Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் - தொடர்- 23 25

அதிரைநிருபர் பதிப்பகம் | July 13, 2013 | , ,

தொடர் : இருபத்தி மூன்று

இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்கள் (வட்டி இல்லா வங்கி முறை).

இந்த அத்தியாயத்தை இந்த செய்தியைப் பகிர்வது மூலம் தொடங்க  நினைக்கிறேன். 

கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் சிறுபான்மை மக்களில் பெரும்பான்மையாக வாழும் மக்களான முஸ்லிம்களின் இயல்போடு ஒத்துவராத, அந்த மக்களோடு ஒன்றிப்போக இயலாத வங்கியியல் பரிவர்த்தனை இந்தியாவில் நடைமுறையில் இருகின்ற காரணத்தால்  வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வங்கிகளோடு பண பரிவர்த்தனை செய்ததின் காரணமாக இந்தியா முழுவதும் ஏறக்குறைய 75 ஆயிரம் கோடி ரூபாய் வட்டிப் பணம் கேட்பாரற்று, முஸ்லிம்களால் நிராகரிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் வங்கிகளில் முடங்கிக் கிடக்கிறது. கேரளாவில் மட்டும் 45,000 கோடி ரூபாய் முடங்கிக் கிடப்பதாக  மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட – RBI Legal News and Views என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

ஆகவே இஸ்லாமிய நெறிமுறை மற்றும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்ட வங்கி முறை ஒன்று இந்தியாவிலும் அவசியம் என்பதை பொது மக்களும் வங்கி மற்றும் நிதித்துறையும் உணரத்தொடங்கிவிட்டனர். எனவேதான் இந்தியப் பிரதமரின்  வாயாலேயே அந்த முத்து உதிர்ந்து இருக்கிறது. 

இஸ்லாமியர்களுக்கென தனி சட்டங்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கப் பட்டிருப்பதையே அவ்வப்போது நோண்டி நொங்கு எடுத்துக் கொண்டிருக்கும் மதவாத சக்திகள் இஸ்லாமிய வங்கி முறை ஏற்படுத்தப் பட்டாலும் இடையூறு செய்யவும் எதிர்ப்புக்குரல் எழுப்பவுமே  செய்வார்கள். ஆனால் இது காலத்தின்  கட்டாயம். ஒட்டுமொத்த நாட்டின் அனைத்து சமூகத்தையும்  வட்டியின் கொடுமையிலிருந்து விடுபடவைக்கும் அருமருந்து என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும்.  

இஸ்லாமிய வங்கி முறைமை என்றால் என்ன? என்பதையும் அதன் அடிப்படைகள் யாவை என்பதையும்  அவ்வங்கி முறைமையினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் இந்தியா போன்ற  நாடுகளில் அமுல்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தும் இடையூறுகள்  யாவை போன்ற பொதுவான விஷயங்களை இங்கு குறிப்பிடுவது   அவசியமாகும்.

முதலில் நாம் வட்டியில்லாத வங்கி முறை அதாவது இஸ்லாமிய வங்கி முறை என்றால் என்ன? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றி இஸ்லாமிய அறிஞர்களும் கூட பல்வேறு வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். இஸ்லாமிய வங்கி முறை இந்தியாவுக்கும் வேண்டுமென்றால் நம்மைப் பார்த்து முறைப்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அதன் பயன்பாட்டை அனுபவத்தில் உணர்ந்து கொண்டால் அட! பேஷ் ! பேஷ்! ரெம்ப நன்னா இருக்கு என்று போற்றுவர்.  

“இஸ்லாமிய வங்கி முறை என்பது அவசியம், அது ஆன்மீகத்திலிருந்து பிரித்தெடுக்க முடியாத ஒரு துறையாகும். இஸ்லாத்தின் உறுதிமிக்க அடிப்படைகளுக்கு ஏற்ப அவை வரையறுக்கப்பட்டதாக காணப்படும்”  என்று Dr. Ziauddin Ahamed  என்கிற பொருளியல் அறிஞர்  கூறுகின்றார்.

“இஸ்லாமியப் பொருளாதார வழியில் செல்வத்தைப் பயன்படுத்துவதற்கும், வளப் பங்கீட்டை சீர்படுத்துவதற்கும், நீதியையும் சமூகப் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கும், சேவைகளை வழங்குவதற்கும், செல்வங்களை ஒன்று திரட்டி தொழில் முயற்சிகளில் ஈடுபடுகின்ற நிதி சார் நடவடிக்கைகளை இஸ்லாமிய வரையறைக்குள் மேற்கொள்கின்ற நிறுவனமே இஸ்லாமிய வங்கியாகும்” என முனைவர்  அஹமது நஜ்ஜார் என்ற மற்றொரு  அறிஞர் கூறுகின்றார்.

இஸ்லாமிய வங்கி முறை (Islamic Banking System)  என்பது கொடுக்கல் வாங்கலின் போது அல்லது பணப்பரிமாற்றலின் போது அல்லாஹ்வும் அவனது அருட் தூதரும்  எச்சரித்த  வட்டியிலிருந்து தவிர்த்துக்கொள்ளக் கூடிய நாடு தழுவிய  ஒரு நிதிக் கொள்கையாகும். மற்றும் இஸ்லாமிய பொருளாதாரத்தினுடைய நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு உதவி புரியக் கூடிய வகையில் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுமாகும். இந்த வங்கி முறைகள், பொருளியல் சமத்துவத்தை போதிக்கும் இஸ்லாமிய ஷரியத் சட்டங்களின்  அடிப்படைகளிலிருந்து எழுப்பப்பட்டதாகும். (இந்த முறைகள் ஆரம்பிக்கப் பட்ட வரலாறு தொடர்ந்து எழுதப்படும்.  )

இஸ்லாமிய வங்கி முறை  இலாபம் நட்டம் ஆகிய இரண்டையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய அதை கபூல் செய்துகொள்ளக் கூடிய உன்னதத்  தன்மையும்  வாய்ந்ததாகும். எனவே இஸ்லாமிய வங்கிகள் PLS (Profit and Loss Sharing) என அடையாளப்படுத்தப்படுகின்றன.

அந்தவகையில் இஸ்லாமிய வங்கியியலின் நோக்கங்களை நாம் பின்வருமாறு நோக்கலாம்.

1. வட்டியிலிருந்து விடுபடல்
2. நிச்சயமற்ற தன்மையிலிருந்து தவிர்த்து கொள்ளல்
3. சூதாட்டத்தை நிராகரித்தல் 
4. ஹராம் – ஹலால் பற்றி கவனத்திற் கொள்ளல் 
5. ஸகாத் – இஸ்லாமிய வரியை பேணி நடைமுறைப்படுத்தல் 

எனவே இஸ்லாமிய வங்கியொன்று தனது செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது மேற்கூறப்பட்ட அடிப்படைத் தத்துவங்களை பின்பற்றியே செயல்பட வேண்டும். 

ஏனெனில் அவை இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட அழகிய மாளிகையாகும். இஸ்லாமிய பொருளியல் கோட்பாடுகள்  நாம் ஏற்கனவே விவாதித்தபடி படைக்கப் பட்ட மனிதர்களால் உருவாக்கப் பட்ட  பொருளியல் கோட்பாடுகளைப்  போல அல்லாமல் படைத்த இறைவனிடமிருந்து பெறப்பட்டதாகும். 

இக்கோட்பாடானது இஸ்லாமிய அடிப்படை சட்ட மூலாதாரங்களான இறைவேதம் மற்றும் நபி மொழியின்  மூலம் தெளிவுபடுத்தப்பட்டதாகும். எனவேதான் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் வட்டியில்லாத வங்கிமுறையான இஸ்லாமிய வங்கிமுறையினடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.

இன்றைய உலகில் இஸ்லாமிய வங்கியியல் முறையொன்று முஸ்லிம் அறிஞர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
அந்த வகையில் இஸ்லாமிய வங்கியியல் எதிர்நோக்குகின்ற பெரியதொரு  பிரச்சினை முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழுகின்ற இந்தியா போன்ற  நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதாகும். 

முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழுகின்ற நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமையை நடைமுறைப்படுத்துவதில் பின்வரும்  காரணிகள் இடையூறுகளாக  காணப்படுகின்றன. 

1. இஸ்லாமிய வங்கிகளுக்கென ஒரு தனியான மத்திய வங்கி ஏற்படுத்தப் படாதது அல்லது இருக்கும் மத்திய வங்கியில் இதற்கென ஒரு தனித்துறை அமையாதது. 
2. இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சியின் போது அரசினது அல்லது மத்திய வங்கியினது பொதுவான தலையீடுகளுக்கும்  கட்டுப்பாடுகளுக்கும் உட்படவேண்டிய கட்டாயம். 
3. தற்போது நடைமுறையிலுள்ள கவர்ச்சிகரமான வட்டியுடன் கூடிய வங்கிகளுடன் போட்டி போட முடியாமை.
4. இஸ்லாமிய வங்கிகள் கிளைகளை நாடெங்கும் பரவலாக அமைத்து தமது சேவைகளையும், நடவடிக்கைகளையும் விஸ்தரிக்க முடியாமை.
5. இஸ்லாமிய பொருளாதார, முதலீட்டு நடவடிக்கைகள் பற்றிய அறிவின்மைகளும், நம்மவர்களே முதலீடுகளில் திருப்தி கொள்ளாமையும்.

ஆயினும் பல அரபு நாடுகளிலும் மலேசியா , இலங்கை , வங்க தேசம், ஆகிய நாடுகளில்  உள்ள  இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய பொருளியல் தத்துவங்களையும், கோட்பாடுகளையும் உள்ளடக்கி ஷரீஆவின் அடிப்படையில் அமைந்த பின்வரும் முக்கிய கொடுக்கல் வாங்கல்களையும், வியாபார நடவடிக்கைகளையும், சேவைகளையும் மேற்கொள்கின்றன.

1. முழாரபா: கூட்டுப் பங்காண்மை
2. முஷாரகா: கூட்டுப் பங்குடமை
3. வீட்டு முஷாரகா முறைமை
4. முராபஹா: இலாபத்தை தெரியப்படுத்தி விற்றல்
5. முஸாவமா: சாதாரண வியாபாரம்
6. இஜாரா: வாடகைச் சேவை
7. வைப்புக்களை ஏற்றல்: ஆரம்ப வைப்பு, முதலீட்டு வைப்பு, நிரந்தர  வைப்பு ஆகியன.
8. பைஉல் முஅஜ்ஜல்: தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை
9. ஸலம்: முற்பணக் கொடுப்பனவு வியாபாரம்.
10. ரஹ்ன்: அடகுச் சேவை
11. கர்ழ்: கடன் கொடுக்கல் வாங்கல்

இவ்விடத்தில் நாம் முக்கியமானதொரு விஷயத்தை நோக்க வேண்டும். மேற் கூறப்பட்ட சேவைகளுக்கான செலவினங்கள், கட்டணங்கள் பாரம்பரிய வங்கிகளுக்கு மட்டுமா காணப்படுகிறது? ஏன் இவை இஸ்லாமிய வங்கிகளுக்கு இல்லையா? அவை அனைத்தும் இஸ்லாமிய வங்கிகளிடமும் காணப்படவே செய்கின்றன.

எனினும் இஸ்லாமிய வங்கிகளில் ஏற்கனவே கூறப்பட்ட செயற்பாடுகளினால் பெறப்படுகின்ற இலாபங்களினாலும், சேவைக் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு  வசூலிக்கப்படும் கட்டணங்களால்  அவை ஈடு செய்யப்படுகின்றன.

இஸ்லாமிய வங்கிகளில் வாடிக்கையாளரினால் வைப்புச் செய்யப்படும் பணம் பற்றியும், அப்பணத்திற்கான முதலீடு, மற்றும் அதனால் கிடைக்கும் இலாபம் யாருக்குரியது? என்பது பற்றியும் அவைகள் பற்றிய மார்க்க தீர்ப்பு என்ன? என்பது பற்றியும் ஒரு வாடிக்கையாளர் இஸ்லாமிய வங்கியில் வைப்புகளை அல்லது முதலீடுளை செலுத்த செயல்படும்பொழுது அல்லது நடவடிக்கை மேற்கொள்ளும் போது ஏற்கனவே கூறப்பட்ட ஷரீஆ அனுமதித்த கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையிலே தெளிவான முறையில் மேற்கொள்வர். அத்துடன் அவைகளுக்குரிய மார்க்க ரீதியான ஆலோசனைகள் அவருக்கு வழங்கப் படும். 

அவ்வாறு முதலீடுகளை மேற்கொள்ளும் போது வாடிக்கையாளரும் வங்கியும் ஏற்றுக் கொள்ளும் ஷரத்துக்கள் மற்றும்  வங்கி செயற்பாட்டு நடவடிக்கைகளின் தன்மை, மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப இலாபம் பகிரப்படும். அதேபோன்று சில கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் நட்டமும் பங்கிடப்படும். இதற்கான ஒப்புதலும் வாடிக்கையாளரிடம் பெறப்படும்.  எனினும் இந்நடவடிக்கைகளின் போது ஆன்மீக அடிப்படையில் இஸ்லாமிய ஷரீஆ பின்பற்றப்பட வேண்டும் என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். 

உதாரணமாக மார்க்கம் தடை செய்துள்ள  மதுபான உற்பத்தி தொழிலுக்கு  பணத்தை முதலீடு செய்ய முடியாது. அதேபோன்று விபசார விடுதிக்காக ஒரு கட்டிடத்தை வாடகைக்கு விட முடியாது. திரைப்படம் எடுக்க நிதிக்கடன் அளிக்க இயலாது.  

மற்றொரு சந்தேகம் நம்மிடையே உண்டாகலாம்.  அதாவது இஸ்லாமிய வங்கிகள் முஸ்லிம்களுக்கு  மட்டுமே பயன்படும் . அல்லது முஸ்லிம்கள் மட்டுமே பயன்படுத்துவர் என்கிற வாதம்.  முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்களுக்குட்பட்ட விதிமுறைகள் உள்ள வங்கிச்சேவைகளை  நாடமாட்டார்கள் என்று ஓர் கருத்தும் எழுவது இயற்கை.  

ஆனால் இஸ்லாமிய வங்கி முறைகள் பின்பற்றப்படும் நாடுகளின் புள்ளி விவரங்கள்  முஸ்லிமல்லாதவர்கள் கூட பெருமளவில் இஸ்லாமிய வங்கிகளில் நம்பிக்கையுடன் கூடிய நன்னடத்தை மிக்க வாடிக்கையாளர்களாக காணப்படுவது மாத்திரமன்றி, இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் சேவைகளையும்  செயற்பாடுகளையும்  வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தலைசிறந்த ஊழியர்களாகவும் விளங்குகின்றனர் என்பதை  பறை சாற்றுகிறது. உதாரணமாக அரபு நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைகளையும் பொதுவான வங்கி முறைகளையும் பின்பற்றும் வங்கிகளில் இஸ்லாமிய வங்கி முறைகளே தங்களுக்கு வேண்டுமென்று கேட்டு அந்த ரீதியிலேயே தங்களின் கணக்குகளைத் தொடங்கி நிர்வகித்து வரும்  மாற்று மத சகோதரர்கள் ஏராளம்.  

இவற்றையெல்லாம் நாம் நோக்குகின்ற பொழுது இஸ்லாமிய வங்கியினால் இலாபமடைவது யார்?  என்று நம் மனதில் ஏழும்  வினாவிற்கு சுலபமாக விடை காண முடியும். இங்கு வங்கி, வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்பினருமே இலாபமடைகின்றனர். பயனடைகின்றனர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதனால்தான் இன்று உதாரணத்துக்கு சொல்லப் போனால்  இலங்கையில் காணப்படுகின்ற இஸ்லாமிய வங்கிகளின் நிதி நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்லும் அதேவேளை வாடிக்கையாளர்களின் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இஸ்லாமிய வங்கிகளின் நோக்கங்களையும் செயற்பாடுகளையும் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது இலாபமீட்டுதல், பணம் சம்பாதித்தல் என்பதைவிட சேவை வழங்குதல் என்பதே முதன்மை பெற்று விளங்குவதை காணமுடியும். இங்கு இஸ்லாமிய வங்கிகளின் ஸ்திரத்தன்மை முஸ்லிம் சமூகத்தில் தங்கியுள்ள அதேவேளை முஸ்லிம் சமூகத்தின் கொடுக்கல் வாங்கல் அடிப்படையிலான இயக்கப்பாடு இஸ்லாமிய வங்கிகளிலும் தங்கியுள்ளது.

எனவே ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாமிய ஷரீஆவிற்குட்பட்ட முறையில் வாழ்பவர் களாயின் அவர்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களையும், பொருளீட்டல் நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 

மாறாக இஸ்லாமிய வங்கிகளை குறை கூறி, கூறி பாரம்பரிய வங்கிகளில் வட்டியில் முழுமையாக மூழ்குவதைவிட  இஸ்லாமிய அடிப்படையிலான வங்கிகள், வங்கிப் பிரிவுகள் நிதி நிறுவனங்கள் மேலானதே, என்றாலும் ஏற்கனவே கூறியதைப் போன்று முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் இஸ்லாமிய வங்கி முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் மட்டுமன்றி சவால்களும் காணப்படவே செய்கின்றன.

அந்த வகையில் முஸ்லிம்களையும் தனது மக்கள் தொகையில் கணிசமாகக் கொண்டுள்ள நாடுகளும் இந்தப் பொறுப்புகளை மேற்கொள்வதில் இருந்து விதிவிலக்குப் பெறாமல் அவைகளை மேற்கொள்வது அவசியமாகும்.  

வட்டி வாங்குவது, வட்டி கொடுப்பது, வட்டி கணக்கு எழுதுவது, அதற்கு சாட்சியாக கையெழுத்திடுவது அனைத்தும் பெரும் பாவம் என்று இஸ்லாமிய மார்க்கம் தெள்ளத் தெளிவாக்குகிறது. இதுபற்றி முன்னரும் சுட்டிக் காட்டி இருக்கிறோம். முழுவதும் வட்டி அடிப்படையிலான வங்கியியல் நடைமுறை காரணமாக முஸ்லிம்கள் வங்கிகளில் கணக்கு தொடங்குவதில் கூட பிற எல்லா சமூகங்களைக் காட்டிலும் மிகவும் பின்னுக்கு இருக்கிறார்கள். இதனால் இந்த சமூகம் பொருளாதார ரீதியாகமுன்னேறிய சமூகமாக மாறுவதற்கு, முஸ்லிம் சமூகத்தவர் பெரிய பெரிய தொழிற்சாலை தொடங்குவதற்கு,  பங்குகள் மூலம் பெரிய அளவிலான நிதியைத் திரட்டி பெரும்தொழில் செய்வதற்கு,  ஏழைமாணவர்கள் கல்விக்  கடன் பெறுவதற்கு என்று பிற சமூகங்களைப் போல  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தங்கு தடையின்றி செயல்பட இயலாத நிலையில் உள்ளது. 

காரணம்,  ஒரு உண்மை முஸ்லிம்  எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை  அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்ஆகிய கட்டுப்பாடுகளால் மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் பொருளாதார பின்னடைவிற்கு இன்றைய வங்கியியல் நடைமுறையும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

முஸ்லிம்களின் சமூக – பொருளாதார – கல்வி நிலையைப் பற்றி ஆய்வு செய்த நீதியரசர் ராஜிந்தர் சச்சார் அவர்களின் அறிக்கையில் வங்கி பரிவர்த்தனையில் முஸ்லிம்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளார். நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் வெறும் 12 விழுக்காடு தான் முஸ்லிம்கள். மக்கள் தொகையில் 6 விழுக்காடு உள்ள ஏனைய சிறுபான்மை மக்கள் 8 விழுக்காடு அளவிற்கு வங்கி பரிவர்த்தனை செய்கின்றனர். நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் உள்ள வங்கிகளின் கிளைகளை பல முழுமை பெற்ற சேவை வசதிகளற்ற   கிளைகளாக அந்த வங்கிகளின் தலைமையகம் வைத்துள்ளது. முஸ்லிம்கள் இன்றைய வங்கிகளோடு நெருங்கி பரிவர்த்தனை செய்யாதது தான் இதற்குக் காரணம் என்று நீதியரசர் ராஜிந்தர் சச்சர் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று போராடும் இயக்கங்கள் இஸ்லாமிய வங்கி முறைகளும் நாட்டில் உருவாக்கப் பட வேண்டுமென்று போராட அரசியல் செயல் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின்  அவசியம். 

ஏனென்றால் இஸ்லாமிய வங்கி முறைகளை மேல்நாடுகள் கை நீட்டி வரவேற்க ஆரம்பித்துவிட்ட சரித்திரம் தொடங்கிவிட்டது.   இதோ உலகப் பொருளாதாரத்தை அலசும் ஒரு  பிறமத பொருளாதார ஆசிரியர் கூறுகிறார்.  

“அமெரிக்காவிலும், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான். கான், ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது. காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட் புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின் லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன் சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர் இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க, கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன. “ ( நன்றி : இரா. முருகன்). 

வேறென்ன வேண்டும் ?

இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய வங்கி பற்றிய விளக்கங்கள் தொடரும்.

இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

இந்திய முஸ்லிம்கள் :”வட்டி வேண்டாமென்று எழுதிக் கொடுத்ததன் பேரில் வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைக்கான வட்டி மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் “அனாமத்தாக” வரவு வைக்கப்பட்டிருக்கும் செய்திகளைப் படிக்கும் பொழுது, “இஸ்லாமிய வங்கி வந்தால் முஸ்லிம்கள் அங்கு தான் வைப்புத் தொகை வைப்பார்கள்; இதனால் வங்கிகட்கு இப்படி “அனாமத்தாக” வரும் இலாபம் ஈட்ட முடியாது” என்பதை நன்றாக உணர்ந்திருக்கும் அதிமேதாவிகளான அவாள்கள் குறிப்பாக ஜோக்கர் சு.சாமி போன்றோர்கள் தடை விதிக்கப் பாடுபட்டுக் கொண்டே இருப்பார்கள் அல்லவா?

இஸ்லாமிய வங்கியைப் பற்றி ஐ.நா. சபையில் ஆய்வறிக்கை வாசித்து விட்டு வந்ததாக விளம்பரம் செய்யப்பட்ட த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது எம்.எல்.ஏ வாக இருப்பதால் சட்ட மன்றத்தில் பேச வில்லை போலும்; ஒருவேளை, இன்ஷா அல்லாஹ் பாராளுமன்றத்திற்குள் சென்றால் இஸ்லாமிய வங்கியைப் பற்றிப் பேசலாம்.

தி,மு,க உறுப்பினராகக் கருதப்படும் எம்.பி. அப்துற்றஹ்மான்(இ.யூ.மு.லீக்) அவர்கள் ஒரு முறை பாராளுமன்றத்தில் இஸ்லாமிய வங்கி பற்றி பேசினார்கள். அப்பொழுது அங்கு வீற்றிருந்த உறுப்பினர்கள்/எம்.பி.க்கள், சபாநாயகர், மற்றும் அமைச்சர்கள் எவருமே அவரின் பேச்சை ஒரு பொருட்டாகவே கவனிக்கவில்லை என்பதை அதன் நேரடி ஒலிபரப்பில் காணலாம். ஆக, முஸ்லிம்களைப் பற்றிய கவலைகள் எல்லாம் இல்லாத இற்றைப் பொழுதில் இஸ்லாமிய வங்கி என்பது ஒரு கனவாகவே அமையுமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இஸ்லாமிய வங்கியைப் பற்றி ஐ.நா. சபையில் ஆய்வறிக்கை வாசித்து விட்டு வந்ததாக விளம்பரம் செய்யப்பட்ட த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லாஹ் இப்பொழுது எம்.எல்.ஏ வாக இருப்பதால் சட்ட மன்றத்தில் பேச வில்லை போலும்; ஒருவேளை, இன்ஷா அல்லாஹ் பாராளுமன்றத்திற்குள் சென்றால் இஸ்லாமிய வங்கியைப் பற்றிப் பேசலாம்.//

மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையை படித்து விட்டுத்தான் 'அவாள்' ஒருவர் இஸ்லாமிய வங்கியியல் பட்டம் பெற்று தற்போது அமீர்கத்தின் மிக முக்கியமான இஸ்லாமிய வங்கியொன்றில் உயர் பொறுப்பில் இருக்கிறார் இதனை அவரே தனது வாயால் சொன்னது, ஆனந்த விகடனிலும் அவரது பேட்டி வந்திருக்கிறது.

பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அடிக்கடி இதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் !

Ebrahim Ansari said...

தம்பி அபூ இபு ! அஸ்ஸலாமு அலைக்கும்.

இதிலேயும் அவாள் வந்துட்டாளா? கெட்டது போங்க!

பிரதமர் மன்மோகன் வங்கி முறைகளில் கரை கண்டவர். அவரே ஒப்புக் கொண்டு இருக்கிறார்.

கவியன்பன் அவர்கள் கூறுவது போல் தடைகள் சு. சாமி போன்றவர்களின் தடைகள் இருக்கலாம்தான். இந்தக் கருத்து இப்போது நாடெங்கும் மட்டுமல்ல உலகெங்கும் அரும்பத் தலைப் பட்டுள்ளது.

ஒரு கருத்து உள்ளது. இங்கு தொடங்காவிட்டாலும் வெளிநாட்டு வங்கிகளை அனுமதிக்கும் முறையில் இஸ்லாமிய வங்கிகளின் கிளைகளை இந்தியாவில் அனுமதிக்கலாம்.

உதாரணமாக சார்டேட் வங்கி போன்றவற்றின் கிளைகள் அமைந்து இருப்பதுபோல் ஆனால் இஸ்லாமிக் வங்கி முறையில்.

sabeer.abushahruk said...

மதிப்பிற்குரிய காக்கா,
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
 
இஸ்லாமிய வங்கி அமைவதன் சாத்தியக்கூறுகளை இவ்வளவு தெளிவாக நான் வேறு எங்கும் படித்ததில்லை.  அத்துடன், அதன் சாதகங்களாகவும் தற்காலிகப் பாதகங்களாகவும் கணித்திருப்பவைத் தங்களின் நடுநிலையான, ஒரு பொருளாதார மேதையின் சிந்தனையை ஒத்து இருப்பது பிரமிக்க வைக்கிறது.
 
இந்தப் பதிவின் கருத்துச்செறிவு, பல கல்வியாளர்களை  ஈர்ப்பதிலும் சத்தான பின்னூட்டக் கருத்துகளை எழுத தூண்டுவதிலும் ஆச்சரியம் இல்லை.  எனக்குத் தெரிந்து இந்தப் பதிவின்மேல்தான் அதிக விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளன; அதிக ஆச்சரியக்குறிகள் இடப்பட்டுள்ளன; சனிக்கிழமைகளின்மீது எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது; தனிப் பதிவு எழுதுமளவுக்கு ஆசிரியரைப் பின்னூட்டக் கருத்துகள்/விளக்கங்கள் எழுத வைத்துள்ளது, மாஷா அல்லாஹ்!
 
மனுநீதியின் மீதான தங்களின் கேள்வி ஒரு என்ட்ரி கார்ட் எனக்கொண்டால், இ.பொ.சிந்தனை தங்களுக்காகக் காத்திருக்கும் ஓர் அரியாசனம்.  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அடியென எடுத்துவைக்கும் தங்களின் இந்த நடை, எந்தத் தொய்வுமின்றி நிதானமாக இதே வேகத்துடன் தொடர்ந்து சென்று, மேடையேறி, காத்திருக்கும் அரியாசனத்தில் அமரும்வரை உங்களின் பின்னால் வரும் கூட்டத்தில் நானும் இருப்பேன், இன்ஷா அல்லாஹ்.
 
அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.
 
 

sabeer.abushahruk said...

காக்கா,

வழக்கம்போல் எனக்கு நிறை கேள்விகள் எழுந்தன, ஆனால் ஞாபகப்படுத்திப் பார்ததில் அவற்றில் பலவற்றிற்கு நீங்கள் ஏற்கனவே பதில் தந்து விட்டதும் எஞ்சியவற்றிற்குப் பதிவிலேயே பதில் இருப்பதும் எனக்கு உரைத்தது.
 
எனவே, சைக்கிள் கேப்பில் ஒர் நுணுக்கமானக் கேள்வி :-)
 
தேசிய வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இஸ்லாமியர் வட்டி வேண்டாம் என்று மறுத்ததால் 70 ஆயிரம் கோ. ரூபாய் வங்கியில் முடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் சொல்கின்றனவே, இதன் மேல் என் சந்தேகம என்னவென்றால்.
 
-என்னதான் கணக்கு வைத்திருப்பவர் வேண்டாம் என்று விட்டுவிட்டாலும் அந்த வட்டித் தொகை அவர் கணக்கில் எழுதப்பட்டுத்தானே இருக்கும்?

-எழுதப்பட்டுவிட்ட வட்டியை அவர் வேண்டாம் என்பதற்கும் அதை வாங்கி ஏழை எளியோருக்குக் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?

-அப்படி வாங்கி ஏழை எளியோருக்குக் கொடுக்கும்பட்சத்தில் அதற்கான கூலியை அல்லாஹ் தரமாட்டான் எனினும் அந்த ஏழைக்கு உபயோகமாகும்தானே?

-அந்த ஏழைக்கு உதவுவதைவிடச் சிறந்ததில்லையே வங்கியிலேயே அத்தொகை முடங்கிக்கிடப்பது?

-அப்படி விடப்பட்டத் தொகையை இஸ்லாமியத் தீவிரவாதியைப் பிடிக்க :-) அவர்கள் உபயோகிக்கலாம்தானே?

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

இஸ்லாமிய வங்கி முறையின் அவசியத்தையும் இங்கு ஏற்படுத்துவதில் உள்ள சாதக பாதக அம்சங்களை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் காக்கா.

தாங்கள் குறிப்பிட்டது போல் ஒவ்வொரு இயக்கங்களும் இந்த வங்கி ஏற்படுத்த வலியுறுத்தி கோரிக்கையாகவும் முன் வைத்து தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறச் செய்ய வேண்டும்.

ZAKIR HUSSAIN said...

one of the best explanation of Islamic Banking system in Tamil. This article can be used to know about Islamic Banking for future research students.

Anonymous said...

'இஸ்லாமிய வாங்கி முறை' என்றால் என்னாண்டு எனக்கு இன்னும் ஒன்னும் சரியா புரியலேங்க!, ஆனா ஒன்னு புரியுதுங்க. 'இருகரம் நீட்டி வரவேற்று வாங்க! கேக் சாப்பிடுங்க''ன்னு அவங்க சொல்றது மட்டும் நல்லா புரியுதுங்க ஒரு சந்தேகங்க! 'கேக்'மட்டும் தானாங்க?' டி,காifee ஏதும் கெடையாதாங்க? விசாரிச்சு சொல்றியளாங்க?

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

crown said...
This comment has been removed by the author.
Unknown said...

இப்ராஹிம் அன்சாரி காக்கா,

இஸ்லாமிய வங்கியின் அவசியத்தை உணரத்தொடங்கிவிட்ட இந்த கால கட்டத்தில், தாங்கள் அதன் நோக்கத்தின் ஆழத்திற்க்கே சென்று , இதை விட்டால் பொருளாதாரம் சீரடைய வேறு வழியே இல்லை என்னும் ஒரு அழகிய நிலைப்பாட்டுக்கு வரத்தளைப்பட்டு விட்டது உலகம் என்னும் உண்மையை தங்கள் வழக்கமான அழகிய சொல் நடையால் தந்திருக்கின்றீர்கள்.

வட்டியின்றி வியாபார நோக்கில் செயல் படும் இஸ்லாமிய வங்கிகளில் அதன் லாப நஷ்ட்ட பகிர்ந்தளிப்பில் , ஒத்த மனதோடு தன இருப்புக்கு லாபமோ நஷ்டமோ இரண்டுக்கும் பொருந்தி வாடிக்கையாள ஈடுபடுத்தப்படும்பொழுது
இன்ஷா அல்லா அல்லாஹ், நல்லதையே நமக்கும் நாடுவான் என்று நினைத்து நம் முதலை இஸ்லாமிய வங்கியில் வைப்பை (டெபாசிட்)ஈடு படுத்தலாம்.

பொதுவான வங்கிகளில் வரும் வட்டியை நாம் எடுத்துக்கொள்ளாமல் , பிற ஏழை எளியவர்க்கோ, அல்லது பொதுக்காரியங்களில் ஈடு படுத்தவோ என்ற பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை, நம் வங்கியின் இருப்புக்கு வட்டி என்ற கணக்கு ஏரி விட்டாலே, பாவமும் நம் கணக்கில் அல்லாஹ்விடம் வரவு வைக்கப்பட்டுவிடும். இது எப்படி இருக்கிறதென்றால், சாராயத்தைம் நம் காசுக்கு வாங்கி, நாம் குடிக்காமல், பிறருக்கு கொடுப்பது போல்.

இது எப்படி அல்லாஹ்விடத்தில் எடுபடும் ? கொஞ்சம் சிந்திப்போமேயானால்
நம் காசில் தவறுக்கு துணை போகின்றோம் . அதை நாம் பயன படுத்தாவிட்டாலும். தவறுக்கு துணை போன, தூண்டு கோலா இருந்த பாவம் நம்மை சேருமல்லவா ? இஸ்லாமிய வங்கி என்னும் ஒரு அழகிய மாளிகை உருவாகுமேயானால் , இன்ஷா அல்லாஹ் அதில் குடியேறி ,ஒரு இனிய சுகத்தை, (வட்டி என்னும் கொடிய விஷத்தை தூக்கி வீசி ) ஏழை, நடுத்தர, பணக்கார வர்க்கம் என்று பாராமல், அனைவரும் இஸ்லாத்தின் தூய நிழலில் பலனடையலாம்,

அல்லாஹ் இஸ்லாமிய வங்கி என்னும் மாளிகை எழுப்ப நம் எண்ணங்களை கபூலாக்குவானாக !

ஆமீன்.

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம் தம்பி சபீர்,

முதலில் தங்களின் ஆழ்ந்து படித்த பின் தந்துள்ள கருத்துரைக்கும் அன்பான பாராட்டுதலுக்கும் தொடர்ந்த கேள்விக்கும் மிக்க நன்றி.

-என்னதான் கணக்கு வைத்திருப்பவர் வேண்டாம் என்று விட்டுவிட்டாலும் அந்த வட்டித் தொகை அவர் கணக்கில் எழுதப்பட்டுத்தானே இருக்கும்?= கணக்கு திறக்கும்போதே அவர் வட்டி வேண்டாம் என்று டிக்ளேர் செய்து இருந்தால் அவர் கணக்கில் சேராது. வங்கி தனக்கு miscellaneous income or unclaimed interest என்று கணக்கிட்டு வைத்துக் கொள்ளும். தம்பி அபூ ஆசிப் அவர்களும் இதற்குரிய பதிலை ஒட்டி கருத்திட்டு இருக்கிறார்கள். நன்றி.

-எழுதப்பட்டுவிட்ட வட்டியை அவர் வேண்டாம் என்பதற்கும் அதை வாங்கி ஏழை எளியோருக்குக் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? = இதற்கு இந்த அத்தியாயத்திலேயே பதில் இருக்கிறது.

காரணம் .....என்று தொடங்கும் பாராவைப் படிக்க வேண்டுகிறேன்.

-அப்படி வாங்கி ஏழை எளியோருக்குக் கொடுக்கும்பட்சத்தில் அதற்கான கூலியை அல்லாஹ் தரமாட்டான் எனினும் அந்த ஏழைக்கு உபயோகமாகும்தானே?= இது பற்றி நான் சொல்ல தகுதியற்றவன். யாரேனும் மார்க்க அறிஞர்கள்தான் பதில் தரவேண்டும். நான் அறிந்தவரை வட்டியினால் செய்யப்படும் தர்மத்தைக்கூட அல்லாஹ் ஏற்கமாட்டான் என்பதே.

-அந்த ஏழைக்கு உதவுவதைவிடச் சிறந்ததில்லையே வங்கியிலேயே அத்தொகை முடங்கிக்கிடப்பது?= அந்தத்தொகையே தவறான வழியில் வந்தது என்றுதான் அதை உடையவர் எடுக்கவில்லை தானும் பயன்படுத்தவில்லை பிறருக்கும் கொடுத்தால் பாவமாகுமோ என்று பயப்படுகிறார்.

-அப்படி விடப்பட்டத் தொகையை இஸ்லாமியத் தீவிரவாதியைப் பிடிக்க :-) அவர்கள் உபயோகிக்கலாம்தானே?= ஹஹஹஹா. நான் அறிந்த ஒரு உண்மை நகைச்சுவை செய்தி நினைவுக்கு வருகிறது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்துக்காக நிதி திரட்டிக் கொண்டு வரும்போது சர் செய்யத் அகமது கான் அவர்களிடம் ஒரு விபச்சாரி ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தாராம்.

வசூல் கமிட்டியில் இருந்த ஒருவர் அதை வாங்க மறுத்தாராம்.

உடனே செய்யது அகமது கான் சொன்னாராம் " வாங்கிக் கொள்! நாம் கக்கூஸ் கட்ட உதவும். "

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்.

பேசுபொருள் தொடர்பான செய்திகளை இணையத்தில் தேடித் படித்தபோது மலேசியாவில் இந்த முறை வெற்றிகரமாக செயல்படுவதாகவும் முக்கியமாக இலாப நஷ்ட பங்கீட்டு முறை மக்களின் ஆதரவைப் பெற்று வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் படித்தேன்.

நான் நினைக்கிறேன் இதனால்தான் அன்று முதல் மலேசியா பரக்கத்துடன் விளங்கி வருகிறது- என் தம்பி ஜாகிர் தானும் மகிழ்வுற்று மற்றவர்களையும் மகிழ்வுரச்செய்கிறார் என்று. வாழ்க மலேசியா!

Ebrahim Ansari said...

மரியாதைக்குரிய மச்சான் எஸ் . எம். எப் . அவர்களுக்கு,

இஸ்லாமிய வாங்கி முறை என்பது விளங்கவில்லையா? இஸ்லாமியர் வாங்கி முறையாவது விளங்குதா?

நமது ஊரைச்சுற்றிப் பாருங்கள்- கண்டிப்பாக ஒரு ஆட்டோவில். முக்கியமாக திருமணம் பேசப்படும் வீடுகளில் - வீடு வாங்கி முறை- நகை வாங்கி முறை- பசியாற வாங்கி முறை- சீர் சீதனம் வாங்கி முறை- பால்குடம் வாங்கி முறை- பைக் வாங்கி முறை- என்று பல இஸ்லாமியர் வாங்கி முறைகள் அமுலில் உள்ளன.

குசும்புக்கு லொள்ளான பதிலா?

அனைத்தும் நீங்கள் கற்றுத்தந்தவையே .

sabeer.abushahruk said...

காதர்,

உன் கருத்துச்செறிவானப் பின்னூட்டம் ஆழ்ந்த வாசிப்பின் அடையாளம்.

ஆனால், நம் காசைக்கொண்டு சாராயம் வாங்கி பிறருக்குத் தருவதாக நீ காட்டும் உதாரணம் என் கேள்விக்கான ஒப்பீடல்ல. எப்படியெனில்,

என் கணக்கில் என் விருப்பமின்றி சேர்ந்துவிட்ட வட்டிப் பணத்தை எடுக்கும் எனக்குத் தெரியும் அது வட்டிப்பணம் என்று. எனக்கு ஹராம்.(ஒப்பீடு: என் காசில் சாராயம் வாங்கியாயிற்று)

சோற்றுக்கு வழியில்லாத ஏழையிடம் அந்த வட்டிப் பணத்தைக் கொடுக்கிறேன்(ஒப்பீடு: சாராயத்தை பிறருக்குக் கொடுக்கிறேன்)

அந்த ஏழைக்கு அந்தப் பணம் வட்டிப் பணம் என்னும் வரையறைக்குள் எப்படி வரும்? அது அவருக்குப் பணம்தானே? (ஒப்பீடு: அந்தப் பிற மனிதருக்கும் அது சாராயம் என்று ஐயமின்றித் தெரியுமே!)

நான் வேண்டாம் என்று புறக்கணித்த வட்டிப்பணம் என் இனத்திற்கெதிரான நடவடிக்கைக்காகவோ ஷிர்க்குக்கோ மார்க்கம் தடைசெய்தவற்றை செய்வதற்கோ அரசாங்கம் உபயோகிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம். அப்படி உபயோகப்படுத்தப் படுவதைவிட ஏழைக்குக் கொடுப்பது எப்படி தவறாகும்?

அன்பிற்குரிய இ.அன்சாரி காக்கா,
சிரமம் பாராது என் ஐயங்களுக்கு அளித்த விளக்கங்களுக்கு ஜஸாக்கல்லாஹ் க்ஹைர்.

இப்ப நோன்பு துறந்துவிட்டேன். இதோ தெளிவோடு ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன்.

நானோ நீங்களோ மார்க்கத்தில் தேர்ந்த ஞானம் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், மார்க்க ஞானிகள் என்று நாம் கருதும் "இவரின்" கருத்துக்கு மார்க்க ஞானி என்று கருதும் "அவரின்" கருத்து எதிராக அமைகிறதே இதை நாம் எப்படிப் பார்ப்பது?

அதனால்தான் சொல்கிறேன், நாம் அறிந்தவரைதான் நம் ஞானம் காக்கா. இதுவே நமக்குப் போதும். தாங்கள் தகுதியற்றவர்களாகத் தயவுசெய்து கருதாதீர்கள். தங்களின் சிந்தனைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்னும் தகுதியில் சொல்கிறேன், நம் இருவருக்குமே நமக்கு எது சரியெனத் தோன்றுபவற்றைச் சொல்லும் தகுதி யிருக்கிறது. நம் இருவரின் கருத்துகள் முரண்படுமாயின் என்னைச் சரியென்று சொல்ல ஒரு மார்க்க அறிஞர் கூட்டமும் தங்களைச் சரியென்று சொல்ல ஒரு மார்க்க அறிஞர் கூட்டமும் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும். சரிதானே நான் சொல்வது?

Unknown said...

//சோற்றுக்கு வழியில்லாத ஏழையிடம் அந்த வட்டிப் பணத்தைக் கொடுக்கிறேன்(ஒப்பீடு: சாராயத்தை பிறருக்குக் கொடுக்கிறேன்)

அந்த ஏழைக்கு அந்தப் பணம் வட்டிப் பணம் என்னும் வரையறைக்குள் எப்படி வரும்? அது அவருக்குப் பணம்தானே? (ஒப்பீடு: அந்தப் பிற மனிதருக்கும் அது சாராயம் என்று ஐயமின்றித் தெரியுமே!)//

சபீர்,
உன்னுடைய இந்த பின்னூட்டம் என்னை ஓரளவு சிந்திக்க வைத்து , அதிலிருந்து ஒரு சில விளக்கங்களையும் என்னுள் உதிக்க வைத்தது.

அதாவது, இதே கேள்வியை ஒரு மார்க்க விளக்கம் தெரிந்த ஒரு நபரிடம் (ஆலிம் என்று சொல்ல முடியாது நன்கு விளக்கம் தெரிந்த ஒரு நபர்) கேட்டேன்.
அவர் சொன்ன பதில் என்னை சிந்திக்க வைத்தது. அதாவது. ஒரு நபர் ஹராமான ஒன்றை (ஹராமா என்றால் , நேரிடையான ஹராம் அல்ல. சாராயம் என்பது ஹராம் .அதை யார் தந்தாலும் ஹராம் தான். ஆனால் ஒருவர் பணத்தை தருகின்றார் என்று வைத்துக்கொள்வோம்..அது ஹராமான வழியில் வந்தது என்றாலும் அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் உள்ள விஷயம். இது அவரிடமிருந்து வாங்கும் நம்மை பாதிக்காது. அப்படி பார்த்தால் . நம் சமுதாயத்தின் ( உறவு முறையில் கூட பிளவை ஏற்ப்படுத்தி ) சமுதாயத்தின் ஒற்றுமையின்மை, மற்றும் சீர் குலைவுக்கு, மேலும் மனக்கசப்புக்கு உள்ளாக்கிவிடும், ஆதலால் அவர்செய்த வினைக்கு அவர்தான், அல்லாஹ்விடம் பதில் சொல்வார். நமக்கு அதில் எந்த வித பங்கையும் அல்லா ஏற்படுத்த மாட்டான் " அவர்கள் செய்தது அவர்களுக்கு, நீங்கள் செய்தது உங்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி நீங்கள் வினவப்பட மாட்டீர்கள்" - அல்-குரான்.

அதலால் வட்டிப்பணம் என்பது யார் கணக்கில் வரவு வைக்கப்பட்டதோ, அவருக்குத்தான் பாவம் என்பது என் கருத்து. .அப்படி பார்த்தால், அந்தப்பணம் கிழிந்து போகும் வரை யார் யார் கைக்கெல்லாம் போகின்றதோ அவர்கள் அனைவரும் பாவத்தில் பங்கு உள்ளவர்களென்று ஆகிவிடும்.

ஆதலால் அதப்பணம் ,(வட்டிப்பணம்) அது உருவாக மூல காரண கர்த்தாவுக்கு
தான் ) பாவமே தவிர , அந்தப்பாவம் வேறு எவரையம் தொடராது ) என்பது என் கருத்து. என்னுள் உள்ள அந்த 300 கிராம் மாமிசத்துண்டில் பட்டதையும் சேர்த்து இதில் பின்னூட்ட மாக தந்துள்ளேன்.

அனைத்தையும் அறிந்தவன் அந்த ரப்புல் ஆலமீனே.!

அபு ஆசிப்.

Ebrahim Ansari said...

//அதனால்தான் சொல்கிறேன், நாம் அறிந்தவரைதான் நம் ஞானம் காக்கா. இதுவே நமக்குப் போதும். தாங்கள் தகுதியற்றவர்களாகத் தயவுசெய்து கருதாதீர்கள். தங்களின் சிந்தனைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்னும் தகுதியில் சொல்கிறேன், நம் இருவருக்குமே நமக்கு எது சரியெனத் தோன்றுபவற்றைச் சொல்லும் தகுதி யிருக்கிறது. நம் இருவரின் கருத்துகள் முரண்படுமாயின் என்னைச் சரியென்று சொல்ல ஒரு மார்க்க அறிஞர் கூட்டமும் தங்களைச் சரியென்று சொல்ல ஒரு மார்க்க அறிஞர் கூட்டமும் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும். சரிதானே நான் சொல்வது?//

100%

அதேநேரம் இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் ( வீரர்களிடம்) ஒரு கண்ணா இருக்கணும் அண்ணாச்சி நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி.

இவரின் கருத்துக்கு அவரின் கருத்து எதிராக இருப்பதைப் பார்க்க வேண்டாம் இருவருக்கும் இடையில் இருக்கும் ஈகோ வைத்த தான் பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் ஒன்றாக குப்பை கொட்டியவர்கள்தான் அவர்களாக இருப்பார்கள். ஆனால் நாளடைவில் வளர்ந்த அகம்பாவம் இவர் அதைச்சொன்னால் அதை மறுக்க ஒரு கூட்டம் , அவர் இதைச்சொன்னால் அதை எதிர்த்து கோஷம் போட மறு கூட்டமும் இருக்கிறது. அதே நேரம் உண்மையில் நமக்குத் தெரியாத விஷயங்களை தெளிவு படுத்தும் சிலரும் நமது மனசாட்சியின்படி இருக்கவே செய்கிறார்கள். நம்முடைய அறிவின் மேல நமக்கு ஞானச்செருக்கு இருக்கவே செய்கிறது. அதே நேரம் நாம் கற்காத சில விஷயங்களில் தெளிவுடையோர் சிலரிடம் கேட்பதில் தவறில்லை என்பதும் என் கருத்து. நான் தொட்டுக் கூட பார்க்காத

ஒரு காடர் பில்லரைப் பற்றி தம்பி சபீரிடம் தான் கேட்கலாம்.அதே நேரம் அவர் தரும் கவிதையின் அழகுவரிகளையும் தம்பியிடம் ரசிக்கலாம்.


Ebrahim Ansari said...

அபூ ஆசிப் உடைய உரத்த சிந்தனைகளுக்காக் மீண்டும் நன்றி. எண்ணமே வாழ்வு. எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோருக்கும் . அன்புள்ள தோழர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

அலிகர் முஸ்லிம் பலகலைக் கழகத்தை நிறுவிய சர் செய்யத் அகமது கான் விபச்சாரியின் பணத்தை கக்கூஸ் கட்டலாமேன்று ஏற்றுக் கொண்டார் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். ஆனால் அவர் ஒரு பெரிய மார்க்க அறிஞர் கூட நிச்சயம் இந்த ஹதீஸைப் படித்து இருப்பார்.

மூன்று விஷயங்களை அல்லாஹ் வெறுக்கிறான் நாய் விற்ற காசு, விபச்சாரியின் பணம், வட்டி மூலம் வந்த பணம் . ( புகாரி) .

ஆனாலும் அவர் அந்தப் பணத்தை வாங்கினார். ஒரு தைரியம் அல்லாஹ் கேட்டால் பதில் சொல்ல காரணம் இருக்கிறது என்று நினைத்து இருக்கலாம். அதே முறையில் வட்டியாக சேரும் பணத்தை ஒரு ஏழைக்கு கொடுப்பது தனிமனித தைரியம்- ஜஸ்டிபிகேஷன்- அல்லாஹ் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கிய பகுத்தறிவின்பால்பட்டது- ஆகவும் இருக்கலாம் என்பது எனது சொந்தக் கருத்து.

மணி ௧௧ . ௪௩ தமிழில் வைத்துக் கொண்டு டைப் அடித்தால் இப்படி வருகிறது. ஆங்கிலத்துக்கு மாற்றினால் 11. 43 .

Insha Allah see you tomarrow. Assalamu Alaikkum.

sabeer.abushahruk said...

// வட்டியாக சேரும் பணத்தை ஒரு ஏழைக்கு கொடுப்பது தனிமனித தைரியம்- ஜஸ்டிபிகேஷன்- அல்லாஹ் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கிய பகுத்தறிவின்பால்பட்டது- ஆகவும் இருக்கலாம் என்பது எனது சொந்தக் கருத்து. //

-இப்படிக்கு சபீர்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

An in depth analytical details about Islamic Banking system - interest free transactions.

//1. முழாரபா: கூட்டுப் பங்காண்மை
2. முஷாரகா: கூட்டுப் பங்குடமை
3. வீட்டு முஷாரகா முறைமை
4. முராபஹா: இலாபத்தை தெரியப்படுத்தி விற்றல்
5. முஸாவமா: சாதாரண வியாபாரம்
6. இஜாரா: வாடகைச் சேவை
7. வைப்புக்களை ஏற்றல்: ஆரம்ப வைப்பு, முதலீட்டு வைப்பு, நிரந்தர வைப்பு ஆகியன.
8. பைஉல் முஅஜ்ஜல்: தவணை அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை
9. ஸலம்: முற்பணக் கொடுப்பனவு வியாபாரம்.
10. ரஹ்ன்: அடகுச் சேவை
11. கர்ழ்: கடன் கொடுக்கல் வாங்கல்//

The beauty of all of the above Islamic Banking System terms(words) are called in Arabic language. It reflects the uniqueness of the system all over the world.

I observed and heard from people that a business cannot be developed without involving in interest and normal banking system. They are believing that avoiding interest related transactions could lead to loss or lack of competitiveness in the current business world.

I am personally having Islamic Bank account, my company is also having Islamic Bank account and the all business transactions are based on Islamic Banking system. Alhamdulillah, things are happening as per my intention of avoiding interest.

Since I avoid interest, Allah is showing the way to live as per the commitment of avoiding interest. All of my surroundings are conductive to my "niyya". And there is sustained growth and prosperity when we avoid interest.

God Almighty's laws are working without any defect all over the universe(all human regardless of religions and races).

Allahu Akbar.

Jazakkallah khairan brother, keep on writing more.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai
www.dubaibuyer.blogspot.com

அப்துல்மாலிக் said...

தெளிவான பதிவுக்கு நன்றி காக்கா

Thameem said...

ஒரு காலம் வரும் அரபு நாடுகளில் வட்டி தவறு இல்லை என்று சொல்வார்கள்அது சரிதான் என்று வாதாடுவார்கள். அது மறுமை நாளின் அடையாளம்.
-------ராசுல்லாஹ் அலைவஸல்லம்

அரபு நாடுகளிலும் வந்துவிட்டது.

Thameem said...

// வட்டியாக சேரும் பணத்தை ஒரு ஏழைக்கு கொடுப்பது தனிமனித தைரியம்- ஜஸ்டிபிகேஷன்- அல்லாஹ் மனித இனத்துக்கு மட்டுமே வழங்கிய பகுத்தறிவின்பால்பட்டது- ஆகவும் இருக்கலாம் என்பது எனது சொந்தக் கருத்து. //


முகமது நபி(SAL) இரண்டை விட்டு சென்று இருக்கிறார்கள் ஒன்று குரான் மற்றொன்று ஹதிஸ். இதில் இரண்டிலுமே மற்றவரிடம் வட்டி வாங்கி அதை ஏழைக்கு கொடுப்பது என்று குறிப்பிட வில்லை

KALAM SHAICK ABDUL KADER said...

\\நான் வேண்டாம் என்று புறக்கணித்த வட்டிப்பணம் என் இனத்திற்கெதிரான நடவடிக்கைக்காகவோ ஷிர்க்குக்கோ மார்க்கம் தடைசெய்தவற்றை செய்வதற்கோ அரசாங்கம் உபயோகிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம். அப்படி உபயோகப்படுத்தப் படுவதைவிட ஏழைக்குக் கொடுப்பது எப்படி தவறாகும்?\\

இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

10 நாட்கள் வேலையின் நிமித்தம் ஜித்தா சென்றிருந்தேன் அங்கு சென்றதும் உங்களது தொடரை படிக்க நேரமில்லாமல் போய்விட்டது. நான் இதுவரை உங்களின் இஸ்லாமிய பொருளாதாரச்சிந்தனை ஆக்கத்தின் தொடர் 22, 23 மட்டும்தான் படித்தேன் மற்றது 21 வாரத்தொடர் இன்னும் படிக்கவில்லை.
21 ஆம் தொடரில் என் இஸ்லாமிய பேங்க் பற்றிய பின்னுட்டம் படித்துவிட்டு உடனடியாக இஸ்லாமிய வங்கி சம்பந்தமாக தனிப்பதிவு கண்டு வியந்துபோனேன்
நான் உங்களின் இந்த இரண்டு தொடர் கண்டே வியந்து போய்விட்டேன் அல் ஹம்துலில்லாஹ் இத்தனை அறிய நற்செய்திகளை அறிய பொக்கிஷங்களை தங்களிடமிருத்து நாங்கள் கற்றுக்கொள்வதில் பெருமிதமடைகின்றோம் அதை மறுபடியும் மீல் பதிவு செய்யுமாறு அதிரை நிருபரை கேட்டுக்கொள்கின்றேன் காரணம் மிகவும் முக்கியமான கட்டுரை இது ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் மனதில் ஆனித்தரமாக பதிய வேண்டிய விஷயம். நான் அப்படியே நகல் எடுத்து பதுகாத்து வைத்துக்கொன்டேன் இன்ஷா அல்லாஹ் பிறகு தேவைப்படும்.

கண்ணியமிகு இபுராஹிம் அன்சாரி காக்காவின் இந்த அற்புத ஆக்கம் பிறகு வளையில் வலைபோட்டாலும் கிடைக்காது பதிவளார் என்று சும்மா சொள்ளாமல் பெரும் அறிவுக்கு சொந்தக்காரர் என்றே புகழாரம் சூட வேண்டும்

உன்மையிலேயே நீங்கள் ஒரு பொருளாதார மேதைதான் என்று அடித்து சொல்லமுடியும்
எனக்குத் தெரிந்து இஸ்லாமிய பேங்க் பற்றி இதுவரையும் யாரும் இவ்வளவு தெளிவாக எழுதியது கிடையாது

இதுபற்றி பின்னூட்டமிட்ட
சகோதரர் சபீர் ரொம்ப தெளிவாக பின்னூட்டமிட்டுள்ளார்
"இஸ்லாமிய வங்கி அமைவதன் சாத்தியக்கூறுகளை இவ்வளவு தெளிவாக நான் வேறு எங்கும் படித்ததில்லை. அத்துடன், அதன் சாதகங்களாகவும் தற்காலிகப் பாதகங்களாகவும் கணித்திருப்பவைத் தங்களின் நடுநிலையான, ஒரு பொருளாதார மேதையின் சிந்தனையை ஒத்து இருப்பது பிரமிக்க வைக்கிறது."
மிகவும் அருமையாக தெளிவுறை கூறி உங்களை கவுரவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
சபீர் போன்ற சகோதரர்கள் இளம் கோடிஸ்வரர்களை ஒன்றினைக்கும் முயற்சியில் ஈடுபட்டலே சாத்தியக்கூறுகள் மிகவும் அருகில் இருக்கின்றன.
அதுபோல் அதிரை பைத்துல்மாலுக்கு உலகெங்கும் கிளைகள் இருக்கின்றன
தற்போதுகூட ஒரு கோடி திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தி இருக்கின்றார்கள்.
இந்த திட்டத்துடன்
பைத்துல்மால்கூட இஸ்லாமிய வங்கி பற்றி
விதையை தூவலாம்
எப்படியாவது அதிரைக்கு ஒரு இஸ்லாமிய வங்கி வரவேண்டும்

இருதியாக சபீர் கூறியது போன்று

"இதே வேகத்துடன் தொடர்ந்து சென்று, மேடையேறி, காத்திருக்கும் அரியாசனத்தில் அமரும்வரை உங்களின் பின்னால் வரும் கூட்டத்தில் நானும் இருப்பேன், இன்ஷா அல்லாஹ்."

என்று நானும் உறுதி மொழி கூறுகின்றேன்
மீண்டும் ஒருமுறை மீல் பதிவு செய்யுமாறு அதிரை நிருபரை கேட்டுக்கொள்ளவும்

அதிரைமன்சூர்
ரியாத்

Editorial said...

அஸ்ஸலாமுஅலைக்கும்,அதிரை பிறை இனையதளத்தின் சார்பாக அதிரை வெப்சைட்ஸ் என்னும் இனௌய தளத்தை துவங்கியுள்ளோம்.இந்த இணைய தளத்தின் சிறப்பு என்ன என்றால் அதிரை நிருபர் இணையதளம் உட்பட அதிரையில் உள்ள 25க்கும் மேற்ப்பட்ட இனையதளங்களை இந்த ஒறே இனையதளத்தில் காணலாம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு