிக்கடி சுட்டிக் காட்டுவதுபோல் அடிப்படையில் தவறு இருக்கிறது.

வரதட்சணை ஒழிப்பு பற்றிய பயானை நடு இரவில் கூட கேட்டுவிட்டு நேராக வீட்டுக்குப் போய் சம்பந்தி வீட்டுக்கு கடற்பாசியும் வட்டிலப்பமும் தாயார் செய்யும் தாய்மார்களே அதிகம்.

தீவிர நடவடிக்கையும் இயக்கமும் காணாதவரை இப்படியே எழுதி எழுதி ஆசுவாசப் படுத்த வேண்டியதுதான்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல் சொற்பொழிவு!
இருவீட்டாரின் நட்புறவுகள் வலுப்பெற பரஸ்பர பரிமாற்றங்கள் இருவீட்டாருக்குள் இருந்து,
"அன்பளிப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அது உங்களுக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கும்"
என்ற நபிமொழிக்கேற்ப வரையரைக்குட்பட்டு மட்டும் செயல்பட அல்லாஹ் நமக்கு நல்ல மனமாற்றத்தை தருவானாக... ஆமீன்.

ZAEISA said...

ஒரு ஆண்மகன் சுயமாக சம்பாரித்து தன் தேவைகளை தானே நிறைவேற்றிக் கொள்ளுமளவு வளர்ந்ததும் அவனுக்கு கல்யாண முடிவெடுத்தால் அவனது பேச்சுக்கு மறுப்பேதும் வராது.அவனைமீறி வரதட்சனை வாங்கவும் முனையமாட்டார்கள்.
இங்கேதான்...பாஸ்போர்ட்க்கு பையன் போட்டோ எடுத்தவுடனேயே...வீட்டுக்கு தம்ரூட்டோ,முட்டைப்புரோட்டோவோ கொடுத்து விடுகிறார்களே...என்னசெய்ய........

Anonymous said...

வரதட்சினையை எதிர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.அதற்காக இவற்றையும் அந்த லிஸ்டில் சேர்ப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன். பரஸ்பரம் அன்பளிப்புகள் மூலம் சிதைந்து கிடக்கும் மாமியார்-மருமகள் உறவைப் புதுப்பிக்கும் வகையில் ரமலான் மட்டுமின்றி வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் இவற்றைச் செய்யலாம் என்பதே என் கருத்து.

நோன்புகஞ்சி+வாடாவுக்கான செலவு பட்டுக்கோட்டைச் சென்று புடவை வாங்கித்திரும்பும் செலவை விடவும் குறைவுதான். கூடுதலாக முட்டை ரொட்டியும், கறிஆணமும் இருந்தால் அது திருச்சிக்கு/சென்னைக்குச்சென்று திரும்பும் செலவை விடக்குறைவுதான்.

என்னதான் இதுபோன்ற சீஸன் அன்பளிப்புகளுக்காகச் செலவளித்தாலும் அது கணவன் (அதாவது தனது மகன்) கொடுத்த செலவு பணத்திலிருந்தே செய்யப்படுகிறது என்பதால் மாமியாருக்கு இதில் நெருடலோ சங்கடமோ இருக்க வாய்ப்பில்லை. வாங்கியதை தனது குடும்பத்தினருக்குப் பங்கிட்டு கொடுப்பதையும், அதுபோல் தனது மகளின் மாமியார் வீட்டுக்குச் செய்து கொடுப்பதையும் கருத்தில் கொண்டால் அவ்வாறு வாங்குவது குற்றமல்ல.

தயவு செய்து இதற்கு யாரும் மார்க்க ஆதாரம் கேட்க வேண்டாம். சில நடைமுறைகளுக்கு அவற்றை எதிர்பார்ப்பது சரியுமல்ல என்பதோடு தேடினாலும் கிடைக்காது. ஏனெனில், நபிகளாரின் மனைவிகளுக்கு நார்த்தானார்,மாமியாரை தாஜா செய்யவேண்டிய நிலை இருக்கவில்லை :)

N.ஜமாலுதீன் @ அதிரைக்காரன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு